சந்தையிலிருந்து நீக்கம்-யுஎஸ் வழக்கு!!

மும்பை/நியூயார்க்: சத்யம் நிறுவனத்தின் பங்குகளை தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலிருந்து நீக்கப்படுவதாக செபி அறிவித்துள்ளது.

அதே போல மும்பை பங்குச் சந்தையான பிஎஸ்இ-லிருந்தும் சத்யம் நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் நிப்டி, சென்செக்சில் சத்யம் பங்குகளை இனி வாங்கவோ, விற்கவோ முடியாது.

மேலும் சிஎன்எக்ஸ் 500 பட்டியலில் இருந்தும் சத்யம் நீக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சத்யம் வெளியேற்றப்பட்டுவிட்டது. அங்கு 1 டாலருக்கும் கீழ் குறைந்துவிட்டன சத்யம் பங்குகள் விலை.

இன்னும் சென்செக்ஸிலிருந்து நீக்கப்படவில்லை. ஆனால் அதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுக்க உள்ள சத்யம் நிறுவனத்தின் கிளைகளில் 53,000பேர் பணியாற்றுகின்றனர். இன்றைய சூழலில், இந்த நிறுவனத்தின் பெரிய வாடிக்கையாளர்கள் அனைவருமே வெளியேறிவிட்டனர். எனவே இந்த ஊழியர்கள் கதி என்னவென்பதுதான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

அமெரிக்காவில் வழக்கு:

இதற்கிடையே, சத்யம் நிறுவனத்தின் வைப்புப் பத்திரங்களை வாங்கி ஏமாந்ததவர்கள் சார்பாக, அமெரிக்க நிறுவனம் ஒன்று நியூயார்க் கோர்டில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் நேரில் ஆஜராக வேண்டும் ராஜுவுக்கு நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ராஜு இப்போது இந்தியாவில் இல்லை. இந்த வழக்கில் ஆஜராக அமெரிக்கா போய்விட்டார் என்றே நேற்று கூறப்பட்டது. ஆனால் பின்னர், அவரது சார்பில் வேறு ஓருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

டெக்ஸாஸிலும் இதேபோல இன்னொரு வழக்கு சத்யம் நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ளது.

வேண்டாம் இந்திய நிறுவனங்கள்:

அபர்தீன், ஸ்விஸ் பைனான்ஸ் போன்ற பெரும் முதலீட்டாளர்கள் சத்யம் முதலீட்டிலிருந்து வெளியேறிவிட்டன.

சத்யம் நிறுவனத்தின் இந்த தள்ளாட்டத்துக்குப் பிறகு வரிசையாக அதன் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்கள் வெளியேறி வருகின்றனர்.

போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை வேறு நிறுவனங்களுக்கு தர முடிவு செய்துள்ளன. இதில் கவனிக்கத்தக்கது, வேறு இந்திய நிறுவனங்களுக்கு தங்கள் ஆர்டர்களைத் தர சர்வதேச நிறுவனங்கள் தயங்கத் தொடங்கியுள்ளது தான.

இதைவிட அதிக செலவானாலும் பரவாயில்லை, வேறு நாடுகளைச் சேர்ந்த, இந்தியர் எவரும் பணிபுரியாத நிறுவனமாகத் தேடுங்கள் என பிரபல அமெரிக்க நிறுவனம் ஒன்று தனது நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் சில முக்கியமான துறைகளின் கணக்கு வழக்குகளை சத்யம்தான் நிர்வகித்து வந்தது. இந்த நிறுவனத்தின் குளறுபடிகள் அந்தக் கணக்குகளையும் பாதித்திருக்குமோ என அஞ்சுகின்றன வாடிக்கை நிறுவனங்கள்.

முதலீட்டு நிறுவனங்கள் கடும் சாடல்!:

சத்யம் நிறுவனத்தின் முதலீட்டாளர்களாகத் திகழ்ந்த அபர்தீன், பிடெல்டி, ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல், விஸார்டு அஸெட் மேனேஜ்மெண்ட், எல்ஐசி, ஜேபி மார்கன், சிங்கப்பூர் அரசு, சிட்டி குரூப் ஆகியோர் ஒட்டுமொத்தமாக சத்யம் நிறுவனத்தின் மோசமாக நிர்வாகத் தன்மையைச் சாடியுள்ளனர்.

ஆனால் எல்ஐசி நிறுவனம் மட்டும் தன்னிடமுள்ள சத்யம் பங்குகளை இப்போதைக்கு விற்கும் திட்டமில்லை என அறிவித்துள்ளது.

ரூ.39க்கு சத்யம் பங்குகள்!:

சத்யம் நிறுவனத்தின் பங்கு விலை இப்போது ரூ.39.80 ஆகக் குறைந்துள்ளது. நேற்று மாலை பங்கு வர்த்தகம் முடியும் தறுவாயில் இருந்த விலை இது.

இந் நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தையிலிருந்து சத்யம் வெளியேற்றப்பட்டது.

மற்ற நிறுவனக் கணக்குகளை விசாரிக்க முடிவு:

இதற்கிடையே, மற்ற பெரிய ஐடி நிறுவனங்களின் உண்மையான நிதி நிலை குறித்தும் விசாரணை நடத்த மத்திய அரசின் கம்பெனி விவகாரத் துறை முடிவு செய்துள்ளது

சத்யம்: ஊழியர்களின் கொடிய நிலை-சம்பளம் கொடுக்க பணமில்லை!

ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் 53,000 ஊழியர்களுக்கு இந்த மாதச் சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அடுத்த சம்பளத்துக்குப் பணமில்லை.

இதைத் தொடர்ந்து ஊழியர்கள் பெரும்பாலானோர் தங்கள் விண்ணப்பங்களை வேறு நிறுவனங்களுக்குத் தர ஆரம்பித்துள்ளனர்.

ரூ.8,000 கோடி முறைகேட்டை ஒப்புக் கொண்டு, சத்யம் தலைவர் ராமலிங்கராஜு ராஜினாமா செய்த பிறகு எழுந்துள்ள நிலை இந்திய தொழில்துறையும், வர்த்தகத் துறையும் எதிர்பார்க்காத ஒன்று.

ஒட்டுமொத்தமாக இந்திய நிறுவன்களின் மீதான நம்பிக்கையையே சிதைக்கும் விதத்தில் அமைந்துவிட்டது சத்யம் நிறுவனத்தின் முறைகேடுகள்.

இப்போது சத்யம் நிறுவனத்தின் பெரிய வாடிக்கையாளர்கள், நெஸ்லே, ஜெனரல் மோட்டார்ஸ், சிங்கப்பூர் அரசு உள்பட பல நிறுவனங்களும் சத்யம் சர்வீஸ் வேண்டாம் என அறிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இருக்கிற வாடிக்கையாளர்களையாவது தக்க வைக்கும் நோக்கில், நேற்று சத்யம் தற்காலிக நிர்வாகி ராம் மைனாம்பதி 100 வாடிக்கை நிறுவனங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆதரவு தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த நிறுவனங்கள் தரப்பில் என்ன மறுமொழி கூறப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

ஆனாலும், நிலைமையைச் சமாளித்துவிடலாம். ஊழியர்கள் நம்பிக்கையோடு இருங்கள், தொடர்ந்து ஆதரவு தாருங்கள் என நேற்று மாலை நடந்த பிரஸ்மீட்டில் கேட்டுக் கொண்டார்.

சம்பளம் தர பணமில்லை:

சத்யம் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் 53,000 பேர். இவர்களுக்கு சம்பளம் தர மட்டும் மாதம் ரூ.550 கோடி தேவை. இதைத் தவிர ஊழியர் நல நிதியாக மாதம் ரூ.10 கோடி தர வேண்டுமாம்.

ஆனால் கையிருப்பில் இருப்பதோ, ராஜு விட்டுவைத்துள்ள ரூ. 340 கோடிதான். சம்பளம் போக நிர்வாகச் செலவுகளுக்கு இதைவிட இருமடங்கு பணம் தேவை என்கிறார்கள். எனவே இப்போதைய சூழலில் அடுத்த மாத சம்பளத்தையே கொடுக்க வழியில்லாமல் விழி பிதுங்கி நிற்கிறது சத்யம்.

10,000 பேர் நீக்கம்:

இதற்கிடையே, இன்றைய சூழலின் அவசியம் கருதி 10,000 பேரை சத்யம் நீக்க முடிவு செய்திருப்பதாக பிரபல வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பளச் சுமையைக் குறைக்கவும், நிர்வாகத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த நடிவடிக்கை அவசியம். எனவே அடுத்த 48 மணி நேரத்துக்கு நிறுவனத்தின் எந்த நடவடிக்கை குறித்தும் கேள்வி கேட்காதீர்கள் என சீனியர் நிர்வாகிகளுக்கு ராம் மைனாம்பதி கட்டளையிட்டுள்ளதாக சத்யம் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் 10,000 பேர் நீக்கம் குறித்து வரும் செய்திகள் எதுவும் அதிகாரப்பூர்வமானவை அல்ல. சத்யம் வெளிப்படாயாக எதையும் அறிவிக்கும் வரை பொறுமையாக இருங்கள். வேலை நீக்கம் என்பது அடுத்த மாதம்தான் இருக்கும் என சத்யம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

20,000 ஊழியர் விண்ணப்பம:

சத்யம் நிறுவனத்தில் இனி எதிர்காலமில்லை என முடிவு செய்துவிட்ட பெரும்பாலான ஊழியர்கள் கடந்த இரு தினங்களாக தங்கள் விண்ணப்பங்களை வேலை வாய்ப்பு இணைய தளங்களில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று ஒருநாள் மட்டுமே சத்யம் நிறுவனத்தின் 7,800 ஊழியர்கள் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக, ஐடி-பிபிஓ ஊழியர் யூனியன் தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரப்பூர்வ வேலை நீக்கம் என்ற நடவடிக்கையை சத்யம் கையிலெடுத்தால் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளப் போகிறோம் என கார்த்திக் தெரிவித்தார்.
 

கூட்டத்தில் ராஜூ பங்கேற்க அனுமதியில்லை:

சத்யம் நிறுவன முதலீட்டாளர்களைக் காக்கவும், நிர்வாக முறைகேடுகளைக் களையவும் அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் நாளை நடக்கவுள்ள சத்யம் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் ராமலிங்க ராஜூவை பங்கேற்க அரசு அனுமதிக்காது. புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க ராஜூவை அனுமதிப்பதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

எனவே நாளைய கூட்டத்துக்கு அரசு தரப்பு பார்வையாளர்கள் கலந்து கொள்வது நிச்சயம் எனத் தெரிகிறது.

 
பங்கு சந்தையில் இன்றும் சரிவுதான்

மும்பை : தொடர்ந்து இரண்டாவது வர்த்த நாளாக இன்றும் பங்கு சந்தை சரிவில்தான் முடிந்திருக்கிறது. எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனங்கள், கேப்பிட்டல் குட்ஸ், மெட்டல், டெலிகாம், குறிப்பிட்ட பவர் நிறுவனங்கள் மற்றும் வங்கி களின் பங்குகள் இன்று பெரும் சரிவை சந்தித்தன. இருந்தாலும் டெக்னாலஜி, ஆயில் மார்க்கெட்டிங், குறிப்பிட்ட ஆட்டோ நிறுவனங்கள் மற்றும் என்.டி.பி.சி., நிறுவன பங்குகள் ஏறி இருந்தன. இன்றும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பங்கின் மதிப்பு பாதாளத்திற்கு சென்று விட்டது. தேசிய பங்கு சந்தையில் காலை நேர வர்த்தகத்தில் அதன் மதிப்பு, நேற்றைய நிலையில் இருந்து 41 சதவீதம் குறைந்து, ரூ.6.30 க்கு வந்துவிட்டது. பின்னர் அது வர்த்தக முடிவின் போது ரூ.23.75 விலையில் நிலைகொண்டிருக்கிறது. கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் சராசரியாக 8,64,11,144 பங்குகள் வர்த்தகமாகிக்கொண்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகள், இன்று அதிலிருந்து 149.28 சதவீதம் அதிகமாக 21,54,07,478 பங்குகள் வர்த்தகமாகிருந்தது. இன்றுதான் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ்க்கு கடைசி நாள். வரும் திங்கட்கிழமையில் ( 12.01.09 ) இருந்து அது, பங்கு சந்தைகளின் இன்டக்ஸில் இருந்து எடுக்கப்படுகிறது. சென்செக்ஸ் இல் சத்யத்திற்கு பதிலாக சன் பார்மாவும், நிப்டியில் சத்யத்திற்கு பதிலாக ரிலையன்ஸ் கேப்பிடலு<ம் சேர்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 180.41 புள்ளிகள் ( 1.88 சதவீதம் ) குறைந்து 9,406.47 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 47.40 புள்ளிகள் ( 1.62 சதவீதம் ) குறைந்து 2,873..00 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

ராமலிங்க ராஜூவின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த செபி விசாரணை குழு

ஐதராபாத் : ரூ.7,800 கோடி அளவில் மோசடி செய்து மாட்டிக்கொண்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் ராமலிங்க ரசாஜூ வீட்டிற்குள் இன்று செபி விசாரணை குழுவினர் அதிரடியாக நுழைந்தனர். அவர்கள் உள்ளே சென்றதும் வீடு பூட்டப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. ராமலிங்க ராஜூவின் வீடு ஐதராபாத்தில் பணக்காரர்களின் பங்களாக்கள் இருக்கும் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் இருக்கிறது. சத்யம் கம்ப்யூடர்ஸ் நிறுவன கணக்குகளை சரிபார்க்க நேற்று ஐதராபாத் வந்த செபி விசாரணை குழுவினர், இன்று அதன் தலைமை அலு<வலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் திடீரென ராமலிங்கராஜூவின் வீட்டுக்குள்ளும் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் உள்ளே சென்றதும் வீடு பூட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் மும்பையில் இருக்கும் செபி தலைமை அலுவலகத் திற்கு நேரில் வந்து ஆஜராகும்படி, ராமலிங்க ராஜூவுக்கு நோட்டீஸ் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ராமலிங்க ராஜூவின் வீட்டிற்கு சென்ற செபி குழுவினர் மீண்டும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாகவும் சொல்கிறார்கள். ராமலிங்க ராஜூ இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் வெளிநாடு சென்று விட்டார் என்று சொல்லப்பட்டதை மறுக்கும் அவரது வக்கீல் பரத் குமார், அவர் ஐதராபாத்தில்தான் இருக்கிறார் என்கிறார். அனால் நம்பத்தகுந்த வட்டார தகவலின்படி, அவர் ஐதராபாத்துக்கு வெளியே இருக்கும் ஒரு கெஸட்ஹவுசில் தங்கி இருப்பதாக சொல்கிறார்கள்

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பங்கு மதிப்பு ரூ.6.30 க்கு இறங்கி விட்டது

மும்பை : நிதி மோசடி பிரச்னை வெளியான நாளுக்கு முன், ரூ.544 வரையிலும் விலையில் இருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்கு மதிப்பு, பிரச்னை வெளியான புதன் அன்று ரூ.39.95 க்கு இறங்கியிருந்தது. தேசிய பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகத்தின் போது அதன் பங்கு மதிப்பு, புதன் முடிவு விலையில் இருந்து 85 சதவீதம் குறைந்து ரூ.6.30 க்கு வந்து விட்டது. ஜனவரி 7 ம் தேதி வர்த்தகத்தின் போது, அதற்கு முந்தைய நாள் முடிவு விலையில் இருந்து 78 சதவீதம் வரை குறைந்திருந்த சத்யத்தின் பங்கு மதிப்பு, இன்று மும்பை பங்கு சந்தையில் ரூ.11.50 வரையிலும், தேசிய பங்கு சந்தையில் ரூ.6.30 வரையிலும் குறைந்திருந்தது. சத்யத்தின் பங்குகள் இன்று வர்த்தகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமா அல்லது எடுத்துக்கொள்ளப்பட மாட்டாதா என்று தெளிவாக தெரியாததால் தான் இந்த அளவுக்கு அதன் பங்கு மதிப்பு குறைந்து போனது என்கிறார்கள். ஜனவரி 12ம் தேதியில் இருந்துதான் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகள், அதன் பெஞ்ச்மார்க் இன்டக்ஸில் இருந்து சத்யத்தை நீக்குவதாக அறிவித்திருந்தாலும், பங்கு வர்த்தகர்களிடையே ஒரு வித குழப்பம் இருந்ததால் பங்கு மதிப்பு மிகவும் குறைந்து போனதாக சொல்கிறார்கள். சத்யத்தில் நடந்த நிதி மோசடி குறித்து மத்திய அரசும் செபியும் விசாரணையில் இறங்கியிருக்கும் நிலையில், சத்யம் நிர்வாகமோ, அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு தேவையான நிதியை திரட்ட வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது.

சரியான முறையில்தான் ஆடிட் செய்துள்ளோம் : சத்யம் கம்ப்யூட்டர்ஸின் ஆடிட் நிறுவனம் அறிவிப்பு

மும்பை : சுமார் 8,000 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் குளறுபடி செய்து மோசடியில் ஈடுபட்டதாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பிடிபட்டதுமே, எல்லோருடைய கேள்வியுமே என்னவாக இருந்தது என்றால், இந்த அளவுக்கு மோசடி நடந்தது என்றால் அதை யார் ஆடிட் செய்தது; அவர்கள் எப்படி இதை கண்டுபிடிக்காமல் விட்டார்கள் என்பதுதான். சத்யம் கம்ப்யூட்டர்ஸை ஆடிட் செய்தது பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் ( பி.டபிள்யூ.சி.) என்ற வெளிநாட்டு நிறுவனம். சென்ற நிதி ஆண்டில் மட்டும் இந்தியாவில், சத்யம் உள்பட 139 நிறுவனங்களின் கணக்குகளை அது ஆடிட் செய்திருக்கிறது. இந்நிலையில், சத்யம் மோசடி வெளியாகி இரண்டு நாட்களாகியும் அது குறித்து வாய் திறக்காமல் இருந்த பி.டபிள்யூ.சி., இன்று இந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் முதன் முறையாக பேசியபோது, தாங்கள் முறையான தணிக்கை விதிகளின்படிதான் சத்யம் கணக்குகளை தணிக்கை செய்ததாகவும், தணிக்கைக்கு தேவையான அனைத்து பொருத்தமான ஆதாரங்களும் இருந்ததின் அடிப்படையிலேயே தணிக்கை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடத்தும் எந்த வித விசாரணைக்கும் தாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தில் இது குறித்து விசாரித்ததில், தாங்கள் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் இன்டர்னல் ஆடிட் ரிப்போர்ட்டை சரிபார்க்குமாறு பொருளாதார அறிக்கை மதிப்பீட்டு குழுவிடம் கேட்டிருப்பதாகவும், அவர்களது அறிக்கை வந்ததும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ்க்கு பதிலாக சன் பார்மாவை சென்செக்ஸில் சேர்க்க பங்கு சந்தை முடிவு

மும்பை : பெரிய அளவில் நிதி மோசடியில் ஈடுபட்டு கெட்ட பெயர் வாங்கிய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை வரும் 12ம் தேதியில் இருந்து இன்டக்ஸில் இருந்து மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் நீக்குகின்றன. இது குறித்து நேற்று மும்பை பங்கு சந்தை வெளியிட்ட அறிக்கையில், அதன் பெஞ்ச்மார்க் இன்டக்ஸ் சென்செக்ஸில் இருந்து சத்யம் கம்ப்யூட்டர்ஸை எடுத்து விட்டு அதற்கு பதிலாக சன் பார்மாவை சேர்ப்பதாக தெரிவித்திருக்கிறது. ஜனவரி 12ம் தேதியில் இருந்து இந்த மாற்றம் செய்யப்படுகிறது என்றும் பங்கு வர்த்தகர்களுக்கு அது தெரிவித்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையின் பல்வேறு பிரிவுகளான பிஎஸ்இ – 100, பிஎஸ்இ – 200, பிஎஸ்இ – 500, பிஎஸ்இ – டெக் மற்றும் பிஎஸ்இ – ஐடி ஆகிய எல்லா இன்டக்ஸ்களிலும் இருந்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நீக்கப்படுவதாக அது தெரிவித்திருக்கிறது. பிஎஸ்இ – 100 இன்டக்ஸில் சத்யம் கம்ப்யூட்டர்ஸூக்குப்பதிலாக கிளாஸ்கோ ஸ்மித்லைன் பார்மாசூட்டிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறது. பிஎஸ்இ – 200 இன்டக்ஸில் சத்யத்திற்கு பதிலாக கேஸ்டரால் இந்தியா சேர்க்கப்படுகிறது. பிஎஸ்இ – 500 இன்டக்ஸில் சத்யத்திற்கு பதிலாக கேடில்லா ஹெல்த்கேர் சேர்க்கப்படுகிறது. மும்பை பங்கு சந்தையைப்போலவே தேசிய பங்கு சந்தையும் அதன் எல்லா இன்டக்ஸிலும் இருந்து சத்யத்தை நீக்குகிறது. நிப்டி 50 இன்டக்ஸில் இருந்து சத்யத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ரிலையன்ஸ் கேப்பிட்டலை சேர்க்கிறது. ஆனால் சிஎன்எக்ஸ் 100, எஸ் அண்ட் பி சிஎன்எக்ஸ் 500, சிஎன்எக்ஸ் ஐடி, மற்றும் சிஎன்எக்ஸ் சர்வீஸ் செக்டார் ஆகிய இன்டக்ஸ்களில் சத்யத்திற்கு பதிலாக எந்த நிறுவனம் சேர்க்கப்படுகிறது என்று இன்னும் தெரிவிக்கவில்லை.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்சின் புதிய பாலிசி ‘சூப்பர் சர்பிளஸ்’

சென்னை: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் துவக்கியுள்ள ‘சூப்பர் சர்பிளஸ்’ பாலிசியில் இதுவரை 3,000 பாலிசிகள் மூலம் 1.5 கோடி ரூபாய் பிரீமியம் கிடைத்துள்ளது. இதுகுறித்து, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் தலைவர் ஜெகன்நாதன், கூடுதல் துணைத் தலைவர் ரமா கூறியதாவது: ஹெல்த் இன்சூரன்ஸ் மட்டுமே நடத்தி வரும் ஸ்டார் இன்சூரன்ஸ், மூன்றாவது காலாண்டு முடிவில் 386 கோடி ரூபாய்க்கு பிரீமியம் பெற்றுள்ளது. கடந்தாண்டை விட இது இரு மடங்கு அதிகம். இந்தாண்டு முடிவில் 500 கோடி ரூபாயைப் பெற்றுவிடும். மருத்துவ வசதி, விபத்து காப்பீடு மற்றும் சுற்றுலா மூலம் பாலிசிதாரர்களுக்கு சேவையாற்றி வருகிறது. நீரிழிவு, எச்.ஐ.வி., கேன்சர் உடையோர் மற்றும் மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. புதிய பாலிசியான ‘சூப்பர் சர்பிளஸ்’ மூலம் 3,000 பாலிசிகள் பெற்று 1.5 கோடி ரூபாய் பிரீமியம் கிடைத்துள்ளது. இந்த பாலிசியில் மூன்று லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை மருத்துவ செலவுக்கு வழங்கப்படுகிறது. இதன் ஆண்டு, பாலிசி பிரீமியம் 3,000 முதல் 5,700 வரை பெறப்படுகிறது.

தனிநபர் மற்றும் கணவன்- மனைவி, இரு குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப பாலிசி என இருவகையாக ‘சூப்பர் சர்பிளஸ்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எங்களது பாலிசிதாரர்களுக்கு அடையாள அட்டை, 24 மணி நேர சேவை, 75 டாக்டர்கள் கொண்ட மருத்துவக்குழு என பல்வேறு வசதிகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

அமெரிக்க ‘என்ரான்’ போல இந்தியாவில் ‘சத்யம்’ மோசடி: முதலீட்டாளர்கள் இனி விழிப்பார்களா?

மெகா மோசடி செய்து, அதை கடிதம் மூலம் ஒப்புக்கொண்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூவின் செயல், இந்தியாவிலும் அமெரிக்காவில் உள்ள, ‘என்ரான்’ போல பயங்கர மோசடி நடக்கும் என்பதைப் பறைசாற்றியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ‘என்ரான்’ நிறுவனத்தில் பயங்கர மோசடி கண்டுபிடிக்கப்பட்டு அந்நாட்டு சட்டப்படி பல கோடி டாலர் அபராதமும், சில தண்டனைகளும் விதிக்கப்பட்டன. இந்தியாவில் இப்படி 8,000 கோடி ரூபாய் மெகா மோசடி நடந்திருப்பது கம்பெனிகள் நிர்வாக நடைமுறை பற்றி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர்களை கண்காணிக்கும் ‘செபி’யைத் தாண்டி, ஒழுங்குமுறை அமைப்புகளைத் தாண்டி எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை சத்யம் மோசடி படம்பிடிக்கிறது. சத்யம் கம்பெனிக்கு, ‘பிரைஸ் வாட்டர் ஹவுஸ்’ என்ற பிரமாண்ட ஆடிட்டிங் நிறுவனம் கணக்கு வழக்கு பார்க்கும் நிறுவனம். எப்படி, ‘என்ரான்’ மோசடி வெளியானதும் அதன் தலைமை ஆடிட்டர் ஆர்தர் ஆண்டர்சன் தண்டனையாக தொழில் பார்க்க தடை விதிக்கப்பட்டதோ அதே போல இதற்கும் முடிவு வரவேண்டும் என்று பேசப்படுகிறது. தவிரவும், ‘கம்பெனி நிர்வாகத்தில் சிறப்பானது சத்யம்’ என்று கூறி அதற்காக, ‘தங்க மயில்கள் இரண்டு கொண்ட சிறப்பு விருதை’ சில ஆண்டுகளுக்கு முன் ராமலிங்க ராஜூ வைத்துக் கொண்டு, ‘டிவி’க்களின் புகழாரத்தில் நின்றது உண்டு. அந்த விருதை எந்த அடிப்படையில் வழங்கினர்? ஊழல் மன்னன் ராஜூ என்று தெரியாதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இந்த விருதை திரும்பப் பெற அந்நிறுவனம் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, கம்பெனியின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்ட ராம் மைனாம்பதி, லேசுப்பட்டவர் அல்ல. கம்பெனியின் நிதி விவகாரம், வங்கித் தொடர்புகள் ஆகியவற்றை இதுவரை நிர்வகித்தவர். அவர் தற்போது புதிதாக என்ன மாற்றம் கொண்டு வரப்போகிறார் என்பதும் அடுத்த கேள்வி. மேலும், கம்பெனி நிர்வாகத்தில் நியமிக்கப்பட்ட, ‘சுயேச்சை டைரக்டர்கள்’ பலரும், இந்த மோசடி பற்றி அரைகுறையாகக் கூட உணரவில்லை என்று அடுத்தடுத்து தகவல் தருவது வெளிவந்திருக்கிறது. நேற்று முன்தினம் சத்யம் ராமலிங்க ராஜூ தன்னிலை விளக்கமாக ஐந்து பக்க கடிதம் எழுதி, அதில் ‘புலியின் மீது சவாரி செய்யும் நிலை ஏற்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட அபாயத்தை உணர்ந்து மனச்சாட்சி இடம் தராமல் மோசடிக்கு பொறுப்பேற்பதாக’ எழுதியதும், முதல் நடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது. அங்கு நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்சில், ‘சத்யம் பங்குகள்’ விற்பனை நிறுத்தப்பட்டன. அதே சமயத்தில் சத்யம் பங்குகளும் வீழ்ச்சி கண்டன. சத்யம் மோசடி பரபரப்பாக பேசப்படும் போது, ‘செபி’ முன்னாள் தலைவர் தாமோதரன் தன் பேட்டியில், ‘கம்பெனி மோசடி என்பதில் இது முதலாவதும் அல்ல அல்லது கடைசியாகவும் இருக்காது. எப்படி அவசரப்பட்டு, ‘சிறந்த கம்பெனி விருது’களை யோசிக்காமல் தருகின்றனர் என்ற கேள்வி எழுகிறது. ‘கம்பெனி வரவு செலவுக் கணக்கில் இருக்கும் தகவல் பற்றித் தெரியாமலே அதிகமாக கம்பெனிகளை ‘டிவி’யில் புகழ்கின்றனர். அதற்கும் பங்குச் சந்தைக்கும் தொடர்பு கிடையாது. பொதுவாக முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்’ என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

‘நல்ல கம்பெனிகள் உள்ளன’: சத்யம் மோசடியால் மற்ற கம்பெனிகள் பெயர் கெட்டு விடும் என்ற கருத்தை இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி ஏற்கவில்லை. ஆனால், சத்யம் விவகாரம் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறினார். இனி இத்துறையில் உள்ள எல்லாரும் முதலீட்டாளருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தொழிலில் நாணயத்தை அதிகம் பின்பற்ற வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:சத்யத்திற்கு ஏற்பட்ட பாதிப்பால், இந்தியாவில், ‘அவுட் சோர்சிங்’ பாதிக்கப்படும் என்று கூற முடியாது. மிகவும் நல்ல, சிறப்பான கம்பெனிகள் இருக்கின்றன. டாடா, இன்போசிஸ், விப்ரோ மற்றும் பல கம்பெனிகள் உள்ளன. பயனீட்டாளர்கள், நுகர்வோர்கள் இதை புரிந்து கொண்டால் போதும். அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். மோசடிக் கம்பெனி என்று பெயர், ‘என்ரான்’ மற்றும் ‘வேர்ல்டு காம்’ ஆகியவை தானா மொத்த அமெரிக்கா. மற்ற நல்ல கம்பெனிகள் அங்கு இருக்கின்றன. அதே போல இங்கும் அந்த நிலை உருவாகும்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி ஒருவரால் செய்திருக்க முடியாது : இன்னொரு ஆடிட் நிறுவனம் கருத்து

புதுடில்லி : சத்யம் கம்ப்யூட்டர்ஸில் நடந்த சுமார் ரூ.7,800 கோடி மோசடியை அதன் தலைவர் ராமலிங்க ராஜூ மட்டுமே செய்திருக்க முடியாது என்று கேபிஎம்ஜி என்ற ஆடிட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த நிறுவனம்தான் பிரபல ஐ.டி.நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் விப்ரோ கணக்குகளை ஆடிட் செய்யும் நிறுவனம். அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் ரெக்கி, இன்று நடந்த சிஐஐ கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்தபோது இதனை தெரிவித்தார். இவ்வளவு பெரிய தொகையை கணக்கில் மறைப்பதற்கு பலபேருடைய ஒத்துழைப்பு தேவைப்பட்டிருக்கும். ஒரு குழுவினரே இந்த மோசடியை செய்திருக்க முடியும். ஏன் பேங்க்கில் சர்டிபிகேட் பெறுவதற்கு கூட பேங்க் அதிகாரிகள் <உடந்தையாக இருந்திருக்க வேண்டும் என்றார். இந்த விவகாரங்கள் அங்கு நடக்கும் விசாரணையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

source by- by dinamalar

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: