கள்ள நோட்டின் மையமாக திகழும் சென்னை

புதுடில்லி : இந்தியாவில் புழக்கத்தில் விடப்படும் பெரும்பகுதி கள்ள நோட்டுக்கள் தென் இந்தியாவில் இருந்துதான் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் சென்னை தான் இதற்கு ஒரு மையமாக திகழ்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.வெளிநாடுகளில் பிரின்ட் செய்யப்படும் கள்ள இந்திய ரூபாய் நோட்டுக்கள் முதலில் சென்னைக்கு வந்து பின்னர் அங்கிருந்து தான் நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்கின்றனவாம். தமிழ்நாட்டில் பல துறைமுகங்கள் இருப்பது கள்ள நோட்டுகள் உள்ளே வருவதற்கு வசதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டுக்குள் வரும் ஹவாலா பணத்துடன் கள்ள ரூபாய் நோட்டுகளும் கலக்கப்படுகின்றனவாம். சமீபத்தில் தமிழ்நாட்டுக்குள் வந்த ரூ.200 கோடி ஹவாலா பணம் இதனை உறுதி செய்வதாகவும், சென்னை இதில் முக்கிய பங்கு வைப்பதும் தெரிய வந்துள்ளதாக சொல்கிறார்கள். பாகிஸ்தானில் தான் பெருமளவு இந்திய ரூபாய் நோட்டுக்கள் பிரின்ட் செய்யப்படுகின்றன. அவைகள் முதலில் அங்கிருந்து அரபு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. பின்னர் அது அங்கிருந்து மலேஷியா செல்லும் வழியில் சென்னையில் இறக்கப்படுகின்றன என்று நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியாவுக்கு கள்ள நோட்டுக்களை கொண்டு வர இன்னொரு வழியும் பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து கள்ள ரூபாய் நோட்டுக்கள் முதலில் நேபாளம் போய், பின் அங்கிருந்து உத்தர பிரதேசம் மற்றும் பீகார் வழியாக இந்தியாவுக்குள் வருகிறதாம்.

வங்கிகளுக்கான வட்டியை ஒரு சதவீதம் குறைத்தது ரிசர்வ் வங்கி

மும்பை : வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வாங்கும் குறைந்த கால கடனுக்கான வட்டியை ( ரெபோ ) ஒரு சதவீதம் குறைத்திருக்கிறது. இதனால் இதுவரை 9 சதவீத வட்டிக்கு ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கிக்கொண்டிருந்த மற்ற வங்கிகள் இனிமேல் 8 சதவீத வட்டிக்கு கடன் வாங்க முடியும். 2004 ம் ஆண்டிற்குப்பின் இப்போதுதான் ரெபோ 8 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன்மூலம் இனிமேல் வங்கிகள் தாராளமாக கடன் கொடுக்க முடியும்.வீட்டு கடன், கன்சூமர் குட்ஸ்கான கடன், கார்பரேட் மற்றும் பெர்சனல் லோன் போன்றவற்றிற்கான வட்டி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து புதுடில்லியில் பத்திரிக்கையாளர்களியே பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், இதன் மூலம் முதவீட்டார்கள் பயன்பெறுவார்கள் என்றார்.ஹெச்.டி.எஃப்.சி., பேங்க் டெபுடி டிரசரர் ஆஷிஸ் பார்த்தசாரதியும் இது மிகவும் வரவேற்கத்தக்கது என்றார். ஏற்கனவே, ரிசர்வ் வங்கியில் மற்ற வங்கிகள் வைத்திருக்க வேண்டிய கட்டாய பண கையிருப்பு விகிதம் ( சி.ஆர்.ஆர்.,) 5 வருடங்களுக்குப்பின் 2.5 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதையும் இன்னும் சில சலுகைகளையும் சேர்த்து மொத்தமாக ரூ.1,45,000 கோடி பணப்புழக்கம் இந்தியாவில் கூடியுள்ளது.

அமெரிக்க பொருளாதார மந்தநிலையால் கோவை மாவட்ட ஜவுளி தொழில் பாதிப்பு

கோயம்புத்தூர் : அமெரிக்காவில் சமீப காலமாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜவுளி தொழில் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறது.அங்கு நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலைகள் குறைந்த அளவே ஏற்றுமதி ஆர்டர்களை வைத்திருக்கின்றன. ஜவுளிக்கு புகழ்பெற்ற திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதி 15 சதவீதமும், பின்னலாடை ஏற்றுமதி 5 சதவீதமும் குறைந்திருக்கிறது என்கிறார்கள். இதுவரை அதிக அளவில் ஆர்டர் கொடுத்து வந்தவர்கள் எல்லோரும் இப்போது அளவை குறைத்துக்கொண்டார்கள். பின்னலாடை ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கே அதிக அளவு அன்னிய செலாவனியை ஈட்டிக்கொடுத்து வந்தது திருப்பூர். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பின்னலாடையில் 50 சதவீதம் வரை திருப்பூரில் இருந்தே ஏற்றுமதி ஆகிறது. வருடா வருடம் இங்கிருந்து ரூ.14,000 கோடி மதிப்புள்ள ஜவுளியும் ரூ.16,500 கோடி மதிப்புள்ள பின்னலாடையும் ஏற்றுமதி ஆகும். ஆனால் இந்த வருடத்தில் அதில் 5 சதவீதம் வரை குறைந்து விடும் என்று சொல்கிறார்கள்.

சீன விமான கம்பெனிகளுக்கும் பெரும் நஷ்டமே

பெய்ஜிங் : உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக சீன பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்துள்ளதாலும், விமானங்களுக்காக பயன்படுத்தும் எரிபொருளின் விலை உயர்ந்து வருவதாலும் சீன விமான கம்பெனிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனால் அங்குள்ள விமான கம்பெனிகள் தொடர்ந்து இயங்குவதற்கு தள்ளாடுகின்றன.தேசிய விமான நிறுவனமான ஏர் சைனா மற்றும் ஷாங்கையை சேர்ந்த சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகியவை கடந்த ஒன்பது மாதங்களாகவே நஷ்டமடைந்துகொண்டுதான் இருக்கின்றன. பொருளாதார மந்த நிலை காரணமாகவும் எரிபொருள் விலை உயர்ந்து வருவதுமே இதற்கு காரணம் என்று அவைகள் தெரிவிக்கின்றன. ஒலிம்பிக் போட்டிகளுக்குப்பின் எதிர்பார்த்த அளவுக்கு விமான பயணிகள் வராததாலும் நஷ்டத்திற்கு காரணம் என்கிறார் சைனா ஈஸ்டர்ன் நிறுவனத்தின் சீனியர் அதிகாரி ஒருவர். இந்த ஆண்டின் முதல் பாதியில் சீன கரன்சி யுவானின் மதிப்பு உயர்ந்திருந்ததால் அப்போது சீன விமான கம்பெனிகளுக்கு 6.41 பில்லியன் யுவான் கூடுதலாக வெளிநாட்டு பணம் கிடைத்து வந்தது. ஆனால் ஜூலை மத்தியில் இருந்து யுவானின் மதிப்பு குறைந்து விட்டதால் வெளிநாட்டு பண வரவும் குறைந்து விட்டது என்கின்றனர் அதிகாரிகள்

கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்தது

நியுயார்க் : உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக பெட்ரோலிய போருட்களுக்கான தேவை ( டிமாண்ட் ) குறைந்து விட்டது. அதன் காரணமாகத்தான் சர்வதேச சந்தையில் சமீப காலமமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஜூலையில் பேரலுக்கு 147 டாலராக <உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது 70 டாலரை ஒட்டியேதான் இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்து வருவதாலும்,அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது குறித்தும் கவலை அடைந்த ஓபக் அமைப்பினர், இது குறித்து அவசரமாக கூடி விவாதிக்க இருக்கிறார்கள்.வரும் 24ம் தேதி கூட இருக்கும் அந்த கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்யப்படும் என்று இப்போது வதந்தி நிலவுவதால் இன்று கச்சா எண்ணெய் விலை சிறிது அதிகரித்திருக்கிறது. வெள்ளி அன்று நியுயார்க் சந்தையில் பேரலுக்கு 71.85 டாலரில் முடிந்திருந்த கச்சா எண்ணெய் விலை, இன்று 1.12 டாலர் உயர்ந்து 72.97 டாலராக இருக்கிறது. லண்டனில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 95 சென்ட் உயர்ந்து 70.55 டாலராக இருக்கிறது. உலக அளவில் கிடைத்து வரும் கச்சா எண்ணெய்யில் 40 சதவீதத்திற்கும் மேல் ஓபக் அமைப்பு நாடுகளில்தான் எடுக்கப்படுகிறது. 12 உறுப்பினர்களை கொண்ட ஓபக்கில் அங்கம் வகிக்கும் வெனிசுலா நாட்டின் அதிபர் ஹூகோ சாவஸ் தான் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பியுள்ளார்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: