மார்ச் 23ம் தேதி வெளிவருகிறது டாடாவின் ‘ நானோ ‘ கார்

மும்பை : உலகின் மிக மலிவான காரான ‘ நானோ ‘வை, வரும் மார்ச் மாதம் 23ம் தேதி மும்பையில் வர்த்தக ரீதியாக டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்துகிறது. ஏப்ரலில் இருந்து அந்த காருக்கான புக்கிங் ஆரம்பமாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஜனவரி 2008 ல் புதுடில்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ வில் பொதுமக்களுக்காக நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்டாலும், வர்த்தக ரீதியாக வரும் மார்ச் 23ம் தேதிதான் அறிமுகப்படுத்தப்படுகிறது. மும்பையில் மார்ச் 23ம் தேதி இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியா முழுவதிலும் இருக்கும் டாடா மோட்டார்ஸின் டீலர்களிடம் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் இது பார்வைக்கு வைக்கப்படும். ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்துதான் அதற்கான புக்கிங் ஆரம்பமாகும். புக்கிங் விபரங்கள், 23ம் தேதி நடக்கும் அறிமுக விழாவில் சொல்லப்படும் என்று டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 2008 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட நானோ கார் ஜெனிவாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இதனை பார்வையிட்ட வெளிநாட்டு கார் கம்பெனிகள், தாங்களும் இம்மாதிரி குறைந்த விலை காரை தயாரிக்க வேண்டும் என்று எண்ணின. பிரான்சின் நிஸன் – ரெனால்ட் நிறுவனம், குறைந்த விலை ஃபேமிலி காரை விரைவில் வெளியிடுவதாக அப்போது அறிவித்தது. ஆனால் பொருளாதார மந்த நிலை காரணமாக அந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

ஃபோர்டிஸ் வசம் அப்போலோ மருத்துவமனை

பிரபல மருந்து நிறுவனமான ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், ராஜஸ்தானின் மாநிலத்தின் கோட்டா பகுதியில் அமைந்துள்ள அப்போலோ மோடி மருத்துவமனையை கையகப்படுத்துகிறது.   200 படுக்கை வசதிகளுடன் கூடிய அம் மருத்துவமனையை தனது நிர்வாகப் பொறுப்பில் கொண்டு வருவதாக இன்று BSE சந்தைக்கு அளித்த அறிக்கை ஒன்றில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மக்களுக்கு முற்றிலும் சிறந்த மருத்துவ சேவையை வழங்குவதே ஃபோர்டிஸின் நோக்கம் என்று அதன் நிர்வாக இயக்குனர் திரு.ஷிவிந்தர் மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்போலோ மோடி மருத்துவமனை ஃபோர்டிஸ் மோடி மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக BSE க்கு அளிக்கப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஃபோர்டிஸூடன் இணைக்கப்படும் மூன்றாவது மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது. மொரீஷியஸில் உள்ள ஃபோர்டிஸ் டார்னே கிளினிக் மற்றும் பெங்களூருவில் உள்ள அப்போலோ ஆர்.எம் மருத்துவமனை கடந்த மாதத்தின் துவக்கத்தில் ஃபோர்டிஸூடன் இணைக்கப்பட்டுள்ளன.


விண்னை நோக்கி செல்கிறது தங்கத்தின் விலை : இறக்குமதி வெகுவாக குறைந்து விட்டது

மும்பை : இந்திய பெண்கள் அதிகம் விரும்பும் உலோகமான தங்கத்தின் விலை விண்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.1,430 ஆக இருந்தது. தங்கத்தின் விலை, சாதாரன மக்களால் வாங்க முடியாத அளவுக்கு சென்று கொண்டிருப்பதால், அதன் தேவையும் ( டிமாண்ட் ) வெகுவாக குறைந்து விட்டது. இதனால் உலகிலேயே அதிகம் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில், ஜனவரி மாத தங்கம் இறக்குமதி மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. சாதாரணமாக மாதா மாதம் 60 டன் தங்கத்தை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்திய தங்கம் விற்பனையாளர்கள், போன மாதத்தில் வெறும் 20 டன் தங்கத்தை தான் இறக்குமதி செய்திருக்கிறார்கள். தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால் அதை வாங்குபவர்கள் எண்ணிக்கையை விட, பழைய நகைகளை விற்பவர்கள் எண்ணிக்கைதான் கடைகளில் அதிகமாக இருக்கிறது. எனவே தங்கம் விற்பனையாளர்களும் புது தங்க கட்டியை வாங்கி நகைகள் செய்து விற்பதை விட்டு விட்டு, பழைய தங்கத்தை வாங்கி, அதை உருக்கி. சுத்தப்படுத்தி, மீண்டும் நகைகளை செய்து விற்க ஆரம்பித்து விட்டார்கள். தங்கத்தின் விலை தொடர்ந்து கிராமுக்கு ரூ.1500 ஐ ஒட்டிய விலையிலேயே இருப்பதால், பிப்ரவரியிலும் ஜனவரியைப்போலவே தங்க இறக்குமதி குறைவாகவே இருக்கும் என்கிறார்கள். பாம்பே புல்லியன் அசோசியேஷன் தலைவர் சுரேஷ் ஹூண்டன் இது குறித்து பேசியபோது, பிப்ரவரியிலும் தங்கத்தின் இறக்குமதி என்றுமில்லாத அளவாக குறைந்து தான் இருக்கும் என்றார். மொத்தமாக கணக்கிட்டால் 2009 ம் ஆண்டின் மொத்த தங்க இறக்குமதி 400 டன்களை ஒட்டியே இருக்கும் என்று சொன்ன அவர், இது அதற்கு முந்தைய வருட இறக்குமதியை விட 45 சதவீதம் குறைவு என்றார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிக குறைந்த இறக்குமதி அளவு இதுவாகத்தான் இருக்கும் என்றும் சொன்னார்

50 காசுக்கு பேசும் திட்டம்: கட்டண விவரம் வெளியீடு

சென்னை: இந்தியா முழுவதும் எந்த நெட்ஒர்க்கிற்கும் ஒரு நிமிடத்திற்கு 50 காசுகளில் பேசும், ‘இந்தியா கோல் டன் 50’ திட்டத்திற்கான கட்டண விவரத்தை பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில் மூன்றாம் தலைமுறை ‘ 3 ஜி’ சேவையை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். அப்போது அவர், மார்ச் 1ம் தேதி முதல், நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 50 காசுகளில் பேசும், ‘இந்தியா கோல்டன் 50’ திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவித்தார். அந்தத் திட்டத்திற்கான கட்டண விவரத்தை பி.எஸ். என்.எல்., தெளிவாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இத்திட்டத்தில் புதிய சிம் கார்டு, சாதாரண பிரிபெய்டு திட் டங்களுக்கான விலையில் கிடைக்கும். இந்த 50 காசுகள் திட்டம் பெற முதல் மாதம் 375 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் 30 ரூபாய்க்கு பேசும் வசதி கிடைக்கும். இந்த ரீசார்ஜ் கூப்பன் 30 நாட்களில் காலாவதியாகிவிடும். இத்திட்டத்திற்கான, ‘பல்ஸ் ரேட்’ 60 வினாடிகள். இத்திட்டத்தில் இந்தியா முழுவதும் எந்த லேண்ட்லைன் மற்றும் மொபைல் போனுக்கும் உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி., கட்டணம் 60 வினாடிகளுக்கு 50 காசுகள்.இத்திட்டத்தில் குறிப்பிட்ட பி.எஸ்.என்.எல்., எண்களுக்கான கட்டண சலுகைகள் கிடையாது.

ஐ.எஸ்.டி.,யை பொறுத்தவரை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் இலங்கைக்கு நிமிடத் திற்கு 7.20 காசுகளும், நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு நிமிடத்திற்கு ஒன்பது ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை தவிர்த்த ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, ஹாங்காங், குவைத், பகரைன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 9.60 காசுகளும் இதர பகுதிகளுக்கு பேச நிமிடத்திற்கு 12 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். உள்ளூர் மற்றும் தேசிய அளவில் எஸ்.எம்.எஸ்., அனுப்ப 50 காசுகளும் வசூலிக்கப்படுகிறது. மற்ற கட்டணங்கள் அனைத்தும் பிரிபெய்டு பொது திட்டத்தை போன்று அமையும். இந்த திட்டத்தை தொடர்ந்து பெற மாதம் தோறும் 375 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

One Response

  1. தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை http://www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

Leave a comment