பொருளாதார நெருக்கடி: இனிமேல்தான் மோசமான நிலை வரப் போகிறது-ஐஎம்எஃப்

 IMF

பொருளாதார நெருக்கடி: இனிமேல்தான் மோசமான நிலை வரப் போகிறது-ஐஎம்எஃப்

ஜூரிச்: தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி மிகப் பெரிய ஒன்றல்ல. இதை விட மோசமான நிலை இனிமேல்தான் வரும் என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆலிவர் பிளன்சார்ட் கூறியுள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமாகும்.
தற்போது உள்ளதை விட மோசமான நிலை ஏற்படும். 2010ம் ஆண்டுக்குப் பிறகுதான் நிலைமை படிப்படியாக சரியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜூரிச்சைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு பொருளாதார பிரச்சினைக்கும் பணம் கொடுத்து சரிக்கட்டும் அளவுக்கு ஐ.எம்.எஃப்பிடம் பணம் இல்லை என்பதை அனைவரும் முதலில் உணர வேண்டும்.

இப்போது உள்ள உலகப் பொருளாதார நெருக்கடி மிகப் பெரியதல்லை. நிலைமை இன்னும் மோசமாகவில்லை. அந்தக் கட்டம் இனிமேல்தான் வரப் போகிறது.

சகஜ நிலை திரும்ப நிறைய அவகாசம் தேவைப்படும். 2010ம் ஆண்டுக்குப் பிறகுதான் நிலைமை சரியாகும். அதன் பிறகு பொருளாதார வளர்ச்சி மீண்டும் உத்வேகம் பெறும். 2011ம் ஆண்டு நிலைமை நல்ல சூழ்நிலைக்கு மாறி விடும் என்றார் பிளன்சார்ட்.

பொருளாதார நெருக்கடியால் தத்தளித்துக் கொண்டிருக்கும் உக்ரைன், செர்பியா, பாகிஸ்தான், ஹங்கேரி, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் ஐ.எம்.எஃப் நிதியுதவி அளித்தது. அதேபோல லாத்வியாவுக்கும் அது நிதியுதவி அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது

பங்குச் சந்தையை புரட்டிப் போட்ட மும்பை ‘அட்டாக்’- சேதுராமன் சாத்தப்பன்

சோகங்கள் எல்லாம் மறக்கப்பட வேண்டியது தான். ஆனால், சோகங்களே வாழ்க்கையானால், வன்முறைக்கு மும்பை எப்போதுமே ஒரு டார்கெட்டாகவே இருந்து வந்திருக்கிறது. தற்போது, சில நாட்களில் ஏற்பட்ட வன்முறைகள் யாருக் கும், எந்த நாட்டுக்கும் வரக்கூடாத ஒரு நிகழ்வு. பங்குச் சந்தை வர்த்தகத்தையே வியாழனன்று நிறுத்தி வைக்க வேண்டிய சூழ் நிலை இருந்திருந்தால், நிலைமை எவ்வளவு மோசமாக இருந்திருக் கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். கடந்த பல வருடங்களில் பல முறை மும்பையில் இது போல வன்முறைகள் நடந்துள்ளன. ஆனால், ஒவ்வொரு முறையும் வன்முறைக்கு பிறகு, பங்குச் சந்தை வீறு கொண்டு எழுவது தான் வாடிக்கை. அது போலவே இந்தத் தடவையும் நடக்கும் என்று பலரும் கூறினர். மேலும், இது போன்ற நிகழ்வுகளை தொடர் நிகழ்வுகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஸ்டாண்டர்டு அண்ட் பவர் நிறுவனம் கூறியதும் சந்தைக்கு வலு சேர்த்தது. அது போலவே வெள்ளியன்றும் மும்பை பங்குச் சந்தை வீறு கொண்டு எழுந்தது. வன்முறைக்கு பயப்படவில்லை. ஆனால், டிரைவெட்டிவ் டிரேடிங் முடிவுக்கு வருவதால், சந்தை மேலும் கீழுமாக இருந்தது.சந்தை 278 புள்ளிகள் மேலும் கீழுமாக இருந்தது. முடிவாக, மும்பை பங்குச் சந்தை 66 புள்ளிகள் கூடி 9,092 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 3 புள்ளிகள் கூடி 2,755 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.பணவீக்கம் குறைந்து வருகிறது. அதாவது, சென்ற வாரம் 8.9 சதவீதமாக இருந்தது இந்த வாரம் 8.84 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இது, சமீபத்தில் ஏறியிருந்த கடந்த 16 வருடத்தின் அதிகபட்ச அளவான 12.91 சதவீதத்தை விட பல சதவீதங்கள் குறைவு என்பது ஒரு நிறைவு.பங்குச் சந்தை 56 சதவீதம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. ஆயில் 49 சதவீத நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. தங்கம் 5.5 சதவீதம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளது. இது தவிர, வங்கி டெபாசிட்கள் நிலையான வருமானத்தைக் கொடுத்துள்ளன.அமெரிக்காவில் பல கோடி டாலர்கள் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரேட் கட் செய்யலாம் என்று பலரும் எதிர்பார்க் கின்றனர். இரண்டாவது காலாண்டு முடிவில் இந்தியாவின் ஜி.டி.பி., 7.6 சதவீதமாக இருக்கிறது. பணவீக்கம் குறைந்து வருகிறது. இவையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சந்தை குறைய வாய்ப்பில்லை. ஆனால், தற்போதைய சந்தையில் எது வேண்டுமானாலும் நடக்கிறது. ஏதாவது ஒரு பங்கை இந்த விலைக்கு வாங்காமல் விட்டு விட்டோமே; மறுபடி அந்த விலை வராதே என்று பலரும் நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், அந்த விலைக்கும் வந்து, அதை விடக் குறைந்த விலைக்கும் வருகிறது. அதுதான் பங்குச் சந்தை.

இந்திய வணிக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு?

ஒரு வணிக நிறுவனத்தை இந்திய கம்பெனி சட்டம் (உருவாக்கப் பட்ட) ஒரு செயற்கையான மனிதனாகவே கருதுகிறது. ஒரு சாதாரண இந்திய குடிமகனுக்கு உரித்தான அனைத்து சமூக கடமைகளும் பொறுப்புகளும் இந்திய வணிக நிறுவனங்களுக்கும் உண்டு. ஆனால் இந்திய (தனியார்) வணிக நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்ச்சி எப்போதுமே ஒரு மிகப் பெரிய கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. மேலும், இந்த நிறுவனங்களை பின்னின்று இயக்கும் இவற்றின் நிறுவனர்களை (எப்போதுமே) லாப நோக்கில் மட்டுமே இயங்கும் சுய நல சுரண்டல் கும்பலாகவே பலர் கருதி வருகின்றனர். இதற்கு காரணமில்லாமல் இல்லை. இந்திய வணிக நிறுவனங்களின் மீது பொதுவாக சுமத்தப் படும் குற்றச் சாட்டுகள் கீழே.
1.சரியான விலை அளவான லாபம் என்ற காந்திய கொள்கை எப்போதுமே இந்திய வணிக நிறுவனங்களுக்கு இருந்ததில்லை. பல சமயங்களில், சந்தைகளில் ஒரு கூட்டாதிக்கத்தை (Oligopoly) ஏற்படுத்திக் கொண்டு நுகர்வோரை ஏய்ப்பது வழக்கமாகிப் போன ஒன்று. விற்பனை விலையில் உற்பத்தி செலவு 10-20 சதவீதம் மட்டும் இருக்க லாபம் (margin) 80-90 சதவீதம் வரை கூட இருப்பதும் கூட உண்டு.
2. அதிக லாபம் பெற்றாலும் ஊழியர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் மட்டும் வழங்கி விட்டு (தகவல் தொடர்பு, மென் பொருள் போன்ற சில துறைகள் மட்டுமே விதி விலக்கு.) நிறுவனர்கள் தமக்கென வெளிப்படையான மிக ஆடம்பர வாழ்கையை நடத்துவதும் உண்டு. சிலர் தமக்கென்று மட்டுமில்லாமல் தனது மனைவியருக்கும் கூட தனி விமானங்கள் வாங்கி கொடுத்த கதைகளும் உண்டு.
3. அதே போல, அதிக லாபம் பெற்ற பின்னரும் சரிவர அரசுக்கு வரி செலுத்துவதில்லை என்ற குற்றச் சாட்டுகளும் உண்டு. இந்திய நிறுவனங்களின் மீது தாக்கல் செய்யப் பட்ட ஏராளமான வரி ஏய்ப்பு வழக்குகள் பல தீர்ப்பாயங்களில் (Tribunals) தேங்கி கிடக்கின்றன.
4. இவர்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் வெளிப்படையாக இருந்தது இல்லை. அரசியல்வாதிகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு பல ஊழல்களில் இவர்கள் ஈடுபட்டதும் உண்டு. சில சமயங்களில் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இவர்களே இருந்திருக்கிறார்கள். இந்திய சட்டத்தை எவ்வாறு தமக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்வது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தும் இவர்கள் ஒரு சாதாரண குடிமகன் போல சட்டத்தினை மதித்து அதன் படி நடக்கிறார்களா என்பது ஒரு கேள்விக் குறி.
5. பங்கு சந்தைகளிலும் கூட பல மோசடிகள் செய்து முதலீட்டாளர்களை சூதாட்டத்தில் ஈடுபடுவோர்கள் போல மாற்றிய பெருமையும் கூட இவர்களுக்கு உண்டு. இங்கும் கூட தாக்கல் செய்யப் பட்ட பல வழக்குகள் தீர்ப்பாயங்களில் இன்னும் தேங்கி கிடக்கின்றன.
6. தேசிய வளங்களை தனிப் பட்ட ஆதாயத்திற்காக சுரண்டும் பேர்வழிகளாகவே இவர்கள் கருதப் படுகிறார்கள். உதாரணமாக, இந்திய நாட்டின் கனிம வளங்கள், நீர் ஆதாரங்கள், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள், (இப்போது அதிகம் பேசப் படும் தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கான spectrum எனப்படும்) ரேடியோ அலைவரிசை ஆகியவை சிலரின் தனிப்பட்ட வளத்திற்கே பயன் படுகிறது.
7. நாட்டின் சுற்றுப்புற சூழ்நிலையை மாசு படுத்தும் தவறான போக்கிலும் இவர்கள் ஈடுபடுவதாகவும் வலுவான குற்றச் சாட்டுகள் உண்டு. சுத்திகரிக்கப்படாமல் ஆறு, ஏரி போன்ற குடி நீர் ஆதாரங்களில் கலக்கும் கழிவு நீர், வாயு மண்டலத்தில் நேரடியாக கலக்கும் புகை என்று பல வகைகளிலும் சுற்றுப்புறச் சூழல் இவர்களால் பாதிப்பு அடைகிறது.
இப்படி பலவகைகளும் இந்தியாவின் நலம் குறித்து அக்கறை காட்டாமலும், இந்திய நலனுக்கு எதிராகவும் செயல் படுபவர்களாகவுமே பொதுவாக கருதப்படும் இவர்களுக்கு தமது சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தக் கூடிய ஒரு அருமையான சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மாநாட்டில் உரையாற்றிய நிதி அமைச்சர் இவர்களுக்கு சில யோசனைகள் தெரிவித்து உள்ளார். அதாவது, இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விற்பனை விலையினை குறைப்பது. இவ்வாறு செய்வதின் மூலம், மக்களிடையே மீண்டும் பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும், தேவைகள் அதிகரிக்கும், இப்போதைக்கு தளர்ந்துள்ள இந்திய பொருளாதாரம் மீண்டும் தலை நிமிர ஒரு வாய்ப்பு கிடைக்கும். மேலும், தொழிற் சாலைகளையும் அலுவலங்களையும் மூட வேண்டிய அவசியம் இருக்காது.. ஊழியர்களுக்கும் வேலை போகும் அபாயம் நேரிடாது. உலக பொருட் சந்தைகளின் வீழ்ச்சியினால், பல மூல பொருட்களின் விலைகள் குறைந்திருக்கும் இந்த தருணத்தில் உற்பத்தி செலவுகள் குறையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் அரசாங்கமும் தனது தரப்பில் வரிகளை குறைக்கவும் முன் வரும். இதனால் விலை குறைப்பு என்பது சாத்தியமான ஒன்றே. இவ்வாறு விலை குறைப்பு செய்வதின் இந்திய வணிக நிறுவனங்கள் நாட்டின் மீது தமக்கிருக்கும் பற்றினையும் நன்றியினையும் வெளிப் படுத்த முடியும். நாட்டையும் ஒரு பெரிய பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க முடியும். நிதி அமைச்சரின் இந்த யோசனை மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சியின் பெரும்பங்கு லாபம் இந்த தொழில் அதிபர்கள் சமூகத்தையே சேர்ந்திருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை. ஆகவே நாட்டிற்காக ஒன்றிரண்டு வருடம் இவர்கள் சிறிய நஷ்டங்களை சந்தித்தால் தவறொன்றும் இல்லையே. மேலும் இவர்களின் நிதிப் பற்றாக்குறையை நீக்குவதற்காகவும், விற்பனையை அதிகரிப்பதற்காகவும், இந்திய அரசும் இந்திய தலைமை வங்கியும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. உதாரணம், வட்டி வீத குறைப்பு, பணப் புழக்கத்தை அதிகரிப்பது, இறக்குமதி வரியினை அதிகப் படுத்துவது, வெளிநாடுகளில் இருந்து கடன் பெறும் வழிமுறைகளை எளிமைப் படுத்துவது போன்றவை.
இவர்களுக்கு இவ்வளவு நன்மைகள் செய்துள்ள அரசின் கோரிக்கையை ஏற்பார்களா இந்த பெரும் தொழில் அதிபர்கள்? குறைப்பார்களா தமது உற்பத்தி பொருட்களின் விற்பனை விலைகளை? காப்பாற்றுவார்களா இந்தியாவை பொருளாதார சரிவிலிருந்து?
பொறுத்திருந்து பார்ப்போம்

 

வேலைக்கு ஆள் அனுப்பும் நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு

பெங்களூரு: சாப்ட்வேர் நிறுவனங்களில் மட்டுமல்ல, அவற்றில் வேலை செய்ய ஆட்களை அனுப்பும் கன்சல்டன்சி நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு அதிரடி நடந்து வருகிறது.சாப்ட்வேர் நிறுவனங்களின் தென்னக தலைநகராக இருந்து வரும் பெங்களூரு நகரில், டி.சி.எஸ்., இன்போசிஸ், சி.டி.எஸ்., சத்யம் போன்ற முன்னணி நிறுவனங்கள், அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்களைப் பெற்று சாப்ட்வேர் பணிகளை செய்து வந்தன.நிதி நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, பல நிறுவனங்களும் சாப்ட்வேர் பணிகளை செய்து கொள்ள விரும்பவில்லை. பல நிறுவனங்கள் மூடப்பட்டதால், அவற்றுக்கு சாப்ட்வேர் பணிகளை கவனித்து வந்தது நின்று போனது.வெளிநாட்டு நிறுவனங்களின் பணிகளை செய்து வந்த பல இந்திய பி.பி.ஓ., அலுவலகங்களில் பணிகள் இல்லாததால், வருமானம் அடிபட்டது. இதனால், ஆட்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.சாப்ட்வேர் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படவில்லை; நடுத்தர, சிறிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.பெங்களூரு நகரில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் கன்சல்டன்சி நிறுவனங்கள் புற்றீசல் போல பரவி இருந்தன. ஆனால், நெருக்கடி ஆரம்பித்த நிலையில், இவற்றின் தேவை குறைய ஆரம்பித்தது.நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி கன்சல்டன்சி நிறுவனங்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுத்து வந்த சாப்ட்வேர் நிறுவனங்கள், இப்போது ஆட்களைக் குறைக்கும் அதிரடி சிக்கனத்தில் இறங்கி விட்டன. இதனால், கன்சல்டன்சி நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது; அவற்றின் வருமானமும் குறைந்து விட்டதால், கன்சல்டன்சி நிறுவனங்களிலும் ஆட்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பெங்களூரு நகரில் சிறிய அளவில் இயங்கி வந்த கன்சல்டன்சி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஓரளவு சமாளிக்கக் கூடிய கன்சல்டன்சிகள் மட்டும், 10ல் இருந்து 30 சதவீதம் வரை ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளன.கன்சல்டன்சி நடத்தி வரும் பிரவீன் சாஸ்திரி கூறுகையில், ‘இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்கு காலாண்டுக்கு 500க்கு மேல் ஆட்களை அனுப்பி வந்துள்ளோம். ஆனால், இப்போது நிலைமை மோசமாகி விட்டது. எங்கள் அலுவலக கிளைகளிலேயே ஆட்களை குறைத்து விட்டோம். இன்னும் சில மாதங்களில் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்தார்.

வைர நகைகள் விலை 20 சதவீதம் குறையும் .

மும்பை: வைர நகைகள் விலை அடுத்த சில மாதங்களில் 20 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைரத்தொழிற்சாலைகள் ஏற்கனவே பெரும் நெருக்கடியில் உள்ளன. வைரம் வாங்குவது குறைந்ததால் உற்பத்தி குறைய ஆரம்பித்து விட்டது. இதோடு, நிதி நெருக்கடி வேறு வைர உற்பத்தியையும் பாதிக்க வந்து விட்டதால், வைர தயாரிப்பு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில், வைர விற்பனை சரிந்து கொண்டிருப்பதால், அடுத்த சில நாளில் வைர விற்பனை விலை 20 சதவீதம் குறைய ஆரம்பிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தியாவிலும் இன்னமும் இதற்கு மவுசு உள்ளதால், இதன் விலை சில மாதங்களில் குறைந்து விடும் என்றும் தெரிகிறது.சர்வதேச அளவில் பட்டை தீட்டப் பட்ட வைரம் விலை 5 சதவீதம் குறைந்துவிட்டது. விலை சரிவு ஆரம் பித்து விட்டதால், அடுத்த சில மாதங்களில் இந்த நிலை இன்னும் அதிக அளவில் இருக்கும் என்று வைரத் தயாரிப்பாளர்கள் எண்ணுகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் வைரத் தொழில் சுருங்கி வருகிறது. வைரம் வாங்குவதை பலரும் குறைத்துக்கொண்டதே இதற்கு காரணம். டில்லியில் பிரபல வைர விற்பனை நிறுவனம், இண்டியா கேபிடல் தலைவர் சஞ்சய் ஷா கூறுகையில், ‘வைர விற்பனைக்கு திடீரென பாதிப்பு ஏற்படவில்லை. ஏற்கனவே சில மாதங்களாகவே விற்பனை மந்தமாகத்தான் இருந்து வருகிறது. தொழில் இன்னும் மோசமான நிலைக்கு போகும் என்று அஞ்சுகிறோம்’ என்று தெரிவித்தார்.’இப்போது எல்லா வகையிலும் நெருக் கடியான நிலை உள்ளது. இதில் சமாளித்து தான் தொழில் செய்ய வேண்டும். இதை நாங்கள் கற்றுக்கொண்டு விட்டோம். நிலைமை சீராகலாம் என்று நம்பிக்கை உள்ளது’ என்று வைரம் மற்றும் அரிய கற் கள் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் வசந்த் மேத்தா கூறினார். இந்தியாவில் வைரத் தொழில் நசிய காரணம், அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்ததால், லாபம் கடித்தது; இதனால் தொழிலாளர்கள் குறைக்கப்பட வேண்டியதாகிவிட்டது. மேலும், பட்டை தீட்டும் தொழில்கள், வேறு நாடுகளில் அதிக அளவில் ஆரம் பித்ததும் இந்த நெருக்கடிக்கு காரணம்.

வாங்க ஆளில்லாததால் பல மாடிக்குடியிருப்புகள் முடக்கம்: பிரபல நிறுவனங்கள் தவிப்பு

புது டில்லி: பல லட்சம் ரூபாய் போட்டு வாங்க ஆளில்லாததால், 70 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பல மாடிக்குடியிருப்புகள் எல்லாம் பூட்டியே கிடக்கின்றன. டில்லி, மும்பை மட்டுமின்றி, சென்னையிலும் இந்த நிலை தான் நீடிக்கிறது. சர்வசேத நிதி நெருக்கடியால், கட்டுமான திட்டங் களும் முடங்கிப்போயுள்ளன. சாப்ட்வேர் உட்பட பல துறை நிறுவனங்களில், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய நிலை போய், இப்போது பலரும், எப்போது வேலை போகுமோ என்று பயந்த வண்ணம் உள்ளனர்; அதனால், எதிலும் முதலீடு செய்ய அவர்கள் தயாரில்லை. அது மட்டுமின்றி, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வேறு நெருக்கடியில் சிக்கியுள்ளதாலும், கிரெடிட் கார்டு பாக்கி, கடன் பாக்கி என்று பொது மக்களிடம் இருந்து சரியாக வராததால், கதி கலங்கிப்போயுள்ளன. அதனால், வீட்டுக்கடன் கொடுப்பதில் கடும் கெடுபிடிகளை போட்டுள்ளன. வங்கிகள் கடன் தருவதில் கட்டுப்பாடு, வாங்க ஆளில்லாத நிலை போன்ற காரணங்களால், டில்லி, மும்பை, சென்னை , பெங்களூரு நகரங்களில் கட்டப்பட்ட வானளாவ பலமாடிக்குடியிருப்புகளில், வீடுகள் 50 சதவீதம் விற்காமல் பூட்டி கிடக்கின்றன. இதனால், புதிய திட்டங்களை ஆரம்பிப்பதில் பல முன்னணி நிறுவனங்களும் தயக்கம் காட்டுகின்றன. பங்குச்சந்தையில், பங்குகளை வெளியிட்டசில மணி நேரத்தில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய டி.எல்.எப்.,நிறுவனம், தன் பல திட்டங் களை ஆறு மாதம் தள்ளிப்போட்டுள்ளது. அது போல, பார்ஸ்வநாத் டெவலப்பர்ஸ் நிறுவனமும் தன் திட்டங்களை தள்ளிப்போட்டுள்ளது. டில்லியில் குர்கான் பகுதியில் அடுத்த மாதம் முடிக்க வேண்டிய கட்டுமான திட்டங்கள், அடுத் தாண்டு மார்ச் வரை தள்ளிப்போடப்பட்டுள் ளது. வாடிக்கையாளர்கள் வாங்குவதில், தாமதம் ஆவது தான் காரணம். சென்னையிலும், இந்த நிலை தான் காணப்படுகிறது. சாப்ட்வேர் நிறுவன ஊழியர்களிடம் விற்று விடலாம் என்று கணக்கு போட்டு பல இடங்களில் கடன் வாங்கி, கட்டப் பட்ட பல மாடிக் குடியிருப்புகளில் பல வீடுகள் விற்கப்படாத நிலை நீடிக்கிறது. நிதி நெருக்கடியில் தாக்கு பிடிக்க முடியாத பில்டர்கள், வேறு பில்டர்களுக்கு மாற்றிக்கொடுக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. டில்லியில், டி.எல்.எப்., யுனிடெக், பார்ஸ்வநாத் நிறுவனங்களின் திட்டங்கள் முடங்கிப்போயுள்ளன. டி.எல்.எப்.,பின் பினாகில், ஐகான் திட்டங்கள் இப்போது முடிந்திருக்க வேண்டும்; இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. பெங்களூரு நகரில் பிரஸ்டீஜ் குரூப், மந்த்ரி குரூப், காத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் ஆகிய நிறுவனங்களின் திட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சீனா வகுப்பறையில் “சிங்கூர்” பாடம்

இதென்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சு என்கிறீர்களா? இது ஒரு கதை அல்ல நிஜம். சென்ற வாரம், சீனாவில் பீஜிங் நகரில் வணிக செய்தி துறை மாணவர்களுக்காக எடுக்கப் பட்ட பாடம் இது. பாடத்தின் பெயர் வெற்றியாளர்களும் தோற்று போனவர்களும் – டாட்டா மோடோர்ஸ் மற்றும் மேற்கு வங்காளம். இந்த பாடத்தை எடுத்துக் கொண்டதற்கு, வகுப்பை நடத்தியவர் (Martin Mulligan of the Financial Times, லண்டன்) கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?

“உலகின் கவனம் இன்றைக்கு இருப்பது நானோ காரின் மேல். நானோ கார் ஒரு சரித்திரம். ஒரு ஆடம்பர மெர்சிடிஸ் காரின் ச்டீரியோவின் (Stereo System) செலவில் ஒரு நானோ கார் வாங்க முடியும். இது ஒரு மிகப் பெரிய சாதனை. அதே சமயத்தில் இந்த பிரச்சினை குறித்து வெவ்வேறு கருத்துகள் உலா வருகின்றன. மேலும் ஒரு காரணம். 8 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு விவசாயத்தை அதிகம் நம்பியுள்ள மாநிலத்தில் இந்த பிரச்சினை நடந்து இருப்பது. இதன் மூலம் அதிக மக்கள் தொகை மற்றும் ஏழ்மை பகுதிகளில் தொழிற்சாலைமயமாக்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆராய முடியும்” மேலும் வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் வாகனத்துறை (Automobile Industry) உலக அளவில் இந்தியாவின் சாதனையான நானோ கார் குறித்த செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

அவர் சொல்ல விரும்பிய ஆனால் வெளிப்படையாக சொல்ல முடியாத ஒரு காரணம் கூட உண்டு. சீனாவில் கூட இப்போது தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் தேவைகளுக்காக நில கையகப் படுத்துவதற்கு விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் கூட, சீனாவின் கிழக்கு நகரம் ஒன்றில், வன்முறை கும்பல் (விவசாயிகள்) ஒன்று அரசாங்க அலுவலகத்தை தாக்கியதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பாடத்தின் இறுதியில் இது குறித்து 500 வார்த்தைகளுக்கு குறையாமல் ஒரு கட்டுரை வரையும் படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டனர் . அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை பார்த்தால் கம்யூனிஸ்ட் நண்பர்கள் நிச்சயம் ஆச்சர்யப் படுவார்கள் . பெரும்பாலான மாணவர்கள், மம்தா செய்தது சரி என்றும் வங்க அரசு செய்தது தவறு என்றும் கருத்து தெரிவித்தனர். மேற்கு வங்க அரசு சரியான இழப்பீட்டு தொகையை நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னமே கொடுத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்பது அவர்கள் வாதம் . மேலும், இறுதியாக வெல்லப் போவது யார் என்ற கேள்விக்கு நானோ கார்தான் என்றும் தோற்க போவது மேற்கு வங்கமே என்றும் கருத்து தெரிவித்தனர். (நன்றி: http://www.telegraphindia.com/1081124/jsp/frontpage/story_10155227.jsp)

இப்போது நம் கம்யூனிஸ்ட் நண்பர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? அவர்களுடைய வைத்திய முறையைக் கொண்டே அவர்களுடைய பித்தத்திற்கு வைத்தியம் பார்த்த மம்தாவிற்கு வாழ்த்துகள் சொல்வதா? அல்லது இப்படி கட்சி அரசியல் நடத்தி கொண்டு நாட்டின் தேவைகளை காற்றில் பறக்க விடும் நமது அரசியல்வாதிகளை கண்டு பெருமூச்சு விடுவதா? ஒரு இந்திய சாதனை வேதனையாகிப் போனது மட்டுமல்லாமல் இப்படி இந்திய மானம் கப்பலேறுவதை கண்டு வெட்கப் படுவதா?

சிட்டி பாங்க்கின் கடிதம்!

சிட்டி வங்கி தனது நிதி நிலவரம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று  வாடிக்கையாளர்களுக்கு கடிதம் எழுதி வருவதாகக் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள சிட்டி வங்கியின் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வங்கியாக கருதப்படுகிறது. இந்நிலையில் வங்கியின்  வராக் கடன் அதிகரித்ததால், நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்நிறுவனம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்நிறுவனப் பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 சதவீதம் சரிந்தது.

சிட்டி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும், முதலீடு செய்தவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில்,வங்கியின் நிதிநிலைமை குறித்து கவலை வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், வங்கியின் இந்தியப் பிரிவு வர்த்தக மேலாளர் ராஜசேகரன் இ&மெயில் மூலம் கடிதம் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

“சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சிட்டி வங்கியின் இப்போதைய நிதி நிலை மை குறித்தும் உங்களுடைய நிதித் தேவைகளை நிறைவேற்றுவதில் எங்களுக்கு உள்ள பொறுப்புகள் குறித்தும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்“ என்று தொடங்கி, விரிவான விளக்கங்களுடன் கடிதம் அனுப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

“பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு கடிதம் எழுதுவது என்பது வழக்கமான நடைமுறைதான்“ என்று சிட்டி வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, லெமன் பிரதர்ஸ் வங்கி திவாலான போது, ஐசிஐசிஐ வங்கியும் பாதிக்கப்பட்டுள்ளதாக பீதி நிலவியபோது, அவ்வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற நம்பிக்கை கடிதத்தை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் & அக்டோபர் மாத காலத்தில்

நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ.1,17,070 கோடியாக உயர்வு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
நடப்பு நிதி ஆண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான ஏழு மாத காலத்தில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ.1,17,070 கோடியாக அதிகரித்துள்ளது. இது, மத்திய பட்ஜெட்டில் நடப்பு 2008&09&ஆம் நிதி ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 87.8 சதவீதமாகும். இது, நிதி பற்றாக்குறை மிகவும் அதிகரித்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
விவசாயிகளுக்கான கடன்களை ரத்து செய்ததாலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டதாலும் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கு அதிக செலவினத்தை மேற்கொண்டதாலும் நிதி பற்றாக்குறை உயர்ந்துள்ளது.
பட்ஜெட் மதிப்பீடு
நடப்பு நிதி ஆண்டு முழுவதிற்குமாக வருவாய் பற்றாக்குறையை ரூ.55,184 கோடி என்ற அளவில் வைத்திருக்க மத்திய பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வருவாய் பற்றாக்குறையும் பட்ஜெட் மதிப்பீடுகளை விஞ்சி முதல் ஏழு மாதங்களிலேயே ரூ.87,027 கோடியாக உயர்ந்துள்ளது. ஆக, வருவாய் பற்றாக்குறையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
வருவாய்
ஏப்ரல்&அக்டோபர் மாத காலத்தில் நாட்டின் வருவாய் ரூ.2,89,400 கோடியாக உள்ளது. இது நடப்பு நிதி ஆண்டிற்கான மொத்த வருவாய் மதிப்பீட்டில் 48 சதவீதமாகும். இது சென்ற நிதி ஆண்டில் 50.7 சதவீதமாக இருந்தது. வருவாயில் பெரும் பகுதி வரிகள் வாயிலாக (ரூ.2,32,396 கோடி) ஈட்டப்பட்டுள்ளது. இதே ஏழு மாத காலத்தில் செலவினம் ரூ.4,08,395 கோடியாக உள்ளது. இது நடப்பு நிதி ஆண்டிற்கான மொத்த மதிப்பீட்டில் 54.4 சதவீதமாகும்.
செலவினத்தில் பெரும் பகுதி, அதாவது சுமார் ரூ.2,88,657 கோடி திட்டமிடப்படாத செலவினங்களாக உள்ளன. இது முழு நிதி ஆண்டிற்கான மதிப்பீட்டில் 56.9 சதவீதமாகும். நடப்பு முழு நிதி ஆண்டிற்கு ரூ.2,43,386 கோடி மதிப்பிற்கு திட்டமிட்ட செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் ஏழு மாதங்களில் இது ரூ.1,19,738 கோடியாக உள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 49.2 சதவீதமாகும்.
மொத்த உற்பத்தி
நடப்பு நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 2.5 சதவீத அளவிற்கு வைத்திருக்கவும், வருவாய் பற்றாக்குறை அறவே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. எனினும் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையால் இந்த இலக்கினை எட்டுவதற்கு மேலும் ஒரு நிதி ஆண்டு ஆகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நிதிப் பற்றாக்குறை என்பது மொத்த வருவாய்க்கும், மொத்த செலவினத்திற்கும் இடையே உள்ள வித்தியாசமாகும். வருவாய் பற்றாக்குறை என்பது அன்றாட செலவினத்திற்கும், அன்றாட வருவாய்க்கும் இடையே உள்ள வித்தியாசமாகும்.

மூலதனச் சந்தை சாதகமாக இல்லாததால்
கடன் பத்திரங்கள் வெளியீட்டில் இந்திய நிறுவனங்கள்அதிக ஆர்வம்
கவுரவ் பய்
மும்பை
நிறுவனங்களுக்கு விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ள நிதி தேவைப்படுகிறது. இதர வழிமுறைகளுடன் ஒப்பிடும்போது கடன்பத்திரங்கள் வெளியீடு வாயிலாக நிதி திரட்டுவதில் தற்போது சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஆயில், ஹட்கோ, எச்.டீ.எஃப்.சி., நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் வெளியீடு வாயிலாக நிதி திரட்ட அணிவகுத்து நிற்கின்றன.
நிறுவன பங்குகள்
நாட்டின் பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்டு வரும் சரிவால், சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் நிறுவனப் பங்குகளின் விலையும் மிகவும் குறைந்துள்ளது. இதனால், நிறுவன பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அதேசமயம், நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடுசெய்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், ரூ.250 கோடி நிதி திரட்ட கடன்பத்திரங்களை வெளியிட்ட பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய ரூ.2,500 கோடிக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இந்த கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய லார்சன் & டூப்ரோ மற்றும் டாட்டா பவர் போன்ற நிறுவனங்களும், ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் ஆகிய வங்கிகளும் முன்வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் கடன்பத்திரங்கள் வெளியீடு வாயிலாக ரூ.1,000 கோடி திரட்டி இருந்தது.
பங்கு வர்த்தகம்
அமெரிக்க வீட்டு வசதிக் கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால், இவ்வாண்டு ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து நாட்டின் பங்கு வர்த்தகத்தில் தேக்க நிலை உருவாகி உள்ளது. இதனையடுத்து, புதிதாக பங்குகளை வெளியிட ‘செபி’யின் அனுமதி பெற்ற பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டு திட்டங்களை கைவிட்டுள்ளன. எனவே, பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டுவதும் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. வெளிநாடுகளில் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டுவதிலும் நிறுவனங்கள் பல இடர்பாடுகளை சந்தித்து வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் கடன்பத்திரங்கள் வெளியீடு வாயிலாக நிதி திரட்டுவதில் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
சென்ற செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் 158 ஆண்டு கால பாராம்பரியமிக்க லெஹ்மன் பிரதர்ஸ் வங்கி திவால் அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து, நிறுவனங்கள் கடன்பத்திரங்களை வெளியிடும்போது முதலீட்டாளர்களுக்கு அதிக கூடுதல் கட்டணம் (பிரிமியம்) செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
பணப்புழக்கம்
தற்போது நிலைமை மாறி வருகிறது. உலக நிதிச் சந்தைகளில் ஏற்பட்ட நெருக்கடியால், இந்தியாவிலும் பணப் புழக்கம் குறைந்தது. பணப் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி, சென்ற ஜூலை மாதத்தில் 9 சதவீதமாக இருந்த வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை படிப்படியாக குறைத்தது. இது, தற்போது 5.5 சதவீதமாக உள்ளது. இதேபோன்று, வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டி விகிதமும் (ரெப்போ ரேட்) 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
தற்போது தொடர்ந்து பணவீக்கம் குறைந்து வருவதால், ரொக்க இருப்பு விகிதம் மற்றும் ரெப்போ ரேட் ஆகியவை மேற்கண்ட விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இதனால் வரும் மாதங்களில் கடன்பத்திரங்களுக்காக நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு வழங்கும் கூடுதல் கட்டணம் (பிரிமியம்) குறைய வாய்ப்புள்ளது என்றும், எஸ்.பி.ஏ. கேப்பிட்டல் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் (முதலீட்டு வங்கி) சஞ்சய் குப்தா தெரிவித்தார்.
சாதகமான சூழ்நிலை
ஆக, கடன்பத்திரங்கள் வெளியீடு வாயிலாக நிதி திரட்டுவதில் நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
பொதுவாக, பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே கடன்பத்திரங்களை வெளியிட்டு வந்தன.
தற்போது டாட்டா குழும நிறுவனங்கள் உள்ளிட்ட பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கடன்பத்திரங்களை வெளியிட தயாராகி வருகின்றன. எச்.டீ.எஃப்.சி. நிறுவனம், அண்மையில் ரூ.800 கோடிக்கு கடன்பத்திரங்களை வெளியிட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய வங்கியான பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கியும் கடன்பத்திரங்கள் வாயிலாக அதிக அளவில் நிதி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: