பணமே ஓடிவா.சோம. வள்ளியப்பன்- பாகம்10-15

பணமே ஓடிவா. சோம. வள்ளியப்பன் – பாகம் 10

நன்றி : குமுதம்

பரஸ்பர நிதி என்றால் என்ன? படம் வரைந்து பாகங்கள் குறிக்கவும்’ என்று கேள்வி கேட்காத குறையாகத்தான் சென்ற வாரம் முடித்தோம்.
பரஸ்பர நிதி. மியூட்சுவல் ஃபண்ட். இப்போது பலராலும் பல இடங்களிலும் பரபரப்பாகவே பேசப்படுகிற வார்த்தைகள் ஆகிவிட்டன இவை. எல்லா தரப்பு மக்களுக்கும் இதன் மீது ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. காரணம், அது தரும் முதலீட்டு வாய்ப்புகளும், அதிலிருந்து கிடைக்கும் மிக அதிகமான வருமானமும் தான்.

சிலருக்கு பங்குச் சந்தை பற்றித் தெரியும். அதில் அனுபவம் உண்டு. அதனால், அவர்களே தரகரைத் தொடர்புகொண்டு, பங்குகள் வாங்குகிறார்கள். விற்கிறார்கள். அதன் மூலம் லாபமும் பார்க்கிறார்கள்.
வேறு சிலருக்கு அனுபவம் இல்லை. ஆனாலும், அதில் கிடைக்கிற லாபத்தினை நாம் ஏன் விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். தவறே இல்லை.

இன்னும் சிலருக்கு அனுபவம் மற்றும் ஞானமும் உண்டு. ஆனாலும் அவர்களால் பங்குகளை வாங்குவதையோ, விற்பதையோ செய்யமுடியவில்லை. காரணம், அவர்களுக்கு நேரமில்லை. அவர்கள் ஈடுபட்டிருக்கும் வேலை, தொழில் அப்படி. அல்லது உடல் நிலை. அல்லது வயது அப்படி.

‘‘அய்யா, என்னிடம் ஆசையும் இருக்கிறது. அதற்கான நேரமும் கூட இருக்கிறது. என்னுடைய பிரச்னை வேறுவிதமானது. என்னால் சரியாக முடிவெடுக்க முடிவதில்லை. பங்குகளை வாங்க, விற்க எத்தனையோ தகவல்கள் தேவைப்படுகின்றன. அவற்றையெல்லாம் என்னால் தேட முடியவில்லை. சொல்லப்போனால், எந்தத் தகவல் எப்போது தேவைப்படும் என்பதே கூட பெரிய சவாலாக இருக்கிறது.’’

”நியாயமான பேச்சு. என்ன செய்யலாம்?’’

பங்குச் சந்தை வாய்ப்புகளையும் விடக்கூடாது. ஆனால் நாமாகச் செய்யவும் முடியவில்லை. இரண்டையும் சமாளித்து பணம் பண்ண ஏதாவது நல்ல வழியிருக்கிறதா?’’

‘‘இருக்கிறது.

காரில் போக ஆசை. வாங்க பணமும் இருக்கிறது. வாங்கியும் ஆகிவிட்டது. முதலாளிக்கு கார் ஓட்டத் தெரியவில்லை. அல்லது ஓட்டுவதற்கு அலுப்பாக இருக்கிறது. என்ன செய்யலாம்? ஓட்டுனர் வைத்துக்கொள்ளலாம். அவர், கார் ஓட்டுவதில் திறமைசாலி.

அதன்பின், நம்பாட்டுக்கு, காரில் ஏறி அமர்ந்துகொண்டு, எங்கே போக வேண்டும் என்று சொன்னால் போதும். அவர் போய்விடுவார். எந்த நெரிசலிலும், மழையிலும். வண்டி ஓடும் நேரம், படிப்பதோ, இசை கேட்பதோ, தூங்குவதோ அல்லது வேறு எதையுமோ நிம்மதியாகச் செய்யலாம்.
கார் ஓட்டுவதை மட்டுமா? வீட்டில் ஃபேனோ அல்லது ஏசியோ பழுதாகிவிட்டது. கூப்பிடு விவரம் தெரிந்தவரை. நேரமும் மிச்சம். தவறுகளும் நிகழாது. பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தர வேண்டுமா? நல்ல டியூன் வாத்தியாரைத் தேடுகிறோம். பாட்டு, கராத்தே, டான்ஸ் எதுவானாலும் அதில் சிறந்தவர்களைக்கொண்டு நம் தேவைகளை முடித்துக்கொள்கிறோம்.
அதேதான் பங்குச் சந்தையிலும். விவரம் தெரிந்தவர்களை வைத்து பங்குகள் வாங்குவது, சரியான நேரங்களில் விற்பது. செய்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நம்மிடம் இருக்கும் 5 ஆயிரத்துக்கும் 10 ஆயிரத்துக்கும், வல்லுனர் வைத்தா முதலீடு செய்ய முடியும்!’’

”நாம் ஏன் தனியாளாகச் செய்ய வேண்டும்? கூட்டுச் சேர்ந்து கொள்வோம். 50 பேர் 100 பேர் சேர்ந்தால், ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் முதலீடு என்றால் என்ன ஆச்சு?’’

”என்ன ஆச்சு?’’

”10 லட்சம் ஆயிற்றே!’’

”ஏன் 100 பேரோடு நிறுத்த வேண்டும்? 10 ஆயிரம் பேர் ஒரு லட்சம் பேர் சேரட்டுமே!’’
”சேர்ந்தால்?’’
”100 கோடி ஆகிவிடும்.’’
”அடேயப்பா!’’
”பிறகு.. அவ்வளவு பணத்தினையும் நிர்வகிக்க, சரியாக முதலீடு செய்ய, என்ன ஊதியம் கொடுத்தும் வல்லுனர் வைக்க முடியாதா என்ன?’’
”ஏன் முடியாது?’’

”அதுதான் செய்கிறார்கள். அதன் பெயர்தான் பரஸ்பர நிதி, மியூட்சுவல் ஃபண்ட்.’’

இப்படிச் செய்வதற்கென்றே தனி நபர்கள் அல்ல, புகழ் பெற்ற நிறுவனங்களே இருக்கின்றன. அவை வல்லுனர்களைத் தேடி வைத்துக்கொண்டு, பின் அழைப்பு விடுக்கின்றன.. ‘வாருங்கள்.. தாருங்கள் நாங்கள் முதலீடு செய்து வருமானம் ஈட்டி, உங்களுக்குத் தருகிறோம்’ என்று.

அப்படிப்பட்ட நிறுவனங்கள் தான் பரஸ்பர நிதி நிறுவனங்கள். இவை மற்றவர்களிடம் இருந்து பணம் திரட்டி, அதனை பங்குச் சந்தையில் முதலீடு செய்து முதலீட்டாளர்களுக்கு லாபம் செய்துகொடுக்கும் வேலையைச் செய்கின்றன. இந்த வேலையில், வங்கிகளும் கூட ஈடுபட்டுள்ளன.
உதாரணத்திற்கு, நாம் முன்பு பார்த்த பாரத ஸ்டேட் வங்கி, கோட்டக், ரிலையன்ஸ் மணி, டாடா, பிர்லா நிறுவனங்கள், ICICI புருடென்ஷியல், பிராங்கிளின், இப்படி நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு, முதலீட்டாளர்களை, ’வாருங்கள், தாருங்கள்’ என்று கூவிக் கூவி அழைக்கின்றன.

இப்படி பரஸ்பர நிதியில் புரளும் மொத்த பணத்தின் அளவு என்ன தெரியுமா? பல லட்சம் கோடிகள். இதனை நிறுவனங்கள் அரசாளும் சொத்து என்பார்கள். மிக அதிகமான பணத்தினைப் பெற்று நிர்வகித்து வரும் நிறுவனம் தற்சமயம் ரிலையன்ஸ்தான். 77 ஆயிரத்து 764 கோடி ரூபாய். அடுத்த இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ புரு, 54 ஆயிரத்து 952 கோடி. மூன்றாம் இடத்தில் யு.டி.ஐ. 52 ஆயிரத்து 179 கோடி ரூபாய்.”

”பரஸ்பர நிதிகளின் நதிமூலம் ரிஷி மூலம் சொல்லுவதாக..’’

”ஏன் சொல்லாமல், இந்தியாவில் முதன் முதலாக 1963_ம் ஆண்டு ஒரு சட்டத்தின் மூலம் மத்திய ரிசர்வ் வங்கியின் பார்வையின் கீழ் ‘யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ (UTI) தொடங்கப்பட்டது. அதன் முதல் பரஸ்பர நிதித் திட்டமான யூனிட் 64 என்பதுதான், நம் தேசத்தின் முதல் பரஸ்பர நிதித் திட்டம். 1988 வாக்கில் அதன் வசம் இருந்த பணத்தின் அளவு 6800 கோடி ரூபாய். இது முதல் கட்டம். அதுவரை அரசின் ஒரே நிறுவனம் செய்து வந்ததை, 1987_ல் பல பொதுத் துறை நிறுவனங்களும் செய்ய அனுமதிக்கப்பட்டன. லிமிசி, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, கேன் பேங்க், பி.என்.பி என்று ஆறு பொதுத்துறை வங்கிகளும் பரஸ்பர நிதிகளைத் தொடங்க அனுமதிக்கப்பட்டன. இது இரண்டாம் கட்டம்.
மூன்றாவது கட்டமாக, 1993_ல் தனியார் நிறுவனங்களும் பரஸ்பர நிதிகளை நடத்தலாம் என்று அரசு பச்சைக்கொடி காட்டியது. கோத்தாரி பயனீர் நிதிதான் முதல் தனியார் பரஸ்பர நிதி. பின்னால் அது பிராங்கிளின் நிதியுடன் இணைந்தது.

அதன் பிறகு வெள்ளமென வந்து முதலீட்டாளர்களை திக்கு முக்காட வைத்துக்கொண்டிருக்கின்றன நூற்றுக்கணக்கான நிறுவனங்கள்.
”இவ்வளவு தூரம் போய் பலரும் பரஸ்பர நிதிகளில் விழுகிறார்களே! அப்படி என்னதான் வருமானம் தருகின்றன அவை!’’

”எப்போதும் இப்படியா என்று சொல்ல முடியாது . ஆனால் இப்போது அவை அள்ளித் தந்துகொண்டிருப்பது என்னவோ உண்மைதான். 2003_ க்குப் பிறகு பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தவர்களுக்கு பெருத்த வருமானம் கிடைத்திருப்பது நிஜம்.’’

”அதென்ன 2003 _ க்குப் பிறகு?’’

”அப்போதுதானே பங்குச் சந்தை உயர ஆரம்பித்தது. 2003 ஜனவரி மாதம் சென்செக்ஸ் வெறும் 3250 புள்ளிகள் தான் இருந்தது. இப்போது? 21 ஆயிரத்தைத் தொட்டுவிட்டதே. கிட்டத்தட்ட ஆறு மடங்கு. அதன் தாக்கம் பரஸ்பர நிதியில் இல்லாமல் போகுமா? ’’

”சஸ்பென்ஸ் போதும். பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த சில வருடங்களில் எவ்வளவுதான் கிடைத்தது..?’’

“எல்லா பரஸ்பர நிதிகளும் இப்படித்தானா? கண்ணை மூடிக்கொண்டு உள்ளே இறங்கிவிடலாமா?”.

நீலநிற இன்லாண்ட் கடிதம் எழுதி, சிவப்புநிற தபால்பெட்டியில் போட்டுவிட்டு, இன்றைக்காவது பதில் வருமா என்று தபால்காரருக்காக நீங்கள் காத்திருந்த காலம் போய், என்ன ஒரு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியிருக்காதா?

இப்போதெல்லாம், ஊருக்குக் கிளம்பியவர், ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் கூட எங்கே இருக்கிறேன் என்று சொல்லமுடிகிறது. அங்கு இங்கு எனாதபடி, எல்லா இடங்களிலும், எல்லோரிடமும் கைபேசிகள்; எவ்விடத்தும் கூரியர் தபால்கள்.

அரசு தரும் டெலிபோன் இணைப்பு, புதிய இண்டேன் கேஸ் கனெக்ஷன், ஆவின் பால்கார்டு, லாம்ரட்டா ஸ்கூட்டர், மாருதி கார் போன்றவற்றுக்காக மட்டுமே மக்கள் காத்திருந்தது ஒரு காலம்.

எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது. வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. படிக்கும் படிப்புகள், செய்யும் வேலைகள், பெறும் ஊதியங்கள் மட்டுமல்ல. உண்ணுவது, உடுத்துவது, பொழுது போக்குவது, பிரயாணம் செய்வது, செய்திகள் தெரிந்துகொள்ளுவது என்று பலவற்றிலும் மாற்றங்கள். சிறிய பெரிய மாற்றங்கள். தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டே இருக்கும் மாற்றங்கள்.

எல்லாம் மாறிக்கொண்டிருக்க, பணத்தினை பெருக்கும் வழிகள் மட்டும் விதிவிலக்காக அப்படியே இருக்கமுடியுமா என்ன? அவற்றிலும் மாற்றங்கள் வந்திருக்கின்றன, வந்துகொண்டேயிருக்கின்றன.

சேமிக்கிற பணமா? சீட்டு கட்டுவது, தொடர் வைப்புகள் (ஆர்.டி), வங்கி வைப்புகள் (எஃப்.டி) , அஞ்சலக சேமிப்புகள், அரசு பத்திரங்கள் (NSC,KVP) மட்டுமே என்றிருந்த நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. (தவளை இருந்த பாத்திரம் மெல்ல மெல்ல சூடேறியது போல)

சமீபகாலமாக பரஸ்பர நிதிகள், பங்குகள் போன்றவற்றின் மீது மக்களுக்கு கூடுதலான ஆர்வம் வந்திருக்கிறது. காரணம் அவர்களின் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்.

அதிக வருமானம் வேண்டும். அதுவும் சீக்கிரம் வேண்டும். அதற்காக ’ரிஸ்க்’ எடுக்கவும் தயார் என்கிற மனோபாவம்.

அந்த வகையில், பணத்தினை வேகமாக பெருக்கும் சில வழிகள் தான் நாம் கடந்த சில அத்தியாயங்களாக பார்த்துக்கொண்டிருக்கும் பங்குகள் (Shares), பரஸ்பர நிதிகள் (Mutual Funds) , மற்றும் எஸ்.ஐ.பி (SIP).

சமீபகாலமாக பெரும்பாலான பரஸ்பர நிதிகள், அவற்றில் முதலீடு செய்தவர்களுக்கு அள்ளிக்கொடுத்திருக்கின்றன என்று பார்த்தோம். அதே சமயம் எந்த பரஸ்பர நிதியானாலும் அதில் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்துவிடலாமா? என்று ஒரு கேள்வியும் கேட்டிருந்தோம்.

அதற்கான பதில், கூடாது என்பதுதான். ஏன் என்று கேட்டால் அதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன.

அந்தக் காரணங்களில் ஒன்று, பரஸ்பர நிதியைப் போல செயல்படும் வேறு திட்டங்கள் ஏதாகிலும் இருக்கின்றனவா? அவற்றைப் பற்றியும் முதலீடு செய்வதற்குமுன் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

பரஸ்பர நிதியைப் போலவே, யூலிப் (ULIP), இ.எல்.எஸ்.எஸ் (ELSS ) போன்ற வேறு சிலவும் இருக்கின்றன. கேள்விப்பட்டிருக்கலாம்.

இவற்றுக்கிடையே இருக்கும் வித்தியாசங்கள் என்ன? வருமானம், ரிஸ்க், வரிச்சலுகை போன்றவற்றில் இந்த திட்டங்கள், பங்குகள் பரஸ்பர நிதிகளில் இருந்து எப்படி வேறுபடுகின்றன? இவற்றில் எந்த திட்டத்தில் சேருவது நமக்கு நல்லது? எந்த விதத்தில் நல்லது?

எதையும் விட வேண்டாம். எல்லாவற்றையும் பார்த்துவிடலாம்.

இவையெல்லாம் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவைதான். இந்த திட்டங்களுக்கெல்லாம் தாத்தா போன்றது பங்குச்சந்தை. அவர்தான் மூலம். அவர் மூலமாக வந்த மகன்கள், மகள்கள், பேரப்பிள்ளைகள் போன்றவைதான் பரஸ்பர நிதி, எஸ்.ஐ.பி, யூலிப், ELSS போன்ற திட்டங்கள்.

பங்குச் சந்தை என்றால், தொழில் வியாபார நிறுவனங்களின் உரிமை என்பதை ஏற்கெனவே பார்த்தோம். நிறுவனங்களின் உரிமையை பங்குகளாக வாங்குவதன் மூலம், நிறுவனங்கள் செய்யும் லாபம், அதனால் ஏற்படும் பங்குவிலை உயர்வு முதலியவை, பங்குதாரர் ஆகிய நமக்கும் கிடைக்கும்.

இதை நேரிடையாக செய்யலாம் (ஷேர் மார்கெட்). அல்லது வல்லுனர் நடத்தும் திட்டம் மூலம் செய்யலாம் (பரஸ்பர நிதி). ஒரே தடவையாக முதலீடு செய்யாமல், தொடர்ச்சியாகவும்பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம் ( எஸ்.ஐ.பி). இவற்றையெல்லாம் ஏற்கெனவே விளக்கமாக பார்த்துவிட்டோம்.

இந்த குடும்பத்தினைச் சேர்ந்த இன்னும் இரண்டு முக்கிய உறுப்பினர்கள் தான் யூலிப் (ULIP ) மற்றும் இ.எல்.எஸ்.எஸ் (ELSS). அவர்களைப் பற்றித்தான் இனி விரிவாக பார்க்கப்போகிறோம். முதலில் இ.எல்.எஸ்.எஸ் (ELSS) பற்றிப் பார்க்கலாம். காரணம் இவர் முழுக்க முழுக்க பங்குச் சந்தை சார்ந்தவர். அதாவது சொந்தத்தில் பெண் எடுத்தவர் போல. ஆனால் ‘யூலிப்’, அசலில் பெண் எடுத்தவர் போல. அவர் காப்பீடு என்கிற வேறு குடும்பத்துடன் சம்பந்தம் செய்திருக்கிறார். அதனால் அவரை அடுத்தாக பார்க்கலாம்.

இ.எல்.எஸ்.எஸ் (ELSS)

இது ஒரு சேமிப்புத் திட்டம். அதனைக் குறிப்பதுதான், கடைசி இரண்டு எழுத்துக்களான எஸ்.எஸ் (S.S). அதாவது ’சேவிங்ஸ் ஸ்கீம்’. ஆனால் இந்த சேமிப்பு வித்தியாசமானது. வித்தியாசம், அதன் பங்குச் சந்தை தொடர்பில் இருக்கிறது. அதனைக் குறிப்பதுதான், முதல் இரண்டு எழுத்துக்களான இ.எல். (EL).

மொத்தத்தில் இது, ஈக்குவிட்டி லிங்க்ட் (Equity Linked) சேமிப்புத் திட்டம். ஈக்குவிட்டி என்றால் பங்குகள். ஆக, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் சேமிப்புத்திட்டம்.

பெயர்தான் உச்சரிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக தெரிந்ததே தவிர, திட்டம் எளிமையானதுதான் என்பது தெளிவாகியிருக்கும்.

நம்மைப் போன்ற முதலீட்டாளர்களால் இதில் போடப்படும் பணம், இந்த திட்டங்களை நடத்துபவர்களால், பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. அதனால் இ.எல்.எஸ்.எஸ்_ல் இருந்து கிடைக்கக்கூடிய வருமானமும், முதலீடிற்கு இருக்கும் ரிஸ்கும் பங்குச் சந்தையை ஒட்டியது. அதே போன்றது.

பரஸ்பர நிதியைப் போன்றே, இந்த திட்டத்திலும் ஒரு தவணையாகவோ ( ’லம்ப் சம்’ ஆக) அல்லது பல தவணைகளாகவோ தொடர்ந்து, எஸ்.ஐ.பி போல கட்டலாம்.

அப்படியென்றால் இந்த திட்டத்திற்கும் பரஸ்பர நிதிக்கும் என்ன வித்தியாசம் என்கிற கேள்வி வரலாம்.

இந்த ELSS , பரஸ்பர நிதி மற்றும் நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதில் இருந்து, இரண்டு விதங்களில் வேறுபட்டது.

1) பங்குகளோ அல்லது பரஸ்பர நிதியோ, அதில் இருந்து வரும் வருமானத்திற்குத்தான் வரிவிலக்கு கொடுக்கப்படும். ஆனால் ELSS செய்யப்படும் முதலீட்டிற்கே வரிவிலக்கு உண்டு.

வருமானவரிச் சட்டம் செக்ஷன் 80 சி படி, அதிகபட்சமாக ரூ. ஒரு லட்சம் வரை கூட இப்படி வரிச்சலுகை உள்ள திட்டங்களில் ஒருவர் முதலீடு செய்யலாம். நாம் முதலீடு செய்யும் பணத்திற்கே வரிவிலக்கு கிடைக்கும்.

நாம் வேலைக்குப் போகிறோம். சம்பளம் வருகிறது. அந்த வருமானத்தினைக் கொண்டு பங்குகளோ அல்லது பரஸ்பர நிதியோ வாங்குகிறோம். அந்த முதலீடிற்கு வரும் வருமானமான டிவிடெண்ட் பணத்திற்கு வரி கிடையாது.

இன்னொருவர் இருக்கிறார். அவர் பங்குகள், பரஸ்பர நிதிக்கு பதிலாக, ELSS ல் முதலீடு செய்கிறார். அவர் எவ்வளவு செய்கிறாரோ (1 லட்சத்திற்கும் குறைவாக) அந்த அளவு பணத்திற்கு வருமான வரி இல்லை. தவிர அதில் இருந்து வரும் ( டிவிடெண்ட் போன்ற ) வருமானத்திற்கும் வரியில்லை.

ஒரு லட்சம் என்கிற வரம்பிற்குள் சேமநல நிதி (PF), எல்.ஐ.சி போன்ற பிற சேமிப்புகளும் வருகின்றன. அவை போக மீதமுள்ள பணத்திற்கு ELSS போட்டால் போதும்.

(2) நேரடியாக வாங்கிய பங்குகளை எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். அதேபோல, பரஸ்பர நிதிகளில் இருந்தும், விரும்பும் நேரம் விலகலாம். முதலீடு செய்த பணத்தினை திரும்பப் பெறலாம். ஆனால் ELSS ல் அப்படி செய்ய முடியாது.

முதலீடு செய்யப்படும் பணத்தினை 3 ஆண்டுகளுக்கு முன்பாக திரும்ப எடுக்க முடியாது. விட்டுவைக்க வேண்டும். முதலீடு செய்யப்படும் பணத்திற்கு முழுவரிவிலக்கு கொடுக்கப்படுவதால் தான் அந்த நிபந்தனை. பப்ளிக் பிராவிடெண்ட் பண்ட் (PPF), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC), கிசான் விகாஸ் பத்திரம் (KVP) எல்லாவற்றிலும் கூட அப்படித்தானே என்கிறீர்களா?

நீங்கள் நினைப்பது சரிதான். இதுவும் அதே போலத்தான். ஆனால் அவற்றை விடவும் ELSS ல் ஒரு கூடுதல் வசதி, நிபந்தனைக் காலம் 3 ஆண்டுகள் மட்டுமே என்பதுதான் அது. PPF போட்ட பணத்தினை, 15 ஆண்டுகளுக்கு முன்பாக (முழுவதும்) எடுக்க முடியாது. மற்றவற்றின் கெடுகாலமும் அதிகம்( என்.எஸ்.சி 6 ஆண்டுகள்).

இதோடு ELSS முடிந்தது. இனி பார்க்க வேண்டியது யூலிப்..முதலீடு செய்யும் பணத்திற்கு, கணிசமான வருமானம் பார்ப்பது எப்படி? என்கிற கேள்விக்குப் பதிலாக, தற்சமயம் பிரபலமாகி வரும் சில திட்டங்களில், இ.எல்.எஸ்.எஸ் திட்டமும் ஒன்று என்று பார்த்தோம்.

”இது ஒரு வரிச் சலுகை பெற்றுத்தரும் சேமிப்புத்திட்டம். செய்த முதலீட்டினை 3 ஆண்டுகள் விட்டுவைக்க வேண்டிய திட்டம் என்பதெல்லாம் சரி. இப்படிப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்கிற பணத்திற்கு என்ன வருமானம் கிடைக்கும்? என்பதும் தெரிந்தால் நன்றாக இருக்குமே!

இப்படிப்பட்ட திட்டங்களைப் பல நிறுவனங்களும் நடத்துகின்றனவே, அந்த நிறுவனங்கள் முதலீடு செய்தவர்களுக்கு என்ன வருமானம் தந்திருக்கின்றன?

இப்படிப்பட்ட விவரங்களை முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ளுவது எப்படி? ”

பரஸ்பர நிதி சம்பந்தமான தகவல்களை, நிதி சம்பந்தமான பத்திரிகைகளிலும் (தலால் ஸ்ட்ரீட், அவுட் லுக் மணி, நாணயம் விகடன் போன்றவை) பார்க்கலாம். மேலும் ஆங்கில தினசரிகளான பிசினெஸ் ஸ்டாண்டர்ட், எக்கனாமிக் டைம்ஸ் போன்றவற்றிலும் படிக்கலாம். அவற்றைப் பற்றிய தகவல்கள் அனைத்துமே http://www.mutualfundsindia.com என்கிற இணையதளத்தில் முழுமையாகப் பார்க்கலாம்.

அதில் 9.1.2008 நிலவரப்படி, கீழ்க் கண்ட 5 திட்டங்கள் தான், மிக அதிகமான வருமானம் ஈட்டித்தந்த இ.எல்.எஸ்.எஸ் திட்டங்கள்.

இதே போன்ற வருமானம் எல்லா சந்தர்ப்பத்திலும் சாத்தியமில்லை என்பது தெரிந்ததுதான். என்ன குறைந்தாலும் நீண்டகால அடிப்படையில் பார்க்கும் போது, வருமானம் கணிச மாகவே இருக்கும். தவிர, இதில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு, செக்ஷன் 80 சியின் கீழ், வருமானவரி விலக்கு உண்டு என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

இனி யூலிப் பற்றி.

யூலிப்

யூலிப் என்பது சில ஆங்கில எழுத்துக்களின் சுருக்கம். அந்த எழுத்துக்கள், U L I மற்றும் P.

இந்த யூலிப் திட்டமும் பங்குச் சந்தை தொடர்பானதுதான், பங்குச் சந்தை குடும்பத்தினைச் சேர்ந்ததுதான் என்று ஏற்கெனவே பார்த்தோம். ஆனால், இது அசலில் பெண் எடுத்திருக்கிறது என்றும், அந்த அசல் ( அன்னியம்) காப்பீடு (இன்சூரன்ஸ்) என்றும் கூடப் பார்த்தோம்.கடைசி இரண்டு எழுத்துக்களான I யும் P யும் இன்சூரன்ஸ் பிளான் என்பதைக் குறிப்பதற்காக. நடுவில் வரும் L தான் இணைப்பவர். அதாவது ’லிங்க்ட்’ என்பதன் முதல் எழுத்து. முதலில் வரும் U என்பது யூனிட் என்பதைக் குறிப்பதற்காக.

யூனிட் என்பது பரஸ்பர நிதிக்கான தனிப்பட்ட வார்த்தை. பத்து ரூபாய் முக மதிப்புள்ள பங்கு என்கிறோமல்லவா? அதேபோல பரஸ்பர நிதியில் 10 ரூபாய் யூனிட் என்போம். அவ்வளவுதான். யூனிட்டும் பங்கு போன்றதே. ஆனால் பரஸ்பர நிதி சம்பந்தமானது.

இந்த யூலிப் திட்டங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தான் நடத்த முடியும். இவையெல்லாம், காப்பீட்டுத் திட்டங்களைப் போலவே, ஐ.ஆர்.டி.ஏ கண்காணிப்புக்கும் ஆளுகைக்கும் உட்பட்டவை.

இன்சூரன்ஸ் போட்டால், அவ்வப்போது போனஸ் கிடைக்கும் அல்லவா? அப்படி போனஸ் தருவதற்கு பதில் அந்தப் பணத்தினைக் கொண்டு, இன்சூரன்ஸ் நிறுவனங்களே, பரஸ்பர நிதிகள் தொடங்கி, அதில் முதலீடு செய்கிறார்கள்.

பரஸ்பர நிதிகள் என்றால், என்ன என்று நமக்குத் தெரியும். பலரிடம் பணம் பெற்று அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தான் பரஸ்பர நிதி.

இங்கே யூலிப்பில், அப்படி தனியாகப் பணம் பெறாமல், நாம் இன்சூரன்ஸ§க்காக கட்டும் பீரிமியப் பணத்தில் இருந்தே, ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

இதுதான் மற்றவகை இன்சூரன்ஸ§களுக்கும் யூலிப் இன்சூரன்ஸ§களுக்கும் இருக்கும் முக்கிய வித்தியாசம்.

இன்சூரன்ஸ் தவிர காப்பீடு செய்துகொண்டவருக்கு, பரஸ்பர நிதி போன்ற யூனிட்டும் கிடைக்கிறது. கிடைத்துக்கொண்டேயிருக்கிறது. காப்பீடும் இருக்கிறது. பங்குச் சந்தை பங்கேற்பும் இருக்கிறது.

யூனிட்டுகள் கிடைக்கிறது, சரி. இந்த யூனிட்டுகளால் என்ன லாபம்? அவற்றின் மதிப்பு என்ன? மாறுமா?

இதற்கு பரஸ்பர நிதியில் சொல்லப்படும் நிகர சொத்து மதிப்பு என்பது பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் ஒரு பரஸ்பர நிதி ஆரம்பிக்கிறோம், ஆளுக்கு ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்று ஒரு நிறுவனம் கேட்கிறது. தருகிறார்கள். ஆயிரம் ரூபாய்க்கு நூறு, 10 ரூபாய் முகமதிப்புள்ள யூனிட்டுகளை வழங்குகிறது அந்த நிறுவனம்.

இப்போது முதலீடு செய்த ஒவ்வொருவரிடமும் 100 , பத்து ரூபாய் பரஸ்பர நிதி யூனிட்டுகள்.

இப்படி முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேர். அப்படியென்றால் இவர்களின் மொத்த முதலீடு, 10 கோடி ரூபாய். சரிதானே!

இப்போது பரஸ்பர நிதியிடம் இருக்கும் ஆரம்பப் பணம் ரூ 10 கோடி. இதனை பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கிறார் , அந்த நிதியின் மேலாளர் (அவர் பெயர், பஃண்ட் மேனேஜர். இப்படிப்பட்டவர்களின் ஊதியங்கள் மிக அதிகம்). ஒருமாதம் போகிறது. மொத்த கணக்குப் பார்க்கிறார்கள். அவர் வாங்கியிருக்கும் சில பங்கு விலைகள் உயர்ந்துள்ளன. சில பங்குகளின் விலைகள் குறைந்துள்ளன. மொத்தத் தில் அவர் முதலீடு செய்திருந்த 10 கோடி பணத்தின் மதிப்பு 11 கோடி ரூபாய் ஆகிவிட்டது. அதாவது மொத்த சொத்து மதிப்பு 11 கோடி ரூபாய்.

பத்து கோடி ரூபாய் முதலீட்டின் சொத்து மதிப்பு 11 கோடி ஆகிவிட்டது என்றால், ஒவ்வொரு பத்து ரூபாய் யூனிட்டுக்கும் எவ்வளவு சொத்து தேறும்?

அதேதான். 11 ரூபாய். இதனைத்தான் யூனிட்டின் நிகர சொத்து மதிப்பு ( நெட் அசெட் வேல்யு) என்கிறார்கள். செய்த முதலீட்டின் மதிப்பு அதிகமாக அதிகமாக, இந்த ழிகிக்ஷி மதிப்பு அதிகமாகும். முதல் மாதம் 11 ரூபாய் என்பது அடுத்த வருடத்தில் 15, 20 என்று கூட உயரலாம்.

உதாரணத்திற்கு, நாம் முன்பு பார்த்த, ’SBI மேக்னம் டேக்ஸ் கெயின் 93 ’ என்கிற திட்டத்தின், 9.1.08 தேதி ‘நெட் அசெட் வேல்யு’ 69 ரூபாய். (இது ஒரு இ.எல்.எஸ்.எஸ் திட்டம்)

யூலிப்பில் முதலீடு செய்தவருக்கு , ஆண்டு தோரும் போனஸ§க்குப் பதிலாக, யூனிட்டுகள் வழங்கப்படும். தவிர, செய்த முதலீடு மற்றும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, யூனிட்டுகளின் நிகர சொத்து மதிப்பும் மாறும்.

முதலீடு செய்ததில் இருந்து (மூன்று)ஆண்டுகளுக்குப் பிறகு, தேவைபட்டால், காப்பீடு செய்தவர் தன் கணக்கில் இருக்கும் யூனிட்டுகளை விற்கலாம். விற்று மேலும் கட்ட வேண்டிய இன்சூரன்ஸ் பிரீமியத்தினைக் கூட கட்டலாம். ஏன் 3 வருடங்கள் கழித்துத்தான் என்பது நமக்குத் தெரியும். காரணம், இது செக்ஷன் 80 சி படி வருமானவரி விலக்குப் பெற்ற முதலீடு. அதனால்தான்.

மொத்தத்தில், யூலிப் என்பவை ரிஸ்க் கவர் செய்யும் காப்பீட்டுத் திட்டங்கள்தான். கூடவே பங்குச் சந்தையில் பங்கு பெறும் வாய்ப்பும். அதனால் , பங்குச் சந்தை தரும் வாய்ப்புகளும், கூடவே அதன் இணைபிரியாத ‘ரிஸ்க்’குகளும்.

வருமான வரிவிலக்கிற்கும் யூலிப்புகள் உதவும்.

பரஸ்பர நிதிகளைப் போலவே, யூலிப் திட்டங்களிலும், முதலீட்டாளருக்கு, தேர்வு செய்ய பலவிதமான திட்டங்கள் இருக்கின்றன. அவை…
தன் வாழ்நாளில் ஓருவர், ஓடியாடி சம்பாதிக்கக்கூடிய காலம் என்பது சுமாராக எவ்வளவு ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

என்ன, மிஞ்சிமிஞ்சிப் போனால், அறுபது வயது வரை ஒருவரால் திறமையாக, சுறுசுறுப்பாக வேலை செய்து சம்பாதிக்க முடியுமா?

அப்படியென்றால், ஒருவரால் அதிகபட்சமாக, சுமார் நாற்பது ஆண்டுகள் வரை நன்றாக சம்பாதிக்க முடியும் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இப்போது அடுத்த கேள்விக்கு வருவோம். அந்த நபர், அறுபது வயதிற்குப் பிறகு சுமாராக எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டியிருக்கும்? ’அடடா! இதென்ன கேள்வி! அது, அவரவர் ஆசையையும் ஆயுளையும் பொறுத்தது’ என்கிறீர்களா? அதுவும் சரிதான். அப்படியென்றால், கேள்வியை சற்று மாற்றி, இப்படி கேட்கலாம்.

சராசரியாக ஒருவர் எவ்வளவு வயதுவரை வாழ்வார் ? (வாழவேண்டியிருக்கலாம்?)

இப்போதெல்லாம் எழுபது, எழுபத்து ஐந்து வயது என்பவையே சாதாரணமாக இருக்கிறது. எண்பது எண்பத்து ஐந்து வயதினைக் கூட பலரும் தொடுகிறார்கள்.

எல்லாம் மருத்துவம் செய்யும் மகத்துவம். வாழ்க.

சரி. (சராசரியாக) ஒருவர், 75 வருடங்கள் வரை வாழுகிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அடுத்து, சுவாரஸ்யமான மூன்றாவது கேள்விக்கு வருவோம்.

60 வயதிற்கு மேல் (75 ந்தோ அல்லது அதற்கு மேலோ) வாழும் ஒருவருடைய நிலைமை அந்தக் காலகட்டத்தில் எப்படியிருக்கும்?

1) சொந்த சம்பாத்தியம் இருக்காது. இருந்தாலும் அதன் அளவு, பழைய அளவாக இருக்காது.

2) உடலில் வலு குறைந்திருக்கும்.

3) உபாதைகள் சில வந்து குடியேறியிருக்கும்.

4) உதவிக்கு ஆள் இருக்காது. பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி, ஆளுக்கு ஒரு ஊரில் (அல்லது நாட்டில்) இருப்பார்கள்.

5) எல்லாவற்றையும் அல்லது கிடைப்பவைகளை (எல்லாம்) (அப்படியே) சாப்பிட முடியாது. உணவில் பக்குவம் தேவைப்படும்.

6) மருத்துவத்திற்கும் மருந்துகளுக்கும் முன்பைவிட அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

7) வண்டி வசதி இல்லாமல் பயணம் செய்வது சிரமமாக இருக்கும்

8) பேசினால் கேட்க ஆள் இருக்காது.

இவையெல்லாம் சின்ன வயதுக்காரர்களுக்கு பயமுறுத்தல்களாகத் தெரியலாம். ஆனால், ’அவ்வளவும் உண்மை. உண்மையைத் தவிர வேறு மிரட்டல் இல்லை’ என்பது வயதானவர்களைக் கேட்டால் தெரியவரும்.

இப்போது, முக்கியமானதும் நான்காவதுமான அந்தக் கேள்விக்கு வருவோம்.

இவற்றை எல்லாம் மாற்ற முடியுமா?

எல்லோர் தேவைகளுக்கும் வழி இருக்கிறது. (பேர்) ஆசைகளுக்குத் தான் வழியில்லை என்று சொல்லுவார்கள். அதேதான் இங்கேயும்.

வயோதிகம் எல்லோருக்கும் வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மூப்பும் திரையும் எவருக்கும் வந்துதான் ஆகும். கட்டுப்பாடான உணவுப் பழக்கமும் , தொடர்சியான உடற்பயிற்சியும், மேலே பார்த்த எட்டுப் பிரச்னைகளில், சிலவற்றைக் குறைக்கலாம்.

ஆனால், பல பிரச்னைகளையும் ஒன்றாகச் சமாளிக்க, ஒரு நிச்சயமான வழி இருக்கிறது. ’அது’ பத்தும் செய்யும் என்பார்கள். அதேதான். அந்த மூன்றெழுத்துத் தீர்வுக்குப் பெயர்: பணம். அதுவும் எவரையும் எதிர்பாராமல், தன் கையில் தானே வைத்திருக்கும் பணம்.

வேலையில் இருந்து ஓய்வு பெற்றபின், இருபது இருபத்தைந்து வருடம் வரை தனக்கும் தன் மனைவிக்கும் (அல்லது கணவருக்கும்), மேலே பட்டியலிடப்பட்டிருப்பனவற்றைச் சமாளிக்க தொடர்ந்து தேவைப்படும் பணம்.

வாழ்க்கையின் இரண்டாவது பகுதியான அந்த இருபத்தைந்து வருடங்களுக்கு தேவைப்படும் பணம். இனி ஐந்தாவது கேள்வியும் அதற்கான பதிலும்.

ஓய்வு பெற்ற பிறகு வாழ வேண்டிய 25 ஆண்டுகளுக்குத் தேவையான பணத்தினை எப்போது ஆயத்தம் செய்வது? யார் செய்வது?

பல புதிர்களையும் ஆச்சரியங்களையும் உள்ளே வைத்திருக்கக்கூடிய எதிர்காலம் ஒரு பக்கம். அதை சமாளிக்க, உடல் வலு மற்றும் சம்பாதிக்கும் திறன் குறைந்துகொண்டே போகும் நாம், இன்னொரு பக்கம். இந்தப் போட்டியில் நம் வெற்றியை நிச்சயப்படுத்துவதற்குத் தேவையான பணத்தினை உருவாக்கிக்கொள்ளும் வழி: முதல் அத்தியாயத்தில் இருந்தே நாம் பார்த்து வரும், சேமிப்பும், சேமிப்பினை லாபகரமாக முதலீடு செய்வதும்தான்.

இப்போது, உங்கள் முறை. ஆறாவது கேள்வியை நீங்கள் கேட்கலாம்.

சென்ற வாரம் பார்த்த யூலிப் வகைகளுக்கும், மேலே பார்த்தவற்றுக்கும் என்ன தொடர்பு?

எவருடைய வாழ்க்கைதான் ‘ரிஸ்க்’ இல்லாமல் இருக்கிறது? அதனால்தான் கேள்வி கேட்பாடு இல்லாமல் சரி என்று, பலரும் ’லைஃப் இன்சூரன்ஸ்’ எடுக்கிறார்கள்.

தனக்கு தப்பித்தவறி ஏதும் நிகழ்ந்துவிட்டால், தன் குடும்பம் சிரமத்திற்குள்ளாகிவிடக் கூடாது. என்கிற எண்ணத்தில்தான், அதிக வருமானம் தரக்கூடிய வேறு சில முதலீடுகள் இருந்தாலும், அந்த அளவு வருமானம் தராத, இன்சூரன்ஸ் எடுக்கிறார்கள். ஓய்வு பெறும் வரை, பல வருடங்களுக்கு, தொடர்ந்து பிரீமியத் தொகை கட்டிவருகிறார்கள்.

ஆக, ’இன்சூரன்ஸ் என்பது, வாழ்க்கையின் ரிஸ்க் கினை சமாளிப்பதற்காகத்தான். அதில் லாபமோ, பெரிய வருமானமோ எதிர்பார்க்கக்கூடாது’ என்பதாகவே பல வருடங்கள் ஓடிவிட்டன. காலம் மாறியது. சிலர், இந்த நிலை குறித்து(ம்) ஒரு கேள்வி கேட்டார்கள். ( ஆமாம். நம் கணக்குப்படி, ஏழாவது கேள்விதான்)

ஏன் அப்படி? இன்சூரன்ஸ் திட்டங்களாகவே ஆனாலும் அவற்றால், முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் தரமுடியாதா என்ன? அதற்கு பதிலாக கிடைத்ததுதான், யூலிப் ( ULIP) திட்டம்.

”தாருங்கள் உங்கள் பணத்தினை. அதனை, பங்குச் சந்தையில் , பரஸ்பர நிதிபோல முதலீடு செய்து, வருமானம் ஈட்டித்தருகிறோம்’’ என்றது யூலிப் திட்டம்.

”பரஸ்பர நிதி போலா? அப்படியென்றால், இன்சூரன்ஸ் என்ன ஆவது? பாலிசிதாரருக்கு இடையில் ஏதும் நிகழ்ந்துவிட்டால், முழுத்தொகை ( Sum Assured) கிடைக்காதா?’’

”அதற்கென்ன? அதுவும் உண்டு’’

”அதெப்படி, இரண்டும் தரமுடியும்?’’

”இரண்டுமல்ல. இரண்டில் எது தேவையோ, அது’’

”அப்படியென்றால்..?’’

”இன்சூரன்ஸ் எடுத்தவர், தற்செயலாக இறந்துவிட்டால், அவர் இன்சூரன்ஸ் எடுத்த அளவு பணம் அவருக்கு வழங்கப்படும்’’

”சரி..’’

”அவர் காப்பீடு காலம் முழுவதும் கடந்தால், அவருக்கு, பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்பட்டிருந்த தொகை எவ்வளவாக பெருகியிருக்கிறதோ அவ்வளவு தொகை வழங்கப்படும்.’’

“மொத்தத்தில்..’’

”எந்த நேரத்திலும், இந்த இரண்டில் எது அதிகமோ (Whichever is Higher) அந்த அளவு பணம் வழங்கப்படும்.’’

”அட! இது நன்றாக இருக்கிறதே!’’

”அதுதான் யூலிப். இப்படி மட்டுமல்ல. பரஸ்பர நிதியின் அளவு (ஃபண்ட் வேல்யு) மற்றும் ’லைஃப் கவர்’ எனப்படும் இன்சூரன்ஸ் தொகை ஆகிய இரண்டினையும் கொடுக்கும் திட்டங்களும் உண்டு.’’

”அடேயப்பா! அதெப்படி இரண்டும் சாத்தியமாகிறது? இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது?’’

”எல்லாம் காப்பீடு (யூலிப்) எடுப்பவர் கட்டும் பிரீமியத்தொகையில் இருந்துதான் எடுக்கப்படுகிறது.”

”மேலும் இது பற்றிச் சொல்லுவதற்குமுன், பரஸ்பர நிதியை விட , யூலிப் எப்படி மேல் என்று சொல்லுங்களேன்..’’

”பரஸ்பர நிதியில், முதலீட்டாளர், கட்டும் பணத்தின் அளவு மட்டுமே, அது வளரும் அளவு மட்டுமே, அவருக்கு வழங்கப்படும். இடையில் அவருக்கு ஏதும் நிகழ்ந்தால்.. அவர் கணக்கில் இருக்கும் யூனிட்டுகளின் நிகர சொத்து மதிப்பு (NAV)அளவு மட்டுமே அவர் குடும்பத்திற்கு கிடைக்கும். யூலிப்பில் காப்பீடும் இருப்பதால், எவ்வளவு குறைவான அளவு தவணைகள் கட்டியிருந்தாலும், ‘லைஃப் கவர்’ செய்யப்பட்டிருந்த அளவு, பணம் நிச்சயம் வழங்கப்படும்.

“இவ்வளவுதானா? அல்லது யூலிப்பில் இன்னும் கூட இருக்கிறதா?’’.

 லாபமா எதிர்பார்க்கக்கூடாத ஒரு முதலீடு’ என்று ஏதாவது ஒன்று இருக்குமானால், அந்தப் பெருமை, இதுவரை இன்சூரன்ஸ§க்குத்தான் இருந்து வந்திருக்கிறது.

லாபம் என்றால் என்ன? செய்யும் செலவைவிட, வருகிற வருமானம் அதிகமாக இருப்பதுதானே!

இன்சூரன்ஸில் எது செலவு? பாலிசிதாரர் கட்டுகிற பிரீமியத் தொகைதான் செலவு. வருமானம் என்பது? இன்சூரன்ஸ் நிறுவனம், பாலிசிதாரருக்குத் திருப்பித் தரும் பணம்.

தவணைகளில் கட்டிய பிரீமியத் தொகை, அதற்குரிய மிகச் சாதாரண வட்டியுடன்தான் பலருக்கும் கிடைக்கும். அதே இன்சூரன்ஸில், கட்டியதைவிட அதிகமான பணம் என்பது, மிகச் சிலருக்கு (அவர்களின் குடும்பங்களுக்கு) மட்டுமே கிடைக்கும். இப்படியாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த திட்டம்தான் இன்சூரன்ஸ்.

அந்த இன்சூரன்ஸிலும், கணிசமான லாபம் பார்க்கமுடியுமா? அதுவும் பரஸ்பர நிதிகள் போல ’நீண்ட கால முதலீடுகளில் கிடைக்கக்கூடிய வருமான அளவெல்லாம் சாத்தியமா? என்ற கேள்விகளுக்கு விடையாக அமைந்ததுதான் யூலிப், என்பதையெல்லாம் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம்.

”அப்படியென்றால் யூலிப் என்பது சந்தேகமில்லாமல் நிச்சயமான வாய்ப்பா? கண்ணை மூடிக்கொண்டு அதில் பணம் போட்டுவிடலாமா?”

”யூலிப் என்பது ஒட்டு மாம்பழம் போல. ஹைபிரிட் வகை. காப்பீடு, பரஸ்பர நிதி, பென்ஷன் ( ஆமாம்..) போன்ற பலவற்றையும் சேர்த்து வைத்திருக்கும் ஒரு அவியல் போன்றது. இது போக, யூலிப் திட்டத்தினை பல்வேறு நிறுவனங்களும், சிறிய பெரிய வித்தியாசங்களுடன் வழங்குகின்றன.’’

”அதனால்..’’

”யூலிப் என்பதில் தெரிந்துகொள்ள வேண்டியதும், கவனமாக புரிந்துகொள்ளவேண்டியதும் நிறையவே இருக்கிறது.

யூலிப் என்றால் அது காப்பீடு+பரஸ்பர நிதி என்பதை ஏற்கெனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம்.

காப்பீடு பற்றி சொல்லத்தேவையில்லை. பரஸ்பர நிதிகளில் மூன்று வகை உண்டு. ஒன்று, பங்குகளில் முதலீடு செய்வது (ஈக்விட்டி). இரண்டாவது வகை, கடன் பத்திரங்களில் (டெட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்) மட்டுமே முதலீடு செய்வது. மூன்றாவது வகை, இரண்டிலும் (பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள்) கலந்து முதலீடு செய்வது.

யூலிப்பிலும் இந்த மூன்று வகைகள் உண்டு.

ஆகவே, யூலிப் திட்டத்தில் சேரும்போது, மேலே பார்த்த மூன்று திட்டங்களில் எது நமக்குச் சரிவரும் என்று நினைக்கிறோமோ, அந்த வகை யூலிப்பில் சேரவேண்டும். பின்னால் மாற்றலாம்தான். ஆனாலும் முன்பாகவே தெரிந்துகொண்டு செய்வதுதான் நல்லது.

கடன் பத்திரம் சம்பந்தப்பட்ட யூலிப்பில் சேர்ந்தால், யூனிட் பகுதி பணத்திற்கு நிச்சயமான வருமானம் இருக்கும். ஆனால், அது வங்கி வட்டி போல குறைவாகத்தான் இருக்கும். பங்குச் சந்தை சம்பந்தப்பட்ட யூலிப் திட்டத்தில் சேர்ந்தால், வருமானம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். காரணம் தெரிந்ததுதான். பங்குச் சந்தை கொட்டியும் கொடுக்கும். முதலையே கெடுக்கவும் செய்யும்.

அதனால்தான், ரிஸ்க் எடுக்கும் தைரியம் இருப்பவர்கள், அல்லது பங்குச் சந்தை (நீண்ட கால அடிப்படையில்) நன்றாகத்தான் இருக்கும் என்று நினைப்பவர்கள் மட்டும், ’டெட் ஃபண்ட்’ வேண்டாம் என்று தெரிவித்து, பங்குச் சந்தை முதலீடு என்கிற முறையை, யூலிப் பில் தேர்வு செய்யலாம்.

யூலிப் எடுக்கும் போதே, எது போன்ற திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும் என்கிற ‘ஆப்ஷனை’ யோசித்து, சரியாக முடிவெடுக்க வேண்டும்.’’

”பங்குச்சந்தை (ஈக்குவிட்டி) திட்டத்தினையே தேர்வு செய்கிறோம் என்று வைத்துக்கொள்ளுவோம். நாம் சேர்ந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. பங்குச் சந்தையும் நன்றாக, உயர்வாக இருக்கிறது. அது சமயம் ஃபண்டில் இருக்கும் யூனிட்டுகளை விற்று காசாக்கிக் கொள்ளலாமா? அனுமதிப்பார்களா?’’

”செய்யலாம். அதற்கு திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். விற்று காசாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் செய்ய அனுமதி உண்டு. ( வரியும் உண்டு)

பங்குச் சந்தையில் ஒரு நேரம் உயர்வும் வேறு நேரம் தாழ்வும் மாறி மாறி வரத்தான் செய்யும். எடுத்துக்கொண்ட திட்ட காலம் வரையோ, அல்லது நம்முடைய ஓய்வுக்காலம் வரையோ, அதனை தாராளமாக விட்டுவைக்கலாம். பங்குச் சந்தை சம்பந்தபட்டது எதுவுமே, விவரம் தெரிந்தவர்களால் கையாளப்படும் போது, நீண்டகாலத்தில் சரியாக வந்துவிடும்.

அதேபோல, நாம் சேர்ந்து 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. பங்குச் சந்தை நல்ல உயர்வில் இருக்கிறது. நம் யூனிட்டுகளின் மதிப்பும் உயர்ந்திருக்கிறது. என்ன செய்யலாம்? காசாக்கிக் கொண்டுவிடலாம். மீண்டும் சரியும் போது, வேறு திட்டத்தின் மூலம் உள்ளே வரலாம்.’’

”வெளியேறும் காலத்திற்கும், மீண்டும் வேறு திட்டத்தின் மூலம் உள்ளே வரும் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்திற்கு காப்பீடு என்கிற கவசம் இல்லாமல் போய்விடுமே!’’

”மிகவும் சரி. அதனால்தான், வெறும் யூலிப் மட்டும் போதாது. கூடவே, ‘கன்வென்ஷனல்’ என்கிற வழக்கமான, சாதாரண இன்சூரன்ஸ் திட்டங்களும் அவசியம் என்பது.’’

”அப்படியென்றால்..’’

”காப்பீட்டுக்காக ஒதுக்கும் பணத்தில் ஒரு பகுதி யூலிப் திட்டத்தில் போடுங்கள்.’’

”சரி. யூலிப்பில் நாம் சேர்ந்தாகிவிட்டது. இடையில் விலகவில்லை. அல்லது வாய்ப்புக் கிடைக்கவில்லை. திட்ட முதிர்வு காலத்திற்கு வந்தாகிவிட்டது. அது சமயம், பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தால் என்ன செய்வது? யூனிட்டுகளின் நிகர சொத்து மதிப்பு குறைவாக இருக்கும். விற்றால் நமக்கு நட்டம்தானே!’’

”அப்படிச் செய்ய வேண்டும் என்று கட்டாயமில்லை. திட்டம் முதிர்வடையும் நேரம், ஏதோ காரணங்களுக்காக, நம் யூனிட்டுகளின் NAV சுமார் என்றால், ஃபண்ட் வேல்யூ வில், பத்தில் ஒரு பங்கினை (10%) மட்டும் எடுத்து, விற்று காசாக்கலாம். அடுத்த ஆறு மாதத்திற்குள் இன்னொரு 10 சதவிகிதம். இப்படியாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாக 10 தவணைகளிலும் கூட எடுக்க, விற்க அனுமதி உண்டு.”

”யூலிப் திட்டத்தில் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு பலன்கள் (காப்பீடு + பரஸ்பரநிதி போன்ற யூனிட் திட்டம்) கிடைப்பது என்பது நன்றாகத்தான் இருக்கிறது. என்ன ஆனாலும் இரண்டு திட்டங்களுக்கும், அவருடைய பிரீமியப் பணம்தானே எடுத்துக்கொள்ளப்படும்!’’

”கேள்வி சரிதான். ஒருவர் யூலிப் திட்டத்தில் சேருகிறார். அது பங்குச் சந்தை தொடர்பான திட்டம்.

காப்பீடுக்காகவும் அவருடைய பணத்தில் ஒரு பகுதி தொடர்ந்து போகிறது. மீதம்தான் பரஸ்பர நிதி போன்ற ஃபண்டுக்குப் போகிறது. ஆனால், பெரும்பாலான திட்டங்களில் , பாலிசிதாரருக்கு இரண்டில் ஒரு பலன்தான் கிடைக்கும்.

திட்டகாலத்திற்கும் முன்பாக பாலிசிதாரர் மறைந்தால், முழுகாப்பீட்டு தொகை. திட்ட காலம் முடிந்து அவர் பணம் எடுக்க விரும்பினால், ஃபண்டில் உள்ள யூனிட்டுகளின் மதிப்பளவு பணம். அது காப்பீட்டுத் தொகையை விடக் குறைவாக இருந்தால், காப்பீட்டுத்தொகையே கொடுக்கப்படும்.

யூலிப்பில் இருக்கும் இன்னொரு அனுகூலம் இதுதான். இன்சூரன்ஸ§ சுக்காக பிரீமியத்தில் இருந்து எடுக்கப்படும் தொகை, ஆண்டுகள் போகப் போக, குறைந்து, அதனால் ஃபண்டுக்காக எடுக்கப்படும் தொகை அதிகரிக்கும்.

இதனால் ஃபண்டு மதிப்பு நீண்ட காலத்தில் அதிகரிக்கும். திட்ட முதிர்வு காலம் நெருங்க நெருங்க, யூனிட்டுகள் வாங்க எடுத்துக்கொள்ளப்படும் பணத்தின் பகுதி அதிகரிக்கும்.

யூலிப்பில் இவ்வளவு தகவல்களா என்கிற பிரமிப்போ அச்சமோ தேவையில்லை. ஒரு வரிச் செய்தி இதுதான். நீண்ட கால அணுகுமுறைக்கு யூலிப் லாபகரமானது. உங்கள் வயது குறைவா? உங்களுக்கு மிகவும் பொருத்தமானது யூலிப். உங்களுடைய ஓரளவு சேமிப்பினை, யூலிப்பில் போடுங்கள். ஒரே தவணையாக ( லம்ப் சம்) 25 ஆயிரம், ஐம்பதாயிரம் என்றும் போடலாம்.

உங்கள் வயது கொஞ்சம் கூடுதலோ?’’.

வயது குறைவானவர்கள் இன்சூரன்ஸ் எடுக்கும் போது, ஒரு பகுதியை ‘யூலிப்’பில் போடலாம் என்று சொல்லிவிட்டு அதன்பின், ‘உங்களுக்கு வயது சற்று கூடுதலோ!’ என்று கேட்டு, சென்ற அத்தியாயத்தை முடித்திருந்தோம்.

வயது கூடுதல் என்றால் என்ன? 30 க்கும் மேலா அல்லது 40 க்கும் மேலா? எதைக் கூடுதல் வயது என்று எடுத்துக்கொள்ளுவது? போகட்டும். 40 என்றோ 50 என்றோ வைத்துக்கொள்ளுவோம். வயதிற்கும் முதலீட்டிற்கும் என்ன சம்பந்தம்? வயதை வைத்து, பணத்தைக் கையாளும் முறைகள் மாறவேண்டுமா என்ன?

கேள்விகள் அலை அலையாக வந்திருக்குமே! அதனால் என்ன? பணத்தைக் கையாளுவதற்கும் வயதிற்கும் உண்டான தொடர்புகளைப் பார்த்துவிடுவோம்.

சாப்பாடு, உடைகள் உடுத்துவது, அலங்காரம் செய்துகொள்ளுவது, பொழுதுபோக்கும் விதம் போன்றவற்றில், பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கிறதா, இல்லையா?

இவற்றில் எல்லாம் வித்தியாசங்கள் இருப்பதுபோலவே, பண விஷயத்திலும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பலரும் இதனைப்பற்றி யோசிக்காமல் இறங்கி விடுகிறார்கள்.

வருமானம் வேண்டுமானால் வயதை வைத்து மாறாமல், படிப்பு, வேலை, சொத்துக்கள் போன்ற பிற காரணங்களால் வித்தியாசப்படலாம். ஆனால் ஒருவர் செய்ய வேண்டிய சேமிப்பு, காப்பீடு மற்றும் அவர் செய்யக்கூடிய முதலீடுகள், வயதை வைத்தும் பெரிய அளவில் வித்தியாசப்படும்.

‘வயதை வைத்தும்’ என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்களே! ‘அதென்ன ‘வைத்து’ என்று சொல்லாமல் ‘வைத்தும்!’ இன்னும் சிலவற்றைப் பொறுத்தும் மாறுமோ!’ என்று கேட்டால், பதில், ‘ஆமாம்‘ என்பதுதான். ஆனால், அதனை பிற்பாடு பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு வயதை வைத்து மட்டும் பேசுவோம்.

வயதிற்கும் பணத்தைக் கையாளுவதற்குமான தொடர்பு இரண்டு விதங்களில் இருக்கிறது. ஒன்று, ஒருவர் எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம் என்பது. மற்றொன்று அவருடைய தேவைகள் எப்படி என்பது.

முதலில் ரிஸ்க் பற்றிப் பார்த்துவிடலாம்.

வயது குறைவானவர்கள் கூடுதல் ரிஸ்க் எடுக்கலாம். வயதாகிவிட்டவர்கள் அப்படி ரிஸ்க் எடுக்கக் கூடாது. ரிஸ்க் என்றால், முதலீடு செய்கிற பணத்திற்கு எவ்வளவு தூரம் பாதுகாப்பு உள்ளது என்கிற கணக்கு.

வீடு, நிலம் அல்லது தங்கம் வாங்குவதோ. பங்குகளோ, கடன் பத்திரமோ, வங்கி வைப்போ எதில் பணத்தைப் போடுவதென்றாலும், மூன்று விஷயங்களை ஆராய்ந்துவிட்டுத்தான் போடுவோம். போடுகிற பணம் பத்திரமாக இருக்கவேண்டும் என்பது முதல் நோக்கம். போடுகிற பணத்திற்கு என்ன வருமானம் வரும் என்பது அடுத்த கேள்வி. மூன்றாவது, போடுகிற பணத்தைத் தேவைப்படுகிறபோது திரும்ப எடுக்க முடியுமா என்பது.

வயது குறைவோ, அதிகமோ யாருக்குத்தான் அவர்களுடைய பணம் பத்திரமாகத் திரும்பக் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்காது? இதில் எங்கிருந்து வயது வந்தது? என்கிற கேள்வி வரலாம்.

கிரிக்கெட் பந்தயம் நடக்கிறது. சர்வதேசப் போட்டி. இந்தியா களம் இறங்குகிறது. வீரேந்திர சேவாக்கும் கம்பீரும், மட்டை பிடித்து ஆடுகிறார்கள். வருகிற பந்துகளையெல்லாம் அடித்துத் தள்ளுகிறார் சேவாக். அவர் என்ன செய்கிறார்? ஏன் செய்கிறார்? சேவாக் அதிக ரிஸ்க் எடுத்து ஆடுகிறார். என்ன ரிஸ்க்? அவர் அப்படி அடித்து ஆடப்போய், அவுட் ஆகிவிடலாம். அது சரி, அவர் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும்? நிறைய ஓட்டங்கள் எடுப்பதற்காகத்தான். பந்தயத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் நிறைய ஓட்டங்கள் வேண்டும். அதற்காகத்தான் அவர் ரிஸ்க் எடுக்கிறார்.

சேவாக் கண்மூடித்தனமாக ஆடவில்லை. கொஞ்சம் கூடுதல் ரிஸ்க் எடுக்கிறார். அவ்வளவுதான். அதனால் அணிக்கு ரன்கள் குவிகின்றன. கண்மூடித்தனமான ரிஸ்க்கிற்கும், கவனமாகவே எடுக்கும் ரிஸ்க்கிற்கும் வித்தியாசங்கள் உண்டு. கவனமான ரிஸ்க்கிற்கு ‘கேல்குலேட்டட் ரிஸ்க்‘ என்று பெயர்.

ஆட்டம் தொடர்கிறது. சில விக்கெட்டுகள் விழுகின்றன. எதிர்பார்த்த அளவு ரன்கள் சேரவில்லை. ஆனால் இன்னும் ஆடக்கூடிய ஓவர்கள் கணிசமாக இருக்கின்றன. அடுத்து ஆடவரும் டிராவிட் அதிக ரிஸ்க் எடுப்பாரா? தற்காத்துதானே ஆடுவார்! இனி அதிக ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று தெரிந்துவிட்டது அவருக்கு. கையில் இருக்கும் விக்கெட்டுகளை வைத்து ஒப்பேற்றவேண்டும். எந்த ஓவரும் வீணாகாமல் இயன்றவரை ரன்கள் குவிக்க வேண்டும். அவர் ஆடுவது ‘டிபென்ஸ்’ ரிஸ்க். குறைவாக எடுக்கும் அணுகுமுறை.

பணமுதலீட்டிலும் இதே அணுகுமுறைதான். வயது குறைவு, இளம் ரத்தம் என்பது, பந்தயத்தில் பத்து விக்கெட்டுகளுடன் களம் இறங்கும் நேரம் போல. ரிஸ்க் எடுக்கலாம். சொல்லப்போனால், ரிஸ்க் எடுக்க வேண்டும். ரிஸ்க் எடுத்து அடித்து ஆடாமல், டொக்கு வைத்துக்கொண்டிருந்தால், வீண். சிலர் இப்படித்தான் சின்ன வயதிலும் கூட, பயந்து பயந்து மிக பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுவார்கள். ஓரளவு ரிஸ்க் எடுக்கலாம். அப்போதுதான் ரன்கள் (பணம்) சேரும். ‘கப்பல்கள் கரையில் பத்திரமாகத்தான் இருக்கும். ஆனால் அதற்காக அவை உருவாக்கப்படவில்லை’ என்கிற பழமொழியை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

ரிஸ்க் எடுப்பது என்றால்? பங்குச் சந்தை, பரஸ்பர நிதிகள் போன்ற அதிக வருவாய் தரவல்ல முதலீடுகளிலும் பணம் போடவேண்டும். அதனால் தான், வயது குறைவா, அப்படிப்பட்ட வாய்ப்பும் கூடவே ரிஸ்க்கும் உள்ள யூலிப்பில் போடுங்கள் என்று சொல்வது. வயது அதிகமாகிவிட்டதா, இப்போதுதான் அல்லது இப்போதும்கூட பணம் (ரன்கள்) தேவைப்படுகிறதா? ஏற்கெனவே நிறைய சேர்த்துக்கொள்ள முடியவில்லையா? அப்படியென்றால் ஜாக்கிரதை. மீதம் இருக்கும் விக்கெட்டுகள் போன்றவை கையில் இருக்கும் பணம். அதை வைத்து அதிக ரிஸ்க் எடுக்கக் கூடாது. அதைக் காப்பாற்றிக்கொள்ளுவதுதான் முக்கியம். கொஞ்சம் சேர்த்தாலும் சரிதான். பேசாமல் தேசிய சேமிப்புப் பத்திரம் அஞ்சலக சேமிப்பு, வங்கி வைப்பு அல்லது கடன் பத்திரங்கள் சம்பந்தப்பட்ட பரஸ்பர நிதிகள்தான் உங்களுக்கு சரிவரும்.

வயதாகிவிட்டால்தான் என்ன? எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை. நான் நிறையவே சேர்த்துவிட்டேன். கையில் நிறையவே பணம் (விக்கெட்டுகள்) இருக்கிறது. என்ன செய்ய? 50 வது ஓவர், கடைசிப் பந்து வரை அடித்து விளாசுங்கள். உங்களை யார் தடுக்க முடியும்?

கையில் விக்கெட் இருக்கிறதோ இல்லையோ, நான் குறிப்பிட்ட அளவு ரன்கள் எடுத்தாக வேண்டும். என் தேவை அப்படி (எங்கள் அணி இரண்டாவதாக ஆகிறது. எனக்கு பெரிய குடும்பம். நிறைய தேவைகள்) என்கிறீர்களா? சரி. உங்களுக்கு வேறு வழியில்லை. ரிஸ்க் எடுத்துத்தான் ஆகவேண்டும்.

ஆக, முதலீடு செய்யும்போது, பாதுகாப்பான முதலீடுதானா, முதலுக்கே மோசமில்லையா என்று பார்க்க வேண்டும். ஆனால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால், கூடுதலாக சம்பாதிக்க முடியும் என்றால், ரிஸ்க் எடுக்கும் நிலையில் இருந்தால், எடுங்கள். ஒரு பகுதி பணத்திற்கேனும்.

சூழ்நிலை சரியில்லையா? மனது செய் செய் என்று தூண்டினாலும், ரிஸ்க் இருப்பவை வேண்டாம். கட்டுப்பாட்டுடன், ரிஸ்க் இருக்கும் முதலீடுகளைத் தவிர்த்து விடுங்கள். ஓய்வூதியத்தில் வந்த பணம் போன்றவை உங்கள் ஆயுட்கால உழைப்பு. அதற்கு மரியாதையும் முக்கியத்துவமும் அதிகம். ரிஸ்க் எடுக்க வேண்டாம். பங்குச் சந்தைதான் என்றில்லை. அளவுக்கு அதிகமாக வருமானம் வரக்கூடும் என்கிற எதிர்ப்பார்புடன் செய்யப்படும் தொழில், வியாபாரம், இடம் வாங்குதல் போன்றவை எல்லாமும் கூட ரிஸ்க் சம்பந்தப்பட்டவைதான். சிலர் எடுக்கலாம். சிலர் எடுக்கக் கூடாது.

அடுத்து எதில் கூடுதல் வருமானம் வரும் என்று பார்த்து முதலீடு செய்ய வேண்டும். அதாவது முதல் நிபந்தனைக்கு உட்பட்டு. அதாவது நாம் எதிர்பார்க்கும் பாதுகாப்பு இருக்கும் முதலீடுகளிலேயே எதில் அதிக வருமானம் வரும்?

அதையும் தேர்ந்த பிறகு, அதாவது இரண்டு நிபந்தனைகளுக்கும் உட்பட்ட முதலீடுகளில் எதில் வேண்டும் நேரம் முதலீட்டினை திரும்ப எடுக்கும் வாய்ப்பு அதிகம்? அதாவது ஆங்கிலத்தில் அதனை லிக்குவிட்டிட்டி என்பார்கள்..

 

Leave a comment