ரியோ டின்டோ 14,000 பேரை வேலை நீக்கம் செய்கிறது

லண்டன் : <உலகின் மூன்றாவது மிகப்பெரிய சுரங்க நிறுவனமான ரியோ டின்டோ, அதன் ஊழியர்களின் எண்ணிக்கையில் 14,000 ஐ குறைக்க முடிவு செய்திருக்கிறது. அடுத்த வருடத்திற்குள் இதை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் அதற்கு இருக்கும் அதகப்படியான கடன் தொகையில் 10 பில்லியன் டாலர்களை குறைக்க அது திட்டமிட்டிருக்கிறது. பிரிட்டனில் அது மேற்கொள்ள இருந்த இரு சுரங்க திட்டங்களையும் ஒத்தி வைத்திருக்கிறது. பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் ரியோ டின்டோவின் உலக அளவிலான ஊழியர்கள் எண்ணிக்கை இப்போது 97,000 ஆக இருக்கிறதுற. சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் கடும் பொருளாதார நெருக்கடியில் இந்த நிறுவனமும் சிக்கியிருப்பதாக சொல்கிறார்கள்

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : 492 புள்ளிகள் உயர்ந்தன

மும்பை : தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், ஆயில், டெலிகாம், கேப்பிடல் குட்ஸ் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன.ரியல் எஸ்டேட், ஆட்டோ, பவர், பேங்கிங், டெக்னாலஜி பங்குகளும் அதிகம் வாங்கப்பட்டன. எண்ணிக்கை அடிப்படையிலும் அதிக பங்குகள் வர்த்தகத்திற்கு வந்தன. நிப்டி 2900 புள்ளிகளுக்கு மேலும் சென்செக்ஸ் 9600 புள்ளிகளுக்கும் மேலும் சென்றிருக்கிறது. ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற நிலையும் இந்திய பங்கு சந்தை ஏறி இருப்பதற்கு ஒரு காரணம். அமெரிக்காவில் ஆட்டோ நிறுவனங்களின் கடன்களை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று வந்த செய்தியால் அங்கு சந்தை முன்னேறி இருப்பதும் இந்திய பங்கு சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்கிறார்கள். ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், டி.எல்.எஃப், பார்தி ஏர்டெல், செய்ல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஓ.என்.ஜி.சி, விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., பெல், டாடா ஸ்டீல், எல் அண்ட் டி ஆகியவை இன்று நல்ல லாபம் பார்த்தன. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 492.28 புள்ளிகள் ( 5.37 சதவீதம் ) உயர்ந்து 9,654.90 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 144.25 புள்ளிகள் ( 5.18 சதவீதம் ) உயர்ந்து 2,928.25 புள்ளிகளில் முடிந்திருக்கிற

நிதித்துறைக்கு தனியாக அமைச்சரை நியமிக்க மன்மோகன்சிங் கோரிக்கை

புதுடில்லி : மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப்பின் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் உள்துறைக்கு மாற்றப்பட்டதால் இப்போது நிதித்துறையையும் பிரதமர் மன்மோகன் சிங்கே கூடுதலாக கவனித்து வருகிறார். ஆனால் மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் மன்மோகன் சிங், நிதித்துறைக்கு தனியாக ஒரு கேபினட் அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று காங்.தலைவி சோனியாவிடம் சொல்லியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே காங்கிரஸின் திட்டம் என்னவாக இருந்தது என்றால், நிதித்துறைக்கு ஒரு ஜூனியர் அமைச்சரை மட்டும் புதிதாக நியமித்து விட்டு, அவரை மன்மோகன்சிங்கிற்கு உதவியாக இருக்க சொல்லலாம் என்று தான் இருந்தது. இப்போது மன்மோகன் சிங், தனியாக ஒரு கேபினட் அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று கோரியிருப்பதால், புதிய அமைச்சராக யாரை நியமிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். முன்னாள் கர்நாடகா முதல் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப்போது மத்திய வர்த்தக அமைச்சராக இருக்கும் கமல்நாத், ராஜ்ய சபா மெம்பரும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னருமான சி.ரெங்கராஜன் ஆகியோருடைய பெயர்கள் நிதி அமைச்சருக்கு அடிபடுகின்றது. பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் செயல்பட்டு வரும் மன்மோகன்சிங், இன்னும் ஆறு துறைகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார். தனிநபர் துறை, பொதுமக்களின் கோரிக்கைகள்,குறைபாடுகள் மற்றும் பென்சன், ஆட்டோமிக் எனர்ஜி மற்றும் ஸ்பேஸ், திட்டம், நிலக்கரி, சுற்றுச்சூழல் மற்றும் காடுகள், தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை ஆகியவற்றையும் மன்மோகன் சிங்தான் கவனித்து வருகிறார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருக்கும் பிரியரஞ்சன்தாஸ் முன்சி, மாதக்கணக்கில் உடல் நலமில்லாமல் இருப்பதால் அவர் துறையையும் பிரதமரே பார்த்து வருகிறார். எஸ்.எம்.கிருஷ்ணா இப்போது பார்லிமென்ட் உறுப்பினராக இல்லாவிட்டாலும், அவர் ஒரு காங்கிரஸ்காரராக இருப்பதால் அவரை நிதி அமைச்சராக நியமித்து விடலாம். ஆறு மாதத்திற்குள் தேர்தலே வந்து விடும் என்பதால் அதுவரை அவரே தொடர்ந்து அமைச்சராக இருக்க முடியும். கமல்நாத்தும் ஒரு காங்கிரஸ்காரராக இருப்பதால் அவரையும் நியமிக்கலாம். அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்றாலும் 1992 முதல் 1997 வரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து அனுபவம் பெற்றிருக்கும் சி.ரெங்கராஜனையும் நியமிக்கலாம் என்று யோசிக்கிறார்கள்.

உலக அளவில் விமான கம்பெனிகள் கடும் நஷ்டமடைகின்றன

ஜெனிவா : கடந்த 50 வருடங்களாக இல்லாத அளவாக, 2009ம் ஆண்டில் உலக அளவிலான விமான கம்பெனிகள் கடும் நஷ்டமடையும் என்றும், அந்த துறையில் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை இழப்பர் என்றும் ஐ.ஏ.டி.ஏ தெரிவித்திருக்கிறது. 2009ல் விமான கம்பெனிகளின் நிலை குறித்து அது வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும் 2009ம் வருடத்தில் 2.5 பில்லியன் டாலர்கள் நஷ்டமடையும் என்று தெரிவித்திருக்கிறது. 2008ல் ஐரோப்பிய விமான கம்பெனிகள் 1 பில்லியன் டாலர்கள் வரை நஷ்டமடையும் என்றும், ஆசிய – பசிபிக் விமான கம்பெனிகள் 1.1 பில்லியன் டாலர்கள் வரை நஷ்டமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 230 சர்வதேச விமான கம்பெனிகளை அங்கத்தினர்களாக கொண்டிருக்கும் ஐ.ஏ.டி.ஏ.,யின் டைரக்டர் ஜெனரல் ஜியோவான்னி பிசினானி இது குறித்து தெரிவிக்கையில் , கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவில் விமான கம்பெனிகள் இப்போது நஷ்டம் அடைந்து வருகின்றன என்றார்.

டூ வீலர் விலையை ரூ.2,000 குறைத்தது ஹீரோ ஹோண்டா

புதுடில்லி : மத்திய அரசு சென்வாட்டை 4 சதவீதம் குறைத்திருப்பதை அடுத்து, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை குறைக்கப்பட்டு வருகிறது. மாருதி சுசுகி, ஜெனரல் மோட்டார்ஸ், ஹூண்டாய், டொயோட்டா கம்பெனிகள் ஏற்கனவே கார்களின் விலையை குறைத்திருக்கின்றன. அசோக் லேலாண்ட் நிறுவனம், டிரக்களின் விலையை குறைத்திருக்கிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இரு சக்கர வாகனங்களின் விலையை குறைப்பதாக அறிவித்திருக்கிறது. அந்த வரிசையில் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ ஹோண்டாவும் அவர்களது இரு சக்கர வாகனங்களின் விலையை குறைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அவர்களது வெவ்வேறு மாடல்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை விலை குறைக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது

30 ஆண்டு காணாத வகையில் கார் விற்பனை பெரும் சரிவு

லண்டன் : நவம்பர் மாத கார் விற்பனை, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மூன்றில் ஒரு பகுதி சரிந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, வழக்கப்படி இல்லாமல் வாரத்திற்கு 13 ஆயிரத்து 600 கார்கள் விற்பனை குறைந்துள்ளது என்று, மோட்டார் வாகன உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சொசைட்டி தெரிவிக்கிறது. அதே போல, ஒரு லட்சத்து 333 கார்கள் தேவை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும் போது, 36.8 சதவீதம் குறைவு. கடந்த 1980ம் ஆண்டு நவம்பர் மாதம் 91 ஆயிரத்து 928 கார்கள் பிரிட்டனில் வாங்கப்பட்டன. அப்போது, இதுபோல் மூன்றில் ஒரு பங்கு விற்பனை குறைந்தது. 30 ஆண்டுகளுக்கு பின், கடந்த மாதம் மீண்டும் கார் விற்பனை மிகவும் சரிந்துள்ளது. இந்த விற்பனை பாதிப்பால், கார் உற்பத்தி கம்பெனிகளில் பணியாளர்களுக்கு சம்பளப் பிடித்தம் மற்றும் ஷிப்டுகள் மாற்றியமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம், பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான, ‘அஸ்டான் மார்டின்’ நிறுவனம், கார் தயாரிப்பிற்கான ஆர்டர் குறைந்ததால், மூன்றில் ஒரு பகுதி ஊழியர்களுக்கு பணி விடுப்பு கொடுத்துள்ளது. ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனமும் ஷிப்ட் குறைப்பு மற்றும் ஊழியர்களுக்கு பணி விடுப்பு கொடுத்துள்ளது. நிசான், டொயோட்டா நிறுவனங்களும் இதே நடவடிக்கை எடுக்கும் நிலையில் உள்ளன. ஹோண்டா நிறுவனம் தன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கவுள்ளது. மேலும், உற்பத்தியாகி விற்பனைக்கு காத்திருக்கும் கார்களுக்கு விலை குறைப்பு தள்ளுபடியும் அறிவிக்க பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருக்கிறது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: