10000,9000,8000….?

அமெரிக்க பங்கு சந்தை, DOW  தொடர்ந்து ஏழாவது நாளாக கரடியின் பிடியில் சிக்கி, 9000 புள்ளிகளுக்கும் கீழ வந்துள்ளது. நாளின் முடிவில் 8579.19 (-679 or -7.3%) புள்ளிகளுடன் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. போன வருடம் இந்நேரம் 14000 புள்ளிகளுக்கும் மேல்!
போன வருடத்தைவிட 35 சதவீதம் குறைந்துள்ளது. அதுவும் கடந்த ஆறு நாட்களில் மட்டும் 15 சதவீதம் சரிவு.

700 பில்லியன் டாலர், பெடரல் வங்கியின் வட்டி குறைப்பு போன்ற எதுவும் உதவிக்கு வரவில்லை!

GM பங்கு 31 சதவீதமும், Ford Motors 22 சதவீதமும், Citibank 10 சதவீதமும், Bank Of America 11.2 சதவீதமும்,. Exxon Mobil  11.7 சதவீதமும்  குறைந்துள்ளது.

 

 இந்த சூழ்நிலையிலும் (அக்டோபர் 10, 2008]  புகையிலை [UST Inc.], பீர் [Anheuser-Busch Cos.] &  மருத்துவம்  [Tenet Healthcare Corp.] பங்குகள் பரவாயில்லை என்று சொல்லாம்!

112 ஆண்டு அமெரிக்க பங்குச்சந்தை வரலாற்றில் இந்த வாரம் கறுப்பு வாரம்தான்! அமெரிக்காவுக்கு மட்டுமா?

பொருளாதார தீவிரவாதம்

‘காத்ரீனா, ஹன்னா’ என மெகா சூறாவளிகளைச் சந்தித்தபோதும் தளராத அமெரிக்கா, சமீபத்தில் வீசிக்கொண்டிருக்கும் பொருளாதாரப்புயலைக் கண்டு மிரண்டுபோயிருக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி அலுவலகத்துக்குப் போனவர்கள் அடுத்தடுத்து வந்த செய்தியைக் கேள்விப்பட்டபோது நிலைகுலைந்து போனார்கள். ஆம், கை நிறைய சம்பளத்துடன் பார்த்துவந்த வேலை அன்றைய தினம் பலருக்கும் காலியாகியிருந்தது. பலர் முதலீடு செய்த பணம் ஃபணாலாகிப் போயிருந்தது.

‘இது அமெரிக்கக் கவலை’ என நாம் தட்டிக் கழித்துவிட முடியாது. அங்கு அடித்த பொருளாதாரப் புயல் இந்தியாவையும் தாக்கக்கூடும் என்று பதற்றம் பெருகிவருகிறது.

அதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், அமெரிக்கப் புயலுக்கான பூர் வாங்கக் காரணத்தைக் கண்டு பிடிக்கலாம்.

லேமென் குண்டு!

‘லேமென் பிரதர்ஸ்’ என்ற அமெரிக்க வங்கி, 158 ஆண்டுகள் பாரம்பரியம்
கொண்டது. அமெரிக்காவின் நான்காவது பெரிய வங்கியும்கூட! அந்த வங்கி, திடுதிடுப்பென்று மஞ்சள் கடுதாசி கொடுத்துவிட்டு, ஆயிரக் கணக் கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இத்தனை பெரிய வங்கி சரிந்து விழுந்ததால் ஆஸ்திரேலியாவில் இருந்து நம் நாடுவரை உலகெங்கும் இருக்கும் பங்குச் சந்தைகள் குலுங்கின. நம்மூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் துணை நிறுவனம் ஒன்று ஐரோப்பாவில் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் லேமென் வங்கியில் பல கோடிகளை வைத்திருப்பதால், நம்மூர் ஏ.டி.எம்-களில்கூட நூற்றுக்கணக்கான வர்கள் பதற்றத்தோடு கூடினார்கள். லேமென் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தவர்கள் தொடங்கி, இந்த வங்கிக்குக் கணினி சேவை அளிக்கும் நிறுவனங்கள்வரை பல கம்பெனிகளின் பங்குகள் பாதாளத்தை நோக்கிப் பயணப்பட்டன.

கவிழ்ந்தது காளை!

அமெரிக்காவின் பங்கு மார்க் கெட் அமைந் திருக்கும், ‘வால் ஸ்ட்ரீட்’டில் இருக்கும் ‘சீறுகிற காளை’யின் சிலை மிகவும் பிரபலம். இந்த காளைதான் ‘மிரில் லின்ச்’ என்ற நிதி நிறுவனத்தின் சின்னம். இந்தக் காளையும் அன்று குப்புற விழுந்து மண்ணைக் கவ்வியது. நஷ்டத்தில் மூழ்கிக்கொண்டிருந்த இந்த நிறுவனம், எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற கதையாக பேங்க் ஆஃப் அமெரிக்கா என்ற வேறொரு வங்கியிடம் சல்லிசான ஒரு தொகைக்கு விலைபோனது!

மூன்றாவது ஏவுகணை!

அமெரிக்காவைத் தாக்கிய மூன்றாவது ஏவுகணை ஏ.ஐ.ஜி. எனப்படும் ‘அமெரிக்கா இன்டர்நேஷனல் குரூப்’ என்ற சர்வதேச நிறுவனம். திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட இது, வாங்குவதற்குக்கூட ஆட்கள் இல்லாமல் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது. இதைப்பார்த்து, ‘அய்யய்யோ’ என்று அமெரிக்க அரசே துடித்துவிட்டது. காரணம், இந்த வங்கியில் பணிபுரிகிறவர்களின் எண்ணிக்கையே லட்சத்தைத் தாண்டும். பல ஆயிரம் கோடி வியாபாரம் நடக்கும் இந்தக் காப்பீட்டு நிறுவனம் திவாலானால், அதன் தொடர்ச்சியாக நாட்டில் பல பொருளாதார பூகம்பங்கள் ஏற்படும். அதனால், வேறு வழியில்லாமல், அமெரிக்க அரசின் ரிசர்வ் வங்கியான ஃபெடரல் வங்கியே அதை வாங்கி பலரைப் பெரு மூச்சுவிட வைத்தது!

ஆனால், அமெரிக்கர்கள் யாரும் நிம்மதிப் பெருமூச்சு விடவில்லை. ஏ.ஐ.ஜி. அரசுடமை ஆக்கப்பட்ட நாளை, இத்தனை நாளாக ஊருக்கும் உலகுக்கும் தான் உபதேசித்து வந்த ‘தாராளப் பொருளாதாரம்’ என்ற சித்தாந்தம் சிறுமைப்பட்ட நாளாக நினைத்து வெட் கத்தில் தலை குனிந்து நின்றார்கள்.

இந்தியாவை எப்படி பாதிக்கும்?

குத்தாலத்தில் இடி இடித்தால் கோயம்புத்தூரில் மழை பெய்யாது. ஆனால், இன்று அமெரிக்காவில் இடி இடித்தால் அமைந்தகரையில் புயலே வரலாம். மேலே சொன்ன அமெரிக்க நிறுவனங்கள் அனைத்துமே இந்தியாவிலும் இயங்கிவருகின்றன. குறிப்பாக லேமென் நிறுவனத்தின் மும்பைக் கிளையில் வேலை பார்த்த பலரும் வேலை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள். இன்னொருபுறம் நம்மூரில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களின் கணிசமான வர்த்தகம் அமெரிக்காவில் இருக்கும் நிதிநிறுவனங்களை நம்பியே இருக்கிறது. இந்நிலையில், நம் ஊர் ஐ.டி. கம்பெனிகள் என்னவாகும்? இதில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை நிலைக்குமா? சுமார் இருபத்து ஐந்தாயிரம் பேர் வேலை இழக்க நேரிடலாம் என்று சொல்கிறது ஒரு கணிப்பு. எப்படிப் பார்த்தாலும் தீபாவளி வருவதற்குள் பல கம்பெனிகளில் வெடிச்சத்தம் கேட்கும் அபாயம் இருக்கிறது – இப்போதே உஷாராக இருப்பது நல்லது!

டெயில் பீஸ்: ‘வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேன் என்று நினைத்தாயோ…’ என்று முஷ்டியை மடக்கியிருக்கும் அமெரிக்க அரசு வங்கித்துறையை மீட்க கணக்கு வழக்கு பார்க்காமல் பல லட்சம் கோடிகளை கொட்ட இருக்கிறது!

இன்னொரு புறம் நமது நாட்டின் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளுக்கும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் அமெரிக்க வங்கிகளுக்கும் இடையே பெரிய ‘பற்றுதல்கள்’ ஏதும் கிடையாது! அதனால் நாம் ‘எஸ்கேப்’ என்கிறார் நமது நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

பதில் தெரியாத கேள்விகள்:

இத்தனை லட்சம் கோடிகள் புழங்கும் வங்கிகளிலும் காப்பீட்டுக் கழகங்களிலும் இப்படி ஒரு ஆபத்து வரப்போகிறது என்று ஏன் அவர்கள் முன்கூட்டியே கணிக்கவில்லை? இத்தனைக்கும் இந்த கம்பெனிகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இதில் பலரும் ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ் என்று புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். ஏன் இவர்களுக்குக்கூட தங்கள் நிறுவனத்துக்கு வரவிருக்கும் ஆபத்து முன்கூட்டியே தெரியவில்லை என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.

காரணம் பொருளாதாரத் தீவிரவாதமா?

அமெரிக்க வங்கிகளும் காப்பீட்டுக் கழகங்களும் ஃபணாலாகும் இந்த நேரத்தில் தங்கத்தின் விலை சர்ர்ர்ர் என்று ஏறுகிறது! 145 டாலருக்கு விற்பனையான கச்சா எண்ணையின் விலை 100 டாலராகக் குறைந்துவிட்டது. எந்தவிதமான பௌதீக, ரசாயன, பொருளாதார விதிகளுக்கும் உட்படாமல் இப்படி நடப்பதற்குக் காரணம், அரபு நாட்டவர்களால் நடத்தப்படும் பொருளாதாரத் தீவிரவாதமாக இருக்குமோ என்ற ரீதியிலும் அமெரிக்கர்கள் சிலர் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரியல் எஸ்டேட் என்னவாகும்?

இந்திய பங்குச் சந்தை சம்மேளனங்களின் தலைவரான நாகப்பனிடம் கேட்டோம்.

” ‘தசாவதாரம்’ படத்தில் சொல்லப்படும் ‘கேயாஸ் தியரி’ நம் கண் முன்னால் நிரூபண மாக இருக்கிறது. அமெரிக்காவின் நிதி நிறுவனங்களை நம்பித்தான் நம்மூரில் பல ஐ.டி. கம்பெனிகள் இயங்குகின்றன. இந்த கம்பெனிகளுக்கு மென் பொருள் உற்பத்தி செய்து கொடுப்பதுடன் அந்த வங்கியின் கால் சென்டர்களாக இயங்குவதுவரை பலதரப்பட்ட பணிகளைச் செய்வது நம்மூர் கால் சென்டர்கள்தான். அமெரிக்காவின் பல வங்கிகளும் காப்பீட்டுக் கழகங்களும் சீட்டுக்கட்டு மாதிரி சரிந்துவருவதால், நம்மூர் ஐ.டி. கம்பெனிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்படலாம். ஏன் பலர் வேலை இழக்கவும் நேரிடலாம் என்கிறது ஒரு கணிப்பு. இவர்களில் பெரும்பாலோனோர் கடன் வாங்கி வீடுகள் வாங்கியிருப்பார்கள். தவணைத் தொகை எக்குத்தப்பாக எகிறியிருக்கும் இந்த நேரத்தில் வேலையும் போனால் ஒரே சமயத்தில் பலர் வீடுகளை விற்க முயற்சிப்பார்கள். இன்னொரு புறம் புதிதாகக் கட்டப்பட்டு விற்பனைக்கு வரவிருக்கும் வீடுகளை வாங்கவும் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதனால் ரியல் எஸ்டேட் மார்க்கெட் அடிவாங்கும். இதனால், மத்தியதர மக்களுக்கு எட்டாத உயரத்துக்குப் போய்விட்ட வீடுகள் ஓரளவு அவர்கள் கைக்கெட்டும் தூரத்தில் வரலாம். வீட்டு வாடகை கணிசமான அளவுக்குக் குறையலாம்.

ரியல் எஸ்டேட் கம்பெனி என்றால், வெறும் வீடு விற்பனை செய்பவை மட்டுமல்ல. அதையும் தாண்டி சாதாரணமான பொதுமக்களின் கண்ணுக்குப் புலப்படாத பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இங்கே இருக்கின்றன. இவற்றின் வேலையே பங்குச் சந்தையில் முதலீட்டைத் திரட்டி விலை மலிவாக இருக்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கில் வீடுகளையும் ஏக்கர் கணக்கில் நிலங்களையும் வளைத்துப் போடுவதுதான். பிறகு, ஒரு கட்டத்தில் இவர்களே செயற்கையாக வீடுகளின் விலையை ஏற்றுவார்கள்.

‘அடுக்கு மாடி வீடுகளின் விலையெல்லாம் எகிறுகிறது!’ என்று பிரஸ்மீட் வைத்து காரணங்களை அடுக்கி ஊர் உலகத்தை நம்பவைத்து விலை ஏறும்போது சல்லிசான விலையில் தாங்கள் வாங்கிப்போட்ட சொத்துக்களை கொழுத்த விலைக்கு விற்றுக் காசாக்குவார்கள். இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தும் ரியல் எஸ்டேட் சந்தையின் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் நம்மூர் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டிலும் இருக்கிறார்கள்..! இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்!

– பி.ஆரோக்கியவேல்

நன்றி; ஜூனியர் விகடன்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: