சிட்டி பேங்க்: 1,000 இந்தியர்கள் வேலை பறிப்பு?

மும்பை: கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அமெரிக்காவின் சிட்டி வங்கி, தனது இந்திய கிளைகளில் பணியாற்றும் 10,000 ஊழியர்களில் 10 சதவீதம் பேரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் பணியாளர்களைக் கொண்டுள்ள பிரமாண்ட தனியார் வங்கி சிட்டி. அமெரிக்காவின் நம்பர் ஒன் வங்கியாகத் திகழ்ந்தது. சிட்டி வங்கி மட்டும் வீழ்ந்தால், உலக தனியார் வங்கி கட்டமைப்பே தகர்ந்துவிடும் எனும் அளவுக்கு உலக நாடுகளின் வர்த்தகத்துடன் பின்னிப் பிணைந்த வங்கி இது.

ஆனால் லெஹ்மன் பிரதர்ஸைப் போலவே வராக்கடன், பெரும் நஷ்டம் மற்றும் பொருளாதார பெருமந்த நச்சு சூழலில் விழிபிதுங்கி நிற்கிறது சிட்டி. இந்த வங்கி திவாலானால் எழும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, இதனை மூழ்காமல் காப்பாற்றுவது எப்படி என பல நாட்டு அதிபர்களும் யோசித்து வருகின்றனர். ‘சிட்டி வங்கி விழுவதை யாருமே விரும்பவில்லை. ஆனால் அவ்வளவு பெரிய வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தும் வழியும் யாருக்கும் தெரியவில்லை’ என்று வங்கித் துறை நிபுணர்கள் கருத்துக் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தனது பணியாளர்களில் 75,000 பேரை நீக்கப் போவதாகக் கூறிவந்த சிட்டி வங்கி, அவர்களில் 23,000 பேரை ஏற்கெனவே நீக்கிவிட்டது. மேலும் 52,000 பேர் நீக்கப்பட உள்ளனர்.

இவர்களில் 1000 பேர் இந்திய கிளைகளில் பணியாற்றுவோர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிட்டி பைனான்சியல் நிறுவனத்தில் இருந்துதான் பெரிய அளவில் ஆட்குறைப்பு இருக்கும் என அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்து உள்ளது.

விக்ரம் பண்டிட் நீக்கம்?:

இதற்கிடையே அந்த வங்கியின் தலைவர் விக்ரம் பண்டிட்டை நீக்கி்விட்டு புதியவரை நியமிக்கவும் சிட்டி பேங்கின் இயக்குனர்கள் குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

யுஏஇ அரசு உத்தரவாதம்:

இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்சி்ன் சிட்டி பேங்க் கிளைகளில் உள்ள முதலீடுகளுக்கு அந் நாட்டு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அதே போல வேறு சில தனியார், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்துக்கும் அந்த நாடு உத்தரவாதம் அளித்துள்ளது.

இந்த அறிவிப்பு அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும் என்பது நிச்சயம்.

சிட்டி பேங்க்கை காப்பாற்ற, அதற்கு 320 பில்லியன் டாலர் கடன் கொடுக்க அமெரிக்க அரசு ஒப்புதல்

வாஷிங்டன் : கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான சிட்டி குரூப்பை காப்பாற்ற, அதன் 300 பில்லியன் டாலர் வராக்கடன்களை ஏற்றுக்கொள்ள அமெரிக்க அரசு முன்வந்துள்ளது. மோசமான கடன் என்று அக்கவுன்ட் புக்கிலேயே நீண்ட காலமாக இருந்து கொண்டிருக்கும் 300 பில்லியன் டாலர் ( சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் ) கடனை அமெரிக்க அரசு ஏற்றுக்கொள்வதாக ஓத்துக்கொண்டிருக்கி நிப்டி உயர்ந்தும் சென்செக்ஸ் குறைந்தும் முடிந்த பங்கு சந்தை றது. இது தவிர மேலும் ஒரு 20 பில்லியன் டாலர்களை ( சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் ) சிட்டி குரூப்பின் முதலீட்டிற்கு கடனாக கொடுக்கவும் அமெரிக்க நிதித்துறை ஒத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்க நிதித்துறை, ஃபெடரல் ரிசர்வ் வங்கி, ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆகியவற்றுடன் நேற்று சிட்டி குரூப் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. முதலீட்டிற்காக கொடுக்கப்படும் 20 பில்லியன் டாலருக்கு அமெரிக்க நிதித்துறை, கொஞ்சம் அதிக வட்டியை, அதாவது 8 சதவீத வட்டியை சில வருடங்களுக்கு வசூல் செய்யும் என்றும் பேசப்பட்டிருக்கிறது. சிட்டி குரூப்பிடமிருந்து 8 சதவீத வட்டியை வசூலிப்பது போலவே, அமெரிக்க நிதித்துறை மற்ற வங்கிகளுக்கு கடந்த மாதத்தில் கொடுத்திருந்த 700 பில்லியன் டாலர் கடனுக்கும் 8 சதவீத வட்டியை வசூலிக்கவும் முடிவு செய்திருக்கிறது. இது தவிர சிட்டி குரூப்பின் நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை என்றும் பெடரல் ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டது. 106 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள சிட்டி குரூப்பிற்கு 20 கோடி கஸ்டமர்கள் இருக்கிறார்கள். மோசமான நிதி நிலையில் இருந்த அந்த பேங்க்கின் பங்கு மதிப்பு வேகமாக குறைந்து கொண்டே வந்தததை அடுத்து, திவால் ஆகி விடுமோ என்ற அச்சம் அதன் முதலீட்டாளர்கள் மற்றும் கஸ்டமர்களிடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்தது.

பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ரூ.7,400 கோடி கடன் கேட்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர்

லண்டன் : டாடாவுக்கு சொந்தமான பிரிட்டனின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் நிறுவனம், ஒரு பில்லியன் பவுண்ட் ( சுமார் ரூ.7,400 கோடி ) கடன் கேட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு தான் அமெரிக்காவின் ஃபோர்டு மோட்டார் கம்பெனியிடம் இருந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் வாங்கியது. இப்போது கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக சொல்லப்படும் அந்த நிறுவனம், ஒரு பில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் கடன் கேட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தை அணுகியிருப்பதாகவும், பிரதமர் கார்டன் பிரவுன் இது குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் பதில் சொல்வதாக சொல்லியிருப்பதாகவும் சன்டே டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ஸ்மித் இந்த வேண்டுகோளை அரசுக்கு வைத்திருப்பதாகவும், இந்த நிதியை கொண்டு அதன் நிதி சிக்கலை போக்கிக்கொள்ளலாம் என்று அவர் கேட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜெட் ஏர்வேஸின் சம்பள குறைப்பிற்கு பைலட்கள் கடும் எதிர்ப்பு

மும்பை : கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக சொல்லப்படும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், அதன் ஊழியர்களில் சம்பளத்தை குறைக்க முடிவு செய்தது. இதற்கு அதில் பணியாற்றி வரும் இந்திய பைலட்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு பைலட்களை இங்கிருந்து முழுமையாக வெளியேற்றும் வரை நாங்கள் சம்பள குறைப்பை ஒத்துக்கொள்ள முடியாது என்று அவர்கள் திட்டவட்டமாக சொல்லி விட்டனர். கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ், அதன் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் திட்டத்துடன், நேற்று சேர்மன் நரேஷ் கோயல் தலைமையில் ஊழியர்களின் கூட்டத்தை மும்பை ரமதா ஹோட்டலில் நடத்தியது. இதில் அதன் ஊழியர்களின் சம்பளத்தை, 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மாதம் ரூ.75,000 முதல் ரூ.2,00,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 5 சதவீதம் சம்பளத்தை குறைப்பது என்றும், ரூ.2 – 5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 10 சதவீதமும், ரூ.5 – 10 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும், அதை விட அதிகம் சம்பளம் பெறும் உயர் அதிகாரிகளுக்கு 25 சதவீதமும் சம்பளத்தை குறைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனை அதன் ஊழியர்களும் ஒத்துக்கொண்டனர். ஆனால் அதன் பைலட்களுக்கும் 20 சதவீதம் வரை சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் முடிவுற்கு இந்திய பைலட்கள் ஒத்துக்கொள்ளவில்லை. காரணம் அந்த நிறுவனத்தில் 750 இந்திய பைலட்களும் 240 வெளிநாட்டு பைலட்களும் பணியாற்றுகிறார்கள். இதில் வெளிநாட்டு பைலட்களுக்கோ, இந்திய பைலட்களை விட 50 சதவீதம் கூடுதலாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது தவிர வேறு பல சலுகைகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஜெட் ஏர்வேஸிடம் இருக்கும் பெரிய விமானங்களை ஓட்டுவதும் அவர்கள்தான். இந்திய பைலட்கள் சிறிய விமானங்களைத்தான் ஓட்டுகிறார்கள். இதனால் இரு தரப்பினருக்குமிடையே கடும் பணிப்போர் நடந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம், வெளிநாட்டு பைலட்கள் 27 பேரை வேலையில் இருந்து நீக்கியது. இருந்தாலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் எல்லா வெளிநாட்டு பைலட்களையும் நீக்கி விட வேண்டும் என்று இந்திய பைலட்கள் கோரி வருகிறார்கள். எல்லா வெளிநாட்டு பைலட்களையும் நீக்கியபின்தான் நாங்கள் சம்பள குறைப்பு பற்றி முடிவு செய்யவோம் என்றும் அவர்கள் சொல்லி விட்டனர். நிர்வாக செலவு கூடி விட்டதாலும், பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் இந்த நிதிஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜெட் ஏர்வேஸ், ரூ384.53 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. இதன் காரணமாக அதன் ஊழியர்களில் 1,000 பேரை நீக்கிய ஜெட் ஏர்வேஸ்,பின்னர் அரசியல் நெருக்கடி காரணமாக இரண்டே நாளில் மீண்டும் வேலையில் சேர்த்துக்கொண்டது நினைவிருக்கலாம்

பொருளாதார நிலை-வெள்ளை அறிக்கை கோரும் ஜெ

சென்னை: நாட்டின் பொருளாதார நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில் நிதியமைச்சர் சிதம்பரம் நகைப்புக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். நுகர்வோரின் வாங்கும் சக்தியை அதிகரிக்க உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை குறைக்குமாறு இந்திய தொழிலதிபர்களை நிதியமைச்சர் சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.

ஆனால் தற்போதுள்ள சூழலில் விலைகுறைப்பு சாத்தியமல்ல என்று கூறி தொழிலதிபர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.

மேலும் பணப் புழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய தொகையையும் (சி.ஆர்.ஆர்.)  மற்றும் சட்டப்படி வங்கிகள் வைத்திருக்க வேண்டிய தொகையையும் (எஸ்.எல்.ஆர்.) குறைத்து சிதம்பரம் எடுத்த நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத்தான் பணப் புழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது (!!).

வெளிநாட்டு சக்திகள் விரித்த சதி வலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பரிதாபகரமாக விழுந்துவிட்டது.

இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கு சிறிய பயனைக்கூட சிதம்பரத்தின் நடவடிக்கைகள் தரவில்லை.

மாநில அளவில் மோசமான நிர்வாகத்தை கொண்டிருக்கும் திமுக அரசின் கடுமையான மின்வெட்டு காரணமாக கடைகளில் பொருட்கள் வாங்குவதுகூட இயலாத காரியமாகி விட்டது.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத் திறமையின்மையால் ஏற்பட்டுள்ள மோசமான கட்டமைப்பே தற்போதைய நிலைமைக்கு காரணம். இதனால் தொழில் உற்பத்தியில் தேசிய குறியீடு குறைந்துகொண்டே வருகிறது.

மத்திய அரசின் பொருளாதார மேலாண்மை மீது குறிப்பாக இந்திய பங்கு சந்தை பற்றி விடாப்பிடியாக கருத்து தெரிவிக்கும் சிதம்பரத்தின் மீது நாடு நம்பிக்கை இழந்துவிட்டது. அவர் சரிந்து கொண்டிருக்கும் பங்குச் சந்தையை தூக்கி நிறுத்துவதற்காக தன்னாட்சி அமைப்புகளான செபி மற்றும் இந்திய வங்கி செயல்பாடுகளில் குறுக்கிட்டு வருகிறார். ஆயினும் பங்கு சந்தை குறியீடு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

110 கோடி இந்திய மக்களின் அடிப்படைத்தேவைகளை புறந்தள்ளி விட்டு, இந்தியப் பொருளா தாரத்தின் உயிர்நாடியான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் சரிவை தூக்கி நிறுத்துவதற்காக கார்களின் விற்பனை, ஆடம்பரப் பொருட்கள் மற்றும் கட்டுமானத் தொழில் மீது சிதம்பரம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே, பங்குச் சந்தைக்குத்தான் தான் அமைச்சர் என்ற முறையில் சிதம்பரத்தின் போக்கு இருந்தது. பின்னர், நிலைமை மிகவும் சூடான பிறகு, செபி மற்றும் பாரத ரிசர்வ் வங்கி ஆகிய அமைப்புகளின் ‘செய்தித் தொடர்பாளர்’ என்ற புதிய பதவியை சிதம்பரம் ஏற்றார். தற்போது சில இந்திய நிறுவனங்களின் ‘விற்பனைப் பிரதிநிதி’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

இது நமது நாட்டின் மோசமான பொருளாதார மேலாண்மை, தேசத்தை பற்றிய உண்மையான அக்கறை கொண்டிருப்பவர்களை கவலை அடையச் செய்துள்ளது.

பொருட்களை பதுக்கி வைக்கும் ஈவு இரக்கமற்ற கும்பலாலும், வரலாறு காணாத பெட்ரோலியப் பொருட்களின் உயர்வினாலும், சாதாரண மனிதனால் வாங்க முடியாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டது.

பதுக்கி வைக்கப்பட்ட பொருட்களை வெளியில் கொண்டு வருவதற்கோ அல்லது விலைவாசியை குறைப்பதற்கோ மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

சர்வதேச பொருளாதாரச் சரிவை மத்திய அரசு ஏன் முன்கூட்டியே அறிந்து கொள்ளவில்லை?. இதனை எதிர்கொள்ளத் தேவையான திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு ஏன் எடுக்கவில்லை?

உலகப் பொருளாதாரமே சீர்குலைந்து நிலையற்றதாக இருக்கும்போது, பிரதமரும், நிதியமைச்சரும் இந்தியப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஏன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்?.

மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏன் பங்குச் சந்தையில் விடாப்பிடியாக கவனம் செலுத்தி வந்தது?

இதுபோன்ற விவகாரங்களை உள்ளடக்கிய தேசிய பொருளாதாரத்தின் மேலாண்மை குறித்து ஒட்டு மொத்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். இதனை வேடிக்கை என்று எண்ணி நிதியமைச்சர் நிராகரிக்காமல் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்கால சந்ததியினர் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

மியூச்சுவல் பண்டில் 58 ஆயிரம் கோடி போச்சு

மும்பை: சர்வதேச நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பங்குச் சந்தையில், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு மட்டும் 58 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் வருமான இழப்பு ஏற்பட்டதை அடுத்து, பலரும் போட்ட பணத்தை திரும்பப்பெறும் நிலை ஏற்பட்டது. இதனால், திட்டமிட்டு அமல் செய்யப்பட்ட குறுகிய கால மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் இருந்து பலரும் பணத்தை திரும்பப்பெறுவது அதிகரித்தது. முதிர்ச்சி பெறாமலேயே பலரும் பணத்தை திரும் பப் பெற முடிவு செய்ததால், நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

குறிப்பிட்ட காலம் வரை டிபாசிட் பணத்தை வைத்திருந்தால் தான் அதற்கு லாபம் தர முடியும். ஆனால், முதிர்ச்சி பெறாமலேயே போட்ட பணத்தை திரும்பப்பெற முடிவு செய்ததால், மியூச்சுவல் பண்ட் நிதியை அவசர அவசரமாக திரட்டி திரும்பத் தர வேண்டிய நிலை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.நிதி நெருக்கடியால், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு முதலீட்டு பணம் மொத்தம் 58 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ‘பிக்சட் மெச்சூரிட்டி பிளான்’ கள் உட்பட, குறுகிய கால மியூச்சுவல் மெச்சூரிட்டி திட்டங்களில் இருந்து மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., ப்ரூடென்ஷியல் உட்பட பல நிறுவனங்களுக்கும் இந்த வகையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், நிதி ஆதாரத்தை திரட்டி காட்ட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து மியூச்சுவல் பண்ட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘அரையாண்டு, ஓராண்டு மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் உள்ளன. அவற்றில் இருந்து பணத்தை திரும்பப்பெறுவது, நிறுவனங்கள் தந்த உத்தரவாதத்தை மீறிய செயலாகிறது. இப்படி செய்யும் போது, நிறுவனத்துக்கு தான் அதிக இழப்பு ஏற்படுகிறது.பணத்தை திரும்பப்பெற வேண்டாம் என்று நாங்கள் வாடிக்கையாளர்களை தடுத்து வருகிறோம்; அதே சமயம், தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையூட்டவும் செய்து வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.

கோயம்புத்தூரில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் ஆர் அண்ட் டி சென்டர் அமைக்கிறது சவ்வியான்

புதுடில்லி : பிசினஸ் பிராசஸிங் மேனேஜ்மென்ட் ( பிபிஎம் ) நிறுவனமான சவ்வியான், கோயம்புத்தூரில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் ஆர் அண்ட் டி மையத்தை அமைக்கிறது.இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக கோயம்புத்தூரில்தான் இம்மாதிரியான மையம் அமைக்கப்படுகிறது. ஒரு நிறுவனத்திற்கு தேவையான எல்லா வகையான சாப்ட்வேரையும் டிசைன் செய்து உருவாக்க, மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் ஈடுபட அது கூடுதலான பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்த துறையில் இந்தியாவில் ஒரு முன்னணி நிறுவனமாக வளர அது முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் சிலிக்கான்வேலி, மற்றும் மும்பையில் இருக்கும் அதன் நிறுவனங்களுக்கு கோயம்புத்தூரில் இருந்து ஒரு உயர்மட்ட குழுவினர் சென்று இது குறித்து அறிந்து வர இருக்கிறார்கள்

அமெரிக்க பங்கு சந்தை வீழச்சியால் இந்திய கம்பெனிகள் இழந்தது 5.74 பில்லியன் டாலர்கள்

நியுயார்க் : போன வாரத்தில் அமெரிக்க சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. அங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலையால் அங்குள்ள பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. அங்குள்ள பங்கு சந்தைகளில் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலான கம்பெனிகளில் பங்கு மதிப்பு பாதாளத்திற்கு சென்று விட்டன. இதில் இந்திய கம்பெனிகளும் தப்பவில்லை. அங்குள்ள நியுயார்க் ஸ்டாக் எக்சேஞ் மற்றும் நாஸ்டாக்கில் 18 இந்திய கம்பெனிகள் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கின்றன. நவம்பர் 21 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் அங்கு லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் 18 இந்திய கம்பெனிகளில் 16 கம்பெனிகள் மொத்தமாக 5.74 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மார்க்கெட் கேப்பிடலைஷேசனை இழந்திருக்கின்றன. இரண்டு கம்பெனிகளின் மதிப்பு மட்டுமே உயர்ந்திருக்கிறது. டாக்டர் ரெட்டி’ஸ் லேபரட்டரீஸ் 37 மில்லியன் டாலர்களும், ஜென்பேக்ட் 4.3 மில்லியன் டாலர்களும் உயர்ந்திருக்கின்றன. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரம் இப்போது மோசமான நிலைக்கு சென்று விட்டது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. இதனால்தான் அங்குள்ள பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவை வருகின்றன. நஷ்டமடைந்த 16 இந்திய கம்பெனிகளில் அதிகம் நஷ்டமடைந்தது ஹெச்.டி.எப்.சி.பேங்க் தான். அது மட்டுமே 1.37 பில்லியன் டாலர்கள் மார்க்கெட் கேப்பிடலைஷேசனை இழந்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ஐசிஐசிஐ பேங்க் 1.12 பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறது. இன்போசிஸ் ஒரு மில்லியன் டாலர்கள், விப்ரோ 863 மில்லியன் டாலர்கள், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 457 மில்லியன் டாலர்கள் மார்க்கெட் கேபிடலைசேஷனை இழந்திருக்கின்றன. இது தவிர டாடா மோட்டார்ஸ், டாடா டெலிகம்யூனிகேஷன்ஸ், ஷிபி டெக்னாலஜிஸ், ரிடிஃப் டாட் காம், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், எம்.டி.எல்.எல்., பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் ஆகியவையும் பெருமளவு மார்க்கெட் கேபிடலைஷேசனை இழந்திருக்கின்றன

ஆஸ்திரேலிய இன்சூரன்ஸ் கம்பெனி இந்தியா வருகிறது : எஸ்.பி.ஐ.,உடன் கூட்டு சேர முடிவு

மும்பை : ஆஸ்திரேலிய இன்சூரன்ஸ் நிறுவனமான ‘இன்சூரன்ஸ் ஆஸ்திரேலியா குரூப்’ ( ஐ.ஏ.ஜி.) , ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து, இந்தியாவில்ஜெனரல் இன்சூரன்ஸ் துறையில் நுழைய முடிவு செய்திருக்கிறது. இந்தியாவில் சமீப காலமாக வேகமாக வளர்ந்து வரும் இன்சூரன்ஸ் துறையில் இறங்க முடிவு செய்திருக்கும் அந்த நிறுவனம் அதற்காக இங்கு 170 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை ( சுமார் 540 கோடி ரூபாய் ) முதலீடு செய்ய இருக்கிறது. ஸ்டேட் பேங்க், ஐ.ஏ.ஜி., இணைந்து நடத்தும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முதலில் ஐ.ஏ.ஜி.,26 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என்றும் பின்னர் அது 49 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அடுத்த வருடத்தில் இருந்து இந்த நிறுவனம் செயல்பட துவங்கும் என்றும் அது தெரிவித்திருக்கிறது. பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் இன்னும் 10 வருடங்களில் இன்சூரன்ஸ் துறை 15 – 20 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கும் என்று ஐ.ஏ.ஜி.,யின் தலைமை செயல் அதிகாரி மைக்கேல் வில்கின்ஸ் தெரிவித்தார். ஆசியாவிலேயே இன்சூரன்ஸ் துறையில் இந்தியாதான் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கிறது. எங்களுக்கு ஏற்கனவே தாய்லாந்து மற்றும் மலேஷியாவில் கிளைகள் இருக்கின்றன.இந்தியா மற்றும் சீனாவிலும் நாங்கள் நுழைய திட்டமிட்டிருக்கிறோம் என்றார் அவர். இந்த கூட்டு முயற்சிக்கு இந்திய இன்சூரன்ஸ் ஓழுங்குமுறை ஆணையம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

நிப்டி உயர்ந்தும் சென்செக்ஸ் குறைந்தும் முடிந்த பங்கு சந்தை

மும்பை : மும்பை பங்கு சந்தை இன்று தள்ளாடியபடியே இருந்தது. அதிகம் உயராமலும் அதிகம் குறையாமலும் இருந்த பங்கு சந்தையில், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 12.09 புள்ளிகள் மட்டும் ( 0.14 சதவீதம் ) குறைந்து 8,903.12 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 14.80 புள்ளிகள் மட்டும் ( 0.55 சதவீதம் ) உயர்ந்து 2,708.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டி 2,700 புள்ளிகளை எட்ட பல முறை முயன்று, பின்னர் 2,700 புள்ளிகளுக்கு மேலேயே நிலை கொண்டு முடிந்திருக்கிறது. இன்று சர்வதேச அளவில் பங்கு சந்தைகள் அப்படியும் இப்படியுமாக இருந்தது. ஆசிய பங்கு சந்தைகள் குறைந்து முடிந்திருந்தாலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்கு சந்தைகள் உயர்ந்து இருந்தன. சத்யம், ஐசிஐசிஐ பேங்க், டி.எல்.எஃப், எம் அண்ட் எம், எஸ்.பி.ஐ.,யுனிடெக், சுஸ்லான் எனர்ஜி,டாடா கம்யூனிகேஷன் ஆகியவை 3 – 9 சதவீதம் குறைந்திருந்தன. ரிலையன்ஸ் இன்ப்ஃரா, மாருதி சுசுகி, டாடா பவர், டி.சி.எஸ்., பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் பவர், கெய்ல், நால்கோ, ஐடியா செல்லுலார், ஹெச்.சி.எல்.டெக்., ஆகியவை 2.5 – 6 சதவீதம் உயர்ந்திருந்தன

பங்கு வர்த்தகத்தில் தேக்க நிலை
ரியல் எஸ்டேட் துறை நிறுவன பங்குகளின் விலை கடும் வீழ்ச்சி

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால், உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நம் நாட்டின் பங்கு வர்த்தகத்திலும் சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
நான்கு நிறுவனங்கள்
இதனையடுத்து, இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரையிலான காலத்தில், டீ.எல்.எஃப்., யூனிடெக், ரஹேஜா குழுமம், ஹவுசிங் டெவலப்மெண்ட் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகிய நான்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களின், நிறுவனர்களின் நிகர சொத்து மதிப்பு (பங்குகளின் சந்தை மதிப்பு) மொத்தம் சுமார் 3,300 கோடி டாலர் (சுமார் ரூ.1,50,000 கோடி) சரிவடைந்துள்ளது.
இதில், ரியல் எஸ்டேட் துறையில் முதலிடத்தில் உள்ள டீ.எல்.எஃப். நிறுவனத்தின் நிறுவனர் கே.பி.சிங்கின் நிகர சொத்து மதிப்பு மட்டும் 2,220 கோடி டாலர் (ரூ.1,06,560 கோடி) சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யூனிடெக் நிறுவனத்தின் நிறுவனர் ரமேஷ் சந்திராவின் பங்குகளின் சந்தை மதிப்பு 860 கோடி டாலர் (ரூ.41,280 கோடி) குறைந்துள்ளது. ரஹேஜா நிறுவனரின் நிகர சொத்து மதிப்பு 150 கோடி டாலர் (ரூ.7,200 கோடி) குறைந்துள்ளது.
‘சென்செக்ஸ்’
சென்ற வெள்ளிக்கிழமை அன்று நாட்டின் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. அன்றைய தினத்தில் ‘சென்செக்ஸ்’ 464.20 புள்ளிகள் அதிகரித்து இருந்தது. இந்நிலையிலும், யூனிடெக் நிறுவன பங்கின் விலை 9 சதவீத அளவிற்கும், டீ.எல்.எஃப்., ஹவுசிங் டெவலப்மெண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (எச்.டீ.ஐ.எல்) மற்றும் அன்சால் ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகளின் விலை சராசரியாக 3&4 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இந்நிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளின் விலையை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், கட்டுமானப் பணிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் உருக்கு மற்றும் சிமெண்டு ஆகியவற்றின் விலையும் குறைந்து வருகிறது. இந்நிலையில், கடனிற்கான வட்டி விகிதங்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளின் விலை அதிக அளவில் குறைய வாய்ப்பில்லை என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவில் 2000 புதிய கடைகள்: சோனி திட்டம்
டெல்லி: இந்தியா முழுவதும் வருகிற நிதியாண்டுக்குள் தனது சில்லறைக் கடைகளின் எண்ணிக்கையை 2000மாக உயர்த்த சோனி கம்ப்யூட்டர் என்டர்டெய்ன்மென்ட் ஈரோப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் இந்திய மேலாளர் அதிந்திரியா போஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது 1500 சில்லறைக் கடைகள் உள்ளன. இவற்றை 2000 மாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு மார்ச் மாத்திற்குள் இந்த இலக்கை அடைவோம்.

இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களை நாங்கள் சிறந்த புதிய மார்க்கெட்டாக கருதுகிறோம்.

பஞ்சாப் மாநிலத்தில் எங்களது தயாரிப்புகளுக்கு நல்ல கிராக்கியும், வரவேற்பும் உள்ளது. அதேபோல பிற மாநிலங்களிலும் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் எங்களது படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.இப்படிப்பட்ட மார்க்கெட்டை நாங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள இலக்கு வைத்துள்ளோம்.

உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் இதுவரை எங்களுக்குப் பாதிப்பு ஏதும் இல்லை. முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டில் 7 மடங்கு வியாபாரம் நடந்துள்ளது. இந்த ஆண்டும், 3 முதல் 4 மடங்கு அளவுக்கு வியாபாரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ரூ. 9,490 விலையில், புதிய பி.எஸ்.பி. 3000 சீரிஸ் தொடரை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் அதி நவீன எல்.சி.டி இடம் பெற்றிருக்கும். இதன் மூலம் மிக துல்லியமாக பார்க்க முடியும்.  மேலும் இதனுடன் பில்ட் இன் மைக்ரோபோனும் அடங்கியிருக்கும்.

அடுத்த மாதம் 80 ஜிபி பிஎஸ்3 அறிமுகப்படுத்தப்படும்.

எங்களது நிறுவனம் பிளேஸ்டேஷன்3, பிளேஸ்டேஷன்2, பிளேஸ்டேஷன் போர்ட்டபிள், பிளேஸ்டேஷன் நெட்வொர்க் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் ஆகியவற்றை ஐரோப்பா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஓசியானியா ஆகிய பிரதேசங்களில் 102 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது என்றார் அவர்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: