இந்திய பங்கு சந்தைக்கு இன்று கருப்பு வெள்ளி : சென்செக்ஸ் 1070 புள்ளிகள் குறைந்தது

மும்பை : இந்திய முதலீட்டு சந்தை வரலாற்றில் இன்று ஒரு மோசமான நாளாக, கருப்பு வெள்ளியாக இருந்தது. மிக அதிக அளவில் பங்குகள் விற்பனைக்கு வந்ததால் பெஞ்ச்மார்க் இன்டக்ஸ் குலைந்து போனது. சென்செக்ஸ் 11 சதவீதமும் நிப்டி 13 சதவீதமும் விழுந்து விட்டது. காலையில் இருந்தே சரிந்து கொண்டே வந்த சென்செக்ஸ், மதியத்திற்கு மேல் வேகமாக குறைய ஆரம்பித்தது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1070.63 புள்ளிகள் ( 10.96 சதவீதம் ) குறைந்து 8,701.07 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 359.15 புள்ளிகள் ( 12.20 சதவீதம் ) குறைந்து 2,584.00 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. உலகம் முழுவதுமே இன்று பங்கு சந்தைகளில் கடுமையான விற்பனை இருந்தது. அமெரிக்காவிலும் அதிக அளவில் பங்குகள் விற்கப்பட்டதால் டவ் ஜோன்ஸ் மற்றும் எஸ் அண்ட் பி 500 குறியீட்டு எண்கள் அதன் அதிகபட்ச குறைவு எல்லையை எட்டிவிட்டன. மாலை நான்கு மணி நிலவரப்படி ஐரோப்பாவின் எஃப்.டி.எஸ்.இ., சி.ஏ.சி., டி.ஏ.எக்ஸ்., போன்றவைகள் 7.5 முதல் 9.5 சதவீதம் வரை குறைந்திருந்தது. ஆசிய சந்தைகளிலும் இன்று கடும் வீழ்ச்சிதான். கொரியாவின் கோஸ்பி 10.57 சதவீதம் குறைந்திருந்தது. ஜப்பானின் நிக்கி 9.6 சதவீதம், ஹாங்காங்கிங் ஹேங் செங் மற்றும் சிங்கப்பூரின் ஸ்டெயிட் டைம்ஸ் 8.3 சதவீதம், ஷாங்கை, தைவான் மற்றும் ஜகர்தா முறையே 1.92, 3.19, மற்றும் 6.91 சதவீதம் குறைந்திருந்தன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது என்று கிரிடிட் சுசி நிறுவனம் தெரிவிக்கிறது. . பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த காலாண்டில் 0.5 சதவீதம் ( காலாண்டுக்கு காலாண்டு கணக்குப்படி ) குறைந்திருக்கிறது. கடந்த 1992க்குப்பின் இப்போதுதான் இவ்வளவு சரிந்திருக்கிறது. தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 700 டாலருக்கும் கீழே போய் விட்டது. கச்சா எண்ணெய் விலை, நியுயார்க் மெர்கன்டைல் மார்க்கெட்டில் பேரலுக்கு 64.5 டாலருக்கு வந்து விட்டது.

மாருது சுசுகியின் நிகர லாபம் 37 சதவீதம் குறைந்திருக்கிறது

புதுடில்லி : இந்தியாவின் மிகப்பெரிய கார் கம்பெனியான மாருதி சுசுகியின் நிகர லாபம் 37 சதவீதம் குறைந்திருக்கிறது.செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் அது பெற்றிருந்த நிகர லாபம் ரூ.296 கோடி. இது இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் ரூ.467 கோடியாக இருந்தது. நிகர லாபம் குறைந்ததற்கு கார்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்ததும், தேய்மான செலவு அதிகம் ஆகியிருந்ததும் காரணம் என்கிறார்கள். ஆனால் இதன் விற்பனை ரூ.4,547 கோடியில் இருந்து ரூ.4,806 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதன் விற்பனையை கருத்தில் கொண்டு நிகர லாபம் ரூ.369 கோடியாக இருக்கும் என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் கணித்திருந்தது. ஆனால் அது தவராகி விட்டது. ஜப்பானின் சுசுகி மோட்டார் கார்பரேஷன் 54.2 சதவீத பங்குகளை வைத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனத்திற்கு இந்திய கார் சந்தையில் 50 சதவீதம் வரை மார்க்கட் ஷேர் இருக்கிறது. இதன் பிரபல மாடல்களான ஆல்டோ, ஸ்விவிட் போன்ற சிறிய கார்களும் அதன் பிரீமியம் மாடலான டிசையரும் மக்களிடையே பிரபலமான மாடல்கள்.

யுனைட்டட் புருவெரீஸ் ( யு.பி.) இன் நிகர லாபம் 50 சதவீதம் குறைவு

பெங்களுரு : இந்தியாவின் மிகப்பெரிய மதுபான விற்பனையாளரான யுனைட்டட் புருவெரீஸின் நிகர லாபம் 50 சதவீதம் குறைந்திருக்கிறது. செப்டம்பர் 30 ம் தேதியுடன் முடிந்த இந்த வருட இரண்டாவது காலாண்டில் அது பெற்றிருந்த நிகர லாபம் ரூ.5.1 கோடி மட்டுமே. இதுவே இதற்கு முந்தைய வருடத்தில் ரூ.10.5 கோடியாக இருந்தது. அந்த நிறுவனம், அதன் விற்பனை அபிவிருத்தி மற்றும் விளம்பரத்திற்காக செலவு செய்யும் பணத்தில் 27 சதவீதத்தை கடந்த ஆறு மாதங்களாக குறைத்து விட்டது தான் இந்த வருமான இழப்பிற்கு காரணம் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் இந்திய மதுபான மார்க்கெட்டில் அதற்கு இருக்கும் 40 சதவீத மார்க்கெட் ஷேரை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. யு.பி.,க்கு அடுத்த இடத்தில் இருக்கும் எஸ்ஏபி மில்லர் என்ற மதுபான நிறுவனம் 35 சதவீத மார்க்கெட் ஷேரை வைத்திருக்கிறது. ஆனால் யுடைட்டர் புருவெரீஸின் மொத்த விற்பனை 28 சதவீதம் அதிகரித்து ரூ.361 கோடிக்கு நடந்திருக்கிறது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட இடைக்கால நிதிக்கொள்கை மதிப்பீட்டு அறிக்கை

மும்பை : ரிசர்வ் வங்கி அதன் இடைக்கால நிதிக்கொள்கை மதிப்பீட்டு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

 

* சி.ஆர்.ஆர்.என்று சொல்லப்படும் ரிசர்வ் வங்கியில் மற்ற வங்கிகள் வைத்திருக்க வேண்டிய கட்டாய ரொக்க கையிருப்பு விகிதம் மாற்றப்படாமல் 6.5 சதவீதமாகவே இருக்கும்.

* ரீபோ ரேட் மற்றும் ரிவர்ச் ரீபோ ரேட் ஆகியவை முறையே 8 சதவீதமாகவும் 6 சதவீதமாகவும் இருக்கும்.

* பேங்க் ரேட் தொடர்ந்து 6 சதவீதமாகவே இருக்கும்

* 2008 – 09 ல் ஜி.டி.பி., 8 சதவீதமாக இருக்க வேண்டும் என்று ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த இலக்கு, இப்போது 7.5 – 8 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

* 2009 மத்தியில் பணவீக்கத்தை 7 சதவீதமாக குறைக்க வேண்டும்.

* கூடிய விரைவில் பணவீக்கத்தை 5 சதவீமாக குறைக்க வேண்டும்.

* இடைக்காலத்தில் பணவீக்கம் 3 சதவீதமாகத்தான் இருக்க வேண்டும்.

* இரட்டை இலக்க பணவீக்கம் இப்போது ஒரு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.

* சமீபத்தில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை அடுத்து வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது.

ஆசிய பங்கு சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி

சியோல் ( கொரியா ) : ஆசிய பங்கு சந்தைகள் இன்று கடும் சரிவில் தான் நடந்து கொண்டிருக்கின்றன. கொரிய பங்கு சந்தைதான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கொரியாவின் காம்போசைட் இன்டக்ஸ் இன்று 1000 புள்ளிகளுக்கும் கீழே போய் விட்டது. கடந்த மூன்று வருடங்களில் இவ்வளவு சரிவை அது சந்தித்தது இல்லை. கொரியாவின் காம்போசைட் இன்டக்ஸ் 67 புள்ளிகள் குறைந்து 982 புள்ளிகளுக்கு வந்து விட்டது. காலை வர்த்தகம் ஆரம்பித்த இரண்ரை மணி நேரத்தில் அது இந்த நிலைக்கு வந்துவிட்டது. கொரிய பங்கு சந்தை வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஜூன் 30,2005 க்குப்பின் இன்று தான் 1000 புள்ளிகளுக்கும் கீழே சென்றிருக்கிறது. கடந்த ஜூன் 29,2005 ல்தான் அது 1000 புள்ளிகளுக்கும் கீழே சென்றிருந்தது. இந்த வருடம் மட்டும் இதுவரை கொரிய பங்கு சந்தை 47.7 சதவீத புள்ளிகளை இழந்திருக்கிறது. இவ்வளவு இழப்பிற்கும் காரணம், அங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவு பங்குகளை விற்று முதலீட்டை திரும்ப எடுத்துக்கொண்டதால்தான். கொரியா தவிர ஜப்பானிலும் காலை வர்த்தகத்தில் நிக்கி 622 புள்ளிகளை இழந்திருந்தது. ஹாங்காங்கின் ஹேங் செங் 532 புள்ளிகள், தைவான் வெயிட்டட் இன்டக்ஸ் 147 புள்ளிகள், சிங்கப்பூரின் ஸ்டெயிட் டைம்ஸ் 60 புள்ளிகள்,ஷாங்கை காம்போசைட் இன்டக்ஸ் 10 புள்ளிகளை இழந்திருக்கின்றன

பங்கு முதலீட்டாளர் பீதி அடைய வேண்டாம் : சிதம்பரம் வேண்டுகோள்

புதுடில்லி : கடந்த சில நாட்களாக பங்கு சந்தையில் நிலவி வரும் கடும் வீழ்ச்சியை கண்டுவரும் முதலீட்டாளர்கள், சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றுள்ளதால் பீதி அடைந்துள்ளனர். பெரும்பாலான பெரிய நிறுவனங்களின் பங்குகள் அதன் மதிப்பை இழந்துள்ளன. இதனால் தங்களிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு மேலும் குறைந்து போவதற்குள் விற்று, ஏதோ கொஞ்சம் பணத்தையாவது காப்பாற்றிக்கொள்வோமே என்று, கிடைத்த பணத்திற்கு பங்குகளை விற்று வருகின்றனர். பங்கு சந்தையில் அதிக அளவில் விற்பனை நடந்து வருவதாலேயே சந்தை சரிந்து வருகிறது. இதனையடுத்து நேற்று மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில், பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் சந்தை சரிந்து வருவதை கண்டு பீதி அடைய வேண்டாம் என்றும் அவசரம் அவசரமாக பங்குகளை விற்க வேண்டியதில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். கிழக்கு ஆசிய பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருவதால் மட்டுமே இந்திய சந்தையும் வீழ்ந்து விடும் என்று அர்த்தமில்லை. எனவே முதலீட்டாளர்கள் பீதி அடைந்து பங்குகளை விற்க வேண்டாம். அவசரப்படாமல் நிதானமாக திர்மானித்து விற்பதை பற்றி முடிவு செய்யலாம் என்று அவர் முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை தெரிவித்தார். அன்னிய முதலீட்டாளர்கள் பலர் பெருமளவு பணத்தை இந்திய சந்தையில் இருந்து எடுத்துக்கொண்டதால், ரூபாயின் மதிப்பு குறைந்து, இங்கு கேப்பிட்டலில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. எனினும் அன்னிய முதலீட்டாளர்களிடமிருந்து, எடுத்துக்கொண்ட பணத்தை திரும்ப பெற வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இந்த குழப்பங்கள் எல்லாம் சரியாகி விட்டதும் மீண்டும் இந்தியாவுக்குள் பெருமளவு பணம் வந்து விடும். அவைகள் இ.சி.பி., எஃப்.சி.என்.ஆர்., என்.ஆர்.இ.,வழியாக இங்கு வந்து சேரும். அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ( எஃப்.ஐ.ஐ.) பிரச்னை தீர்ந்து விட்டால், அவர்கள் இந்திய கார்பரேட் மற்றும் அரசாங்க கடன் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். எனவே அதுவரை பொறுமை காக்குமாறு முதலீட்டாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: