சத்யம் நிறுவனத்தை காப்பாற்ற மத்திய அரசு அதிரடி

புதுடில்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்க, மூன்று பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை மத்திய அரசு நியமித்தது. இதில், எச்.டி.எப்.சி., தலைவர் தீபக் பரேக், ‘நாஸ்காம்’ முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் மற்றும் ‘செபி’ முன்னாள் உறுப்பினர் அச்சுதன் இடம் பெறுகின்றனர். இதனால், உடனடியாக சத்யம் போர்டு குழு கூட்டப் பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கப்படும். இந்திய கம்பெனிகளில் மிக மோசமான மெகா மோசடி நடந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் ராமலிங்க ராஜூவும், அவர் தம்பி ராமராஜூவும் தற்போது சிறையில் உள்ளனர். ஆனால், 8,000 கோடி ரூபாய் மோசடி குறித்தும் அதன் அபாயத்தால் ஏற்பட்ட விளைவுகளைத் தாண்டி, மொத்தம் 53 ஆயிரம் பேர் பணிபுரியும் சத்யம் நிறுவனத்தை நிர்வகிக்க, குழு ஒன்றை மத்திய அரசு நியமித்திருக்கிறது. இதை அறிவித்த மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் குப்தா, ‘இந்தக் குழு கம்பெனி, பங்குதாரர்கள் மற்றும் கம் பெனி சம்பந்தப் பட் டவர்கள் நலனைக் காக்கும். புதிய தலைவரையும் இக்குழு தேர்வு செய்யும். ஏற்கனவே, ‘செபி’ மற்றும் கம்பெனிகள் துறை மேற் கொண்ட சோதனைகளில் சில ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. சத்யத்தின் துணை நிறுவனங்கள் எட்டு உள்ளன. அவைகளும் சோதனைக்கு உட் படுத்தப் பட்டிருக்கின்றன’ என்றார். புதிய குழுவில் இடம் பெற்றுள்ள பரேக் கூறுகையில், ‘சத்யம் கம்பெனியின் ஊழியர்கள், கம்பெனியுடன் வர்த் தகத்தில் தொடர்புடையவர்களுக்கு நம்பிக்கை தந்து குழப்பத்தைத் தவிர்ப்பதே எங்கள் முதல் வேலை’ என்றார். புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று பேரில் அச்சுதன், கம்பெனி சட்டங்களில் நன்கு பயிற்சி பெற்றவர். ஐ.டி., துறையில் முக்கியமானவர் கார்னிக். வங்கித் துறையில் சிறப்பானவர் பரேக் என்பதால், சத்யம் நிறுவனத்தை தற்போது நிர்வகிப்பவர்கள் சற்று நம்பிக் கையுடன் காணப்படுகின்றனர். இக்குழு ஏதாவது விடிவு காலத்தைக் காட்டும் என்று கருதுகின்றனர். சோதனை: இதனிடையே, நேற்று சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைமை நிறுவனமான ஐதராபாத்தில் சி.ஐ.டி., பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ராமலிங்க ராஜூ வீட்டிலும் சோதனை நடந்தது. இனிமேல், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள சத்யம் கிளை அலுவலகங்களிலும் சோதனை நடக்கும் என்று சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர். மேலும், நேற்று முன்தினம் சத்யம் நிறுவனத்தின் தணிக்கைகளைக் கவனித்த, ‘பிரைஸ் வாட்டர்ஸ் ஹவுஸ் கூப்பர்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோபாலகிருஷ்ணனை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தனர். முதல்வர் கருத்து: ‘ராமலிங்க ராஜூவை மாநில போலீசார் கைது செய்த போதும், இந்த மோசடி குறித்து மற்ற ஏஜென்சிகளும் விசாரணை செய்வதில் எந்த ஆட்சேபமும் இல்லை’ என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது: எங்களுக்கு 53 ஆயிரம் தொழிலாளர் நலன் மற்றும் சத்யம் பங்கு முதலீட்டாளர் நலன் முக்கியமானது. என்ன இருந்தாலும், மத்திய அரசு தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும். பெரிய அளவில் ஐ.டி., நிபுணர்கள் சம்பந்தப்பட்டது என்பதையும் பிரதமரிடம் கூறியுள் ளேன். அதைத் தவிர, இந்த நிறுவனத்தில் 50 சதவீத தெலுங்கர் சம்பந்தப்பட்டிருக் கின்றனர் என்பதால், அவர்கள் நலனையும் காக்க வேண் டும். ராமலிங்க ராஜூவை அன்று, அமெரிக்க அதிபர் கிளின்டன் பக்கத் தில் மேடையில் அமரச் செய்து, தொழிலதிபர் ரத்தன் டாடாவை பார்வையாளர் வரிசையில் அமரச் செய்தது சந்திரபாபு ஆட்சி. இன்று அவர் குறை கூறுகிறார். ராஜூ விஷயத்தில் தாமத நடவடிக்கை கிடையாது. மீடியாக்கள் குறை கூறுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறு முதல்வர் ராஜசேகர ரெட்டி கூறினார். .

ராமலிங்க ராஜூ அவசரமாக கைதானது ஏன் ?

ஐதராபாத் : ஐதராபாத்தில் உள்ள சஞ்சல குடா சிறையில் மற்ற விசாரணைக் கைதிகளுடன் அடைக்கப்பட்டிருக்கும் ராமலிங்க ராஜூக்கு நேற்று ரத்த அழுத்தத்திற்கும், ஹெபடைட்டீஸ்-சிக்கும் ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கான மருத்துவ அறிக்கை வந்த பின், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்பது தெரியும். அதே சமயம், முதல் நாள் சிறை வாசத்தில் தரையில் கெட்டி விரிப்பானைக் கொண்டு, போர்வையுடன் இரவை கழித்தார். நேற்று ஞாயிறு என்பதால், சிறையில் மற்ற கைதிகளுக்கு தரப்படுவது போல சப்பாத்தி, புளிச்சோறு ஆகியவை தரப்படும் என்று கூறப்பட்டது. அதே சமயம் ராஜூவையும், அவர் தம்பியையும் ஆந்திர அரசு அவசரமாகக் கைது செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே, அமெரிக்க அரசு சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என்ற நிலையில் இங்கே கைது செய்தால், அவர் அமெரிக்கா கோர்ட்டுக்கு செல்வதைத் தாமதப்படுத்தலாம். இக்கருத்தை சில வக்கீல்கள் தெரிவித்தனர். அதேபோல, ‘செபி’ வழக்கு தொடர்ந்து, அதன்பின் கைது செய்யும் முன், கிரிமினல் குற்ற நடவடிக்கைகள் சட்டத்தில் மாநில அரசு கைது செய்திருக்கிறது என்றனர். மேலும், ஐதராபாத்தில் நடக்கவிருந்த மெகா திட்டங்கள் இந்த மோசடியில் முடங்கிப் போகும் என்பதால், அது ஆளும் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைமை நிதி அதிகாரி வத்லமணி ஸ்ரீநிவாஸ் சிறையில் அடைப்பு

ஐதராபாத் : சத்யம் கம்ப்யூட்டர்ஸின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ, அதன் முன்னாள் மேலாண் இயக்குநர் ராம ராஜூ ஆகியோரை தொடர்ந்து, அதன் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வந்த வத்லமணி ஸ்ரீநிவாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அவர்களது வக்கீல் பரத் குமார் தெரிவித்தார். ஸ்ரீநிவாஸ் இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுகிறார். அவரை ஜாமீனில் எடுக்க அவரது வக்கீல் இன்று ( திங்கட்கிழமை ) ஜாமீன் மனு தாக்கல் செய்கிறார். மேலும் அவரை போலீஸ் காவலில் எடுக்கவும் இன்று சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு செய்ய இருக்கிறார்கள். சத்யத்தின் மோசடி வெளிச்சத்திற்கு வந்த அடுத்த நாளே வத்லமணி ஸ்ரீநிவாஸ் ராஜினாமா செய்தாலும், அவரது ராஜினாமா இன்று வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சனி மாலை விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அவர், பின்னர் கைது செய்யப்பட்டதாக ஐ.ஜி ( சி.ஐ.டி.) கௌமுதி தெரிவித்தார். ராமலிங்க ராஜூ மீது தொடரப்பட்ட பிரிவுகளின் படியே இவர் மீதும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது

விப்ரோ, மெகாஷாப்ட் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்தது உலக வங்கி

புதுடில்லி : ஒப்பந்த அடிப்படையில் உலக வங்கிக்காக வேலை பார்த்து வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ஓப்பந்தத்தை டிசம்பர் 25ம் தேதி உலக வங்கி, 8 வருடங்களுக்கு ரத்து செய்திருந்தது. ஒப்பந்த விதிமுறையை மீறி, உலக வங்கி ஊழியர்களுக்கு ஆதாயங்களை செய்து கொடுத்ததாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மீது உலக வங்கி குற்றம் சாட்டி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. எங்கள் வேலை எதையும் நான்கு வருடங்களுக்கு செய்ய கூடாது என்று சத்யம் கம்ப்யூட்டர்ஸிடம் <உலக வங்கி தெரிவித்து இருந்தது. இப்போது அந்த வரிசையில் விப்ரோ மற்றும் மெகாஷாப்ட் நிறுவனத்தையும் உலக வங்கி சேர்த்திருக்கிறது. அந்த இரு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையும் உலக வங்கி நிறுத்தி வைத்திருக்கிறது. இது குறித்து இன்று உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், சத்யம் கம்ப்யூட்டஸை போலவே விப்ரோ மற்றும் மெகாஷாப்ட் நிறுவனங்களும் ஒப்பந்தத்தை மீறி எங்கள் ஊழியர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. எனவே விப்ரோ, நான்கு வருடங்களுக்கு, அதாவது 2011 வரை எங்கள் வேலைகள் எதையும் செய்ய வேண்டாம் என்று தடை விதித்திருக்கிறோம். இன்னொரு ஐ.டி.நிறுவனமான மெகாஷாப்ட்டுடனான ஒப்பந்தமும், 2007 இலிருந்து நான்கு வருடங்களுக்கு தடை செய்யப்படுகிறது என்று அது தெரிவித்திருக்கிறது. உலக வங்கியின் இந்த நடவடிக்கை குறித்து விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி கருத்து தெரிவிக்கையில், இதனானெல்லாம் எங்களது வர்த்தகம் பாதிக்கப்படாது என்றார். மெகாஷாப்ட்டும், இந்த நடவடிக்கையால் எங்களது வருமானம் ஏதும் பாதிக்காது என்று கருத்து தெரிவித்திருக்கிறது

ராமலிங்க ராஜூவின் ஜாமீன் மனு : ஜனவரி 16ம் தெதிக்கு தள்ளி வைப்பு

ஐதராபாத் : கைது செய்யப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முனனாள் சேர்மன் ராசலிங்க ராஜூ, மற்றும் ராம ராஜூ, வத்லமணி ஸ்ரீநிவாஸ் ஆகியோரது ஜாமீன் மனு ஜனவரி 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் மூன்று பேரும் இன்று 6 வது தலைமை பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது ஜாமீன் மனு 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இத்தகவலை அவர்களது வக்கீல் பரத்குமார் தெரிவித்தார். மேலும் ராமலிங்க ராஜூ மற்றும் இருவருக்காக வாதாட 25 வக்கீல்களை கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ராமலிங்க ராஜூ மற்றும் இருவரை ஜனவரி 23ம் தேதி வரை நீதிமன்ற காலவில் வைக்க <ஏற்கனவே உத்தரவிட்டதன் பேரில் அவர்கள் சஞ்சலகுடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்ளது ஜாமீன் மனு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று பேரும் நீதிமன்ற காவலில் இருப்பதால் அவர்களிடம் விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று செபி, நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. அதற்கு பதில் மனு தாக்கல் செய்ய ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று ராஜூவின் வக்கீல் கேட்டிருந்தார். எனவேதான் நீதிபதி, ஜாமீன் மனுவை 16ம் தேதிக்கு ஒத்திவைத்து விட்டார். ராமலிங்க ராஜூவும் அவரது சகோதரர் ராம ராஜூவும் கடந்த வெள்ளி அன்று சி.பி.- சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர். வத்லமணி ஸ்ரீநிவாஸ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். செபியில் இருந்து வந்த குழு, மத்திய கம்பெனி விவகாரத்துறையை சேர்ந்த தீவிர மோசடி விசாரணை அலுவல ( சீரியஸ் ஃபிராட் இன்வெஸ்டிகேஷன் ஆபீஸ் ) குழு ஆகியோர் ஐதராபாத்தில் முகாமிட்டு ராமலிங்க ராஜூவிடமும் மற்ற இருவரிடமும் விசாரணை செய்வதற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் செபியில் குழுவினர், இப்போதைய சி.இ.ஓ., ராம் மைனாம்பதியிடம் இன்று விசாரணை நடத்தினர். மேலும் சி.பி.- சி.ஐ.டி., போலீசார் ராமலிங்க ராஜூ மற்றும் ஸ்ரீநிவாஸ் வீடுகளில் சோதனை நடத்தியிருக்கின்றனர்

பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : 296 புள்ளிகள் சரிந்தன

மும்பை : அக்டோபரில் மைனஸ் 0.4 சதவீதமாக இருந்த இந்திய தொழில் உற்பத்தி விகிதம், நவம்பரில் 2.4 சதவீதமாக உயரந்திருக்கிறது என்ற தகவல் வெளிவந்திருந்தபோதும் இன்று பங்கு சந்தை வீழ்ச்சியை தான் சந்தித்தது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 296.42 புள்ளிகள் ( 3.15 சதவீதம் ) குறைந்து 9,110.05 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 99.90 புள்ளிகள் ( 3.48 சதவீதம் ) குறைந்து 2,773.10 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ ( – 10.65 சதவீதம் ) டாடா ஸ்டீல் ( – 6.95 சதவீதம் ) ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டரச்சர் ( – 6.64 சதவீதம் ) டி.சி.எஸ்.( – 5.70 சதவீதம் ) ரான்பாக்ஸி ( – 5.41 சதவீதம் ) சரிவை சந்தித்திருக்கின்றன. சன் பார்மா ( 2.20 சதவீதம் ) ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் ( 0.58 சதவீதம் ) கிராஸிம் இன்டஸ்டிரீஸ் ( 0.02 சதவீதம் ) விலை உயர்ந்திருந்தன.

சென்செக்ஸ் பெரும் வீழ்ச்சி – சத்யம் பங்குகளின் மதிப்பு உயர்வு

மும்பை: சத்யம் நிறுவனத்திற்கு புதிய இயக்குநர் குழு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் பங்குகளின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. இருப்பினும் சத்யம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்றும் சென்செக்ஸுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது.

ராமலிங்க ராஜுவின் மோசடியைத் தொடர்ந்து சத்யம் நிறுவத்தின் பங்கு மதிப்பு சீட்டுக் கட்டை கலைத்தது போல சடசடவென இறங்கி ரூ.6க்கு வந்தன.

இந்த நிலையில் நேற்று சத்யம் நிறுவனத்திற்கு மூன்று புதிய இயக்குநர்களை மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து சத்யம் பங்குகளின் மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் இன்று நல்ல உயர்வைக் கண்டுள்ளது.

இன்றைய பகல் நேர வர்த்தகத்தினபோது சத்யம் பங்குகளின் மதிப்பு 67 சதவீத உயர்வைக் கண்டன. பிற்பகல் நிலவரப்படி ஒரு பங்கின் மதிப்பு ரூ. 40 ஆக உயர்ந்துள்ளது

இயக்குநர்கள் குழுவை மத்திய அரசு அறிவித்ததே சத்யம் பங்குகளின் உயர்வுக்குக் காரணம் என பங்குச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் சத்யத்தின் பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் சத்யத்திற்கு உயர்வு காணப்பட்டது. நேற்றைய நிலைய விட இன்று சத்யம் பங்குகளுக்கு நல்ல உயர்வு இருந்தது. இன்றைய பகல் நேர நிலவரப்படி நிப்டியில் அதன் மதிப்பு ரூ. 28.50 ஆக இருந்தது. அது மேலும் உயர்ந்து ரூ. 39.90 ஆக உயர்ந்தது.

இதுகுறித்து சத்யம் நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சத்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது நல்ல வளர்ச்சியைக் காட்டுகிறது. சத்யம் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது

சென்செக்ஸ் வீழ்ச்சி …

சத்யம் பங்குகளுக்கு உயர்வு காணப்பட்டபோதிலும், சென்செக்ஸ் தொடர்ந்து வீழ்ச்சிமுகமாகவே உள்ளது.

சென்செக்ஸில் இன்று 382 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது. விப்ரோ மற்றும் மெகாசாப்ட் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் உலக வங்கி தடை விதித்ததால் இந்த வீழ்ச்சி.

இன்று மாலை 3 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 382.02 குறைந்து, 9,024.45 ஆக இருந்தது.

விப்ரோ பங்குகள் 9.7 சதவீதம் குறைந்தன. அதேபோல இன்போசிஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு 3.3 சதவீதம் குறைந்தது.

சத்யமா?.. பொய்யா?

 

இந்தியாவின் நான்காவது பெரிய சாப்ட்வேர் நிறுவனம். உலக அளவில் மிகவும் சிறப்பாக செயல்படும் 500 நிறுவனங்களின் பட்டியலில் உள்ள 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகப் பெற்ற நிறுவனம். இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் என பெரும்பாலான உலக நாடுகளல் கிளைகள். பல நாடுகளைச் சேர்ந்த 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள்… இத்தனை பெருமைகள் கொண்ட நிறுவனமாக இருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ், இன்று உலகமே அதிர்ச்சி அடையும் அளவுக்கு பல ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்டு தலைகுனிந்து நிற்கிறது.


இந்தியாவில் இதுவரை இந்த அளவுக்கு மிகப் பெரிய மோசடி எந்த நிறுவனத்திலும் நடந்ததில்லை எனக் கூறும் அளவுக்கு ரூ.7 ஆயிரம் கோடிக்கு மோசடி நடந்திருக்கிறது. சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு இந்த மோசடியை தன் வாயாலேயே ஒப்புக் கொண்டிருக்கிறார். செபி அமைப்புக்கு கடிதமும் எழுதியிருக்கிறார். இதனால் நிறுவனத்தின் ஊழியர்கள், பங்கு முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள், கடன் கொடுத்த வங்கிகள், இதே தொழிலில் இருக்கும் போட்டி நிறுவனங்கள் என அனைவருக்குமே அதிர்ச்சி. ரூ.544க்கு விற்ற ஒரு பங்கின் விலை இப்போது வெறும் ரூ.20.


என்ன ஆச்சு? ஏன் இப்படி? இல்லாத லாபத்தை இருப்பது போல் ஏன் காட்ட வேண்டும்? இதனால் யாருக்கு லாபம்? வரும் லாபத்தையே குறைத்துக் காட்டி, சில நேரங்களில் நஷ்டக் கணக்கு காட்டும் நிறுவனங்கள் மத்தியில், லாபத்தை அதிகரித்துக் காட்ட வேண்டிய அவசியம் என்ன? நிறுவனம்தான் கள்ளக் கணக்கு காட்டியது என்றால், இதைக் கண்காணிக்க வேண்டிய ஆடிட்டிங் நிறுவனம் என்ன செய்தது? இப்படி விடை தெரியாத பல கேள்விகள். தன்னைப் பற்றியும் தன் நிறுவனத்தைப் பற்றியும் எல்லோரும் பெருமையாகப் பேச வேண்டும் என்ற சத்யம் நிறுவனத்தின் ராஜுவின் நினைப்புதான் இத்தனைப் பிரச்னைக்கும் காரணம். இந்தியாவின் முதல் தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கியை ஆரம்பித்த ரமேஷ் கெல்லியும் இதனால்தான் அழிந்தார். இருவருமே ஆந்திராவின் பிரபலமான புள்ளிகள். புகழின் உச்சத்தை தொட்டு, கைது வரை போனவர்கள்.


லாபத்தைக் கூட்டிக் காட்டியது, இல்லாத கடன் பாக்கியை இருப்பதாகக் கணக்குக் காட்டியது… இதுதான் ராஜுவின் வாக்குமூலத்தின் மூலம் வெளி வந்திருக்கிறது. ஆனால் புதிதாக, ஊழியர் எண்ணிக்கையை அதிகமாகக் காட்டி அதிலும் ஊழல் நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. மொத்தம் 52 ஆயிரத்து 865 ஊழியர்கள் இருப்பது போல் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் நிறுவனத்திடம் 47 ஆயிரத்து 570 ஊழியர்களின் பெயர், முகவரி, சம்பள விவரம் உள்ளது. இல்லாத 5,295 ஊழியர்கள் பெயரில் மாதாமாதம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு ஊழியருக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் எனக் கணக்கிட்டால் கூட, ஒவ்வொரு மாதமும் ரூ.10 கோடியே 59 லட்சம் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 ராமலிங்க ராஜூவின் ஜாமீன் மனு : ஜனவரி 16ம் தெதிக்கு தள்ளி வைப்பு

பல ஆண்டுகளாகவே லாபத்தை அதிகமாகக் காட்டி வந்த ராமலிங்க ராஜு, தனது மகன்கள் தொடங்கி நடத்திய மேடாஸ் நிறுவனத்தை வாங்கி, அதன் மூலம் கணக்கை சரி செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால், சாப்ட்வேர் நிறுவனமாக இருந்தால் கூட பரவாயில்லை, ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஏன் வாங்க வேண்டும் என முதலீட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதைக் கைவிட வேண்டியதாகிப் போனது. அதன் பிறகுதான் மோசடியை ஒப்புக் கொண்டிருக்கிறார் ராஜு.இதனால் சர்வதேச அளவில் இந்திய நிறுவனங்கள் மீதான மரியாதை பாதாளத்துக்கு சரிந்துள்ளது. உலகமே இந்தியாவின் ஐ.டி. வளர்ச்சியைப் பார்த்துத்தான் கலங்கிப் போய் இருந்தது. இதுவே இந்தியாவுக்கு மிகப் பெரிய கவுரவத்தையும் தேடித் தந்தது. அவுட்சோர்சிங் என்ற பெயரில் வேலை வாய்ப்புகள் இந்தியாவில் குவிய, அமெரிக்காவே விழி பிதுங்கியது. இந்த மதிப்புக்கு சத்யம் மூலம் மரண அடி விழுந்துள்ளது.

இவ்வளவு பெரிய மோசடி, ஆடிட்டிங் நிறுவனத்துக்குத் தெரியாமல் எப்படி நடந்திருக்கும்? பன்னாட்டு நிறுவனமான பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் தான் ஆடிட்டிங் நிறுவனம். வங்கியில் 500 கோடி டெபாசிட் இருப்பதாக நிறுவனம் தெரிவித்தால், அதற்கான ஆதாரத்தைக் கேட்க வேண்டாமா? ரூ.544 கோடி லாபம் என்றால், லாபம் வந்த வழியைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? இதே நிறுவனம்தான் சில ஆண்டுகளுக்கு முன்னாள் மோசடியில் ஈடுபட்ட குளோபல் டிரஸ்ட் வங்கிக்கும் ஆடிட்டராக இருந்தது.

அப்போது செய்த தவறுக்கு சிறிய அபராதத்தைக் கட்டி விட்டு, மீண்டும் தொழிலில் ஈடுபட்டது. அப்போதே, கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தால், இப்போது மிகப் பெரிய மோசடி நடந்திருக்காது என்கிறார் சென்னையை சேர்ந்த பிரபல ஆடிட்டர் ஒருவர்.
ராஜு ஏன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்? தவறு செய்துவிட்டு, அதை ஒப்புக் கொள்ளும்போது அதற்கான தண்டனை குறைவு. பிறர் தவறைக் கண்டுபிடித்தால் சிறைத்தண்டனையும் அபராதமும் கட்ட வேண்டியிருக்கும். ஆனால், செய்தவரே தவறை ஒப்புக் கொள்ளும்போது, செபி சட்டப் பிரிவு 24 பி-யின்படி அபராதம் மட்டும் கட்டிவிட்டு தப்பி விடலாம். சிறைத் தண்டனை இருக்காது. இதனால்தான் அவசர, அவசரமாக ராஜு தான் செய்த தவறை ஒப்புக் கொண்டதாகச் சொல்கிறார்கள். வெளியே வந்திருப்பது மிகப் பெரிய ஊழலின் மிகச் சிறிய பகுதிதான்.

ஐ.டி. துறையில், ராமலிங்க ராஜு மிகப் பெரிய சாதனையாளராக வலம் வந்தவர். மிகச் சிறந்த நிர்வாகத்துக்காக சத்யம் நிறுவனம் விருதெல்லாம் வாங்கியிருக்கிறது. உலக நாடுகளே வியந்து பார்த்த ஒருவர், மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது, இந்திய தொழில்துறையில் ஒரு கறையாக படிந்து விட்டது. காலம்தான் அதைப் போக்க வேண்டும். ?

நன்றி:தினகரன்

விப்ரோவுக்கு உலக வங்கி தடை – பங்குகள் சரிவு

நியூயார்க்: விப்ரோ நிறுவனத்துக்கு உலக வங்கி விதித்துள்ள தடையால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.

ஆவணங்களை முறையாகப் பராமரிக்காதது, மோசடிக்கு உடந்தை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் விப்ரோவுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது.

விப்ரோவுடன் மேலும் 3 இந்திய நிறுவனங்களையும் உலக வங்கி நீக்கியுள்ளது. இதில் விப்ரோவை 2011 வரை நீக்கியுள்ளனர்.

இந்த வர்த்தகத்தில் 8.94 சதவிகிதம் விலை குறைந்து 228.55-க்கு கைமாறின விப்ரோ பங்குகள்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: