இந்திரா நூயிக்கு வர்த்தக அமைச்சர் பதவி கிடைக்குமா?

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், பெப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியுமான இந்திரா நூயிக்கு, அமெரிக்க வர்த்தக அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சென்னையில் படித்தவர் இந்திரா நூயி. பெப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருக்கிறார். உலகின் சக்தி வாய்ந்த 3வது பெண்மணியாக முன்பு போர்ப்ஸ் இதழால் தேர்வு செய்யப்பட்டவர்.

பெப்சி நிறுவனத்தின் வருவாயை கிடுகிடுவென அதிகரிக்க உதவியவர். சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர்.

இந்த நிலையில் ஓபாமா அமைச்சரவையில், இந்திராவுக்கு வர்த்தக அமைச்சர் பதவி தரப்படும் என பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து பல்வேறு இந்திய அமைப்புகள், இந்திராவின் பெயரை பரிந்துரைத்து, ஓபாமாவுக்கு கடிதம் எழுதியுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், அதிபர் பதவியை ஏற்கவுள்ள பாரக் ஓபாமா அளித்த விருந்து நிகழ்ச்சியில் இந்திரா நூயியும் கலந்து கொண்டார். மிக மிகச் சிலரே அழைக்கப்பட்டிருந்த ஓபாமாவின் தனிப்பட்ட விருந்தாகும் இது. எனவே இந்திரா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திரா நூயிக்கு வர்த்தக அமைச்சர் பதவி கிடைக்கக் கூடும் என்று அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது

யுஎஸ்: சத்யம் என்ஜீனியர் கொலை-ஒருவர் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் பணியாற்றி வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன சாப்ட்வேர் என்ஜீனியர் அக்சய் விஷால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆர்கன்சாஸ் மாகாணம், லிட்டில் ராக் நகரில் உள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் விஷால். ஆந்திராவைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் இவர் அங்கு சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த 14 மாதங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட 7வது இந்தியர் விஷால் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆர்கன்சாஸ் போலீஸார், ஒரு நபரைக் கைது செய்துள்ளனர். அவரது பெயர், விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை.

இருப்பினும் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 வயது, அவரது பெயர் பிரன்டன் ஜான்சன் என உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

வழிப்பறியால்தான் இந்த கொலை நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உடலைக் கொண்டு வர முயற்சி ..

இதற்கிடையே, விஷாலின் உடலை அமெரிக்காவிலிருந்து கொண்டு வர ஆந்திர அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஆந்திர மாநில, வெளிநாடு வாழ் தெலுங்கருக்கான விவகார துறை அமைச்சர் முகமதுஅலி ஷபீர் தூதரக நடவடிக்கைகள் முடிந்து விஷாலின் உடலை விரைவில் இங்கு எடுத்துவருவோம்.

அமெரிக்காவில் தெலுங்கர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளோம். அவர்கள் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

ராமலிங்க ராஜூவை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி

ஐதராபாத் : மோசடி குற்றச்சாட்டில் சிக்கி நீதிமன்ற காவலில் இருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ, அவர் சகோதரர் ராம ராஜூ மற்றும் அதன் சி.எஃப்.ஓ. வட்லமணி ஸ்ரீநிவாஸ் ஆகியோரை, நாளை முதல் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஐதராபாத் கோர்ட் அனுமதி அளித்திருக்கிறது. ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்ட சி.ஐ.டி.போலீசாருக்கு, ஐதராபாத் ஆறாவது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்டிரேட், நான்கு நாட்களுக்கு அனுமதி அளித்திருக்கிறார். கடந்த 9 ம் தேதி இரவு கைது செய்யப்பட்ட ராமலிங்க ராஜூ, 10 ம் தேதியில் இருந்து நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். 9 ம் தேதி இரவு மட்டும் ராமலிங்க ராஜூவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், சுமார் ரூ.7,800 கோடி அளவுக்கு நிதி மோசடி நடந்ததை ஒப்புக்கொண்ட அவரை விசாரிக்க மேலும் நாட்கள் தேவைப்படுகிறது என்று கோர்ட்டில் முறையிட்டனர். ராமலிங்க ராஜூவின் பங்களா மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய சி.ஐ.டி.போலீசார், இது சம்பந்தமாக இதுவரை 44 ஆவணங்களை கைப்பற்றியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் ஆன பின்னும் பிளாக்பெர்ரியை விட மனமில்லாத ஒபாமா

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இருப்பவர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக பல கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். அதில் ஒன்று மொபைல் போன் மற்றும் இ – மெயில் உபயோகிக்காதது. ஆனால் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்னம் பதவியேற்காமல் இருக்கும் பாரக் ஒபாமா, தான் அதிபராக பதவியேற்ற பின்னும் தொடர்ந்து மொபைலை பயன்படுத்துவேன்; இ – மெயில் அனுப்புவேன் என்கிறார். அமெரிக்காவின் புதிய அதிபராக, வரும் 20 ம் தேதி பாரக் ஓபாமா பதவியேற்கிறார். அது குறித்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் என்னுடைய பிளாக்பெர்ரி மொபைல் போனை வெள்ளை மாளிகைக்கு வெளியே வைத்து விட்டு உள்ளே போகப்போவதில்லை என்றார். அமெரிக்க சட்டதிட்டங்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நான் அதை உபயோகிக்காமல் இருக்கப்போவதில்லை. இப்போது இருப்பதைப்போலவே இனிமேலும் நான் என்னுடைய பிளாக்பெர்ரியை பயன்படுத்துவேன். இனிமேலும் யார் வேண்டுமானா<லும் என்றுடன் மொபைலில் பேசலாம். எனக்கு மெயில் கொடுக்கலாம் என்றார். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் யார் வேண்டுமானாலும் எனக்கு மெயில் அனுப்பலாம் என்றார். நான் தேர்தலில் வெற்றி பெற எத்தனையோ பேர் பாடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னுடன் எப்போது வேண்டுமானாலும் மொபைலில் தொடர்பு கொண்டு பேசலாம். அல்லது மெயில் கொடுக்கலாம். என் சொந்த நகரான சிகாகோவில் இருப்பவர்கள் எனக்கு மெயில் செய்து, நான் செய்யும் தவறை சுட்டிக்காட்டலாம், அல்லது ஓபாமா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கலாம் என்றார் ஒபாமா. இப்போதெல்லாம் வயர்லெஸ் இ – மெயில் மற்றும் போன் தான் யாருடனும் எளிதில் தொடர்பு கொள்ள உதவும் கருவிகளாக இருக்கிறது. நான் மக்களை விட்டு தனிமைப்பட்டு இருக்க விரும்பவில்லை. எனவே எனது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தனி அதிகாரிகளிடம் பிளாக்பெர்ரி வைத்துக்கொள்ள அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டிருக் கிறேன். அவர்களை இதற்கு ஒத்துக்கொள்ள வைக்க வேண்டிய முயற்சிகளை செய்து கொண்டிருக் கிறேன் என்றார் ஒபாமா. ஆனாலும் பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் தனி அதிகாரிகளோ, அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு மற்றும் அதிபரின் தனிப்பட்ட உரிமை காரணங்களுக்காக, வெள்ளை மாளிகைக்குள் பிளாக்பெர்ரியை கொண்டு வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.ஒபாமாவிடம் இரு பிளாக்பெர்ரிகள் இருப்பதாக அவரை பேட்டி கண்ட டி.வி.நிருபர் கூறுகிறார்.

சத்யத்திற்கு உடனடியாக தேவைப்படுவது புது சி.இ.ஓ., புது சி.எஃப்.ஓ., மற்றும் பணம்

ஐதராபாத் : மோசடி குற்றச்சாட்டில் சிக்கி, சீரழிந்து போயிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு உடனடியாக தேவைப்படுவது புது சி.இ.ஓ., புது சி.எஃப் ஓ., மற்றும் பணம் என்று, புதிய போர்டில் உறுப்பினராக இருக்கும் கிரண் கார்னிக் தெரிவித்திருக்கிறார். இன்று நடக்கும் போர்டு மீட்டிங்கில் அதைப்பற்றித்தான் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். சத்யத்திற்கு இப்போது முக்கியமாக தேவைப்படுவதே பணம் தான். அதற்கு மட்டும் ஏற்பாடு செய்து விட்டால் அது அங்குள்ள பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அதிக பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர். சத்யத்திற்கு வங்கியில் கடன் வாங்கலாமா என்பது குறித்தும் போர்டு மீட்டிங்கில் விவாதிக்கப்படும் என்று சொன்ன அவர், சத்யத்திற்கு ‘ பெயில் அவுட் ‘ எதுவும் தேவையில்லை என்றார். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் இப்போதும் ஒரு வர்த்தக நிறுவனமாகத்தான் இருந்து வருகிறது என்றார். வங்கிகளில் கடன் பெறுவதிலும் கொஞ்சம் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் அவைகளை போக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார் கார்னிக். அந்த கம்பெனி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தாலும் அதனை வழிநடத்த ஒரு டீம் தேவை. ஆனால் அது இப்போது இல்லாமல் இருக்கிறது. எனவே உடனடியாக ஒரு சி.இ.ஓ., மற்றும் ஒரு சி.எஃப்.ஓ., தேவைப்படுகிறார்கள் என்றார் அவர். எற்கனவே நியமித்த 3 போர்டு மெம்பர்களுடன், தருண்தாஸ், மனோகரன் மற்றும் பால்கிருஷ்ன மைனிக் ஆகிய மூன்று பேரையும் போர்டு உறுப்பினராக மத்திய அரசு நியமித்திருக்கிறது. இப்போது அந்த ஆறு போர்டு உறுப்பினர்களும் கூடி பேசி, சத்யத்தின் சுமார் 50,000 ஊழியர்களின் எதிர்காலம், அதன் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் நிலை குறித்து விவாதிக்கிறார்கள்.

இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1,01,445 கோடி வருமான இழப்பு ஏற்படும்

மும்பை : இந்தியாவில் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை விற்பனை செய்யும் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த நிதி ஆண்டில் ரூ.1,01,445 கோடி வருமான இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலு<ம் இவ்வளவு வருமான இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூலை மாதத்தில் பேரலுக்கு 147 டாலர் வரை உயர்ந்திருந்தபோது, இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவைகளுக்கு ரூ.2,45,305 கோடி வரை வருமான இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து, பேரலுக்கு 35 டாரரை ஒட்டியே விலை இருப்பதால், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பு ரூ.1,01,445 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். மூன்று இந்திய எண்ணெய் நிறுவனங்களும் இப்போது, ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையின் போது ரூ.9.86 ம், டீசல் விற்பனையின்போது ரூ. 3.48 ம், லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையின் போது ரூ.12.16 ம், சமையல் எரிவாயு விற்பனையின் போது ரூ.32.97ம் நஷ்டமடைகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் லாபம் கிடைப்பதால், பெட்ரோல், டீசல் மற்றும் நஷ்டம் ஏற்பட்டாலும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைக்கலாமா என்று மத்திய அரசு யோசித்து வருகிறது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 ம், 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.25 ம் குறைக்க மத்திய அரசு யோசித்து வருகிறது.

ஜெட் ஏர்வேஸின் மூன்றாவது காலாண்டு நஷ்டம் ரூ. 214 கோடி

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான கம்பெனியான ஜெட் ஏர்வேஸ், இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ. 214.18 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. இது இதற்கு முந்தைய வருடத்தின் மூன்றாவது காலாண்டில் ரூ.91.12 கோடி நஷ்டமாக இருந்தது. இது குறித்து மும்பை பங்கு சந்தையில் அவர்கள் கொடுத்திருக்கும் அறிக்கையில், கடந்த வருடத்தில் அவர்கள் பெற்ற வருமானம் ரூ.2,425.98 கோடி என்றும் அது இந்த வருடத்தில் அது ரூ.3,022. 83 கோடியாக அதிகரித்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். அது 24.60 சதவீத உயர்வு என்றாலும், கடந்த ஒன்பது மாதங்களில் அது அடைந்திருக்கும் நிகர நஷ்டத்திற்கு காரணம் விமான எரிபொருளுக்கான விலை உயர்ந்திருந்ததாலும், நிர்வாக செலவு அதிகரித்திருந்ததாலும், எதிர்பார்த்ததை விட குறைவான பயணிகளே வந்திருந்ததும்தான் என்கிறார் ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயல். டிசம்பர் 31 <உடன் முடிந்த ஒன்பது மாதங்களில் ஜெட் ஏர்வெஸ் அடைந்த நிகர நஷ்டம் ரூ.455.33 கோடி. இதுவே, றஇதற்கு முந்தைய வருடத்தில் இதே காலத்தில் ரூ.31.88 கோடியாகத்தான் இருந்தது.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: