சிறிய முதலீட்டாளர்கள் ஒதுங்கி இருப்பதால் பங்குச் சந்தை ‘டல்’ : சேதுராமன் சாத்தப்பன்

மொபைல் போன்களில் தற்போது அதிகமாக சுற்றும் ஒரு ஜோக் என்ன தெரியுமா? பர்கர் வாங்கும் பணத்தில் ஒரு புளு சிப் பங்கை வாங்கி விடலாம். உதாரணமாக யுனிடெக் கம்பெனியின் ஒரு பங்கு 30 ரூபாய் அளவில் வந்தது. இது போல பல கம்பெனியின் பங்குகள் பர்கர் விலைக்கும் கீழே வந்தது. பணத்தை இழந்தவர்கள் மனம் விட்டு சிரிக்க முடியாவிட்டாலும், ஒரு வறட்டு சிரிப்பு சிரித்ததென்னவோ உறுதி. கடந்த சில வாரத்தைப் போலவே திங்களன்று சந்தை இன்னுமொரு பெரிய சரிவை சந்தித்தது. 1,000 புள்ளிகள் வரை சரிந்து 7,700 புள்ளிகளில் வந்து நின்றது. பார்த்தவர்களில் பலருக்கு நிச்சயம் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். காரணம், அமெரிக்க சந்தையில் கடந்த வாரம் வெள்ளியன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ஆசிய சந்தைகள் எல்லாம் திங்களன்று காலை கீழேயே துவங்கின. பல ஆசிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டு இறக்க அளவில் உள்ளன. இந்தியாவிலும் அதே நிலை நீடித்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்பது நிற்கவில்லை. ஆதலால், அடிமட்டத்தை தொட்டு வருகிறது. நல்ல புளூ சிப் பங்குகள் அடிமாட்டு விலைக்கு கிடைத்தாலும் வாங்க யாரும் தயாராக இல்லை. மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் ஒதுங்கியே இருக்கின்றனர். எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) விற்பதை நிறுத்தினால் மற்றவர்கள் பயமில்லாமல் உள்ளே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு, நிலைமையை சரிசெய்ய பெரிய அளவில் கட்டுமானத் திட்டங்களை கொண்டு வரலாம். அதன் மூலம் அரசு திட்டங்கள், கம்பெனிகளுக்கு கிடைக்கலாம். இது, வேலை வாய்ப்பையும், தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதே சமயம் சந்தையையும் ஊக்குவிக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ கட் மறுபடி செய்யப்படலாம். உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் எல்லாம் ஒன்று கூடி சந்தைகளை நிலைநிறுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. அது பலனளித்தால் சரிதான். இந்த முயற்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல நாடுகளின் கரன்சிகள் வலு கூடின. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயும் கூடியது. இந்திய சந்தையின் நிலை மட்டும் தான் இப்படியா என்று பலரும் நினைக்கலாம். ஜப்பானின் பங்குச் சந்தை கடந்த 26 ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. ஐரோப்பிய சந்தைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது. அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் காலாண்டு முடிவுகள், எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த ஆண்டின் காலாண்டு போலவே இருந்தது. ஸ்டேட் பாங்கின் காலாண்டு முடிவுகள் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகமாக இருந்தது. மியூச்சுவல் பண்டுகளில் இன்னும் ரிடம்ஷன் பிரஷர் அதிகமாக இருக்கிறது. அதாவது பிடுங்கிய வரை லாபம் என்று முதலீட்டாளர்கள் நினைக்கின்றனரோ என்னவோ? இந்திய கம்பெனிகள் வலுவானவை. சந்தை மிகவும் மலிந்துள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிச்சயம் வருவர். வந்தால் சந்தை கூடும்; சந்தை கூடினால் இந்திய முதலீட்டாளர்களும் வருவர்

 

 பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தன

மும்பை : மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தக ஆரம்பித்ததிலேயே நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. வர்த்தகம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், சென்செக்ஸ் 792.03 புள்ளிகள் உயர்ந்து 9,836.54 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 214.80 புள்ளிகள் உயர்ந்து 2,911.85 புள்ளிகளாக இருந்தது. இந்த வாரம் திங்கட்கிழமை வரை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வந்த பங்கு சந்தை, செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் மட்டும் நடந்த முகுரத் வர்த்தகத்தின் போது 500 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. அதற்கு அடுத்த நாளும் சந்தையில் முன்னேற்றம் தான் காணப்பட்டது. நேற்று விடுமுறைக்குப்பின் இன்று துவங்கிய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களியையே மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், ஆயில்,பேங்கிங், டெலிகாம், ஐ.டி., ஆட்டோ மற்றும் கேப்பிட்டல் குட்ஸ் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன. சென்செக்ஸ் அதிகபட்டமாக 9,870.42 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் வர்த்தக முடிவில், நேற்றைய நிலையில் இருந்து 743.55 புள்ளிகள் ( 8.22 சதவீதம் ) உயர்ந்து 9,788.06 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி அதிகபட்சமாக 2,921.35 புள்ளிகள் வரை உயர்ந்து, பின்னர் முடிவில் 188.55 புள்ளிகள் ( 6.99 சதவீதம் ) உயர்ந்து 2,885.60 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று அதிகம்ற <உயர்ந்திருந்தது மகிந்திரா அண்ட் மகிந்திரா பங்குகள்தான். 23 சதவீதம் <உயர்ந்திருந்தது. ஹெச்டிஎஃப்சி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஹிண்டல்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், டாடா கம்யூனிகேஷன், ஹெச்.சி.எல் டெக், கெய்ர்ன் இந்தியா, ஐடியா செல்லுலார் ஆகியவை 10 முதல் 18 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி 5 சதவீதம் இறங்கியிருந்தது. ஹாங்காங்கின் ஹேங்செங்க் 2.52 சதவீதம், சீனாவின் ஷாங்காய் 1.97 சதவீதம், சிங்கப்பூரின் ஸ்டெயிட் டைம்ஸ் 0.43 சதவீதம் இறங்கியிருந்தது. ஆனால் ஜகர்த்தா, கோஸ்பி, தைவானில் 2.6 சதவீதத்தில் இருந்து 7.06 சதவீதம் உயர்ந்திருந்தது.

பணவீக்கம் குறைவதால் பலன் வருமா?

புதுடில்லி : கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத வகையில், பணவீக்கம் 10.68 சதவீதமாகக் குறைந்தது. இதனால், இதுவரை ரிசர்வ் வங்கியும், அரசும் எடுத்த நடவடிக்கைகள் பலன் தரத் துவங்கியது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நிதியமைச்சகக் கருத்துப்படி, முக்கியமான 30 பொருட்கள் விலை சிறிது குறைவே. இதுவரை 11 சதவீதம் என்று அச்சுறுத்திய அளவில் இருந்து 10.68 சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. பணவீக்கம் குறைவதால், ரிசர்வ் வங்கி இனி மேலும் ‘வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை’ குறைக்க வாய்ப்பு அதிகம் என்று எச்.டி.எப்.சி., வங்கி தலைமை பொருளாதார நிபுணர் பரூவா கருத்து தெரிவித்திருக்கிறார். பொதுவாக கடந்த சில நாட்களாக வங்கிகளும், பெரிய நிறுவனங்களும் சந்தித்து வரும் நிதி நெருக்கடி குறைய வேண்டும் என்ற கட்டத்திற்கு அரசு சிந்தித்து, அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இல்லாவிட்டால், தொழில் துறை தேக்கம் ஏற்படும் போது அதிகளவு வேலைவாய்ப்பு குறையும். தற்போது, அதிகளவில் எண்ணிக்கை இருப்பதாகக் கூறி பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பல பெரிய நிறுவனங்கள் இறங்கியிருப்பதாக பேச்சு உள்ளது. அதே சமயம், தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதும், பலன் இருக்காது என்றும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகம் சரிவதை எளிதில் தடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்ற பேச்சே இல்லை என்று பெட்ரோலிய அமைச்சர் தியோரா கருத்து தெரிவித்தார். சமையல் காஸ் விலை மட்டும் குறையும் என்று வெளியான தகவலையும் நேற்று அவர் மறுத்தார்.

ஜப்பானில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 0.2 சதவீதம் குறைந்திருக்கிறது

டோக்கியோ : இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜப்பானின் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 0.2 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 4.2 சதவீதமாக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை, செப்டம்பர் மாதத்தில் 4 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பான் கடுமையான பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும், அது வீழ்ந்து விடும் அபாயம் இருப்பதாகவும் அச்சப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், வேலையில்லாதோர் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்திருப்பது அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பரில் வெறும் 20,000 ஆக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை, இந்த வருடம் செப்டம்பரில் 27,10,000 ஆக உயர்ந்திருக்கிறது. ஜப்பான் மக்களின் வாங்கும் திறனும் கடந்த வருடத்தை விட 2.3 சதவீதம் குறைந்திருக்கிறது. தொடர்ந்து ஏழாவது மாதமாக இது குறைந்துகொண்டே வருகிறது. இந்த நிதி ஆண்டின் இரு காலாண்டிலுமே ஜப்பானின் பொருளாதாரம் சரிந்துதான் வந்திருக்கிறது.

சிங்கூர் நிலத்தை டாடா திருப்பி கொடுக்க வேண்டும் : இடதுசாரி கட்சி கோரிக்கை

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் இருந்து டாடா மோட்டார்ஸ் வெளியேறி விட்டதால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த இடத்தை அவர்கள் அரசாங்கத்திடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அங்குள்ள ஆளும் கட்சியான இடதுசாரி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கூரில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அங்கிருந்து முழுமையாக டாடா வெளியேறி விட்டது. அங்கு தயாரிக்கப்படுவதாக இருந்த டாடாவின் நானோ கார் திட்டம்ற இப்போது குஜராத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. ஆனால் அந்த இடம் இன்னமும் டாடாவிடம் தான் இருக்கிறது. அந்த இடத்தை அரசாங்கம் பெற்று அந்த இடத்தை வேறு தொழிற்சாலைக்கு கொடுத்து அங்கு தொழில் துவங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆளும் இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ் தெரிவித்துள்ளார். அந்த இடம் விவசாயிகளுக்கும் திருப்பி கொடுக்கப்படாமல், அல்லது வேறு தொழிற்சாலையும் அமைக்கப்படாமல் இருந்தால், அந்த இடம் ஏலம் விடப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இது குறித்து நடந்த இடதுசாரி முன்னணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல் அமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்ஜி, அந்த இடத்தில் டாடாவே வேறு தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்றார்.

மலேஷியன் ஏர்லைன்ஸ் இல் இனிமேல் செட்டிநாடு சிக்கன், கொடைக்கானல் மட்டன் சாப்பிடலாம்

கோலாலம்பூர் : மலேஷியன் ஏர்லைன்ஸ் இல், நாளை முதல் அதன் எல்லா கிளாஸ்களிலும் புதிய இந்திய உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. அதில் செட்டிநாடு சிக்கன், கொடைக்கானல் மட்டன் போன்ற பிரபல தமிழ்நாட்டு உணவு வகைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கட்டண வேறுபாடின்றி, அதன் எல்லா சர்வதேச விமான சேவையிலும் புதிய மாற்றி அமைக்கப்பட்ட இந்திய உணவுகள் நாளை முதல் பரிமாறப்படும் என்று மலேஷியன் ஏர்லைன்ஸ் ஜெனரல் மேனேஜர் ஹையத் அலி தெரிவித்தார். ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய ஹலால் பெஞ்ச்மார்க்குடன் கூடிய மிக சிறந்த, ருசியான இந்திய உணவு வகைகளை நாங்கள் பயணிகளுக்கு பரிமாற இருக்கிறோம் என்றார் அலி. மலேஷியன் ஏர்லைன்ஸ் இன் முக்கிய உணவு சப்ளையரான எல்.எஸ்.ஜி ஸ்கைசெஃப், தாஜ் சேட்ஸ் ஹோட்டலின் செ ஃப் களான சதீஸ் அரோரா மற்றும் கண்ணன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இந்த புதிய சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மலேஷியாவுக்கும் இந்தியாவுக்குமிடையே பறக்கும் எல்லா மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானங்களிலும் இந்த புதிய உணவு பரிமாறப்படும். விமானங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அளவின் படி, புதிய உணவு பட்டியலில் பிரபல செட்டிநாடு சிக்கன், கொடைக்கானல் மட்டன், கேரள வெஜிடேரியன் கறி, செட்டிநாடு காலிஃபிளவர்/காளான் கறி, கோங்ரா மட்டன் மற்றும் வெஜிடேரியன் பிரியாணி போன்றவைகள் சேர்க்கப்பட்டிருக்கிறது

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகி 3 மாதங்களுக்குப்பின், இப்போது இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கான திருத்தி அமைக்கப்பட்ட இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இது குறித்து நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி இன்று நிதி அமைச்சர் சிதம்பரம் விளக்கினார். அப்போது, இன்சூரன்ஸ் துறை சம்பந்தமான சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும், முக்கியமாக, தனியார் இன்சூரன்ஸ் துறையில் இப்போது 26 சதவீதமாக இருக்கும் அந்நிய நேரடி முதலீடு, இனிமேல் 49 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.மத்திய அரசின் இந்த முடிவை இடதுசாரி கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. எனினும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்படுவதால் ஏராளமான முதலீடு இந்தியாவுக்குள் வரும் என்றும் அது, நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கடந்த நான்கு வருடங்களாக இதைத்தான் இடதுசாரி கட்சிகள் எதிர்த்து வந்தார்கள்.மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அவர்கள் விலக்கிக்கொண்டபின்புதான் மத்திய அரசால் இன்சூரன்ஸ் துறையில் மாற்றங்களை கொண்டு வர முடிந்திருக்கிறது

இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும்போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் ? : சிதம்பரம்

புதுடில்லி : இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும் போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் என்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கேட்டுள்ளார். சமீபத்தில் அசோசெம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இன்னும் 10 வருடங்களில் இந்தியாவின் முக்கிய துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 25 முதல் 30 சதவீதத்தினர் வேலை இழக்க நேரிடும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்து இன்று பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், இந்தியாவில் 7 சதவீத வளர்ச்சி இருக்கும்போது எப்படி வேலை இழப்பு ஏற்படும் என்று கேள்வி எழுப்பினார். புதிய வேலை வாய்ப்பு உருவாகுதல் வேண்டுமானால் குறையுமே ஒழிய ஏற்கனவே இருக்கும் வேலையில் பாதிப்பு வராது என்றார் அவர். விமான போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், ஸ்டீல், நிதி சேவை, ரியல் எஸ்டேட், சிமென்ட், கட்டுமானம் ஆகிய ஏழு துறைகளில் இன்னும் 10 வருடங்களில் 25 முதல் 30 சதவீதம் வரை வேலை இழப்பு ஏற்படும் என்று சொன்ன அசோசெம்மின் கருத்தை, இன்னொரு தொழில் துறை அமைப்பான எஃப்.ஐ.சி.சி.ஐ.,யும் மறுத்திருக்கிறது. இது குறித்து சிதம்பரம் மேலும் தெரிவித்தபோது, இந்தியாவின் 7 சதவீத வளர்ச்சியால், தே. ஜ. கூட்டணி ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட மொத்த வேலை வாய்ப்பை விட இப்போது கூடுதலாகத்தான் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது என்றார். அவர்கள் ஆட்சியில் வளர்ச்சி 5.8 சதவீதமாகத்தான் இருந்தது. இப்போது எழும் இம்மாதிரியான கேள்விகள் அப்போது ஏன் எழவில்லை என்றார் அவர். அமெரிக்க பொருளாதாரம் வீழ்ந்து வருவதை குறித்து அவரிடம் கேட்டபோது, உலக அளவில் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானால் அது முன்னேறிய நாடுகளை வெகுவாக பாதிக்கும். அதே நேரம் இந்தியாவில் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். இந்திய பொருளாதாரம், உள்நாட்டு பயன்பாடு மற்றும் முதலீட்டை சார்ந்தே அமைந்திருக்கிறது. இங்கு ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்பு என்பது சீனாவை போல் அவ்வளவு கடுமையானதாக இருக்காது என்றார்

இரும்பு கம்பி விலை இறங்குமுகம் : டன் ரூ. 20 ஆயிரம் குறைந்தது

கோவை : இரும்புக் கம்பி விலை டன்னுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளதால் கோவையிலுள்ள, இரும்புக் கம்பி, உருக்காலைகளில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் கட்ட பயன்படுத்தும் ஐ.எஸ்.ஐ., தரமுள்ள முருக்கு கம்பிகள், டன் ஒன்றுக்கு அதிகபட்சமாக 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. எதிர்பாராதவிதமாக, சர்வதேச அளவில் ஏற்பட்ட விலை இறக்கம் காரணமாக, இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ‘ஆர்டர்’ ரத்தானது. சர்வதேச அளவில் எண்ணெய் விலை சரிவு, தங்கம் விலை சரிவால், இரும்புக் கம்பி விலை படிப்படியாக குறைந்து, டன் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்தது. ஐ.எஸ்.ஐ., தரமுள்ள முருக்கு கம்பி டன் ஒன்றுக்கு 52 ஆயிரம் ரூபாய்க்கும், ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத கம்பி 48 ஆயிரம் ரூபாய்க்கும் கடந்த மாதம் விற்றது. அதே கம்பி தற்போது, டன் 32 ஆயிரம் ரூபாய்க்கும், ஐ.எஸ்.ஐ., அல்லாத கம்பி 30 ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கிறது. அதிக விலைக்கு கம்பி விற்றதால், வியாபாரிகள் அதிகபட்சமாக இருப்பு வைத்தனர். மார்க்கெட்டில் சரிவு ஏற்பட்டு, டன் 20 ஆயிரம் ரூபாய் வரை குறைந்தது. கம்பி உற்பத்தி செய்ய தேவையான இரும்பு பார் (இன்கார்டு)தயாரிக்கும் இரும்பு உருக்கு ஆலைகளுக்கு, பழைய இரும்பு கிடைக்காமல் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் பழைய இரும்பு டன் 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தற்போது, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. குறைந்த விலைக்கு விற்பனையாவதால், இருப்பு வைத்த வியாபாரிகள், இரும்பு ஆலைகளுக்கு விற்பனை செய்யாமல் தாமதம் செய்து வருகின்றனர். கோவையிலுள்ள இரும்பு உருக்கு ஆலைகளில், இரும்பு பார் (இன்கார்டு) உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இரும்பு வியாபாரிகள் கூறுகையில், ‘எல்லாமே சர்வதேச நிலவரம் தான். தங்கம், பெட்ரோல், இரும்பு, பங்கு வர்த்தகம் என்று எல்லாமே சர்வதேச மார்க்கெட்டாகி விட்டது. இந்த வர்த்தகம் ஒரு பக்கம் நல்லவையாக இருந்தாலும், மறு பக்கம் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்றனர்.

இந்தியன் ஆயில் கார்பரேஷன் விமானங்களுக்கான எரிபொருள் விலையை குறைக்கிறது

புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதை அடுத்து விமானங்களுக்கான எரிபொருள் விலையை இன்று நள்ளிரவு முதல், கி.லி.,க்கு ரூ.6,000 குறைப்பதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் அறிவித்திருக்கிறது

600 ஆண்டுகளுக்கு முன்பும் வந்திருந்த சுனாமி

பாரீஸ் : கடந்த 2004 டிசம்பரில் இந்தியா உள்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளை கடுமையாக தாக்கி சுமார் 5 லட்சம் பேரை பலிவாங்கியதைப்போன்றதொரு சுனாமி, 600 ஆண்டுகளுக்கும் முன்பும் ஒரு தடவை வந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேச்சர் என்ற அறிவியல் இதழில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது வந்த சுனாமியும் இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்தைதான் அதிகம் பாதித்திருக்கிறது

உரிமை பங்கு வெளியீட்டை நிறுத்தியது சுஸ்லான்

மும்பை : ரூ.1,800 கோடி மதிப்புள்ள உரிமை பங்குகளை வெளியிடுவதாக இருந்த சுஸ்லான் இந்தியா, அதனை நிறுத்தி விட்டதாக மும்பை பங்கு சந்தைக்கு தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் அதன் மற்ற வளர்ச்சி திட்டங்களை இது பாதிக்காது என்று தெரிவித்திருக்கிறது

ஓமனில் ஹெவி இஞ்சினியரிங் வசதியை ஏற்படுத்துகிறது எல் அண்ட் டி

மும்பை : ஹைட்ரோகார்பன் துறைக்கு பயன்படுத்தும் ஹை – பிரசர் ஹீட் எக்சேஞ்சர்கள் மற்றும் ரியாக்டர்கள் தயாரிப்பு கூடம் ஒன்றை ஓமன் நாட்டில் <உள்ள சோகர் நகரில் எல் அண்ட் டி அமைக்கிறது . இதற்காக ஆரம்பத்தில் 50 மில்லியன் டாலர்களை அது முதலீடு செய்கிறது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: