ஊழியர்கள் கிரெடிட் கார்டுகள் முடக்கம்!

ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்துக்கு பணப் பிரச்சினை கிடையாது. எனவே ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளக் குறைப்பெல்லாம் கிடையாது, தைரியமாக இருங்கள் என அறிவித்துள்ளது சத்யம் நிர்வாகம்.

‘அடுத்த மாத சம்பளத்துக்கு குறைந்தபட்சம் ரூ.550 கோடி தேவை. ஆனால் கையிருப்பு 300 கோடி ரூபாய்க்கும் குறைவுதான்’ என முன்னதாக சத்யம் இயக்குநர்கள் நேற்று தெரிவித்திருந்தனர். இது ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் அரசே நிர்வாகத்தை ஏற்றுள்ளது.

இன்று சத்யம் நிறுவன மனித வளப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யம் நிறுவனத்தின் நல்ல வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்குப் போகவில்லை. அவர்கள் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் ஆபத்தில்லை.

எனவே ஊழியர்களுக்கான சம்பளம் எப்போதும்போல குறைவின்றி வழங்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டுகள் முடக்கம்:ஆனால், சத்யம் நிறுவன ஊழியர்களுக்கு கடன் அட்டைகளை வழங்கியுள்ள பல வங்கிகள், இப்போது சத்யம் நிலைமை புரிந்தவுடன், அவற்றை முடக்கிவிட்டது தெரிய வந்துள்ளது.

 பெரும்பாலும் இந்த கடன் அட்டைகளுக்கு ஊழியர்களின் சம்பளத்தைப் போல 5 மடங்கு கடன் வசதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த மாத சம்பளமே சந்தேகம் என கிளம்பிய செய்திகளால் ஆடிப்போன வங்கிகள், உடனடியாக 20,000 கடன் அட்டைகளுக்குமேல் முடக்கி வைத்துவிட்டன.

நிறுவனத்தை காப்பாற்ற ஊழியர்கள் முயற்சி:

இதற்கிடையே சத்யம் நிறுவன ஊழியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு நிறுவனத்தை மீட்டெடுப்போம் என்ற புதிய கோஷத்துடன் களமிறங்கியுள்ளனர்.

இதற்கென தனி பேனர் ஒன்றை தயாரித்துள்ள சத்யம் ஊழியர்கள், நிறுவனத்தின் மீது தங்கள் நம்பிக்கையைக் காட்டும் விதத்தில் இந்த பேனரில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

எங்கள் ஊழியர்களை நம்பிக்கையோடு வைத்திருக்க இந்த சிறு முயற்சியை சீனியர்களான நாங்கள் எடுத்துள்ளோம். இந்த சிக்கலிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை நேற்றுவரை இல்லை. இப்போது வந்துள்ளது என்று சில மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்

சத்யம் இயக்குநர் குழு கலைப்பு: புதிய இயக்குநர்களை அரசு நியமிக்கிறது

Sathyam

டெல்லி: ராமலிங்க ராஜுவின் ரூ.7,000 கோடி மோசடிகளால் படுபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் சத்யம் நிறுவன நிர்வாகத்தை அரசு நியமிக்கும் புதிய இயக்குநர்கள் குழு ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) நடக்கவிருந்த சத்யம் நிறுவன இயக்குநர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் பிரேம்சந்த் குப்தா கூறுகையில்,

சில தனிப்பட்ட நபர்களின் பேராசைக்கு சத்யம் என்ற நிறுவனமும், அதன் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் பலியாகியிருப்பது வேதனை.

இப்போது அரசு மேற்கொண்டுள்ள புதிய முடிவின்படி சத்யம் நிறுவனத்தில் தற்போதுள்ள இயக்குநர்கள் அனைவரும் நீக்கப்படுகிறார்கள். இந்தக் குழு சனிக்கிழமை நடத்தவிருந்த கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது. தற்போதைய சத்யம் இயக்குநர்கள் குழுவில் 3 பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை நீக்கப்படுவார்கள்.

சத்யம் நிறுவனத்துக்கு 10 பேர் கொண்ட இயக்குநர் குழுவை அரசே நிர்ணயிக்கும். இந்தக் குழுதான் இனி சத்யம் நிர்வாகத்தை கவனிக்கும்.

தகுதியான நபர்கள் நிறுவன இயக்குநர்களாக நியமிக்கப்பட்ட 7 நாட்களில் புதிய இயக்குநர்கள் குழுக் கூட்டம் நடக்கும்.

அரசு முடிவு- சத்யம் வரவேற்பு:

தற்போதுள்ள இயக்குநர் குழுவைக் கலைத்துவிட்ட 10 புதிய இயக்குநர்களை நியமிக்க அரசு எடுத்துள்ள முடிவை சத்யம் நிறுவனம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து சத்யம் சார்பில் சனிக்கிழமை அதிகாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், அரசின் புதிய முடிவை சத்யம் நிறுவனம் முழு மனதுடன் வரவேற்கிறது.

சத்யம் நிறுவன ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தாங்கிப் பிடிக்கும் விதத்தில் உள்ளது அரசின் இந்த அறிவிப்பு, என்று கூறியுள்ளது.

நாஸ்காம் வரவேற்பு:

அரசின் இந்த முடிவு சந்தோஷமளிப்பதாகவும், முழு மனதுடன் வரவேற்க வேண்டிய ஒன்று என்றும் நாஸ்காம் தலைவர் கணேஷ் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர்கள் குழுமையும், நிர்வாகத்தையும் தனித்தனியாக வைத்திருப்பதே நிறுவனத்துக்கு நல்லது என்பதை அரசின் இந்த முடிவு உணர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எச்டிஎப்சி நம்பிக்கை:

அரசின் முடிவு புதிய நம்பிக்கைகளை விதைப்பதாகவும், புதிய இயக்குநர்கள் குழு சத்யம் ஊழியர்களைக் கைவிடாது என்ற பாதுகாப்புணர்வு பிறந்துள்ளதாகவும் கூறியுள்ளது. பணிகளில் சுணக்கமில்லாமல் பார்த்துக் கொள்வதோடு, மீண்டும் சத்யம் வலிமையான நிறுவனமாகத் திகழ வேண்டும் என்றும் எச்டிஎப்சி தலைவர் பரேக் தெரிவித்துள்ளார்.

செபி முன் இன்றும் ஆஜராகும் ராஜு!

இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள ராஜுவை செபி அதிகாரிகள் இன்றும் விசாரிக்கவுள்ளனர்.

  சத்யம் வங்கி கணக்கு ஆவணங்கள் மிஸ்ஸிங்

ஹைதராபாத்: சத்யம் நிறுவனமும் அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகத் தந்து வருகின்றனர்.

லேட்டஸ்ட் அதிர்ச்சி… சத்யம் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் முழுமையாகக் ‘காணாமல்’ போய்விட்டனவாம்!

சத்யம் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், பதிவு அலுவலகம் உள்பட முக்கிய அலுவலகங்களில், நிறுவன பதிவாளர் அலுவலக அதிகாரிகள் நடத்திய ரெய்டில், வங்கிக் கணக்கு விவரங்கள் மட்டும் ஆவணங்கள் மட்டும் கிடைக்கவில்லை.

இந்த அதிர்ச்சிகரமான உண்மை, சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள முறைகேடுகளின் அளவு ரூ.7,000 ஆயிரம் கோடிதானா… அதைவிட பல மடங்கா என்ற சந்தேகத்தை புலனாய்வு அதிகாரிகளுக்கு ஏற்படுத்திவிட்டது.

அதிர்ந்து போன நிறுவன பதிவாளர் அலுவலக அதிகாரிகள், சிபிஐ, செபியின் தீவிர குற்றவியல் புலனாய்வு பிரிவான Serious Fraud Investigation Office (SFIO), ரிசர்வ் வங்கி, உள்ளூர் போலீஸ் என அனைத்துத் தரப்பும் இணைந்த கூட்டு புலனாய்வு நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளது.

இன்று சத்யம் நிதித் துறைத் தலைவர் சீனிவாஸ் வாட்லாமணியைக் கைது செய்த பிறகே இதில் உண்மை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடிட்டர்கள் மீது நடிவடிக்கை:

இதற்கிடையே சத்யம் நிறுவனத்தின் இல்லாத பணத்தைத் தணிக்கை செய்த கில்லாடி தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர் கூப்பர் ஹவுஸ் மீது நடவடிக்கை எடுக்க இந்திய சார்ட்டட் அக்கவுண்ட்டன்ட்ஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.

சத்யம் விவகாரம் : கம்பெனி விவகாரத்துறை அமைச்சரை சந்தித்தார் செபி சேர்மன்

புதுடில்லி : சத்யம் கம்ப்யூட்டர்ஸில் நடந்து வரும் விசாரணை குறித்து மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் பிரேம் சந்த் குப்தா வை செபி சேர்மன் பாவே இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கம்பெனி விவகாரத்துறை அமைச்சக செயலாளர் அனுராக் கோயல் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். இவர்களது ஆலோசனை சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்திருக்கிறது. இன்று காலை புதுடில்லி சென்ற செபி சேர்மன் பாவே, இது குறித்து மற்ற அமைச்சர்களையும் நிதித்துறையில் உயர் அதிகாரிகளையும் சந்திக்க இருக்கிறார். முன்னதாக, பிரதமர் மன்மோகன் சிங்கை பிரேம் சந்த் குப்தா இன்று சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கியிருக்கிறார் . மேலும் செபியின் விசாரணை குழுவும், கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்திற்கு கீழ் இயங்கி வரும் எஸ்.எஃப்.ஐ.ஓ.,வினரும் ஐதராபாத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களால் இன்னும் ராமலிங்க ராஜூவை சந்திக்க முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்டிருப்பதால், நீதிபதியின் அனுமதியை பெற்றே அவருடன் பேச முடியும் என்று போலீசார் தெரிவித்து விட்டனர்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பேங்க் ஸ்டேட்மென்ட்களை காணவில்லை : தீவிர விசாரணை

புதுடில்லி : சுமார் ரூ.7,100 கோடிக்கு மோசடி நடந்துள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பேங்க் ஸ்டேட்மென்ட்டை காணவில்லை. மோசடி செய்ததாக ஒத்துக்கொண்ட ராமலிங்க ராஜூவும் அவரது கூட்டாளிகளும் அவைகளை எடுத்து சென்று விட்டார்களா என்று தெரியவில்லை. பேங்க் ஸ்டேட்மென்ட்தான் மோசடி குறித்து கண்டுபிடிக்க ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. ஐதராபாத்தில் இருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் மூன்று அலு<வலகங்களிலும் இன்று காலை சோதனை நடத்திய ரிஜிஸ்டரார் ஆஃப் கம்பெனீஸ் அதிகாரிகளுக்கு அவைகள் கிடைக்கவில்லை என்கிறார்கள். இப்போது அந்த மூன்று அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கம்பெனியும் அதன் பதிவு அ<லுவலகத்தில், இப்போதைய மற்றும் முந்தைய வருடங்களுக்கான பேங்க் ஸ்டேட்மென்ட்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த விதிமுறை இங்கு மீறப்பட்டிருக்கிறது. உடனடியாக மோசடியை கண்டுபிடிக்க உதவும் பேங்க் ஸ்டேட்மென்ட்டை ராமலிங்க ராஜூ அல்லது அவரது ஆட்கள் எடுத்து, அதன் மூலம் உடனடியாக குற்றம் கண்டுபிடிக்கப்படுவதிலிருந்து தப்பிக்க அவர்கள் எண்ணியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். எனவே இந்த மோசடியை விசாரிக்குமாறு சீரியஸ் ஃபிராட் இன்வெஸ்டிகேஷன் ஆபீஸை ( எஸ் எஃப் ஐ ஓ ) ரிஜிஸ்டரார் ஆஃப் கம்பெனீஸ் கேட்டுக்கொள்ளும் என்று தெரிகிறது. எஸ்.எஃப்.ஐ.ஓ., இந்த வழக்கை அடுத்த வாரத்தில் எடுத்து விசாரிக்கும் என்கிறார்கள். எஸ்.எஃப்.ஐ.ஓ., விசாரிக்கும் அளவுக்கு இதில் வேண்டிய முகாந்திரங்கள் இருப்பதாக மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தேவையான ஆவணங்களை சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் அதன் தலைமை அ<லுவலகத்தில் வைத்திருக்காததே ஒரு மிகப்பெரிய விதி மீறல் செயலாக கருதப்படுகிறது. மேலும் சத்யம் மோசடி குறித்து செபி, ஆர்.பி.ஐ., சி.பி.ஐ., போலீஸ், கஸ்டம்ஸ், வருவாய் புலனாய்வுத்துறை, மற்றும் தடையவியல், பேங்கிங் போன்றவைகொடுக்கும் அறிக்கைகளை கொண்டும் எஸ்.எஃப்.ஐ.ஓ., நடவடிக்கை எடுக்கும் என்கிறார்கள். இது தவிர இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட்ஸ் ஆஃப் இந்தியாவும், சத்யம் கம்ப்யூட்டர்ஸின் ஆடிட் நிறுவனமான பிரைஸ்வாட்டர் கூப்பர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

சத்யம் முதலீட்டாளர்கள் இழந்தது ரூ.13,600 கோடி

மும்பை : கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் முதலீட்டாளர்கள் ரூ.13,600 கோடியை ( 2.82 பில்லியன் டாலர்கள் ) இழந்திருக்கிறார்கள். 2008 டிசம்பர் 16ம் தேதி ரூ.15,262 கோடியாக இருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸின் சந்தை மூலதன மதிப்பு, ரூ.1,607.04 கோடியாக குறைந்து விட்டது. ( டிசம்பர் 16ம் தேதிதான் ராமலிங்க ராஜூவின் மகன் கவனித்து வரும் இரு நிறுவனங்களை 1.6 பில்லியன் டாலருக்கு வாங்க ராஜூ முயற்சி செய்து, பின்னர் முதலீட்டாளர்களின் எதிர்ப்பால் விட்டு விட்டார் ). கடந்த 19 வர்த்தக நாட்களில் மட்டும் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் முதலீட்டாளர்கள் ரூ.13,655 கோடியை இழந்திருக்கிறார்கள். டிசம்பர் 16ம் தேதி ரூ.200 ஆக இருந்த சத்யத்தின் பங்கு மதிப்பு நேற்று ரூ.23 க்கு வந்து விட்டது. ஜனவரி 7ம் தேதி சத்யத்தின் அப்போதைய தலைவர் ராமலிங்க ராஜூ, சுமார் ரூ.7,100 கோடி அளவிற்கு மோசடி செய்து மாட்டிக்கொண்டபோது, அதன் பங்கு மதிப்பு அன்று மட்டும் 80 சதவீதம் குறைந்து ரூ.39.95 க்கு வந்திருந்தது. அதிகபட்சமாக அது, அதன் பங்கு மதிப்பை இழந்தது ஜனவரி 7 மற்றும் 9 ம் தேதிகளில்தான். அந்த இரண்டு நாட்களில் மட்டும் அதன் முதலீட்டாளர்கள் ரூ.10,460 கோடியை இழந்திருக்கிறார்கள்.

 தப்புக் கணக்கில் சிக்கிய ராமலிங்க ராஜூ

 நேசமுடன் வெங்கடேஷ் எழுதி ஜுனியர் விகடனில் வெளிவந்துள்ள ‘சத்யம் வீழ்ச்சி’ பற்றிய கட்டுரை:

ஜனவரி 7, 2009. இந்தியத் தொழில் நிறுவனங்களின் நேர்மையின் மேல் சத்யம்,கரியைப் பூசிய கறுப்பு தினம்!

உலகமே வியந்து, அண்ணாந்து பார்த்த இந்திய மென்பொருள் நிறுவனங்களில்முக்கியமான ‘சத்யம்’, பெரும் கறையை ஏற்படுத்தித் தடுமாற வைத்ததுஅன்றுதான். கிட்டத்தட்ட ஏழாயிரம் கோடி ரூபாயை மொத்தமாக சுவாகா செய்துவிட்டார் அதன் நிறுவனரும் சேர்மனுமான பி.ராமலிங்க ராஜு. ஒரு கட்டத்துக்கு மேல் உண்மையை மறைக்க முடியால், தனது தவறை ஒப்புக்கொண்டு தனது பதவியை ராஜினாமாவும் செய்து விட்டார்.

புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பு, செபியின் தலைவருக்கு ராமலிங்க ராஜுவின் கடிதம் வந்துவிட்டது. அது தம்முடைய நிர்வாகக் குழுவுக்கு அவர் எழுதிய கடிதம். கூடவே, செபி தலைவருக்கும் பங்குச் சந்தைகளுக்கும் அதை அனுப்பியிருந்தார் ராஜு. வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே அக்கடிதம் முதலீட்டாளர்களிடமும் வந்து சேர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே சத்யம் நிறுவனத்தில் நடந்துவந்த கணக்கு முறைகேடுகளையும் அதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளையும் அதில் அவர் பட்டவர்த்தனமாக ஒப்புக்கொண்டு இருந்தார்.

டிசம்பர் 31, 2008 இதழிலேயே ‘உலக வங்கிக்கு லஞ்சம் கொடுத்ததா சத்யம்?’ என்று நாம் இந்த முறைகேட்டின் ஆரம்பத்தைத் தொட்டுக் காட்டியிருந்தோம். ராமலிங்க ராஜு திடீரென்று, சத்யத்தை விரிவுபடுத்துவதற்காக ‘மேடாஸ்’ (‘சத்யம்’ என்பதன் ஆங்கில எழுத்துக்களை அப்படியே திருப்பிப்போட்டால் வருவது) இன்ஃப்ரா மற்றும் மேடாஸ் பிராப்பர்டீஸ் நிறுவனங்களை ரூ.7680 கோடி கொடுத்து வாங்கப் போகிறேன் என்று அறிவித்ததையும் அதனால் முதலீட்டாளர்கள் வெகுண்டெழுந்ததும் அது வாபஸ் வாங்கப்பட்டதையும் அந்தக்கட்டுரையில் சொல்லியிருந்தோம்.

மேலும், சத்யத்தின் கையிருப்பில் ரூ. 5000 கோடிக்கும் மேல் பணம் இருக்கிறது, அதைச் சுருட்டிக்கொள்ளவே, இந்த விரிவாக்க நாடகத்தை ராஜு நடத்துகிறார் என்று அப்போது பேசப்பட்டது. ஆனால், இப்போதுதான் உண்மையின்பரிமாணம் அதை விட பயங்கரமானது என்று ராஜுவின் வாயாலேயே வெளியாகி இருக்கிறது.

பல ஆண்டுகளாக, சத்யம் வளராமலே நின்று போயிருக்க… தனது புகழ் மற்றும் நிறுவனத்தின் புகழ் சரிந்துவிடாமல் இருக்கவும், வேறு யாரும் நிறுவனத்தை வாங்கிவிடாமல் தடுக்கவும், மக்களிடமும் செபி அமைப்பிடமும் அவர் பல மடங்காகக் கூட்டி லாபக் கணக்கை ஊதி பொய்யான புள்ளிவிவரம் கொடுத்து வந்திருப்பதை இப்போது ஒப்புக்கொண்டு இருக்கிறார். காட்டி வந்த பொய்க் கணக்கை ஒரு கட்டத்தில் நேர் செய்வதற்காகவே, உளுத்துப் போன மேடாஸ் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதுபோல் வாங்கி பலத்த நஷ்டக் கணக்கை பிறகு காட்டி சமாளிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அந்த மேடாஸ் நாடகம் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி அந்த முடிவை வாபஸ் வாங்க நேர்ந்ததால்…
கெட்டிக்காரன் புளுகாக அது பட்டென்று இப்போது வெளியில் வந்துவிட்டது!

சத்யத்தின் கையிருப்பில் ரூ. 5040 கோடிக்கும் மேல் இருப்பதாக மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். உண்மையில் அப்படி ஒரு தொகை அங்கே இல்லவே இல்லை. இதைப் போலவே, வட்டி மூலம்பெறப் பட்ட தொகை, பிற முதலீட்டு நிறுவனங் களில் இருந்து வாங்கிய கடன் தொகை என்று எல்லாமே தப்புக் கணக்கு, பொய்க் கணக்கு!

இப்போது தன் கடிதத்திலேயே, ‘புலி மேல் ஏறியவன் கதையாக, அதன் வாயில் சிக்கிக்கொள்ளாமல் எப்படித் தப்புவது என்று தெரியாமல் என்று ராமலிங்க ராஜு கவித்துவமாக தன் சறுக்கலை வர்ணித்துள்ளார்!

விஷயம் இத்தோடு முடிந்ததா? நிச்சயமாக இல்லை! இது சத்யம் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. இதில் ஈடுபட்டுள்ள வேறு தனி நபர்களும் நிறுவனங்களும் செய்தகுளறுபடிகள் இப்போது வெளியே வரத் தொடங்கியிருக்கின்றன.

1. முதலில், இந்தப் பொய்க் கணக்கைத் தணிக்கை செய்த ஆடிட்டர்கள் யார்? அதைச் செய்த நிறுவனமான ‘பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்,’ எப்படி இப்படிப்பட்ட பொய்க் கணக்கை அனுமதித்தார்கள்?

2. சுயேச்சை டைரக்டர்கள் என்று ஒவ்வொரு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலும் நான்கைந்து பேர் உட்கார்ந்திருக்கிறார்களே… அவர்கள் என்ன, முந்திரி பக்கோடாவும் காபியும் மட்டும் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்களா… அல்லது நிறுவனக் கணக்குகளை ஆராய உட்கார்ந்திருக்கிறார்களா?

3. ராஜு மட்டுமே முடிவெடுத்து இதைச் செய்திருக்க முடியாது. சத்யம் நிறுவனத்தின் முதன்மை நிதி நிர்வாகி, முதன்மை செயல் அதிகாரி முதற்கொண்டு மேல்மட்ட நிர்வாகிகள் பலரும் இதில் கட்டாயம் சம்பந்தப்பட்டிருக்கவேண்டும். அவர்கள் எல்லாம் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டாமா?

4. தொழில் நிறுவனங்களுக்கான நேர்மையான நிர்வாகம், கார்ப்பரேட் கவர்னன்ஸ் என்று ஒன்று உண்டே… அதை எப்படிக் காற்றில் பறக்கவிட்டார்கள்?

இந்த முறைகேடு வெளியே வந்தவுடன், முதலீட்டாளர்கள் கொதித்துப் போய்விட்டார்கள். ரூ.185 வரை விற்றுக்கொண்டிருந்த சத்யம் ஒரே நாளில் சடசடவென வீழ்ந்து, மாலையில் ரூ. 41-க்கு வந்து சேர்ந்தது. பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம். முதலீட்டாளர்கள் தலையெடுக்க முடியாத மரண அடி இது. இதேபோல், சத்யத்தின் பங்குகள் அமெரிக்காவின் பங்குச் சந்தையான நாஸ்டாக்கிலும் விற்பனை ஆகின்றன. இந்த விஷயம் தெரிந்தவுடன், அங்கே,சத்யத்தின் பங்கு வர்த்தம் நிறுத்திவைக்கப்பட்டது.

‘சத்யம் மட்டுமா இந்தத் தப்பைச் செய்திருக்கும்? இன்னும் எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் இதைச் செய்திருக்கக்கூடும்?’ என்ற ஹேஷ்யங்கள் பங்குச் சந்தையை உலுக்கத் தொடங்கிவிட்டன. விளைவு, சந்தேகத்துக் கிடமான வேறு சில கட்டுமான நிறுவனங்களின் பங்குகளும் சரிய… புதன் மாலைக்குள் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு குறைந்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையிழப்பைக் காட்டியது.

இன்னொரு பக்கம், ஏற்கெனவே உலகப் பொருளா தாரத்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு இந்தியப் பங்குச் சந்தையிலும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியர்களின் கூர்மையான மூளை மற்றும் கடுமையான உழைப்பால் இதுவரை நாம் கண்டுவந்த வளர்ச்சியின் மீது பொறாமைகொண்ட பல அந்நியர்கள், ‘தார்மீக பொறுப்புள்ள நிர்வாகம் என்பதற்காகவே விருதெல்லாம் வாங்கிய சத்யம் நிறுவனமே இப்படியென்றால், மற்ற ஐ.டி. நிறுவனங்களைப் பற்றி என்ன முடிவெடுப்பது?’ என்று இப்போது தருணம் பார்த்து ‘குழி பறிக்கிற’ வேலையில் இறங்கியிருப்பதுதான் பெரிய சோகமே!

இதனால் இந்திய மென்பொருள் தயாரிப்பு மற்றும் பிற சேவை நிறுவனங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமா..? வெளிநாட்டில் இருந்து வரும் ஆர்டர்கள் குறைந்துபோகுமா..? சிறிய மற்றும் மத்திம மென்பொருள் நிறுவனங்கள்அடிவாங்குமா என்றெல்லாம் விவாதங்கள் நடந்தபடி உள்ளன!

சரி, 7,000 கோடி ரூபாய் பொய்க் கணக்குக் காட்டிய ராஜுவுக்கு என்ன தண்டனை? ஒரு பக்கம் செபி, மற்றொரு பக்கம் ரெஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனி, இன்னொரு பக்கம் ஆந்திர மாநில போலீஸ் என்று ஒவ்வொருவரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மிகவும் சிக்கலான பொருளாதாரக் குற்றமாக இது கருதப்படுவதால், கூட்டு நடவடிக்கையின் மூலமே உண்மையை வெளியே கொண்டுவர முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்!

மேலும், அமெரிக்கர்களின் பணத்தையும் ராஜு சுருட்டிவிட்டதால், அமெரிக்காவில் இருந்தும் விசாரணை கோரப்படும் என்று தெரிகிறது.

செபியின் நெறிமுறைகளை மீறியதற்கும், கம்பெனிகளின் சட்டத்தின்படியும்,
முதலீட்டாளர் களை ஏமாற்றினார் என்பதால் இந்திய தண்டனைச் சட்டப் படியும் கிட்டத்தட்ட ரூ.25 கோடி அபராதத் தொகையோடு, பத்து ஆண்டுகள்வரை சிறை தண்டனையும் கிடைக்கக்கூடும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். இதெல்லாமே, முறையாக விசாரணை நடந்தால்!

இத்தனை களேபரங்களுக் கிடையில் ராமலிங்க ராஜுவைக் காணவே இல்லை! அலுவல கத்தில் இல்லை. அமெரிக்கா போய்விட்டார் என்கிறார்கள் சிலர். யாருக்கும் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.
(லேட்டஸ்ட் செய்திகளின்படி, ராஜு சரணடைந்து விட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது)

சத்யம் நிறுவனங்களின் கட்டட வாயில்களில் போலீஸார் குவிக்கப்பட்டு,முதலீட்டாளர்கள் கோபத்தில் நாசம் விளைவித்து விடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வுகள் அப்பட்டமாக வெளியே தெரிந்து பங்குச்சந்தையில் பீதி உலவ ஆரம்பித்திருக்கும் நிலையில், சத்யம் நிறுவனங்களில் வேலைபார்த்துவிட்டு வெளியே வந்த ஊழியர்கள் அவமானத்தால் கூனிக் குறுகி இருந்தார்கள். இப்படிப் பணியில் இருக்கும் 53,000 ஊழியர்களின் எதிர்காலம் ஒருபக்கம் கேள்விக் குறியாகி இருக்கிறதென்றால், பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துவிட்டு இன்று ஓட்டாண்டிகளாக ஆகி நிற்கும் முதலீட்டாளர்களின் நிலை ரொம்பவும் பரிதாபம்!

வளர்ச்சியும் புகழும் வரும்போதுதான் உண்மையும் நேர்மையும் கூடுதலாக
இருக்க வேண்டும் என்பதை ஒரு தனிமனிதர் மறந்து போனதன் விளைவை -இன்று தேசம் சந்திக்கிறது!
===============

சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவனத்தை உருவாக்கிய ராமலிங்க ராஜு, விஜயவாடா அருகே உள்ள பீமாவரத்தைச் சேர்ந்தவர். பைரராஜ்ஜு என்ற குடும்பத்தைச் சேர்ந்த அவருடைய தந்தை சத்யநாராயணா ராஜு, ஒரு விவசாயி. அமெரிக்காவில் உள்ள ஒஹையோ பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பை முடித்த ராமலிங்க ராஜு, 1987-ல் சத்யம் நிறுவனத்தைத் தொடங்கினார். வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் இருந்து மென்பொருள் தயாரித்து வழங்கும் புதிய தொழிலை ‘சத்யம்’ செய்யத் தொடங்கியது.

ஆரம்பத்தில் இருந்தே ராமலிங்க ராஜுவுக்குப் பிற துறைகளில் ஆர்வம் உண்டு. அவருடைய குடும்பம், ‘சத்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தை நடத்தி வந்தது. பிறகு, ‘சத்யம் இன்ஃபோவேஸ்,’ ‘சத்யம் என்டர்பிரைசஸ்’ போன்ற நிறுவனங்களையும் தொடங்கி நடத்தினார். ஒவ்வொரு கட்டத்திலும் நல்ல லாபம் வரும்போது, இந்த சகோதர நிறுவனங்களை அவர் விற்கவும் செய்தார்.

ரியல் எஸ்டேட் துறை மீண்டும் தலையெடுக்கத் தொடங்கிய போது, ‘மேடாஸ் பிராப்பர்ட்டீஸ்’ மற்றும் ‘மேடாஸ் இன்ஃப்ரா’ ஆகிய நிறுவனங்களைத் தொடங்கி நடத்தினார் ராமலிங்க ராஜு. இந்த நிறுவனங்களை அவருடைய மகன்களான தேஜா ராஜு,ராம ராஜு ஆகியோர் நிர்வகித்து வந்தனர். ஆரம்பத்தில் இருந்து ராமலிங்க ராஜுவுடன் கூடவே இருப்பவர், அவருடைய தம்பி ராம ராஜு . மைத்துனர் சிந்தா சீனிவாச ராஜுவும் ஒரு காலகட்டம் வரை சத்யத்தின் முக்கியத் துறை ஒன்றின் தலைவராக இருந்தார்.

ராமலிங்க ராஜுவுக்கு உறவினர்கள், தெலுங்கு பேசுபவர்கள் மீது அலாதி ஆர்வமுண்டு. தம் சொந்த ஊரான பீமாவரத்தில் தங்கள் குடும்ப உறவுமுறை வழி வந்த வீடுகளில் பெண் குழந்தை பிறக்கும்போதெல்லாம், ஒரு லட்சம் ரூபாயை அந்தக் குழந்தையின் பெயரில் வங்கியில் போட்டு வைப்பாராம் ராமலிங்க ராஜு. அப்பெண்ணுக்குத் திருமண வயது வரும்போது, அந்த பணத்தை எடுத்து கொடுப்பாராம்.

நன்றி: ஜுனியர் விகடன்

 balaji_ammu.blogspot.com/2009_01_01_archive.html

ராமலிங்க ராஜூ கைது

ஐதராபாத் : சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவரது சகோதரரும், சத்யத்தின் முன்னாள் மேலாண் இயக்குனருமான ராம ராஜூவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.கைது செய்யப்படுவோம் என்பதை தெரிந்துகொண்ட ராமலிங்க ராஜூவும், ராம ராஜூவும் நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் டி.ஜி.பி., அலுவலகம் வந்து சரண் அடைந்திருக்கின்றனர். அப்போது போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 120-பி, 406,417,420,468 மற்றும் 471 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய கார்பரேட் உலகில் மிகப்பெரிய மோசடி என்று வர்ணிக்கப்படும் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் சுமார் ரூ.7,136 கோடி மோசடிக்கு, தானே உடந்தை என்று ஒத்துக்கொண்ட ராமலிங்க ராஜூ, இன்று ( சனிக்கிழளைம ) செபி நியமித்த விசாரணை குழுவிடம் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க இருந்தார். இந்நிலையில் அவர், அவராகவே போலீசில் சரண் அடைந்திருக்கிறார்

பணிந்தது எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்கம் : வேலைநிறுத்தம் வாபஸ்

புதுடில்லி : மத்திய அரசின் கண்டிப்பான நடவடிக்கையால், கடந்த புதன்கிழமையில் இருந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்கம் ( ஓ எஸ் ஓ ஏ ) நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. வேலைநிறுத்தத்தை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை, அதற்கு முன் பேச்சுவார்த்தை இல்லை என்று மத்திய அமைச்சரவை கண்டிப்பாக சொல்லி விட்டதாலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி பிரதமர் மன்மோகன் சிங் இட்ட கண்டிப்பான உத்தரவாலும், பொது மக்களின் கடும் எதிர்ப்பாலும் தாக்குபிடிக்க முடியாத வேலை நிறுத்த போராட்டம் நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோரை எஸ்மா சட்டப்படி கைது செய்து சிரையில் அடைக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்ததாலும், அவர்கள் மீது துறை மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மிரட்டப்பட்டதாலும், நிலைமையை சமாளிக்க ராணுவம் வரவழைக்கப்படுமே ஒழிய, போராட்டத்தை கைவிடும் வரை பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று திட்டவட்டமாக மத்திய அமைச்சரவை சொல்லி விட்டதாலும் வேறு வழியின்றி போராட்டம் வாபஸ் பெறப்பட்டு விட்டது. இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த 14 நிறுவனங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், நேற்று மாலையில் முதலில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது பாரத் பெட்ரோலியமும் ஆயில் இந்தியா லிமிடெட்டும்தான். அடுத்ததாக இந்தியன் ஆயில் கார்பரேஷனும் கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா விலகிக்கொள்வதாக அறிவித்தது. பின்னர் கடைசியாக ஓ.என்.ஜி.சி., அறிவித்தது. ஓ.என்.ஜி.சி.,யில்தான் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்க ( ஓ எஸ் ஓ ஏ ) தலைவர் அமித் குமார் வேலைபார்க்கிறார். போராட்டம் வாபஸ் குறித்து பின்னர் பேசிய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, போராட்டத்தை வாபஸ் பெற வைக்க சில நாட்கள் ஆனது வருத்தம் அளிக்கிறது என்றார்.எண்ணெய் நிறுவன அதிகாரிகள் எல்லோரும் வேலைக்கு திரும்ப ஒத்துக்கொண்டனர். ஹெச்.பி.சி.எல்., ஐ.ஓ.சி., பி.பி.சி.எல்., மற்றும் ஓ.என்.ஜி.சி.,நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்த்து நிலைமையை சரி செய்வார்கள். இருந்தாலும் நிலைமை முழுவதுமாக சீரடைய ஒரிரு நாட்கள் ஆகலாம் என்றார்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் போர்டு கலைக்கப்பட்டது : மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

ஐதராபாத் : ரூ.7100 கோடி மோசடியில் சிக்கிய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ( போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் ) கலைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக 10 புதிய இயக்குநர்களை மத்திய அரசு நியமிக்க இருக்கிறது. இனி அவர்கள்தான் சத்யம் கம்ப்யூட்டர்ஸில் அதிகாரம் கொண்டிருப்பர் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. புதிதாக 10 இயக்குநர்களை நியமித்துக்கொள்ள மத்திய அரசுக்கு கம்பெனி லா போர்டு அனுமதி அளித்திருக்கிறது. பழைய இயக்குநர்களின் குழு கூட்டம் இன்று சனிக்கிழமை நடப்பதாக இருந்தது. இப்போது அவர்களுக்குள்ள அதிகாரம் பறிக்கப்பட்டிருப்பதால் இன்று நடப்பதாக இருந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்திய கம்பெனி சட்டம் 408 வது பிரிவின் கீழ் மத்திய அரசு 10 புதிய இயக்குநர்களை நியமனம் செய்யும். அவர்கள் அதிகபட்சமாக 3 வருடங்களுக்கு இயக்குநர்களாக இருக்க முடியும். ஒருவேளை இப்போது நியமிக்கப்படும் இயக்குநர்களின் செயல்பாடுகளில் தவறுகள் இருப்பதாக பங்குதாரர்களில் 10 சதவீதத்தினர் கருத்து தெரிவித்தால், இயக்குநர்கள் குழுவை மாற்றி அமைக்க மத்திய அரசை, கம்பெனி லா போர்டு கேட்கும். மேலும் இப்போதுள்ள நிர்வாகம் நம்பிக்கை துரோகம் செய்தாலோ, மோசடியில் ஈடுபட்டாலோ, தொழிலை பாதிக்கக்கூடியதாக அதன் நடவடிக்கைகள் இருந்தாலோ, கம்பெனி சட்டம் 388 பிரிவின் கீழ் அதன் நிர்வாகத்தை மாற்றி அமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. புதிதாக நியமிக்கும் இயக்குநர்களுக்கு கம்பெனியின் ஆடிட்டர்களை மாற்றுவதற்கும் அதிகாரம் இருக்கிறது. இந்தியாவில் சத்யம் செய்த மோசடியைப்போலவே இதற்கு முன்பும் ஒரிரு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டிருக்கின்றன. இருந்தாலும் சத்யம் தான் மிகப்பெரிய மோசடியை செய்திருக்கிறது என்கிறார்கள். இதற்கு முன் மோசடியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி..,கேப்பிட்டல், டபிள்யூ.ஹெச்.பிராடி போன்ற நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டபோது, மத்திய அரசு, அதன் சார்பாக அங்கு இயக்குநர்களை நியமித்ததே ஒழிய, ஏற்கனவே இருந்த இயக்குநர்கள் குழுவை கலைக்கவில்லை. சத்யத்தில்தான் தான் பழைய இயக்குநர்கள் குழு கலைக்கப்பட்டிருக்கிறது. இந்திய கம்பெனி சட்டப்படி, தேசிய நலன் கருதி, மத்திய அரசால் ஒரு கம்பெனியை இன்னொரு கம்பெனியுடன் இணைக்கவும் முடியும்.

 சத்தியம் கைமாறுமா?: ஊழியர்கள் கதி

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் அதிபர் ராஜு தனது சேர்மன் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்த செய்தியுடன் சேர்த்து அவர் செய்த மோசடி செய்தியும், சத்யத்தின் லாப விபரங்கள் சத்தியமற்றவை என்ற தகவலும் சேர்ந்து சத்யத்தின் பங்குகளை கீழ்நோக்கி தள்ளின.அவர் செய்த மோசடிகுறித்து செபியும் விசாரித்து வருகின்றது. இந்நிலையில் உலகில் மிகச் சிறந்த 500 நிறுவனங்களில் 150 நிறுவனங்கள் சத்தியம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்கனவே செய்துவரும்  மற்றும் புதிதாக ஒப்புக்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தையும் விப்ரோ நிறுவனமும், இன்போசிஸ் நிறுவனமும் பகிர்ந்துகொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சத்யம் நிறுவனத்தினை டிசிஎஸ் நிறுவனம் கையப்படுத்த உள்ளளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அனைத்து நிறுவனங்களும் அதன் பணிகளை பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே ஆர்வமாக இருக்கின்றன. அதன் ஊழியர்களுக்கு யாரும் வேலை அளிக்க முன்வரவில்லை என்றே தெரிகிறது. கிட்டத்தட்ட 55000 ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களின் கதி கேள்விக்குறியாகி உள்ளது.
அதனால் சத்யம் நிறுவனத்தின் ஊழியர்கள் கதி என்ன என்பது பெரும் கேள்விகுறியாகவே உள்ளது

பெட்ரோலியத் துறையிலும் வேலையிழப்பு

மிக மோசமாக சரிந்து வரும் உலகப் பொருளாதாரத்தினால் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டு வரும் வேலையிழப்பு அதிகரித்து வருகிறது. அதன் பாதிப்பு தற்போது பெட்ரோலியத் துறையிலும் எதிரொலிக்கிறது. உலக அளவில் பெரிய ஆயில் கம்பெனிகள் தற்போது ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளன. உலகின் நம்பர் ஒன் ஆயில் கம்பெனியான ஷ்லம்பெர்கர் லிட் வட அமெரிக்ககாவில் 1000 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. அதன் மற்ற கிளைகளிலும் இது தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு பெரும் நிறுவனமான ஹேலிபர்டன் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் ஆனால் எண்ணிக்கை எவ்வளவு என்பதை முடிவு செய்யவில்லையென்றும் தெரிவிக்கிறது. இவ்விரண்டு நிறுவனங்களின் தலைமையகங்களும் ஹூஸ்டன் நகரத்தில் அமைந்துள்ளன. ஷ்லம்பெர்கர் லிட்டின் மொத்த ஊழியர்கள் 1,03,000 பேர் மற்றும் ஹேலிபர்டனின் ஊழியர்கள் எண்ணிக்கை 55,0000.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: