ஜப்பானில் இருந்து வெளியேறுகிறது நோக்கியா

டோக்கியோ : உலக அளவில் அதிகம் செல்போன் விற்பனை செய்யும் நிறுவனமான பின்லாந்தின் நோக்கியா, இனிமேல் ஜப்பானில் செல்போன் விற்கப்போவதில்லை என்று செய்திருக்கிறது. அவர்களின் அதிநவீன மாடலான வெர்சு வை மட்டும் அங்கு விற்பனை செய்யலாம் என்றும் மற்ற எந்தவொரு மாடலையும் அங்கு விற்க வேண்டாம் என்றும் முடிவு செய்திருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், உலக அளவில் செல்போன் விற்பனையில் 40 சதவீத மார்க்கெட் ஷேரை நோக்கியா வைத்திருந்தாலும், ஜப்பானிலோ அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கிறது. ஜப்பானிலேயே பல நிறுவனங்கள், புதிய புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி மார்க்கெட்டை பிடித்து வைத்திருப்பதால், அவர்களுடன் போட்டி போட முடியாமல் நோக்கியா அங்கிருந்து வெளியேறுகிறது. பொருளாதார நெருக்கடி இருந்து வரும் இந்த வேளையில், நாங்கள், விற்காத ஒரு சந்தையில் மேலும் மேலும் அங்கு எங்களது தயாரிப்புகளுக்கான எக்கசக்கமான பணத்தை செலவு செய்ய விரும்பவில்லை என்று நோக்கியாவின் எக்ஸிகூடிவ் வைஸ் பிரசிடென்ட் டிமோ இகமோடிலா தெரிவித்தார். ஆனால் விர்சு மாடலை மட்டும் நாங்கள் ஜப்பான் சந்தையில் வைத்திருக்க விரும்புகிறோம் என்றார் அவர்.

தாஜ் ஹோட்டல் தாக்குதலில் இருந்து தப்பிய இந்துஸ்தான் யூனிலிவர் உயர் அதிகாரிகள்

மும்பை : மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அங்கிருந்த யூனிலிவர் மற்றும் அதன் இந்திய நிறுவனமான இந்துஸ்தான் யூனிலிவர் உயர் அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அங்கிருந்த அந்த கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் எல்லோரும் பத்திரமாக நேற்றிரவே தாஜ் ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். யூனிலிவர் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வாக இருந்து ஓய்வு பெற்ற பேட்ரிக் செஸ்காவ்க்கு பிரிவு உபச்சார விழா தாஜ் ஹோட்டலில் நடந்திருக்கிறது. அதில் புதிய சி.இ.ஓ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பால் போல்மன் உள்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்துஸ்தான் யூனிலிவர் சேர்மன் ஹரிஷ் மன்வானி, சி.இ.ஓ.,நிதின் பரஞ்ச்பே, நிதி இயக்குனர் சுந்தரம் ஆகியோரும் அங்குதான் இருந்திருக்கிறார்கள். தீவிரவாதிகள் ஹோட்டலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது இவர்கள் எல்லோரும் அங்கே பத்திரமாக ஒரு அறையில் தான் இருந்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் எல்லோரும் பாதுகாப்பாக அங்கிருந்து நேற்றிரவே வெளியேற்றப்பட்டு விட்டனர் என்று அந்த கம்பெனி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜெ மியூசிக்குக்கு நான் டான்ஸ் ஆட முடியாது-ராஜா
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் யூகமான குற்றச்சாட்டுகளைக்காக நான் ராஜினாமா செய்யத் தேவையில்லை. இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின் மியூசிக்குக்கு எல்லாம் என்னால் ஆட முடியாது என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.

4, 5 பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து கொண்டு ஒரு ‘கார்ட்டல்’ போல செயல்பட்டு வந்தன. இதை நான் உடைத்தேன். புதிய நிறுவனங்களை நுழையச் செய்து மக்களுக்கு மேலும் குறைந்த கட்டணத்தில் தொலை தொடர்பு சேவை கிடைக்க வழி செய்தேன்.

இதைத் தான் திசை திருப்பி என் மீது குற்றம் சாட்டுகின்றனர். நான் எந்த நிறுவனத்துக்கும் ஆதரவாக நடக்கவில்லை. தேவையில்லாமல் இதை அரசியலாக்குகிறார்கள்.

பொதுவாக மத்திய கண்காணிப்பு ஆணையமான சி.வி.சி. எல்லா அமைச்சகங்களுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவது வழக்கமானது தான்.

அந்த வகையில் தான் இப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் விளக்கம் கோரப்பட்டது. அதற்கான விளக்கம் தரப்பட்டுவிட்டது.

என் அமைச்சகத்திற்கும் கடிதம் வந்தால், அதற்கான பதிலை இந்தத் துறையின் செயலாளர் அனுப்புகிறார். நான் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த போது கூட அம்மாதிரி கடிதம் வந்து, அதற்குரிய பதிலை செயலாளர் அனுப்பியிருக்கிறார்.

ஆனால், இப்போது எதையெடுத்தாலும் பத்திரிகைகள் குற்றச்சாட்டு போல எழுதுகின்றன. தமிழகத்தில் இம்மாதிரி செய்திகளுக்கு என் படத்தையும் சேர்த்து போட்டு விடுகின்றனர். ஆனால், இம்மாதிரி கடிதங்களுக்கு நாங்கள் அனுப்பும் பதிலைப் பற்றி செய்தி போடுவதில்லை.

யூகமான குற்றச்சாட்டுகளைக்காக நான் ராஜினாமா செய்யத் தேவையில்லை. மூன்றாம் ஸ்பெக்டரம் ஒதுக்கீடு பற்றி அடுத்த கட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த விஷயத்தில் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவரது மியூசிக்குக்கு எல்லாம் என்னால் ஆட முடியாது என்றார் ராஜா.

கட்டணத்தை குறைத்து விமான நிறுவனங்கள் அதிரடி

புதுடில்லி: விமான டிக்கெட்டுகள் மீதான பரிவர்த்தனை கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், விமானக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. விமான டிக்கெட் புக்கிங் அலுவலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகளின் மீதான பரிவர்த்தனை கட்டணத்தை ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர் ஆகிய நிறுவனங்கள் வாபஸ் பெற்றுள்ளன. உள்ளூர் எகனாமி டிக்கெட்டுகளின் பரிவர்த்தனை கட்டணம் 300 ரூபாய் வரையிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான டிக்கெட்டுகளின் பரிவர்த்தனை கட்டணம் 1,200 முதல் 10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், விமானக் கட்டணம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விமான எரிபொருளின் விலை குறைந்துள்ளதால், விமானக் கட்டணத்தைக் குறைக்கும் படி, மத்திய விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல், விமான நிறுவனங்களை அறிவுறுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து பரிவர்த்தனை கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மற்ற விமான நிறுவனங்களும் விரைவில் விமான டிக்கெட் பரிவர்த்தனை கட்டணத்தை வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.


‘செபி’ அமைப்பின் அனுமதி பெற்ற நிலையிலும்
புதிய பங்கு வெளியீட்டு திட்டங்களை நிறைவேற்ற நிறுவனங்கள் தயக்கம்
விஜய் கவுரவ்
மும்பை
நடப்பு 2008&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து நாட்டின் பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டு வருகிறது. பங்கு வியாபாரத்தில் உடனடியாக இயல்பு நிலை திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதனையடுத்து, மூலதனச் சந்தையில் களமிறங்கி நிதி திரட்ட பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் அனுமதி பெற்றுள்ள பல நிறுவனங்கள் அவற்றின் பங்கு வெளியீட்டு திட்டங்களை ஒத்திவைக்கும் நிலையில் உள்ளன.
‘செபி’ அனுமதி
எடுத்துக்காட்டாக, அதானி பவர், ஃபியூச்சர் வென்ச்சர்ஸ், என்.எச்.பி.சி., ஆயில் இந்தியா உள்ளிட்ட 12 நிறுவனங்கள் பங்கு வெளியீடுகள் வாயிலாக ரூ.13,225 கோடி திரட்ட ‘செபி’யின் அனுமதி பெற்றிருந்தன. பங்கு வெளியீட்டில் தொடர்ந்து தேக்க நிலை ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே பங்கு வெளியீட்டை மேற்கொண்ட சில முன்னணி நிறுவனங்களின் பங்கு வெளியீட்டிற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, அவற்றின் பங்கு வெளியீடுகளை வாபஸ் பெற்றன. இதுபோன்ற காரணங்களால் மேற்கண்ட நிறுவனங்கள் பங்குகளை வெளியிட தயக்கம் காட்டி வருகின்றன.
பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட நிறுவனங்களுக்கு ‘செபி’ அனுமதி வழங்கிய தேதியிலிருந்து 90 தினங்களுக்குள் நிறுவனங்கள் பங்குகளை வெளியிட வேண்டும். தவறினால் அனுமதி காலாவதியாகிவிடும்.
அதானி பவர்
இந்நிலையில், மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அதானி பவர் நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக ரூ.5,630 கோடி திரட்டுவதற்கு, செப்டம்பர் மாதத்தில், ‘செபி’யின் அனுமதி பெற்றிருந்தது. இந்நிறுவனம், அடுத்த சில வாரங்களுக்குள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள வேண்டும். தற்போதுள்ள நிலையில், இந்நிறுவனம் பங்கு வெளியீட்டை ஒத்திவைக்கும் என முதலீட்டு வங்கியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிறுனம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அனல் மின் நிலையங்களை அமைத்துள்ளது. இவற்றின் வாயிலாக 9,900 மெகா வாட் மின்சாரத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவைப்படும் பகுதி நிதியை திரட்ட ரூ.10 முகமதிப்பு கொண்ட 29.70 கோடி பங்குகளை வெளியிட திட்டமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பியூச்சர் வென்ச்சர்ஸ்
இதேபோன்று, கிஷோர் பியானி தலைமையின் கீழ் செயல்படும் ஃபியூச்சர் குழுமத்தின் ஓர் அங்கமான ஃபியூச்சர் வென்ச்சர்ஸ் இந்தியா நிறுவனமும் புதிய பங்கு வெளியீடு வாயிலாக ரூ.2,660 கோடி திரட்ட ‘செபி’யின் அனுமதி பெற்றிருந்தது. இந்நிறுவனமும் அதன் பங்கு வெளியீட்டு திட்டத்தை தள்ளி வைக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பங்கு வர்த்தகம் நன்றாக இல்லாத நிலையிலும், நிறுவனங்களால் புதிய பங்கு வெளியீடு வாயிலாக நிதி திரட்ட முடியும். அதேசமயம், பல சவால்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். எனவே, நிலைமைகளை நன்கு கவனித்து, அதன் பிறகுதான் பங்கு வெளியீடு குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்டு வரும் தொய்வு நிலையால், பங்கு வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களின் ஆதரவு கிடைக்காமல் போகும் என்ற அச்சப்பாட்டால் பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றன.
முதலீட்டு வங்கி
இது குறித்து மும்பையைச் சேர்ந்த சாஃப்ரர் கேப்பிட்டல் அட்வைசர்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் நிர்வாக இயக்குனர் கே.ஸ்ரீனிவாஸ் கூறும்போது, “தற்போதுள்ள நிலையில், அதிக தொகைக்கு பங்குகளை வெளியிடுவது சாத்தியப்படாத ஒன்றாகும். விரிவாக்கத் திட்டங்களை கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே புதிதாக பங்குகளை வெளியிடும்” என்று தெரிவித்தார்.
ஆதரவு இல்லை
நடப்பு 2008&ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஈமார் எம்.ஜி.எஃப். மற்றும் வோக்ஹார்டு ஹாஸ்பிட்டல்ஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே ரூ.5,436 கோடி, ரூ.564 கோடி மதிப்பிற்கு பங்குகளை வெளியிட்டன. இதற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் போதிய ஆதரவு கிடைக்காததால் அப்பங்கு வெளியீட்டு திட்டங்களை இரண்டு நிறுவனங்களுமே வாபஸ் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற 2007&ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் 106 பங்கு வெளியீடுகள் வாயிலாக ரூ.45,000 கோடி திரட்டி இருந்தன. அதேசமயம், நடப்பு 2008&ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் நிறுவனங்கள் 38 பங்கு வெளியீடுகள் வாயிலாக ரூ.17,000 கோடி மட்டுமே திரட்டி உள்ளன. பிரைம் டேட்டா பேஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.
சர்வதேச நிதி சந்தைகளில் ஏற்பட்டுள்ள சீர்குலைவால் வெளிநாடுகளிலும் நிதி திரட்ட முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் பங்கு வெளியீடுகள் வாயிலாக நிதி திரட்ட முடியாததால் பல நிறுவனங்கள் அவற்றின் விரிவாக்க திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளன. இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: