உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் லட்சுமி மிட்டல் அடைந்த நஷ்டம் 5000 கோடி டாலர்

லண்டன் : உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி சிக்கலால், ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தில், அதன் சேர்மன் மற்றும் தலைமை அதிகாரியாக இருக்கும் இந்தியருமான லட்சுமி மிட்டலுக்கு இருக்கும் பங்கு மதிப்பு 5,000 கோடி டாலர் குறைந்திருக்கிறது என்று பொருளாதார பத்திரிக்கையான ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. லட்சுமி மிட்டலுக்கு ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தில் 45 சதவீத பங்குகள் இருக்கிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி சிக்கலால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அவருக்கு, அங்கிருக்கும் தனிப்பட்ட பங்குகளின் மதிப்பு 6,600 கோடி டாலரில் இருந்து 1,600 கோடி டாலராக குறைந்து விட்டது. உலக நாடுகள் அனைத்தும் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில், உலக அளவில் உள்ள ஸ்டீல் இன்டஸ்டிரி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை சேகரித்த அந்த பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியாளரான ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 72 சதவீதம் குறைந்திருக்கிறது. இதனையடுத்து, அதன் சேர்மனும் தலைமை அதிகாரியாகவும் இருக்கும் லட்சுமி மிட்டல், அடுத்த வாரம் அதன் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் மதிப்பீட்டாளர்களை சந்தித்து பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது. அப்போது இந்த பிரச்னையை தீர்க்க, ஆர்செலர் மிட்டலின் திட்டம் என்ன என்றும், அதன் விரிவாக்க திட்டத்தின் நிலை என்ன, குறிப்பாக இந்தியாவில் துவக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புதிய இரண்டு தொழிற்சாலைகள் துவங்கப்படுமா என்று கேள்வி கேட்கப்படும் என்று தெரிகிறது.

சி.ஆர்.ஆர்., மற்றும் ரிபோ ரேட்டை மேலும் குறைத்தது ரிசர்வ் வங்கி

மும்பை : வங்கிகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக, சமீபத்தில்தான் ரிசர்வ் வங்கி சி.ஆர்.ஆர்., மற்றும் ரிபோ ரேட்டை குறைத்து ரூ.1,85,000 கோடி பணப்புழக்கத்தை அதிகரித்திருந்தது. இப்போது ரிசர்வ் வங்கி, வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை ( சி.ஆர்.ஆர்.) மேலும் ஒரு சதவீதமும், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ( ரிபோ ரேட் ) 0.5 சதவீதத்தையும் குறைத்திருக்கிறது. ஏற்கனவே 6.5 சதவீதமாக இருந்த சி.ஆர்.ஆர்., இப்போது 5.5 சதவீதமாக குறைத்திருப்பதால், வங்கிகளில் மேலும் ரூ.40,000 கோடி பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த சி.ஆர்.ஆர்., குறைப்பு, இரண்டு கட்டமாக அமல்படுத்தப்படுகிறது. 0.5 சதவீதத்தை அக்டோபர் 25ம் தேதியிலிருந்தும் 0.5 சதவீதம் நவம்பர் 8ம் தேதியிலிருந்தும் அமல்படுத்துகிறது. இதுவரை 8 சதவீதமாக இருக்கும் ரிபோ ரேட்டை நவம்பர் 3 ம் தேதியில் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கிறது. இது தவிர, வங்கிகள் கவர்மென்ட் பாண்ட்களில் செய்ய வேண்டிய முதலீட்டிலும் ஒரு சதவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. இப்போது அது 24 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை பற்றி ஐசிஐசிஐ வங்கியின் ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் சந்தா கோச்சார், இது வங்கிகளின் பணப்புழக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் வங்கிகள் வட்டியை குறைக்க வழி ஏற்படும் என்றும் சொன்னார்

டாடா மோட்டார்ஸின் நிகர லாபம் 34 சதவீதம் குறைந்தது

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸின் நிகர லாபம், எதிர்பார்த்ததை விட 34 சதவீதம் குறைந்திருக்கிறது. செப்படம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அது பெற்றிருக்கும் நிகர லாபம் ரூ.347 கோடி. ஆனால் கடந்த வருடம் இதே காலாண்டில் அது பெற்றிருந்த லாபம் ரூ. 527 கோடி. கடந்த வருடத்தை விட 34 சதவீதம் குறைந்திருக்கிறது. வங்கியின் வட்டி விகிதம் <உயர்த்தப் பட்டிருப்பதை அடுத்து வாகன விற்பனை சரிந்திருப்பதாலும், வாகன தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை கடுமையாக <உயர்ந்துள்ளதாலும் நிகர லாபம் குறைந்து விட்டதாக சொல்கிறார்கள். ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால் இந்த காலாண்டில் மட்டும் டாடா மோட்டார்ஸ் 285 கோடி ரூபாயை இழந்திருக்கிறது. மேலும் வட்டி விகித <உயர்வால் இந்த நிறுவனம் கடுமையான நிதி சிக்கலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் டிரக் மற்றும் பஸ் சந்தையில் 60 சதவீத மார்க்கெட் ஷேரை வைத்திருக்கும், உலகின் ஐந்தாவது மிகப்பெரிய டிரக் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், இந்த காலாண்டில் 1,35,037 வாகனங்களை விற்றிருக்கிறது. ஆனால் இது, கடந்த வருடம் இதே காலாண்டின் விற்பனையை விட 1.1 சதவீதம் குறைவுதான். மேலும் இந்த காலாண்டில் டாடா மோட்டார்ஸின் மொத்த பங்கு மதிப்பு 16.7 சதவீதம் குறைந்து 140 கோடி டாலராகியிருக்கிறது. ஆனால் அதே நேரம், பங்கு சந்தையில் 4.5 சதவீதம் சரிந்திருக்கும்போது, டாடா மோட்டார்ஸின் ஆட்டோ பிரிவு இன்டக்ஸ் 2.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இந்தியா – ஈரான் நாடுகளிடையே விரைவில் விமான போக்குவரத்து

புதுடில்லி : ஈரானில் இருந்து விரைவில் இந்திய நகரங்களான கொச்சி மற்றும் டில்லிக்கு விமானங்கள் வர இருக்கின்றன. இந்தியா – ஈரான் நாடுகளிடையே மீண்டும் விமான போக்குவரத்தை துவங்குவதற்கு, சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இது குறித்த ஒப்பந்தம் விரைவில் இரு நாடுகளிடையே கையெழுத்தாக இருக்கிறது. விரைவில் மத்திய வெளியுரவு அமைச்சர் பிரனாப் முகர்ஜி ஈரான் செல்ல இருக்கிறார். அப்போது இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என்று சொல்லப்படுகிறது. இரு நாடுகளிலும் எந்தெந்த நகரங்களுக்கு எத்தனை விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்று பேசிக்கொள்ள இரு நாட்டு விமான கம்பெனிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது

ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் விற்பனை 5.31 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி : ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் கார் விற்பனை அக்டோபரில் 5.31 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் அக்டோபரில் 6,139 கார்களை விற்றிருந்த அந்த நிறுவனம், இந்த வருடம் அக்டோபரில் 6,465 கார்களை விற்றிருக்கிறது. இந்த அக்டோபரில் மல்டி யூடிலிடி வாகனமான செவர்லே தவேரா 855 விற்பனை ஆகி இருக்கிறது. செடன் மாடலான செவர்லே ஏவியோ மற்றும் ஏவியோ யு – விஏ 934 விற்றிருக்கிறது. சொகுசு காரான செவர்லே ஆப்ட்ரா 153 றம், சிறிய காரான செவர்லே ஸ்பார்க் 4,390 ம், செவர்லே கேப்டிவா 133 ம் விற்பனை ஆகியிருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா தெரிவித்திருக்கிறது. பொதுவாக இந்திய கார் சந்தை கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் எங்களது செவர்லே ஸ்பார்க் கார், அதன் அறிமுக நாளில் இருந்து இந்த அக்டோபரில்தான் அதிகம் விற்றிருக்கிறது என்கிறார் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் வைஸ் பிரசிடென்ட் பாலேந்திரன்.

இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது

புதுடில்லி : செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் ரூ.7,047.13 கோடி நிகர நஷ்டமடைந்திருக்கிறது. ஆனால் கடந்த வருடம் இதே காலாண்டில் ஐ.ஓ.சி., ரூ.3,817.75 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. இந்த நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளி<லுமே ஐ.ஓ.சி., நஷ்டம்தான் அடைந்திருக்கிறது. இதற்கு முன் அது, 2007 – 08 நான்காவது காலாண்டில்தான் நஷ்டத்தை சந்தித்திருந்தது. ரூபாயின் மதிப்பு குறைந்ததால் அதற்கு கிடைக்க வேண்டிய வெளிநாட்டு பண அளவு குறைந்து போனது, கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இன்வென்ட்ரி வேல்யூவேஷனில் ஏற்பட்ட இழப்பு, வங்கியின் வட்டி விகிதம் அதிகரித்திருப்பதால் அதிகரித்து விட்ட செலவினம் போன்ற காரணங்களால், இந்த காலாண்டில் நஷ்டம் ரூ.7 ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டதாக ஐ.ஓ.சி.,யின் சேர்மன் சர்தக் பெகுரியா தெரிவித்தார். ஆனால் நீண்ட இடைவேளைக்குப்பின் இன்று சனிக்கிழமையில் இருந்து அது லாபம் அடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். காரணம், கச்சா எண்ணெய் விலை கனிசமாக குறைந்திருப்பதுதான். இதுவரை பெட்ரோல் விற்பனையால் நஷ்டமடைந்து வந்த ஐ.ஓ.சி., இனிமேல் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்கும் போதும் ரூ.4.12 லாபம் அடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விற்பனையின் போது தொடர்ந்து நஷ்டம்தான் அடையும் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு லிட்டர் டீசலிலும் ரூ.0.96 ம், மண்ணெண்ணெயில் ரூ.22.40 ம், எல்.பி.ஜி.,யில் ரூ.343.49 ம் நஷ்டமடையும் என்கிறார்கள். இவைகளின் விற்பனையால் ஐ.ஓ.சி., நாள் ஒன்றுக்கு அடையப்போகும் நஷ்டம் ரூ.85 கோடி.

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 67 டாலராக உயர்ந்தது

நியுயார்க் : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.85 டாலர் உயர்ந்து 67.81 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 1.61 டாலர் உயர்ந்து 65.32 டாலராக இருந்தது. எனினும் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்து வருவதால், அதற்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிட்டால் அக்டோபர் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை மிக குறைவே. உலகில் அதிகம் பெட்ரோலை உபயோகிக்கும் நாடான அமெரிக்காவும் மற்ற நாடுகளும் பெட்ரோலிய உபயோகத்தை கனிசமாக குறைத்து விட்டதால் கச்சா எண்ணெய் விலை 32 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 147 டாலர் வரை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது வெறும் 67.81 டாலர்தான். பாதிக்கும் மேலே குறைந்திருக்கிறது. கடந்த வாரம் கூடிய ஓபக் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பேரல்கள் எண்ணெய் உற்பத்தியை அந்த நாடுகள் குறைத்த பின்னும் விலை ஒன்றும் அவ்வளவாக உயரவில்லை. ஓபக் நாடுகள் எண்ணெய் சப்ளையை குறைக்க இருப்பதாக வந்த தகவலால்தான் நேற்று கொஞ்சம் விலை உயர்ந்திருக்கிறது. குவைத்தும் அதன் பங்கிற்கு நவம்பர் மாதத்தில் 5 சதவீத சப்ளையை குறைக்கப்போவதாக அதன் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி விட்டது. நைஜீரியாவும் யுனைட்டட் அரபு எமிரேட்ஸ்ம் கூட சப்ளையை குறைக்கப்போவதாக சொல்லி விட்டது. ஆனால் உலகில் அதிகம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவுதி அரேபியா இதுவரை இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. ஓபக் அமைப்பு நாடுகள்ற இன்னும் 10 லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தியை தினமும் குறைக்க வேண்டும் என்றும், எண்ணெய் விலையை பேரல் ஒன்றுக்கு குறைந்தது 70 முதல் 80 டாலர் என்று முடிவு செய்ய வேண்டும் என்று வெனிசுலா சொல்லி வருகிறது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.432 சரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு 432 ரூபாய் குறைந்தது.

பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்துவந்ததைத் தொடர்ந்து பல முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை வேறு பக்கம் திசை திருப்பினர். இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதும் அதிகரித்தது. இதன் காரணமாக தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்றது. இருப்பினும் கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக தள்ளாட்டத்தில் இருந்தது. தீபாவளியை யொட்டி கடந்த வாரம் தங்கத்தின் விலை சற்றே ஏறி இருந்தது. இருப்பினும் கிராம் 1,100க்கு கீழ் வருமா என்ற சந்தேகம் இருந்தது.

பொருள் சந்தை முதலீட்டில் ஈடுபடுவோர், பங்குச் சந்தை முதலீட்டை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து இருந்தனர். தீபாவளியன்று நடந்த சிறப்பு பங்குச் சந்தை வர்த்தகத்தில் இருந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. நேற்று மட்டும் 800 புள்ளிகள் உயர்ந்தன. இதன் காரணமாக நேற்று தங்கத்தில் போட்ட முதலீட்டை சிலர் பங்குச் சந்தை பக்கம் மாற்ற முயன்றனர். லண்டனில் தங்கத்தின் விலை 2 சதவீதம் குறைந்தது.இதன் காரணமாக நேற்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 432 ரூபாய் குறைந்தது. கிராம் ஒன்றின் விலை ரூ.1,099 ஆகவும், ஒரு சவரன் ரூ.8,792 ஆகவும் இருந்தது.தொழில்துறையில் வெள்ளிக்கு அவ்வளவாக கிராக்கி இல்லாததால் அதன் விலையும் குறைந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.17.55 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.16,420 ஆகவும் இருந்தது.

மும்பையில் ஆபரண தங்கம் 10 கிராமிற்கு ரூ.305 குறைந்து ரூ.11,795 ஆக இருந்தது. சுத்த தங்கம் 10 கிராம் ரூ.11,855 ஆக இருந்தது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: