சத்யம் கம்ப்யூட்டர்சில் நடந்த ரூ. 7,100 கோடி ‘மெகா’ மோசடி : தலைவர் ராஜினாமா

புதுடில்லி: இந்தியாவின் நான்காவது பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்ஸில், ‘மெகா பண மோசடி’ நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கம்பெனியை பெரும் நெருக்கடியில் தள்ளிய அதன் நிறுவனர் மற்றும் தலைவர் ராமலிங்க ராஜூ ராஜினாமா செய்திருக்கிறார். இதன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் நேற்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டது மட்டுமல்லாமல், அவர் செய்த 7,136 கோடி ரூபாய் மோசடி நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம், சுமார் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை கொண்ட இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே அதன் பங்குதாரர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு வந்திருக்கிறது. காரணம், இக்கம்பெனியின் தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினர், மேடாஸ் என்ற கட்டமான நிறுவனத்தை வாங்க முயன்றதை பங்குதாரர்கள் ஏற்கவில்லை. அதற்கு காரணம், மேடாஸ் நிறுவனத்தில் ஏற்கனவே ராமலிங்க ராஜூ குடும்பத்தினருக்கு பங்குகள் இருக்கின்றன. கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு சம்பந்தமே இல்லாத கட்டுமான நிறுவனத்தை வாங்க ராமலிங்கராஜூவின் குடும்பத்தினர் ஆர்வம் காட்டுவது பங்குதாரர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த குழப்பத்தை அடுத்து சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் சிலர் ராஜினாமா செய்து விட்டனர். இப்போது சத்யம் நிறுவனத்தின் கணக்கில் பெரும் பணமோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. சுமார் 7,136 கோடிக்கு கள்ளக்கணக்கு எழுதப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் அதன் தலைவர் ராமலிங்க ராஜூ என்றும் தெரிய வந்திருக்கிறது. இந்த பணமோசடிக்கு தான்தான் காரணம் என்று ஒத்துக்கொண்ட ராமலிங்க ராஜூ, அதன் பங்குதாரர்களுக்கு விளக்கமாக கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். அதில், செப்டம்பர் 30, 2008 உடன் முடிந்த காலத்திய வரவு செலவு கணக்கில், பண கையிருப்பு மற்றும் வங்கியில் இருக்கும் தொகை ரூ.5,361 கோடி என்று காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் இருந்ததோ ரூ.321 கோடி மட்டுமே. ரூ.5,040 கோடி கூடுதலாக காட்டப்பட்டிருக்கிறது. கம்பெனிக்கு ரூ.376 கோடி வட்டி வந்ததாக கணக்கில் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. கம்பெனிக்கு வரவேண்டிய கடன் ரூ.2,651 கோடி என்று கணக்கில் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் <உண்மையில் வரவேண்டியதோ ரூ.2,161 கோடிதான். ரூ.490 கோடி கூடுதலாக எழுதப்பட்டிருக்கிறது. மேலும் கம்பெனி கொடுக்க வேண்டிய கடன் எதுவும் இல்லை என்று கணக்கில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் ரூ.1,230 கோடி கடன் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் கூட்டினால் மொத்தம் ரூ.7,136 கோடி கணக்கில் தவறாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. எனக்கு இம்மாதிரி செய்வது, புலியின் மீது சவாரி செய்வது போலத்தான் என்று தெரியும். புலி நம்மை சாப்பிட்டு விடாமல் எப்படி சவாரி செய்வது என்று தெரியாமல் தொடர்ந்து தவறுகள் செய்து வந்தேன். இதைத் தவிர்க்கவும் முடியவில்லை. கம்பெனிக்கு கூடுதல் வருவாய் வந்ததாக காட்டப்பட்டதால், அதிக அளவில் வர்த்தகம் செய்வதாகக் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு, அதிலும் செலவு அதிகரித்தது. ‘மேடாஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அதனை சமாளிக்க முயன்றதும் கடைசியில் நடக்கவில்லை. இந்த நடப்புகள் போர்டு உறுப்பினர்களுக்குத் தெரியாது. நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன். இத்தவறு நடந்ததால், நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்படுத்திக் கொண்டு அதற்கேற்ற தண்டனையைப் பெறவும் தயார் என்று எழுதியிருக்கிறார். செய்த தவறை ஒப்புக்கொண்டு பங்குதாரர்களுக்கு அவர் எழுதிய கடிதம், பங்குச்சந்தை, ‘செபி’ மற்றும் மத்திய அரசின் கம்பெனி நிர்வாகத்துறை ஆகியவற்றை கலக்கிவிட்டது. இனி சத்யம் மட்டும் அல்ல, இம்மாதிரி கம்பெனிகளின் வருடாந்திர லாப, நஷ்டக் கணக்கில் காட்டப்படும் தகவல்களில் எவ்வளவு உண்மை என்ற கேள்வி எழும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர் கூட்டம் வரும் 10ம் தேதி நடக்க ஏற்பாடு செய்த நிலையில், தலைவர் ராமலிங்க ராஜூ நேற்று அதிரடியாக தான் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு பங்குதாரர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அத்துடன் பதவியையும் ராஜினாமா செய்திருக்கிறார். இவர் ராஜினாமா செய்ததும் அதில் மேலாண் இயக்குனராக இருந்த ராமலிங்க ராஜூவில் சகோதரர் ராம ராஜூவும் ராஜினாமா செய்து விட்டார். எனவே தற்காலிகமாக கம்பெனியின் சி.இ.ஓ.வாக ராம் மைனாம்பதி செயல்படுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவர் ஏற்கனவே போர்டு உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் இருப்பவர்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜூ கைது ஆவாரா ?

ஐதராபாத்:சமுதாயத்தில் பெரிய அந்தஸ்துடன் செயல் பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் ராமலிங்க ராஜூ தற்போது முறைகேடு செய்திருப்பதால், அவரை ஆந்திர அரசு கைது செய்யும் என்று தெரிகிறது. ராமலிங்க ராஜூ ஆந்திராவைச் சேர்ந்தவர். ஐதராபாத்தில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைமையகம் இருக்கிறது.இக்கம்பெனிக்கு ஐதராபாத் மெட்ரோ திட்ட ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மசூலிப்பட்டனம் துறைமுகத் திட்டமும் தரப்பட்டிருக்கிறது. சத்யம் மெகா மோசடி பற்றி ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியிடம் கேட்டபோது, ‘தலையைச் சுற்றும் அளவுக்கு பெரிய பண மோசடி நடந்திருக்கிறது. சி.பி.சி.ஐ.டி., விசாரித்து, தேவைப்பட்டால் கைது நடவடிக்கையையும் எடுக்கும்’ என்றார். இதற்கிடையில் மெகா மோசடியில் ஈடுபட்டு ஒப்புதல் தகவல் தந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் ராமலிங்க ராஜூ செய்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை நிச்சயம் என்று கம்பெனித் துறை வக்கீல்கள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட் சீனீயர் வக்கீல் சி.ஏ.சுந்தரம் கூறுகையில், ‘ராஜூ அளித்த ஒப்புதல் கடிதம் அப்படியே உண்மை என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் அது மிகவும் சீரியசான விஷயம். ‘செபி’ நடைமுறைகளை மீறிய விஷயம், கம்பெனிச் சட்டங்களை மீறிய செயல், இந்திய குற்றவியல் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்’ என்றார். மற்றொரு வக்கீல் சவுத்ரி, ‘கம்பெனிகள் சட்டப்படி அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை தரலாம்’ என்றார்.

சத்யம் என்றொரு பொய்: ஆடியது பங்குச் சந்தை

புதுவருடம் நன்றாக துவங்கியது என்று தான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், சந்தையில் இன்னும் பிரச்னைக்கு குறைவே இல்லை என்ற அளவிற்கு நேற்று கொண்டு சென்று விட்டது. ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று சொல்வர். நேற்று பங்குச் சந்தைக்கு எப்போதுமே வேண்டாம் என்ற அள விற்கு சென்று விட்டது.

ஒரு காலத்தில் சந்தையை உயரத்திற்கு தூக்கிச் சென்ற துறைகளில் சாப்ட்வேர் துறையும் ஒன்று. அந்த துறையில் இருக்கும் கம்பெனிகளில் நான்காவது பெரிய கம்பெனியாகக் கருதப்பட்ட சத்யத்தின் பொய்கள், சந்தையை நேற்று உலுக்கிச் சென்றது. அந்தக் கம்பெனியின் நிதிநிலை அறிக்கைகள் கடந்த பல காலாண்டுகளாக அதிகமாக்கி காட்டப்பட்டதாக அந்த கம்பெனியின் தலைவர் ராமலிங்க ராஜூ நேற்று கூறியதைத் தொடர்ந்து, விழுந்த சந்தை எழுந்திருக்கவே இல்லை.

கம்பெனியில் சிறிய அளவே பங்குகளை வைத்திருந்ததால் கம்பெனியை தாங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டி இது போல செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் மைதாஸ் இன்பிரா என்ற கம்பெனியை வாங்க முயற்சி செய்து அது பிறகு கார்ப்பரேட் கவர்னன்ஸ் சரிவர கடைபிடிக்கப்படவில்லை என்று கைவிடப்பட்டதிலிருந்து சத்யம் பற்றிய செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. கம்பெனியை தங்களிடம் வைத்துக் கொள்ள வேண்டி ரொக்க கையிருப்பு அதிகமாகவும், கடன்களை குறைவாகவும், வரவேண்டிய பாக்கி அதிகமாக இருப்பது போலவும் தொடர்ந்து ஒவ்வொரு காலாண்டும் காண்பித்துக் கொண்டே வந்துள்ளனர். இதை சமாளிப்பதற்கு தான் அவர்களின் துணை நிறுவனங்களின் ஒன்றான மைதாஸ் இன்பிராவை ஒரு பெரிய தொகைக்கு வாங்கலாம் என்று முடிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அது சுபமாக முடியாததால் தற்போது நிலைமையை சரிசெய்ய வேறு வழி தெரியாததால் காலம் காலமாக ஏமாற்றி கொடுத்து வந்த நிதி நிலை அறிக்கைகளைப் பற்றிய உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டியதாகி விட்டது. ‘கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்து தானே ஆக வேண்டும்’ என்ற பழமொழி போல. இது, இந்திய கம்பெனிகளுக்கு உலகளவில் ஒரு களங்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. இந்தியா, உலகத்தின் சாப்ட்வேர் என்று கொஞ்சம் கொஞ்சமாக கட்டிய கோட்டை தகர்ந்தால் எப்படி இருக்கு மோ அப்படி இருந்தது பலரது மனது இந்த செய்தியை கேட்டதும். சத்யமே வெல்லும் என்பது சத்யம் கம்ப்யூட்டர் கம்பெனிக்கும் பொருந்தும். நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 749 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தை 192 புள்ளிகளை இழந்தது. இது சமீபகாலத்தில் ஏற்பட்ட இழப்புகளில் மிகப்பெரிய மற்றும் மறக்க முடியாதது. கடந்தாண்டு துவக்கத் தில் தான் இந்திய பங்குச் சந்தையின் மிகப்பெரிய சரிவின் துவக்கம் ஆரம்பமாயிற்று. இந்த புத்தாண்டில் மறுபடி ஒரு கெட்ட துவக்கம் என்றால் முதலீட்டாளர்களுக்கு பெரிய எதையும் தாங்கும் இதயம் வேண்டும். இல்லாவிடில் பங்குச் சந்தை அவர்களுக்கு ஏற்ற இடமில்லை. சத்யம் கம்ப்யூட்டரின் பங்குகள் மட்டும் 78 சதவீதம் கீழே விழுந்தன. ரிலையன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., எல் அண்டு டி போன்ற கம்பெனிகள் 10 சதவீதத்திற்கு மேலாக விழுந்தன. கடந்த வெள்ளியன்று அறிவிக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால் திங்களும், நேற்று முன்தினமும் சந்தை மேலேயே இருந்தது என்பது உண்மை. மொத்தமாக 370 புள்ளிகள் வரை மேலே சென்றது. 10,000த்தை தாண்டியும் நிலைத்து நின்றது. நேற்றும் துவக்கம் சிறிது மேலேயே இருந்தது, அதாவது மேலே உள்ள செய்தி வரும் வரை.கம்பெனிகள் புதிய வெளியீடு மூலமாக பணத்தை திரட்ட இயல வில்லை. ஆதலால், தங்களின் நீண்ட கால தேவைக்கு பல கம்பெனிகள் பொதுமக்களிடமிருந்து பிக்சட் டிபாசிட்டுகளை திரட்ட ஆரம் பித்துள்ளன. குறைந்த வட்டிக்கு வங்கிகளிடமிருந்தே கடன் கிடைத்ததால் இந்த கம்பெனி பிக்சட் டிபாசிட் மார்க்கெட் இல்லாமலேயே அல்லது மிகவும் குறைவாகவே இருந்து வந்தது. அது தற்போது மறுபடி பெருகி வர ஆரம்பித்திருக்கிறது. சந்தை சமீபகாலமாகவே உலகளவான காரணங்களுக்காக விழுந்து கொண்டு வந்தது. நேற்று ஏற்பட்ட இமாலயச் சரிவு ஒரு கம்பெனியின் தவறுக் காக ஏற்பட்டது. இது போல இன்னும் சில கம்பெனிகளும் இருக்குமானால் சந்தை எப்படி அதை எதிர் கொள்ளப்போகிறது என்று தெரியவில்லை. மேலும், காலாண்டு முடிவுகள் வேறு சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை. பொறுமை காக்க வேண்டிய நேரம்.

– சேதுராமன் சாத்தப்பன்- source dinamalarbusiness

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஸ்பான்சராக இருக்கும் சத்யத்தை கூர்ந்து கவனிக்கிறது எஃப்.ஐ.எஃப்.ஏ

புதுடில்லி : 2010 மற்றும் 2014 ல் நடக்க இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பார்ட்னராக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் இருக்கிறது. இப்பேது அது தவறான கணக்கு காண்பித்து உருக்குலைந்து போயிருப்பதால், அதன் போக்கை எஃப்.ஐ.எஃப்.ஏ., ( ஃபெரரேஷன் ஆஃப் ஃபுட்பால் அசோசியேஷன் ) கூர்ந்து கவனித்து வருகிறது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஸ்பான்சராக சேர்ந்துள்ள முதல் இந்திய நிறுவனம் சத்யம் தான். 2007ல் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேடாஸ் நிறுவனத்தின் தலைவரும் ராஜினாமா

ஐதராபாத் : ராமலிங்கராஜூவின் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் மேடாஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.சின்ஹா இன்று அவரது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இந்த நிறுவனத்தில் ராமலிங்க ராஜூவின் குடும்பத்தினருக்கு 36 சதவீத பங்குகள் இருக்கின்றன. இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்குத்தான் ராமலிங்க ராஜூ முயற்சி செய்து அது தோல்லியில் முடிந்தது

இந்த மாதத்தில் 15 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்கிறது மைக்ரோசாப்ட்

லண்டன் : உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட், அதன் ஊழியரகளில் எண்ணிக்கையில் 15 ஆயிரத்தை இந்த மாதம் குறைக்கிறது என்று டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதன் 32 வருட சரித்திரத்தில் இப்போதுதான் முதன் முறையாக இவ்வளவு அதிகமான ஊழியர்களை வேலை நீக்கம் செய்கிறது என்று டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: