இந்தியா: ஜவுளித்துறையில் 5 லட்சம் வேலை ‘காலி’!

டெல்லி: பொருளாதார மந்தம் காரணமாக இந்தியாவில் வேலை வாய்ப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாகக் குறைந்து வருகின்றன.

இதை மத்திய அரசே வெளிப்படையாகவே நாடாளுமன்றத்தில் அறிவித்தும் கூட அதற்கு மீடியா அத்தனை முக்கியத்துவம் தரவில்லை.

கடந்த சில மாதங்களில் மட்டும் இந்திய ஜவுளித் துறையில் 5 லட்சம் பணியிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது தெரித்துள்ளார்.

ஜவுளித்துறையில் மோசமான தேக்கம், ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் குறைந்தது போன்ற காரணங்களால் 5 லட்சம் வேலை இழந்திருப்பது உணமையே. ஆனால் வருகிற மழை காலத்துக்குள் மீண்டும் ஓரளவு சகஜ நிலை திரும்பும் என நம்புகிறோம் என்றார்.

மேலும் பணியிழப்புகள் ஏற்பாடமால் இருக்க என்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவது என அரசு தீவிர பரிசீலனை செய்துவருவதாகவும் கூறியுள்ளார்

ரிலையன்ஸ் டிவி திட்டம் தள்ளிவைப்பு

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது இரு புதிய நிறுவனங்களான ரிலையன்ஸ் பிக் டிவி என்டர்டெயின்மென்ட் மற்றும் ரிலையன்ஸ்பிக் டிவி நியூஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் கடந்த 2008 ஆகஸ்ட் மாதத்தில் 20 புதிய டிவி சேனல்களை அறிமுகப்படுத்தும் திட்டம் ஒன்றை வைத்திருந்தது. இவற்றில் ஒரு ஹிந்தி பொழுதுபோக்கு சேனல் மற்றும் மூன்று பிராந்திய மொழி சினிமா சேனல்கள் அடக்கம். ஆனால் இத்திட்டம், தற்போதைய மந்தமான பொருளாதாரத்தின் காரணமாக புதிய முதலீடுகள் சாதகமாக இருக்காது என்ற நிலையில் பேச்சுவார்த்தை அளவிலேயே நின்று போயிருக்கிறது.

ஆனால் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் புதிய டிவிக்கள் தொடங்கும் திட்டத்தில் மாற்றம் ஏதும் இல்லை, டிவிக்கள் தொடங்கப்படுவது உறுதி என்று அந்நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

அம்பானி பிரதர்ஸ்: இணைப்பு என்னாச்சு?

மும்பை: 5 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனித்தனி வர்த்தக சாம்ராஜ்யங்களை உருவாக்கிக் கொண்ட அம்பானி சகோதரர்கள், தங்கள் அம்மா கோகிலாபென்னின் 75-வது பிறந்த நாளையொட்டி இணையப் போவதாக சில தினங்களாக செய்தி வெளியாகிய வண்ணமிருந்தன.

நேற்று கோகிலா பென்னின் பிறந்த தின விழா.

நீண்ட நாட்களுக்குப் பிறகு முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் நேற்று அம்மாவின் வீட்டில் (ஸீ வைண்ட்) சந்தித்துக் கொண்டார்கள். இதே ஸீ வைண்டில்தான் சரியாக 5 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் பாகப் பிரிவினை நடந்தது. இப்போது இணைப்புக்கான முயற்சியும் இங்கிருந்தே தொடங்குகிறது.

அம்மாவின் பிறந்த நாளை இருவரும் இணைந்தே கொண்டாடினார்கள். இருவர் குடும்பங்களும் மகிழ்ச்சியில் திளைத்தன. அவர்களது சகோதரிகளுக்கு அளவற்ற மகிழ்ச்சி. காலையில் கடவுள் வணக்கத்துடன் துவங்கிய இந்த விழாவில், தங்களுக்கு மிக நெருங்கிய 200 நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சைவ விருந்து உண்டு, பழைய இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

உள்ளுக்குள் இணைப்பு பற்றிய பேச்சுக்களை கோகிலாபென் ஏற்கெனவே தொடங்கிவிட்டாலும், அம்பானி குடும்பத்தினர் அதுபற்றி வாய் திறக்காமல் பேரமைதி காக்கின்றனர். ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானியும் இந்த இணைப்பை வலியுறுத்திப் பேசியிருப்பதால், தேர்தலுக்கு முன் சகோதரர்கள் இருவரும் ஒரே குடையின் கீழ் நிர்வாகத்தைக் கொண்டுவந்து விடுவார்கள் என்றே நம்புகிறார்கள் உறவினர்கள்.

 சிட்டி வங்கியை முந்திய ஸ்டேட் பேங்க்

டெல்லி: அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு அதன் வங்கிகளை பெரும் ஆட்டம் காண வைத்துவிட்டது. உலகின் முதல்நிலை வங்கி என்ற பெருமையோடு திகழ்ந்த சிட்டி குரூப்பின் மொத்த சொத்து மதிப்பைவிட, இப்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) சொத்து மதிப்பு தான் அதிகம்.

முன்பு சிட்டி குரூப்பின் மொத்த சொத்து மதிப்பு ரூ.9,72,075 கோடிகள். ஆனால் பொருளாதாரம் அடிவாங்கிப் போய், வங்கி அமைப்பு முறையே கேள்விக்குறியதாகிவிட்ட இன்றைய சூழலில் இந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.57,328 கோடியாக சரிந்துவிட்டது.

ஆனால் இந்தியாவின் எஸ்பிஐக்கு உள்ள சொத்துக்கள் இதைவிட அதிகம். அதாவது ரூ.66,449 கோடிகள்.

கடந்த 2008ம் ஆண்டு மட்டும் சிட்டி வங்கிக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ.80,000 கோடி என்கிறது அந்த நிறுவனத்தின் செய்திக் குறிப்பு. ஆனால் எஸ்பிஐயோ ரூ.4,700 கோடி வரை லாபம் சம்பாதித்துள்ளது.

சிட்டி குரூப் நிறுவன பங்கு மதிப்பு அதன் சரித்திரத்திரத்திலேயே இல்லாத அளவுக்கு படுபாதாளத்துக்குப் போய்விட்டது. கிட்டத்தட்ட 93 சதவிகிதம் குறைந்து 1.95 டாலருக்கு வந்துவிட்டது. ஒரு காலத்தில் 65 டாலர்கள் வரை விற்பனையான பங்கு இது.

இந்த ஒரு வங்கிக்குதான் இப்படியொரு மோசமான நிலை என்று நினைத்துவிட வேண்டாம். அமெரிக்காவின் நம்பர் ஒன் வங்கி எனப்பட்ட பாங்க் ஆப் அமெரிக்காவின் பங்குகள் 2.53 டாலராகக் குறைந்து, அந்த வங்கியை ஆட்டம் காண வைத்துள்ளது.

வங்கித் துறையில் இன்னும் ஒரு மீட்சி நிலை ஏற்படாதது ஒபாமா அரசை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. மக்கள் முழுதுமாக நம்பிக்கை இழக்குமுன் இந்த வங்கிகளின் அரசுக்கு உள்ள பங்கின் அளவை பெருமளவு உயர்த்தி, புதிய மூலதனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே 45 பில்லியன் டாலர் அளவுக்கு இந்த வங்கிக்கு நிதி உதவி செய்துள்ளது அமெரிக்க அரசு (சும்மா இல்ல… சிட்டி வங்கியின் 300 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களின் அடிப்படையில்). இப்போது மேலும் கூடுதல் நிதியைத் தரப் போகிறது.

ஆனால் எஸ்பிஐக்கு இந்த சிக்கலே கிடையாது. அரசுக்கே கடன் தந்து உதவும் அளவுக்கு ரொம்ப ஸ்ட்ராங்கான நிலையில் உள்ளது அந்த வங்கியின் செயல்பாடும் நிதிக் கட்டமைப்பும். எஸ்பிஐயின் பங்குகளை வைத்திருப்பதை இப்போதும் பெருமைக்குரியதாகக் கருதுகின்றனர் முதலீட்டாளர்கள்.

இதற்குக் காரணம், இன்றைய அரசுகள் எதுவுமில்லை. தொலைநோக்குப் பார்வையோடு இந்த வங்கியை ‘அரசின் வங்கி’யாக்கி, தனியாரின் கையை ஓங்கவிடாமல் செய்த இந்தியாவின் முன்னாள் நித நிர்வாகிகள்தான் என்பதை நிச்சயம் நன்றியோடு நினைவு கூற வேண்டும்!.

எச்.பியில் ஆள்குறைப்பு, சம்பள குறைப்பு…!

ஃப்ராமிங்ஹாம்: உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனமான ஹாவ்லெட்- பேக்கார்ட் (எச்பி) தனது ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, அவர்களின் சம்பளத்தையும் பெருமளவு குறைத்துள்ளது.

நிதி நெருக்கடி, லாபம் குறைவு போன்ற காரணங்களால் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 25,000 பேரைக் குறைக்கப் போவதாக கடந்த அக்டோபரில் அறிவித்தது. சொன்னது போலவே, இந்த 25,000 பேரில் முதல் கட்டமாக 9,000 பணியாளர்களை நீக்கியுள்ளது எச்பி. மீதியுள்ள 16,000 பேரும் படிப்படியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

இப்போது அடுத்த அதிரடியாக, பணியில் உள்ள அனைவருக்கும் சம்பளக் குறைப்பை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் எச்பியின் லாபம் 13 சதவீதம் குறைந்துள்ளது தெரிய வந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதல் காலாண்டில் லாபத்தில் 2.133 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சம்பளக் குறைப்புகளை அறிவித்துள்ளது.

நிறுவன செலவுகளைக் கட்டுப்படுத்த இனிமேலும் ஆட்களைக் குறைக்காமல் சம்பளத்தைக் குறைப்பது நிறுவனத்தின் நற்பெயரை பாதிக்காமல் இருக்கும் என்பதால் இந்த முடிவு என அதன் சிஇஓ மார்க் ஹர்ட் அறிவித்துள்ளனர்.

இந்த சம்பளக் குறைப்புக்கு முன்னுதாரணமாக தாமே இருக்க விரும்புவதாகவும் அறிவித்துள்ள மார்க், தனது சம்பளத்தில 20 சதவீதம், அதாவது 2.90 லட்சம் டாலர்களைக் குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளார். இவரது மொத்த ஆண்டு சம்பளம் 14.50 லட்சம் டாலர்கள்.

இது சர்வ நிச்சயமாக மோசமான சூழல்தான். ஆனால் இந்த நிலைக்கு யாருமே தப்ப முடியாது. எங்கள் போட்டியாளர்கள் ஐபிஎம் உள்பட பலருக்கும் இதே நிலைதான் இப்போது ஏற்பட்டுள்ளது என்கிறார் மார்க்.

எச்பியின் இந்த தடுமாற்றங்கள், லாபக் குறைவு போன்ற விவரங்கள் வெளியான பிறகு இதன் பங்குகள் விலை 6.4 சதவீதம் குறைந்து, 32.02 டாலர்களாகிவிட்டது.

அவுட்ஸோர்ஸிங்-நிறுவனங்களுக்கு ஒபாமா ‘வேட்டு’!

வாஷிங்டன்: வெளிநாடுகளுக்கு வேலை ஒப்பந்தங்களை அளிக்கும் (அவுட்ஸோர்ஸிங்) அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கிடையாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

இதில் பெரிதும் பாதிக்கப்படும நாடு இந்தியாவாகவே இருக்கும்.

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி ஏற்ற பிறகு அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளின் கூட்டுக் கூட்டம் நடந்தது. இதில் அவர் முதல் முறையாக உரை நிகழ்த்தினார் ஒபாமா.

அவர் கூறியதாவது:

ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தை நாம் மீண்டும் புதுப்பிப்போம். சரிவில் இருந்து மீள்வோம். முன்பை விட வலுவானதாக அமெரிக்க பொருளாதாரம் உயிர்த்து எழும்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் மின்சார உற்பத்தி, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நிதி நெருக்கடியில் சிக்கிய வங்கிகளை மீட்பதற்கு பெரும் அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் நிதி உதவி தேவைப்படுவது உண்மையே. இந்த நிதி உதவியை அரசு வழங்குவதற்கு சில எதிர்ப்புகள் இருந்தன. ஆனால் அப்படியே விட்டுவிட்டால், இது ஒவ்வொரு அமெரிக்கனையும் நேரடியாக பாதிக்கும்.

அடுத்த 2 ஆண்டுகளில் 40 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும். இந்த வேலைகளில் 90 சதவீதம் தனியார் துறையிலேயே உருவாக்கப்படும். சாலைகள் போடுதல், பாலங்கள் கட்டுதல், காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தல் போன்ற வேலைகளில் தனியார் துறை ஈடுபடும்.

அவுட்ஸோர்ஸிங்குக்கு ஆபத்து!:

வெளிநாடுகளுக்கு வேலை ஒப்பந்தங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை தருவதில்லை என்ற புதிய முடிவை அரசு எடுத்துள்ளது.

ஒபாமாவின் இந்த அறிவிப்பு, இந்திய பி.பி.ஓ நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரம் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வேலைகளை வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்துள்ளன.

இந்த அறிவிப்பால், இந்தியாவில் பிபிஓ தொழிலை மட்டுமே நம்பி தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள் பெரும் சிக்கலுக்கு ஆளாகும்.

இந்த நிறுவனங்களில் பல லட்சம் பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர்

ஊழியர்களிடம் சம்பளத்தை திருப்பி கேட்கும் மைக்ரோசாப்ட்

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் பணிநீக்கம் செய்த சில ஊழியர்களுக்கு தவறுதலாக அதிகப்படியான சம்பளம் வழங்கிவிட்டது. இதையடுத்து அந்த பணத்தை திரும்பத்தருமாறு ஊழியர்களை கேட்டு வருகிறது.

உலக பொருளாதார வீழ்ச்சியினால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திணறி போயுள்ளன. இதன் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் 5,000 ஊழியர்களை அடுத்த 18 மாதங்களுக்குள் பணிநீக்கம் செய்ய போவதாக அறிவித்தது. அதன் முதல்கட்டமாக கடந்த ஜனவரி 22ம் தேதி 1,400 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது.

இதையடுத்து அவர்களுக்கு இழப்பீடும் வழங்கியது. இந்நிலையில் இழப்பீடு வழங்கியதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் குளறுபடி நடத்திருப்பது தெரியவந்துள்ளது. சில ஊழியர்களுக்கு பணம் அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பணம் குறைவாக கொடுக்கப்பட்டவர்கள் நிர்வாகத்திடம் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால், சிலருக்கு பணம் அதிகம் அளிக்கப்பட்ட விவகாரம் நிறுவனத்துக்கு தெரிய வர பல நாட்களாகிவிட்டது. இதில் அந்நிறுவனத்தின் மனிதவள துறையும் அதிக அக்கறை காட்டவில்லை.

இந்நிலையில் சம்பள பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்ட தவறுதலே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம், சம்பள தொகை அதிகம் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கமாறு கடிதம் எழுதியுள்ளது. அதில்,

நிர்வாகத்தின் கவனக்குறைவு காரணமாக தவறு நடந்துவிட்டது. உங்களுக்கு அதிகம் கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பி கொடுங்கள். இதனால் உங்களுக்கு ஏற்படும் சங்கடங்களுக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என கூறியுள்ளது.

இப்படி கடிதம் கிடைத்தவர் ஒருவர் அதை பத்திரிகைக்கு கொடுக்க விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணம் அதிகம் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு சராசரியாக ரூ. 2.2 லட்சம் கூடுதலாக கொடுத்துள்ளது.

முதலில் இது நிறுவனத்துக்கும், ஊழியர்களுக்கும் இடையை உள்ள தனிப்பட்ட விவகாரம் எனக் கூறிய மைக்ரோசாப்ட் பின்னர் தனது தவறுகளை ஒத்துக்கொண்டது.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணம் அதிகம் பெற்ற ஊழியர்கள் அதை திருப்பி கொடுக்க வேண்டும். குறைவாக கொடுக்கப்பட்டவர்களுக்கு பணம் விரைவில் திருப்பி கொடுக்கப்படும். அவர்கள் அனைவரும் மனிதவள துறை தலைவர் லிசா பிரம்மலை நேரில் சந்திக்குமாறு கேட்டு கொள்கிறோம் என கூறியுள்ளது.

47,000 பேர் நீக்கம்-5 தொழிற்சாலைகள் மூடல்: சிக்கலில் ஜிஎம்

டெட்ராய்ட்: அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் மேலும் 47 ஆயிரம் பேரை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

மேலும், நஷ்டத்தைக் குறைக்க தங்களது 5 தொழிற்சாலைகளை இழுத்து மூடிவிடவும் முடிவு செய்துள்ளது. ஒரேயடியாக நிறுவனத்தை மூடாமல் தவிர்க்க 30 பில்லியன் டாலர் அளவு நிதியுதவி தங்கள் நிறுவனத்துக்கு மட்டும் தேவை என்றும் ஜெனரல் மோட்டார்ஸ் கூறியுள்ளது.

கார் விற்பனை உலகெங்கும் கடும் சரிவுக்குள்ளாகியதாலும், நிதி நெருக்கடியாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுள் ஒன்று ஜெனரல் மோட்டார்ஸ். ஏற்கெனவே தங்களின் 8 தொழிற்சாலைகளை மூடியதோடு, 1 லட்சம் பணியாளர்களையும் வேலையிலிருந்து நீக்கியுள்ளது ஜிஎம்.

நெருக்கடியைச் சமாளிக்க இந்நிறுவனத்துக்கு 13.4 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி உதவியை அளித்துள்ளது ஒபாமா அரசு. ஆனால் அப்படியும் நெருக்கடி தீரவில்லையாம்.

எனவே உலகமெங்கும் உள்ள தங்களது மொத்த தொழிற்சாலைகளையும் மறுசீரமைக்க முடிவு செய்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்.

இதன் ஒரு பகுதியாக தனது 5 உற்பத்திக் கூடங்களை மூடப்போகும் ஜிஎம், 47 ஆயிரம் பணியாளர்களையும் நீக்குகிறது.

மேலும் அமெரிக்க நிதித்துறைக்கு ஒரு அறிக்கையையும் இந்நிறுவனம் அளித்துள்ளது. அதில் தங்கள் நிறுவனத்தின் நெருக்கடிகள் குறித்து விவரித்துள்ள ஜிஎம் நிறுவனம், ஒரேயடியாக நிறுவனத்தை மூடுவதைத் தவிர்க்க, 30 பில்லியன் டாலர் நிதி உதவி வேண்டும் என்றும், நிறுவனம் லாபத்தில் இயங்க இன்னும் எட்டு ஆண்டுகள் அதாவது 2017-ம் ஆண்டுவரை அவகாசம் தேவை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார மந்தத்துக்கு நடுவிலும் அட்டகாசமான வளர்ச்சி!

டெல்லி: உலகெல்லாம் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது, வேலை போச்சு… என்ற விசும்பல்கள் ஒலித்தாலும், தொலைபேசி நிறுவனங்கள் மட்டும் ‘கோயிங் ஸ்டெடி’ என்கின்றன புன்முறுவலுடன். அதுவும் இந்தியாவில்தான் இந்த நிலை.

எப்படி… எப்படி இது சாத்தியம்?

சிம்பிள்… வேலை போனாலும் செல்போன் அல்லது டெலிபோனை தூக்கியெறிய முடியாத, ஒரு வித ‘போதை மற்றும் வசதி’தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.

பொருளாதார தள்ளாட்டம் பெருமளவில் உள்ள இந்த காலகட்டத்தில் மட்டும் ஒரே மாதத்தில் 15 மில்லியன் மக்கள் புதிய செல்போன் அல்லது தொலைபேசி உபயோகிப்பாளராக மாறியுள்ளனர். அதோ சமயம் ஏற்கெனவே உபயோகித்துக் கொண்டிருந்தவர்களும் அந்த இணைப்புகளைத் துண்டித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 10.66 மில்லியனாக இருந்த தொலைபேசி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை, அடுத்த ஒரே மாதத்தில் கூடுதலாக 15.26 மில்லின்களாக உயர்ந்துள்ளது.

இது குறித்து தொலைபேசிக் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் டிராய் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்த ஜனவரியில் மட்டும் 15.4 மில்லியன் புதிய செல்போன் சந்தாதாரர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். லேண்ட் லைன் உபயோகிப்பாளர்கள் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் புதிதாக இணைப்பு பெற்றுள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவெங்கும் செல்போன் மற்றும் லேண்ட் லைன் உபயோகிப்பாளரின் எண்ணிக்கை 40 கோடியாக உயர்ந்துள்ளது.

செல்போன் மற்றும் கம்பியில்லா தொலைபேசிகள் வழங்குவதில் ரிலையன்ஸ் நிறுவனம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 8.1 சதவிகிதமாகும். சமீபத்தில் மிக அதிக அளவு ஜிஎஸ்எம் மொபைல்களை இந்த நிறுவனம் வழங்க ஆரம்பித்திருப்பதும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

ஐடியா (5.3), ஏர்செல் (4.3), வோடபோன் மற்றும் ஸ்பைஸ் (4.00), பார்தி ஏர்டெல் (3.2) ஆகியவை ரிலையன்சுக்கு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

அரசு நிறுவனமான பிஎஸ்ன்எல்லின் நிலை என்ன என்பது குறித்து டிராய் அறிக்கையில் தகவல் ஏதுமில்லை.

இந்தியா: 4 மாதங்களில் 5 லட்சம் பேர் வேலையிழப்பு!

டெல்லி: கடந்த செப்டம்பர் – டிசம்பர் மாதங்களில் மட்டும் இந்தியாவில் வேலை இழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சம் என அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் பின்னடைவு குறித்த விவாதத்தின் போது அளித்த எழுத்து மூல பதிலில் இப்படித் தெரிவித்துள்ளார் இந்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் பிரேம்சந்த் குப்தா.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:

தொழிலாளர் நலத்துறை அமைச்சக கணக்கெடுப்பின்படி கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக 5 லட்சம் போர் வேலை இழந்துள்ளனர். பிபிஓ மட்டுமின்றி அனைத்து துறைகளிலுமே இந்த வேலையிழப்புகள் தொடர்கின்றன.

இந்த ஆண்டும் வேலையிழப்புகள் தொடர்ந்தாலும், அதன் வேகத்தைக் குறைக்க மத்திய அரசு பணவியல் நடவடிக்கைகளையும், கூடுதல் நிதிச் சலுகைகளையும் வழங்கி வருகிறது. 3வது கட்ட நிதிச் சலுகைகளை விரைவில் அறிவிக்க உள்ளது, என்று தன் எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளார்.

50,000 பேர் வேலைக்கு ஆப்பு

அமெரிக்காவின் ஆட்டோமொபைல் ஜாம்பவான்களான ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிரிஸ்லர் நிறுவனங்கள் மேலும் 50,000 பேரை வேலையிலிருந்து நிறுத்தப்போவதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளன. மேலும் அவை 21.6 பில்லியன் டாலர் கொடுத்து தஙகளை காப்பாற்றுமாறு ஒபாமா அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. இவையிரண்டும் ஏற்கனவே 17.4 பில்லியன் டாலர் பணத்தை அரசுக் கருவூலத்தில் இருந்து உதவியாகப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஜெனரல் மோட்டார்ஸ் மட்டும் 13.4 பில்லியன் டாலரை பெற்றுள்ளது. மேலும் 16.6 பில்லியன் டாலர் கடன் தேவை எனத்தெரிவித்துள்ளது. இத்தகவலை டெட்ராய்ட்டில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெனரல் மோட்டார்ஸின் சி.இ.ஓ ரிக் வேக்னர் தெரிவித்தார்.

ஜெனரல் மோட்டார்ஸின் ஐந்து யூனிட்டுகள் மூடப்படுவதாகவும் மூன்று பிரபல பிராண்டு கார்கள் தயாரிப்பை நிறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் 47,000 ஊழியர்கள் வேலை இழப்பர்.

கிரிஸ்லர் நிறுவனமும் அரசிடம் 5 பில்லியன் டாலர் உதவி கோரியுள்ளது. இந்நிறுவனத்தில் 3,000 பேர் வேலை இழக்கின்றனர். இது தனது கடந்த 40 வருட கார் விற்பனையில் இந்த வருடம் மோசமான அளவு விற்பனையை எட்டியுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: