3,000 பேரை வீட்டுக்கு அனுப்புகிறது ஜேபி மார்கன் சேஸ் வங்கி

நியுயார்க் : பிரபல அமெரிக்க நிதி வங்கியான ஜேபி மார்கன் சேஸ், அதன் உலக அளவிலான வேலைகளில் இருந்து 3,000 பேரை நீக்க இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் எல்லா நிதி நிறுவனங்களுமே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. இதில் ஜேபி மார்கன் சேஸ் நிதி நிறுவனமும் ஒன்று. சண்டே டெலிகிராப் என்ற பத்திரிக்கை இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஜாப் கட் செய்வது குறித்து அந்த நிறுவனம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. ஜேபி மார்கன் சேஸ் நிறுவனத்தைப் போலவே சிட்டி குரூப் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும் 10 சதவீத பணியாளர்களை குறைக்கிறது. இது குறித்து ஜேபி சாக்ஸ் நிறுவனம் எதுவும் சொல்லவில்லை என்றாலும், ஜூலை மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில் 10 சதவீத பணியாளர்களை குறைக்க இருப்பதாக சொல்லியிருந்தது

சாப்ட்வேர் துறை வளர்ச்சி சரியும்-இன்போசிஸ்
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே கண்டு வந்த இந்திய சாப்ட்வேர் துறையில் சரிவு ஏற்பட ஆரம்பித்துள்ளதாக இன்போசிஸ் துணைத் தலைவர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார்.

டெல்லியில் இந்திய வர்த்தக சபையின் கூட்டத்தில் பேசிய அவர்,

சர்வதேச பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்திய சாப்ட்வேர் துறை தப்ப முடியாது. இதுவரை தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே கண்டு வந்த இந்தத் துறையில் மந்தம் ஏற்பட்டுள்ளது உண்மை தான். விரைவில் சரிவும் ஆரம்பிக்கும். ஆனால், இதையெல்லாம் சமாளிக்கும் பலம் இந்திய சாப்ட்வேர் துறைக்கு உண்டு.

வளர்ச்சி குறையலாமே தவிர ஒரேயடியாக முடங்கிவிடாது. இதனால் இந்தத் துறையில் தொடர்ந்து வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டு தான் இருக்கும். ஆனால், அது கடந்த 5 ஆண்டுகளில் இருந்ததைப் போல இருக்காது.

இந்த ஆண்டுக்கான இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதத்தை நாங்களே குறைத்துவிட்டோம். இந்த ஆண்டில் எங்களது வருவாய் 4.72 பில்லியன் டாலர் முதல் 4.81 பில்லியன் டாலருக்குள் தான் இருக்கும்.

இது போன்ற பொருளாதார நெருக்கடிகள் எந்தத் துறையையும் விட்டு வைக்காது. ஆனால், இதை சமாளித்துக் காட்டியது தான் இந்திய சாப்ட்வேர் துறை. 2001ம் ஆண்டிலும் இதே போன்ற சரிவைத் தான் சந்தித்தோம். ஆனால், அதை வெற்றிகரமாகவே சமாளித்தோம். எங்கள் நிறுவனத்தில் ஊழியர்கள் சேர்ப்பதை நிறுத்தப் போவதி்ல்லை என்றார்.

சர்வதேச அளவில்

தொழில்நுட்ப துறைகளில் வேலை இழப்பு அதிகரிக்கும்

சர்வதேச அளவில், தொழில்நுட்ப துறைகளான தொலைத் தொடர்பு, மின்னணு சாதனங்கள் மற்றும் ஐ.டி. ஆகிய துறைகளில் நடப்பு ஆண்டில் வேலை இழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மேற்கண்ட துறைகளில் 1,80,000 பேர் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சிகாகோவைச் சேர்ந்த ஆலோசனைச் சேவை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டு அக்டோபர் 31&ந் தேதி வரையில் இந்த மூன்று துறைகளிலும் 1,40,422 பேர் வேலை இழந்துள்ளதாக தெரிகிறது. இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் இத்துறைகளில் 69,654 பேர் வேலை இழந்துள்ளனர். சென்ற 2007&ஆம் ஆண்டில் தொழில்நுட்ப துறைகளில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை 1,07,295&ஆக இருந்தது.

சென்ற ஒரே வாரத்தில்

முன்னணி 10 நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு 3.4% சரிவு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
சென்ற வாரத்தில் முன்னணி 10 நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) ரூ.34,423 கோடி குறைந்துள்ளது.
3.4 சதவீதம்
ஆறு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் நான்கு தனியார் துறை நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள முன்னணி 10 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு முந்தைய வார இறுதியில் ரூ.10,15,150 கோடியாக இருந்தது. இது, சுமார் 3.4 சதவீதம் (ரூ.34,423 கோடி) குறைந்து, சென்ற வார இறுதியில் ரூ.9,80,727 கோடியாக சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் ‘சென்செக்ஸ்’ மொத்தம் 5.81 சதவீதம் சரிவடைந்திருந்தது.
இதே காலத்தில், சுரங்கப் பணியில் ஈடுபட்டு வரும், பொதுத் துறையைச் சேர்ந்த என்.எம்.டீ.சி. மற்றும் தொலை தொடர்புச் சேவையில் ஈடுபட்டு வரும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு முறையே ரூ.6,581 கோடி மற்றும் ரூ.28.47 கோடி அதிகரித்துள்ளது. இதனால் ‘சென்செக்ஸ்’ 5.81 சதவீதம் சரிவடைந்துள்ள நிலையிலும், முன்னணி 10 நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு 3.4 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கின் விலை, சென்ற நான்கு வர்த்தக தினங்களிலும் சரிவடைந்தே காணப்பட்டது. இதனையடுத்து, சென்ற வாரத்தில் மட்டும் இந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.10,906 கோடி குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலும், பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் இந்நிறுவனமே முதலிடத்தில் உள்ளது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் கணக்கிட உதவும் நிறுவனங்களில் இந்நிறுவனம்தான் அதிக பங்களிப்பை கொண்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்கவைத்து வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.10,277 கோடி குறைந்துள்ளது.

பங்கு வெளியீட்டில் இறங்கிய 221 நிறுவனங்களுள்

179 நிறுவனப் பங்குகளின் மதிப்பு வெளியீட்டு விலையை காட்டிலும் சரிவு

ரஞ்சித் ஷிண்டே
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
கடந்த 2006&ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலத்தில் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளுள் பெரும்பாலானவற்றின் விலை தற்போது குறைந்துள்ளது. அண்மையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 221 நிறுவனப் பங்குகளில், 179 நிறுவனப் பங்குகளின் விலை அவற்றின் வெளியீட்டு விலையைக் காட்டிலும் சரிவடைந்துள்ளதாக தெரிகிறது.
221 நிறுவனங்கள்
கடந்த 2006&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 221 பெரிய மற்றும் சிறிய நடுத்தர நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் நிதி திரட்டிக் கொண்டுள்ளன. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலத்தில் நடப்பு ஆண்டில் சென்ற 10 மாதங்களைத் தவிர ஏனைய அனைத்து மாதங்களிலும் சர்வதேச அளவில் பங்கு வர்த்தகத்தில் எழுச்சி நிலை காணப்பட்டது.
இதனால் புதிதாக பங்கு வெளியீட்டில் களமிறங்கிய பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு, சென்ற 2007&ஆம் ஆண்டு இறுதி வரை, அதிகரித்த நிலையில் இருந்தது. ஆனால் இவ்வாண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து பங்கு வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு, கரடியின் பிடியில் பங்குச் சந்தை சிக்கியுள்ள நிலையில், 179 நிறுவனப் பங்குகளின் விலை அவற்றின் வெளியீட்டு விலையைக் காட்டிலும் குறைந்து போயுள்ளது.
மேலும் 193 நிறுவனப் பங்குகள், அவை பட்டியலிடப்படும் போது கிடைத்த விலையைக் காட்டிலும், குறைந்த மதிப்பில் தற்போது கைமாறி வருகின்றன. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்களுள் சில நிறுவனப் பங்குகளின் விலை 90 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வீழ்ச்சி பொதுவாக அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் பொதுவானது என்றாலும், உலோகம், மின்சாரம், கட்டுமானம், ஜவுளி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
கட்டுமான துறை
கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்பட கட்டுமான துறையைச் சேர்ந்த நிறுவனங்களே அதிகளவில் பங்கு வெளியீடுகளை மேற்கொண்டுள்ளன. இக்காலத்தில் இந்த துறையைச் சேர்ந்த 29 நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் களமிறங்கின. இவற்றுள் நான்கு நிறுவனப் பங்குகள்தான் முதலீட்டாளர்களுக்கு இப்போதும் ஆதாயமளிப்பதாக உள்ளன. ஜவுளித் துறையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்ட 18 நிறுவனங்களுள், 15 நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
மேற்கண்ட காலத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் 24 நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டியுள்ளன. இவற்றுள் 14 நிறுவனப் பங்குகள் அவற்றின் வெளியீட்டு விலையைக் காட்டிலும் குறைவாகத்தான் விலை போய்க் கொண்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை காரணமாக நம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பல வகையிலும் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
நுகர்பொருள்
கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொண்ட காலத்தில் நுகர்பொருள் துறையைச் சேர்ந்த ஐந்து நிறுவனங்கள்தான் பங்கு வெளியீடுகளை மேற்கொண்டன. இவற்றுள் ஒரே ஒரு நிறுவனப் பங்குகள்தான் முதலீட்டாளர்களுக்கு இதுவரை லாபம் அளித்துள்ளன. 2008&ஆம் ஆண்டில் பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சுனாமி தாக்குதல் பொதுத் துறை நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. பங்கு வெளியீட்டை மேற்கொண்ட ஐந்து பொதுத் துறை நிறுவனங்களுள் இரண்டு நிறுவன பங்குகள் அவற்றின் வெளியீட்டு விலைக்கும் கீழே சென்றுள்ளன.
ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷனின் பங்கின் விலை அதன் வெளியீட்டு விலையைக் காட்டிலும் 37.2 சதவீதம் குறைந்துள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்கின் விலை 61.8 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் பவர் கிரிட் கார்ப்பரேஷன், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியன் வங்கி ஆகியவற்றின் பங்குகளின் விலை, அவற்றின் வெளியீட்டு விலையைக் காட்டிலும், முறையே 46.9 சதவீதம், 32.8 சதவீதம் மற்றும் 50.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.
ஊடகம்
கடந்த இரண்டரை ஆண்டுகளில் பொழுதுபோக்கு மற்றும் ஊடக துறைகளைச் சேர்ந்த 13 நிறுவனங்கள் பொதுமக்களுக்கு புதிதாக பங்குகளை வெளியிட்டுள்ளன. இவற்றுள் 9 நிறுவனப் பங்குகளின் விலை அவற்றின் வெளியீட்டு விலையைக் காட்டிலும் குறைந்துள்ளன. பொறியியல் துறையில் 12 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. இவற்றுள் 8 நிறுவனப் பங்குகளின் விலை வெளியீட்டு விலையைக் காட்டிலும் சரிவடைந்து காணப்படுகிறது.
நடப்பு ஆண்டில் நாட்டின் பங்கு வர்த்தகத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையிலும் சில நிறுவனங்களின் பங்குகளின் விலை அவற்றின் வெளியீட்டு விலையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. உதாரணமாக தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த எஜுகாம்ப் சொல்யூஷன்ஸ் நிறுவனப் பங்கின் விலை அதன் வெளியீட்டு விலையான ரூ.125&ஐக் காட்டிலும் 1,910 சதவீதம் உயர்ந்து, இதன் தற்போதைய சந்தை விலை ரூ.2,512 என்ற அளவில் உள்ளது.
விலை அதிகரிப்பு
யுஷெர் அக்ரோ (நுகர்பொருள் துறை), ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் (உருக்கு), தலிப் டெலிகாம் (தகவல் தொழில்நுட்பம்), குளோரி பாலிபிலிம்ஸ் (சிப்பமிடுதல்), ஸ்ரீஅஷ்டவிநாயக் சினி விஷன் (பொழுதுபோக்கு) ஆகிய நிறுவனப் பங்குகளின் விலையும் அவற்றின் வெளியீட்டு விலையைக் காட்டிலும் சிறப்பான அளவில் அதிகரித்து காணப்படுகிறது.

சென்செக்ஸில் இன்று ஜப்பான் எஃபெக்ட்; 300 புள்ளிகள் சரிவு
மும்பை: இன்றும் பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மைதான் நிலவுகிறது. திங்கள்கிழமை காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 159 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ் பிற்பகலுக்குள் மேலும் 240 புள்ளிகளை இழந்து 8000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்தது.

கடந்த இரு வாரங்களில் சென்செக்ஸ் 8 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே இறங்குவது இது இரண்டாவது முறை. மீண்டும் சற்று உயர்ந்த சென்செக்ஸ் பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 9023 புள்ளிகளாக இருந்தது.

நிப்டியில் ஆரம்பத்தில் 100 புள்ளிகளுக்கும் மேல் சரிவு ஏற்பட்டது. பின்னர் சற்று முன்னேற்றம் தெரிந்தது. 73 புள்ளிகள் குறைந்து 2737 புள்ளிகளாக உள்ளது நிப்டி.

உலகின் பொருளாதார பெருமந்த சுழலுக்குள் தங்கள் நாடும் சிக்கியுள்ளதாக ஜப்பான் அறிவித்ததைத் தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியில் உள்ளன. அதன் பாதிப்புதான் சென்செக்ஸிலும் இன்று எதிரொலிக்கிறது.

கிங் பிஷ்ஷர்: 25% பங்குகளை விற்க மல்லையா முடிவு
மும்பை: கிங் பிஷ்ஷர் விமான நிறுவத்தின் 25 சதவீத பங்குகளை விற்றுவிட அதன் உரிமையாளர் விஜய் மல்லையா திட்டமிட்டுள்ளார்.

சர்வதேச பொருளாதார சரிவு விமான நிறுவனங்களை பதம் பார்த்து வருகிறது. ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வால் பல விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் சுருண்டு கிடக்கும் நிலையில் பொருளாதாரத் தேக்கம் அதை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இப்போது விமான எரிபொருளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துக் கொண்டிருந்தாலும் விழுந்த அடி, அடைந்த நஷ்டத்தை உடனடியாக ஈடுகட்ட இயலாத நிலை.

இப்போதைய நிலையில் விமான நிறுவனங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு லாபமே காண முடியாத சூழலில் உள்ளன.

இந் நிலையில் டெக்கன் ஏர்லைன்ஸை வாங்கி நஷ்டததை மேலும் அதிகரித்துக் கொண்ட கிங் பிஷ்ஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையா தனது நிறுவனத்தின் 25 பங்குகளை விற்பது குறித்து யோசித்து வருகிறார்.

இது தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ், பிரிட்டனின் முன்னணி தனியார் விமான நிறுவனமான, ரிச்சர்ட் பிராஸ்னனின் விர்ஜின் அட்லாண்டிக், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறார்.

இந்திய விமான நிறுவனங்களில் 26 சதவீதம் வரை வெளிநாட்டு விமான நிறுவனங்களின் முதலீட்டை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது. இந் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளார் மல்லையா.

தினம் தினம் ரூ.22 கோடி நஷ்டமடையும் பெங்களுரு விமான நிலையம்

பெங்களுரு : பெங்களுருவில் புதிதாக விமான நிலையம் திறக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் அது தொடர்ந்து கடுமையான நஷ்டத்தை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனை நிர்வகிக்கும் பெங்களுரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட்., ( பி.ஐ.ஏ.எல்.,) நாள் ஒன்றுக்கு ரூ.22 கோடி நஷ்டமடைந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் மொத்தமாக அது அடைந்த நஷ்டம் ரூ.130 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, புதிதாக விமான நிலையம் துவங்கிய முதல் ஐந்து வருடங்களுக்கு அதற்கு நஷ்டம்தான் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பெங்களுரு விமான நிலையத்தை பொருத்தவரை, அவர்கள் எதிர்பார்த்த நஷ்டத்தை விட கூடுதலான நஷ்டம் ஏற்படுவதாக சொல்கிறார்கள். இந்த பெரும் நஷ்டத்திற்கு அவர்கள் சொல்லும் முதல் காரணம், அவர்களுக்கு கொடுக்கப்படும் யு.டி.எஃப்., என்று சொல்லப்படும் யுசர் டெவலப்மென்ட் ஃபீஸ் குறைவாக கொடுக்கப்படுவதுதானாம். மத்திய அரசாங்கத்திடம் அவர்கள் கேட்பதோ பயணி ஒருவருக்கு ரூ.675 . ஆனால் இந்த தொகை அதிகமாக இருக்கிறது என்று அரசாங்கம் இதுவரை அந்த தொகைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ஐதராபாத் விமான நிலையத்தில் யு.டி.எஃப்., பயணி ஒருவருக்கு ரூ.375 தான் கொடுக்கப்படுகிறது என்பதுதான். நஷ்டத்திற்கு இன்னொரு காரணம், பயணிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது. ஆறு மாதங்களுக்கு முன் விமான நிலையம் திறக்கப்பட்டபோது, தினமும் 170 விமானங்கள் இங்கு இயக்கப்பட்டன. ஆனால் இப்போதோ அது 162 ஆக குறைந்து விட்டது. இந்த விமான நிலையத்தை பயன்படுத்தும் பெரும்பாலான விமான கம்பெனிகளும், பி.ஐ.ஏ.எல்.,க்குற கொடுக்க வேண்டிய கட்டணத்தை ஒழுங்காக கொடுக்காமல் தாமதப்படுத்துகின்றன.அதுவும் நஷ்டம் கூடுவதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பங்குகளை வாங்க வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சி

பெங்களுரு : கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க பல வெளிநாட்டு விமான கம்பெனிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று, அதன் சேர்மன் விஜய் மல்லையா இன்று தெரிவித்தார். ஆனால் இப்போதைய கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்து, வெளிநாட்டு நிறுவனங்களும் நம்நாட்டு விமான கம்பெனிகளின் பங்குகளை வாங்க வழி ஏற்படுத்தினால்தான் அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்க முடியும் என்றார். இதற்கு மேல் நான் எதுவும் விவரமாக சொல்ல முடியாது என்று மல்லையா மறுத்தாலும், பங்குகளை விற்பது குறித்து வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று கிங்ஃபிஷர் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போதுள்ள அரசின் கொள்கையின் படி எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனமும் இந்திய விமான கம்பெனிகளின் பங்குகளை வாங்க முடியாது. ஆனால் விமான சேவையுடன் தொடர்புடைய மற்ற வேலைகளை, அதாவது கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் அமைப்பது, கார்கோ அல்லது பராமரிப்பு வேலைகளை செய்வது, விமானங்களை ரிப்போர் பார்ப்பது அல்லது சர்வீஸ் செய்வது போன்ற வேலைகளில் 100 சதவீதம் வெளிநாட்ட நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்திய விமான நிறுவனங்களுக்கு அதிகம் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் விஜய் மல்லையா, இந்திய விமான நிறுவனங்கங்களின் பங்குகளில், நான்கின் ஒரு பங்கையாவது ( 25 சதவீதம் ) வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் இது குறித்து பேசிய கேபினட் செகரட்டரி கே.எம்.சந்திரசேகர், இந்திய விமான போக்குவரத்து துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது என்பது இப்போதைக்கு இல்லை என்றே குறிப்பிட்டார்

இன்றும் சரிவில் முடிந்த பங்கு சந்தை

மும்பை : இன்றும் மும்பை பங்கு சந்தை சரிவில்தான் முடிந்திருக்கிறது. மதிய வேளையில் அதிகம் புள்ளிகளை இழந்திருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, மாலை வர்த்தகம் முடிய ஒரு மணி நேரத்தில் ஓரளவு புள்ளிகளை மீட்டு விட்டது. ரியல் எஸ்டேட், மெட்டல், பேங்கிங், பார்மா மற்றும் சில ஆயில் கம்பெனி பங்குகள் தொடர்ந்து சரிந்துகொண்டுதான் இருக்கின்றன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் வீழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., இன்போசிஸ், விப்ரோ, என்.டி.பி.சி., பெல், ஏ.சி.சி., அம்புஜா சிமென்ட்ஸ், மாருதி மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்த நிலையில் இருந்த சென்செக்ஸ் மற்றும் நிப்டி, மதிய வேளையில் அதிகம் புள்ளிகளை இழந்திருந்தது. சென்செக்ஸ் 9,000 புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 2,700 புள்ளிகளுக்கு கீழும் சென்றிருந்தது. இருந்தாலும் கடைசி ஒரு மணி நேரத்தில் டெலிகாம், கேப்பிடல் குட்ஸ், டெக்னாலஜி, சிமென்ட், ஆட்டோ,ஓ.என்.ஜி.சி., பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டதால் இழந்த புள்ளிகள் ஒரளவுமீண்டு வந்தன. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 94.41 புள்ளிகள் ( 1.01 சதவீதம் ) குறைந்து 9,291.01 புள்ளிகளில் முடிந்தது.தேசிய பங்கு சந்தையில் நிப்டி 10.80 புள்ளிகள் ( 0.38 சதவீதம் ) குறைந்து 2,799.55 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், ரிலையன்ஸ் இன்ஃராஸ்டரக்ஸர், டாடா ஸ்டீல், டி.எல்.எஃப், ஹெச்.டி.எஃப்.சி, யூனிடெக், சீமென்ஸ், எம் அண்ட் எம், மற்றும் செய்ல் ஆகியவை 4 முதல் 4.7 சதவீதம் வரை இழந்திருந்தது. விப்ரோ, ஏ.சி.சி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, பார்தி ஏர்டெல், நால்கோ, அம்புஜா சிமென்ட்ஸ்,மற்றும் பவர் கிரிட் கார்பரேஷன் 2 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்திருந்தது.

கச்சா எண்ணெய் விலை குறைந்தது

சிங்கப்பூர் : சர்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டேதான் இருக்கிறது. நியுயார்க் மெர்கன்டைல் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.26 டாலர் குறைந்து 55.78 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 84 சென்ட் குறைந்து 53.40 டாலராக இருக்கிறது. பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் குறைந்து வருகிறது. இந்நிலையில் ஓபக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க முன்வராது என்றும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இப்போது எண்ணெய் விலை குறைந்து வருவதாக சொல்கிறார்கள். இருந்தாலும் இந்த மாதம் 29 ம் தேதி, ஓபக் நாடுகள் அமைப்பு எகிப்தில் கூடி, எண்ணெய் உற்பத்தியை குறைக்கலாமா என்பது குறித்து ஆராய இருக்கிறார்கள். ஆனால் இது குறித்து பேசிய ஓபக் அமைப்பின் தலைவர் சாகிப் கேலி, நவம்பர் 29ம் தேதி நடக்கும் கூட்டத்திற்குப்பின்னும் எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட மாட்டாது என்றார்

இன்னும் 5 ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்கிறது அப்பல்லோ டயர்ஸ்

புதுடில்லி : வாகனங்களுக்கான டயர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அப்பல்லோ டயர்ஸ், இன்னும் ஐந்து ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்கிறது. இந்தியா மற்றும் வெளிநாட்டில் புதிதாக இரண்டு கிரீன்ஃபீல்ட் டயர் தொழிற்சாலைகளை அமைக்கவும் ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும் இந்த பணம் செலவு செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சென்னை மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம், இன்றும் ஐந்து ஆண்டுகளில் அதன் மொத்த வரவு செலவை 4 பில்லியன் டாலராக உயர்த்தி, உலகின் மிகப்பெரிய ஆறு டயர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து விட அது திட்டமிட்டிருக்கிறது. நாங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம். எனக்கும் எங்கள் குழுவினருக்கும் இருக்கும் ஒரே ஆசை என்னவென்றால், எப்படியாவது உலகின் மிகப் பெரிய டயர் தொழிற்சாலைகள் ஆறில் ஒன்றாகி விட வேண்டும் என்பதுதான் என்றார் அப்பல்லோ டயர்ஸின் வைஸ் சேர்மன் மற்றும் ஜாயின்ட் எம்.டி., நீரஜ் கன்வார். நாங்கள் ஹங்கேரியில் இருந்து வெளியேறியதும் ஸ்லோவாக்கியா அல்லது போலந்தில் ஒரு தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்திருக்கிறோம். அங்கு ரூ.1,200 கோடி முதலீட்டில், வருடத்திற்கு 70 லட்சம் பயணிகள் வாகன ரேடியல் டயர்களை தயாரிக்க முடிவு செய்திருக்கிறோம். இப்போது சென்னையில் ஒரு புது தொழிற்சாலையை அமைத்துக்கொண்டிருக்கிறோம். அது அடுத்த வருடம் முடிவு பெற்றுவிடும். சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கியதும் நாங்கள் வருடத்திற்கு 35,000 பயணிகள் வாகன ரேடியல் டயர்களும், 1,800 பஸ், லாரி டயர்களும் தயாரிப்போம். அப்போது இந்திய டயர் சந்தையில் 25 – 28 சதவீத மார்க்கெட் ஷேர்களை நாங்கள் பெற்று விடுவோம் என்றார் நீரஜ்.

அமெரிக்க ஸ்டீல் கம்பெனி 675 ஊழியர்களுக்கு லேஆஃப் கொடுக்கிறது

பிட்ஸ்பர்க் : யுனைட்டர் ஸ்டேட்ஸ் ஸ்டீல் கார்பரேஷன் என்ற அமெரிக்க நிறுவனம், அதன் 675 ஊழியர்களுக்கு லேஆஃப் கொடுக்கிறது. சர்வதேச அளவில் பெருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக, அமெரிக்õவில் ஸ்டீலுக்கான டிமாண்ட் குறைந்திருப்பதை அடுத்து, இந்த நிறுவனத்தில் அமெரிக்க கிளையில் 500 ஊழியர்களுக்கும், கனடாவில் வேலைபார்த்து வரும் 175 ஊழியர்களுக்கும் லே ஆஃப் கொடுக்கிறது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: