சத்யம் என்ற பொய்…!

சத்யம என்ற பொய்யின் வீழ்ச்சிக்குப் பிறகு…

மும்பை / நியூயார்க்: சத்யம் நிறுவனத்தின் பங்குகளை தேசிய பங்குச் சந்தை நிப்டியிலிருந்து நீக்கப்படுவதாக செபி நேற்று அறிவித்துள்ளது.

மேலும் சிஎன்எக்ஸ் 500 பட்டியலில் இருந்தும் சத்யம் நீக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சத்யம் வெளியேற்றப்பட்டுவிட்டது. அங்கு 1 டாலருக்கும் கீழ் குறைந்துவிட்டன சத்யம் பங்குகள்.

இன்னும் சென்செக்ஸிலிருந்து நீக்கப்படவில்லை. ஆனால் அதுகுறித்த நாளை அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுக்க உள்ள சத்யம் நிறுவனத்தின் கிளைகளில் 53 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இன்றைய சூழலில், இந்த நிறுவனத்தின் பெரிய வாடிக்கையாளர்கள் அனைவருமே வெளியேறிவிட்டனர். எனவே இந்த ஊழியர்கள் கதி என்னவென்பதுதான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

அமெரிக்காவில் வழக்கு

இதற்கிடையே, சத்யம் நிறுவனத்தின் வைப்புப் பத்திரங்களை வாங்கி ஏமாந்ததவர்கள் சார்பாக, அமெரிக்க நிறுவனம் ஒன்று நியூயார்க் கோர்டில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் நேரில் ஆஜராக வேண்டும் ராஜுவுக்கு நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ராஜு இப்போது இந்தியாவில் இல்லை. இந்த வழக்கில் ஆஜராக அமெரிக்கா போய்விட்டார் என்றே நேற்று கூறப்பட்டது. ஆனால் பின்னர், அவரது சார்பில் வேறு ஓருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

டெக்ஸாஸிலும் இதேபோல இன்னொரு வழக்கு சத்யம் நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ளது.

வேண்டாம் இந்திய நிறுவனங்கள்!

அபர்தீன், ஸ்விஸ் பைனான்ஸ் உடனடியாக சத்யம் முதலீட்டாளர் குழுவிலிருந்து வெளியேறின.
சத்யம் நிறுவனத்தின் இந்த தள்ளாட்டத்துக்குப் பிறகு வரிசையாக அதன் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்கள் வெளியேறி வருகின்றனர்.

போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை வேறு நிறுவனங்களுக்கு தர முடிவு செய்துள்யுள்ளன. இதில் கவனிக்கத்தக்கது, வேறு இந்திய நிறுவனங்களுக்கு தங்கள் ஆர்டர்களைத் தர சர்வதேச நிறுவனங்கள் தயங்கத் தொடங்கியுள்ளன. இதைவிட அதிக செலவானாலும் பரவாயில்லை, வேறு நாடுகளைச் சேர்ந்த, இந்தியர் எவரும் பணிபுரியாத நிறுவனமாகத் தேடுங்கள் என பிரபல அமெரிக்க நிறுவனம் ஒன்று தனது நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் சில முக்கியமான துறைகளின் கணக்கு வழக்குகளை சத்யம்தான் நிர்வகித்து வந்தது. இந்த நிறுவனத்தின் குளறுபடிகள் அந்தக் கணக்குகளையும் பாதித்திருக்குமோ என அஞ்சுகின்றன வாடிக்கை நிறுவனங்கள்.

முதலீட்டு நிறுவனங்கள் கடும் சாடல்!

சத்யம் நிறுவனத்தின் முதலீட்டாளர்களாகத் திகழ்ந்த அபர்தீன், பிடெல்டி, ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல், விஸார்டு அஸெட் மேனேஜ்மெண்ட், எல்ஐசி, ஜேபி மார்கன், சிங்கப்பூர் அரசு, சிட்டி குரூப் ஆகியோர் ஒட்டுமொத்தமாக சத்யம் நிறுவனத்தின் மோசமாக நிர்வாகத் தன்மையைச் சாடியுள்ளனர்.

சத்யம் நிறுவன நிர்வாகம் மீது எங்களுக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. அவர்களது கணக்குகளில் ஒளிவு மறைவற்ற தன்மை இருந்ததே இல்லை என்கின்றன இந்த நிறுவனங்கள். ஆனால் ராஜுவின் மோசடி குறித்து தனிப்பட்ட முறையில் கருத்து சொல்ல விரகும்பவில்லை என தெரிவித்து இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை, சத்யம் நிறுவன முதலீட்டாளர் பட்டியலிலிருந்து வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் எல்ஐசி நிறுவனம் மட்டும் தன்னிடமுள்ள சத்யம் பங்குகளை இப்போதைக்கு விற்கும் திட்டமில்லை என அறிவித்துள்ளது.

இது ஒரு எச்சரிக்கை! -நாராயணமூர்த்தி

சத்யம் நிறுவனத்தின் இன்றைய சரிவு மற்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒரு பாடம் என்று தெரிவித்துள்ளார் இன்போஸிஸ் நிறுவனர் மற்றும் தலைவர் (கௌரவ) நாராயணமூர்த்தி.

அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான சத்யத்துக்கு வந்துள்ள இந்த நிலை எனக்கு அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது. நிர்வாகக் குளறுபடிக்கு மிகச் சரியான உதாரணம் சத்யத்தின் இன்றைய நிலைதான்.
ஆனால் இந்த ஒரு நிறுவனத்தைப் பார்த்து ஒட்டுமொத்த இந்திய நிறுவனங்களையும் எடைபோடக் கூடாது சர்வதேச நிறுவனங்கள். நல்ல நேர்மையான நிறுவனங்கள் இந்தியாவில் நிறையவே உள்ளன என்பதை மதிப்புக்குரிய வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.

மற்றபடி சத்யம் நிறுவனத்தில் இதுவரை நிகழ்ந்துள்ளவை வருத்தம் தருபவை. முதலீட்டாளர்கள் இனி நன்கு ஆராய்ந்த பிறகே ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் சத்யம் சரிவு.
இந்த நிலை மாறும். இந்த நேரத்தில் இந்திய நிறுவனங்கள் அனைவருமே, தங்கள் நேர்மையையும், சட்டப் பூர்வ செயல்பாடுகளையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம், என்றார் நாராயணமூர்த்தி.

டாடா கன்ஸல்டன்ஸி, விப்ரோ, டெக் மஹிந்திரா நிறுவனங்கள் தங்கள் அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளன.
சத்யம் ஊழியர்களைக் காப்பாற்றும் வகையில் உடனடி நடவடிக்கைதான் இப்பேது அவசியம் என விப்ரோவின் அஜீம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

ரூ.39க்கு சத்யம் பங்குகள்!

சத்யம் நிறுவனத்தின் பங்கு விலை இப்போது ரூ.39.80 ஆகக் குறைந்துள்ளது. நேற்று மாலை பங்கு வர்த்தகம் முடியும் தறுவாயில் இருந்த விலை இது. இன்று பங்குச் சந்தை விடுமுறை. நாளைதான் சத்யம் பங்கு விலை இன்னும் குறையுமா அல்லது இந்த நிலையிலேயே சென்செக்ஸை விட்டு வெளியேற்றப்படுமா என்பது தெரியவரும்.

மற்ற நிறுவனக் கணக்குகளை விசாரிக்க முடிவு!

இதற்கிடையே, மற்ற பெரிய ஐடி நிறுவனங்களின் உண்மையான நிதி நிலை குறித்தும் விசாரணை நடத்த மத்திய அரசின் கம்பெனி விவகாரத் துறை முடிவு செய்துள்ளது.

Source: தட்ஸ்தமிழ்

எண்ணெய் நிறுவன யூனியன் தலைவர்களை கைது செய்ய போலீஸ் முயற்சி

புதுடில்லி : பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்கத்தினர் நடத்தும் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதால், இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதன் யூனியன் தலைவர்களை கைது செய்ய டில்லி மற்றும் உத்தர பிரதேச போலீசார் முயன்று வருகிறார்கள். ஓ.எஸ்.ஓ.ஏ., என்று சொல்லப்படும் ஆயில் செக்டார் ஆபீசர்ஸ் அசோசியேஷன் தலைவர் அமித்குளார் உள்பட முக்கிய நபர்களை கைது செய்ய இன்று மதியம் இந்தியன் ஆயில் கார்பரேஷன் அலுவலகத்திற்குள் நுழைந்த போலீசாரால் உள்ளுக்குள் வரை செல்ல முடியவில்லை. அவர்களை கைது செய்ய போலீசார் அரஸ்ட் வாரண்ட் வைத்திருந்தும் அவர்களை கைது செய்ய முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் நேற்றைக்கு முந்தின நாளில் இருந்தே தலைமறைவாகி விட்டனர். இரண்டு ஓ.என்.ஜி.சி., அதிகாரிகளை மட்டுமே போலீசாரால் நேற்று கைது செய்ய முடிந்தது. டில்லி மற்றும் மற்ற மாநிலங்கள், அத்தியாவசியப்பொருட்கள் நிர்வாக சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கின்றன. 14 பொதுத்துறை எண்ணெய் நிறுவன ஊழியர்களும் இணைந்திருப்பது ஓ.எஸ்.ஓ.ஏ.,வில்தான்.

கச்சா எண்ணெய் விலை குறைந்தது

நியுயார்க் : கடந்த ஒரு வாரமாக உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை நேற்று குறைந்துவிட்டது. அமெரிக்கா சேமித்து வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யின் அளவு அதிகரித்திருப்பதாலும், பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்திருப்பதாலும் நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டது. அமெரிக்காவில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை நேற்று பேரலுக்கு 5.95 டாலர் குறைந்து 42.63 டாலராகி விட்டது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 4.67 டாலர் குறைந்து 45.86 டாலராகி விட்டது. கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததற்கு காரணம், காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் அப்படியே பக்கத்து அரபு நாடுகளுக்கும் பரவிவிடுமோ என்ற அச்சமும், உக்ரைனுக்கு அளித்து வந்த காஸ் சப்ளையை ரஷ்யா நிறுத்தியதால் அது மற்ற ஐரோப்பிய நாடுகளையும் பாதிக்குமோ என்ற பயமும் தான் என்கிறார்கள். இருந்தாலும் அமெரிக்கா வழக்கமாக சேமித்து வைக்கும் கச்சா எண்ணெய்யில் அளவு அதிகரித்து விட்டதால் இப்போது விலை குறைந்து விட்டது. 1.5 மில்லியன் பேரல்களை சேமித்தால் போதும் என்று இருக்கும் போது, அது 6.7 மில்லியன் பேரல்களாக அதிகரித்து விட்டது.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மீது இரண்டு மோசடி வழக்குகள் : அமெரிக்க கோர்ட்டில் தாக்கல்

நியுயார்க் : இந்திய கம்ப்யூட்டர் நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நியுயார்க் பங்கு சந்தையிலும் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஆகும். நேற்று அந்த நிறுவனம் மிகப்பெரிய நிதி மோசடி செய்திருப்பது தெரிய வந்ததை அடுத்து நியுயார்க் சந்தையில் அதன் பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. மேலும் முதலீட்டாளர்களிடம் தவறான கணக்கு காண்பித்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டதாக அதன் மீது நியுயார்க் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கின்றன. முதலீட்டாளர்கள் சாப்பாக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.7,100 கோடிக்கு தவறான கணக்கு காண்பித்திருந்தது நேற்று தெரிய வந்திருந்ததை அடுத்து, இந்திய பங்கு சந்தையிலும் அதன் பங்கு மதிப்பு 80 சதவீதம் வரை குறைந்து போனது

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி : செபி விசாரணை

மும்பை : பங்கு சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபி, சத்யம் கம்ப்யூட்டர்ஸில் நடந்த சுமார் ரூ.7,100 கோடி மோசடி குறித்து விசாரணையில் இறங்கியிருக்கிறது. இன்று அதன் குழு ஒன்று ஐதராபாத் சென்று அங்குள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் அலுவலகத்தில் அக்கவுன்ட் புத்தகத்தை சரிபார்க்கிறார்கள். மேலும் மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறைக்கு தகவல் தெரிவித்து, விசாரணையில் அவர்களையும் ஈடுபடுத்த கேட்டுக்கொண்டிருக்கிறது. ஏழு வகையினபிரிவுகளின் கீழ் என்னென்ன தவறுகள் நடந்திருக்கிறது என்று செபி விசாரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. செபியின் சட்டதிட்டங்கள் எவ்வாறெல்லாம் மீறப்பட்டிருக்கின்றன என்பதை அந்த குழு கண்டுபிடிக்கும். இந்த குழுவுக்கு தலைவராக செபியின் பொது மேளாளர் சுணில்குமார் இருந்து, கடந்த காலங்களில் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகள் வாங்கப்பட்டது மற்றும் விற்கப்பட்டது குறித்து ஆராய்ந்து அதில் என்னென்ன தவறுகள் நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடிப்பார். கடந்த சில வாரங்களாகவே செபியின் ஹிட் லிஸ்ட்டில்தான் சத்யம் இருந்து வந்திருக்கிறது. நேற்று அதன் மோசடி பகிரங்கமாக வெளியிடப்பட்டதும், அதனை விசாரிக்க செபி விசாரணை குழுவை நியமித்து விட்டது.

பரமபதம் அல்லது மாயாபஜார்

   போட்டிகள் நிறைந்த உலகத்தின்
பந்தயத் தடத்தில் இப்போது
வேகமாக ஓடிக் கொண்டிருந்த குதிரை
கண்முன்னே விழுந்து விட்டது.

 போட்டியாளன் ஒருவன் வெளியேற்றப்பட்டதில்
கூடவே ‘பங்கு’ கொண்டவர்கள் எவருக்கும்
எந்த சந்தோஷமும் இல்லை
மிரண்டு, நடுங்கியே பார்க்கிறார்கள்.

து போட்டியாளன் யார் விழுந்தாலும்
மக்களை ஏமாற்றும் தங்களது யுத்த தந்திரம்
ஒன்று அம்பலமாகிறது
என்று அவர்களுக்குத் தெரியும்.

 கால் தடுக்கி விழுந்தான் என்பார்கள்
அல்லது
அதிக ஊக்க மருந்து உட்கொண்டான் என்பார்கள்.

  இந்த ஓடுகளமும்,
தொடர்ந்து இதிலேயே ஓடுவதும்
முக்கியம் அவர்களுக்கு.

  “லாபம் குறைந்தால்
மூலதனத்திற்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.
தன்னை நிலைநிறுத்திக் கொள்ள
எது வேண்டுமானாலும் செய்யும்”
மார்க்ஸின் வரிகள் இப்போது
“சத்தியமா’க ஒலிக்கிறது!

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: