5 வச்சா பத்து ரூபா… 10 வச்சா 20 ரூபா…!: உலக மெகா மோசடி! ?

ஜே.எஸ்.கே.பாலகுமார் சாலை ஓரங்களில் 3 சீட்டு மோடி மஸ்தான்கள் இப்படி கூவி, கூவி அழைப்பதை பார்த்திருக்கலாம். படிக்காத, ஏழை மக்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு இவர்களிடம் ஏமாறுவது வழக்கம். சில நேரங்களில் மாடி வீட்டு மைனர்கள் கூட இவர்களிடம் ஏமாறுவார்கள். வசீகர பேச்சும் கை மாற்றும் கலையும்தான் இந்த மோடி மஸ்தான்களின் முதல்.
இதே வேலையை அமெரிக்காவில் கோட், சூட் போட்ட ஒரு ‘சீமான்’ செய்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் அவர் அடித்த தொகை, 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய். இந்தியாவின் இந்த ஆண்டு பட்ஜெட் தொகையே 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஒரு நாட்டின் பட்ஜெட் தொகையில் கால்வாசியை ‘ஸ்வாகா’ செய்த அந்த அமெரிக்க சீமான் பெர்னார்ட் மேடாப் (70). 1990, 1991, 1993ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான ‘நாஸ்டாக்’கின் தலைவராக இருந்தவர்.
இவரா, இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டது என்று அமெரிக்காவில் அதிர்ச்சி அலை பரவிக் கொண்டிருக்கிறது. சிங்கிள் பெட்ரூம் பெஞ்சமின் முதல் கோடிகளில் புரளும் பிரெட் வில்போனும் இந்த மோசடியில் ‘கிளீன் போல்ட்’ ஆனதுதான் பரிதாபம்.
இந்த தள்ளாத வயதில் பெர்னார்ட் மேடாப் அப்படி என்னதான் மோசடி செய்துவிட்டார்?
பங்குச்சந்தை பண ‘விளையாட்டில்’ இளம் வயதிலேயே கைதேர்ந்த பெர்னார்டு தன்னுடைய 22 வயதில் 1960ல் ‘பெர்னார்ட் எல். மேட்ஆப் இன்ஸ்வெஸ்ட்மென்ட் செக்யூரிட்டீஸ்’ என்ற பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தை நியூயார்க் நகரில் தொடங்கினார்.
குறுகிய காலத்தில் தங்களுடைய பணம் குட்டி மேல் குட்டி போட வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இவரது குறி. அவர்களிடம் சென்று, ‘‘உங்கள் பணத்தை என் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்தை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து எங்குமே இல்லாத அளவுக்கு லாபத்துடன் திருப்பி தருகிறேன்’’ என்று உறுதி அளித்தார். 3 சதவீதம், 5 சதவீதம் என்று லாபம் கிடைத்த நிலையில், இவர் குறைந்தபட்சம் 10 சதவீதம் தருவதாக உறுதி அளித்துள்ளார்.
பெர்னார்டின் பேச்சையும், பணக்கட்டுகளை எண்ணும் ஆசையுடனும் இருந்த ஏராளமானவர்கள் கட்டுக்கட்டாக டாலர்களை கொண்டு வந்து நீட்டினர். சொன்னதை விட ஒருபடி மேலே சென்று டாலர்களை இரண்டு மடங்கு, மூன்று மடங்கு என்று சகட்டுமேனிக்கு அள்ளித்தர ஆரம்பித்தார்.
ஒரு முறை லாபம் கண்டவர்கள், மீண்டும், மீண்டும் டாலர்களை கொண்டு வந்து கொட்டினர். கோடீஸ்வரர்கள் எல்லாம் பெர்னார்ட்டையும், அவரது நிறுவனத்தையும் அப்படியே நம்பினர். பெர்னார்டின் நிறுவனம் நாளரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பல இடங்களில் வளர ஆரம்பித்தது. அவருடைய சொத்தும் அந்தஸ்தும் பல மடங்கு உயர ஆரம்பித்தது.
ஸ்டெர்லிங் ஈக்யுட்டீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிரெட் வில்போன், ஒரு படத்தில் நடிப்பதற்கு பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர் ராபர்ட் லோகியா, யூதர்கள் அமைப்பான யேஷிவா பல்கலை, அரசு வக்கீல் ஜெர்ரி ரேஸ்மென் என பலர் பெர்னார்ட்டை நம்பினர் என்றால் இவரது கில்லாடித்தனம் விளங்கும்.
பெர்னார்ட் செய்தது இதுதான். முதலில் பணம் கொடுத்தவர்களுக்கு அடுத்து வருபவர்களிடம் பணம் வாங்கி வட்டியுடன் திருப்பி கொடுப்பார். அவர்களுக்கு அடுத்தடுத்து பணம் தருபவர்களிடம் வாங்கி வட்டியுடன் திருப்பி கொடுப்பார்.
இந்த விஷயம் இப்போதுதான் வெளியே வந்துள்ளது. அதுவும் அவரது வாயாலேயே வெளிவந்து மூலையில் முடங்கிவிட்டார். எந்த பங்குச்சந்தை பெயரைச் சொல்லி வளர்ந்தாரோ, அதே பங்குச்சந்தையால் வீழ்ந்துள்ளார். இவரது பொன்முட்டையிடும் திட்டம் வெளியே வந்ததும் ஒரு சுவாரசியமான விஷயம்.
அமெரிக்காவில் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்து கோடீஸ்வரர்கள் எல்லாம் ஓட்டாண்டிகளாக மாறிக் கொண்டிருந்த நிலையில், பலர் எங்கெல்லாம் முதலீடு செய்திருந்தார்களோ அதையெல்லாம் திருப்பி எடுக்க ஆரம்பித்தனர்.

இப்படித்தான் பெர்னார்டிடம் முதலீடு செய்தவர்கள் பணத்தை திருப்பி கேட்க ஆரம்பித்தனர். பெர்னார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அவரிடம் சென்று, ‘‘நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் பலர் பணத்தை திரும்பி கேட்கின்றனர். இதுவரையில் கேட்டுள்ளவர்களுக்கு மட்டும் 35,300 கோடி ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டியுள்ளது’’ என்றனர். மேலும், 3 மாதமாக சம்பளம் தராததால் அதையும் கேட்டுள்ளனர்.
இந்த விஷயத்தை அலுவலகத்தில் வைத்து பேச விரும்பவில்லை என்று கூறிய பெர்னார்ட், வீட்டில் வைத்து இதுகுறித்து பேசலாம் என்று கூறிச்சென்றுவிட்டார்.
ஏற்கனவே நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக சந்தேகப்பட்ட ஊழியர்கள் மொத்தமாக வீட்டுக்கு சென்று நின்றுவிட்டனர். அப்போதுதான் பெர்னார்ட் ‘திருவாய்’ மலர்ந்தார். ‘‘இத்தனை நாள் நான் நடத்தியது போலி நிறுவனம்தான். என்னிடம் எந்த சொத்தும் கிடையாது. நிறுவனம் திவாலாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது’’ என்றார்.

அதிர்ச்சி அடைந்த மகன்களே பங்குச்சந்தை கமிஷனுக்கு தகவல் தெரிவித்ததாக ‘வால் ஸ்டிரிட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. கடைசி நேரத்தில் 10 கோடி டாலர் வரை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வாரி வழங்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கமிஷனின் தலைவரும் உறுப்பினர்களும் எப்.பி.ஐ.யிடம் புகார் செய்தனர்.

எப்.பி.ஐ. மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. நீதிமன்ற வளாகமே கட்சி கூட்டம் நடக்கும் இடம்போல் ஆகிவிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி லூயிஸ் ஸ்டான்டன், பெர்னார்டின் சொத்துக்களையும், அவரது நிறுவனத்தையும் உடனடியாக முடக்கி வைக்க உத்தரவிட்டார். வக்கீல் லீ ரிச்சர்ட் என்பவரை நீதிமன்ற மேற்பார்வையாளராகவும் நியமித்தார்.
முதல்கட்ட விசாரணையில் 83,300 கோடி ரூபாய் அளவுக்கு பெர்னார்டுக்கு சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்ஹாட்டன், புளோரிடா ஆகிய இடங்களிலும், பிரான்ஸ், சவுதியில் உள்ள பனைமர கடற்கரையிலும் பலகோடி சொத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. பெர்னார்டுக்கு சொந்தமாக ஒரு சொகுசு கப்பலும் இருப்பதை எப்.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.
இப்போது பெர்னார்ட் சிறையில் 1, 2, 3 என எண்ணிக் கொண்டிருக்கிறார். ?

பொருளாதார நெருக்கடி: இதுவரை 25 யு.எஸ். வங்கிகள் திவால்

நியூயார்க்: பொருளாதார நெருக்கடியின் விளைவாக இதுவரை அமெரிக்காவில் 25 வங்கிகள் திவாலாகியுள்ளன. சராசரியாக மாதத்திற்கு 2 வங்கிகள் காலியாகி வருகின்றன.

உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசான அமெரிக்கா இப்போது பொருளாதாரத்தில் ஆட்டம் கண்டு வருகிறது. கடந்த மாதம் அமெரிக்காவின் பொருளாதார சீர்குலைவு அதிகாரப்பூர்வமாக ஒத்துக் கொள்ளப்பட்டது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு இதுவரை 25 அமெரிக்க வங்கிகள் திவாலாகியுள்ளன. மாதத்திற்கு சராசரியாக 2 வங்கிகள் காலியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதம் மட்டும் இதுவரை 3 வங்கிகள் சரிந்து விட்டன.

வெள்ளிக்கிழமையன்று சான்டர்சன் ஸ்டேட் வங்கி, ஹேவன் டிரஸ்ட் வங்கி ஆகியவை சரிந்தன.

கடந்த வாரம் ஜார்ஜியா கம்யூனிட்டி வங்கி போண்டி ஆனது.

கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் 52 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட வங்கிகள் நிதிப் பிரச்சினை காரணமாக மூடு விழா கண்டவை ஆகும்.

வட்டி குறைகிறது; வீடு விலை குறையுமா? காத்திருக்கிறது பங்குச் சந்தை

பங்குச் சந்தை இந்த வாரம் பொதுவாக நல்லபடியாகவே இருந்தது. புதன் வரை மேலே ஏறிச் சென்ற சந்தை, வியாழனும், வெள்ளியும் அந்த ஏற்றத்தை தக்க வைத்துக் கொண்டது. ஏனெனில், சமீபத்திய போக்குகள் என்னவென்றால், ஒரு நாள், ஒரு நல்ல செய்திக்காக ஏறினால், ஒரு கெட்ட செய்திக்காக குறைந்து கொண்டே வந்திருக்கிறது. ஆனால், விதி விலக்காக இந்த வாரம் சந்தை நிலை பெற்றிருக்கிறது. தொழில் வளர்ச்சி புள்ளி விவரம் அக்டோபரில் எப்படி இருக்கப்போகிறதோ என்ற நினைப்பிலே வியாழனன்று சந்தைகள் கீழேயே துவங்கின. இறுதியாக, ரிலையன்ஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., கவுன்ட்டர்களில் அதிகம் பங்குகள் வாங்கப்பட்டதால், சந்தை ஒன்பது புள்ளிகள் மட்டுமே கீழே முடிவடைந்தது. வெள்ளியன்று காலை முதலே சந்தை கீழேயே இருந்தது. அமெரிக்க அரசு, ஆட்டோ கம்பெனிகளூக்கு அளிக்கவிருந்த 1,500 கோடி டாலர் (ரூ.75 ஆயிரம் கோடி) பேக்கேஜ் ஏற்றுக்கொள்ளப்படாததால், உலகளவில் சந்தைகள் மறுபடி கீழேயே ஆரம்பித்தன. இந்தியாவிலும் சந்தை கிட்டத்தட்ட 200 புள்ளிகள் அளவு இறங்கியே இருந்தது. மதியம் அளவில் வந்த ஒரு செய்தி தான் சந்தையை தூக்கி விட்டது. இந்திய அரசு இன்னும் வட்டி விகிதங்களைக் குறைக்கலாம், சி.ஆர்.ஆர்., விகிதங்களை குறைக்கலாம் போன்று வந்த செய்திகள் சந்தையை கூட்டிச் சென்றது. அதாவது, கீழே இருந்த சந்தை நஷ்டங்கள் அவ்வளவையும் போக்கி லாபத்திலும் வந்து முடிவடைந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை, 44 புள்ளிகள் கூடி 9,690 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை இரண்டு புள்ளிகள் கூடி 2,921 புள்ளிகளில் முடிவடைந்தது. அக்டோபர் மாத தொழில் வளர்ச்சி புள்ளி விவரம் வெள்ளியன்று வெளியானது. அது, -0.4 சதவீதமாக இருந்தது. அதாவது, நெகடிவாக இருந்தது. சாதாரணமாக வளர்ச்சி சிறிது குறைந்து இருக்கும். ஆனால், நெகடிவாக இருக்காது. இது போன்று நடந்தது இந்திய சரித்திரத்திலேயே இரண்டாவது முறை. பலரும் இது போன்ற ஒரு இறக்கத்தை எதிர்பார்த்திருந்தனர். டிசம்பர் மாதம் 11ம் தேதி வரை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 2,048 கோடி ரூபாய்களுக்கு பங்குகள் வாங்கியிருப்பது நல்ல ஒரு அறிகுறி. அது, சந்தை சிறிது மேலே செல்லக் காரணமாக இருந்திருக்கிறது.

வீட்டுக்கடன்களின் வட்டி விகிதங்கள்: அரசின் கிடுக்கிப் பிடி காரணமாக 20 லட்சத்திற்கும் கீழ் நிறுவனங்கள் கொடுக்கப் போகும் வீட்டுக் கடன்களுக்கு வட்டி 8 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, வீடு வாங்கப் போகிறவர்களை ஊக்குவிக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில், வாங்க இருப்பவர்கள் இன்னும் வீட்டு விலை கீழே விழும் என்று காத்திருக்கின்றனர். யார் ஜெயிக்கின்றனர்கள் என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும். பணவீக்கம் வற்றியது என்று கூறினால் மிகையாகாது. இந்த வாரம் 8 சதவீத அளவிற்கு வந்துள்ளது. இது சென்ற வார அளவை விட குறைவு. சமீப காலத்தில் அதிகபட்ச அளவாக 12.91 சதவீதம் சென்றது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 5 சதவீதம் குறைந்துள்ளது. குறைந்து கொண்டே வரும் பணவீக்கம், ரிசர்வ் வங்கிக்கு வட்டி விகிதங்களை குறைக்க உதவும் ஒரு அளவுகோலாகும். பயங்கரவாத பயமுறுத்தல்களுக்கு பயந்து போயிருக்கும் இந்திய நிறுவனங்கள், தங்களது செக்யூரிட்டியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தீ தடுப்பு, அலாரங்கள் போன்றவைகளை வாங்கி நிறுவ ஆரம்பித்துள்ளன. இதனால், இவற்றை தயாரிக்கும் கம்பெனிகளுக்கு தற்போது நல்ல காலம் தான். குறிப்பாக, நித்தின் தீ தடுப்பு சிஸ்டம்ஸ், øகாம் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் மேலே சென்று வருகின்றன.

அடுத்த வாரம் எப்படி இருக்கும்? பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்துள்ளன. சமீபத்திய தேர்தல் முடிவுகள், மத்திய அரசிற்கு சாதகமாக உள்ளன. வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வருகின்றன. இவையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, அடுத்த வாரமும் சந்தை பெரிய அளவில் மேலே செல்லாவிடினும் நிலை பெற்று இருக்க வேண்டும். ஏதேனும் ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் வந்தால், அது சந்தையை இன்னும் பலப்படுத்தும்.

-சேதுராமன் சாத்தப்பன்

டாடா கார்கள் விலை குறைப்பு

சென்னை: சென்வாட் வரி குறைந்ததை அடுத்து, டாடா நிறுவனம் தனது பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான விலையை குறைத்துள்ளது. இதனால், பேமிலி கார்களுக்கு 12 ஆயிரம் முதல் 23 ஆயிரம் ரூபாய் வரையிலும், பெரிய வகை கார்களுக்கு 16 ஆயிரம் ரூபாய் முதல் 36 ஆயிரம் ரூபாய் வரையிலும், இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் முதல் 23 ஆயிரம் ரூபாய் வரையிலும், கனரக வாகனங்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை குறைக்கபட்டுள்ளது.

அமெரிக்க கார் கம்பெனிகளின் கடனை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்ளும் திட்டம் தோல்வி

வாஷிங்டன் : கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் அமெரிக்காவின் பிரபல மூன்று கார் கம்பெனிகளின் 14 பில்லியன் டாலர் கடனை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்ளும் திட்டம், அங்குள்ள செனட் சபையில் தோல்வி அடைந்துள்ளது. எனவே ஜெனரல் மோட்டார்ஸ், கிரைஸ்லர், போர்டு ஆகிய அந்த மூன்று கார் கம்பெனிகளிலும் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் வேலை இழக்கலாம் என்றும் கம்பெனிகள் இயங்காமல் போகலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த திட்டம் மிகவும் அவசியமான திட்டம் என்று வெள்ளை மாளிகை சொல்லியிருந்தும், யுனைட்டட் ஆட்டோ ஒர்க்கர்ஸ் யூனியன் இப்போதே சம்பள குறைப்புக்கு ஒத்துக்கொண்டால்தான் கடன் ஏற்பு திட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியும் என்று செனட் சபையில் உள்ள குடியரசு கட்சியினர் சொல்லி விட்டதால் திட்டம் தோல்வி அடைந்து விட்டது. யுனைட்டட் ஆட்டோ ஒர்க்கர்ஸ் யூனியனோ, கார் கம்பெனிகளுடன் சம்பளம் குறித்து செய்து கொண்ட ஒப்பந்தம் 2011 வரை இருப்பதால் இப்போதே சம்பள குறைப்புக்கு ஒத்துக்கொள்ள முடியாது என்று சொல்லி விட்டது. கடன் ஏற்பு திட்டம் தோல்வி அடைந்து விட்டதால் இந்த மூன்று பிரபல கார் கம்பெனிகளின் பங்குகள் சரிந்து விட்டன. அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பான், ஐரோப்பிய நாடுகளிலும் பங்கு சந்தைகள் சரிந்து விட்டன

இன்டக்ஸ் ஃபார் இன்டஸ்டிரியல் புரெடக்ஷன் 0.04 சதவீதம் குறைந்தது

புதுடில்லி : அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் இன்டக்ஸ் ஃபார் இன்டஸ்டிரியல் புரெடக்ஷன் ( ஐ ஐ பி ) 0.04 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த வருடத்தில் இதே மாதத்தில் அது 12.2 சதவீதமாக இருந்தது. கடந்த வருடத்தில் 13.8 சதவீதமாக இருந்த உற்பத்தி வளர்ச்சியும் இந்த வருடத்தில் 1.2 சதவீதமாக குறைந்திருக்கிறது. 5.1 சதவீதமாக இருந்த சுரங்க உற்பத்தி வளர்ச்சி 2.8 சதவீதமாக குறைந்திருக்கிறது. 4.2 சதவீதமாக இருந்த மின் உற்பத்தி வளர்ச்சி கொஞ்சம் <உயர்ந்து 4.4 ஆகியிருக்கிறது. ஏப்ரல் – அக்டோபர் ஏழு மாத காலத்தில் ஐ.ஐ.பி., வளர்ச்சி 4.1 சதவீதமாகத்தான் இருக்கிறது. இது கடந்த வருடத்தில் இதே காலத்தில் 9.9 சதவீத வளர்ச்சியாக இருந்தது.

35,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்கிறது பேங்க் ஆப் அமெரிக்கா

 

நியுயார்க் : அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் அமெரிக்கா, அதன் ஊழியர்கள் 35,000 பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்திருக்கிறது. இன்னும் மூன்று வருடங்களில் இந்த ‘ ஜாப் கட் ‘ இருக்கும் என்று அது தெரிவித்திருக்கிறது.மோசமான நிதி நிலையில் இருந்த மெரில் லிஞ்ச்சை வாங்கும் திட்டம் இன்னும் முடிவடையாமல் இருக்கும் போது, பிசினஸில் டல்லாக இருக்கும் பேங்க் ஆப் அமெரிக்கா இந்த மாஸ் ‘ ஜாப் கட்டை’ செய்கிறது. இப்போதிருக்கும் அதன் 3,08,000 ஊழியர்களில் 11.4 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதன் மூலம் வருடத்திற்கு 7 பில்லியன் டாலரை அது மிச்சப்படுத்த இருக்கிறது. இப்போது பேங்க் ஆப் அமெரிக்காவில் 2,47,000 ஊழியர்களும் மெரில் லிஞ்ச்சில் 61,000 ஊழியர்களும் வேலை பார்க்கிறார்கள். இரு வங்கிகளிலும் சேர்த்துதான் 35,000 ஊழியர்கள் நிறுத்தப்படுகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிட்டி குரூப் 52,000 பேரை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்த 4 வாரங்களுக்குள் பேங்க் ஆப் அமெரிக்கா 35,000 பேரை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது. இந்த வருடத்தில் மட்டும் அமெரிக்க நிதி நிறுவனங்கள் மொத்தமாக 2,50,000 பேரை வேலை நீக்கம் செய்திருக்கிறது.

அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 26 வருடங்களில் இல்லாத அளவாக அதிகரிப்பு

நியுயார்க் : பொதுவாக எல்லா நாட்டினருக்குமே அமெரிக்காவுக்கு போய் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. நம்நாட்டிலோ அந்த ஆசை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அமெரிக்கா தான் இந்திய இளைஞர்களின் கனவு நாடாக ரொம்ப காலமாக இருந்து வருகிறது.இப்படி எல்லா நாட்டினரின் லட்சிய நாடாக இருந்து வரும் அமெரிக்காவிலோ இப்போது வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சமீபத்தில் ( டிசம்பர் 6 உடன் முடிந்த வாரத்தில் ) எடுத்த கணக்கெடுப்பின்படி, அங்கு வேலை இல்லாதோர் எண்ணிக்கை 5,73,000 என்று தெரிய வந்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் அங்கு வேலையில்லாதோர் லிஸ்ட்டில் 58,000 பேர் சேர்ந்திருக்கிறார்கள். இது கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகம் என்கிறார்கள். இந்நிலையில், நவம்பர் 29ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், வேலை இல்லாதவர்களுக்கு அமெரிக்க அரசு கொடுக்கும் உதவித்தொகையை கேட்டு விண்ணப்பித்திருக்கும் தனி நபர்கள் 44,29,000 பேர் என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில்தான் அங்குள்ள பெரும்பாலான பெரிய கம்பெனிகள் ‘ லே – ஆப் ‘ செய்தன. அங்குள்ள பிரபல நிதி வங்கியான சிட்டி பேங்க், டெலிகாம் நிறுவனமான ஏடி அண்ட் டி, கெமிக்கல் கம்பெனியான டவ் கெமிக்கல்ஸ் ஆகியவை நவம்பர் மாதத்தில்தான் ஏராளமான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கின. சிட்டி பேங்க் 53,000 பேரையும் ஏடி அண்ட் டி 12,000 பேரையும் வேலையில் இருந்து நீக்கியது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: