52,000 ஊழியர்களை குறைக்கிறது சிட்டி குரூப்

நியுயார்க் : சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாகவும், அமெரிக்க வங்கிகளில் ஏற்கனவே இருக்கும் கடும் நிதி நெருக்கடி காரணமாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சிட்டி குரூப், உலக அளவிலான அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 52,000 பேரை ( 14 சதவீதம் ) குறைக்கிறது. இதன் மூலம் அதற்கு ஏற்படும் செலவில் 20 சதவீதத்தை குறைக்கலாம் என்று அது கணக்கிட்டுள்ளது. சிட்டி குரூப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் இந்தியரான விக்ரம் பண்டிட், ஏற்கனவே கொஞ்சம் பேரை வேலையில் இருந்து நீக்கியது மற்றும் சிட்டி பேங்க்கின் சில துறைகளை மற்றவர்களுக்கு விற்றதன் மூலம் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 23,000 பேரை குறைத்திருந்தார். செப்டம்பரில் இவர்களை குறைத்ததற்குப்பின் அதன் ஊழியர்கள் எண்ணிக்கை 3,52,000 ஆக இருந்தது. இப்போது அதிலிருந்தும் 52,000 பேரை குறைப்பதால் இனிமேல் அதன் உலக அளவிலான ஊழியர்கள் எண்ணிக்கை 3,00,000 ஆக குறைந்து விடும். இந்த நடவடிக்கைகள் குறித்து விரைவில் விக்ரம் பண்டிட் அதன் ஊழியர்களுக்கு அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆட்குறைப்பு மூலம் 2009 ம் ஆண்டு, அதன் செலவில் 12 பில்லியன் டாலர்களை குறைக்க அவர் முடிவு செய்திருக்கிறார். கடந்த நான்கு காலாண்டுகளில் சிட்டி குரூப்பிற்கு ஆன மொத்த செலவு 62 பில்லியன் டாலர்கள். கடந்த வாரத்தில் மட்டும் நியுயார்க் பங்கு சந்தையில் சிட்டி குரூப்பின் பங்கு மதிப்பு 19 சதவீதம் குறைந்திருக்கிறது

ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் பஸ்: டாடா – ஐ.எஸ்.ஆர்.ஓ., புதிய திட்டம்

பெங்களூரு: ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் பஸ்சை உருவாக்குவதில், டாடா

நிறுவனத்துடன் இணைந்து, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஐ.எஸ்.ஆர்.ஓ.,) ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஐ.எஸ்.ஆர்.ஓ., தலைவர் மாதவன் நாயர் கூறியதாவது:ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில், திரவ வடிவிலான ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இதில், ஐ.எஸ்.ஆர்.ஓ., நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது. அந்த அடிப்படையில், டாடா நிறுவனத்துடன் இணைந்து, சுற்றுச் சூழலுக்கு உகந்த வாகன தயாரிப்பில் ஈடுபட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த விஷயத்தில், இன்ஜினின் வடிவத்தை ஐ.எஸ்.ஆர்.ஓ., தீர்மானித் துள்ளது. இன்ஜினின் மாதிரி வடிவமும் தயார் நிலையில் உள்ளது. திட்டத்தின் வாகனப் பிரிவு தயாரிப்பை, டாடா நிறுவனம் பார்த்துக் கொள்ளும். இந்த புதிய முறையில் தயாரிக்கப்படும் முதல் வாகனம் அடுத்த ஆண்டு சாலைகளில் ஓடும்.மொத்தத்தில் இந்த புதிய ரக வாகன தயாரிப்பில், திரவ ஹைட்ரஜன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்தியா சொந்தமாக கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 2009ம் ஆண்டின் முதல் பகுதியில், இந்த இன்ஜின் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும்.இவ்வாறு மாதவன் நாயர் கூறினார்.ஹைட்ரஜனில் இயங்கும் பஸ், தயாரிக்கும் திட்டத்திற்கு தலைமை வகிக்கும் ஞானகாந்தி கூறியதாவது:எரிபொருள் செல்களுக்குள் ஹைட்ரஜனை செலுத்தும் போது, அது 80 கிலோ வாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. அதன்மூலம் அதிக சுமை கொண்ட பஸ்சையும் ஓட்டிச் செல்ல முடியும். இந்த பஸ், சி.என்.ஜி.,யில் இயங்கும் பஸ் போல இருக்கும். எட்டு பாட்டில்களில் அதிக பிரசரில் அடைக்கப்பட்ட ஹைட்ரஜனானது, வாகனத்தின் மேற்

பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு நாள் இரவும் அந்த ஹைட்ரஜன் வாயு பாட்டில்களை மாற்றிக் கொள்ள முடியும்.ஹைட்ரஜனில் பஸ்சை இயக்கும் போது ஆகும் செலவானது, டீசலில் இயங்கும் பஸ்சுக்கு ஆகும் செலவை விட அதிகமாக இருக்கும். ஆனால், இந்த வகை பஸ் சுற்றுச் சூழலுக்கு உகந்தது. மாசு ஏற்படுத்தாது. இந்த வகை பஸ்கள் அறிமுகமானால், நகரங்களில் வாகனங்களால் மாசு ஏற்படுவது குறையும்.இவ்வாறு ஞானகாந்தி கூறினார்

ஐந்தாவது முறையாக பெட்ரோல்,டீசல் விலையை குறைத்தது மலேஷியா

கோலாலம்பூர் : ஐந்தாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மலேஷியா குறைத்திருக்கிறது. இன்று செவ்வாய்கிழமையில் இருந்து பெட்ரோல் விலையை 7 சதவீதமும் டீசல் விலையை 7.3 சதவீதமும் குறைப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருக்கிறது. ஏற்கனவே 2.15 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று முதல் 2 ரிங்கிட்டுக்கு விற்கப்படும் என்றும், 2.05 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் டீசல் இனிமேல் 1.90 ரிங்கிட்டுக்கு விற்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. ஒரு ரிங்கிட் என்பது நம்நாட்டு கணக்கில் சுமார் ரூ.13.85. அப்படியானால் அங்கு பெட்ரோல் விலை நம்நாட்டு கணக்கில் சுமார் ரூ.27.70 தான். சர்வதேச சந்தையில் கடந்த ஜூலை மத்தியில் பேரல் ஒன்றுக்கு 147.27 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 56 டாலருக்கும் குறைவான விலையில்தான் விற்கப்படுகிறது.

ஏர் – இந்தியாவுக்கு ரூ.49,000 கோடி டாலர் கடன் : ஐ.ஓ.பி.கொடுக்கிறது

மும்பை : கடும் நிதி நெருக்கடியால், அதன் அன்றாட நடவடிக்கைகளுக்கும் அதன் வளர்ச்சி திட்டங்களுக்கும் பணம் இல்லாமல் இருக்கும் இந்திய அரசுக்கு சொந்தமான ஏர்-இந்தியாவுக்கு இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ( ஐ.ஓ.பி.) 100 கோடி டாலர் ( ரூ.49,000 கோடி ) கடன் கொடுக்க முன்வந்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான கம்பெனியான, நரேஷ் கோயலுக்கு சொந்தமான ஜெட் ஏர்வேஸ்க்கு ரூ.500 கோடி கடன் கொடுக்கவும் ஐ.ஓ.பி., ஒத்துக்கொண்டிருக்கிறது. ஏர்-இந்தியா 23 புதிய விமானங்களை வாங்கவும் இருக்கிறது. இதற்கு தேவையான நிதிக்காக, லண்டனை சேர்ந்த பார்க்ளேஸ் பேங்க், ஐரோப்பிய வங்கியானகே.எஃப்.டபிள்யூ மற்றும் ஜெர்மன் வங்கியான டாய்ச்சே பேங்க் ஆகியவற்றுடன் ஏர்-இந்தியா பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கிறது. அது சம்பந்தமான ஒப்பந்தம் இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது. ஏர்பஸ் ஏ 319/ 320 விமானங்கள் 23 க்கு ஏற்கனவே ஏர்-இந்தியா ஆர்டர் கொடுத்திருக்கிறது. ஐ.ஓ.பி.,யில் 500 கோடி ரூபாய் கடன் வாங்குவது போதாது என்று ஜெட் ஏர்வேஸ், அபுதாபி அரசாங்கத்திற்கு சொந்தமான முபாதலா டெவலப்மென்ட் கம்பெனி என்ற நிதி நிறுவனத்திடமும் 1,000 கோடி ரூபாய் கடன் பெறுகிறது. இந்த கடன் சம்பந்தமாக ஐ.ஓ.பி., தகவல் எதையும் சொல்ல மறுத்து விட்டது. ஏர்-இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ்க்கு ஐ.ஓ.பி.,கொடுக்கப்போகும் கடனுக்கு எத்தனை சதவீதம் வட்டி வசூலிக்கப்படும் என்பது போன்ற விபரம் தெரியவில்லை என்றாலும், சாதகமான வட்டியைத்தான் வசூலிக்கும் என்று சொல்லப்படுகிறது. பயணிகளின் வரத்து குறைந்திருப்பது, விமான எரிபொருள் விலை இன்னமும் உயர்ந்திருப்பது போன்ற காரணங்களால் இந்தியாவில் இருக்கும் எல்லா விமான கம்பெனிகளுமே கடும் நஷ்டத்தில்தான் இயங்கிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்

குளிர்பான விலையை உயர்த்த பெப்ஸி திட்டம்
டெல்லி: கொக கோலா விலையேற்றத்தைத் தொடர்ந்து, மற்றொரு முன்னணி தயாரிப்பான பெப்ஸியின் விலையும் உயர்கிறது.
சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ள பொருளாதார வீழ்ச்சி வணிகத்துறையை பெரிதும் பாதித்துள்ளது.
குளிர்பான வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் பெப்ஸி நிறுவனமும் இதில் தப்பவில்லை. கடந்த காலாண்டைவிட, தற்போது பெரும் நஷ்டத்தை இந்த நிறுவனம் சந்தித்து வருகிறது.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, பணியாளர் குறைப்பு மற்றும் விலையேற்றம் ஆகிய இரு ஆயுதங்களைக் கையிலெடுத்துள்ளது.

ஏற்கனவே கொக கோலா நிறுவனம் தனது குளிர்பானம் மற்றும் பாட்டில் குடிநீ்ர் தயாரிப்புகள் மீதான விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்தியாவுக்கான பெப்ஸி தலைவர் சஞ்சீவ் சாதா கூறுகையில், இந்தியாவில் பெப்ஸி தயாரிப்புகள் சீரான விற்பனையில் உள்ளன. குளிர்பானம் மற்றும் உணவு தயாரிப்புகள் ஒரு கூரையின் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு ஜனவரி முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும்.

குளிர்பானம் மற்றும் ஸ்நாக்ஸ் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க பரிசீலித்து வருகிறோம். அதே சமயம், குறைந்த அளவில் விலையை உயர்த்தி, தயாரிப்புகளின் தரத்தை மேலும் உயர்த்துவோம்.

பொதுவாக வாடிக்கையாளர்கள் எப்போதுமே ஆரோக்கியமான தயாரிப்புகளை கேட்பதில்லை. சுவையாகவும், வேடிக்கையாகவும் உள்ள தயாரிப்புகளையும் வாடிக்கையளாகள் விரும்புகின்றனர். ஆனால் ஆரோக்கியமான தயாரிப்புகள் வழங்கப்பட வேண்டும் அடுத்த 3 ஆண்டுகளில் புதிய தயாரிப்புகள், மார்க்கெட்டிங் கட்டமைப்பு, ஆய்வு மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்காக கூடுதலாக 500 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளோம். நிறுவனத்தின் சர்வதேச தலைவர் இந்திரா நூயி கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்துபோது இதை அறிவித்தார் என்றார்.

 

சீனாவுடன் அணு யுத்தம் மூளும் வாய்ப்புள்ளது: பரத் கர்னாட்

மும்பை: இயற்கை வளங்களை அடைவதற்காக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அணு யுத்தம் கூட மூளும் வாய்ப்பு உள்ளதாக முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினரான பரத் கர்னாட் கூறியுள்ளார்.

இந்தியாவின் அணுக் கொள்கை என்ற நூலை பரத் கர்னாட் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தியாவின் ராணுவ நிபுணர்கள், தங்களது கவனத்தை பாகிஸ்தானிலிருந்து சீனாவுக்கு திருப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.

மும்பை பங்குச் சந்தையில் உள்ள முதலீடுகளில் நான்கில் ஒரு பங்குதான் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ஜிடிபி. எனவே பாகிஸ்தான் நமக்கு நிச்சயம் மிரட்டலே கிடையாது.

ஆனால் உலகெங்கிலும் உள்ள இயற்கை வளங்களை அடைவது தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்கனவே போட்டி தொடங்கி விட்டது.

இந்தியாவுக்கு எதிராக தனது ராணுவ மற்றும் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்த தொடங்கி விட்டது சீனா.

தற்போது யார்லங்- சாங்கோ ஆற்றை குறி வைத்துள்ளது சீனா. இந்த ஆறுதான் இந்தியாவுக்குள் பிரம்மபுத்திரா நதியாக நுழைகிறது.

திபெத்தில் இந்த ஆற்றுக்கு குறுக்கே அணையைக் கட்டி அதை திருப்பிவிட சீனா முயன்று வருகிறது. இந்த ஆற்றில் சீனா கை வைத்தால், அது அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களையும், வங்கதேசத்தையும் மிகக் கடுமையாக பாதிக்கும். இங்கெல்லாம் குடிநீருக்குப் பெரும் பஞ்சம் ஏற்படும்.

இதுதவிர, வட கிழக்கில் உள்ள நக்சலைட்டுகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் சீனா தொடர்ந்து உறுதியான ஆதரவை அளித்து வருகிறது. இது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறும்.

திபெத் இந்தியாவுக்கு முக்கியம்:

தலாய் லாமாவின் பாதையை பின்பற்ற விரும்பாத, புதிய தலைமுறை திபெத்தியர்களை உறுதியாக ஆதரிக்கும் தைரியம் இந்தியாவுக்கு வர வேண்டும்.

திபெத் என்ற நடுநிலைப் பிராந்தியம் (Buffer) இருப்பது இந்தியாவுக்கு முக்கியமானது. உண்மையி்ல் திபெத்துக்குள் சீனா ஆக்கிரமித்து நுழைந்த பிறகுதான் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் அரசியல் சூழ்நிலை தற்போது பலவீனமானதாக உள்ளது. ஒருவேளை இந்தியா மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால், திருப்பி அடிக்கும்படி அரசு உத்தரவிடுமா என்பதே சந்தேகம்தான்.

பனிப்போர் காலத்தின்போது அணு ஆயுதங்களை தாக்குவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தன வல்லரசுகள். ஆனால் உண்மையில் அவை பயன்படுத்தப்படவில்லை. அதே உத்தியைத்தான் நமது நாடும் தற்போது கையாள வேண்டும்.

இந்தியா, வீரர்களால் கையாளக் கூடிய வகையிலான எளிய அணு குண்டுகளைத் தயாரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்திய படையில், அணு ஆயுத போர்க் கப்பல், 5000 கிலோமீட்டர் தொலைவில் சென்று தாக்கும் அக்னி ஏவுகணை, ரஷ்யாவின் டி-160 பிளாக்ஜாக் டாங்குகள் ஆகியவற்றை சேர்க்க 2012ம் ஆண்டு ஆகி விடும் என்றார் கர்னாட்.

9,000 புள்ளிகளுக்கும் கீழே சென்றது சென்செக்ஸ்

மும்பை : சர்வதேச அளவில் பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்து இந்தியாவிலும் பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு கீழும் நிப்டி 2,700 புள்ளிகளுக்கும் கீழும் சென்று விட்டது. டெலிகாம், டெக்னாலஜி, பேங்கிங், பவர், மெட்டல், கேப்பிட்டல் குட்ஸ், மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் பெரிய சரிவை சந்தித்தன. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சரிந்து கொண்டிருந்த சென்செக்ஸ் பகல் வேளையில் 8,871.71 புள்ளிகள் வரை சென்றது. பின்னர் ஓரளவு மீண்டு வந்து, வர்த்தக முடிவில் 353.81 புள்ளிகளை ( 3.81 சதவீதம் ) இழந்து 8,937.20 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2,664.30 புள்ளிகள் வரை சென்று, பின்னர் 116.40 புள்ளிகளை ( 4.16 சதவீதம் ) இழந்து 2,683.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ, என்டிபிசி, ஏசிசி, டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், நால்கோ, யூனிடெக், ஐடியா செல்லுலார் மற்றும் ஹெச்சிஎல் டெக் ஆகியவை 6.8 – 13 சதவீதம் குறைந்திருந்தது. இருந்தாலும் ரான்பாக்ஸி, ஹீரோ ஹோண்டா, சன் பார்மா பங்குகள் உயர்ந்திருந்தன. உலக அளவில் பங்கு சந்தைகளில் இன்று வீழ்ச்சியே காணப்பட்டது. வளர்ந்த நாடுகள் பலவற்றில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வங்கிகள் உள்பட பல பெரிய நிறுவனங்கள் வேலை இழப்பு செய்தது போன்ற காரணங்களால் பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஆசிய சந்தைகளான ஷாங்கை 6.31 சதவீதம், ஹாங்செங்க் 4.54 சதவீதம், ஜகர்த்தா, ஸ்டெயிட் டைம்ஸ், தைவான், கோஸ்பி, போன்றவை 3 – 4 சதவீதம், நிக்கி 2.28 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. ஐரோப்பிய பங்கு சந்தைகளான எஃப்.டி.எஸ். இ 80 புள்ளிகள், சி.ஏ.சி., மற்றும் டி.ஏ.எக்ஸ்., 62 புள்ளிகள் மற்றும் 64 புள்ளிகள், குறைந்திருந்தன. அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் 113 புள்ளிகள், நாஸ்டாக் 23.50 புள்ளிகள் குறைந்திருந்தன. உலகின் மிகப்பெரிய வங்கிகளான ஹெச்.எஸ்.பி.சி.,வங்கி 500 பேரையும் சிட்டி குரூப் 52,000 பேரையும் அடுத்த வருடத்தில் வேலையில் இருந்து நீக்குவதாக இன்று அறிவித்திருக்கிறது.

2009 ல் இந்தியா வருகிறது போர்ச்சின் பனமேரா சொகுசு கார்

மும்பை : பிரபல ஜெர்மன் கார் நிறுவனமான போர்ச், அதன் அதி நவீன சொகுசு கார் பனமேரா வை 2009ல் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. நான்கு டோர், நான்கு சீட்டுடன் இருக்கும் பனமேராவை நாங்கள் 2009 ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம் என்று போர்ச் இந்தியா மேலாண் இயக்குனர் ராட் வாலஸ் தெரிவித்தார். அந்த சொகுசு காரை 2009 கடைசியில் உலக அளவில் அறிமுகப்படுத்தும்போது, இந்தியாவிலும் அறிமுகப்படுத்துவோம் என்றார் வாலஸ். இப்போது எங்களது வேலை என்னவென்றால், இந்திய வாகன பிரியர்களிடம் அது குறித்து எடுத்து சொல்ல வேண்டும் மற்றும் எங்களுக்கு இங்கு நிறைய டீலர்களை நியமிக்க வேண்டும் என்பதுதான். இப்போது எங்களுக்கு மும்பை மற்றும் புதுடில்லியில் மட்டும்தான் டீலர்கள் இருக்கிறார்கள். இன்னும் இரு வாரங்களில் லூதியானாவில் டீலரை நியமித்து விடுவோம். அது தவிர இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் பெங்களுரு, ஐதராபாத் மற்றும் சென்னையிலும், இரண்டு ஆண்டுகளில் 10 – 11 நகரங்களிலும் டீலர்களை நியமித்து இருப்போம் என்றும் சொன்னார்.

சீனாவில் நான்காவது டெலிவரி மையத்தைத் திறந்த டிசிஎஸ்
டெல்லி: டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனம் சீனாவில் தனது நான்காவது டெலிவரி மையத்தைத் திறந்துள்ளது.
சீனாவின் தியான்ஜின் நகரில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 300 ஊழியர்கள் பணியாற்றுவார்கள். ஏற்கனவே பெய்ஜிங், ஷாங்காய், ஹாங்ஷோ ஆகிய நகரங்களிலும் டிஎசிஎஸ்ஸின் டெலிவரி மையங்கள் உள்ளன.

ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளுக்கான பிபிஓ பணிகளை தியான்ஜின் மையம் கவனித்துக் கொள்ளும் என டிசிஎஸ் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது

 

பாதிக்கப்பட்ட துறைகளுக்கு சுங்க வரி குறைப்பு!

டெல்லி: பொருளாதாரம் பாதிக்காமல் தடுக்க நாட்டின அனைத்துப் பிரிவு வர்த்தகர்களும், தொழில் நிறுவனங்களும் விலையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக வாகன உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் கட்டணங்களை குறைக்க வேண்டும் சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம் உலக பொருளாதார மந்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கான சுங்கத் தீர்வையைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் இன்று உறுதி அளித்துள்ளார்.

டெல்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச பொருளாதார அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்ற சிதம்பரம் கூறியதாவது:

விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தையும், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகளையும், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் அவற்றின் விலையையும் உடனடியாகக் குறைக்க வேண்டும்.

நாட்டின் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கவும், மோசமான விளைவுகளை முன்கூட்டியே தடுக்கவும்தான் இந்த வேண்டுகோளை முன் வைக்கிறேன். இப்போது லாபம் மட்டுமே முக்கியமல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், ஸ்திரத்தன்மையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் சிதம்பரம்.

 

பங்குகளில் முதலீடு செய்ய மக்களிடம் ஏன் ஆர்வமில்லை? ஆய்வு நடத்த செபி முடிவு

பங்குச் சந்தை முதலீட்டில் மக்களிடம் ஏன் ஆர்வம் இல்லை என்று முதன் முறையாக விரிவான ஆய்வு நடத்த இந்திய பங்கு பரிமாற்ற வாரியம் (செபி) முடிவு செய்துள்ளது.
செபி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது. பங்குகளில் முதலீடு செய்வதில் இருந்து முதலீட்டாளர்கள் விலகி இருப்பதற்கான காரணத்தை அறிய விரிவான ஆய்வு செய்யப்படும் என்கிறது அது. இந்த நிதி ஆண்டில் இதற்கான பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குகள், கடன் பத்திரங்கள், மியூச்சுவல் பண்ட்கள் உட்பட நிறுவனப் பங்குகள் தொடர்புடைய முதலீடுகளில் இப்போது முதலீடு செய்து வருவோர் எண்ணிக்கையை இந்த ஆய்வு மூலம் அறியவும் செபி திட்டமிட்டுள்ளது. இதுவரை முதலீட்டாளர்கள் எண்ணிக்கை குறித்து தெளிவான புள்ளிவிவரம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செபி அறிக்கையின்படி, பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் மும்பை, டெல்லி, கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் 60 சதவீத இடம் வகிக்கின்றனர்.
உதாரணமாக, தேசிய பங்குச் சந்தையின் மொத்த வர்த்தகத்தில் மும்பை முதலீட்டாளர்களின் பங்கு மட்டும் 40 சதவீதம். டெல்லி 10.14 சதவீதத்துடன் அடுத்த இடத்திலும், கொல்கத்தா 7.59 சதவீதத்துடன் 3வது இடமும் வகிக்கின்றன.
மும்பை பங்குச் சந்தையைப் பொறுத்தவரை மும்பை முதலீட்டாளர்கள் 23.44 சதவீத பங்கு வகிக்கின்றனர். 1.05 சதவீதத்துடன் அகமதாபாத் 2வது இடத்தில் உள்ளது. பங்குச் சந்தை வளர்ந்து வரும் நிலையிலும் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 3 முதல் 4 சதவீதத்தினர் மட்டுமே பங்கு முதலீட்டில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளுக்கு விண்ணப்பிப்போர்கூட நாட்டின் முன்னணி 10 நகரங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமே உள்ளனர்.
எனினும், 2005-06ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2007-08ம் ஆண்டில் பங்குச் சந்தை வர்த்தகம் 76.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று செபி அறிக்கை தெரிவிக்கிறது.
வெளியேறுகிறார் யாஹூ தலைமை நிர்வாகி!
தைபே: யாஹூ நிறுவனத்திலிருந்து அதன் நிறுவனர்களில் ஒருவரும் தலைமை நிர்வாகியுமான ஜெர்ரி யாங் பதவி விலகுகிறார்.
கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான வர்த்தக பேரத்தை வலிந்து முறித்துக் கொண்டதால் கோபமடைந்த யாஹூ இயக்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கோபமே அவரைப் பதவி விலக வைத்துள்ளதாகக் கூறுகின்றனர் சர்வதேச வர்த்தக நிபுணர்கள்.

யாங் வெளியேறினாலும் சீனாவின் அலிபாபா நிறுவனத்துடனான 1 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்திலிருந்து யாஹூ பின்வாங்காது என்றே கருதப்படுகிறது.

தைவானைச் சேர்ந்த ஜெர்ரி யாங், யாஹூவை நிறுவியவர்களில் ஒருவர். அலிபாபா நிறுவனத்துக்கு மிக நெருக்கமானவராகத் திகழ்ந்தவர். அலிபாபா நிறுவனத்தின் பெரும்பாலான வர்த்தக நிகழ்வுகளில் இவரும் உடன் இருந்துள்ளார். சீனாவின் தீவிர ஆதரவாளர்.

இவரது விலகலால் அலிபாபாவில் யாஹூவுக்கிருந்த 40 சதவிகித பங்குகள் விற்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஆரம்பத்தில் நிலவியது.

ஆனால் சீனாவில் இன்று முன்னணியில் உள்ளது அலிபாபா நிறுவனம். இதில் உள்ள தனது 40 சதவிகித பங்குகளை விற்க யாஹூ முனைந்தால் அது அவர்களுக்குத்தான் பெரும் நஷ்டம் என்பதால், புதிதாக வரும் தலைமை நிர்வாகி அலிபாபாவுடன் உறவைத் தொடர்வார் என்றே எதிர்பார்க்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள்.

 

 

ஏர்லைன்ஸ் ஊழியருக்கு கிரெடிட் கார்டு தர மறுப்பு

நீங்கள் ஏதாவது நிதி நிறுவனம், விமான நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்கிறீர்களா? ஆம் என்றால் உங்களுக்கு கிரெடிட் கார்டு தர வங்கிகள் தயாராக இல்லை. ஏற்கெனவே பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், சார்டர்டு அக்கவுன்டன்ட்டுகள், போலீஸ்காரர்கள், ராணுவத்தினர், அரசியல்வாதிகளுக்கு வங்கிகள் கிரெடிட் கார்டு தர விரும்புவது இல்லை.
மற்றபடி எல்லா துறையினருக்கும் கேடகாமலேயே கிரெடிட் கார்டு அளித்து வந்தன. இந்நிலை இப்போது மாறிவிட்டது. அண்மையில் டெலலியில் ஒரு நிதி நிறுவனத்தை சேர்ந்த பல ஊழியர்கள் கிரெடிட் கார்டு கேட்டு வங்கிகளிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால் அவர்களுக்கு தர முடியாது என வங்கிகள் கூறிவிட்டன. வங்கிகள் அல்லாத நிதி சேவை நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு கிரெடிட் கார்டு தர வேண்டாம் என எச்எஸ்பிசி வங்கி கூறியுள்ளது. இது மட்டுமல்லாமல், பல அரசு, தனியார் வங்கிகளும் இதே முடிவை எடுத்துள்ளன. மும்பையை சேர்ந்த அரசு வங்கி ஒன்று, ஒரு தனியார் வங்கி விமான நிறுவனம், கால்சென்டர்களில் பணிபுரிவோருக்கு கிரெடிட் கார்டு தர வேண்டாம் என முடிவு செய்துள்ளது.

ஜப்பான், ஐரோப்பா நிறுவனங்களை கையகப்படுத்த இன்போசிஸ் முயற்சி

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள பெரிய ஐடி நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
  இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இதைப்பற்றி தெரிவிக்கையில் “திறம்பட செயல்படும் பெரிய நிறுவனங்களை கையப்படுத்தும் முயற்சியில் எங்கள் நிறுவன குழு செயல்பட்டு வருகிறது. நல்ல முன்னேற்றம் மற்றும் லாபம் அடைந்து வளர்ந்து வரும் நிறுவனங்களை கையகப்படுத்துவதே எங்களின் குறிக்கோள். கன்சல்டன்சி மற்றும் அவுட்சோர்சிங் துறையில் மேலும் முன்னேற்றம் அடைய ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வது நல்ல திட்டமாக மற்றும் முயற்சியாக அமையும். எங்கள் நிறுவனத்திற்கும் பொருளாதார நிதி நெருக்கடி இருக்கிறது. இருந்த போதும் ஆட்குறைப்பில் ஈடுபடவில்லை. மாறாக செலவுகளை குறைக்கும் முறையை கையாண்டு வருகிறோம். ஏப்ரல் மாதத்திற்குள் 25000 புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளோம். அமெரிக்காவை காட்டிலும், ஐரோப்பாவில் முதலீடு செய்வது இனி நல்ல முடிவாக இருக்கும் என்று கருதுகிறோம். அமெரிக்காவில் அவுட்சோர்சிங் துறைக்கு ஆபத்து ஏற்படும் நிலை இன்னும் உருவாகவில்லை, அப்படி ஒரு நிலை உருவாகாமல் இருக்க வேண்டும். ஒபாமாவின் தலைமையில் என்ன நடக்கும் என்பது பற்றி கருத்து தெரிவிக்க இயலவில்லை. ” என்றார். சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனம் கடந்த சில வாரத்திற்கு முன் இதே போன்ற முடிவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதத்தில் ரூ.47 ஆயிரம் கோடி வாபஸ் : ஆம்பி தகவல்

பங்குசந்தையில் ஏற்பட்டு சரிவை தொடர்ந்து முதலீட்டாளர்கள் கடந்த ஒரே மாதத்தில் மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து ரூ.47 ஆயிரம் கோடியை திரும்பப் பெற்றுள்ளதாக மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கம் (ஆம்பி) தெரிவித்துள்ளது. இது குறித்து ஆம்பியின் மாதாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியால் பங்குச் சந்தை, தொடர்ந்து கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் நஷ்டத்திலிருந்து மீள்வதற்காக கிடைத்தவரை லாபம் என்ற எண்ணத்தில் பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டு முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றன. இதனால் கலக்கமடைந்த சிறு முதலீட்டாளர்களும் தங்கள் கைவசம் உள்ள யூனிட்களை நஷ்டத்தை பொருட்படுத்தாமல் அதிக அளவில் விற்கத் தொடங்கி உள்ளனர். இதனால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த அக்டோபர் மாதத்தில் 5 லட்சம் கோடிக்குக் கீழே சரிந்து, ரூ.4 லட்சத்து 31 ஆயிரத்து 901 கோடியாகி உள்ளது.
பங்குச் சந்தை வீழ்ச்சியால், மதிப்பு குறைந்து ஒரே மாதத்தில் ரூ.97 ஆயிரம் கோடி (18 சதவீதம்) சரிவடைந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும், மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து ரூ.46 ஆயிரத்து 793 கோடியை முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.
இது இந்த நிதியாண்டில் ஒரே மாதத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ள அதிக அளவு தொகையாகும். செப்டம்பர் மாதத்தில் ரூ.45 ஆயிரத்து 655 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக நிலையான வருமானம் தரக்கூடிய திட்டங்களிலிருந்துதான் அதிக அளவு தொகை வெளியில் எடுக்கப்பட்டு வருகிறது.
எனினும், லிக்விட் திட்டங்களில் பணத்தை முதலீட்டாளர்கள் எடுப்பது குறைந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.26,665 கோடியாக இருந்த தொகை, அக்டோபரில் ரூ.19,675 கோடியாகக் குறைந்துள்ளது. மேலும் கடந்த மாதத்தில் இத்திட்டங்களில் ரூ.3 ஆயிரத்து 256 கோடி முதலீடு செய்துள்ளனர்.
பங்குச் சந்தை வீழ்ச்சியால் சொத்து மதிப்பு சரிந்தது, முதலீட்டாளர்கள் யூனிட்களை விற்றது மற்றும் புதிய திட்டங்களில்
முதலீடு செய்வது குறைந்தது ஆகிய காரணங்களால், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சொத்து மதிப்பு கடந்த மாதத்தில் கடுமையாக சரிவடைந்துள்ளது என டாரஸ் மியூச்சுவல் பண்ட் இயக்குநர் குப்தா தெரிவித்துள்ளார்
2020-ல் நிலவில்கால் பதிப்போம்!
 
 
 
கோவை, நவ.17: வரும் 2020-ம் ஆண்டுக்குள் நிலவில் இந்தியர் கால் பதிப்பர் என சந்திரயான் திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்
“சந்திரயான்-1 விண்கலம் நிலவை முழுவதுமாக ஆராயும் பணியைச் செய்யும். சந்திர யான்-2 விண்கலம் நிலவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மண்ணைத் தோண்டியெடுத்து ஆராயும்’ என்றார்
சந்திரயான்-1 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இறங் கும்வரை அதன் செயல்பாடுக ளைக் கூர்ந்து கவனித்து வந்த மயில்சாமி அண்ணாதுரை, முதலில் தான் பிறந்து வளர்ந்த ஊரான பொள்ளாச்சி தாலுகா கிணத்துக்க டவுக்கு அருகே உள்ள கோதவாடி கிராமத்துக்கு வரவேண்டும் என்று விரும்பினார்
அதன்படியே, கடந்த 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தார்
அப்போது அந்த ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. சொந்த கிராம மக்கள் கொடுத்த வரவேற்பில் திக்குமுக்காடிப்போனார் அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை “தினமணி’க்கு அளித்த சிறப்புப் பேட்டி: சந்திரயான் என்பதன் தனிப்பட்ட பொருள்? “யான்’ என்பதற்கு வாகனம் என்று பொருள். நிலவுக்குச் செல்வ தால் சந்திரயான் எனப் பெயரிட்டோம்
சந்திரயான்-1 விண்கலத்தின் செயல்பாடுகள் என்ன? விஞ்ஞானிகளின் அதீத முயற்சியால் சந்திரயான்-1 விண்கல ஆய்வுக் கருவி வெற்றிகரமாக நிலவில் மோதி இறங்கியுள்ளது
நிலவின் துருவப் பகுதியில் கனிம வளங்கள் பற்றி அது ஆராய்ச்சி செய்யும்
சந்திரயான்-2 விண்கலம் எப்போது அனுப்பப்படும்? என்ன மாதிரி ஆய்வுக்கு அது அனுப்பப்படுகிறது? 2011-12-ல் சந்திரயான் நிலவில் இறங்கும். சந்திரயான்-1 நிலவை முழுமையாக சுற்றி வந்து ஆராயும். ஆனால், சந்திரயான்-2 அப்படி யில்லாமல் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறங்கி, அங்குள்ள மண் ணைத் தோண்டியெடுத்து ஆராயும்
நிலவில் ஏற்கெனவே நடப்பட்டுள்ள கொடிகள் பறக்கின்றன எனவும், அதனால் அங்கு காற்று இருப்பது உறுதி செய்யப்பட் டுள்ளதாகவும் கூறப்படுவது பற்றி? ஒருவேளை கொடி அசையலாம்; ஆனால், பறக்கிறது என்றெல் லாம் சொல்ல முடியாது. கொடியை நடுவது என்பதை விடவும் கொடியை “பேஸ்ட்’ அல்லது “ஃபிக்ஸ்’ பண்ணுவது என்றுதான் சொல்லவேண்டும்
நிலவுக்கு ஆள் உள்ள விண்கலம் அனுப்புவது எப்போது? அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. 2020-ல் நிலவில் இந் தியர் கால் பதித்து விடலாம்
அமெரிக்கா, ரஷியாவுடன் ஒப்பிடும்போது இந்த விஷயத்தில் நாம் எந்த அளவு முன்னேறியிருக்கிறோம்? அவர்கள் நமக்கு முன்னேயே நிலவில் கால் பதித்திருக்கலாம்
ஆனால், நாம்தான் அதை ஆராய ஆரம்பித்திருக்கிறோம் என்ப தால், நாம் அவர்களைவிட அதிகமாக சாதித்திருக்கிறோம் என லாம்
சந்திரயான் திட்டத்தில் ஒரு விஞ்ஞானியாக அப்துல் கலாம் எவ்வாறு உதவினார்? இந்த விஷயத்தில் அப்துல் கலாம் நிறையவே குறிப்புகள் கொடுத் திருக்கிறார். நிலவில் நமது தேசியக் கொடியை ஏற்றுவதற்கான டெக்னிக்கல் ஐடியாவை கொடுத்தது அவர்தான்.
 
 
 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: