இந்தியா தாக்குப் பிடிக்குமா?

இன்றைய உலகப் பொருளாதாரத் தேக்க நிலையில், இந்தியாவால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பது பற்றி பார்ப்போம்.

சமீபத்தில் வெளியிடப் பட்ட மத்திய புள்ளியல் (மத்திய அரசு) நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.1 சதவீதம் வளர்ச்சியுறும் என்று தெரிகிறது. இது சரியாக இருக்கும் பட்சத்தில் உலகிலேயே இரண்டாவதாக வேகமாக வளர்ச்சியுறும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் (சீனா முதலாவது).

சென்ற ஆண்டில் ஒன்பது சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்த இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் 2008 வரையிலான முதல் அரையாண்டில் 7.80% வளர்ச்சிப் பெற்றிருந்தது. பொதுவாகவே பண்டிகைக் காலமாக கருதப் படுகிற இரண்டாவது அரையாண்டே தொழிற் துறையில் அதிக வளர்ச்சியைக் காட்டும் என்றாலும் இந்த முறை இந்தியத் தொழில் துறை பெரும் தேக்க நிலையில் இருந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

இந்திய தொழிற் வளர்ச்சி கடந்த இரு மாதங்களாக மிகவும் குறைந்து காணப் படுவதாலும் ஏற்றுமதியோ இறங்குமுகத்தில் இருப்பதாலும் இந்திய அரசாங்கம், மார்ச் 2009 வரையிலான நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் நமது பொருளாதாரம் குறைந்த வளர்ச்சியே (6.30%) இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. அதே சமயம், பல தனியார் அமைப்புக்கள், இந்தியா இன்னும் கூட குறைந்த அளவே வளர்ச்சிப் பெறும் என்று கணிக்கின்றன. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் போது இந்த வளர்ச்சி சாத்தியமான ஒன்றா என்றும் அடுத்த ஆண்டும் இதே போன்ற ஒரு மிதமான வளர்ச்சி சாத்தியமா என்றும் பார்ப்போம்.

ஒரு நாட்டின் “மொத்த உள்நாட்டு உற்பத்தி” (GDP) பொதுவாக கீழ்க்கண்ட முறையில் கணக்கிடப் படுகிறது.

GDP = தனியார் (மக்கள்) செலவிடும் தொகை + அரசு செலவிடும் தொகை + முதலீடுகள் + நிகர ஏற்றுமதி

இந்தியா ஒரு இறக்குமதி சார்ந்த நாடு என்பதால், அதை விடுத்து மீதமுள்ள முக்கிய மூன்று காரணிகள் வருங்காலத்தில் எப்படி மாற்றம் பெறும் என்று பார்ப்போம்.

தனியார் (மக்கள்) செலவிடும் தொகை:

வேலையிழப்பு, வருமான பாதிப்பு, தொழிற்துறையில் குறைந்த லாபம் அல்லது நட்டம் போன்ற காரணங்களால், நடப்பு மற்றும் நிதியாண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் தனியாரின் பங்கு குறைவாகவே காணப் படும் என்று தெரிகிறது. அதே சமயம், மெல்ல மெல்ல நுகர்வோர் கலாச்சாரத்திற்கு மாறி வரும் இந்தியரின் மனப்போக்கும், ஜனத்தொகையில் பெரும்பங்கு இளையவர்களாகவே இருப்பதும் தனியார் செலவினங்கள் பெருமளவு குறைந்து போவதிலிருந்து காப்பாற்றும் என்று நம்பலாம். தனி மனிதருக்கான பெரும்பாலான தேவைகள் (குடியிருப்பு, தொலைத் தொடர்பு, கல்வி, வாகனங்கள் போன்றவை) இன்னமும் கூட இந்தியாவில் பூர்த்தி ஆகாமல் இருப்பதும், தனியார் செலவினத்தை சற்று அதிகமாகவே வைக்கும் என்று நம்பலாம்.

அரசு செலவிடும் தொகை

இந்தியா ஏழை நாடாக இருந்தாலும், இந்திய அரசாங்கங்கள் எப்போதுமே தாராள செலவுக்கு பேர் போனவை. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக, பொருளாதார வளர்ச்சியில் அரசின் நேரடி பங்கு குறைந்து போய் விட்ட நிலையில், பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து செலுத்த அதிகப் படியான அரசு செலவினம் இப்போது அவசியமான ஒன்றாகி விட்டது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்திய மைய அரசு சுமார் 70,000 கோடி ரூபாய் அதிகப் படியான செலவு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது போக மாநில அரசுகளும் அதிக செலவு செய்ய மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. அரசு நல திட்டங்கள், ஊதியக் குழு பரிந்துரையின் படி அரசு ஊழியர்க்கு அதிக சம்பளம், சில அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றுக்கு இந்த பணம் செலவு செய்யப் படும் என்று தெரிகிறது. இத்தகைய அதிகப் படியான அரசு செலவினங்கள், மேலே சொன்னபடி, தனியார் செலவினம் குறைந்து போவதினால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும்.

முதலீடுகள்:

தற்போதைய ஏற்றுமதி வீழ்ச்சி மற்றும் நிச்சயமற்ற வருங்காலம் ஆகியவற்றின் காரணமாக, புதிய முதலீடுகள் செய்ய தனியார் துறையினர் முன்வருவார்களா என்பது சந்தேகமான ஒன்று. மேலும், வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வீழ்ச்சி பெற்றுள்ள பங்கு சந்தை மற்றும் கடன் கொடுக்க தயங்கும் வங்கிகள் காரணமாக “மூலதனம் திரட்டல்” என்பது ஒரு சிரமமான காரியமாகவே தெரிகிறது. அதே சமயம், அதிக அளவு கடன் கொடுக்க பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு வலியுறுத்தி வருவதும், மத்திய நிதி நிறுவனங்கள் வாயிலாக (IIFCL போன்றவை) நீண்ட கால (அடிப்படை கட்டமைப்புக்கான) கடன் வசதிகள் செய்து தருவதும் கவனிக்கத் தக்கது.

பல மேற்கத்திய நாடுகள் வளர்ச்சியில் தன்னிறைவு பெற்று விட்டிருப்பதால், அந்த நாடுகளின் அரசாங்கங்கள் அதிக அளவில் புதிய முதலீடு செய்ய வாய்ப்பு குறைவு. அதே சமயம், இந்தியாவிலோ நிறைவேற்ற வேண்டிய பணிகள் (உதாரணம்: குடிநீர் வசதி, கல்வி வசதி,சாலை வசதி, துறைமுக வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி என்று சொல்லிக் கொண்டே போகலாம்). இவற்றுக்கெல்லாம் அரசு சரியான முதலீட்டு செலவுகள் செய்யுமானால் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் பல வருடங்களுக்கு நல்ல வளர்ச்சிப் பாதையில் செல்லும் வாய்ப்பு உள்ளது.

இப்போது, எந்தெந்த துறைகளில் வளர்ச்சி எதிர்பார்க்கப் படுகிறது என்று பார்ப்போம்.

ஒரு காலத்தில் இந்தியாவின் முதுகெலும்பாக கருதப் பட்டு இப்போது கவனிப்பாரற்று கிடக்கும் விவசாயத் துறை 2.60% சதவீதம் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்க படுகிறது. கடந்த சில வருடங்களாகவே ஓரளவுக்கு பருவ மழை தவறாமல் பெய்து வருவதால், இந்த வளர்ச்சி சாத்தியமே என்று தோன்றுகிறது. மேலும், ஏற்றுமதியையும் உலக பொருளாதாரத்தையும் சார்ந்திராத இந்த துறை மிதமான வேகத்தில் (பருவ மழை சரியாக இருக்கும் பட்சத்தில்) இன்னும் சில ஆண்டுகள் வளரும் என்று கருதப் படுகிறது.

தொழிற்துறை இந்த பொருளாதார வீழ்ச்சியினால் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள போதிலும், மோசமான காலம் முடிந்து விட்டதாகவே சில விற்பன்னர்கள் கருதுகின்றனர். சாலை திட்டங்கள், மின்சார உற்பத்தித் திட்டங்கள் போன்றவை இந்த துறைக்கு கை கொடுக்கும் என்று நம்பலாம்.

வெளிநாட்டு ஏற்றுமதியைச் சார்ந்த சேவை நிறுவனங்கள் ஓரளவுக்கு பாதிப்பைச் சந்திக்கும் என்று தோன்றினாலும், உள்நாட்டை சார்ந்த சேவை நிறுவனங்கள் (கல்வி, மருத்துவம், தொலைத் தொடர்பு போன்றவை) மிதமான வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. அதே சமயம், அகலக் கால் வைத்த நிறுவனங்கள் தடுமாறவும் வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப் படவுள்ள மிக அதிகமான ஊதியக் குழு நிலுவை பணம் விரைவில் புழக்கத்திற்கு வரவிருப்பது உள்ளூர் சேவைத் துறைக்கு நல்ல விஷயமாக இருக்கும். ஏற்றுமதியை ஊக்குவிக்கக் கூடிய வகையில், மத்திய அரசின் புதிய திட்டங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஆக மொத்தத்தில், கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் காணப் பட்ட அசுர வளர்ச்சியினை இன்னும் சில காலத்திற்கு எதிர்பார்க்க முடியாதென்றே தோன்றுகிறது. அதே சமயத்தில், உலகின் பல நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட) பொருளாதார பின்னடைவை சந்திக்கின்ற வேளையில், இந்தியா ஒரு மிதமான வளர்ச்சியை சந்திக்கவிருப்பது, ஆறுதலளிக்கும் ஒரு விஷயம்தானே?

மக்களின் மீது மறைமுக வரி விதிப்பு ?

பொருளாதார தேக்கத்திலிருந்து இந்தியா மீள்வதற்காக வரிச் சலுகைகள், வரி விலக்குகள், வரி குறைப்புகள், வரி தள்ளுபடிகள், வரி விடுமுறைகள் என்றெல்லாம் வாரி வழங்கப் படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த பொது மக்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிற் துறையினர் ஆகியோருக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி வைத்தியம் இந்த “மறைமுக வரி விதிப்பு”. இது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.


(Courtesy:econjournal.com)

ஒரு நாட்டின் அரசின் வரவு செலவில் ஏற்படும் “துண்டு” இறுதியாக அந்த நாட்டின் மக்களின் மீதுதான் மறைமுகமாக சாத்தப் படுகிறது. இந்த “துண்டிற்கு” வெவ்வேறு வடிவங்கள் உண்டு.

ஒரு அரசு தனது செலவிற்கு போதிய பணம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் கடைசியாக கை வைக்கும் இடம் மக்களின் (முக்கியமாக நடுத் தர, எளிய மக்களின்) “பாக்கெட்”. காலபோக்கில் மக்களின் உபயோகப் பொருட்களின் மீது அதிகரிக்கப் படும் நேரடி மற்றும் மறைமுக வரிகள், போக்குவரத்து, குடிநீர் போன்ற அரசு நிறுவனங்களின் சேவை கட்டணங்கள் அதிகரிப்பு என்று அரசு தனது நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க மக்களிடமிருந்தே பணம் “வசூல்” செய்ய வேண்டியிருக்கிறது.

இதற்கு மாற்று வழியாக, தலைமை வங்கியிடமிருந்து அரசு அதிக கடன் பெற முயற்சி செய்யும் பட்சத்தில் புதிய “கரன்சி” நோட்டுகள் அடிக்க வேண்டியதாகிறது. இதனால், நாட்டில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு மீண்டும் அப்பாவி மக்களே பாதிக்கப் படுகின்றனர். ஒருவேளை நோட்டு அச்சடிக்கப் படா விட்டால், அரசு உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் அதிக கடன் வாங்க வேண்டியிருக்கும். அப்போதோ, நாட்டில் கடும் நிதி நெருக்கடி மற்றும் தட்டுப் பாடு நேரிடும்.

ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் போது, அந்நாடு சர்வதேச தரவரிசையில் கீழே இறங்குகிறது. ஏற்கனவே நம் நாட்டின் தரவரிசை மிகவும் கீழே. அதாவது BBB-. இது இடைகால பட்ஜெட்டிற்கு பின்னர் இன்னும் குறைக்கப் படலாம் என்று தெரிகிறது. இதனால் உலக சந்தையில் நம்நாட்டின் கரன்சியின் மதிப்பு மேலும் குறைந்து இறக்குமதி செலவுகள் அதிகமாகும். இதனால், உள்நாட்டில் விலைவாசி விரைவாக ஏறும் வாய்ப்பு உள்ளது.

மேலும், ஒரு அரசின் நிதிப் பற்றாக்குறையானது, அந்நாட்டில் புதிய மக்கள் நல திட்டங்கள், அடிப்படை கட்டுமான வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை ஆரம்பிக்க பெரும் தடையாக இருக்கும். இதனால், மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கும்.

எப்படிப் பார்த்தாலும், ஒரு நாட்டின் அரசிற்கு பட்ஜெட்டில் விழும் துண்டானது நாட்டின் மக்களையே அதிகம் பாதிப்பதனால்தான், பட்ஜெட் பற்றாக்குறையை “மறைமுக வரி விதிப்பு” என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இப்போது இந்தியாவின் கதைக்கு வருவோம்.

மத்திய அரசின் நடப்பு நிதியாண்டின் (2008-09) நிதித் தட்டுப்பாடு (Fiscal Deficit) எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்! சுமார் மூன்று லட்சத்து இருபதினாயிரம் கோடி ரூபாய். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஆறு சதவீதம். கடந்த நிதியாண்டில் இது வெறும் 2.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத் தக்கது. மேலே சொன்ன தொகையோடு, பெட்ரோல் மானியம் மற்றும் உர மானியத்திற்கான (சுமார்) 95,000 கோடி ரூபாயையும் கூட்டி கொண்டால் வரும் நிதிப் பற்றாக்குறை அளவு கிட்டத்தட்ட 4,15,000 கோடி ரூபாய். (குழந்தைகள் முதல் மரணப் படுக்கையில் இருப்பவர் வரை ஒவ்வொரு இந்தியனுக்கு சராசரியாக விழப் போகிற “துண்டு” சுமார் 4,100 ரூபாய். இது மத்திய அரசு வகையில் மட்டும்தான். இன்னும் மாநில அரசுகள், மாநகராட்சிகள், கிராம பஞ்சாயத்துக்கள் என பல அரசு அமைப்புகளாலும் மக்களுக்கு போடப் படும் “துண்டுகளின்” பாரம் தாங்காமல் மக்கள் மயங்கி விழ வேண்டியிருக்கும்.)

நாட்டினை பொருளாதார தேக்கத்திலிருந்து மீட்பதற்காகவே இவ்வாறு அரசு செலவினங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன என்று சிலர் கூறிக் கொள்வது எந்த அளவிற்கு உண்மை என்று அரசின் நிதி நிலை அறிக்கையை சற்று கூர்ந்து படித்தாலே புரிந்து கொள்ள முடியும்.

ஒரு அரசின் செலவினங்களில் இரு வகை உண்டு. அதாவது, அரசின் நிர்வாக செலவுகள் (Non Plan Expenditure) மற்றும் மக்கள் நல மற்றும் இதர அடிப்படை கட்டுமானத்திற்கான திட்ட செலவினங்கள் (Plan Expenditure). நடப்பு நிதியாண்டிற்கான மதிப்பீட்டிலிருந்து அரசின் நிர்வாக செலவுகள் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி அதிகமாகி உள்ளது. திட்ட செலவுகள் சுமார் நாற்பதினாயிரம் கோடி அதிகமாகி உள்ளது. எனவே அரசின் அதிகப் படியான நிர்வாக செலவே இந்த நிதிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு நாடிருக்கும் பொருளாதார நிலையில், பொது மக்களை விட அரசுக்கு அதிக பொறுப்புகள் உண்டு. மேலும், குறைந்த அளவிலேயே கைவசம் உள்ள பணத்தை மிச்சப் படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதைக்கு திருப்பி விடுவதில் மத்திய அரசு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

இதில் இந்த அரசுக்கு மட்டுமல்ல அடுத்து அமையப் போகும் அரசுக்கும் நிறைய கடமைகள் இருக்கின்றன.

சில்லறை வணிக நிறுவனங்கள் இப்போது சிக்கலில்?

அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவிலும் பல சங்கிலித் தொடர் சில்லறை வணிக நிறுவனங்கள் உருவாகின. ரிலையன்ஸ், பாரதி, டாட்டா என பெரிய தொழில் குழுமங்கள் கூட இநத தொழிலில் ஆர்வம் காட்டினாலும், பிக் பஜார் (பேண்டலூன் குழுமம்), ஸ்பென்செர் (ஆர்.பி.ஜி குழுமம்) போன்ற சில வணிக நிறுவனங்களே அவற்றில் குறிப்பிடத் தக்க வெற்றியைப் பெற்றவை. கடந்த சில வருடங்களில் இந்தியாவில் ஏற்பட்ட அசுர பொருளாதார வளர்ச்சியின் போதே பெருமளவு லாபம் சம்பாதிக்க முடியாத இநத துறையைச் சார்ந்த நிறுவனங்கள் இப்போதைய தளர்ச்சிக் காலத்தில் தடுமாறி வருகின்றன. இந்த சிக்கலான நிலைக்கு காரணங்கள் யாவை என்று இப்போது பார்ப்போம்.

முதல் காரணம், இப்போது நேரிட்டுள்ள பொருளாதார தளர்ச்சியின் காரணமாக நுகர்வோரின் வாங்கும் திறன் பெருமளவு குறைந்து போனது. அத்தியாவசியப் பொருட்களின் விலையை (தள்ளுபடி என்ற பெயரில்) சற்று குறைத்து, பல அத்தியாவசியமற்ற கவர்ச்சிப் பொருட்களை (பொருந்தாத விலையில்) மக்களின் தலையில் கட்டும் சில்லறை வணிக நிறுவனங்களின் வியாபாரத் தந்திரம் இன்றைய சூழ்நிலையில் பெருமளவில் பலிக்காமல் போகிறது. காரணம், பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் கண்ணில் படுகின்றவையையெல்லாம் வாங்கும் மக்கள், தளர்ச்சிக் காலத்தில், அத்தியாவசமற்ற பொருட்களை வாங்க சற்று தயங்குகிறார்கள். எனவே இநத நிறுவனங்களின் லாப விகிதம் பெருமளவு குறைந்து போய் விட்டது.

ரியல் எஸ்டேட் விலைகள் (வாடகைகள்) இன்னமும் கூட பெருமளவில் குறையாத நிலையில் நகரின் மையப் பகுதியில் பெரிய இடப் பரப்பில் (வாகனம் நிறுத்தும் வசதியுடன்) வணிக தளங்களை அமைக்க வேண்டியிருப்பது அதிக “முதல்” தேவையை உருவாக்கி பொருளாதார ரீதியாக இநத நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. மேலும், முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப் பட்ட அரங்குகள், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள், சேமிப்பு கிடங்கு என இவர்களுடைய அமைப்பு ரீதியான செலவுக் கணக்கு கூடிய அளவுக்கு வருமானம் பெருக வில்லை.

சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைந்த போது, சிறு வணிகர்கள் (நமது தெருவோர அண்ணாச்சி கடைகள்) பெருமளவு பயந்தனர். இநத நிறுவனங்களுக்கு எதிராக சில போராட்டங்கள் கூட நடத்தப் பட்டன. ஆனால், உண்மையில் இநத பெரிய நிறுவனங்களால், சிறு வணிகர்களுக்கு எதிராக (சிறிய நகரங்களில் மட்டுமல்ல, பெரிய நகரங்களில் கூட) பெரிய நிறுவனங்களால் போட்டி போட இயல வில்லை என்றுதான் கூற வேண்டும். சிறு வணிகர்களின் தாக்குப் பிடிக்கும் திறனுக்கு முக்கிய காரணங்களில் சில கீழே.

“நுகர்வோருக்கு அருகாமையிலேயே இருத்தல், சிறிய கடன் வசதி அளித்தல், சிறிய அளவில் பொருட்கள் கிடைப்பது, அமைப்பு ரீதியான செலவினங்கள் குறைவு.”

இவ்வாறு சிறு வணிகர்கள் கடும் போட்டி அளிப்பதால், பெரிய சில்லறை நிறுவனங்களால் எதிர்பார்த்த அளவுக்கு தனி ஆதிக்கம் செலுத்தவோ, பெரிய அளவுக்கு வாடிக்கையாளர்களை பெறவோ முடிய வில்லை.

மேலும், தமது சங்கிலி தொடர் கிளைகளை அதி வேகமாக விரிவு படுத்திய இநத வணிக நிறுவனங்கள் இப்போது கடும் நிதிச் சிக்கலில் சிக்கி கொண்டன. வட்டி வீத உயர்வு மற்றும் வீழ்ச்சியடைந்த பங்கு சந்தைகள், புதிய முதல் திரட்டுவதற்கு இந்த நிறுவனங்களுக்கு பெரும் தடையாக உள்ளன. பல தொடர் சங்கிலி சில்லறை நிறுவனங்கள் கடந்த காலாண்டில் (அதுவும் பண்டிகை காலத்தில்)பெரும் இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத் தக்கது. பெரிய அளவில் தள்ளுபடி என்று செய்யப் பட்ட வியாபார தந்திரங்கள் பெருமளவிற்கு எடுபடவில்லை

ஆக மொத்தத்தில், கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள இநத நிறுவனங்கள், தமது கிளைகளை மூடுவது, ஆட்குறைப்பு, வைத்திருக்கும் பொருட்களின் எண்ணிக்கை குறைப்பு, குறிப்பிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு என போர்க்கால அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆனால் இநத நடவடிக்கைகள் எந்த அளவுக்கு இநத நிறுவனங்களை காப்பாற்றும் என்று இப்போதைக்கு சொல்வது கடினம். இதே பொருளாதார தளர்ச்சி நிலை நீடிக்கும் பட்சத்தில், இன்னும் கூட பல கிளைகள் ஏன் சில பெரிய நிறுவனங்கள் கூட மூடப் படுவதை நாம் பார்க்க முடியும்.

ஒரு தாமதித்த மாலை நேரத்தில், இன்னும் எவ்வளவு நேரம் அலுவலகத்தில் இருந்தாலும், வேலை முடியாது என்று ஒரு தெளிவு பிறந்து, சரி வீட்டிற்கு கிளம்பலாம் என்று முடிவு எடுத்தப் பிறகு, அலுவலக இருக்கையை விட்டு எழுவதற்கு முன்னர் இடைப் பட்ட ஒரு சோம்பல் முறிக்கிற நேரத்தில் பிறந்த ஒரு சிந்தனை இது.

“எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்? ”

வெட்டேத்தியாக இருந்த நிலையில் இருந்து மாறி இப்போது ஒரு பொறுப்பான உத்யோகத்தில் அமர்ந்துள்ளோம்.

அபூர்வமாக பாக்கெட் மணி கொடுக்கும் அப்பா தந்த ஒரு பத்து ரூபாய் நோட்டை பத்திரமாக ஒரு பழைய பர்சில் வைத்து மகிழ்ந்த நம்மால், இன்று பர்ஸ் முழுக்க நோட்டுக்கள், கிரெடிட், டெபிட் கார்டுகள் எல்லாம் இருந்தும் சந்தோஷம் பெற முடிய வில்லையே? அன்றைய ஒரு நூறு ரூபாய் (கல்லூரியில் திருப்பித் தந்த டெபாசிட் பணம்) தந்த மகிழ்ச்சியை விட இன்றைய பல ஆயிரம் சம்பளம் குறைவான மகிழ்ச்சியையே தருகிறதே, ஏன்?

தினத்தந்தி பேப்பரின் உதவியுடன் பஜ்ஜியில் உள்ள எண்ணெயை பிழிந்தெடுத்து பின்னர் அதனுடன் கலந்து அடிக்கும் ஒரு நாயர் கடை டீ தரும் திருப்தியை இன்றைய பிஸ்ஸா, பர்ஜர் போன்ற மேற்கத்திய உணவுகள் தருவதில்லையே?

இன்னும் கொஞ்சம் யோசனை செய்கிறேன்.

ஐம்பது கிலோமீட்டருக்கு மேல் தொடர்ந்து ஓட வேண்டுமென்றால், மெக்கானிக்கின் உதவி தேவைப் படுகிற ஒரு ஓட்டை பைக்கில் ஊர் சுற்றிய அளவுக்கு இன்று காரில் பயணம் செய்ய முடிய வில்லையே?

ஒரு ரயிலில் முன்பதிவு செய்யப் படாத பொது பெட்டியில் பொதுஜனத்துடன் பல நூறு கி.மீ. நின்று கொண்டே செய்த பயணத்தை விட இன்றைய வானூர்தி பயணமோ அல்லது குளிர்சாதனப் பெட்டி பயணமோ அதிக மகிழ்ச்சி தருவதில்லையே? அன்று உலகையே சுற்றி பார்த்து விட வேண்டுமென்ற வேட்கை இருக்க இன்றோ எந்த ஊருக்கு போவது என்ற ஒரு ஆயாச உணர்வு தோன்றுகிறதே, ஏன் இப்படி?

வாழ்க்கை மாறி விட்டதா? அல்லது நாம் மாறி விட்டோமோ?

முதன் முதலாக, மொபைல் போன் அதுவும் ப்ரீ பைய்டு கட்டணத்தில் யார் யாருகெல்லாமோ போன் செய்து நம்பர் கொடுத்தோமே? இன்று அலுவலக உபயத்தில் அன்லிமிட்டட் கால் செய்ய வசதியிருந்தும், எத்தனை பேர் நம்பர் நமக்கு ஞாபகமிருக்கிறது?

ஒரு சிறிய நண்பர் வட்டத்திற்குள்ளே கும்மாளமடித்த நாம், இப்போது அலுவலகம், தொழில் ரீதியான நண்பர்கள் என ஒரு ஒரு பெரிய கூட்டத்தின் நடுவே இருந்தாலும் அன்னியமாக உணர்கிறோமே, ஏன்?

ஒரு சிறிய வானத்திற்குள் பருந்தாக வட்டமிட்ட நாம், இன்று நமது வானம் விரிவடைந்து விட அதன் நடுவே ஒரு சின்னஞ்சிறு குருவியாக உணர்கிறோமோ? நம்மை சுற்றியுள்ள வானம் வளர்ந்த அளவிற்கு நமது எண்ணங்கள் விரிவடைய வில்லையோ?

நிதானமாக சிந்திப்போம்.

47,000 பேர் நீக்கம்-5 தொழிற்சாலைகள் மூடல்: சிக்கலில் ஜிஎம்

டெட்ராய்ட்: அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் மேலும் 47 ஆயிரம் பேரை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

மேலும், நஷ்டத்தைக் குறைக்க தங்களது 5 தொழிற்சாலைகளை இழுத்து மூடிவிடவும் முடிவு செய்துள்ளது. ஒரேயடியாக நிறுவனத்தை மூடாமல் தவிர்க்க 30 பில்லியன் டாலர் அளவு நிதியுதவி தங்கள் நிறுவனத்துக்கு மட்டும் தேவை என்றும் ஜெனரல் மோட்டார்ஸ் கூறியுள்ளது.

கார் விற்பனை உலகெங்கும் கடும் சரிவுக்குள்ளாகியதாலும், நிதி நெருக்கடியாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுள் ஒன்று ஜெனரல் மோட்டார்ஸ். ஏற்கெனவே தங்களின் 8 தொழிற்சாலைகளை மூடியதோடு, 1 லட்சம் பணியாளர்களையும் வேலையிலிருந்து நீக்கியுள்ளது ஜிஎம்.

நெருக்கடியைச் சமாளிக்க இந்நிறுவனத்துக்கு 13.4 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி உதவியை அளித்துள்ளது ஒபாமா அரசு. ஆனால் அப்படியும் நெருக்கடி தீரவில்லையாம்.

எனவே உலகமெங்கும் உள்ள தங்களது மொத்த தொழிற்சாலைகளையும் மறுசீரமைக்க முடிவு செய்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்.

இதன் ஒரு பகுதியாக தனது 5 உற்பத்திக் கூடங்களை மூடப்போகும் ஜிஎம், 47 ஆயிரம் பணியாளர்களையும் நீக்குகிறது.

மேலும் அமெரிக்க நிதித்துறைக்கு ஒரு அறிக்கையையும் இந்நிறுவனம் அளித்துள்ளது. அதில் தங்கள் நிறுவனத்தின் நெருக்கடிகள் குறித்து விவரித்துள்ள ஜிஎம் நிறுவனம், ஒரேயடியாக நிறுவனத்தை மூடுவதைத் தவிர்க்க, 30 பில்லியன் டாலர் நிதி உதவி வேண்டும் என்றும், நிறுவனம் லாபத்தில் இயங்க இன்னும் எட்டு ஆண்டுகள் அதாவது 2017-ம் ஆண்டுவரை அவகாசம் தேவை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பணவீக்கம் குறையுது: விலையோ ஏறுது!-ஏன்… ஏன்?

‘என்னய்யா இது… பணவீக்கம் குற்துவிட்டதென்று தினமும் செய்திகளாகப் போட்டுத் தாக்குகிறீர்கள்… ஆனால் விலைவாசி குறைந்தமாதிரி தெரியலையே…’ என்று கேள்விகள் குவிகின்றன. இதற்கு பதில் சொல்ல வேண்டிய மத்திய நிதி அமைச்சகம் அமைதி காக்கிறது.

இன்னொரு பக்கம் ரிசர்வ் வங்கி ஏராளமான நிதிச் சலுகைகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை ரூ.5 லட்சம் கோடிக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் அறிவித்துள்ளார். பெட்ரோல் டீஸல் விலை குறைக்கப்பட்டது, நேற்று ரயில் கட்டணங்கள் கூட குறைந்துவிட்டன. ஆனால் அன்றாட விலைவாசி உச்சாணிக் கொம்பிலேயே உட்கார்ந்து கொண்டுள்ளது.

சரி… இருக்கட்டும். எதற்கும் ‘பக்கத்து வீட்டைக்’ கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு வரலாம்!

சீனா… நமது அண்டை நாடு மட்டுமல்ல, ஆசியப் பிராந்தியத்தில் நம்மை ரொம்பவே முந்திச் சென்று கொண்டிருக்கும் வல்லரசும் கூட.

பொருளாதார அணுகுமுறையில் நமக்கும் அவர்களுக்கும் இப்போது பெரிய வித்தியாசமில்லை. ஆனால் எதையும் திருந்தச் செய்கிறார்கள். அதுதான் மிகப் பெரிய வித்தியாசம். தனியுடைமை, சந்தைப் பொருளாதாரம் அனுமதிக்கப்பட்டுவிட்டாலும், விலை நிலைப்படுத்துதல் என்ற முக்கிய கருவியை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளது சீனா. அதன் விளைவு சீனாவின் பணவீக்கம், நுகர்வோர் விலைக்குறியீட்டெண்படி 4.9 சதவீதமாக உள்ளது.

நடப்பு நிதியாண்டு துவக்கத்தில் 7.1 சதவீதமாக இருந்த பணவீக்கத்தை இந்த ஆண்டு 4.8 சதவீதமாக குறைப்போம் என சீன அரசு உறுதி கூறியது. அதற்கேற்ப இப்போது 4.9 சதவீதமாக்கியுள்ளது. இன்னும் 1 மாத காலத்தில் 4.8-க்குக் கொண்டு வந்துவிடுவோம் என்கிறார்கள். அதாவது தாங்கள் திட்டங்களில் சொன்ன புள்ளிவிவரத்துக்கு தோராயமாக ஒரு கணக்கு காட்டினால் போதும் என்று அவர்கள் நினைக்கவில்லை. புள்ளிவிவரமும், நடைமுறை நிஜமும் ஒத்துப் போவதை ஒவ்வொரு காலகட்டத்திலும உறுதி செய்கிறார்கள். சந்தையை நிலைப்படுத்துவதில் முழுமையான அக்கறை காட்டுகிறார்கள்.

அதன் விளைவு…

2007-ம் ஆண்டைவிட, 2008-09 ஆண்டில் உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்த அளவு உயர்ந்துள்ளன, கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 2007-ல் 14 சதவீத வேகத்தில் உயர்ந்த உணவுப் பொருள்களின் விலைகள், இப்போது 10 சதவீதமாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் நான்கு சதவீதம் குறையும் என்கிறார்கள்.

உற்பத்தித் துறையிலும் நிறைவான போக்கு நிலவுகிறது. உணவுப் பொருள்களின் தேவையைவிட கூடுதலான உற்பத்தியை எட்டியுள்ளது சீனாவின் விவசாயத் துறை. இங்கு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவது உற்பத்திச் செலவால்தான்.

இந்த செலவை நுகர்வோர் தலையில்தான் உற்பத்தியாளர்கள் கட்டுவார்கள் என்பதைப் புரிந்து கொண்ட அரசு, எக்காரணம் கொண்டும் அந்தத் தவறு மட்டும் நடக்கக் கூடாது என்பதில் உறுதி காட்டுகிறது. அப்படி நடந்தால் அது மீண்டும் பணவீக்கத்துக்கே வழிவகுக்கும்.

இதற்காக உற்பத்தி செலவுக் குறைப்புக்கான மாற்று வழிகளை பரிந்துரைக்கத் துவங்கியுள்ளது சீனா. உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் வராமல் பார்த்துக் கொள்ளவும் அரசு உறுதியளித்துள்ளது. இதன் விளைவு, இறைச்சி, சமையல் எண்ணெய் மற்றும் குறிப்பிட்ட உணவு தானியங்களின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது சீனாவில்.

இந்த கோடைக்குள் மேலும் 30 சதவீத விலைக் குறைப்புக்கு உறுதியளித்துள்ளது சீனா. அதற்கேற்ப, தற்போதுள்ளதைவிட இருமடங்கு விவசாய உற்பத்தி வரும் கோடையில் சாத்தியமாகும் என அந்நாட்டு விவசாயத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விலைகள் எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க சீனா என்னதான் செய்கிறது?

குறிப்பிட்ட இடைவெளிகளில் விலைக் கட்டுப்பாட்டு முறைகளை மாற்றிக் கொண்டே உள்ளது. இப்போது சீனாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘கார்ப்பரேட் காஸ்ட்’ – நிறுவனச் செலவு அதிகரிப்பை மட்டும் வெற்றிகரமாகச் சமாளித்துவிட்டால், இந்த பொருளாதார மந்தத்திலிருந்தும் சீனா தப்பித்துவிடும். என்ன செய்யப் போகிறார்கள் சீனர்கள் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது, குறிப்பாக அமெரிக்கா.

பொருள்களின் விலைகள் குறையக் குறைய, உற்பத்தியாளர் கடன்களுக்கான வட்டிகள் குறைக்கப்படுகின்றன. அதிகரிக்கும் உற்பத்தி செலவை ஈடுகட்ட இது ஒரு சிறந்த வழி. மக்களுக்கு இதை விளக்க வேண்டிய அவசியம்கூட இல்லை அரசுக்கு. மிகச் சிறந்த பணவியல் கொள்கை வகுப்பாளர்கள் இருந்தால் மட்டுமே இந்தியா போன்ற நாடுகளில் இது சாத்தியமாகும்.

பணவீக்கம் ஏன் குறைகிறது… எப்போது அதிகரிக்கும்? ஏன் விலைகள் மட்டும் குறையவில்லை? போன்ற கேள்விகளுக்கு ஜோதிட திலகங்கள் மாதிரி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அரைகுறை பொருளாதார அறிஞர்களை நம்பிக் கொண்டிருந்தால், இந்தியப் பொருளாதாரம் இப்படி முரண்பாடுகளின் மூட்டையாகவே காட்சி தரும்.

7.2 மில்லியன் மக்கள் வேலையிழப்பார்கள்!-ஐஎல்ஓ

மணிலா: இந்த ஆண்டு மட்டும் வேலையிழக்கப் போகும் ஆசியர்களின் எண்ணிக்கை 72 லட்சமாக இருக்கும் என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) எச்சரித்துள்ளது. ஜெனீவாவில் இயங்கும் இந்த ஐநா துணை அமைப்பு மேலும் பல திடுக்கிடும் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஆசிய பிராந்தியத்துக்கான வேலைவாய்ப்புகள் குறித்து ஐஎல்ஓ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

2009ம் ஆண்டு ஆசியா முழுக்க வேலையின்றி தவிக்கும் நபர்களின் எண்ணிக்கை 9.2 கோடியாக உயரும்.

மேற்கத்திய நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக வாட்டி வதைத்து வரும் பொருளாதார நெருக்கடி இப்போது இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளையும் வேகமாக வீழ்த்தி வருகிறது. இதன் விளைவாக இந்த 2009ம் ஆண்டு மட்டுமே ஆசிய நாடுகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதவாக 7.2 மில்லியன் அதாவது 72 லட்சம் பேர் வேலையிழப்பார்கள் என ஐஎல்ஓ எதிர்பார்க்கிறது.

இது குறைந்தபட்ச மதிப்பீடுதான் அதிகபட்சமாக 90 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என தனது அறிக்கையில் ஐஎல்ஓ குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் 5.1 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் தோவைப்படுமாம். இதில் இந்தியாவுக்கு மட்டுமே 22.3 மில்லியன் புதிய வேலைகள் தேவை என்கிறது ஐஎல்ஓ.

 ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் ரூ.30 ஆயிரம் கடன்!

டெல்லி: கடன் வாங்குவதில் புதுப்புது சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கும் நாடு இந்தியா என்பது தெரியும். என்றாலும் உண்மையில் இந்தியாவின் கடன் எவ்வளவு என்பது குறித்த விவரம் தெரியுமா?

ரூ. 34 லட்சத்து 6 ஆயிரத்து 322 லட்சம் கோடிகள். உலக வங்கி, ஐஎம்எப், ஆசிய வளர்ச்சி வங்கி என ஒரு இடத்தையும் விட்டுவைக்கவில்லை.

இந்தக் கடன் தொகையை இந்திய மக்கள் தொகையால் வகுத்தால் ஒரு நபருக்கு ரூ.30 ஆயிரம் கடன் மிஞ்சுகிறது. இந்திய மக்களின் ஒரு ஆண்டுக்கான தனிநபர் வருவாய் ரூ.38 ஆயிரம் மட்டும்தான். ஆனால் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள பொதுக்கடன் ரூ.30000. இந்த கணக்குப் படி பார்த்தால் வெறும் ரூ.8000-தான் மிஞ்சுகிறது ஒவ்வொரு இந்தியனுக்கும் மிஞ்சுகிறது.

இந்தியா கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்1பி விசா: யுஎஸ் சட்டம் என்ன தான் சொல்கிறது?

வாஷிங்டன்: ஒபாமா அரசிடம் நிதி உதவி (பெயில் அவுட்) பெறும் நிறுவனங்கள் இனி எச் 1 பி விசாவில் வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என நிர்பந்திக்கப்படுவதாக சில தினங்களாக பரபரத்துக் கொண்டிருக்கின்றன மீடியாக்கள் (நாம் உள்பட).

இதனால் அமெரிக்க வேலை குறித்த கனவுகளோடு காத்திருப்பவர்களுக்கு பலவித குழப்பங்கள் தோன்றியுள்ளன. இனி இந்த நிறுவனங்கள் எச் 1 பி விசாவில் வெளிநாட்டு ஊழியர்களை சேர்க்கவே முடியாதா?.

அமெரிக்க மீட்பு மற்றும் மறுமுதலீட்டு சட்டத்தின் படி (இதான் ஒபாமாவின் பெயில் அவுட் சட்டத்துக்கு பேர்) எச்1பி விசா, கிரீன் கார்டுகள் குறித்த அமெரிக்க அரசின் நிலை என்ன?

இது குறித்து அமெரிக்காவின் முன்னணி இமிக்ரேசன் வழக்கறிஞரான ராஜிவ் எஸ் கண்ணா அளித்துள்ள விளக்கம் அமெரிக்க கனவுகளுடன் காத்திருப்போரின் கவலைகளை போக்குவதாக அமைந்துள்ளது. அவர் தந்துள்ள விளக்கத்தின்படி எச்1பி விஷயத்தில் இந்த சட்டத்தில் 4 நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன. அதன் விவரம்:

நிபந்தனை 1: அமெரிக்க அரசிடம் நிதிச் சலுகை பெரும் நிறுவனமானது சில நிபந்தனைகளின் அடிப்படையில் எச் 1 பி விசாவில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தலாம். அதே நேரத்தில் இப்போது பணியில் உள்ள எச் 1 பி விசா பணியாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. இவர்களின் க்ரீன் கார்டுக்கோ அல்லது அதற்காக அவர்கள் அனுப்பியுள்ள விண்ணப்பத்துக்கோ எந்த பாதிப்பும் வரக்கூடாது.

நிபந்தனை 2: இந்த எச்1 பி விசா பணியாளர்களை நம்பியுள்ள நிறுவனங்களுக்கு, அந்த பணியாளர்களின் தேவை எப்போதும் உள்ளதாகவே அர்த்தம். இத்தகைய நிறுவனங்கள் எச்1 பி விசா பணியாளர்களை நம்பியிருப்பவை என வகைப்படுத்தப்படும்.

நிபந்தனை 3: நிதிச் சலுகை பெறும் நிறுவனங்கள் இனி கூடுதலாக பின்பற்ற வேண்டிய நிபந்தனை:

தற்போது பணியில் உள்ள ஒரு அமெரிக்கப் பணியாளரை நீக்கும்போது, அந்த இடத்தில் எச் 1பி விசா பணியாளரை அமர்த்தக்கூடாது. மீண்டும் ஒரு அமெரிக்கரை மட்டுமே அந்த இடத்துக்கு அமர்த்த வேண்டும். அப்படி ஒரு அமெரிக்கப் பணியாளர் வரும்வரை பொறுத்திருக்கலாம்.

நிபந்தனை 4: விதிவிலக்காக சில நேரங்களில் வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டி வரலாம். அப்படி நியமிக்கப்படும் எச்1பி விசா பணியாளர் உயர் பட்டம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு 60 ஆயிரம் டாலருக்கு மேல் சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும். பொதுவாக இந்த மாதிரி சிறப்பு பணியாளர்களுக்கு, அமெரிக்காவின் புதிய எச் 1பி விசா நிபந்தனைகள் பொருந்தாது.

இவ்வாறு அந்த சட்டத்தில் உள்ள உள் பிரிவுகளை முழுமையாக ஆராய்ந்து விளக்கம் தந்துள்ளார் ராஜிவ்.

 சுபிக்ஷாவை சூறையாடிய ஊழியர்கள்!!

மும்பை: சம்பளம் தரக்கூட பணமில்லை என நிர்வாகம் கைவிரித்து விட்டதால் ஆத்திரப்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சுபிக்ஷா சில்லறை விற்பனை நிறுவனத்தின் 600 கிளைகளிலிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் 1,600க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கும் சுபிக்ஷா நிறுவனத்துக்கு கடன் தர வங்கிகள் மறுத்துவிட்டதால் பெரும் நிதிச் சிக்கலுக்கு உள்ளாகிவிட்டதாகவும், இதனால் கடந்த 2 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் தரக் கூட பணமின்றி பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதாகவும் சுபிக்ஷா நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியம் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.

இந் நிறுவனத்தில் உள்ள 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் எதிர்காலம் பற்றி உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சம்பளமின்றித் தவிக்கும் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர், தாங்கள் பணியாற்றிய கிளைகளைச் சூறையாடத் தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதுவரை 600 கிளைகளில் இந்த சூறையாடல் நடந்துள்ளதாகவும், இருக்கிற சொத்துக்களை சேதமடையாமல் காக்க, பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுபிக்ஷா தரப்பில் கூறப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், சுபிக்ஷா குடோன்கள் பலவற்றை சூறையாடியவர்களே, அவற்றைப் பாதுகாக்க பணியில் அமர்த்தப்பட்டு, சம்பளம் தரப்படாததால் வெறுத்துப் போனவர்கள்தானாம்.

‘பணியாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள், காவலுக்கு இருந்தவர்களே சுபிக்ஷாவின் பல கிளைகளைச் சூறையாடியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. விசாரித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகளும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

சுபிக்ஷா பெரிய நிறுவனம். இப்போது நிதிச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. வங்கிகள் கைவிரித்துவிட்ட இந்த சூழ்நிலையில் கைகொடுக்க முதலீட்டாளர்களை வரவேற்கிறோம்’ என்று கூறியுள்ளார் சுபிக்ஷா நிறுவனர்.

சம்பளத்தில் ‘கைவைக்கும்’ இன்போசிஸ்!

பெங்களூர்: புதிதாக ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்திவிட்ட இன்போசிஸ் நிறுவனம் தற்போது ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக மனிதவள துறை இயக்குனர் மோகன்தாஸ் பை தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உச்சக்கட்ட பாதிப்பை சந்தித்துள்ளன. ஆட்குறைப்பு தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாகிவிட்டது.

இந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்போசிஸ் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

மோகன்தாஸ் பை கூறுகையில்,

ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதி நிறுவனத்தின் லாபத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது லாபம் குறைந்து வருவதை அடுத்து சம்பளமும் குறைக்கப்படும்.

இந்த ஆண்டு யாரும் சம்பள உயர்வை எதிர்பார்க்க முடியாது. கடந்தாண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சுமார் 20,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தாண்டு புதியவர்கள் யாரையும் வேலைக்கு எடுக்கும் எண்ணம் இல்லை.

நாங்கள் பொறுப்பா?:

சத்யம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சிலர் எங்களை நாடி வருகின்றனர் என ஏற்கனவே எங்கள் தலைமை செயல் அதிகாரி கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் வந்தால், தனியாக தனியாக அவர்களது சூழ்நிலை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வோம் என்றார் மோகன்தாஸ் பை.

உலகிந் டாப் 20 நிறுவனங்களில் இன்போசிஸ்:

இதற்கிடையே ஹய் குரூப் மற்றும் சீப் எக்சிக்யூட்டிவ் பத்திரிகையும் இணைந்து நடத்திய சர்வேயில் சிறந்த தலைவர்களை உருவாக்கும் உலகின் டாப் 20 நிறுவனங்களில் இன்போசிசும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்கள் பொருளாதர நெருக்கடியை சமாளிக்க கூடிய திறமையும், பொருளாதார சீரமைப்புக்கு பின் வேகமாக வளரக் கூடியவை என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இவ்வரிசையில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய நிறுவனமான இன்போசிஸூக்கு 14வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களை 3 எம், புராக்டர் அண்ட் கேம்பிள் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்கள் பிடித்துள்ளன.

ஒபாமாவின் பேக்கேஜ்: பல ‘ஐட்டங்களுக்கு’ வெட்டு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் நிதியுதவி மசோதாவில் இடம் பெற்றுள்ள பல ஷரத்துக்களுக்கான நிதியுதவியைக் குறைக்கவும், சிலவற்றுக்கு முழுமையாக நிதியுதவியை வழங்காமல் இருக்கவும் செனட் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இந்த மசோதா இன்றைக்குள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

நலிவடைந்து வரும் பொருளாதாரத்தை நிறுத்தவும், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு புத்துயிர் அளிக்கவும் 40 லட்சம் கோடி நிதியை ஒதுக்க ஒபாமா முடிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக மசோதா ஒன்றும் தயாராகியுள்ளது. இந்த மசோதாவுக்கு செனட் கமிட்டி ஒப்புதல் அளித்து விட்டது. அடுத்து செனட் சபை இதை நிறைவேற்ற வேண்டும்.

ஆனால் இவ்வளவு பெரிய தொகையை நிதியுதவியாக கொடுத்தால், நாடு பெரும் பாதிப்பை சந்திக்கும் என குடியரசுக் கட்சி செனட்டர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். மேலும், ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் சிலரும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

இதையடுத்து மாற்றுக் கருத்துடன் கூடிய இரு தரப்பினரும் இணைந்து இந்த மசோதா குறித்து ஆய்ந்து சில பரிந்துரைகளை அளித்துள்ளனர். அதன்படி மசோதாவில் அறிவிக்கப்பட்டுள்ள நிதியின் அளவு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று செனட் சபையில் நிதியுதவி மசோதா நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

செனட்டர்களின் பரிந்துரைப்படி பாதியளவு மற்றும் முழுமையாக நிதியளவு குறைக்கப்பட்டுள்ள ஷரத்துகள்..

– அரசுக் கட்டடங்களுக்கு மின்வசதியை ஏற்படுத்துவதற்கான 7 பில்லியன் டாலரிலிருந்து 3.5 பில்லியனாக குறைப்பு.

– ஸ்மித்சோனியன் நிறுவனத்திற்கான நிதி 150 மில்லியன் டாலரிலிருந்து 75 மில்லியன் டாலராக குறைப்பு.

– சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சியின் சூப்பர் நிதி 800 மில்லியன் டாலரிலிருந்து 200 மில்லியன் டாலராக குறைப்பு.

– தேசிய ஓசியானிக் மற்றும் அட்மாஸ்பரிக் நிர்வாகத்திற்கு 427 மில்லியன் டாலரிலிருந்து 100 மில்லியன் டாலராக குறைப்பு.

– சட்டத்துறை வயர்லஸ் செலவுகளுக்காக 200 மில்லியன் டாலரிலிருந்து 100 மில்லியனாக குறைப்பு.

– ஹைபிரிட் ரக அரசு வாகனங்களுக்கான செலவு 600 மில்லியனிலிருந்து 300 மில்லியனாக குறைப்பு.

– எப்.பி.ஐ.க்கான கட்டுமானச் செலவுகள் 400 மில்லியனிலிருந்து 100 மில்லியன் டாலராக குறைப்பு.

முழுமையாக நிதி வெட்டுக்குள்ளாகியுள்ளவை …

– வரலாற்று ஆவண பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட 55 மில்லியன் டாலர் ரத்து.

– கடலோரப் பாதுகாப்புப் படையினருக்கான ஐஸ் வெட்டும் கருவிகள், ஐஸ் பிரேக்கர்கள் வாங்க ஒதுக்கப்பட்ட 122 மில்லியன் டாலர்.

– விவசாய சேவை நவீனமயமாக்கலுக்காக ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டாலர்.

– கூட்டுறவு ஆய்வு, கல்வி மற்றும் விரிவாக சேவைக்காக ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் டாலர்.

– நீர் மேலாண்மைக்கான 65 மில்லியன் டாலர் நிதி.

– தொலை தூரக் கல்விக்கான 100 மில்லியன் டாலர் நிதி.

– மீன் வளர்ப்புக்கான 50 மில்லியன் டாலர்.

– பிராட்பேண்ட் சேவைக்கான 2 மில்லியன் டாலர்.

– தேசிய தரம் மற்றும் தொழில்நுட்பக் கழகத்திற்கான 100 மில்லியன் டாலர்.

– சிறைகளுக்கு ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் டாலர்.

– மாகாண மற்றும் உள்ளூர் சட்டத்துறைக்கான 10 மில்லியன் டாலர்.

– நாசாவுக்கு ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் டாலர்.

– ஏரோநாட்டிக்ஸ் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் டாலர்.

– ஆய்வுப் பணிகளுக்கான 50 மில்லியன் டாலர்.

– தேசிய அறிவியல் கழகத்திற்கான 200 மில்லியன் டாலர்.

– அறிவியல் பிரிவுக்கான 100 மில்லியன் டாலர்.

– உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கான 50 மில்லியன் டாலர்.

– போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்திற்கான 200 மில்லியன் டாலர்.

– பள்ளிக் கட்டுமானத்திற்கான 16 பில்லியன் டாலர்.

– உயர் கல்வி நிறுவனங்களின் கட்டுமானத்திற்கான 3.5 பில்லியன் டாலர்.

இப்படி நிதி ரத்து செய்யப்பட்டவற்றின் பட்டியல் நீளுகிறது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: