சத்யம் கம்ப்யூட்டர்ஸில் நிதி மோசடி : சேர்மன் ராமலிங்க ராஜூ ராஜினாமா

ஹைதராபாத் : சத்யம் கம்ப்யூடர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சேர்மனான ராமலிங்க ராஜூ ராஜினாமா செய்திருக்கிறார். அதன் பேலன்ஸ்ஷீட்டில் பண கையிருப்பு மற்றும் பேங்க் பேலன்ஸ் போன்றவை கடந்த சில வருடங்களாகவே தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இந்த பணமோசடியை ராஜூ ஒத்துக்கொண்டிருக்கிறார். இது குறித்து ராமலிங்க ராஜூ, அதன் போர்டு மெம்பர்களுக்கு விளக்கமாக கடிதம் எழுதியுள்ளதாக சொல்லப்பட்டாலும், போர்டு மெம்பர்களோ இதுகுறித்த தெளிவான விபரம் தங்களுக்கு தெரியாது என்கிறார்கள்.ராமலிங்க ராஷூ ராஜினாமா செய்ததும், அதன் மேலாண் இயக்குனரும் ராமலிங்க ராஜூவின் சகோதரருமான ராம ராஜூவும் ராஜினாமா செய்து விட்டார். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் போர்டு மீட்டிங் ஜனவரி 10 ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் இந்த ராஜினாமா விவகாரம் கார்பரேட் உலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த குழப்பத்தால் சத்யத்தின் பங்கு மதிப்பு 70 சதவீதத்திற்கு மேல் குறைந்து விட்டது. இப்போது தற்காலிகமாக ராம் மைனம்பதி என்பவர் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சத்யம் கம்ப்யூட்டரஸின் பங்குகள் 72 சதவீதத்திற்கு மேல் குறைந்தது

மும்பை : இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்ஸில் மிகப்பெரிய நிதி மோசடி நடந்து, அதன் காரணமாக அதன் நிறுவனர் மற்றும் சேர்மன் ராமலிங்க ராஜூ ராஜினாமா செய்ததை அடுத்து, அதன் பங்கு மதிப்பு 72 சதவீதத்திற்கு மேல் குறைந்து விட்டது. இன்று காலை ரூ.179.10 க்கு ஆரம்பித்த அதன் பங்கு மதிப்பு, சேர்மன் ராஜினாமாவுக்குப்பின் மதியம் 2.30 மணி அளவில் 72.70 சதவீதம் குறைந்து ரூ.48.90 க்கு வந்து விட்டது. சத்யத்தின் வருமானம் மற்றும் லாபம், கடந்த சில வருடங்களாகவே தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது இப்போது தெரிய வந்துள்ளது. கடந்த மாதத்தில், சாப்ட்வேர் நிறுவனத்திற்கு சம்பந்மே இல்லாத கட்டுமான நிறுவனமான மேடாஸ் ஐ 1.6 பில்லியன் டாலருக்கு வாங்க, அதன் சேர்மன் ராமலிங்க ராஜூவின் குடும்பத்தினர் முயற்சி செய்து, அது நடக்காமல் போனதில் இருந்தே சத்யம் மீது ஒரு சந்தேக பார்வை விழுந்து விட்டது. ஏனென்றால் மேடாஸ் நிறுவனத்தில் ராமலிங்க ராஜூவுக்கு நிறைய பங்குகள் இருக்கின்றன. இப்போதுள்ள சத்யத்தின் நிலை குறித்து கம்பெனி நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை முழுவதுமாக சத்யம் இழந்து விட்டது. கடந்த சில வருடங்களாகவே அது தவறான கணக்கை காண்பித்தே நிறுவனத்தை நடத்தி வந்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. தவறான தகவல்களை சொல்லியே அவர்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். அங்கு இன்னும் கூட ஏதாவது மோசடி நடந்திருக்கலாம் என்ற கருத்தும் முதலீட்டாளர்களிடம் இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். இந்நிலையில் சத்யத்தின் மோசடி மற்றும் தவறான கணக்கால் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டது குறித்து செபி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இது பற்றி செபி அதிகாரிகளிடம் கேட்டபோது, தாங்கள் இந்த மோசடி குறித்து ஆராய்ந்து வருவதாகவும்,விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடியால் பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி

மும்பை : ஹர்ஷத் மேத்தா, கேதன் பரேக் போன்றவர்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மோசடியை சத்யம் கம்ப்யூட்டர்ஸ் சேர்மன் ராமலிங்க ராஜூ செய்திருப்பதாக சொல்கிறார்கள். இன்று காலை இந்த விவகாரம் வெளியில் வராமல் இருந்த வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, சத்யம் விவகாரம் வெளிவந்ததும் மழமழவென சரிய துவங்கி விட்டது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பங்கின் மதிப்பு, என்றுமில்லாத அளவாக அதன் ஆரம்ப விலையில் இருந்து 77.51 சதவீதம் குறைந்து ரூ.40.25 க்கு வந்து விட்டது. அதன் பங்குகள், கடந்த ஐந்து நாட்களாக சராசரியாக 3,09,60, 602 பங்குகள் வியாபாரமாகிக்கொண்டிருந்த நிலையில், இன்று 33,00,58,513 பங்குகள் வியாபாரமாகி இருக்கிறது. இது 966.06 சதவீதம் அதிகம். இது தவிர, 2,88,984 பங்குகளை வாங்க ஆள் இருந்தும் விற்பதற்கு ஆள் இல்லை. சத்யத்தின் மோசமான நடவடிக்கையால் மும்பை பங்கு சந்தையில் இன்று பகல் நேரத்தில் சென்செக்ஸ் 9,510.15 புள்ளிகள் வரை இறங்கி, பின்னர் வர்த்தக முடிவில் 749.05 புள்ளிகள் ( 7.25 சதவீதம் ) குறைந்து 9,586.88 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. அதே போல் தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி, 2,888.20 புள்ளிகள் வரை குறைந்து, முடிவில் 192.40 புள்ளிகள் ( 6.18 சதவீதம் ) குறைந்து 2,920.40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று அதிகம் நஷ்டமடைந்தது சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தான்( 77.51 சதவீதம் ). அதற்கு அடுத்ததாக ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் ( 26.03 சதவீதம்). இது தவிர ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டி.எல்ஃப், ரிலையன்ஸ் இன்ஃப்ரா, சுஸ்லான் எனர்ஜி, யூனிடெக், மற்றும் ஹெச்.சி.எல். டெக் ( 12 – 21 சதவீதம் ) நஷ்டமடைந்திருக்கின்றன. ஆனால் இன்போசிஸ், விப்ரோ, ஹெச்.யு.எல்., மாருதி சுசுகி மற்றும் சன் பார்மா பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் பங்குகள் 17 சதவீதம், ஐ.டி.நிறுவனங்கள் 10 சதவீதம், பேங்க், ஆயில் அண்ட் கேஸ், மெட்டல், கேப்பிடல் குட்ஸ், பவர் நிறுவனங்கள் 5 – 8 சதவீதம், ஹெல்த்கேர், ஆட்டோ நிறுவனங்கள் 2 – 4 சதவீதம் இறங்கியிருந்தன.

சத்யம் – இன்னொரு என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

 

மகன்களின் நிறுவனங்களை வாங்கத் திட்டமிட்டு பல களேபரங்கள் நடந்து 20 நாட்கள் கழித்து சத்யம் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மனசாட்சியின்படி செய்திருக்கிறாராம்!

வரவு செலவுக் கணக்கில் பொய்யாக 5,040 கோடி ரூபாய்கள் பண இருப்பு உள்ளதாகக் காட்டியிருக்கிறார்கள் (மொத்த தொகையே 5,400 கோடிதானாம், அதில் 5,040 கோடி பொய்!). தவிர வரவேண்டிய தொகையை ஒரு 500 கோடி அதிகப்படுத்திக் காண்பித்தது, கொடுக்க வேண்டிய தொகையில் ஒரு 1,200 கோடி குறைத்துக் காண்பித்தது, வட்டியில் ஒரு 400 கோடி என சகலத்திலும் விளையாடியிருக்கிறார் மனிதர். அதுவும் இத்தகைய தில்லுமுல்லுகளைச் சில பல வருடங்களாகத் தொடர்ந்து செய்துவருகிறாராம்.

கூத்து என்னவென்றால், உலகத்தில் பெரிய அக்கௌண்டிங் நிறுவனங்களுள் ஒன்றான Price Waterhousecoopers தான் இவர்களது ஆடிட்டர்கள்! அது எப்படி இவ்வளவு பெரிய கோல்மால் தெரியாமல் போகுமென்பது அவர்களுக்கும் ராஜூவுக்குமே வெளிச்சம். பன்னாட்டு நிறுவனங்களைப் பார்த்தாலே பயமாகத்தான் இருக்கிறது

இன்னொரு விஷயம். அவரது பங்குகளை ஏற்கனவே அவர் அடமானம் (அதிக விலையில் என்பதைச் சொல்லத் தேவையில்லை) வைத்துவிட்டார். இப்போது அவர்களும் அதில் பெரும்பாலான பங்குகளை விற்றுவிட்டார்கள். இதெல்லாம் முடிந்தபிறகே ராமலிங்க ராஜூ தன்னுடைய ஒப்புதல் கடிதத்தைத் தந்திருக்கிறார்.

சிலருக்குத் தோன்றலாம். வருமான வரியைக் குறைக்க வேண்டி அனைவரும் லாபத்தைக் குறைத்துத்தான் காண்பிப்பார்கள். ஏன் ஐடி நிறுவனங்கள் ஏற்றிக் காண்பிக்கின்றன என்று… பதில் எளிமையானது. இப்போது இந்தியாவில் பல வருடங்களாக stp / ehtp களுக்கு வருமான வரியே கிடையாது! லாபத்தைக் கூட்டிக் காண்பித்தால் சந்தையில் பங்குகளில் விலை கூடும், புதிய பங்குகளைவிடலாம் என ஒரு வட்டம் அது.

இன்னும் என்னென்ன விஷயங்கள் வெளியில் வராமல் அமுக்கப் பட்டிருக்கிறதோ தெரியவில்லை. இனி அரசின் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம். கடந்த கால வரலாற்றைப் பார்த்து அது எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

ஆனால், நிறைய லாபம் வருகிற நிறுவனம் என நம்பி சத்யம் பங்குகளை வாங்கியவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. அடிப்படையில் பங்குச் சந்தை ஒரு சூதாட்டம் என்பதை எவ்வளவு பேர் எவ்வளவுவிதமாகச் சொன்னாலும் புரியாதவர்களை என்ன செய்ய?

இது தொடர்பாய் என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது என்ற தலைப்பில் நான் எழுதிய இடுகையை இங்கே படிக்கலாம் :

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது

நீங்கள் ஒரு தொழில் நடத்துகிறீர்கள். அதற்குப் பணம் தேவைப் படுகிறது. கடனாக வாங்கினால் முழுப் பணத்திற்கும் வட்டி தரவேண்டும். அசலையும் திருப்பித் தந்து தொலைக்கவேண்டும்.

அதற்குப் பதிலாக பத்து ரூபாய் அடக்க விலையில் பங்குகளைவிட்டால், அதற்கு ப்ரீமியமாக 490 வைத்து 500 ரூபாய் ஒரு பங்கு என விற்கலாம். அதன்மூலம் கிடைக்கும் ஆயிரக்கணக்கான கோடிகள் கொண்டு தொழில் செய்யலாம். மொத்த 500 ரூபாய்க்குமென இல்லாது அடக்கவிலையான 10 ரூபாய்க்கு மட்டும் டிவிடெண்ட் கொடுத்தால் போதும்.

அப்படி மக்களிடமிருந்து வாங்கிய பணத்தை தன்னுடைய மகன்களின் நிறுவனங்களை வாங்குகிறேன் எனச் சொல்லி சுருட்டிக் கொள்ளலாம்.

அடுத்தவன் பையிலிருந்து பணத்தை எடுத்தால் அதற்குப் பெயர் திருட்டு. மாட்டினால் தர்ம அடியும் சிறை தண்டனையும் உண்டு.

அதையே பெரிய அளவில் செய்தால்…

சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு முடிவெடுக்கிறது. சுமார் 8000 கோடி ரூபாய்க்கு மேதாஸ் ப்ராபர்டீஸ் மற்றும் மேதாஸ் இன்ஃபிராவை வாங்குவாதாக. ப்ராபர்டீஸிற்கு 1.3 பில்லியன் டாலரும் இன்ஃபிராவிற்கு 0.3 பில்லியன் டாலரும் மதிப்பிடப்பட்டு அந்த விலையில் வாங்க முடிவெடுக்கிறார்கள். இதில் இன்ஃபிரா மட்டுமே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம். ப்ராபர்டீஸ் தனியார் சொந்தம். (Satyamஐ தலைகீழாக எழுதினால் வருவதுதான் Maytas!).

மேதாஸ் ப்ராபர்டீஸும் மேதாஸ் இன்ஃபிராவும் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் மகன்களின் கம்பெனிகள். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ராஜூக்களின் பங்கு மதிப்பு 300 மில்லியன் டாலர்கள். 300 மில்லியன் முதலீட்டில் 1.6 பில்லியன் பணத்தை தன் மகன்களுக்குத் தர முடிவெடுக்கிறார் ராமலிங்க ராஜூ. இதற்கு பங்குதாரர்களின் ஒப்புதல் தேவையில்லை எனவும் முடிவெடுக்கிறார்.

இம்முடிவு செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை மூடும் நேரத்திற்குப் பிறகு எடுக்கப்படுகிறது. New York Exchangeல் சத்யம் பங்குகள் ரணகளப் படுகிறது. முதலீட்டாளர்கள் நெருக்குகிறார்கள். அடுத்த நாள் காலை மகன்களின் நிறுவனங்களை வாங்கும் முடிவை கைவிடுகிறார்கள். ஆனாலும் பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 30% வீழ்கின்றன.

இதில் இன்னமும் சில உள்குத்துகள் இருக்கின்றன.

மேதாஸ் ப்ராபர்டீஸ் நிறுவனத்தில் மதிப்பு 1.3 பில்லியன் டாலராக இருக்க முடியாதென்றும் அது தன் வசமிருக்கும் விவசாய நிலங்களை வணிக நிலங்களாகக் காட்டி அதன்மூலம் தங்கள் நிறுவன மதிப்பை 90% ஊதிப் பெரிதாக்கியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதாவது விற்பது மகனென்றால், பத்து ரூபாய்ப் பொருளை 100 ரூபாய்க்கு வாங்குவது, அதுவும் அடுத்தவர் பணத்தில்!.

வேறு சிலர் இப்படி அறிவித்ததன்மூலம் சந்தையில் சத்யம் பங்குகளின் மதிப்பு விழும், அப்போது தன்னுடைய பினாமிகளின்மூலம் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கலாம் என்பது ராமலிங்க ராஜூவின் கணக்காக இருக்கலாம் என்கிறார்கள்.

அதாவது, யாரும் எதிர்க்கவில்லையென்றால், தன் மகன்களுக்கு 8000 கோடி ரூபாய் லாபம். எதிர்த்தால், பங்குகளைக் குறைந்த விலையில் வாங்கி பிறகு விற்றுக் கொள்ளை லாபம் அடையலாம்.

இதுதான் தலை விழுந்தால் நான் ஜெயித்தேன், பூ விழுந்தால் நீ தோற்றாய் என்பதோ??

post by

http://www.jyovramsundar.blogspot.com/2008/12/blog-post_19.html

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: