உயிர் பெறுமா பங்குச் சந்தை? பட்ஜெட் முடிவு செய்யும்

வரப்போகும் மினி பட்ஜெட் மற்றும் கம்பெனிகளுக்கு இன்னும் பேக்கேஜ் என்று, சிறப்பான அரசு அறிவிப்புகள் வரும் வாரம் வருமென எதிர்பார்த்து பங்குச் சந்தைகள், திங்களன்று மிகவும் மேலே சென்றன. மும்பை பங்குச் சந்தை 283 புள்ளிகள் மேலே சென்று முடிவடைந்தது.

கடந்த சில மாதங்களில் இவ்வளவு புள்ளிகள் அதிகம் சென்றது ஒரு சில முறை தான். ஆகையால் முதலீட்டாளர்கள், சந்தை மேலே இவ்வளவு சென்றவுடன் இந்தியா கிரிக்கெட்டில் வென்றதை கொண்டாடுவது போல கொண்டாடினர். இது வரை இரண்டு பேக்கேஜுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒன்று வரலாம் என்ற எதிர்பார்ப்புகள் அதிகம் உள் ளன. நேற்று முன்தினமும் மேலே சென்றது. அதுவும், கடந்த ஒரு மாத உச்சத்திற்கு சென்றது. குறிப்பாக வங்கிப் பங்குகள் கூடின. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 370 கோடி ரூபாய் அளவிற்கு வாங்கியது ஒரு நல்ல அறிகுறி.

சந்தை அன்றைய தினம் 64 புள்ளிகள் மேலே சென்றது. திங்கள், நேற்று முன்தினம் இரண்டு தினங்களிலும் முதலீட்டாளர்களின் மதிப்பு 88 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்தது. 10 ஆயிரத்தை தொட்டு விடும் தூரம் தான் என்று நேற்று முன்தினம் சொன்னாலும், நேற்று கேட்கத் தயாராக இல்லை.

சந்தை துவக்கத்தில் 180க்கும் அதிகமான புள்ளிகளை இழந்திருந்தது. சந்தை மிகவும் மேலும், கீழுமாகவே இருந்தது. முடிவாக சந்தையில் வந்த ஒரு செய்தி என்னவென்றால், வரி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளில் சில திருத்தங்கள் வரப்போகின்றன என்ற தகவல்களால் சந்தைக்கு உயிர் வந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 28 புள்ளிகள் குறைந்து 9,618 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 8 புள்ளிகள் குறைந்து 2,925 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.

புதிய வெளியீடு: எடுசர்வ் என்ற சென்னையைச் சேர்ந்த எஜுகேஷனல் நிறுவனம் தனது புதிய வெளியீட்டை 5ம் தேதி துவக்கி 9ம் தேதி முடித்தது. 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை வைத்து வெளி

யிடப்பட்ட இந்த வெளியீடு 1.03 தடவைகள் செலுத்தப்பட்டன.

 

சமீப காலத்தில் புதிய வெளியீடு என்பதே அரிதாக இருக்கும் சமயத்தில் இந்த வெளியீடு துணிச்சலாக வந்தது ஆச்சரியம் தான். எப்படி பட்டியலிடப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்த மாதத்தில் வெளியாகும் உள்நாட்டு மொத்த வளர்ச்சி புள்ளி விவரத்தில் 7 சதவீத வளர்ச்சி இருக்கிறதா, இல்லையா என்றும் நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கவும் உதவும்.

இந்தியாவும், சீனாவும் தான் இந்த ஆண்டு ஒரு சிறப்பான வளர்ச்சி விகிதத்தை எட்டும். மற்ற நாடுகளில் அவ்வளவு வளர்ச்சி விகிதங்கள் சிறப்பாக இருக்காது என்று பலரும் கணித்துள்ளனர்.

வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வருகின்றன. இன்னும் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கின்றன. குறைந்தால், கடன்கள் வாங்குவது கூடும். அது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவும். மும்பை ஐகோர்ட் இடைக்கால உத்தரவுப்படி ரிலையன்ஸ் கிருஷ்ணா கோதாவரி பேசினிலிருந்து காஸ் தனியாருக்கு விற்கலாம் என்ற உத்தரவு அந்தக் கம்பெனிக்கு வருங்காலத்தில் லாபங்களை மிகவும் கூட்ட உதவும்.

 

வரும் வாரங்கள் எப்படி இருக்கும்? இன்று வரவிருக்கும் உற்பத்தி புள்ளி விவரம் ஒரு முக்கிய நிகழ்வு. இது பணவீக்க சதவீதத்தை விட அதிகமான முக்கியத்துவம் பெற்றது. தற்போதைய சூழ்நிலையில், நாளை வரவிருக்கும் ரயில்வே பட்ஜெட்டும், 16ம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் மத்திய மினி பட்ஜெட்டும் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. அதில் என்னென்ன சலுகைகள் வரப் போகிறது என்பதைப் பொறுத்தும் சந்தையின் போக்கு அமையும்.

 – சேதுராமன் சாத்தப்பன்-

மூன்று வங்கிகள் நிதி ஆதாரம் வலுப்படுத்த ரூ.3,800 கோடி

புதுடில்லி: யூகோ பாங்க், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக, 3,800 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மறு மூலதன திட்டத்தின் கீழ், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 1,400 கோடி ரூபாயும், யூகோ பாங்க் மற்றும் விஜயா வங்கி ஆகியவை தலா 1,200 கோடி ரூபாயும் பெறும் என, மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: இந்த மூலதன நிதி வழங்குவது இரண்டு கட்டமாக நடைபெறும். முதல் கட்ட நிதி நடப்பு நிதியாண்டிற்குள் வழங்கப்படும். அடுத்த கட்ட நிதி 2009-10ம் நிதியாண்டில் வழங்கப்படும். முதல்கட்ட ஒதுக்கீட்டில், யூகோ பாங்க் 450 கோடி ரூபாயும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 700 கோடி ரூபாயும், விஜயா பாங்க் 500 கோடி ரூபாயும் பெறும். இதன்மூலம் வங்கிகளின் மூலம் 12 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும்.

அடுத்த கட்டமாக யூகோ பாங்க் 750 கோடி ரூபாயையும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் விஜயா வங்கி தலா 700 கோடி ரூபாயையும் பெறும். இந்த மூலதன நிதி வழங்குவதன் மூலம் மூன்று பொதுத் துறை நிறுவன வங்கிகளிலும் அரசின் பங்கு அதிகரிக்கும்.

எந்த தரப்பில் இருந்து நாட்டிற்கு எந்த வகையான அச்சுறுத்தல் இருந்தாலும், அதை எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இதை ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் தெளிவுபடுத்தியுள்ளார். மத்திய பிரதேசம் – மகாராஷ்டிரா எல்லை – நாக்பூர் பிரிவில், 1,205 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாக்பூர் விமான நிலையத்தில், மல்டி மாடல் பயணிகள் வளாகம் மற்றும் சரக்கு வளாகம் கட்டவும் அமைச்சரவை அனுமதி வழங்கியது. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் மகாராஷ்டிர அரசு இணைந்து கூட்டு முயற்சியில் இதை மேற்கொள்ள உள்ளன. இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

சமையல் எண்ணெய்க்கு வரி ரத்து : தேங்காய் எண்ணெய் விலை சரிவு

பொள்ளாச்சி: வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதால், தேங்காய் எண்ணெய் விலை குறையத் துவங்கியுள்ளது.

இந்தியாவில் தென்னை சாகுபடி பரப்பிலும், தேங்காய் உற்பத்தியிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் தேங்காய், கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிகமாக உள்ளது. இந்தாண்டு தேங்காய் சீசன் பிப்ரவரியில் எதிர்பார்த்தபடி துவங்கியுள்ளது. தேங்காய் சீசன் துவங்குவதற்கு முன் தேங்காய், கொப்பரை, தேங்காய் எண்ணெயின் விலை குறைந்து வருகிறது. கடந்த மாதம் 15 கிலோ தேங்காய் எண்ணெய் 850 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி 780 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் 52 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கொப்பரை உற்பத்தியாளர்கள் கூறியதாவது: சமையல் எண்ணெய்களுக்கு இறக்குமதி வரியை மத்திய அரசு முற்றிலும் ரத்து செய்துள்ளது. இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டவுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனால், சுத்திகரிக்கப்பட்ட முதல் ரக தேங்காய் எண்ணெய்யை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடைபட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள், கொப்பரைத் தேங்காயின் விலையை படிப்படியாக குறைத்து கொள்முதல் செய்கின்றன. இதனால் கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலை உயராமல் ஸ்தம்பித்துள்ளது. மார்க்கெட்டில் ஒரு கிலோ கொப்பரைக்கு அதிகபட்சமாக 37.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் லிட்டருக்கு 52 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. வரும் மாதங்களில் கொப்பரை உற்பத்தி அதிகரிக்கும் போது மேலும் விலை சரிய வாய்ப்புள்ளது. இவ்வாறு கொப்பரை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

சர்க்கரை இனிக்கிறது; விலை கசக்கிறது : மூட்டைக்கு ரூ. 400 திடீர் உயர்வு

கோவை: பருவத்தில் பெய்யத் தவறிய மழை, விளைநிலங்களை மனையிடங்களாக மாற்றியது போன்ற காரணங்களால், கரும்பு உற்பத்தி குறைந்து, சர்க்கரை விலை மூட்டைக்கு 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அதிக அளவு கரும்பு உற்பத்தியாகும் மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலத்தில் கடந்த பருவத்தில் எதிர்பார்த்த மழை இல்லாததால், விளைச்சல் இல்லாமல், கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், மார்க்கெட்டில் மூட்டை ஒன்றுக்கு 400 ரூபாய் வரை சர்க்கரை விலை உயர்ந்துள்ளது.

இந்தியா முழுக்க சர்க்கரை விலை வழக்கமாக சீராக இருக்கும். கரும்பு விளைச்சல் பாதிக்கப்படும்போது மட்டுமே விலை உயரும்; கரும்பு உற்பத்தி அதிகரிக்கும்போது விலை குறையும். லாரி ஸ்டிரைக்கிற்கு முன், 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சர்க்கரையின் விலை 1,850 ரூபாயாக இருந்தது. தற்போது, 2,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை வியாபாரிகள் 19 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ சர்க்கரையை, 23 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். கிலோவுக்கு நான்கு ரூபாய் உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை உயர்வால், டீ, காபி, மற்றும் இனிப்பு விலை உயர வாய்ப்புள்ளது. இந்தியாவில், 80 சர்க்கரை ஆலைகளை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சர்க்கரை அனுப்பப்படுகிறது. மகாராஷ்டிராவில், கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால், சர்க்கரை உற்பத்திக்கு தேவையான கரும்புக்கு மற்ற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நிலை உள்ளது.

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அறுவடையாகும் கரும்பு, மகாராஷ்டிராவில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், இந்தியா முழுவதும் கரும்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் வரும்போதெல்லாம் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் நிதி கொடுக்க வேண்டும். அதற்காக, ஆலை உரிமையாளர்கள் இணைந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை உயர்த்தி இருக்கலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. என்ன தான் விலை உயர்ந்தாலும், ரேஷனில் சர்க்கரை கிலோ ரூ.13.75க்கு கொடுக்கப்படுகிறது என்பது தான் சற்று ஆறுதலான விஷயம்

Leave a comment