சத்யம் என்ஜிஓ அமைப்பிலிருந்து கலாம் விலகல்!

Kalam

ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் வணிக நோக்கமற்ற அமைப்புகளில் ஒன்றான ‘நெருக்கடி நிர்வாக ஆராய்ச்சி நிலைய’த்தின் (Emergency Management Research Institute) நிர்வாகக் குழுவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.

சத்யம் முன்னாள் சேர்மன் ராமலிக ராஜு உருவாக்கிய லாபநோக்கற்ற ஒரு அமைப்பு இது.

ஐசிஐசிஐ முன்னாள் தலைமை நிர்வாகி கே.வி.காமத், சிஐஐ நிறுவனர் தாருண், ஹார்வர்டு வணிகப் பள்ளியின் கிருஷ்ணா பாலேப்பு, சத்யம் நிறுவன முன்னாள் தலைமை நிர்வாகியும் ராமலிங்க ராஜுவின் தம்பியுமான ராமராஜு மற்றும் நாஸ்காமின் முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் ஆகியோரும் இந்த அமைப்பின் நிர்வாகக் குழுவில் இருந்தனர். இதன் தலைவராக ராமலிங்க ராஜு இருந்தார்.

ராமலிங்க ராஜுவும் ராமராஜுவும் ஏற்கனவே இந்த நிர்வாகத்திலிருந்து விலகி சிறையில் உள்ள நிலையில், மற்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை அனுப்பியுள்ளனர். தற்போது கூடவிருக்கும் இயக்குநர் குழு கூட்டத்தில் இந்தக் கடிதங்கள் குறித்து பரிசீலிக்கப்படும்.

இந்த அமைப்பு 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நெருக்கடியான கால கட்டங்களில் உதவுவது இந்த அமைப்பின் நோக்கம். ஆந்திரா, குஜராத், கோவா, உத்தராஞ்சல் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு.

சாதனை படைக்கிறது ரிலையன்ஸ் பெட்ரோலியம்

ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம் தனது இரண்டு சுத்திகரிப்பு யூனிட்டுகளில் மட்டும் நாளொன்றுக்கு 1.24 மில்லியன் பேரல் எண்ணெய் எடுக்கும் திறனை பெற்றுள்ளது. உலகின் வேறெந்த நிறுவனமும் ஒரு நாளில் இவ்வளவு எண்ணெய் எடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தின் ஜாம்நகரில் அமைத்திருக்கும் இரண்டாவது எண்ணெய் கிணற்றில் இன்றுமுதல் எண்ணெய் சுத்திகரிப்பு பணியை தொடங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் செய்தி ஒன்றில் “இந்த யூனிட்டுகளில் முழுமையாக பணிகள் முடிவடைய இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். அதன் பிறகு முழுவீச்சில் பணிகள் நடைபெறும். இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் மற்றும் எரிபொருள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இன்று ஆரம்பித்துள்ள பணிகள் 8 முதல் 10 நாட்களுக்கு பின்னர் சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல், கெரசின் போன்ற பொருட்களாக பிரிப்பக்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான பணியை குரூட் டிஸ்டிலேசன் யூனிட் தற்போது ஆரம்பித்துள்ளது. ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனம் 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

 சத்யம் மோசடியில் செபி நடவடிக்கை என்ன?: பிரதமருடன் ஆலோசனை

புதுடில்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மெகா மோசடி விஷயத்தில் ‘செபி’ மேற்கொள்ள வேண்டிய விசாரணைகள் தாமதமாகும். சத்யம் மோசடி குறித்தும், அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் ‘செபி’ தலைவர் பாவே நேற்று பிரதமரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கடந்த சனிக்கிழமை முதல் ‘செபி’ தலைவர் பாவே டில்லியில் இருக்கிறார். ஏற்கனவே கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் குப்தாவுடனும் மற்ற அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தினார். ஏற்கனவே இந்த 8,000 கோடி ரூபாய் மோசடி ஆந்திர மாநில சி.பி.சி.ஐ.டி., வழக்கு பதிவு செய்து ராமலிங்க ராஜூவையும் அவர் சகோதரரையும் சிறையில் அடைத்திருக்கிறது. அது ஒருபுறம் இருக்க சத்யம் உயர் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ரிஜிஸ்டிரார் ஆப் கம்பெனீஸ் அமைப்பும், ‘செபி’ அமைப்பின் கீழ் செயல்படும் பயங்கர குற்றங்களை விசாரிக்கும் அமைப்பும் தனி விசாரணை செய்து வருகின்றன. இந்நிலையில், அரசு நியமித்த மூவர் குழு சத்யம் நிர்வாகத்தை நடத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. விரைவில் டைரக்டர்கள் குழுவைக் கூட்டி புத்துயிர் அளிக்க முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மன்மோகனை ‘செபி’ தலைவர் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ராமலிங்க ராஜூவை விசாரிக்க வேண்டும் என்று கோரி ‘செபி’ சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே ராமலிங்க ராஜூவை ஜாமீனில் அனுமதிக்கக் கோரிய மனுவை மாஜிஸ்திரேட் வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள் வதாகக் கூறியதால், ‘செபி’ முயற்சி தற்போது பலன்தரவில்லை. அதே சமயம் ஐதராபாத்தில் தொடர்ந்து, ‘செபி’ அதிகாரிகள் தங்கி இருக்கின்றனர்.

குளறுபடி: பொங்கல் நேரத்தில் ராஜூ சஞ்சல்குடா சிறையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ராமலிங்க ராஜூவை அவரது வீட்டில் இருந்த போது கைது செய்ததாக ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி கூறியிருந்தார். ஆனால், நேற்று உள்துறை அமைச்சர் ஜானா ரெட்டியோ, ‘டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்த ராஜூ கைது செய்யப்பட்டார்’ என்று கூறி குளறுபடி ஏற்படுத்தியிருக்கிறார். பொதுவாக ராஜூ தானாக சரண் அடைந்ததாகவும் பேசப்படுகிறது. தோண்டத் தோண்ட சிக்கல்…: சத்யம் விவகாரத்தில் மத்திய அரசு நிர்வாகத்திற்கு மூவர் குழு நியமித்தது மட்டும் இன்றி, ஓரளவு நிதி உதவியும் தரும் என்று தெரிகிறது. வர்த்தக அமைச்சர் கமல்நாத் நேற்று, ‘சத்யம் விஷயத்தில் அரசு உதவியும் இருக்கும்’ என்றார். அதேசமயம், தோண்டத் தோண்ட ஊழல் என்ற கதையாக, சத்யம் சார்பு கம்பெனியான மாயாதாஸ் நிறுவனத்தில் ஸ்டேட் பாங்க் முதலீடு 500 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. கட்டுமானத்தில் தொடர்புடைய இந்த நிறுவனத்துடன் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு ஆந்திர அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதுகுறித்த விசாரணைகள் நடக்கின்றன. அதேசமயம், சத்யம் நிறுவனத்தை நிர்வகிக்க பரேக் உட்பட மூவர் குழு நியமிக்கப்பட்டதால், சத்யம் பங்குகள் நேற்று 50 ரூபாய் வரை உயர்ந்தது. ஆனாலும், ஆந்திராவை தலைமையகமாகக் கொண்ட கம்பெனிகள் பங்குகள் வீழ்ந்தன.தவிரவும், சத்யம் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தரப்பட்ட கிரெடிட் கார்டு வரம்பை வங்கிகள் இரண்டு லட்ச ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகக் குறைத்தது அவர்களுக்கு இடியாக மாறிவிட்டது. மேலும், அடுத்த மாத சம்பளம் எந்த அளவு குறைக்கப்பட்டு தரப்படும் என்று தெரியாமல் குழப்பத் தில் உள்ளனர்

‘விப்ரோ’ மீது உலக வங்கி தடை: புதிய பரபரப்பு
 
புதுடில்லி: இந்தியாவில், ‘விப்ரோ’ உட்பட ஐந்து நிறுவனங்கள் மற்றும் ஒரு தனி நபரை, தன் வர்த்தகத்திற்கு சரிப்படாதவர்கள் என்று, உலக வங்கி தடை செய்திருக்கிறது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் மோசடி பெரிதாகப்படும் போது, இத்தகவல் வெளியாகியிருக்கிறது. பொதுவாக, தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக உலக வங்கி தடை செய்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர் எண்ணிக்கை நூறாகும் என்ற பட்டியலும் வெளியாகியிருக்கிறது. உலக வங்கியின் நடைமுறைகளை மீறி அதன் வர்த்தகம் பெற வழிகளை மீறியது அல்லது அதன் பணியாளரைச் சரிக்கட்டி செயல்பட முயல்வது ஆகியவை குற்றங்கள். அதற்கு தண்டனையாக உலக வங்கி சேவை மற்றும் உதவிகள் முடக்கப்படும். அந்த விதிகளின் படி ஏற்கனவே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தடை செய்யப்பட்டிருக்கிறது. தற்போது தடை செய்யப்பட்டதில் மற்றொரு ஐ.டி., நிறுவனமான ‘விப்ரோ’ அப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. விப்ரோக்கு அடுத்த நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ‘மெகா சாப்ட்’ என்ற சாப்ட்வேர் நிறுவனமும் இத்தடைப் பட்டியலில் அடங்கும். மற்ற நிறுவனங்கள் சிறியவை. இதில், மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டதால், காலவரையற்ற தடை ‘மெகா சாப்ட்’ மீது விதிக்கப்பட்டிருக்கிறது. ‘விப்ரோ டெக்னாலஜிஸ்’ விஷயத்தில், ‘வங்கிப் பணியாளர்களுக்கு முறைகேடான சலுகை யை அளித்ததால்’ என்று குற்றம் சாட்டப்பட்டு, நான்காண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஊழல் மற்ற முறைகேடுகள் வரவில்லை. இந்த தடை குறித்து உலகவங்கியிடம், ‘இது முரண்பட்ட தகவல், நாங்கள் ஏதும் விதிமீறல் செய்யவில்லை’ என்ற விளக்கம் விப்ரோ சார்பில் தரப்பட்டிருக்கிது. ஆனாலும், உலக வங்கி தன் தடையை அறிவித்திருக்கிறது. இத்தடை உத்தரவு குறித்து விப்ரோ அதிகாரிகள் கூறுகையில், ‘எதிர்காலத்தில் உலக வங்கி வர்த்தகம் வராது என்பதால், எங்களுக்கு பாதிப்பு பெரிய அளவில் ஏற்படாது’ என்றனர். அதே சமயத்தில் உலக வங்கித் தடை தகவலை ‘செபி’க்கும் ‘விப்ரோ டெக்னாலஜிஸ்’ நிறுவனம் அனுப்பி விளக்கத்தை தந்திருக்கிறது. இம்மாதிரி உலக வங்கி விதித்த தடைகளில் அதிகம் சிக்கிய நிறுவனங்கள் பிரிட்டன் மற்றும் இந்தோனேசியாவில் உள்ளன. அதே போல அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் கணிசமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லாரி ஸ்டிரைக்கால் வெல்லம் விலை வீழ்ச்சி

சேலம்: லாரி ஸ்டிரைக் காரணமாக, வெல்லம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சீசன் நேரத்தில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால், உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், தேனி, நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில், அதிகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் பயிரிடப்படும் கரும்பில் கணிசமான பகுதி, வெல்ல உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தாரமங்கலம், மேச்சேரி, ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட வெல்ல உற்பத்தி கூடங்கள் செயல்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் வெல்லம், சேலம் செவ்வாய் பேட்டை, ப.வேலூர் பிலிக்கல்பாளையம், ஈரோடு மாவட்டம் சித்தோடு, கவுந்தப்பாடி சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக, பொங்கல் பண்டிகை காலத்தில், வெல்லம் விலை உயரும். அந்த சீசனை எதிர் பார்த்து, வெல்லம் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் காத்திருப்பர். நிறைய ஸ்டாக் வைத்திருப்பர். இந்தாண்டு லாரி ஸ்டிரைக் காரணமாக, நிலைமை தலைகீழாக மாறி விட்டது. ஒரு வாரத்துக்கும் மேலாக ஸ்டிரைக் தொடர்வதால், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், நாட்டின் பிற மாநிலங்களுக்கும், வெல்லம் விற்பனைக்கு அனுப்பப்படுவது, முற்றிலும் தடைபட்டுள்ளது. அதிகம் உற்பத்தியான நிலையில், விற்பனையின்றி வெல்லம் தேங்கியுள்ளதால், விலை சரிய துவங்கியுள்ளது. சேலம் வெல்ல மார்க் கெட்டில், உருண்டை வெல்லம் கிலோவுக்கு மூன்று ரூபாயும், மூட்டைக்கு 50 முதல் 70 ரூபாய் வரையும் விலை குறைந்துள்ளது. நேற்று, சேலம் வெல்ல மார்க்கெட்டில், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்ல மூட்டை 370 முதல் 420 ரூபாய்க்கும், கிலோ 12 முதல் 13 ரூபாய் வரை விற்றது. நாட்டுச் சர்க்கரை மூட்டை 420 முதல் 500 ரூபாய் வரை விற்றது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: