புத்தாண்டில் களைகட்டுகிறது பங்குச் சந்தை

கடந்த 2008ல் சந்தையின் சரிவும், சந்தையில் இப்போது இருக்கும் முதலீட்டாளர்களில் பலர் முன்பு பார்த்திராதது. அதாவது, இதற்கு முன் இது போல ஒரு சரிவு 1979ம் ஆண்டு ஏற்பட்டது. அதன் பிறகு தற்போது தான் ஏற்பட்டிருக்கிறது. மொத்தமாக சந்தையில் 53 சதவீதம் வரை சரிவு. சிலருக்கு சில பங்குகள் 80 சதவீதம் வரை சரிவைக் கொடுத்துள்ளன. புது ஆண்டு, புதிய எதிர்பார்ப்புகள் என்று சந்தை இரண்டு நாட்களாக களைகட்டிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் 31ம் தேதி சந்தை கீழே இறங்கி சென்டிமென்டாக ஒரு வருத்தத்தைத் தந்தாலும், 1ம் தேதியன்று அந்த வருத்தத்தைப் போக்கியது.
இந்திய பங்குச் சந்தைகள் அதள பாதாளத்திற்கு போயிருப்பதும், அதனால் ப்ளூ சிப் பங்குகள் அடிமாட்டு விலை வந்திருப்பதும். அதுபோல உள்ள ப்ளூ சிப் பங்குகளை வாங்குவதற்கு இது நல்ல நேரம் என்றும், அதை புது ஆண்டில் துவங்கலாம் என்றும் பலர் நினைத்து வாங்கியதால், சந்தை புது ஆண்டின் முதல் தினமே களைகட்டியது. மேலும், பணவீக்கம் சென்ற வாரத்தை விட குறைந்திருந்தது. அதாவது 6.38 சதவீதம் அளவிற்கு வந்தது. இதுவும் சந்தை கூடியதற்கு ஒரு காரணம்.

கடந்த எட்டு ஆண்டுகளில், ஆண்டின் முதல் தினத்தில் சந்தை இவ்வளவு கூடியது இல்லை. 2.6 சதவீதம், அதாவது 256 புள்ளிகள் கூடியது. ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டின் முதல் தினத்தில் சந்தை எப்போதுமே கூடித்தான் வந்திருக்கிறது. ஆண்டின் முதல் நாள் நாம் எப்போதுமே இறக்கத்தை விரும்புவதில்லை. எல்லாம் சென்டிமென்ட் காரணம் தான்.

கடந்த 15 தினங்களாக கீழே சென்று கொண்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர், சிறிது சிறிதாக மேலே சென்று வருகிறது. வேறு கம்பெனிகள் சத்யத்தை வாங்கலாம் என்ற செய்திகளும் வருகின்றன.

மியூச்சுவல் பண்டுகளும் சிறிது சிறிதாக தலை தூக்கி வருகின்றன. டிசம்பர் மாதம் எல்லாம் மியூச்சுவல் பண்டுகளுக்கும் சேர்த்து பண்ட் வேல்யூ ஆவரேஜாக 4.6 சதவீதம் கூடியிருக்கிறது.

வெள்ளியன்று சந்தை இதே காரணங்களுக்காக மேலே சென்றது. இந்த வாரம் மட்டும் 629 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை 189 புள்ளிகளும் மேலே சென்றது. கடைசியாக வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை 54 புள்ளிகள் கூடி 9,958 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 13 புள்ளிகள் கூடி 3,046 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. காலையில் மும்பை பங்குச் சந்தையும் 10,000 புள்ளிகளைத் தாண்டி சென்றிருந்தது.

ஏற்றுமதியில் மந்தம்: கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்றுமதி 10 சதவீதம் குறைந்திருக்கிறது. அக்டோபர் மாதமும் குறைந்தே இருந்தது. இந்தியாவில் மட்டும் தான் இப்படி நிலைமை என்று இல்லை. எல்லா நாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது. இந்த நிலை, டிசம்பர் மாத ஏற்றுமதி மதிப்பிலும் நீடிக்கலாம். அதன் பிறகு சிறிதாகக் கூட ஆரம்பிக்கும்.

வெள்ளியன்று சந்தை நேரத்திற்கு பிறகு, ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 1 சதவீதமும்(அதாவது 6.5 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாகவும்), ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை 1 சதவீதமும் (அதாவது 5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும்) குறைத்துள்ளது. இது, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கும் கடன்களுக்கு வட்டிகளைக் குறைக்கும். ஆதலால், வங்கிகள் தாங்கள் கொடுக்கும் கடன்களுக்கான வட்டிகளைக் குறைக்கும். சி.ஆர்.ஆர்., ரேட்டை 6 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைத்துள்ளது. இதனால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்க வேண்டிய ரொக்க கையிருப்பு குறைத்து வைக்கலாம். வங்கிகளிடம் பணப்புழக்கம் அதிகமாகும். அதாவது 42,000 கோடி ரூபாய் சந்தைக்கு வரும். இது, வங்கிகள் கடன்களை இன்னும் தாராளமாகக் கொடுக்க உதவும்.

மொத்தமாக என்ன ஆகும்? கடன்களுக்கு வட்டி குறையும், டெபாசிட் வட்டி விகிதங்களும் குறையும், பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வீட்டுக்கடன்கள் வட்டிகள் இன்னும் சிறிது குறையலாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, திங்களன்று சந்தை ஒரு ஏற்றத்தில் தான் தொடங்கும். கடந்த சில நாட்களாகவே இதை எல்லாம் எதிர்பார்த்து சந்தை கூடிச் சென்றுள்ளது. இருந்தாலும் ஒரு ஏற்றம் இருக்கத்தான் செய்யும். கம்பெனிகளுக்கு இன்னொரு பேக்கேஜ் வரலாம் என்ற பேச்சுக்கள், கடந்த 10 நாட்களாக சந்தையில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் வரும் பட்சத்தில் சந்தை அதை வரவேற்கும்.

-சேதுராமன் சாத்தப்பன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: