உளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும்

எனது 14 ஆண்டு பத்திரிக்கைத்துறை பணியில் எத்தனையோ உளவுப் பிரிவினரோடு பழகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்து நம் உளவுப் பிரிவினரைப் போல மிகவும் மட்டமாக நடத்தப்படும் ஒரு அரசுத் துறையை நான் கண்டதில்லை.

நம் ஊரில் உளவுப் பிரிவு என்றால் அதன் முக்கியமான வேலை எதிர்க் கட்சிகளை உளவு பார்ப்பதும், முக்கியத் தலைவர்களுக்கு யாராலாவது ஆபத்து வரப் போகிறதா என்பதை கண்டறிவதும் தான்.

ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார்.. ஆர்.எம்.வீரப்பனை முன் நிறுத்தப் போகிறார் என்று ஒரு பரபரப்பு எழுந்த நேரம் அது. ஆர்.எம். வீரப்பன் தான் அப்போது மாபெரும் அரசியல் ஹீரோ. அப்போது அவரின் வீட்டின் முன் நிருபர்கள் தவம் கிடப்போம்.

எங்களிடையே இரு பெரியவர்களும் வந்து கலந்து நிற்பார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்கு நெருக்கமானார்கள்.

வீரப்பனை யார் யார் சந்திக்க வருகிறார்கள் என்பதை கண்காணிப்பது தான் இவர்களுக்கு வேலை. 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் அந்த வீட்டின் முன்போ, தெரு முனையிலோ நின்று கொண்டிருக்க வேண்டும். இது தான் அவர்களுக்குத் தரப்பட்ட வேலை.

அந்த இரு பெரியவர்களும் நம் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தனது 8 மணி நேர முடிந்த பின் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவார். அப்போது இன்னொரு சைக்கிளில் அடுத்த ஷிப்ட்காரர் வந்துவிடுவார்.

எக்ஸ்ட்ரா ‘வரும்படி’ இல்லாத போலீஸ் வேலை இது. இதனால் இவர்களுக்கு ஒரு டிவிஎஸ் 50க்குக் கூட வழியில்லை. மி்ஞ்சியது ஓட்டை சைக்கிள் தான்.

இது தான் நமது உளவுப் பிரிவின் அப்பட்டமான- உண்மை நிலை.

இன்னொரு கொடுமையும் உண்டு.

உளவுப் பிரிவின் மூத்த அதிகாரிகளிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் இன்னும் கொடுமையானவை.

பெரும்பாலும் உளவுப் பிரிவுக்கு மாற்றப்படும் போலீசார் யார் தெரியுமா.. உடல் நலமில்லாதவர்கள், பிஸிகல் பிட்னஸ் இல்லாதவர்கள், ஓட முடியாதவர்கள், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தான்.

இவர்களால் இனி போலீஸ் வேலையில் இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டால் அவர்கள் மாற்றப்படும் துறை தான் உளவுப் பிரிவு.

இப்படிப்பட்ட ஒரு போர்ஸை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசுகள்.

இதற்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.பியும் ஒன்றும் சளைத்தது அல்ல. அங்கும் இதே நிலைமை தான். ஆனால், அவர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தரப்படுவதும் கொஞ்சம் நவீன கருவிகள் தரப்பட்டுள்ளதும் தான் வித்தியாசம்.

இந்தக் கருவிகளில் போன் ஒட்டுக் கேட்கும் கருவிகளும் அடக்கம். இது தரப்பட்டது சமூக விரோதிகளை, தேச விரோதிகளை கண்காணிக்க. ஆனால், ஐபி இதைப் பயன்படுத்துவது பெரும்பாலும் எதிர்க் கட்சியினரைக் கண்காணிக்கத் தான்.

இப்படிப்பட்ட ஒரு மட்டமான சிஸ்டத்திலும் கூட ஐபியும் மாநில உளவுப் பிரிவுகளும் இந்த அளவுக்காவது செயல்பட்டுக் கொண்டிருக்கக் காரணம், அதில் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் மிகச் சிறந்த அதிகாரிகள், ஊழியர்கள், மிகச் சிறந்த மூளைகள், உண்மையிலேயே நாட்டை நேசிக்கும் நல்ல மனமுடையவர்கள் தான்.

இவர்களும் இல்லாவிட்டால் இந்த உளவுப் பிரிவுகள் என்றோ தனது முழு அர்த்தத்தையும் இழந்திருக்கும். மும்பையில் நடந்திருக்கும் இந்த புதிய வகையான தாக்குதல் இனி வரப் போகும் தாக்குதலுக்கு ஒரு முன்னோடியாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கடல் வழியாக வந்து தாக்குவார்கள் என்று நம்மில் யாருமே கனவு கூட கண்டதில்லை. ஆனால், தீவிரவாதிகள் புதிய புதிய யுத்திகளை கண்டுபிடிப்பதிலும் அமலாக்குவதிலும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் உள்ள கருவிகள் மூக்கில் விரலை வைக்க செய்கின்றன. சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் சிஸ்டம், பிளாக்பெர்ரி மொபைல்கள்… இதையெல்லாம் நமது உளவுப் பிரிவினரில் பெரும்பாலானவர்கள் பார்த்து மட்டுமல்ல, கேள்விப்பட்டது கூட இல்லை.

நம் உளவுப் பிரிவினரில் எத்தனை பேருக்கு இன்டர்நெட்டையாவது பயன்படுத்தத் தெரியும்?

ஐபி அட்ரஸை காப்பியடித்து போலி ஐபியை உருவாக்கி வேறு ஒருவரின் பெயரால் மெயில் அனுப்புகிறார்கள், வாய்ஸ் ரெகக்னிசன் சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள், போலி கிரெடிட் கார்டுகளை உருவாக்குகிறார்கள், வங்கதேசத்தின் சிம் கார்டை மாற்றியமைத்து லோக்கல் காலில் பேசுகிறார்கள்…

ஏகே 47 உள்பட நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கிரனைட்டுகள், படகுகள் இயக்குவது உள்ளிட்ட கடுமையான பயிற்சி என ஒரு கமாண்டோக்கள் அளவுக்குத் தயாராக்கப்பட்டு, மதத்தின் பெயரால் உயிரையும் தர மூளைச் சலவை செய்யப்பட்டு வந்திறங்கும் இவர்கள் நவீன யுக தீவிரவாதிகள்.

நம் போலீசாரில் பெரும்பாலானவர்களிடம் உள்ள துப்பாக்கி முதலாம் உலகப் போரில் அறிமுகமான .303 ரகத்தைச் சேர்ந்தது. ஒரு குண்டை சுட்டுவிட்டு அடுத்த குண்டை லோட் செய்வதற்குள் தீவிரவாதி நடந்தே அடுத்த தெருவுக்குப் போயிருப்பான். இதை நான் கிண்டலுக்காக எழுதவில்லை. நான் அந்த மனநிலையிலும் இல்லை. நம் இயலாமையை நினைத்து மனம் கணத்துப் போய் இதைச் சொல்கிறேன். (உளவுப் பிரிவும் ஓட்டை சைக்கிளிலும் என்ற தலைப்பே கூட எனக்கு மிகுந்த வருத்தம் தருவதே, விஷயத்தை நேரடியாக சொல்ல எனக்கு வேறு ஏதும் தோன்றவில்லை)

என்னைப் போலவே எத்தனையே இந்தியர்கள், இயலாமையால் மனம் வெதும்பியுள்ளனர்.

நமது உளவுப் பிரிவு, போலீஸ் படைகளின் இந்த நிலைமைக்கு அவர்கள் யாரும் காரணமில்லை. நம் அரசியல்வாதிகள் தான் காரணம்.

நமது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் ஆரம்பிக்கும் லஞ்சம் சுடுகாட்டையும் தாண்டி இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை தொடர்கிறது. நமது போலீஸ் துறையையும் உளவுப் பிரிவையும் கெடுத்ததில் இந்த ஊழல் லஞ்சத்துக்கு முக்கிய பங்குண்டு.

மும்பை போலீசில் மிகச் சிறந்த அதிகாரியான ஹேமந்த் கர்கரேவை பலி கொண்டதில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுக்கும் முக்கிய பங்குண்டு. ஆச்சரியமாக இருக்கிறதா..?. மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு வாங்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் அவ்வளவு மட்டமானவை. இந்த ஜாக்கெட்களும் தலைக் கவசங்களும் தரமானவையாக இல்லை என்று மும்பை போலீசார் தங்களது அரசுக்குத் தெரிவித்தும் அதையே வாங்கியிருக்கிறது அரசு.

வேறி வழியில்லாமல் அதைத் தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை அணிவதற்குப் பதில் சும்மாவே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்ளலாம் என்று ஹேமந்த் நினைத்தாரோ என்னவோ. முதலில் அதை அணிந்தவர் பின்னர் அதைக் கழற்றிப் போட்டுவிட்டு கையில் பிஸ்டலோடு சென்றவர் தீவிரவாதிகளின் புல்லட்டுக்கு பலியாகிவிடடார்.

முதலில் நம் போலீசாரின் பயிற்சிகளை, ஆயுதங்களை பலப்படுத்துவதும், உளவுப் பிரிவை வலுவாக்குவதுமே இந்த நவீன யுக தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரே வழி.

தேசிய அளவில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரு பெடரல் ஏஜென்சி உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சில உளவுப் பிரிவினரோடு பேசுகையில், அவர்கள் இந்த ஏஜென்சியை வரவேற்பதை உணர முடிந்தது. அதே நேரத்தில் இந்த அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் சில தகவல்களைத் தந்தனர். அவர்கள் சொன்னது இது தான்:

இந்த ஏஜென்சி வெறும் விசாரணை அமைப்பாக இருந்துவிடக் கூடாது. அது உளவு வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும், கைதுகள் செய்யவும், தாக்குதலை நடத்தவும், சட்டத்தை அமலாக்கவும் அந்த அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.

இதற்கு 3 முக்கிய விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறைய பணம். இரண்டாவது பொலிடிக்கல் வில். மூன்றாவது அரசியல் தலையீடு இல்லாமை.

இந்தப் பிரிவில் சேர ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் பரிந்துரை லெட்டர் வாங்கி வர வேண்டும் என்ற நிலைமையோ அல்லது இதில் உள்ள பணியிடங்களை நிரப்பவும் இட ஒதுக்கீடோ வந்துவிடக் கூடாது. மிகச் சிறந்த மூளைகளை, தேசப்பற்று மிக்க இளைஞர்களை இதில் சேர்க்க வேண்டும்.

இந்த ஏஜென்சி பெயரளவுக்கு இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ரகசியமாய் ஊடுருவி பரவ வேண்டும்.

இவர்களுக்கு மிகச் சிறந்த உளவுப் பயிற்சிகள், அதி நவீனக் கருவிகள் தரப்பட வேண்டும். பல மொழி அறிவு கொண்டவர்களாக, சங்கேத-ரகசிய குறியீடுகளை பிரேக் செய்பவர்களாக, எளிதில் மக்களுடன் கலந்துவிடுபவர்களாக இருக்க வேண்டும்.

ரா, ஐபியில் இந்தப் பயிற்சிகள் எல்லாம் தரப்படுவது தான். ஆனால், அவர்களுக்கு போதிய ஆள் பலம் இல்லை. (எதி்ர்க் கட்சியினரை உளவு பார்க்கவே இவர்களது எண்ணிக்கை நமக்குப் போதாதே)

இதனால் ஐபிக்கு போதிய ஆள் பலத்தைத் தருவதும் தீவிரவாதத்தை எதிர்க்க சீரியஸான ஒரு ஏஜென்சியை உருவாக்குவதும் தான் இந்த நவீன யுக தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒரே வழி என்றனர் அந்த உளவுப் பிரிவினர்.

அரசியல் தலையீடு இல்லாத ஒரு முழுமையான அதி நவீன உளவு-தாக்குதல் ஏஜென்சி தான் இந்த நாட்டையும் மக்களையும் காக்க முடியும்.

இல்லாவிட்டால் அப்போதைக்கு நடந்த தீவிரவாதத் தாக்குதலை நினைவூட்டி பிரச்சாரம் செய்து தேர்தல்களில் ஒருவர் மாற்றி ஒருவர் வெல்லலாம்.. வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், ஆனால் நாடு மெல்ல சிதையும்.

மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கும் நிலை வரும். இதைத் தான் தீவிரவாதம் எதிர்பார்க்கிறது.

ஊழலோ, லஞ்சமோ, ஜாதி அரசியலோ, மத அரசியலோ.. என்ன தான் செல்லறித்தாலும் ஜனநாயகம் என்பது இந்தியாவுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம். அந்த ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரை தான் இத்தனை மாநிலங்களும் இணைந்து நாம் ஒரு நாடாக இருக்க முடியும்.

ஜனநாயகத்தை இழந்துவிட்டால் நாடு துண்டு துண்டாகும்.. பாகிஸ்தான் ஐஎஸ்ஐயின் ‘கிராண்ட் பிளானே’ இது தான் என்கிறார்கள் உளவுப் பிரிவினர்.

இதற்கு பலியாகாமல் தப்ப தீவிரவாதத்தை நாம் தீவிரமாக, நேருக்கு நேர் எதிர்கொள்வது தான் ஒரே வழி. அதற்கு முதலில் நமது உளவு கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக மிக மிக அவசியம்.

 (கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

என்னவாகப் போகிறது மென்பொருள் வல்லுனர் சமூகம்?


சமீப ஆண்டுகளாக இந்திய மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் பெறுகிற அளவுக்கு மிஞ்சிய ஊதியம் பல பேரது வயிற்றெரிச்சலைச் சம்பாதித்தது என்னவோ உண்மைதான். இப்போது அவர்களுக்கு வேலை பறி போவதாக அங்கொன்றும் இங்கொன்றுமென தினசரிகளில் காணக் கிடைக்கும் செய்திகள் அந்த வயிற்றில் எல்லாம் பால் வார்த்திருக்கிறது. முக்குக்கு முக்கு சிலாகித்துப் பேசுகிறார்கள்.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் பல ‘வெள்ளை காலர்’ ஊழியர்களின் வேலைக்கு உலை வைத்திருக்கிறது. அமெரிக்க நிறுவனங்களை நம்பியிருக்கும் இந்திய மென்பொருள் நிறுவனங்களும் இந்தப் பாதிப்பை உணராமல் இல்லை. அதனால் வேலைகள் காலியாவதும் உண்மையே. அதன் காரணிகளையும், விளைவுகளையும் அலசும் முன்னர் …..

இந்தியாவின் வேலையின்மை 2007 கணிப்பின் அடிப்படையில் 7.2 விழுக்காடு. அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்ற கேள்வியும், அதன் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமும் ஒரு பக்கம் ஏற்படுகிறது. இருந்தாலும் 7.2 விழுக்காடு என்று நம்புகிறோம். அமெரிக்காவில் 2008 செப்டம்பர் மாதம் 6.1 சதவீதம் பேருக்கு வேலை இருக்கவில்லை. அக்டோபரில் இன்னும் ஓரிரு விழுக்காடு கூடியிருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் தனக்கு வேலை போகாமல் மற்றவர்களுக்கு வேலை போகும் போதுதான் வேலையின்மைக்கு 6, 7, 10 சதவீதக் கணக்கெல்லாம். ஒரு வேளை தனக்கே வேலை பறி போனால் வேலையின்மை 100 சதவீதம். படித்து விட்டு வேலை தேடி அலையும் போது நாட்டின் முதன்மையான பிரச்சினையாக இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் வேலை கிடைத்த பிறகு ‘மக்களுக்கெல்லாம் போதுமான திறமை இல்லை’ என்ற நிலைப்பாடாக உருமாறுவதைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

மற்றத் துறைகளில் பணியாற்றும் திறமைசாலிகள் எவ்வளவு உழைத்தாலும் ஈட்ட முடியாத ஊதியத்தை, கல்லூரி முடித்துவிட்டு வெளியே வரும் சின்னப் பசங்க கழுத்தில் ஐ.டி கார்டைத் தொங்க விட்டபடியே சாஃப்ட்வேர் நிறுவனங்கள் தூக்கிக் கொடுத்தன. ஆனால் இந்த ஊதியத்தை இந்தியாவில் மற்ற வேலைகளில் உள்ளோர் வாங்கும் சம்பளத்தோடு ஒப்பிடுவது ஒரு வகையில் தவறுதான்.

மேலை நாடுகளில் உள்ள பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில். உதாரணமாக கார் தயாரிப்பு, வங்கித் தொழில், இன்சூரன்ஸ், மதுபான உற்பத்தி, ஏர்லைன்ஸ் இப்படி ஏதாவது ஒரு தொழில். இவற்றின் வரவு செலவுகளைப் பேணவும், நிர்வாகத்தைத் தங்குதடையின்றி நடத்தவும் அவை சார்ந்த தகவல் அனைத்தையும் கணினியில் உட்செலுத்தி அவற்றைத் திறம்படப் பயன்படுத்துவது அவசியம். அதற்குத் தக்கபடி கணிப்பொறி மென்பொருட்களை உருவாக்க வேண்டிய தேவை அந்தக் கம்பெனிகளுக்கு இருந்தது; இருக்கிறது. அந்த வேலையை அந்த மேலை நாடுகளில் செய்வதற்கு மென்பொருள் ‘வல்லுனர்கள்’ மணிக்கு இத்தனை டாலர் என்று பில் எழுதினார்கள்.

தமக்கு மென்பொருள் வேலை செய்ய வரும் இந்த ‘வல்லுனர்’ சமூகத்திற்கு ஒரு நிறுவனம் மணிக்கு சுமார் 70 டாலர் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று ஒரு நாள் நம்ம ஊரு சாஃப்ட்வேர் நிறுவனங்கள், “எங்களுக்கு மணிக்கு 40 டாலர் கொடுங்கள் போதும். நாங்கள் இந்தியாவில் இருந்து அதே பணியைச் செய்து தருகிறோம்” என்று சொல்லி ஒப்பந்தத்தை வென்றெடுத்து இந்தியாவில் ஏராளமான இளைஞர்களை வேலைக்கு எடுத்து காசு பார்த்தன. அந்த 40 டாலரில் கால்வாசியைச் சம்பளமாகக் கொடுத்தாலும் ஒரு நாளைக்கு மூவாயிரத்துச் சொச்சம் சம்பளம் தரலாம். அப்படி இருக்கும் போது இந்தியாவில் இந்தியச் சம்பளம் வாங்கும் மக்களோடு இவர்களை ஒப்பிடுவது தவறு.

சாஃப்ட்வேர் நிறுவனங்களைப் பொறுத்தவரை அமெரிக்காவில் 70 டாலர் வாங்கிக் கொண்டு அதில் 40 – 50 டாலர் சம்பளமாகத் தருவதைக் காட்டிலும், இந்தியாவில் 40 டாலர் வாங்கிக் கொண்டு அதில் பத்து டாலரை ஊழியருக்கு சம்பளமாகக் கொடுப்பது இலாபகரமானது. இது நிறுவனங்களின் பார்வையில். அதே நேரம் இந்தியா இருக்கிற பொருளாதாரச் சூழலில் இந்த நிறுவனங்கள் தருவது அபரிமிதமான சம்பளம். மற்றப் படிப்புகளைப் படித்துவிட்டு மாதம் ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று சம்பளம் வாங்குவதைவிட எப்படியாவது மென்பொருள் நிறுவனங்களில் சேர்வது இலாபகரமானது.

சென்ற நான்கைந்து வருடங்களில் உலகப் பொருளாதாரம் வெகுவான முன்னேற்றம் கண்டது. குறிப்பாக அமெரிக்க வாடிக்கையாளர்களின் நுகர்திறனை நம்பி சீனாவின் தொழில்துறையும், இந்தியாவின் மென்பொருள் துறையும் வாழ்ந்தன. இந்தியாவைப் பொறுத்தவரை மென்பொருள் கம்பெனிகளின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே போனது. தகுதியுள்ள ஆள் உடனடியாக வேண்டுமென்றால் பக்கத்து கம்பெனியில் வேலை செய்பவனுக்குச் சில ஆயிரங்களை அதிகமாகக் கொடுத்து இழுத்துக் கொள்வது நடந்தேறியது. “குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர்” என்று கவுண்டமணி சொல்வது போல பேங்கில் வேலை செய்தவன், பேஃக்டரியில் வேலை செய்தவன் என எல்லோருமே சாஃப்ட்வேருக்குத் தாவினார்கள்.

புதிதாக இணைபவர்களுக்குச் சுளையான சம்பளம். புதிய பொறியியல் கல்லூரிகள் காளான்களாக முளைத்தன. B.E சீட் கிடைப்பதை விட C.A சீட் கிடைப்பது சிரமம். அத்தனை பொறியியல் கல்லூரிகள். இறுதியாண்டு முடிவதற்குள்ளாகக் கல்லூரி வளாகத்திற்கே வந்து அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரைக் கொடுத்து ‘புக்’ செய்தன கம்பெனிகள். முதலில் நிலவிய B.E, M.C.A படித்தவர்கள் மட்டுமே சாஃப்ட்வேரில் நுழையலாம் என்ற நிலை மாறி என்ன படித்தாலும் வேலை கிடைக்கும் என்ற நிலை உருவானது. B.Sc முடித்தவர்கள் மேற்படிப்பு படித்துக்கொண்டே வேலை செய்யலாம் என்று சில நிறுவனங்கள் நான்கு வருடம் தாவ முடியாமல் கட்டிப் போடும் வேலையைச் செய்கின்றன. இப்படி வேலைக்குச் சேரும் ஆட்கள் சுலபமாக கம்பெனி மாற மாட்டார்கள். மேலும் சம்பளமும் குறைவு. சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்தவர்களுக்குக்கூடக் கதவுகளைத் திறந்து விட்டிருப்பதாகச் செய்தி.

அதிக வருவாய் தருகிற தொழில் அல்லது துறை திறமையானவர்களை ஈர்த்துக் கொள்ளும். சமீப காலமாக எல்லோருமே ஆர்வமாக பொறியியல் படிப்பதும், பாஸ் செய்து வெளியேறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை வெகுவாகப் பெருகியிருப்பதும் அதற்குச் சான்றாக இருக்கின்றன. டிமாண்டை ஈடு செய்வதற்கான படிப்படியாக அதிகரித்த சப்ளை இப்போது டிமாண்டைவிட அதிகரித்துவிட்டதாகத் தெரிகிறது. ஒரு பக்கம் சப்ளை அதிகரித்திருக்கிறது. இன்னொரு பக்கம் டிமாண்ட் மந்தமடைந்திருக்கிறது.

பிரபலமான மூன்றெழுத்து சாஃப்ட்வேர் நிறுவனம் வளாகத் தேர்வில் தேர்ந்தெடுத்த மாணவர்களை இரண்டு ஆண்டுகள் கழித்துச் சேரச் சொல்லிவிட்டதாம். இன்னொரு நிறுவனத்தில் ஐயாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புகிறார்களாம். சில இடங்களில் நிரந்தர வேலைக்கு ஆள் சேர்க்காமல் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்கிறார்கள். பரவாயில்லை என்று குறைவான சம்பளத்தில் அதிலும் ஒட்டிக்கொள்ள வேண்டிய நிலைக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் மென்பொருள் நிறுவனங்களில் பாதிப்பு அளவுக்கு அதிகமாக விவாதிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஒதுக்க முடியவில்லை. எண்பதாயிரம் பேர் உள்ள நிறுவனம் ஐந்தாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றும் பெரிய சங்கதியல்ல. சதவீதக் கணக்கில் பார்த்தால் குறைவே. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஒரே நாளில் 1,900 பேரைப் பணிநீக்கம் செய்தது போல அதிரடியாக எதுவும் செய்யாமல் தினசரி அங்கொன்றும் இங்கொன்றுமாக சத்தமில்லாமல் ‘பிங்க் ஸ்லிப்’ கொடுப்பதால் மென்பொருள் நிறுவனங்கள் செய்யும் ஆட்குறைப்பின் எதிரொலி மெலிதாகவே கேட்கிறது.

உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை இந்திய மென்பொருள் நிறுவனங்களைப் பாதித்தாலும் அந்தப் பாதிப்பு தற்காலிகமானதாகவே இருக்கும். அவற்றில் இலாப விகிதம் குறையலாம். ஆனால் அவை ஒட்டு மொத்தமாக அழிந்துவிடாது. ஆட்டோமொபைல் கம்பெனிகள் சில வெறும் 5-6 சதவீத இலாபத்தில் இயங்கிய போது சாஃப்ட்வேர் கம்பெனிகள் 30 சதவீதம் இலாபத்தில் செயல்பட்ட காலமெல்லாம் மலையேறி விடும். ஆனாலும் அவை குறைவான இலாபத்தில் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைவு கண்டால் அது இந்திய மென்பொருள் நிறுவனங்களைப் பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம், அப்படிப்பட்ட சூழலில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கே ஆட்குறைப்பு செய்து விட்டு செலவைச் சமாளிப்பதற்காக மேலும் அவுட்சோர்ஸிங் செய்யக் கூடும் என்ற வாதத்தையும் கவனிக்க வேண்டும். அதனால்கூட நமது சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு நன்மைதான்.

இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு முறை அந்த தேசத்தில் தேர்தல் நடக்கும் போதும் அவுட்சோர்ஸிங், ஓரினச் சேர்க்கைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் மற்றும் கருக்கலைப்பு ஆகிய மூன்று விஷயங்கள் அலசப்படும். எட்டு ஆண்டுகளாக ஜார்ஜ் புஷ் நடத்திய குடியரசுக் கட்சியின் ஆட்சி பொருளாதாரத்தை விளிம்பு நிலைக்குத் தள்ளி விட்டதால் இந்த முறை அவுட்சோர்ஸிங் மேட்டருக்குக் கூடுதலான கவனம் கிடைத்திருக்கிறது. அமோகமான மக்கள் ஆதரவு இருப்பதாகக் கருதப்படும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா அவுட்சோர்ஸ் செய்யாமல் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு சாதகமான வரிக் கொள்கைகளை அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது.

என்னதான் கருத்துக் கணிப்புகள் ஒபாமாவுக்கு ஆதரவு இருப்பதாகச் சொன்னாலும், அமெரிக்காவும் சரி உலகமும் சரி ஒரு கறுப்பின அதிபரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றனவா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!! கருத்துக் கணிப்பில் ‘நல்லவனாக’ ஒபாமாவுக்குத்தான் எனது ஓட்டு என்று சொல்லி விட்டு வாக்களிக்கும் போது அமெரிக்காவின் பெரும்பான்மை வெள்ளையர்கள் தமது இன உணர்வை வெளிப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மாறாக ஒபாமா வென்றால் அது எதிர்பார்த்த ஒன்றாகவே இருக்கும்.

ஆனால் நமது சாஃப்ட்வேர் தொழிலைப் பொறுத்தவரை யார் ஆட்சிக்கும் வந்தாலும் பெரிய மாறுதல் இருக்காது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். அமெரிக்காவின் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்வதெல்லாம் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் என்பதால் ஒபாமாவின் ‘அவுட்சோர்ஸிங் எதிர்ப்பு’ சவுண்ட் எந்த அளவிற்குச் சாத்தியம் என்று தெரியவில்லை.

Letter edit by Shankar

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: