புஷ் மீது வீசிய ஷூக்களை ஒரு கோடி டாலருக்கு வாங்கிக்கொள்ள மக்கள் ஆர்வம்

பாக்தாத் : ஈராக்கில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்மீது வீசப்பட்ட ஷூக்களை ஒரு கோடி டாலர் வரை ( சுமார் 47 கோடி ரூபாய் ) கொடுத்து வாங்கிக்கொள்ள அரபு நாடுகளில் மக்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிறு அன்று ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அந்நாட்டு பிரதமர் நூரி அல் மாலிகியுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எகிப்து தலைநகர் கெய்ரோவை தலைமையிடமாக செயல்பட்டு வரும் அல் பாக்தாதியா என்ற தனியார் டி.வி.நிறுவனத்தின் பாக்தாத் நிருபராக இருக்கும் முந்தாதார் அல் ஜெய்டி என்பவர் ஜார்ஜ் புஷ் மீது அவனது இரண்டு ஷூக்களையும் கழற்றி வீசினார். அந்த ஷூக்கள் அதிபர் புஷ் மீது படவில்லை என்றாலும், அந்த ஷூக்கள் இப்போது அரபு நாடுகளிடையே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அதிக மதிப்புள்ளதாகவும் அகி விட்டன. பாத்தாத்தில் உள்ள ஒரு ஷூ கடையில் வாங்கப்பட்ட அந்த டார்க் பிரவுன் ஷூக்கள் இப்போது 10 மில்லியன் டாலர் வரை ( ஒரு கோடி டாலர் – சுமார் 47 கோடி ரூபாய் ) வரை விலை போகும் என்று சொல்லப்படுகிறது

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது?: சிதம்பரம் தகவல்

புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்தால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 2,000 ரூபாயாக குறைந்ததால், இம்மாத முற்பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 2 ரூபாயும் குறைக்கப்பட்டது. இருந்தாலும், இந்த விலை குறைப்பு போதாது, மேலும் விலையை குறைக்க வேண்டும். அத்துடன் சமையல் காஸ் மற்றும் கெரசின் விலையையும் குறைக்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, துணை கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ‘கச்சா எண்ணெய் விலை நிலவரங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விலை குறைவு தொடர்ந்தால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும். அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்’ என்றார். உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா பதிலளிக்கையில், ‘டிசம்பர் 6ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது இடைக்கால நடவடிக்கையே. கெரசின் மற்றும் சமையல் எரிவாயு விற்பனையில், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை’ என்றார். இம்மாத முற்பகுதியில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டர் ஒன்றுக்கு 9.98 ரூபாயும், டீசல் விலையில் 1.03 ரூபாயும் லாபம் சம்பாதித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தால், இந்த லாப அளவு பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 11.48 ரூபாயாகவும், டீசலுக்கு 2.92 ரூபாயாகவும் அதிகரிக்கும் என, பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். இருந்தாலும், கெரசின் விற்பனையில் லிட்டர் ஒன்றுக்கு 17.26 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில் 148.38 ரூபாயும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்த நிதியாண்டில், எரிபொருள் விற்பனையில் மட்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பேங்க் ஆஃப் பரோடாவில் புதிதாக 2,000 பேருக்கு வேலை

லண்டன் : சர்வதேச அளவில் கடும் நிதி நெருக்கடி இருந்து வந்தாலும், பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா அடுத்த வருடத்திற்குள் 2,000 பேரை புதிதாக வேலையில் சேர்த்துக்கொள்ள இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வங்கிநடவடிக்கையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கும் பேங்க் ஆஃப் பரோடா, அதற்காக இன்னும் 2,000 பேரை வேலையில் சேர்த்துக்கொள்ள இருப்பதாக அதன் சி.எம்.டி., மல்லையா லண்டனில் இன்று தெரிவித்தார். 2009 க்குள் நாங்கள் இந்தியாவில் 150 புதிய கிளைகளையும் வெளிநாடுகளில் 10 புதிய கிளைகளையும் திறக்க இருக்கிறோம். அதற்காக கிளார்க் லெவலில் 1000 பேரையும் ஆபீசர் லெவலில் 1000 பேரையும் புதிதாக வேலையில் சேர்த்துக்கொள்ள இருக்கிறோம் என்றார் அவர். ஏற்கனவே பேங்க் ஆஃப் பரோடாவில் 36,000 பேருக்கு மேல் வேலை பார்த்து வருகிறார்கள்.

சரிந்தது பங்கு சந்தை

மும்பை : இன்றைய பங்கு வர்த்தகத்தில் மெட்டல், டெலிகாம்,பவர், கேப்பிடல் குட்ஸ்,ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் போன்ற நிறுவன பங்குகள் இன்று பெருமளவில் விற்கப்பட்டதாலும், சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பங்குகள் வேகமாக குறைந்து போனதாலும் சென்செக்ஸ் சரிந்து விட்டது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது எனலாம். மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் ஆரம்பித்திருந்தாலும், மதியத்திற்கு மேல் சரிய துவங்கி விட்டது. ஐரோப்பிய, அமெரிக்க பங்கு சந்தைகளின் வீழ்ச்சிதான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. சென்செக்ஸ் 9,682.91 புள்ளிகள் வரை இறங்கி வந்தாலும் வர்த்தக முடிவில் 261.69 புள்ளிகள் ( 2.62 சதவீதம் ) குறைந்து 9,715.29 புள்ளிகளில் முடிந்திருந்தது. நிப்டி 2,943.50 புள்ளிகள் வரை இறங்கி இருந்தாலும் வர்த்தக முடிவில் 87.40 புள்ளிகள் ( 2.87 சதவீதம் ) குறைந்து 2,954.35 புள்ளிகளில் முடிந்திருந்தது.தொடர்ந்து ஐந்து வர்த்தக நாட்களாக அசையாமல் இருந்த மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் இன்று ஆட்டம் க்ண்டு விட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், சத்யம், பெல், எஸ்.பி.ஐ., எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்ஃரா ஆகிய நிறுவனங்கள் அதிகம் பாதிப்படைந்திருந்தன. இன்று அதிகம் பாதிக்கப்பட்டது சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான். 30.22 சதவீத மதிப்பை அது இழந்திருந்தது. இருந்தாலும் ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஓ.என்.ஜி.சி.,ஹெச்.யு.எல், ஹெச்.டி.எப்.சி.பேங்க், கிராசிம், விப்ரோ பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன.

பணவீக்கம் 7.49 சதவீதமாக குறைந்திருக்கும் : சர்வே

புதுடில்லி : இந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 7.49 சதவீதமாகத்தான் இருக்கும் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரிய வந்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் மத்திய அரசு, பெட்ரோல் விலையை 10 சதவீதமும் டீசலின் விலையை 6 சதவீதமும் குறைத்திருக்கிறது. இதன் காரணமாக பணவீக்கம் 7.49 சதவீதமாக குறைந்திருக்கும் என்று 11 பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதால் எவ்வளவு சதவீதம் பணவீக்கம் குறைந்திருக்கும் என்று சரியாக சொல்ல முடியாவிட்டாலும், 1.5 சதவீதம் முதல் 2.0 சதவீதம் குறைந்திருக்கும் என்று ஆக்ஸிஸ் வங்கியின் பொருளாதார நிபுணர் சவ்கதா பட்டாச்சார்யா சொல்கிறார். பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட ஜூன் ஆரம்பத்தில் இந்தியாவின் பணவீக்கம் இரட்டை இலக்கத்திற்கு சென்றது. பின்னர் அது அதிகபட்சமாக ஆகஸ்ட் 2 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.91 சதவீதமாக உயர்ந்திருந்தது.

சத்யம் நிறுவன பங்குகள் 30% வீழ்ச்சி

இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் மேடாஸ் இன்ஃப்ரா மற்றும் மேடாஸ் புராபர்டீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக்கொள்ளும் திட்டத்தில் இருந்து விலகிக்கொண்டது. இதன் விளைவாக பங்குச்சந்தையில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் அதிரடி வீழ்ச்சி கண்டது.

சத்யம் கம்பியூட்டர்ஸ் தரப்பில் முதலீட்டாளர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தது. மேடாஸ் புராபர்டீஸ் நிறுவனத்தையும் மேடாஸ் இன்ஃப்ராவின் 51 சதவீத பங்குகளையும் சுமார் 8,235 கோடி ரூபாய்  வாங்கிக்கொள்வதாக சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் அறிவித்த 12 மணி நேரத்திற்குள் அதிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை அன்று இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக்கொள்வதாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் அறிவித்ததும், அதன் பங்குதாரர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு ஐ.டி.கம்பெனி, கட்டுமான நிறுவனமான மேடாஸை வாங்குவதில் முதலீட்டாளர்களுக்கு விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் நியுயார்க் பங்கு சந்தையில் மேடாஸ் நிறுவன பங்கு மதிப்பு 55 சதவீதம் வரை குறைந்து விட்டது. செவ்வாய்க்கியமை அன்று இந்திய பங்கு சந்தை முடிவடைந்ததும், நலிவடைந்திருக்கும் மேடாஸ் புராபர்டீஸின் எல்லா பங்குகளையும் 1.3 பில்லியன் டாலருக்கும், மேடாஸ் இன்ஃராவின் 51 சதவீத பங்குகளை 0.3 பில்லியன் டாலருக்கும் வாங்கிக்கொள்வதாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் அறிவித்தது. ஏற்கனவே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் சேர்மன் ராமலிங்க ராஜூவுக்கும் அவரை சேர்ந்தவர்களுக்கும் மேடாஸ் இன்ஃப்ராவில் 36 சதவீத பங்குகளும் மேடாஸ் புராபர்டீஸில் 35 சதவீத பங்குகளும் இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் இருந்து சத்யம் விலகிக்கொள்வதாக அறிவித்ததும், சரிந்திருந்த அதன் பங்கு மதிப்ப ஓரளவு மீண்டது.

 ஆனால் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் இன்று பலத்த வீழ்ச்சி கண்டது. தொடக்கத்தில் 25% வீழ்ச்சி கண்டு வீழ்ச்சி அதிகரித்துக்கொண்டே சென்றது. முடிவில் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் 30% வீழ்ச்சி கண்டிருந்தது. சத்யம் நிறுவனம் இதுவரை இவ்வளவு வீழ்ச்சி கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சத்யம் நிறுவனத்தின் பங்குகள் இன்று 68 புள்ளிகள் வீழ்ந்தது. 226.50 புள்ளிகளுடன் ஆரம்பித்த பங்குகள் முடிவில் 158.05 ஆக முடிந்தது.

என்ன செய்யலாம்? – தமிழ்வணிகத்தின் கட்டுரைப்போட்டி
 

விஷூவல் மீடியா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் வணிகத் தகவல்களின் பெட்டகம் “தமிழ் வணிகம்” இணையத் தளம். வர்த்தகம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தங்கத் தமிழில் தடையில்லாமல் பரப்புவது எங்களின் முதன்மை நோக்கம். மென்பொருட்கள் உருவாக்கம், இணையத் தள வடிவமைப்பு, பயன்தரும் நட்புத் தளங்களைத் உலகளாவிய தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வது என “தமிழ் வணிகத்தின்” பணிகள் பரந்து விரிந்துள்ளன. இதோ இப்போது, மற்றொரு புதிய முயற்சியாக இப்போது கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறது “தமிழ் வணிகம்”.

இன்றைய உலகத்தை அச்சுறுத்தி வருகிறது பொருளாதார மந்த நிலை. அன்றாடம், உலகின் பல நாடுகளில் மக்கள் தங்கள் வாழ்வதாரத்தின் ஆணிவேரான வேலையை இழந்து வருகின்றனர். வாழும் வழி தெரியாமல் சிலர் தங்கள் வாழ்க்கையையே மாய்த்துக் கொள்கின்றனர். இத்தகைய சூழலில், எந்தத் தொழில் செய்தால் ஜெயம் பெறலாம்? அதற்குரிய எளிய வழிகள் என்னென்ன? யாரை? எங்கு? எப்படி? அணுக வேண்டும். குறைந்த முதலீட்டில் நிறைந்த இலாபம் சம்பாதிப்பது எப்படி? இப்படி இயல்பாகப் நம்முள் எழும் கேள்விகள் ஏராளம். அவற்றுக்கான விடைகள் உங்கள் மனச் சுரங்கத்தில் மண்டிக்கிடக்கலாம். தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருப்பதை விட நாலு பேருக்கு வழி காட்டுவது கூடுதல் புண்ணியம். எனவே தயங்க வேண்டாம். சட்டென எழுதத் தொடங்குங்கள் போட்டிக் கட்டுரையை.


பெருகிவரும் தொழில் போட்டியில் வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் ஈர்க்க, அல்லது தனது வலையில் விழவைக்க நினைத்துப் பெரிய பெரிய நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வழங்கின. ஆனால், அந்தச் சலுகைகள் சில நிறுவனங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டங்காண வைத்து விட்டன. தமது தொழில் எல்லையை விரிவுபடுத்த எண்ணி நிறுவனத்தையே தள்ளாட வைக்கும் நிலைக்கு ஆளாகி விட்டனர் பலர். எந்தத் துறையிலும் கரை கண்டவர்கள் யாரும் இல்லை. சில நமக்குத் தெரிந்திருக்கலாம். பல நாம் அறியாமல் இருக்கலாம். அதே சமயம் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளுக்குள் ஊறிக் கொண்டே இருக்கும்.

எனவே தொழில் முறைகள் பற்றி உங்களுக்கு தெரிந்ததைத் தொகுத்துக் கட்டுரையாக்கி எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் படைப்புக்கள் ஆசிரியர் குழுவின் அனுமதியோடு “தமிழ் வணிகம்” இணையத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் சிறப்புச் செய்தியாக வெளியிடப்படும்.

இப்போட்டிக்கான கட்டுரைகள் சுய தொழிலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஊக்க மருந்தாக அமைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். உங்களின் படைப்புக்கள் சிலருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போடும் நெம்புகோலாக அமையலாம்.

இன்னும் என்ன யோசனை? எடுங்கள் பேனாவை. வெளிப்படுத்துங்கள் உங்கள் படைப்பாற்றலை.


விதிமுறைகள் மற்றும் ஆசிரியர் குழு, அனுப்ப வேண்டி கடைசி தேதி மற்றும் முகவரி நாளை தமிழ் வணிகம் செய்தி தளத்தில் தெரியப்படுத்தப்படும்.

புதுமைகளை வரவேற்கும் வாஞ்சையான நெஞ்சத்துக்குச் சொந்தக்காரர்கள் நீங்கள். தமிழ் வணிகத்தின் இந்தப் புதிய முயற்சியை இன்னும் செழுமையாக்கும் யோசனைகளையும் மறக்காமல் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.


வேண்டுகோள்: வலைப்பூ மற்றும் இணையதள நண்பர்கள் இந்த அறிவிப்பை உங்கள் தளங்களில் பதிவிட்டு பலருக்கும் தெரியப்படுத்தும்படி நட்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வாருங்கள்!! இணையுங்கள்!! வென்றிடுங்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: