சத்யம் மெகா மோசடி முழு விவரம் எப்போது தெரியும்?

புதுடில்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 8,000 கோடி ரூபாய் மோசடி குறித்து விசாரிக்கும் ‘பயங்கர மோசடி விசாரணைக்குழு’ முடிவும், அறிக்கையும் அடுத்த மூன்று மாதங்களில் வெளிவரும். குறிப்பாக, சத்யத்தின் ஆடிட்டர் நிறுவனமான ‘பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் மீதும் இவ்விசாரணை இருக்கும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத், கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் குப்தா மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். மத்திய கம்பெனி விவகாரத்துறை விசாரணை அதிகாரிகள் ஏற்கனவே சத்யம் கம்ப்யூட் டர்சையும், அதன் துணை நிறுவனங்கள் எட்டையும் விசாரித்து, சில ஆவணங்களை கைப்பற்றியிருக்கின்றனர். சத்யத்தில் வேலைபார்க்கும் 53 ஆயிரம் ஊழியர் மற்றும் கம்பெனி சந்திக்கும் நிதி நெருக்கடி ஆகியவை பற்றியும் அதில் இடைஞ்சல் இல்லாத அணுகுமுறை ஏற்படுத்துவது பற்றியும் பிரதமர் மன்மோகன் சிங் விசாரித்ததாகத் தெரிகிறது. அதே சமயம், சத்யம் நிர்வாகத்தை தற்போது மேற்கொண்டிருக்கும் தீபக் பரேக் மற்றும் மூவர் குழு தெரிவிக்கும் யோசனைகள் அடிப்படையில், அரசு உதவி அமையும் என்று அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

சோதனை: இதனிடையே, ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்த சத்யம் ஆடிட்டிங் கம்பெனியான, பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்சில் சி.பி.சிஐ.டி., சோதனை நடந்தது. அதில் ஆடிட்டர்கள் உரிய ஒத்துழைப்பு அளித்து தகவல்களைத் தந்தனர் என்று கூறப்பட்டது. ஆந்திர நிதியமைச்சர் ரோசய்யா, ‘சத்யம் தொடர்புள்ள மாயதாஸ் என்ற கட்டுமான நிறுவனக் கம்பெனிக்கு ஆந்திர அரசு அளித்த கான்ட்ராக்ட்களில் ஏதும் முறைகேடு இல்லை என்றார். இது தொடர்பாக அரசிடம் உள்ள ஆவணங்களை தகவல் கேட்டுப் பெறும் உரிமைச் சட்டப்படி யார் வேண்டுமானாலும் பெறலாம் என்றும் தெரிவித்தார். தவிரவும், இந்திய சார்ட்டர்டு அக்கவுன்ட்ஸ் அமைப்பு சார்பில் துணைத் தலைவர் குழு அமைக் கப்பட்டு, அக்குழு சத்யம் கம்பெனி தணிக்கை நடைமுறைகளை முழுவதும் பரிசீலிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராமலிங்க ராஜூவால் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டு, பின் மூவர் குழு நிர்வாகம் வந்த பின் பதவி பறிக்கப்பட்ட ராம் மைனாபதியிடம் விசாரணை முழுவீச்சில் நடந்தது என்று கூறப்படுகிறது. மேலும், சத்யம் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் காப்பற்றப்பட வேண்டும் என்று கோரிய பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் ஆனது. இந்த மனுவைத் தாக்கல் செய்த சர்மா என்ற வக்கீல், அவசரமாக இம்மனுவை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் ஏற்கவில்லை.

இன்போசிஸ் வரவேற்பு: மும்பை: மெகா மோசடி நடந்த சத்யம் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளை இன்போசிஸ் வரவேற்றிருக்கிறது. அதேசமயம், தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி தருவது பற்றி கவலை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இன்போசிஸ் தலைமை நிதி நிர்வாகி வி.பாலகிருஷ்ணன் கூறியதாவது: சத்யம் போன்ற மெகா மோசடி விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது சரியானதே. ஆனால், சத்யத்துடன் மோசடி முடிந்த கதை அல்ல; மோசடிகள் தொடரும். அதேசமயம், ஒழுங்குமுறை அமைப்புகள் இவைகளைக் கண்டறிந்து எடுக்கும் நடவடிக்கைகள் மற்ற மோசடிகளைத் தடுக்க வேண்டும். சத்யம் விஷயத்தில் அதில் பணியாற்றும் 53 ஆயிரம் பணியாளர்களைக் காக்கும் அரசு முயற்சி பாராட்டத்தக்கது. இந்த சம்பவத்தினால், இனி நம்பிக்கையான, பாதுகாப்பான ஐ.டி., நிறுவனங்களை மக்கள் நாடுவர். இனி எல்லாக் கம்பெனிகளும், தங்களைப்பற்றி அதிக தகவல்களைச் சொல்ல வேண்டிய காலம் வந்திருக்கிறது. இவ்வாறு வி.பாலகிருஷ்ணன் கூறினார்

டி.சி.எஸ்., நிறுவனத்திற்கு அதிர்ஷ்டம்

வாஷிங்டன்: சத்யம் கம்ப்யூட்டர் சிற்கு தடை விதிக்கப் பட்டதால், அந்தப் பணிகளை டாடா கன்சல்டன்சி நிறுவனத்திற்கு (டி.சி.எஸ்.,) உலக வங்கி வழங்கியிருக்கிறது. சில பணி நடைமுறைகள் மீறல் குற்றச்சாட்டு அடிப்படையில் உலக வங்கி சத்யம் கம்ப்யூட் டர்ஸ் நிறுவனத்தை தடை செய்து அறிவித்தது. அதேசமயம் உலக வங்கி தடையில் மற்றொரு சாப்ட்வேர் நிறுவனம் ஆன ‘விப்ரோ’ வேறு காரணத்திற்காக இடம் பெற்றது. தற்போது உலக வங்கியானது, ‘சத்யத்திற்குத் தரப்பட்ட பணிகள் டி.சி.எஸ்., நிறுவனத்திற்குத் தரப்படும்’ என்று அறிவித்தது. இதற்கிடையே தங்கள் மீதான உலக வங்கி புகாரை ‘விப்ரோ’ தலைவர் அசீம் பிரேம்ஜீ ஏற்கவில்லை. தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘சட்டரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் ‘விப்ரோ’ சரியாக நடந்து கொண்டிருக்கிறது. நாம் மேற்கொண்ட நடவடிக்கை சரியானதே’ என்று எழுதியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை குறைய நாள் நெருங்கியது

புதுடில்லி: அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை நாளை குறைக்கலாம் என பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இதுகுறித்து, பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: அமைச்சரவை குழு கூட்டம் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 25 ரூபாயும் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.70ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.3.70ம் லாபம் பெறுகின்றன. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.31.70ம் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு ரூ.11.69ம் நஷ்டம் ஏற்படுகிறது. சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு ஏற்படும் இழப்பீடை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட பின், சில்லறை எரிபொருள் விலையை நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கான சுங்கவரியை லிட்டருக்கு குறைந்தபட்சமாக ஒரு ரூபாய் அதிகரிப்பதன் மூலம் அதிக வருவாய் பெற அரசு தீர்மானித்துள்ளது. சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு ஏற்படும் நஷ்டத்தை சரி கட்ட, இந்த நிதியாண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கூடுதலாக எண்ணெய் கடன் பத்திரம் வழங்குவது குறித்தும் நாளைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப் படும். உலகளவிலான கச்சா எண்ணெய் விலை குறைந்ததையடுத்து, டிசம்பர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை முறையே லிட்டருக்கு 5 ரூபாய் மற்றும் 2 ரூபாயும் குறைக்கப்பட்டது. இவ்வாறு, பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.

விப்ரோ டெக்னாலஜிஸ்


‘முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை’
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
பெங்களூர்
அசிம் பிரேம்ஜி தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எவ்வித ஒப்பந்தங்களும் வழங்கப்படமாட்டாது என்ற உலக வங்கியின் தடை அறிவிப்பால் இந்நிறுவனத்தின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விளக்கம்
ஆனால் விப்ரோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிரிஷ் பரன்ஜாப்பி, “கடந்த 2000&ஆம் ஆண்டில் நிறுவனம் அமெரிக்காவில் பங்கு வெளியீட்டை மேற்கொண்டபோது, விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் உலக வங்கியின் பணியாளர்களுக்கு பங்குகள் வழங்கப்பட்டன. அப்பணியாளர்களுக்கு பங்கின் வெளியீட்டு மதிப்பில் 1,750 பங்குகளை (72,000 டாலர்) ‘மெர்ச்சண்ட்’ வங்கியாளர்கள் அளித்தனர். உலக வங்கியின் பணியாளர்கள் தவிர, நிறுவனத்தின் பல வாடிக்கையாளர்களுக்கும் அமெரிக்காவின் எஸ்.இ.சி. அமைப்பின் நெறிமுறைகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டன. எனவே, இதில் எவ்வித முறைகேடும் செய்யப்படவில்லை. கொள்கைகளும், நிலைப்பாடும் உறுதியாக உள்ளதால், நிறுவனம் சரியான பாதையில்தான் சென்று கொண்டுள்ளது. எனவே பங்கு முதலீட்டாளர்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள தேவையில்லை” என அறிவித்தார்.
10 லட்சம் டாலர்
மேலும் உலக வங்கிக்கு, விப்ரோ நிறுவனம் அளித்துள்ள சேவைகளின் மொத்த ஒப்பந்த மதிப்பு வெறும் 10 லட்சம் டாலர் மட்டும்தான். எனவே, உலக வங்கியின் தடை விதிப்பால் நிறுவனத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார். இதனையடுத்து, விப்ரோ நிறுவனப் பங்கின் விலை செவ்வாய்க்கிழமை அன்று, வர்த்தகம் முடியும்போது 6.05 சதவீதம் அதிகரித்து ரூ.241.10&க்கு கைமாறியது.

சென்ற 2008 காலண்டர் ஆண்டில்
தனியார் பங்கு முதலீடு 23.28 சதவீதம் வீழ்ச்சி
சந்திரா ரங்கநாதன்
சென்னை
இந்தியாவில், சென்ற 2008&ஆம் ஆண்டில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 23.28 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த 2002&ஆம் ஆண்டுக்கு பிறகு தனியார் பங்கு முதலீட்டில் இந்த அளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
399 ஒப்பந்தங்கள்
சென்ற ஆண்டில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், மொத்தம் 399 ஒப்பந்தங்கள் வாயிலாக 1,074 கோடி டாலர் (சுமார் ரூ.45,110 கோடி) முதலீடு மேற்கொண்டுள்ளன. இது கடந்த 2007&ஆம் ஆண்டில் 1,400 கோடி டாலராக (சுமார் ரூ.59,000 கோடி) இருந்தது. அவ்வாண்டில் மொத்தம் 439 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆக, 2008&ஆம் ஆண்டில், ஒப்பந்தங்களின் அளவு அடிப்படையிலும், மதிப்பு அடிப்படையிலும் இவ்வகை முதலீடுகள் கணிசமாக குறைந்து போயுள்ளன. தனியார் பங்கு முதலீடு மற்றும் துணிகர முதலீடு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வென்ச்சர் இன்டலிஜென்ஸ் நிறுவனம் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
சுணக்க நிலை
இது குறித்து இதன் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அருண் நடராஜன் கூறும்போது, Òசென்ற 2008&ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், தனியார் பங்கு முதலீட்டு நடவடிக்கைகளில் சுணக்க நிலை காணப்பட்டது. இரண்டாவது அரையாண்டில் இந்த நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக அக்டோபர்&டிசம்பர் மாத காலம் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சோதனையான காலமாக இருந்தது. பங்குச் சந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பால் நிறுவனங்கள் அவற்றின் மதிப்பை குறைத்துக் கொள்ள தயாராக இல்லைÓ என்று தெரிவித்தார். வேதா கார்ப்பரேட் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சி.வெங்கட் சுப்பிரமணியம் இந்த கருத்தை உறுதி செய்தார்.
2008&ஆம் ஆண்டில், ஐடியா செல்லூலார் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆதித்ய பிர்லா டெலிகாம்&ன் 20 சதவீத பங்குகளை தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான பிராவிடன்ஸ் ஈக்விட்டி பார்ட்னர்ஸ் 64 கோடி டாலருக்கு (சுமார் ரூ.2,700 கோடி) வாங்கியது. இது, அவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய தனியார் பங்கு முதலீட்டு ஒப்பந்தமாகும்.
பொதுவாக நம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையே, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் அதிகம் விரும்பும் துறையாக இருந்து வருகிறது. பொருளாதாரத்தில் சுணக்க நிலை, பங்கு வர்த்தகத்தில் வீழ்ச்சி போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கிடையிலும், சென்ற 2008&ஆம் ஆண்டில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை துறைகளில்தான், ஒப்பந்தங்களின் அளவு அடிப்படையில், தனியார் பங்கு முதலீடுகள் அதிகரித்துள்ளன என்பது வியப்பளிக்கும் செய்தியாகும்.
160 கோடி டாலர்
இத்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில், சென்ற 12 மாதங்களில், மொத்தம் 107 முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக மொத்தம் 160 கோடி டாலர் (சுமார் ரூ.6,800 கோடி) முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் மதிப்பின் அடிப்படையில் எரிசக்தி துறைதான் தனியார் பங்கு முதலீட்டை அதிகம் பெற்றுள்ளது. இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மொத்தம் 170 கோடி டாலர் (சுமார் ரூ.7,200 கோடி) தனியார் பங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன.
மும்பை நகரம்
சென்ற ஆண்டில் நம் நாட்டில் சீக்கோயா கேப்பிட்டல் இந்தியா நிறுவனம்தான் தனியார் பங்கு முதலீடுகளை மேற்கொள்வதில் விறுவிறுப்புடன் செயலாற்றியுள்ளது. இந்த நிறுவனம் மட்டும் மேற்கொண்ட முதலீட்டு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 19 ஆகும். இதற்கு அடுத்தபடியாக சிட்டிகுரூப் நிறுவனம் இப்பிரிவில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதிகளவில் தனியார் பங்கு முதலீட்டை ஈர்த்த நகரங்களுள், மும்பை அதிகபட்சமாக 105 ஒப்பந்தங்கள் வாயிலாக 320 கோடி டாலரை (சுமார் ரூ.13,500 கோடி) ஈர்த்து முன்னிலை வகிக்கிறது.
பொதுவாக அக்டோபர் & டிசம்பர் மாத காலத்தில்தான் அதிக அளவில் தனியார் பங்கு முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் சென்ற ஆண்டு இக்காலத்தில், முதலீடுகள் 76 சதவீத அளவிற்கு சரிவடைந்துள்ளன. இக்காலாண்டில், 60 ஒப்பந்தங்கள் வாயிலாக, 110 கோடி டாலர் (சுமார் ரூ.4,840 கோடி) முதலீடுதான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கடந்த 2007&ஆம் ஆண்டின் இதே காலத்தில் அளவின் அடிப்படையில் 139 ஒப்பந்தங்களாகவும், மதிப்பின் அடிப்படையில் 460 கோடி டாலராகவும் (சுமார் ரூ.20,240 கோடி) இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரிலையன்ஸ் டிஜிட்டல்
ரேவா கார் நிறுவனத்துடன் கூட்டு
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
பெங்களூர்
ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் ரேவா எலக்ட்ரிக் கார் கம்பெனியுடன் (ஆர்.இ. சி.சி) கூட்டு மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து ரேவா நிறுவனத்தின் மின்சார கார்கள் ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் சில்லரை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன.
துணை நிறுவனம்
ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் டிஜிட்டல், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள் சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் நாடு முழுவதுமாக முக்கிய நகரங்களில் சில்லரை வர்த்தக மையங்களைக் கொண்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது. இதனையடுத்து மின்சார கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை உயர்ந்து வருகிறது. நம் நாட்டில் மின்சார கார்கள் தயாரிப்பில் களம் இறங்கிய முதல் நிறுவனமான ரேவா எலக்ட்ரிக் கார் கம்பெனியின் விற்பனை தற்போத நல்ல அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்நிலையில் இந்நிறுவனம் அதன் கார்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனத்துடன் கூட்டு மேற்கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் விநியோக ஒருங்கிணைப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ரேவா அந்நிறுவனத்துடன் கூட்டு கொண்டுள்ளது. இதனை மேற்கண்ட இரு நிறுவனங்களின் அதிகாரிகளும் உறுதி செய்தனர்.
ரேவா நிறுவனம் லண்டனில் இணையதளம் வாயிலான விநியோகத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் அங்கு இதுவரை 1,000&த்திற்கும் மேற்பட்ட மின்சார கார்களை விற்பனை செய்துள்ளது. நம் நாட்டில் கொல்கத்தா நகரத்திலும் இதே போன்ற விநியோக முறையில் கார்களை விற்பனை செய்து வருகிறது.
புதுடெல்லி
ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம், முதல் கட்டமாக, ரேவா கார்களை புதுடெல்லி மற்றும் ஐதராபாத்தில் உள்ள அதன் விற்பனை நிலையங்களில் சந்தைப்படுத்த உள்ளது. நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இதர முக்கிய நகரங்களுக்கு இது விரிவுபடுத்தப்படும். ஐதராபாத் நகரத்தில் ரேவா கார்களின் விலை ரூ.3.68& ரூ.4.47 லட்சம் என்ற அளவில் உள்ளது.

சென்ற 2008&ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்
தொழில்துறை உற்பத்தி 2.4 சதவீதம் வளர்ச்சி
ஆன்டோ ஆன்டனி
புதுடெல்லி
சென்ற 2008&ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 2.4 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 0.3 சதவீதம் சரிவடைந்து காணப்பட்டது.
உலக பொருளாதாரம்
அமெரிக்க வீட்டு வசதிக் கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் பங்கு வர்த்தகமும் ஆட்டம் கண்டுள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையின் தாக்கம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதன் பாதிப்புகள் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளன.
இதனால் நம் நாட்டின் பல்வேறு துறைகளிலும் உற்பத்தி மந்தமடைந்துள்ளது. பல நிறுவனங்கள் விரிவாக்க திட்டங்களை ஒத்தி வைத்துள்ளன. பங்கு வர்த்தகத்தில் நிலவி வரும் கடும் ஏற்றத் தாழ்வுகளால் புதிய பங்கு வெளியீடுகளும் கணிசமாக குறைந்து போயுள்ளன. பல நிறுவனங்கள், பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கிடைத்தும், அதனை மேற்கொள்ளாமல் கைவிட்டுள்ளன.
உற்பத்தி குறைப்பு
கார்கள் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. பல நிறுவனங்கள் ஆள்குறைப்பும் செய்து வருகின்றன. புதிய பணியாளர்களை நியமிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளன.
இந்தியாவின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட மதிப்பீட்டின்படி, சென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 1.6 சதவீதம் குறைந்திருக்கும் என்று தெரிகிறது. மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், பல்வேறு பொருள்களுக்கான தேவைப்பாடு குறைந்துள்ளது. இதனால் நம் நாட்டின் ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி சார்ந்த துறைகளிலும் வேலை இழப்பு அதிகரித்து வருகிறது.
பின்னடைவு
இது போன்ற பல்வேறு இடர்பாடுகளால் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது. அக்டோபர் மாத்தில் உற்பத்தி 0.3 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி கண்டது. இந்நிலையில் பல அமைப்புகள் நவம்பர் மாத தொழில்துறை உற்பத்தி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டன. ஊடகங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி நவம்பர் மாத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 1.6 சதவீதம் சரிவடையும் என மதிப்பிடப்பட்டது. ராய்ட்டர்ஸ் நிறுவனம் இந்த சரிவு ஒரு சதவீத அளவிற்கு இருக்கும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் மதிப்பீடுகளுக்கு முரணாக, திங்கள்கிழமையன்று இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 2.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியானது. ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் வகையில், அந்த மாதத்தில் உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இந்திய பொருளாதாரம் சீர்பெற்று வருவதன் முதல் கட்ட அறிகுறியாக இதனை கருதலாம் என பொருளியல் வல்லுனர் தெரிவித்தனர்.
விறுவிறுப்பு
சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளதற்கு, அம்மாதத்தின் இடைப்பகுதியிலிருந்து தொழில்துறை நடவடிக்கைகளில் ஏற்பட்ட விறுவிறுப்பே காரணம் என தெரிய வந்துள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணை கணக்கிடுவதில் உற்பத்தி துறை சுமார் 80 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.
கடந்த 2007&ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இத்துறைகளின் உற்பத்தி சென்ற நவம்பர் மாதத்தில் 2.4 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் இத்துறையின் வளர்ச்சி 1.2 சதவீதம் சரிவடைந்து காணப்பட்டது. உற்பத்தி துறையின் 17 துணைப்பிரிவுகளில், 10 பிரிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.
கலால் வரி
பொருள்களின் உற்பத்தியின் மீது விதிக்கப்படும் வரி கலால் வரி எனப்படுகிறது. 2007 நவம்பருடன் ஒப்பிடும்போது, சென்ற நவம்பர் மாதத்தில் கலால் வரி வசூல் 15 சதவீதம் சரிவடைந்துள்ளது. சென்ற ஆண்டில், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் கலால் வரி வசூல் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற நவம்பர் மாதத்தில் மின் உற்பத்தி 3.1 சதவீதம் உயர்ந்துள்ளது. சுரங்க நடவடிக்கைகள் 0.5 சதவீதம் சரிவடைந்துள்ளன. அக்டோபர் மாதத்தில் மின் உற்பத்தி மற்றும் சுரங்கம் ஆகிய துறைகள் முறையே 4.4 மற்றும் 2.8 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: