ஐடி நிறுவனங்களில் கட்டாய விடுப்பு, சம்பள குறைப்பு

அணுவாயுதம்

 ஈரான் செய்துள்ளது உண்மையில் அணுவாயுதத்தையும் விட கொடியதாகி விட்டது. எப்படி?
தி வாய்ஸ்( வெளியீடு 264)ல் ஒரு கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது. ஈரான் கடைசியில் அதைச் செய்தே விட்டது. அது பாரசீக வளைகுடாவில் தன் முதல் அணு ஆயுதம் எதையும் பரிசோதிக்கவில்லை. ஆனால் அதை விடக் கொடுமையான ஒன்றை உலகில் ஏவப் போகின்றனர். அதற்கடுத்த வாரம் ஈரான் எண்ணெய் விற்கும் சந்தையை (Iran Bourse) நிறுவியது. அதன் வரவு செலவுகள் யூரோவில்தான், அமெரிக்க டாலரில் நடைபெறாது. ஒரு முக்கியத்துவமற்ற நிகழ்ச்சியாக நமக்குத் தோன்றும் இது, அமெரிக்க மக்களுக்கு பேரபாயத்தைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சியாகும். உண்மையில் அது நம் கற்பனைக்கு எட்டாத விளைவை உள்ளடக்கியது.

தற்போதைய நிலையில் எண்ணெய் வரவு செலவுகள் அனைத்தும் நியூயார்க், லண்டன் நகரங்களிலுள்ள இரு எக்ஸ்சேன்ஜ் வாயிலாகத்தான் நடைபெறுகின்றன. அவ்விரண்டு எக்ஸ்சேன்ஜ்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானவை என்பது தற்செயலானதல்ல என்பதை நீங்கள் யூகித்திருக்கலாம்.

உலகமெங்கும் ஏற்பட்ட வியாபார மந்த நிலையினாலும், இரண்டாம் உலகப் போரின் விளைவாலும் 1929ம் ஆண்டு வால் ஸ்ட்ரீட் பெரும் சரிவையடைந்தது. அந்தப் போரின் போது தம் கூட்டுப் படைகளுக்குத் தேவையான பொருட்களையும் தளவாடங்களையும் அமெரிக்கா வழங்கி, அதற்கு ஈடாக பணத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்து, தங்கமாகத் தர வற்புறுத்திப் பெற்றுக் கொண்டது.

1945ம் ஆண்டில் உலகத் தங்கத்தின் 80 சதவிகிதம் அமெரிக்கப் பெட்டகத்தில் அடைபட்டது. அதன் விளைவாக எந்த மாற்றுமில்லாமல் டாலர் தாள்களே உலக சேமிப்புக்கான பணமானது. உலகம் முழுதும் தங்கத்தை விட டாலர் கட்டுகளே பாதுகாப்பானது என ஆனது. ப்ரெட்டன் உட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தம் உருவானது.

அதற்கடுத்து வந்த சில பத்தாண்டுகளில் இனி மற்றொரு நாள் வராது என்ற வேகத்தில் அமெரிக்கா தன் டாலர் தாள்களை அடித்துக் கொண்டே இருந்தது. அமெரிக்கா, அந்த மலையளவு காகிதங்களை, வெளிநாட்டுச் சரக்குகளை பெருமளவில் வாங்கிக் குவிக்கவும், பணக்காரர்களுக்கு வரி விலக்கு அளிக்கவும், அப்போது உலகில் நடந்த போர்களுக்காகவும், வெளி நாட்டிலுள்ள தம் கூலிப்படைகளுக்காகவும், வெளி நாடுகளுக்கு அனுப்பியுள்ள தம் மத போதகர்களுக்கும், அரசியல் வாதிகளுக்குமென வெளிநாடுகளில் வீசி இறைத்து ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி உள்நாட்டு பணவீக்கத்தை அதிகப் படுத்தவில்லை. ஏனெனில் வெறும் தாள்களை அச்சிட்டுக் கொடுத்து எல்லாவற்றையும் அமெரிக்கா வெளியிலிருந்து இலவசமாகவே பெற்றது. அதற்காக அமெரிக்காவின் இழப்பு தாள் உற்பத்திக்காக ஓரிரண்டு காடுகள்தான்!.

அதற்கடுத்த பத்தாண்டுகளில் உலக நாடுகளின் பெட்டகங்களில் பல அமெரிக்க டாலர்களால் நிரம்பி வழிந்தது. அமெரிக்க டாலர்களுக்காக உலக நாடுகளில் புதுப்புது பெட்டகங்களும் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும், அமெரிக்கா தன் டாலர் தாள்களை உள் நாட்டை விடவும் கூடுதலாக வெளி நாடுகளிலேயே செலவிட்டது. அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளில் சேமிப்புகளாக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் பணத்தின் மதிப்பில் 66 சதவிகிதம் எனும் பெரும் பகுதி வெறும் டாலர் தாள்களாகவே சேமிக்கப் பட்டிருந்தது என்பதை அநேகமாக எல்லா வல்லுநர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

1971ம் ஆண்டில் பல நாடுகள் தம் சேமிப்பிலிருந்த டாலர் தாள்களின் சிறு பகுதியை விற்று தங்கமாக மாற்ற விரும்பியது. ஓஹியோ பல்கலை கழகத்திலிருந்து வணிகவியலில் டாக்டர் பட்டம் பெற்ற க்ராஸ்ஸிமிர் பெட்ரோவ் (Dr. Krassimir Petrov) சமீபத்தில் இதைப் பற்றி எழுதும் போது, ‘அமெரிக்க அரசு ஆகஸ்ட் 15, 1971ல், டாலருக்கும் தங்கத்துக்குமான இணைப்பை துண்டிப்பதாகச் சொல்லி தன் நாட்டுக் காகிதங்களை திரும்பப் பெற மறுத்தது. உண்மையில் தன் டாலர் காகிதங்களைப் பெற்று தங்கத்தை தர மறுத்த செயல் அமெரிக்க அரசின் திவாலான நிலைமையை அப்பட்டமாக்கியது’ எனக் குறிப்பிடுகிறார். 1945ல் உருவாக்கப்பட்ட ப்ரெட்டன் உட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தம் தன்னிச்சையாக குப்பைக்கு எறியப்பட்டது.

டாலரும் அமெரிக்க பொருளாதாரமும் ஒரு வகையில் 1929ன் ஜெர்மனியை ஒத்ததாக இருக்கிறது. மற்ற உலக நாடுகள் டாலர் தாள்களை நம்பவும் அதிலே உறுதி கொள்ளவும் அமெரிக்கா வேறு வழிகளைத் தேடும் நிர்ப்பந்தத்திற்கு இப்போது தள்ளப் பட்டது. அதற்கான விடைதான் எண்ணெய் அதாவது பெட்ரோ டாலர். அமெரிக்கா, பெட்ரோலை டாலரில் மட்டும் விற்க, விஷமத் தனமாக முதலில் சவூதி அரேபியாவையும் பின்னர் OPEC எனப்படும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பையும் இணங்க வைத்தது. அது டாலரின் மதிப்பைக் காப்பாற்ற உதவியது. இப்போது அத்தியாவசியத் தேவையான பெட்ரோலைப் பெற மற்ற நாடுகள் டாலர் தாள்களை திரும்பவும் இருப்பில் வைத்தன. ஆனால் அந்த அவசியமான பெட்ரோலை அமெரிக்காவோ இலவசமாகப் பெறுகிறது. டாலர் தாள்களை மூழ்காமல் காக்க தங்கத்துக்குப் பதில் இப்போது பெட்ரோல்.

1971லிருந்து வெளிநாடுகளில் விநியோகிக்கவும் செலவழிக்கவும் அமெரிக்கா மென்மேலும் டாலர் தாள்களை மலை மலைகளாக உற்பத்தி செய்யத் துவங்கியது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையும் (trade deficit) மளமளவென வளர்ந்தது. வெறும் டாலர் தாள்களை அச்சடித்துக் கொடுத்து உலகின் எல்லாப் பொருட்களையும் அமெரிக்கா விழுங்கியது. மேலும் பல பெட்டகங்களும் உருவாகின.

சில்லின் நுனான் (Cillinn Nunan) என்ற நிபுணர் 2003ல் எழுதியதாவது, ‘உண்மையில் டாலர்தான் உலகின் சேமிப்புப் பணமாக உள்ளது. உலகின் அதிகார பூர்வ சேமிப்பு மாற்றுகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க பணக் கணக்குதான் உபயோகிக்கப் படுகிறது. வெளி நாட்டுப் பண மாற்றத்தில் ஐந்தில் நான்கு பங்கும், உலக ஏற்றுமதிகளில் பாதியும் டாலர்களில்தான் செய்யப் படுகிறது. அது மட்டுமின்றி உலக வங்கியின் கடன்களும் (IMF Loans) டாலர்களில்தான் தரப் படுகிறது.

புலன்ட் கூகே (Dr. Bulent Gukay of Keele University) சமீபத்தில், ‘எண்ணெய் வர்த்தகத்தில் உலக இருப்பின் டாலர்கள் செலவழிக்கப் படுவதால் செயற்கையாக டாலரின் தேவை அதிகமாக்கப் பட்டுள்ளது. இதனால்தான் ஏறக்குறைய ஒரு செலவுமேயில்லாமல் அமெரிக்கா வெறும் டாலர் தாள்களை அச்சிட்டு அதிகப் படியான இராணுவத் தேவைகளுக்கு உபயோகிக்கவும், நுகர்வோர் பொருட்கள் இறக்குமதியில் செலவழிக்கவும் முடிகிறது. எவ்வளவு டாலர் தாள்கள்தான் அச்சிடலாமென்பதற்கு எந்த அளவீடுகளோ கட்டுப்பாடுகளோ அமெரிக்காவுக்கு இல்லை. அமெரிக்காவுக்குச் சமமான போட்டியாளர்கள் யாரும் இல்லாத நிலையில், மற்ற நாடுகள் டாலரின் மேல் நம்பிக்கை கொண்டிருக்கும் வரையில் எந்த செலவுமின்றி வெறும் டாலர் தாள்களை அமெரிக்கா அச்சிட்டே வாழ்ந்து கொண்டிருக்கும்’ என எழுதியுள்ளார்.

சமீப காலம் வரை அமெரிக்க டாலர் பாதுகாப்பானதாகத்தான் இருந்தது. எனினும் 1990 முதல் மேற்கு ஐரோப்பிய நாடுகள் வளரத் தொடங்கி மத்திய ஐரோப்பாவையும் கிழக்கு ஐரோப்பாவையும் விழுங்கத் துவங்கியுள்ளது.

அமெரிக்கா ஒரு செலவுமில்லாமல் உலகப் பொருள்களையும் மக்களையும் வாங்கும் பலத்தை பார்த்து, பிரான்சு மற்றும் ஜெர்மானியத் தலைவர்கள் பொறாமைப் படத் துவங்கி விட்டனர். இலவசமாக் கிடைக்கும் அதில் தாமும் ஒரு பகுதியைப் பெற விரும்புகின்றனர்.

அவர்கள் 1999ன் இறுதியில் யூரோ எனும் பண பலத்தை, அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பலத்த எதிர்ப்புகளுக்கிpடையே, குறிப்பாக அமெரிக்க டாலர் பெற்று பிரிட்டன் உண்டாக்கிய எதிர்ப்புக்கிடையிலும் உருவாக்கி விட்டனர். யூரோ இப்போது வெற்றி நடை போடுகிறது.

யூரோ வெளியிடப்பட்ட ஒரு சில மாதங்களுக்குள் சதாம் உசேன், OPEC எனும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தை மீறி, அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்று வந்த பெட்ரோல் இனி யூரோவில் மட்டுமே ஈராக்கில் விற்கப்படும் என அறிவித்தார். ஈரான், ரஷ்யா, வெனிசுலா, லிபியா முதலிய நாடுகள் தாங்களும் அவ்வாறே மாற நினைப்பதாக வெளிப்படையாக அறிவிக்கத் துவங்கின – வெள்ளம் அமெரிக்காவின் தலையில் ஓடத் தலைப்பட்டது

செப்டம்பர் 2001ல் ஆகாய விமானங்கள் இரட்டைக் கோபுரத்தினுள் பறந்தன. அமெரிக்க வரலாற்றில் அது சந்திக்கவிருந்த பெரும் பொருளாதாரச் சரிவைத் தடுக்க அமெரிக்கா இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தத் துவங்கியது. (இச்சந்தர்ப்பத்தை அது தானாக உருவாக்கிக் கொண்டதென்று ஒரு சித்தாந்தம் அமெரிக்காவிலேயே உலவிக் கொண்டிருக்கிறது என்பதொரு தனி விடயம்) அமெரிக்க பெட்ரோ டாலரைக் காக்க போர் தயாரிப்புகள் துவங்கின. அதில் முதன் முதலில் பறிக்கப் பட்டது உண்மையுடைய உயிர்தான். மற்ற பெட்ரோல் உற்பத்தி நாடுகள் வேடிக்கைப் பார்த்தன.

ஈராக் 2000ம் ஆண்டில் பெட்ரோலை யூரோவில் விற்கத் துவங்கியது. 2002ல் ஈராக் தன் கருவூலத்திலிருந்த முழு பெட்ரோ டாலர்களையும் யூரோவுக்கு மாற்றி விட்டிருந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிக்க துவங்கியது.

முழு உலகமும் வேடிக்கைப் பார்த்தது. ஆனால் வெகு சிலருக்கே அது பெட்ரோ டாலருக்கான போர் எனப் புரிந்திருந்தது. ஈராக்கை மார்ச் 2003ல் ஆக்கிரமித்தவுடன், அமெரிக்கா முதலில் அங்குள்ள எண்ணெய் வளங்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது என்பது நினைவிருக்கட்டும். ஆகஸ்ட் மாதத்தில் முதல் விற்பனையை மீண்டும் டாலரில்தான் துவங்கியது. ஈராக்கிலிருந்த எல்லா அரச மாளிகைகளும் இலாக்காகளும் குண்டு மழை பொழிந்து தகர்க்கப்பட்டது. பாக்தாதில் தகர்க்கப்படாத ஒரே அரச மாளிகை பெட்ரோல் இலாகா. எத்தனை இலட்சங்களில் மனித உயிர்கள் மலினப் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது காவு கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் அமெரிக்காவுடைய கவலையில்லை. அமெரிக்கா பெட்ரோ டாலர்களை காப்பாற்ற பெட்ரோல் வர்த்தகம் டாலரில் நடக்க வேண்டும். இல்லையென்றால் அமெரிக்க பொருளாதாரம் மண்ணைக் கவ்வும் – அதன் பின் என்னென்னவோ நடந்து விடும்.

2003ன் தொடக்கத்தில் வெனிசுலா அதிபர் ஹியூகோ சவாஸ் அந்நாட்டின் பாதி பெட்ரோலை யூரோவில் விற்பதாக (முன்னமே பாதியை அமெரிக்கா டாலரில் வாங்கி விட்டது) வெளிப்படையாக அறிவித்தார். 2003 ஏப்ரல் 12ல் அமெரிக்க உதவியிலுள்ள சில வியாபாரத் தலைமைகளும், சில தளபதிகளும் சேர்ந்து சவாஸைக் கடத்தி, புரட்சி செய்து நாட்டைப் பிடிக்க முயன்றனர். மக்களே அதற்கெதிராக களமிறங்கவும் இராணுவமே அந்தப் புரட்சியை முறியடித்து தோல்வியடையச் செய்தது. உண்மையில் அமெரிக்காவின் முகத்தில் கரி படிந்தது.

நவம்பர் 2000ல் ஒரு யூரோவின் மதிப்பு 0.82 டாலர்தான். இதுதான் யூரோவின் ஆகக் குறைந்த மதிப்பு. மேலும் சரிவை நோக்கித்தான் இருந்தது.
ஆனால் ஈராக் யூரோவில் பெட்ரோல் விற்கத் தொடங்கியதும் அதன் சரிவு நின்றது.
ஏப்ரல் 2002ல் OPECன் மேல் மட்ட பிரதிநிதிகள் யூரோவில் பெட்ரோல் விற்கும் யோசனையைப் பற்றிப் பேசத் துவங்கியவுடன் யூரோவின் மதிப்பு உயரத் துவங்கியது.
ஜூன் 2003ல் ஈராக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் திரும்ப டாலருக்கு ஈராக்கிய பெட்ரோல் விற்பனையைப் பற்றி பேசத் துவங்கியதும் டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு குறைந்தது.
ஆகஸ்ட் 2003ல் ஈரான் சில ஐரோப்பிய நாடுகளுக்கு யூரோவில் பெட்ரோல் விற்ற போது யூரோவின் மதிப்பில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் உண்டானது.
2003-04 OPEC நாடுகளின் தலைவர்களும் ரஷிய தலைமையும்; எண்ணெயையும் எரிவாயுவையும் யூரோவில் விற்பதைப் பற்றி உளப்பூர்வமாக பேசத் துவங்கியதும் யூரோவின் மதிப்பு உயர்ந்தது.
2004ன் OPEC மாநாட்டில் எண்ணெய் விற்பனையை யூரோவில் மாற்றுவதைப் பற்றி எந்த முடிவுமெடுக்காமல் கலைந்தது – ஆம் அப்போதும் யூரோவின் மதிப்பு தாழ்ந்தது.
இலண்டனிலும் நியூயார்க்கிலும் உள்ளதைப் போன்ற எண்ணெய் விற்பனை சந்தையை (Iran Bourse) தனது நாட்டிலும் நிறுவப் போவதாக ஜூன் 2004ல் ஈரான் அறிவித்தவுடன் யூரோவின் மதிப்பு உயரத் துவங்கியது.
கடைசியில் யூரோவின் மதிப்பு 1.27 அமெரிக்க டாலர்களில் உயர்ந்து நிற்கிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பை வெகு தூரம் தாழ்த்த, கடந்த மாதங்களில் இந்நிகழ்வுகள் வெகு தூரம் வந்து விட்டது. மே 5ம் நாள் ஈரான் தன் நாட்டில் சொந்த எண்ணெய் விற்பனை சந்தையை (Iran Oil Bourse) பதிவு செய்து விட்டது. இலண்டனையும் நியூயார்க்கையும் விட்டு விட்டு வேறொரு நாட்டில் எண்ணெய் விற்பனையைச் செய்வதோடல்லாமல் உண்மையில் உலக நாடுகள் விற்கவும் வாங்கவுமான ஒரு எண்ணெய் விற்பனை சந்தையை அமைத்து விட்டது.

சவாஸின் சமீபத்திய இலண்டன் வருகையில் அவர் ஈரானிய எண்ணெய் விற்பனை சந்தையை ஆதரிக்கப் போவதாகவும் யூரோவில் எண்ணெய் விற்கப் போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார். வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள ஆயுத தடையைப் பற்றி இலண்டனில் கேட்கப் பட்ட போது சவாஸ், ‘அமெரிக்கா வெறும் காகிதப்புலிதான்’ என முன்னறிவிப்பாக பதிலிறுத்தார்.

தற்போதைய உலக எண்ணெய் வளத்தின் பெரும்பகுதி NYMEX (New York Mercantile Exchange) அல்லது IPE (International Peroleum Exchange at London)ஆகிய இரு இடங்களிலிருந்துதான் விற்கப் படுகிறது. இவையிரண்டும் அமெரிக்கர்களின் நிறுவனங்கள். அவை எண்ணெயை டாலரில்தான் வாங்கவோ விற்கவோ செய்கிறது. ஈரானிய எண்ணெய் விற்பனையின் வெற்றி ஈரானிய எண்ணெயின் 70 விழுக்காட்டை வாங்கும் ஐரோப்பியர்களை உணர்வு பெறச் செய்துள்ளது. தமது எண்ணெய் உற்பத்தியின் 66 விழுக்காட்டை ஐரோப்பாவுக்கு விற்கும் ரஷ்யாவையும் அது உணர்வு பெறச் செய்துள்ளது. அமெரிக்காவுக்கு மேலும் பாதகமாக இந்தியாவும் சீனாவும் ஈரானிய எண்ணெய் விற்பனை சந்தையிலிருந்து எண்ணெய் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இப்போதும் அதே Weapons of Mass Destruction என்றோ அல்லது அணுகுண்டு தயாரிப்பு என்றோ சொல்லிக் கொண்டு ஈரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த எண்ணெய் சந்தை அழிக்கப்படாது என்று யாராவது ஒருவர் நம்புவீர்களா?

மேலும் புஷ்ஷூக்கு வீழ்ச்சி. உணர்வு பெற்ற ஐரோப்பா, சீனா, இந்தியா, ஜப்பான் முதலிய நாடுகளும் மேற்குறிப்பிடப்பட்ட மற்ற நாடுகளும் எண்ணெயை வாங்கவும் விற்கவும் யூரோவைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்நாடுகள் யூரோவை சேமிக்கத் துவங்கும். தம்மிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களை விற்கத் துவங்கும். கடனில் வீழ்ந்துள்ள டாலரை விட யூரோ நிலையாகவே உள்ளது. உலக வங்கியும் (IMF) அமெரிக்கா பொருளாதார பிரச்னைகளையும் வர்த்தகப் பற்றாக்குறையையும் பற்றி சமீபத்தில் அறிவித்து விட்டதால் கழுத்து நெறிபடும் அமெரிக்காவுக்கு வேறு போக்கிடமில்லை.

தற்போது உலக நாடுகளின் முன்னுள்ள மிகப்பெரிய கவலை, ‘அமெரிக்க டாலர் கடுமையாக வீழ்ச்சி அடைவதற்குள் தம் கருவூலத்திலுள்ள டாலர்களை எப்படி மாற்றுவது?’ என்பதுதான். ஆண்டாண்டு காலமாக எத்தனையோ உலக நாடுகளை டாலரில் திணித்து வைத்துள்ள அமெரிக்காவிடமே அதைத் திருப்பித் தர வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கின்றன பல நாடுகள். ஆனால் உலகிலுள்ள டாலர்களில் வெறும் 5 விழுக்காட்டைக் கூட அமெரிக்காவால் ஏற்க முடியாது. அமெரிக்கா தன் பொருளாதாரத்தை நாசப்படுத்திக் கொள்வதோடு உலக நாடுகளில் பலவற்றின் பொருளாதாரத்தையும் கூடவே நாசப்படுத்தி விடும். அதிலும் குறிப்பாக பிரிட்டன் கடுமையாக நாசமாகும்.

Scottish Socialist Voice என்ற ஏட்டின் ஒரு கட்டுரை குறிப்படுவது போல, அமெரிக்கா பிழைக்க வேண்டுமானால், அந்நாடு வர்த்தகத்தில் ஒரு பெரும் புரட்சி செய்து, அதிக வர்த்தக நிலைமைக்கு (trade surplus) வர வேண்டும். அந்நாட்டினரால் இது முடியவே முடியாது. ஏனெனில் அதைச் செய்ய அமெரிக்கர்களை அந்நாடு அடிமைகளைப் போல வேலை வாங்க வேண்டும். அவ்வேலைக்கு சீனர்களையும் இந்தியர்களையும் விட குறைவாக சம்பளம் தர வேண்டும். நாமனைவரும் அறிந்ததைப் போலவே, இது அங்கு நடப்பதற்கு சாத்தியமே இல்லை.

இப்போது அமெரிக்காவில் என்னவாகும்? கண்டிப்பாக பெரும் குழப்பங்கள்தான் உண்டாகும். ஒரு வேளை ஏதும் தொழிலாளர் புரட்சி, தற்போதைய நிலைமையில் 1929க்குப்பின் ஜெர்மனியில் நடந்தது திரும்பலாம். தீவிர வலது சாரிச் சிந்தனைகள் தோன்றலாம்… …

இந்த அமெரிக்காவுடனான மற்ற நாடுகளின் பொருளாதார நாசத்தை ஐரோப்பிய, சீன, ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தால் ஓரளவு தடுத்து நிறுத்த இயலுமா? இந்நாடுகளின் கருவூலங்களும் கழுத்து வரை அமெரிக்க டாலரால்தான் நிரம்பியுள்ளது.

1945 முதல் அமெரிக்கா வெறும் டாலர் தாள்களால் செய்து வந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு பகரமாக ஏதாவதொரு வழியைக் கண்டு பிடித்தேயாக வேண்டும். ஒவ்வொரு நாட்டுக் கருவூலத்திலும் குவித்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு டாலர் தாள்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஈரானில் அமெரிக்கா குண்டு போட்டால் அது பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஈராக்கிலுள்ள ஷியா மக்களின் பக்க பலத்தோடு ஈரான் வெளிப்படையாக ஈராக்கோடு போர் தொடுக்கும். ஈராக்கில் தற்போது மிகச் சிலரால் உண்டாகும் உள்நாட்டு கிளர்ச்சியையே தடுத்து நிறுத்த முடியாமல் அமெரிக்கா தடுமாறித் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை அமெரிக்கா இந்த சுன்னி ஷியா மக்களுக்கிடையே பெரும் வெறுப்பை உண்டாக்கி, அதை ஊதி விட்டு மத்திய கிழக்கு நாடுகள் முழுதும் உள் நாட்டுப் போரை உருவாக்கி விடக் கூடும்.

ஆனால் இது உலக எண்ணெய் வர்த்தகத்தில் மிக ஆபத்தான பின்னடைவை ஏற்படுத்தி விடும். இந்த ஈரானிய சந்தை சிறிது காலமே தனித்து இயங்கும் என்பதை அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அதன் பின் யூரோவில் எண்ணெய் விற்க சந்தைகள் வேறிடங்களிலும் (குறிப்பாக புரூஸ்ஸல்) துவக்கப்பட்டு விடும்.

ஒரு தீர்வு என்னவென்றால், டாலரை அழித்து விட்டு அமெரிக்காவின் புழக்கத்துக்காக புதுப் பணத்தை அது அறிமுகப் படுத்தலாம். இதன் மூலம் மற்ற நாடுகளிலுள்ள 66 விழுக்காட்டு டாலர் தாள்களை ஒரேயடியாக பயனற்றதாக்கலாம். என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?. இது போன்ற அடாவடியான, ஆபத்தை பொருட்படுத்தாத சிந்தனைகள்தாம் வெள்ளை மாளிகை, வால் ஸ்ட்ரீட், பென்டகனிலுள்ள சிலரது தலைகளில் தற்போது நீந்துவதாகத் தெரிகிறது.

அல்லது 1938ல் போலந்து நாட்டுக்குள் நுழைய ஜெர்மனி செய்ததைப் போல எதையாவது செய்ய வேண்டும். அதாவது போலந்து நாட்டினர் ஜெர்மனிக்குள் படை நடத்தி வந்து விட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை படம் பிடித்து நாஜிகள் மக்களிடம் காட்டி உள்நாட்டிலுள்ள மக்களின் எண்ணங்களையும் இதயங்களையும் வென்றெடுத்தனர். எனினும் அமெரிக்கா இந்த முறையில் வெற்றி பெறுவதென்பது தற்போதைய நிலையில் மிகக் கடினமானதே. ஆக, அமெரிக்கா எப்படித்தான் தப்பும்? உலக அரங்கில் அமெரிக்காவின் உயர்வு அதன் ஆயுத பலம்தான். என்னென்ன கொடுமைகளை இன்னும் உலகம் சந்திக்கவிருக்கின்றதோ யார் கண்டது?. ஒரு புது உலகப் போர் மூலம் அமெரிக்கா தன் சார்பு நாடுகளை ஒழுங்கு படுத்தி அதன் கருவூலங்களில் டாலர்களை வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தப் போகிறதோ என்னவோ?

இனி வரப் போகிற ஆபத்து முதலாளித் துவத்துக்கும் (டாலர்) ஏகாதிபத்தியத்துக்கும்தான். கலாச்சார மாற்றங்களோ, இஸ்லாமோ, axis of evil நாடுகளோ, அமெரிக்கா சொல்லும் பேரழிவு ஆயுதங்களோ ஆபத்தானவைகளல்ல. அமெரிக்கா இதுவரை கடை பிடித்து வந்த அந்நாட்டின் கொள்கைகளும் செயல்முறைகளும்தான் அடிப்படையில் தவறானவை, ஆபத்தானவை.

ஈரான், பாரசீக வளைகுடாவிலுள்ள கிஷ் தீவின் free trade zoneல் தனது புதிய எண்ணெய் விற்பனை சந்தையை (Iranian Oil Bourse) அமைத்துள்ளது. கணிணியும் மென்பொருட்களும் நிறுவப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கடந்த மார்ச் மாதமே IOB தனது பணியைத் துவங்கி இருக்க வேண்டும் ஆனால் சில அழுத்தங்கள் காரணமாக தள்ளிப் போடப்பட்டது. எங்கிருந்து அழுத்தம் வந்திருக்கும் என்பது சொல்லித்தான் அறிய முடியுமா என்ன?. மே 5ந்தேதி IOB பதிவு செய்யப்பட்டு விட்டது. சந்தை துவங்கும் நாள் குறிக்கப்படாததற்கு எண்ணெய் மாபியா கும்பல்களின் ஊடுருவலும் உலக நாடுகளின் அழுத்தமும் … … காரணம் என சிலரால் சொல்லப் படுகிறது,

2007ல் எண்ணெய் 60 டாலர்களுக்கு கொள்வரவு செய்யப்பட்டது. டாலரின் மதிப்பு ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி அடைவதை அனைவரும் அறிவோம். தனது NYMEX, IPE மூலம் வெறும் யூகங்களை (speculation) முன்னிறுத்தி எண்ணெயின் விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. 60 டாலர்களுக்கு விற்ற எண்ணெயை 140 டாலருக்கு விற்றால் டாலரின் தேவை 230விழுக்காடுகள் அதிகரிக்கும்.

OPEC கூட சமீபத்தில் எண்ணெய் விலையேற்றத்திற்கு 60சத காரணம் வெறும் யூகங்களைக் கொண்டு செய்யும் முன் வியாபாரம்தான் (Future Trade) எனக் கூறியுள்ளது.

முடிவாகச் சொல்வதென்றால் அமெரிக்கா தனது டாலரை அழிவிலிருந்து காக்க, உலகில் டாலருடைய ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்திக் கொள்ள எந்த நாட்டையும் அழிக்கத் தயங்காது

 

ரூ.8 கோடி விளம்பர கட்டணத்தை உடனே செலுத்த சுபிக்ஷாவுக்கு கோரிக்கை

புதுடில்லி : இந்தியா முழுவதும் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் சுபிக்ஷா, டி.வி.,களில் விளம்பரம் செய்த வகையில் ரூ.7.8 கோடி பாக்கி வைத்திருக்கிறது. இந்த தொகையை உடனடியாக செலுத்தி விடும்படி இந்தியன் புராட்காஸ்டிங் ஃபெரரேஷன் ( ஐ.பி.எஃப்.) கேட்டுக்கொண்டிருக்கிறது

இந்தோனேஷியாவில் சுரங்கம் வாங்கும் ஜி.எம்.ஆர்.குரூப்

புதுடில்லி : 1,500 மெகாவாட் மின்சாரத்தை இன்னும் 20 வருடங்களுக்கு உற்பத்தி செய்யக்கூடிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக, இந்தோனேஷியாவில் 100 – 150 மில்லியன் டன் நிலக்கரி சுரங்கத்தை ஜி.எம்.ஆர். குரூப் வாங்குகிறது

கூடுதலாக வொர்க் விசா வழங்க அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை

புதுடில்லி : இந்தியர்களுக்கு கூடுதலாக வொர்க் விசா ( ஹெச் 1 – பி, எல் 1 விசா ) கொடுக்க சொல்லி அமெரிக்காவிடம் இந்தியா கேட்டிருக்கிறது. இந்திய கம்பெனிகள் உள்பட பல கம்பெனிகள் வொர்க் விசாவை தவறாக பயன்படுத்துவதாக அமெரிக்க அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்

ஸ்டீல் காம்ப்ளக்ஸ் லிமிடெட்டின் 50 சதவீத பங்குகளை செய்ல் வாங்குகிறது

புதுடில்லி : இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான செய்ல், கேரள அரசு நிறுவனமான ஸ்டீல் காம்ப்ளக்ஸ் லிமிடெட்டின் 50 சதவீத பங்குகளை ரூ.8.38 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது

டிராவல் ஏஜென்ட்களுக்கு 3 சதவீத கமிஷன் கொடுக்க கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் முடிவு

மும்பை : டிராவல் ஏஜென்ட்களுக்கு விமான டிக்கெட்டின் மொத்த கட்டணத்தில் 3 சதவீதத்தை கமிஷனாக கொடுக்க கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் முடிவு செய்திருக்கிறது. இன்று வெள்ளிக்கிழமையில் இருந்து இது கொடுக்கப்படும் என்று கிங்ஃபிஷரின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

 

ஐடி நிறுவனங்களில் கட்டாய விடுப்பு, சம்பள குறைப்பு

சர்வதேச மந்தநிலை காரணமாக பல்வேறு ஐடி நிறுவனங்கள் பணி நீக்கம் மற்றும் செலவினங்களை குறைக்கும் முடிவில் இறங்கியுள்ளன. இவற்றில் ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை குறைப்பது, கட்டாய விடுப்பு, போனஸ் குறைப்பு, நிறுவனத்தில் பல்வேறு சலுகைகள் நிறுத்தம் என்று பலவிதங்களில் ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை என்றாலே பல்வேறு சலுகை, 6 மாதத்திற்கு ஒரு முறை ஊதிய உயர்வு, போனஸ், பார்ட்டி, டூர் என்று பல்வேறு  வசதிகளை இளைஞர்கள் அனுபவித்து வந்த நிலை இனி இருக்காது என்று நிலை உருவாகியுள்ளது. தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக ஐடி நிறுவனங்கள் கொடுத்த வந்த சலுகைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் ஊழியர்கள் பயன்படுத்தி வந்த போக்குவரத்து வசதிகளை குறைத்து மிக குறைந்த தூரத்தில் இருப்பவர்கள் தாங்களாகவே நிறுவனம் வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து பல்வேறு வழிகளில் ஊழியர்களுக்கு ஆகும் செலவுகளை குறைத்து வருகின்றன. தற்போது பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாய விடுப்பில் செல்லும் படி வற்புத்துக்கின்றன. ஊழியர்களுக்கு கொடுக்கப்படிருக்கும் விடுப்பு நாட்களுக்கு குறைவாக ஊழியர் விடுப்பு எடுத்திருக்கும் பட்சத்தில் அந்த நாட்களுக்கு நிறுவனம் சம்பளம் கொடுக்க வேண்டும். அத்தகைய மீதியுள்ள நாட்களை கட்டாய விடுப்பு எடுக்கும் படி நிறுவனங்கள் தற்போது நிர்பந்தனை செய்கின்றன. 2008 ஆண்டு முடியும் நேரத்தில் பல நிறுவனங்கள் ஊழியர்களை இரண்டு வார விடுப்பில் செல்லும் படி உத்தரவிட்டுள்ளது. இந்த விடுப்பு நாட்களுக்கு ஊதியம் கிடையாது. போனஸ், ஊதிய உயர்வு போன்றவற்றை அடுத்த ஆறு மாதங்களுக்கு பல நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளது.
 
 
 
 
 

 

 

பெங்களூருவைச் சேர்ந்த அகிலண்ட் என்ற நிறுவனம் நாடு முழுவதும் 1800 ஊழியர்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களையும் ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் கட்டாய விடுப்பில் செல்லும் படி உத்தரவிட்டுள்ளது. சென்னையிலும் பல ஐடி நிறுவனங்களில் பல ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 500 தாண்டியுள்ளது. இந்த பணி நீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்று வருகிறது. புதிதாக ப்ராஜக்ட் கிடைக்காத காரணத்தால் பல நிறுவனங்கள் ஆட்கள் சேர்ப்பதை தற்போது குறைத்துள்ளன. கட்டாய விடுப்பில் ஊழியர்கள் பலருக்கு விருப்பமில்லை என்றாலும், பலர் இதை எதிர்பார்த்து சந்தோசப்படுபவர்களும் உண்டு. குடும்பத்துடன் சில நாட்கள் சந்தோசமாக இருக்க முடியும் என்ற காரணமும் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை நீக்காமல் கட்டாய விடுப்பு மூலம் சம்பள குறைப்பில் ஈடுபட்டால் ஊழியர்கள் ஏற்படும் பாதிப்பு அதிகபட்சம் குறையும் என்பதில் சந்தேகமில்லை.

1.35 லட்சம் பேருக்கு வேலை பறிபோகிறது : நகை தயாரிப்பு தொழிலுக்கு கடும் நெருக்கடி

மும்பை: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் நகைகளின் அளவை அமெரிக்கா கடுமையாக குறைத் துள்ளது. இதனால், அடுத்த மூன்று மாதங்களில் இந்தியாவில் 1.3 லட்சம் பேர், வேலை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. அமெரிக்காவில் ஏற்பட் டுள்ள பொருளாதார மந்த நிலை, இந்தியாவின் நகை மற்றும் ரத்தினக் கல் தயாரிப்பு தொழிலையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தான், அதிகமாக நகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மொத்த வைர ஏற்றுமதியில் 50 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் இத்தொழிலை நம்பி 13 லட்சம் பேர் உள்ளனர். சமீபகாலமாக அமெரிக்கா, தனது ஏற்றுமதிக்கான தேவையை கணிசமாக குறைத்துள்ளது. பண்டிகை காலமான டிசம் பரில் பெருமளவு ஏற்றுமதி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர், வேலை இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய நகை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலை சேர்ந்த சஞ்சய் கோதாரி கூறியதாவது: அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், தங்கள் ஏற்றுமதிக்கான தேவையை குறைத்துள்ளன. இதனால், அடுத்த மூன்று மாதங்களில் 1.35 லட்சத்துக்கும் மேற்பட் டோர், இத்தொழிலில் வேலை இழக்க நேரிடும். அமெரிக்காவின் ஏற்றுமதி தேவை மேலும், 50 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்திய தேயிலையில் 500 மில்லியன் கிலோ ஏல முறையில் வர்த்தகம் : மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தகவல்

கோவை: இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலையில் 500 மில்லியன் கிலோ ஏல முறையில் வர்த்தகம் செய்யப்படுவதாக, மத்திய வணிகம் மற்றும் மின் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். கோவை கவுண்டம்பாளையத்தில், மின்னணு ஏல முறை தேயிலை விற்பனை மைய துவக்க விழா நடந்தது. விழாவில், மின்னணு ஏல முறை தேயிலை விற்பனையை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் துவக்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் ஆண்டுக்கு 950 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 500 மில்லியன் கிலோ தேயிலை, ஏல முறையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இணைய தளம் மூலமாகவும் வர்த்தகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கும். வாங்குபவர்களுக்கு உள்ள நடைமுறை சிக்கலும் தீர்க்கப்படும். கோவை, குன்னூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் இம்மையங்கள் செயல்படுகின்றன. இம்முறையால் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் எந்த மையத்தில் இருந்தும் ஏலத்தில் பங்கேற்க முடியும். தென்னிந்தியாவில் 40 சதவீதம் தேயிலை, சிறு உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படுகிறது. இங்கு, ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைக்கு ஈரான், ஈராக், எகிப்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே சந்தையாக உள்ளன. கைடோவில் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ஏற்றுமதி மேம்படும். தேயிலை உற்பத்தி செய்யும் ஆசிய நாடுகளின் கூட்டு ஒப்பந்தம் இம்மாதத்தில் நடப்பதாக இருந்தது. தாய்லாந்து பிரச்னையால், பிப்ரவரி இரண்டாவது வாரத்துக்கு இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியதும், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், நம் நாட்டில் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசினார்

வீட்டுக்கடன் வட்டி குறைப்பில் பொதுமக்கள் அதிருப்தி

வீட்டுக் கடன் வட்டி குறைப்பு போன்றவற்றை மத்திய அரசு அறிவித்திருப்பது, பல்வேறு தொழிற்சாலைகளுக்கு உதவத் தான். உண்மையிலேயே மக்கள் பயனடைவதற்கு இதில் வாய்ப்பில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தது முதல், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலேயே முடிவுகளை எடுத்து சலுகைகள் அறிவித்து வருகிறது. சமீபத்தில், பொருளாதார ரீதியாக சில சலுகைகளை அறிவித்தது. இதனால் பயனடைந்தது கார் தொழிற்சாலைகள் போன்றவை தான். அடுத்ததாக, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், ஏதோ மத்திய அரசுக்கு நடுத்தர மற்றும் சாதாரண மக்கள் மீது பாசம் வந்துவிட்டதாக பலரும் கருதினர். உண்மையில், இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையே பல பெரிய தொழில் அதிபர்களுக்கு உதவத் தான் என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், நிலத்தின் மதிப்பு உயர்வு, கட்டுமானப் பொருட்கள் உயர்வு, அதிக வட்டி விகிதம் போன்றவற்றால் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிமென்ட், இரும்பு தொழிற்சாலைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் கட்டுமானப் பணிகள் அதிகளவில் துவக்கப் பட்டால் தான், சிமென்ட், இரும்பு போன்றவற்றின் தேவை அதிகரிப்பதோடு, ரியல் எஸ்டேட் அதிபர்களுக் கும் வாழ்வு கிடைக்கும். இதை மனதில் வைத்து தான் தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வட்டி குறைப்பு செய்வதாக இருந்தால், ஏற்கனவே தேசிய வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்களுக்கும், இந்த சலுகையை அளித்திருக்க வேண்டும். குறிப்பாக, ‘புளோட்டிங்’ முறையில் கடன் பெற்றவர்களுக்கு, பயனளிக்கும் வகையில் வட்டி குறைப்பு செய்திருக்க வேண்டும். காரணம், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு முன், வீட்டுக் கடனுக்கான வட்டி 8 சதவீதம் அளவில் தான் இருந்தது. பல தனியார் வங்கிகள், எல்.ஐ.சி., போன்றவை 7.25 சதவீத வட்டிக்கே கடன் கொடுத்தன. ஆனால், காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, வீட்டுக் கடன் மீதான வட்டி 3 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. இதனால், ஏற்கனவே கடன் பெற்றவர்கள் தற்போது, 10.5 சதவீதம் வரை வட்டி செலுத்தி வருகின்றனர். தற்போது அறிவித்திருக்கும் வட்டி சலுகை கூட, நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்காது. புதிதாக வாங்கும் கடனிலும் ஐந்து லட்சம் வரையிலான கடனுக்குத் தான் 8.25 சதவீதம் வட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்குவது இயலாத காரியம். 20 லட்சம் வரையிலான கடனுக்கு 9.25 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக கடன் வாங்குவோருக்கு பயன் இருக்கும். ஆனால், 9.25 சதவீதம் வட்டி என்பதே, தற்போதைய நிலையில் அதிகமானது தான். இதே முறையை தான் அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த 2004ம் ஆண்டில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 ரூபாய் என்ற அளவில் இருந்தது. அப்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 40 டாலர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்தபோது, அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. கச்சா எண்ணெய் விலை 135 டாலராக உயர்ந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 40 டாலருக்கும் குறைவாக உள்ளது. அப்படியானால், பெட் ரோல் விலையை 20 ரூபாய் குறைத்திருக்க வேண்டும். டீசல் விலையையும் 10 ரூபாய் வரை குறைத்திருக்க வேண்டும். ஆனால், பெட்ரோல் ஐந்து ரூபாயும், டீசல் இரண்டு ரூபாயும் தான் குறைக்கப்பட்டது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பயன்பெறவே வழிசெய்யப்பட்டுள்ளது. இதே நிலை தான், சமையல் காஸ் சிலிண்டருக்கும் உள்ளது. சமீபத்தில் கூட சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தியது அரசு. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்தபோதிலும், காஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. எண்ணெய் நிறுவனங்களுக்கு முந்தைய காலங்களில், அதிகளவில் மானியத்தை அரசு அளித்துவந்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, விலைவாசியும் உயராமல் இருந்தது. தற்போது, மானியத்தை முற்றிலுமாக நிறுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாகவே விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. டீசல் விலையை குறைத்தாலே, போக்குவரத்து செலவு மிச்சமாகி, பல பொருட்களின் விலை குறைந்துவிடும். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தால் சாதாரண மக்கள் பயன்பெற்றுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு மிகவும் கவனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. கோடீஸ்வரர்களை அதிகளவில் உருவாக்கிக் கொண்டி ருக்கும் அரசு, மற்ற குடிமக்களின் வாழ்க்கை தரத்தை யும் முன்னேற்றினால், வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு பலனளிக்கும்.

ஓரிரு மாதங்களில் புதிதாக 90,000 பேருக்கு வேலை : அணில் அம்பானி அறிவிப்பு

மும்பை : சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியை முன்னிட்டு, பெரும்பாலான கார்பரேட் நிறுவனங்கள் லே – ஆப் செய்து கொண்டிருக்கும்போது, அணில் அம்பானியின் நிறுவனம், ‘ ஜாப் கட் ‘ எதையும் செய்யப்போவதில்லை என்றும், இன்னும் சில மாதங்களில் 90,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு அளிப்போம் என்றும் தெரிவித்திருக்கிறது. அணில் அம்பானியின் நிதி நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களில் சுமார் 6,000 பேர் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று வெளியான செய்தியை மறுத்துள்ள அணில் அம்பானி குரூப்பை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர், நாங்கள் ஒரு ஊழியரை கூட வேலையில் இருந்து தூக்கவில்லை என்றார். இனிவரும் மூன்று மாதங்களும் வரியை சேமிக்கும் மாதங்களாக இருப்பதால், அந்த நேரத்தில் நாங்கள் 75,000 – 90,000 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்கி தருவோம் என்றார். இந்த மாத துவக்கத்தில் ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸின் தலைவர் நந்தகோபால் பேசியபோது,நாங்கள் மார்ச் 2009 க்குள் 90,000 இன்சூரன்ஸ் ஏஜென்ட்களையும் 2,500 சேல்ஸ் மேனேஜர்களையும் புதிதாக வேலைக்கு எடுப்போம் என்று சொல்லியிருந்தார்.

அமெரிக்க ஆட்டோ இன்டஸ்டிரியை காப்பாற்ற அமெரிக்க அரசு 17.4 பில்லியன் டாலர் கடனுதவி

டெட்ராய்ட் : மூடக்கூடிய நிலையில் இருக்கும் அமெரிக்க கார் கம்பெனிகளான ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிரைஸ்லரை, வீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற அமெரிக்க அரசு 17.4 பில்லியன் டாலர்கள் ( சுமார் 82,000 கோடி ரூபாய் ) கடனுதவி கொடுக்க முன் வந்துள்ளது. உலக அளவில் மிகப்பெரிய கார் கம்பெனிகளாக கருதப்படும் ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் கிரைஸ்லர் ஆகிய மூன்று அமெரிக்க நிறுவனங்களுமே இப்போது கடும் நிதி நெருக்கடியில் இருக்கின்றன. அவைகள் மூடக்கூடிய நிலையில் இருப்பதால், அமெரிக்க வங்கிகளுக்கு கொடுத்தது போல எங்களது கடன்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அமெரிக்க அரசிடம் அந்த நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இந்த திட்டம் அமெரிக்க செனட் சபையில் தோல்வி அடைந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிரைஸ்லர் கார் கம்பெனிகளுக்கு 17.4 பில்லியன் டாலர்கள் கடனுதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனை புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரக் ஒபாமாவும் வரவேற்றுள்ளார். ஏற்கனவே அமெரிக்க அரசு, வங்கிகளுக்கு கொடுப்பதாக அறிவித்த 700 பில்லியன் டாலர்கள் கடனுதவி திட்டத்தில் ஒரு பகுதியாகத்தான் இந்த 17.4 பில்லியன் டாலர் கடன் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிரைஸ்லர் கம்பெனிகளுக்கு கொடுக்கப்படுகிறது. எனவே இதற்கு காங்கிரஸ் மற்றும் செனட் சபையில் ஓப்புதல் பெற வேண்டியதில்லை. ஜெனரல் மோட்டார்ஸ்க்கு 9.4 பில்லியன் டாலர்களும், கிரைஸ்லருக்கு 4 பில்லியன் டாலர்களும் உடனடியாக கொடுக்கப்படுகிறது. மீதி 4 பில்லியன் டாலர்கள் பின்னர் கொடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது. இந்த கடன் தொகையை கொண்டு அடுத்த மார்ச் மாதத்திற்குள் அந்த கம்பெனிகள் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும் என்றும் அரசு சொல்லியிருக்கிறது. அரசு உதவி ஏதும் இல்லாமலேயே நாங்கள் எங்களை சரி செய்து கொள்வோம் என்று ஃபோர்டு தெரிவித்திருக்கிறது

நோட் புக் மற்றும் நெட்புக்கை வெளியிட்டது சாம்சங்

புதுடில்லி : டிஜிட்டல் டெக்னாலஜியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் தென் கொரியாவின் சாம்சங்க், நோட்புக் மற்றும் நெட்புக்கை புதுடில்லியில் நேற்று அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அது, லேப் – டாப் பிசினஸில் நுழைகிறது. ஏசஸ் என்ற நிறுவனம், நெட்புக் என்று அழைக்கப்படும் கையடக்க லேப் – டாப்பை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியிட்டு வெற்றி பெற்றதும் நெட்புக் மீது மக்களிடையே கடும் வரவேற்பு இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சாம்செங், இப்போது நெட்புக் பிசினஸிலும் நுழைகிறது. இவைகள் ரூ.28,000 இலிருந்து ரூ.1,15,014 வரை விலையில் இருக்கின்றன. இந்திய நோட்புக் சந்தையில் நுழைந்துள்ள நாங்கள் வெளியிட்டிருக்கும் நோட்புக் மற்றும் நெட்புக், வாடிக்கையாளர்களுக்கு முழு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும் என்று சொன்னார் சாம்செங் இந்தியாவின் இயக்குனர் ரஞ்சித் சிங் யாதவ். நாங்கள் வெளியிட்டுள்ள நோட்புக்களின் 75 சதவீத பாகங்கள் சேம்சங்கிலேயே தயாரித்தவை என்று சொன்ன யாதவ், 2010 வாக்கில் இந்திய நோட்புக் சந்தையில் இரண்டு இலக்க மார்க்கெட் ஷேரை பிடித்துக்கொள்ள நாங்கள் முயற்சிக்கிறோம் என்றார்.

லண்டனின் பிரபல டபுள் – டெக்கர் பஸ் டிசைன் மாற்றப்படுகிறது

லண்டன் : லண்டனில் பிரபலமான விஷயங்களில் ஒன்று டபிள் – டெக்கர் பஸ். ரூட்மாஸ்டர் என்று அழைக்கப்படும் அந்த சிகப்பு கலர் பஸ் கடந்த 1956 முதலே அங்கு ஓடிக்கொண்டிருக்கிறது. அசோசியேட்டட் எக்யூப்மென்ட் கம்பெனி டிசைன் செய்த அந்த பஸ்ஸின் மாடலை இப்போது மாற்ற இருக்கிறார்கள். வீல் சேர்களில் வருபவர்கள் மற்றும் தள்ளுவண்டியில் வருபவர்கள் அதில் ஏற முடியவில்லை என்பதால், சுமார் 52 வருடங்களாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் அந்த பஸ்ஸின் மாடல் மாற்றப்படுகிறது. புதிய மாதிரி பஸ் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு போட்டியும் அங்கு வைக்கப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்கள் உள்பட சுமார் 700 பேர் அதில் கலந்து கொண்டு மாடல்களை அனுப்பி இருந்தனர். அவற்றுள் ஆஸ்டிஸ் மார்ட்டின் நிறுவனம் கொடுத்த மாடல்தான் முதல் பரிசு பெற்றிருக்கிறது. ஃபோஸ்டர்ஸ் அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்டின் மார்ட்டின் புது மாடலை தயார் செய்திருந்தது. அவர்களுக்கு 25,000 பவுண்ட் பணமும் பரிசாக கொடுக்கப்பட்டது. இப்போதிருக்கும் பழைய மாடல் பஸ் 2005 வரை ஓடும் என்றும் புது மாடல் பஸ் 2011 இலிருந்து ஓடத்துவங்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஊழியர் பணிநீக்கம் கிடையாது – ஹச்.சி.எல்

சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில் இந்தியாவில் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹச்.சி.எல் நிறுவனத்தில் எந்த பணி நீக்கமும் நடைபெறவில்லை என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வினித் நாயர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அந்நிறுவனத்தலைவர் “இதுவரை நாங்கள் எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்யவில்லை, செய்யவும் போவதில்லை. இந்த பொருளாதார நெருக்கடி எங்களுக்கு எந்த பிரச்சனையும் கொடுக்கவில்லை என்று சொல்ல முடியாது. இருந்த போதிலும் சில செலவினங்களை  குறைக்கும்  வழிகளில் ஈடுபட்டுள்ளோம்.” என்றார். ஹச்.சி.எல் நிறுவனத்தில் உலகெங்கிலும் மொத்தமாக 55000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தொடர்ந்து இந்நிறுவனம் புதிதாக ஆட்களை எடுக்கும் பணியில் இருப்பதாகவும் ஆனால் திட்டமிட்ட எண்ணிக்கையில் ஆட்களை எடுக்க முடியுமா என்பதில் சந்தேகமே என்றும் அவர் தெரிவித்தார். ஊழியர்களின் போனஸ் மற்றும் சம்பள உயர்வு பற்றி அடுத்த 6 மாத காலத்தில் முடிவெக்கப்படும் என்றார்.
   

2,000 தற்காலிக ஊயியர்களை வேலைநீக்கம் செய்ய ஹூண்டாய் இந்தியா முடிவு

 புதுடில்லி : கொரிய கார் கம்பெனியான ஹூண்டாய் நிறுவனம், அதன் இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களில் 2,000 பேரை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறது. இப்போது அவர்களுக்கு இந்தியாவில் மொத்தம் 8,400 ஊழியர்கள் இருக்கிறார்கள். இதில் சுமார் 3,300 ஊழியர்கள் தற்காலிக ஊழியர்கள். இதில் 2,000 பேரைத்தான் வேலையில் இருந்து நீக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஜனவரி 2009 முதல் படிப்படியாக இவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கார்களுக்கான டிமாண்ட் கூடவில்லை என்றாலும் நாங்கள் அடுத்த வருட துவக்கத்தில் இருந்து சில ஷிப்ட்களையும் குறைத்து விடுவோம் என்று ஹூண்டாய் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு முன் சென்னையில் இருக்கும் ஹூண்டாய் தொழிற்சாலையின் இரு யூனிட்களிலும் ஆறு ஷிப்ட்கள் இயங்கி வந்தன. இப்போது அது ஐந்து ஷிப்ட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. அது இனிமேல், வரும் ஜனவரியில் இருந்து நான்கு அல்லது மூன்று ஷிப்ட்களாக குறைக்கப்படும் என்று தெரிகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அவர்களது கார்களில் மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது. 2009ம் வருடத்தில் ஏற்றுமதி 25 சதவீதம் குறைந்து விடும் என்று எதிர்பார்ப்பதால் , உற்பத்தியை குறைக்க முடிவெடுத்ததாக சொல்கிறார்கள். இப்போது அந்த நிறுவனம் ஷிப்ட் ஒன்றுக்கு 250 கார்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 1,600 முதல் 1,800 வரை கார்களை தயாரிக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: