10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப பிரிட்டிஷ் டெலிகாம் திட்டம்

 லண்டன் : பிரிட்டனின் புகழ்பெற்ற பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனம் ( பி டி ) அதன் ஊழியர்களில் 10,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறது. இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் ( 2009 மார்ச் ) இந்த ஜாப்கட் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கடும் நிதி சிக்கலில் இருக்கும் அந்த நிறுவனம் செலவை குறைக்கும் நடவடிக்கையாக இதனை செய்கிறது என்று சொல்லப்படுகிறது.இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது அதன் கான்ட்ராக்டர்கள், மற்றும் ஆஃப்ஷோர் வேலையாட்கள் தான். ஏற்கனவே இந்த நிறுவனம் 4,000 பேரை வேலைநீக்கம் செய்துவிட்டது. வரும் மார்ச்சுக்குள் மேலும் 6,000 பேரை வேலை நீக்கம் செய்ய இருக்கிறது. <உலகம் முழுவதும் அவர்களுக்கு 1,60,000 ஊழியர்கள் இருக்கிறார்கள். பொருளாதார மந்தநிலையால்தான் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கிறோம் என்று அர்த்தம் அல்ல; நாங்கள் தேய்ந்துகொண்டே வருகிறோம். அதனால்தான் இப்போதே ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியதாகி விட்டது என்றார் பி.டி.,யின் தலைமை நிர்வாக அதிகாரி இயான் லிவிங்ஸ்டன். இங்கிலாந்தின் பொருளாதார நிலை மோசமாகிக்கொண்டே இருப்பதின் விளைவாக, அங்கு வேலையில்லாதோர் எண்ணிக்கை, கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவாக அக்டோபரில் அதிகரித்திருக்கிறது. வேலை இழப்பு செய்வதன் மூலம் பி.டி.,நிறுவனத்தின் செலவு குறைக்கப்படுவதால் அதன் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதன் பங்கு மதிப்பும் 12 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
மோட்டரோலா: 3000 பேர் நீக்கம்!

பெங்களூரு: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனம் மோட்டரோலா, தனது நிறுவனத்தின் பல்வேறு நாட்டுக் கிளைகளில் பணியாற்றும் 3,000 பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது. 

இதன் எதிரொலியாக, இந்நிறுவனத்தின் இந்தியக் கிளைகளில் பணியாற்றுபவர்களில் கணிசமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை மோட்டரோலாவின் இந்தியப் பிரிவு தலைவர் அமித் சவுத்ரி இன்று அறிவித்துள்ளார்.

சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார தேக்க நிலை காரணமாக உலகெங்கிலும் பிரபல நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பணியாளர் குறைப்பு ஆயுதத்தை எடுத்துள்ளன. மிகப் பெரிய நிறுவனங்கள் கூட இதற்குத் தப்பவில்லை. நியூயார்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி தனது இந்தியப் பிரிவில் 150 பணியாளர்களை நீக்குவதாக நேற்றுதான் அறிவித்தது.

மோட்டாரோலாவும் அடுத்த நாளே பணியாளர் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகெங்கிலுமுள்ள தனது பல்வேறு கிளைகளில் பணியாற்றும் 3000 பணியாளர்களை நீக்குவதாக இன்று மோட்டாரோலா அறிவித்துள்ளது.

இந்தியாவில் குர்கானைத் தமைமையிடமாகக் கொண்டு இயங்கும் மோட்டாரோலாவுக்கு சென்னை, மும்பை, பெங்களூருவில் கிளைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 4 ஆயிரம் பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

இவர்களில் 400 முதல் 500 பேர் வரை இப்போதைய பணி நீக்கத்துக்கு உள்ளாவார்கள் எனத் தெரிகிறது.

மூன்றாவது காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.1929 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பணியாளர் குறைப்பில் ஈடுபடப்போவதாக நான்கு தினங்களுக்கு முன் அறிவித்தது மோட்டாரோலா.

வேலை நேரத்தை குறைக்கும் ஐசிஐசிஐ வங்கி
 
குறிப்பிட்ட சில கிளைகளில் மட்டும் வங்கி செயல்படும் நேரத்தை ஐசிஐசிஐ வங்கி குறைக்க இருக்கிறது. தினமும் 12மணி நேர வேலை என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஐசிஐசிஐ வங்கி, சில கிளைகளில் 9 மணி நேர செயல்பாடாக மாற்ற உள்ளது.
 
ஐசிஐசிஐ வங்கியின் மனிதவள மேம்பாட்டு தலைவர் ராம்குமார் தெரிவிக்கையில் “வங்கியில் மக்களின் வருகை மற்றும் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகிறோம். சில கிளைகளில் முதலீட்டாளர்கள் மற்றும் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் குறைந்து காணப்படும் கிளைகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், சில கிளைகளில் காலை 10மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட உள்ளோம்.” என்றார். ஐசிஐசிஐ வங்கியின் கிளைகளின் எண்ணிக்கை 1450 ஆகும். இதில் 500க்கும் அதிகமான கிளைகள் இனி 9 மணி முதல் 6 மணி வரை செயல்படலாம். அதே போல 200 கிளைகள் 10முதல் 4 மணி வரை செயல்படவும் உள்ளது. சிக்கன நடவடிக்கையாகவும் இந்த முடிவு எடுக்கப்படுள்ளதாகவும் ஐசிஐசிஐ தெரிவித்துள்ளது
.
உலகின் பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி : போர்ப்ஸ் பத்திரிக்கை தகவல்

நியுயார்க் : உலகிலேயே மிகப்பெரிய பணக்கார இந்தியர் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிதான் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை வருடந்தோறும் பணக்காரர்கள் லிஸ்ட்டை வெளியிட்டு வருகிறது. இப்போது வெளியிட்டுள்ள லிஸ்ட்டில் உலகிலேயே பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானிதான் என்று தெரிவித்திருக்கிறது. லண்டனில் இருக்கும் இந்தியரான லட்சுமி மிட்டலை பின்னுக்கு தள்ளிவிட்டு முகேஷ் அம்பானி முதல் இடத்திற்கு வந்து விட்டார். அவரின் சொத்து மதிப்பு 20.8 பில்லியன் டாலர் என்கிறது போர்ப்ஸ் பத்திரிக்கை. இரண்டாவது இடத்திற்கு வந்து விட்ட லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 20.5 பில்லியன் டாலர் என்றும் முன்றாவதாக இருக்கும் அனில் அம்பானியில் சொத்து மதிப்பு 12.5 பில்லியன் டாலர் என்றும் தெரிவித்திருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் 7.9 பில்லியன் டாலருடன் நான்காவதாகவும் , ரியல் எஸ்டேட் அதிபர் கே.பி.சிங் 7.8 பில்லியன் டாலருடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள். டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதாலும், பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவின் காரணமாகவும், இந்தியாவின் 40 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 60 சதவீதம் வரை குறைந்து போனது. கடந்த வருடம் 351 பில்லியன் டாலராக இருந்த இவர்களின் மொத்தசொத்து மதிப்பு இந்த வருடத்தில் 139 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது என்கிறது போர்ப்ஸ் பத்திரிக்கை. இந்திய பங்கு சந்தை 48 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 சதவீதம் குறைந்திருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கமும் தொடர்ந்து இரட்டை இலக்கணமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக இவர்களின் சொத்து மதிப்பு குறைந்திருப்பதாக அது தெரிவித்திருக்கிறது

ஏழு நாடுகள் சேர்ந்து உணவு வங்கி அமைக்க திட்டம்: டில்லி மாநாட்டில் முடிவு

புதுடில்லி: ‘அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பல நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தாலும், ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் நிதி நிறுவனங்கள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளன’ என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.அமெரிக்காவில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, நேபாளம், பூடான் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கிய அமைப்பான, ‘பிம்ஸ்டெக்’ நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு டில்லியில் நேற்று நடந்தது. வங்காள விரிகுடா பகுதி நாடுகள் என்றழைக்கப்படும் இந்த மாநாட்டில் காலையில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

 பாரக் ஒபாமா அட்டை படம் போட்ட டைம் இதழ் அமோக விற்பனை

நியுயார்க் : மறைந்த பிரிட்டிஷ் இளவரசி டயனா உயிருடன் இருந்த போது, அவரது படத்தை அட்டை படமாக போட்டால்தான், இதழ்கள் அமோகமாக விற்பனை ஆகிறது என்று, போட்டி போட்டுக்கொண்டு எல்லோருமே டயனாவின் படத்தையே அடிக்கடி வெளியிட்டு வந்தார்கள். அந்த அளவுக்கு டயனாவின் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது அந்த அளவுக்கு மக்களிடையே அதிக பாப்புலராக இருப்பது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாரக் ஒபாமா தான். சமீபத்தில் வெளியான டைம் இதழில் ஓபாமாவின் படத்தை தான் அட்டை படமாக போட்டிருந்தார்கள். இதனால், நவம்பர் 17ம் தேதியிட்ட அந்த இதழ் உலகமெங்கும் அமோகமாக விற்பனை ஆகி இருக்கிறது. 4.99 டாலர் விலை ( சுமார் 240 ரூபாய் ) வைக்கப்பட்டிருந்த அந்த இதழ் கடைகளுக்கு வந்ததுமே விற்று தீர்ந்து விட்டது. மூன்று முறை கடைகளுக்கு விற்பனைக்காக அந்த இதழ் அனுப்பப்பட்டிருந்தும் எல்லா இதழ்களுமே விற்று போய் இருக்கிறது. இன்னும் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம். அவரது படத்துக்காதத்தான் நாங்கள் இந்த இதழை வாங்கினேம் என்று பெரும்பாலானவர்கள் சொன்னதாக டைம் அதிகாரிகள் சொன்னார்கள். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க – அமெரிக்கரான பாரக் ஓபாமா, தனது வெற்றிக்குப்பின் சிகாகோ கிரான்ட் பார்க்கில் நடந்த வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம்தான் நவம்பர் 17ம் தேதி டைம் இதழில் அட்டை படமாக போடப்பட்டிருந்தது. இருந்தாலும் டைம் இதழில் 85 வருட வரலாற்றில், அதிகம் டைம் இதழ்கள் விற்றது செப்டம்பர் 14,2001 இதழ்தான். அதில்தான் செப்டம்பர் 11ம் தேதி நடந்த நியுயார்க் இரட்டை கோபுர தாக்குதல் சம்பந்தமான படம் வெளியாகி இருந்தது. அந்த இதழ், கடைகளில் மட்டும் 34 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகி இருந்தது.

தங்கத்தின் மீது மோகம் அதிகரிப்பு

 சதபனாஜி: சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக, ஐரோப்பாவில் தங்கத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் விரைவில் தங்கத் திற்கு பற்றாக்குறை ஏற்படும் என கூறப்படுகிறது. பொருளாதார மந்தநிலை காரணமாக, ஐரோப்பாவில், மக்கள் தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பியுள்ளனர். தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்ட துவங்கிவிட்டனர். இதனால், அங்கு தங்கத்திற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு போதுமான அளவில், ஐரோப் பிய நாடுகளால் தங்கம் சப்ளை செய்ய முடியவில்லை.

அங்கிருந்து உற்பத்தியாகும் தங்கத்தை விட தேவை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் விரைவில் தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்படும் என மினரல் மற்றும் மெட்டல் வர்த்தக கழகத்தின் முதன்மை பொது மேலாளர் அஷீஷ் மஜும்தார் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ‘பங்குச் சந்தையில் தொடர்ந்து தள்ளாட்டம் நீடிப்பதால், தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ‘தங்கத்தில் முதலீடு செய்தால் பாதுகாப்பாகவும், நிச்சயமான வருவாய் கிடைக்கும் என்பதாலும் மக்கள் பார்வை தங்கத்தின் மீது திரும்பியிருக்கிறது. இதனால், தங்க விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது’ என்றார்.

பங்குச் சந்தையில் ‘மீன்’ பிடிக்க வாறீங்களா

பங்குச் சந்தையில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஏற்பட்ட ஏற்றமெல்லாம் நீர்க்குமிழியா என்ற சந்தேகம் வந்துள்ளது. ஏனெனில், நீர்க்குமிழி தான் திடீரென பெரிதாகும். அப்படி ஒரு ஏற்றம் இருந்தது. அந்த நீர்க்குமிழி ஒரு அளவுக்கு மேல் பெரிதாகியவுடன் உடைந்து, இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அது போலத் தான் பங்குச் சந்தையிலும் நடந்து வருகிறது.

தூரத்தில் இருந்து சந்தையை பார்த்தவர்களெல்லாம் சந்தையில் முதலீடு செய்யவில்லையே என்று சந்தோஷப்படுகின்றனர். தற்போது, சந்தை சரிந்து இருப்பதை பார்த்தவுடன் இது நல்ல சந்தர்ப்பமா என தயக்கத்துடன் பார்க்கின்றனர். திங்களன்று ஏறிய ஏற்றமெல்லாம் கடந்த இரண்டு நாளில் காணாமல் போய்விட்டது. ஒவ்வொரு நாடும் சந்தைகளை நிலை நிறுத்த தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பா போல, சீன அரசும் திங்களன்று சலுகை அறிவிப்பை வெளியிட்டது. அது, ஆசிய அளவில் சந்தைகளை தூக்கி நிறுத்தியது.

அமெரிக்க நிலைமை இன்னும் சரியாகவில்லை என்றே தோன்றுகிறது. உலகின் நம்பர் 2 கம்பெனியான அமெரிக்காவின் சர்க்கியுட் சிட்டி, மஞ்சள் கடுதாசி கொடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிய சரிய ரிலையன்ஸ் நிறுவன பங்கின் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. வருங்காலங்களில் எண்ணெய் தேவை குறையும் என்று வரும் ரிப்போர்ட்களை அடுத்து அந்த கம்பெனியின் ரிபைனிங் உற்பத்தி அளவு குறையலாம் என்ற எண்ணத்தில் தான். நேற்று முன்தினம் மட்டும் 7.3 சதவீதம் குறைந்து அந்த கம்பெனியின் பங்குகள் 1,207 ரூபாய் அளவிற்கு வந்தது. நேற்று முன்தினம் முடிவாக மும்பை பங்குச் சந்தை 696 புள்ளிகளை இழந்தது. மற்ற ஆசிய சந்தைகளில் அடி விழுந்தால், இந்திய சந்தைகளில் மரண அடி விழுகிறது. நேற்றைய துவக்கம் மந்த நிலையிலேயே இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் 1.4 சதவீதமாக இருந்தது, செப்டம்பரில் 4.8 சதவீதமாக கூடியிருந்தது. ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தற்போதே யூகங்கள் இருப்பதால் சந்தை மேலும், கீழுமாகவே இருந்தது. ரிலையன்ஸ் 4.89 சதவீதம் கீழே விழுந்து 1,148 ரூபாய் அளவிற்கு வந்துள்ளது. நேற்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை 303 புள்ளிகள் சரிவுடன் 9,536 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தை 90 புள்ளிகள் சரிந்து 2,848 என்ற நிலையிலும் முடிந்தது. சந்தை 10,000க்கு கீழே இருப்பது சென்டிமென்டாக ஒரு கவலையளிக்கக் கூடிய விஷயம் தான். 

கச்சா எண்ணெய் பகவான்: கச்சா எண்ணெய் பகவான் தான் ஒரு காலத்தில் (சில மாதங்களுக்கு முன் வரை) சந்தையை கீழே இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். தற்போது, பேரல் 60 டாலர் வரை குறைந்தும், சந்தை மேலே செல்லவில்லை.

 சந்தைக்கு இன்று விடுமுறை: இன்று குருநானக் ஜெயந்தி விடுமுறை காரணமாக சந்தையில் வர்த்தகம் இல்லை. தெளிந்த நீரோட்டம் போல ஒரு சந்தை தேவை. அது தான் உடனடித் தேவை. ஆனால் அதற்கு இன்னும் பல காலாண்டுகள் காத்திருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. தீபாவளியன்று கிடைத்தது போல் சல்லிசாக பங்குகள் கிடைக்கும். அப்போது மீன் பிடிக்க வசதியாக இருக்கும்.

 – சேதுராமன் சாத்தப்பன்-

கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது

நியுயார்க் : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்திருக்கிறது. நியுயார்க் மெர்கன்டைல் சந்தையில் யு.எஸ்.லைட்.ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 68 சென்ட் குறைந்து 55.48 டாலராக இருந்தது. லண்டனின் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 3.34 டாலர் குறைந்து 52.37 டாலராக இருந்தது. உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை அடுத்து பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் குறைந்து வருவதால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருவதாக சொல்கிறார்கள். ஜூலை மத்தியில் 147 டாலருக்கு மேல் சென்றிருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 60 சதவீதத்திற்கு மேல் குறைந்து விட்டது.

பணவீக்கம் 8.98 சதவீதமாக குறைந்தது

புதுடில்லி : நவம்பர் ஒன்றாம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 8.98 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் 10.72 சதவீதமாக இருந்த பணவீக்கம், இப்போது 1.74 சதவீதம் குறைந்து 8.98 சதவீதமாகியிருக்கிறது. ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூட பணவீக்கம் 10.37 சதவீதமாக இருக்கும் என்றுதான் சொல்லியிருந்தது. அதனை பொய்யாக்கும் விதமாக பணவீக்கம் சிங்கிள் டிஜிட்டுக்கு வந்திருக்கிறது. நாப்தா, விமான எரிபொருள் போன்றவைகளின் விலை குறைந்திருப்பதால் பணவீக்கம் குறைந்திருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 3.35 சதவீதமாகத்தான் இருந்தது.

சர்வதேச அளவில் கம்பெனிகளை இணைப்பு மற்றும் வாங்குவது அடுத்த வருடத்தில் குறையும்

நியுயார்க் : சர்வதேச அளவில் கம்பெனிகளை இணைப்பது மற்றும் வாங்குவது ( எம் அண்ட் ஏ ) அடுத்த வருடத்தில் 35 சதவீதம் குறையும் என்று நிதி முதலீட்டாளர்கள் சொல்கிறார்கள். இந்த வருடத்தில் 3.1 டிரில்லியன் டாலருக்கு நடகும் என்று எதிர்பார்க்கும் எம் அண்ட் ஏ, அடுத்த வருடத்தில் குறைந்து விடும் என்று அவர்கள் சொல்கிறார்கள்

  ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் திவால்

ஐசிஐசிஐ வங்கியும் லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்குவரும் ப்ரூடென்சியல் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இக்காப்பீட்டு நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி 74% மும், ப்ரூடென்சியல் நிறுவனமும் 26% முதலீடு செய்துள்ளன. இவை இந்தியா முழுவதும் 2000 கிளைகளையும், 2 லட்சத்திற்கு மேலான அட்வைசர்களையும் கொண்டு இயங்கிவருகிறது.அமெரிக்காவில் பெருகிவரும் பொருளாதார நிதி நெருக்கடியால் உலகம் முழுவதும் மந்த நிலை நிலவி வருகிறது. அதொடு அமெரிக்காவில் நாள்தோறும் திவால் ஆகும்  நிறுவனங்களும் பெருகிவருகிறது.

 

தற்போது அந்த வரிசையில் ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் நிறுவனமும் திவாலாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் தங்கள் திவால் நோட்டீசை ஐஆர்டீஏவிடம் சமர்பித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஐசிஐசிஐ வங்கி வட்டாரத்தில் விசாரித்தபோது ஐசிஐசிஐ- ்ரூடென்சியல் நிறுவனத்தில் ப்ரூடென்சியல் கொண்டுள்ள 26% பங்குகளை இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வாங்கவுள்ளதாக தெரிவித்தனர். அதோடு இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தனர்.

இதுபற்றிய‌ அதிகாரப்பூர்வ‌ செய்திக‌ள் இன்னும் வெளியாக‌வில்லை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.
1000 ஊழியர்களை நீக்குகிறது விப்ரோ
  மென்பொருள் உருவாக்குவதில் தலைசிறந்து விளங்கும் நிறுவனங்களில் விப்ரோவும் ஒன்று. 60000க்கும் அதிகமான ஊழியர்களைக்கொண்டது இந்நிறுவனம். போலியான சான்றிதழ் சம்ர்ப்பித்து பணியில் சேர்ந்தவர்கள், பணியை சிறப்புற செய்யாதவர்கள் என்று 2000 ஊழியர்கள் வரை நீக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

விப்ரோ நிறுவனத்தின் மனிதவள துணைமுதல்வர் பிரதிக் குமார் தெரிவிக்கையில் இந்த எண்ணிக்கை 2000 வரை இருக்கும் என்றும், சரியாக எத்தனை ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கமுடியாது என்று கூறினார். ஒவ்வொரு ஆண்டும் இது நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. ஊழியர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த தவறினாலோ, தவறான தகவல் கொடுத்து வேலையில் சேர்ந்திருந்தாலோ, அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவது சகஜம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

முன்னணி நிறுவனமான TCS சில மாதங்களுக்கு முன்னர் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதே போல IBM நிறுவனம் 700 ஊழியர்களையும் முன்பே பணிநீக்கம் செய்திருந்தது. இப்பொழுது விப்ரோ நிறுவனமும் இந்த களையெடுப்பில் இறங்கியுள்ளது. திறமை மிக்க ஊழியர்களும், கற்றுக்கொள்ளும் திறன் படைத்த ஊழியர்களால் மட்டுமே நிறுவனம் முன்னேற்றமும் லாபமும் அடையும் என்று நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: