ரகசியம்

அணுவாயுதம்

 ஈரான் செய்துள்ளது உண்மையில் அணுவாயுதத்தையும் விட கொடியதாகி விட்டது. எப்படி?
தி வாய்ஸ்( வெளியீடு 264)ல் ஒரு கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது. ஈரான் கடைசியில் அதைச் செய்தே விட்டது. அது பாரசீக வளைகுடாவில் தன் முதல் அணு ஆயுதம் எதையும் பரிசோதிக்கவில்லை. ஆனால் அதை விடக் கொடுமையான ஒன்றை உலகில் ஏவப் போகின்றனர். அதற்கடுத்த வாரம் ஈரான் எண்ணெய் விற்கும் சந்தையை (Iran Bourse) நிறுவியது. அதன் வரவு செலவுகள் யூரோவில்தான், அமெரிக்க டாலரில் நடைபெறாது. ஒரு முக்கியத்துவமற்ற நிகழ்ச்சியாக நமக்குத் தோன்றும் இது, அமெரிக்க மக்களுக்கு பேரபாயத்தைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சியாகும். உண்மையில் அது நம் கற்பனைக்கு எட்டாத விளைவை உள்ளடக்கியது.

தற்போதைய நிலையில் எண்ணெய் வரவு செலவுகள் அனைத்தும் நியூயார்க், லண்டன் நகரங்களிலுள்ள இரு எக்ஸ்சேன்ஜ் வாயிலாகத்தான் நடைபெறுகின்றன. அவ்விரண்டு எக்ஸ்சேன்ஜ்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானவை என்பது தற்செயலானதல்ல என்பதை நீங்கள் யூகித்திருக்கலாம்.

உலகமெங்கும் ஏற்பட்ட வியாபார மந்த நிலையினாலும், இரண்டாம் உலகப் போரின் விளைவாலும் 1929ம் ஆண்டு வால் ஸ்ட்ரீட் பெரும் சரிவையடைந்தது. அந்தப் போரின் போது தம் கூட்டுப் படைகளுக்குத் தேவையான பொருட்களையும் தளவாடங்களையும் அமெரிக்கா வழங்கி, அதற்கு ஈடாக பணத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்து, தங்கமாகத் தர வற்புறுத்திப் பெற்றுக் கொண்டது.

1945ம் ஆண்டில் உலகத் தங்கத்தின் 80 சதவிகிதம் அமெரிக்கப் பெட்டகத்தில் அடைபட்டது. அதன் விளைவாக எந்த மாற்றுமில்லாமல் டாலர் தாள்களே உலக சேமிப்புக்கான பணமானது. உலகம் முழுதும் தங்கத்தை விட டாலர் கட்டுகளே பாதுகாப்பானது என ஆனது. ப்ரெட்டன் உட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தம் உருவானது.

அதற்கடுத்து வந்த சில பத்தாண்டுகளில் இனி மற்றொரு நாள் வராது என்ற வேகத்தில் அமெரிக்கா தன் டாலர் தாள்களை அடித்துக் கொண்டே இருந்தது. அமெரிக்கா, அந்த மலையளவு காகிதங்களை, வெளிநாட்டுச் சரக்குகளை பெருமளவில் வாங்கிக் குவிக்கவும், பணக்காரர்களுக்கு வரி விலக்கு அளிக்கவும், அப்போது உலகில் நடந்த போர்களுக்காகவும், வெளி நாட்டிலுள்ள தம் கூலிப்படைகளுக்காகவும், வெளி நாடுகளுக்கு அனுப்பியுள்ள தம் மத போதகர்களுக்கும், அரசியல் வாதிகளுக்குமென வெளிநாடுகளில் வீசி இறைத்து ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி உள்நாட்டு பணவீக்கத்தை அதிகப் படுத்தவில்லை. ஏனெனில் வெறும் தாள்களை அச்சிட்டுக் கொடுத்து எல்லாவற்றையும் அமெரிக்கா வெளியிலிருந்து இலவசமாகவே பெற்றது. அதற்காக அமெரிக்காவின் இழப்பு தாள் உற்பத்திக்காக ஓரிரண்டு காடுகள்தான்!.

அதற்கடுத்த பத்தாண்டுகளில் உலக நாடுகளின் பெட்டகங்களில் பல அமெரிக்க டாலர்களால் நிரம்பி வழிந்தது. அமெரிக்க டாலர்களுக்காக உலக நாடுகளில் புதுப்புது பெட்டகங்களும் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும், அமெரிக்கா தன் டாலர் தாள்களை உள் நாட்டை விடவும் கூடுதலாக வெளி நாடுகளிலேயே செலவிட்டது. அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளில் சேமிப்புகளாக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் பணத்தின் மதிப்பில் 66 சதவிகிதம் எனும் பெரும் பகுதி வெறும் டாலர் தாள்களாகவே சேமிக்கப் பட்டிருந்தது என்பதை அநேகமாக எல்லா வல்லுநர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

1971ம் ஆண்டில் பல நாடுகள் தம் சேமிப்பிலிருந்த டாலர் தாள்களின் சிறு பகுதியை விற்று தங்கமாக மாற்ற விரும்பியது. ஓஹியோ பல்கலை கழகத்திலிருந்து வணிகவியலில் டாக்டர் பட்டம் பெற்ற க்ராஸ்ஸிமிர் பெட்ரோவ் (Dr. Krassimir Petrov) சமீபத்தில் இதைப் பற்றி எழுதும் போது, ‘அமெரிக்க அரசு ஆகஸ்ட் 15, 1971ல், டாலருக்கும் தங்கத்துக்குமான இணைப்பை துண்டிப்பதாகச் சொல்லி தன் நாட்டுக் காகிதங்களை திரும்பப் பெற மறுத்தது. உண்மையில் தன் டாலர் காகிதங்களைப் பெற்று தங்கத்தை தர மறுத்த செயல் அமெரிக்க அரசின் திவாலான நிலைமையை அப்பட்டமாக்கியது’ எனக் குறிப்பிடுகிறார். 1945ல் உருவாக்கப்பட்ட ப்ரெட்டன் உட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தம் தன்னிச்சையாக குப்பைக்கு எறியப்பட்டது.

டாலரும் அமெரிக்க பொருளாதாரமும் ஒரு வகையில் 1929ன் ஜெர்மனியை ஒத்ததாக இருக்கிறது. மற்ற உலக நாடுகள் டாலர் தாள்களை நம்பவும் அதிலே உறுதி கொள்ளவும் அமெரிக்கா வேறு வழிகளைத் தேடும் நிர்ப்பந்தத்திற்கு இப்போது தள்ளப் பட்டது. அதற்கான விடைதான் எண்ணெய் அதாவது பெட்ரோ டாலர். அமெரிக்கா, பெட்ரோலை டாலரில் மட்டும் விற்க, விஷமத் தனமாக முதலில் சவூதி அரேபியாவையும் பின்னர் OPEC எனப்படும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பையும் இணங்க வைத்தது. அது டாலரின் மதிப்பைக் காப்பாற்ற உதவியது. இப்போது அத்தியாவசியத் தேவையான பெட்ரோலைப் பெற மற்ற நாடுகள் டாலர் தாள்களை திரும்பவும் இருப்பில் வைத்தன. ஆனால் அந்த அவசியமான பெட்ரோலை அமெரிக்காவோ இலவசமாகப் பெறுகிறது. டாலர் தாள்களை மூழ்காமல் காக்க தங்கத்துக்குப் பதில் இப்போது பெட்ரோல்.

1971லிருந்து வெளிநாடுகளில் விநியோகிக்கவும் செலவழிக்கவும் அமெரிக்கா மென்மேலும் டாலர் தாள்களை மலை மலைகளாக உற்பத்தி செய்யத் துவங்கியது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையும் (trade deficit) மளமளவென வளர்ந்தது. வெறும் டாலர் தாள்களை அச்சடித்துக் கொடுத்து உலகின் எல்லாப் பொருட்களையும் அமெரிக்கா விழுங்கியது. மேலும் பல பெட்டகங்களும் உருவாகின.

சில்லின் நுனான் (Cillinn Nunan) என்ற நிபுணர் 2003ல் எழுதியதாவது, ‘உண்மையில் டாலர்தான் உலகின் சேமிப்புப் பணமாக உள்ளது. உலகின் அதிகார பூர்வ சேமிப்பு மாற்றுகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க பணக் கணக்குதான் உபயோகிக்கப் படுகிறது. வெளி நாட்டுப் பண மாற்றத்தில் ஐந்தில் நான்கு பங்கும், உலக ஏற்றுமதிகளில் பாதியும் டாலர்களில்தான் செய்யப் படுகிறது. அது மட்டுமின்றி உலக வங்கியின் கடன்களும் (IMF Loans) டாலர்களில்தான் தரப் படுகிறது.

புலன்ட் கூகே (Dr. Bulent Gukay of Keele University) சமீபத்தில், ‘எண்ணெய் வர்த்தகத்தில் உலக இருப்பின் டாலர்கள் செலவழிக்கப் படுவதால் செயற்கையாக டாலரின் தேவை அதிகமாக்கப் பட்டுள்ளது. இதனால்தான் ஏறக்குறைய ஒரு செலவுமேயில்லாமல் அமெரிக்கா வெறும் டாலர் தாள்களை அச்சிட்டு அதிகப் படியான இராணுவத் தேவைகளுக்கு உபயோகிக்கவும், நுகர்வோர் பொருட்கள் இறக்குமதியில் செலவழிக்கவும் முடிகிறது. எவ்வளவு டாலர் தாள்கள்தான் அச்சிடலாமென்பதற்கு எந்த அளவீடுகளோ கட்டுப்பாடுகளோ அமெரிக்காவுக்கு இல்லை. அமெரிக்காவுக்குச் சமமான போட்டியாளர்கள் யாரும் இல்லாத நிலையில், மற்ற நாடுகள் டாலரின் மேல் நம்பிக்கை கொண்டிருக்கும் வரையில் எந்த செலவுமின்றி வெறும் டாலர் தாள்களை அமெரிக்கா அச்சிட்டே வாழ்ந்து கொண்டிருக்கும்’ என எழுதியுள்ளார்.

சமீப காலம் வரை அமெரிக்க டாலர் பாதுகாப்பானதாகத்தான் இருந்தது. எனினும் 1990 முதல் மேற்கு ஐரோப்பிய நாடுகள் வளரத் தொடங்கி மத்திய ஐரோப்பாவையும் கிழக்கு ஐரோப்பாவையும் விழுங்கத் துவங்கியுள்ளது.

அமெரிக்கா ஒரு செலவுமில்லாமல் உலகப் பொருள்களையும் மக்களையும் வாங்கும் பலத்தை பார்த்து, பிரான்சு மற்றும் ஜெர்மானியத் தலைவர்கள் பொறாமைப் படத் துவங்கி விட்டனர். இலவசமாக் கிடைக்கும் அதில் தாமும் ஒரு பகுதியைப் பெற விரும்புகின்றனர்.

அவர்கள் 1999ன் இறுதியில் யூரோ எனும் பண பலத்தை, அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பலத்த எதிர்ப்புகளுக்கிpடையே, குறிப்பாக அமெரிக்க டாலர் பெற்று பிரிட்டன் உண்டாக்கிய எதிர்ப்புக்கிடையிலும் உருவாக்கி விட்டனர். யூரோ இப்போது வெற்றி நடை போடுகிறது.

யூரோ வெளியிடப்பட்ட ஒரு சில மாதங்களுக்குள் சதாம் உசேன், OPEC எனும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தை மீறி, அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்று வந்த பெட்ரோல் இனி யூரோவில் மட்டுமே ஈராக்கில் விற்கப்படும் என அறிவித்தார். ஈரான், ரஷ்யா, வெனிசுலா, லிபியா முதலிய நாடுகள் தாங்களும் அவ்வாறே மாற நினைப்பதாக வெளிப்படையாக அறிவிக்கத் துவங்கின – வெள்ளம் அமெரிக்காவின் தலையில் ஓடத் தலைப்பட்டது

செப்டம்பர் 2001ல் ஆகாய விமானங்கள் இரட்டைக் கோபுரத்தினுள் பறந்தன. அமெரிக்க வரலாற்றில் அது சந்திக்கவிருந்த பெரும் பொருளாதாரச் சரிவைத் தடுக்க அமெரிக்கா இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தத் துவங்கியது. (இச்சந்தர்ப்பத்தை அது தானாக உருவாக்கிக் கொண்டதென்று ஒரு சித்தாந்தம் அமெரிக்காவிலேயே உலவிக் கொண்டிருக்கிறது என்பதொரு தனி விடயம்) அமெரிக்க பெட்ரோ டாலரைக் காக்க போர் தயாரிப்புகள் துவங்கின. அதில் முதன் முதலில் பறிக்கப் பட்டது உண்மையுடைய உயிர்தான். மற்ற பெட்ரோல் உற்பத்தி நாடுகள் வேடிக்கைப் பார்த்தன.

ஈராக் 2000ம் ஆண்டில் பெட்ரோலை யூரோவில் விற்கத் துவங்கியது. 2002ல் ஈராக் தன் கருவூலத்திலிருந்த முழு பெட்ரோ டாலர்களையும் யூரோவுக்கு மாற்றி விட்டிருந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிக்க துவங்கியது.

முழு உலகமும் வேடிக்கைப் பார்த்தது. ஆனால் வெகு சிலருக்கே அது பெட்ரோ டாலருக்கான போர் எனப் புரிந்திருந்தது. ஈராக்கை மார்ச் 2003ல் ஆக்கிரமித்தவுடன், அமெரிக்கா முதலில் அங்குள்ள எண்ணெய் வளங்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது என்பது நினைவிருக்கட்டும். ஆகஸ்ட் மாதத்தில் முதல் விற்பனையை மீண்டும் டாலரில்தான் துவங்கியது. ஈராக்கிலிருந்த எல்லா அரச மாளிகைகளும் இலாக்காகளும் குண்டு மழை பொழிந்து தகர்க்கப்பட்டது. பாக்தாதில் தகர்க்கப்படாத ஒரே அரச மாளிகை பெட்ரோல் இலாகா. எத்தனை இலட்சங்களில் மனித உயிர்கள் மலினப் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது காவு கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் அமெரிக்காவுடைய கவலையில்லை. அமெரிக்கா பெட்ரோ டாலர்களை காப்பாற்ற பெட்ரோல் வர்த்தகம் டாலரில் நடக்க வேண்டும். இல்லையென்றால் அமெரிக்க பொருளாதாரம் மண்ணைக் கவ்வும் – அதன் பின் என்னென்னவோ நடந்து விடும்.

2003ன் தொடக்கத்தில் வெனிசுலா அதிபர் ஹியூகோ சவாஸ் அந்நாட்டின் பாதி பெட்ரோலை யூரோவில் விற்பதாக (முன்னமே பாதியை அமெரிக்கா டாலரில் வாங்கி விட்டது) வெளிப்படையாக அறிவித்தார். 2003 ஏப்ரல் 12ல் அமெரிக்க உதவியிலுள்ள சில வியாபாரத் தலைமைகளும், சில தளபதிகளும் சேர்ந்து சவாஸைக் கடத்தி, புரட்சி செய்து நாட்டைப் பிடிக்க முயன்றனர். மக்களே அதற்கெதிராக களமிறங்கவும் இராணுவமே அந்தப் புரட்சியை முறியடித்து தோல்வியடையச் செய்தது. உண்மையில் அமெரிக்காவின் முகத்தில் கரி படிந்தது.

நவம்பர் 2000ல் ஒரு யூரோவின் மதிப்பு 0.82 டாலர்தான். இதுதான் யூரோவின் ஆகக் குறைந்த மதிப்பு. மேலும் சரிவை நோக்கித்தான் இருந்தது.
ஆனால் ஈராக் யூரோவில் பெட்ரோல் விற்கத் தொடங்கியதும் அதன் சரிவு நின்றது.
ஏப்ரல் 2002ல் OPECன் மேல் மட்ட பிரதிநிதிகள் யூரோவில் பெட்ரோல் விற்கும் யோசனையைப் பற்றிப் பேசத் துவங்கியவுடன் யூரோவின் மதிப்பு உயரத் துவங்கியது.
ஜூன் 2003ல் ஈராக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் திரும்ப டாலருக்கு ஈராக்கிய பெட்ரோல் விற்பனையைப் பற்றி பேசத் துவங்கியதும் டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு குறைந்தது.
ஆகஸ்ட் 2003ல் ஈரான் சில ஐரோப்பிய நாடுகளுக்கு யூரோவில் பெட்ரோல் விற்ற போது யூரோவின் மதிப்பில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் உண்டானது.
2003-04 OPEC நாடுகளின் தலைவர்களும் ரஷிய தலைமையும்; எண்ணெயையும் எரிவாயுவையும் யூரோவில் விற்பதைப் பற்றி உளப்பூர்வமாக பேசத் துவங்கியதும் யூரோவின் மதிப்பு உயர்ந்தது.
2004ன் OPEC மாநாட்டில் எண்ணெய் விற்பனையை யூரோவில் மாற்றுவதைப் பற்றி எந்த முடிவுமெடுக்காமல் கலைந்தது – ஆம் அப்போதும் யூரோவின் மதிப்பு தாழ்ந்தது.
இலண்டனிலும் நியூயார்க்கிலும் உள்ளதைப் போன்ற எண்ணெய் விற்பனை சந்தையை (Iran Bourse) தனது நாட்டிலும் நிறுவப் போவதாக ஜூன் 2004ல் ஈரான் அறிவித்தவுடன் யூரோவின் மதிப்பு உயரத் துவங்கியது.
கடைசியில் யூரோவின் மதிப்பு 1.27 அமெரிக்க டாலர்களில் உயர்ந்து நிற்கிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பை வெகு தூரம் தாழ்த்த, கடந்த மாதங்களில் இந்நிகழ்வுகள் வெகு தூரம் வந்து விட்டது. மே 5ம் நாள் ஈரான் தன் நாட்டில் சொந்த எண்ணெய் விற்பனை சந்தையை (Iran Oil Bourse) பதிவு செய்து விட்டது. இலண்டனையும் நியூயார்க்கையும் விட்டு விட்டு வேறொரு நாட்டில் எண்ணெய் விற்பனையைச் செய்வதோடல்லாமல் உண்மையில் உலக நாடுகள் விற்கவும் வாங்கவுமான ஒரு எண்ணெய் விற்பனை சந்தையை அமைத்து விட்டது.

சவாஸின் சமீபத்திய இலண்டன் வருகையில் அவர் ஈரானிய எண்ணெய் விற்பனை சந்தையை ஆதரிக்கப் போவதாகவும் யூரோவில் எண்ணெய் விற்கப் போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார். வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள ஆயுத தடையைப் பற்றி இலண்டனில் கேட்கப் பட்ட போது சவாஸ், ‘அமெரிக்கா வெறும் காகிதப்புலிதான்’ என முன்னறிவிப்பாக பதிலிறுத்தார்.

தற்போதைய உலக எண்ணெய் வளத்தின் பெரும்பகுதி NYMEX (New York Mercantile Exchange) அல்லது IPE (International Peroleum Exchange at London)ஆகிய இரு இடங்களிலிருந்துதான் விற்கப் படுகிறது. இவையிரண்டும் அமெரிக்கர்களின் நிறுவனங்கள். அவை எண்ணெயை டாலரில்தான் வாங்கவோ விற்கவோ செய்கிறது. ஈரானிய எண்ணெய் விற்பனையின் வெற்றி ஈரானிய எண்ணெயின் 70 விழுக்காட்டை வாங்கும் ஐரோப்பியர்களை உணர்வு பெறச் செய்துள்ளது. தமது எண்ணெய் உற்பத்தியின் 66 விழுக்காட்டை ஐரோப்பாவுக்கு விற்கும் ரஷ்யாவையும் அது உணர்வு பெறச் செய்துள்ளது. அமெரிக்காவுக்கு மேலும் பாதகமாக இந்தியாவும் சீனாவும் ஈரானிய எண்ணெய் விற்பனை சந்தையிலிருந்து எண்ணெய் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இப்போதும் அதே Weapons of Mass Destruction என்றோ அல்லது அணுகுண்டு தயாரிப்பு என்றோ சொல்லிக் கொண்டு ஈரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த எண்ணெய் சந்தை அழிக்கப்படாது என்று யாராவது ஒருவர் நம்புவீர்களா?

மேலும் புஷ்ஷூக்கு வீழ்ச்சி. உணர்வு பெற்ற ஐரோப்பா, சீனா, இந்தியா, ஜப்பான் முதலிய நாடுகளும் மேற்குறிப்பிடப்பட்ட மற்ற நாடுகளும் எண்ணெயை வாங்கவும் விற்கவும் யூரோவைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்நாடுகள் யூரோவை சேமிக்கத் துவங்கும். தம்மிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களை விற்கத் துவங்கும். கடனில் வீழ்ந்துள்ள டாலரை விட யூரோ நிலையாகவே உள்ளது. உலக வங்கியும் (IMF) அமெரிக்கா பொருளாதார பிரச்னைகளையும் வர்த்தகப் பற்றாக்குறையையும் பற்றி சமீபத்தில் அறிவித்து விட்டதால் கழுத்து நெறிபடும் அமெரிக்காவுக்கு வேறு போக்கிடமில்லை.

தற்போது உலக நாடுகளின் முன்னுள்ள மிகப்பெரிய கவலை, ‘அமெரிக்க டாலர் கடுமையாக வீழ்ச்சி அடைவதற்குள் தம் கருவூலத்திலுள்ள டாலர்களை எப்படி மாற்றுவது?’ என்பதுதான். ஆண்டாண்டு காலமாக எத்தனையோ உலக நாடுகளை டாலரில் திணித்து வைத்துள்ள அமெரிக்காவிடமே அதைத் திருப்பித் தர வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கின்றன பல நாடுகள். ஆனால் உலகிலுள்ள டாலர்களில் வெறும் 5 விழுக்காட்டைக் கூட அமெரிக்காவால் ஏற்க முடியாது. அமெரிக்கா தன் பொருளாதாரத்தை நாசப்படுத்திக் கொள்வதோடு உலக நாடுகளில் பலவற்றின் பொருளாதாரத்தையும் கூடவே நாசப்படுத்தி விடும். அதிலும் குறிப்பாக பிரிட்டன் கடுமையாக நாசமாகும்.

Scottish Socialist Voice என்ற ஏட்டின் ஒரு கட்டுரை குறிப்படுவது போல, அமெரிக்கா பிழைக்க வேண்டுமானால், அந்நாடு வர்த்தகத்தில் ஒரு பெரும் புரட்சி செய்து, அதிக வர்த்தக நிலைமைக்கு (trade surplus) வர வேண்டும். அந்நாட்டினரால் இது முடியவே முடியாது. ஏனெனில் அதைச் செய்ய அமெரிக்கர்களை அந்நாடு அடிமைகளைப் போல வேலை வாங்க வேண்டும். அவ்வேலைக்கு சீனர்களையும் இந்தியர்களையும் விட குறைவாக சம்பளம் தர வேண்டும். நாமனைவரும் அறிந்ததைப் போலவே, இது அங்கு நடப்பதற்கு சாத்தியமே இல்லை.

இப்போது அமெரிக்காவில் என்னவாகும்? கண்டிப்பாக பெரும் குழப்பங்கள்தான் உண்டாகும். ஒரு வேளை ஏதும் தொழிலாளர் புரட்சி, தற்போதைய நிலைமையில் 1929க்குப்பின் ஜெர்மனியில் நடந்தது திரும்பலாம். தீவிர வலது சாரிச் சிந்தனைகள் தோன்றலாம்… …

இந்த அமெரிக்காவுடனான மற்ற நாடுகளின் பொருளாதார நாசத்தை ஐரோப்பிய, சீன, ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தால் ஓரளவு தடுத்து நிறுத்த இயலுமா? இந்நாடுகளின் கருவூலங்களும் கழுத்து வரை அமெரிக்க டாலரால்தான் நிரம்பியுள்ளது.

1945 முதல் அமெரிக்கா வெறும் டாலர் தாள்களால் செய்து வந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு பகரமாக ஏதாவதொரு வழியைக் கண்டு பிடித்தேயாக வேண்டும். ஒவ்வொரு நாட்டுக் கருவூலத்திலும் குவித்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு டாலர் தாள்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஈரானில் அமெரிக்கா குண்டு போட்டால் அது பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஈராக்கிலுள்ள ஷியா மக்களின் பக்க பலத்தோடு ஈரான் வெளிப்படையாக ஈராக்கோடு போர் தொடுக்கும். ஈராக்கில் தற்போது மிகச் சிலரால் உண்டாகும் உள்நாட்டு கிளர்ச்சியையே தடுத்து நிறுத்த முடியாமல் அமெரிக்கா தடுமாறித் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை அமெரிக்கா இந்த சுன்னி ஷியா மக்களுக்கிடையே பெரும் வெறுப்பை உண்டாக்கி, அதை ஊதி விட்டு மத்திய கிழக்கு நாடுகள் முழுதும் உள் நாட்டுப் போரை உருவாக்கி விடக் கூடும்.

ஆனால் இது உலக எண்ணெய் வர்த்தகத்தில் மிக ஆபத்தான பின்னடைவை ஏற்படுத்தி விடும். இந்த ஈரானிய சந்தை சிறிது காலமே தனித்து இயங்கும் என்பதை அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அதன் பின் யூரோவில் எண்ணெய் விற்க சந்தைகள் வேறிடங்களிலும் (குறிப்பாக புரூஸ்ஸல்) துவக்கப்பட்டு விடும்.

ஒரு தீர்வு என்னவென்றால், டாலரை அழித்து விட்டு அமெரிக்காவின் புழக்கத்துக்காக புதுப் பணத்தை அது அறிமுகப் படுத்தலாம். இதன் மூலம் மற்ற நாடுகளிலுள்ள 66 விழுக்காட்டு டாலர் தாள்களை ஒரேயடியாக பயனற்றதாக்கலாம். என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?. இது போன்ற அடாவடியான, ஆபத்தை பொருட்படுத்தாத சிந்தனைகள்தாம் வெள்ளை மாளிகை, வால் ஸ்ட்ரீட், பென்டகனிலுள்ள சிலரது தலைகளில் தற்போது நீந்துவதாகத் தெரிகிறது.

அல்லது 1938ல் போலந்து நாட்டுக்குள் நுழைய ஜெர்மனி செய்ததைப் போல எதையாவது செய்ய வேண்டும். அதாவது போலந்து நாட்டினர் ஜெர்மனிக்குள் படை நடத்தி வந்து விட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை படம் பிடித்து நாஜிகள் மக்களிடம் காட்டி உள்நாட்டிலுள்ள மக்களின் எண்ணங்களையும் இதயங்களையும் வென்றெடுத்தனர். எனினும் அமெரிக்கா இந்த முறையில் வெற்றி பெறுவதென்பது தற்போதைய நிலையில் மிகக் கடினமானதே. ஆக, அமெரிக்கா எப்படித்தான் தப்பும்? உலக அரங்கில் அமெரிக்காவின் உயர்வு அதன் ஆயுத பலம்தான். என்னென்ன கொடுமைகளை இன்னும் உலகம் சந்திக்கவிருக்கின்றதோ யார் கண்டது?. ஒரு புது உலகப் போர் மூலம் அமெரிக்கா தன் சார்பு நாடுகளை ஒழுங்கு படுத்தி அதன் கருவூலங்களில் டாலர்களை வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தப் போகிறதோ என்னவோ?

இனி வரப் போகிற ஆபத்து முதலாளித் துவத்துக்கும் (டாலர்) ஏகாதிபத்தியத்துக்கும்தான். கலாச்சார மாற்றங்களோ, இஸ்லாமோ, axis of evil நாடுகளோ, அமெரிக்கா சொல்லும் பேரழிவு ஆயுதங்களோ ஆபத்தானவைகளல்ல. அமெரிக்கா இதுவரை கடை பிடித்து வந்த அந்நாட்டின் கொள்கைகளும் செயல்முறைகளும்தான் அடிப்படையில் தவறானவை, ஆபத்தானவை.

ஈரான், பாரசீக வளைகுடாவிலுள்ள கிஷ் தீவின் free trade zoneல் தனது புதிய எண்ணெய் விற்பனை சந்தையை (Iranian Oil Bourse) அமைத்துள்ளது. கணிணியும் மென்பொருட்களும் நிறுவப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கடந்த மார்ச் மாதமே IOB தனது பணியைத் துவங்கி இருக்க வேண்டும் ஆனால் சில அழுத்தங்கள் காரணமாக தள்ளிப் போடப்பட்டது. எங்கிருந்து அழுத்தம் வந்திருக்கும் என்பது சொல்லித்தான் அறிய முடியுமா என்ன?. மே 5ந்தேதி IOB பதிவு செய்யப்பட்டு விட்டது. சந்தை துவங்கும் நாள் குறிக்கப்படாததற்கு எண்ணெய் மாபியா கும்பல்களின் ஊடுருவலும் உலக நாடுகளின் அழுத்தமும் … … காரணம் என சிலரால் சொல்லப் படுகிறது,

2007ல் எண்ணெய் 60 டாலர்களுக்கு கொள்வரவு செய்யப்பட்டது. டாலரின் மதிப்பு ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி அடைவதை அனைவரும் அறிவோம். தனது NYMEX, IPE மூலம் வெறும் யூகங்களை (speculation) முன்னிறுத்தி எண்ணெயின் விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. 60 டாலர்களுக்கு விற்ற எண்ணெயை 140 டாலருக்கு விற்றால் டாலரின் தேவை 230விழுக்காடுகள் அதிகரிக்கும்.

OPEC கூட சமீபத்தில் எண்ணெய் விலையேற்றத்திற்கு 60சத காரணம் வெறும் யூகங்களைக் கொண்டு செய்யும் முன் வியாபாரம்தான் (Future Trade) எனக் கூறியுள்ளது.

முடிவாகச் சொல்வதென்றால் அமெரிக்கா தனது டாலரை அழிவிலிருந்து காக்க, உலகில் டாலருடைய ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்திக் கொள்ள எந்த நாட்டையும் அழிக்கத் தயங்காது

அமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் !

மும்பை 26/11 : அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! ( பாகம் – 6, இறுதிப் பகுதி )

ஏதோ சில முட்டாள் முல்லாக்கள்தான் இன்று உலகம் முழுவதும் வெடிக்கும் பயங்கரவாதங்களுக்கு காரணமென பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மற்ற மதங்களை விட உணர்ச்சிப்பூர்வமாகவும், கட்டுப்பாடாகவும், ஒரு இயக்கம் போலவும் இசுலாமிய மதம் பின்பற்றப்படுவது உண்மைதானென்றாலும், இந்தப் பலவீனத்தை முதலீட்டாக்கி அரசியல் சூதாட்டங்களுக்கும் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி இசுலாமிய நாடுகளிலிருக்கும் மக்களை மதத்தின் பெயரால் ஆளும்வர்க்கங்கள் சுரண்டிக் கொழுப்பதற்குக் காரணகர்த்தா அமெரிக்காதான்.

வளைகுடா நாடுகளில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து பாலைவனமான அப்பகுதி ஏகாதிபத்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இந்தப் பாலைவன நாடுகளின் அரசியல் திசைவழியை ஏகாதிபத்திய நாடுகள் தமது நலனுக்கேற்ப அமைத்துக் கொண்டன. குறிப்பாக இங்கிலாந்தும், பின்னர் அமெரிக்காவும் அரபு நாடுகளின் எண்ணைய் தொழிலைக் கையிலெடுத்துக் கொண்டு அதற்குத் தோதான பிற்போக்கு சக்திகளை நாடாள அனுமதித்தன.

அப்போது பரவிவந்த கம்யூனிச ‘அபாயத்திற்கு’ எதிராகவும், தேசிய விடுதலைப் போராட்டங்களை திசை திருப்புவதற்கும் அரபு நாடுகளின் இசுலாமிய மதவாதிகளை அமெரிக்கா ஆதரித்தது. இன்று வரை அரபு நாடுகளில் மன்னராட்சி தொடர்வதற்கும் முழு நாடும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஷேக்குகளின் கையில் இருப்பதற்கும் அமெரிக்க ஆதரவுதான் அடிப்படை. இன்று உலகம் முழுவதும் ஜனநாயகம் பற்றி பாடம் நடத்தும் அமெரிக்கா சவுதி நாடுகளில் மட்டும் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியை சந்தர்ப்பவசமாக ஆதரிக்கிறது. இதற்கு நன்றிக்கடனாக ஷேக்குகள் பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் எண்ணெய் தொழில் நடத்துவதும், கிடைக்கும் அபரிதமான பணத்தை இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதும் என பரஸ்பரம் உறவு தொடர்கிறது.

உள்நாட்டில் எல்லாப் பிற்போக்குத்தனங்களையும் அமல் படுத்தும் ஷேக்குகள் சொந்த நாட்டு மக்களைச் சுரண்டுவதற்கு இசுலாத்தின் காவலர்களாக நடிக்கின்றனர். மதத்தின் உணர்ச்சியைக் கிளறிவிட்டு தமது செல்வத்தைக் காப்பாற்றும் இந்த ஷேக்குகள் உலகம் முழுவதும் இசுலாமிய மதவாத அமைப்புக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் புரவலர்களாகவும் இருக்கின்றனர். இசுலாமிய மதம் எந்த அளவுக்கு மக்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு இலாபமுண்டு என்பதை இவர்கள் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர். ஷேக்குகளின் கையிலிருக்கும் வரை அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை உறிஞ்சலாம் என்பதால் அமெரிக்காவும் இந்த அணுகுமுறையை அனுமதிக்கிறது.

இப்படித்தான் அரபுநாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் கம்யூனிஸ்ட்டுகளும், ஜனநாயக சக்திகளும், தேசிய வாதிகளும் கொடுராமாக ஒடுக்கப்பட்டனர். மக்களின் விடுதலைப் பெருமூச்சை எழுப்பி விட்ட இச்சக்திகள் ஒடுக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடம் மதவாதத்தால் நிரப்பப்பட்டது.

ஈராக்கில் இப்படித்தான் கம்யூனிஸ்டுகளைக் கொடுரமாக அழித்துவிட்டு சதாம் உசேனின் பாத் கட்சி ஆட்சிக்கு வந்தது. வளைகுடா நாடுகளில் ஈராக்கை ஒரு வட்டார அடியாளாக உருவாக்கும் பொருட்டு அமெரிக்கா சதாம் உசேனை எல்லா வகையிலும் ஆதரித்தது. அதே காலத்தில் ஈரானில் ஷா மன்ன்னது சர்வாதிகார ஆட்சியையும் அமெரிக்கா ஆதரித்தது. மற்ற கட்சிகளெல்லாம் பிராந்தியத்தில் தடைசெய்யப்பட்டதால் அமெரிக்க எதிர்ப்புக்கும் இசுலாமிய மதம்தான் பயன்படும் என்பதை கொமெனி புரிந்து கொண்டார். அப்படித்தான் ஈரானில் ஷா ஆட்சி தூக்கியெறியப்பட்டு கொமெனியின் தலைமையில் இசுலாமிய மதவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். இதனால் கொமெனியின் ஈரானைத் தாக்கி அழிக்க சதாம் உசேனை அமெரிக்கா பயன்படுத்தியது. அவருக்கு ஆயுத உதவியை அபரிதமாக வழங்கி ஈராக்- ஈரான் போரை அமெரிக்கா துவக்கியது. இருதரப்பிலும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட இந்தப் போர் சில ஆண்டுகள் நீடித்தது. அமெரிக்கா வழங்கிய ரசாயன வாயுவின் மூலம் பல ஈரானிய வீரர்கள் கொடுரமாகக் கொல்லப்பட்டதெல்லாம் பின்னாளில் அம்பலமாயின. அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட இசுலாமிய மதவாதம் ஈரானில் மட்டும் அமெரிக்காவை எதிர்ப்பதாகக் கருக்கொள்ள ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப்போரில் யூதர்கள் அமெரிக்க இங்கிலாந்து முகாமை ஆதரித்ததற்கு நன்றிக் கடனாக மத்திய கிழக்கில் இசுரேல் என்ற நாடு அமெரிக்காவால் திணிக்கப்பட்டது. பாலஸ்தீன மக்கள் அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக மாறினர். மத்திய கிழக்கில் இசுரேலை ஒரு வலிமையான அடியாளாக உருவாக்குதற்கு தேவையான எல்லா உதவிகளையும் அமெரிக்கா அன்றும் செய்தது. இன்றும் செய்து வருகிறது. ஆரம்பத்தில் தமது தாயகத்திற்காக போராடத்துவங்கிய பாலஸ்தீன மக்களின் போராட்டத்தில் மதம் இருக்கவில்லை. பின்னாளில் துரோகமிழைத்த யாசர் அராபத்தின் பி.எல்.ஓ இயக்கம்கூட மதச்சார்பற்ற இயக்கமாகத்தான் அன்று போராடியது. இதை மதச்சார்பானதாக மாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயன்று வெற்றி பெற்றது. இன்றைக்கு வலிமையாக இருக்கும் ஹமாஸ் போன்ற இயக்கங்களெல்லாம் துவக்கத்தில் அமெரிக்காவால் வளர்க்கப்பட்டவைதான்.

பாலஸ்தீன், ஈரான் இரண்டு நாடுகளிலும் மக்கள் மதத்தின் துணை கொண்டு அமெரிக்காவை எதிர்த்து வந்தாலும் மொத்தத்தில் இசுலாமிய மக்கள் மதத்தின் பால் கட்ட்டுண்டு கிடப்பது அமெரிக்காவுக்கு சாதகமாகத்தான் இருந்த்து. மதத்தின் பெயரால் நடத்தப்படும் தேசிய விடுதலைப் போரட்டங்களையெல்லாம் தனிமைப் படுத்தி முடக்கவும், அதே மதம் பயன்படுகிறது என்பதால் மொத்தத்தில் அமெரிக்காவிற்கு இந்த மதவாத அணுகுமுறை ஆதாயமாகவே இருந்தது. அரபு ஷேக்குகளுடன் ஒரு புறமும், மறுபுறம் இசுரேல் எனவும் அமெரிக்காவின் மத்தியக் கிழக்கு கொள்கை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் சோவியத் யூனியன் என்ற சமூக ஏகாதிபத்தியம் ( சொல்லில் சோசலிசம், செயலில் ஏகாதிபத்தியம் ) 1979 இல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. அமெரிக்கா, சோவியத்யூனியன் இரண்டு நாடுகளும் அன்று கெடுபிடிப்போரின் உச்சத்தில் இருந்தன. உலக மேலாதிக்கத்திற்காக மறைவுக் கெடுபிடிப் போர்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டன. அன்று உலக நாடுகள் எந்தப் பிரச்சினையென்றாலும் இரண்டில் ஒன்றை சார்ந்து இருக்குமளவுக்கு பிரிந்திருந்தன. இப்படி ஆப்கானில் போலிக் கம்யூனிசம் நஜிபுல்லாவின் தலைமையில் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா சோவியத் யூனியனை அங்கிருந்து விரட்டுவதற்கு முயற்சிகளை ஆரம்பித்தது. பின்னர் 1989இல் சோவியத் யூனியன் ஆப்கானிலிருந்து வெளியேறும் வரை அமெரிக்கா தன் முயற்சிகளை விடவில்லை.

ஆப்கானில் நாத்திகர்களும் சாத்தானின் வாரிசுகளுமாகிய கம்யூனிஸ்ட்டுகள் ஆக்கிரமித்திருப்பதாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அமெரிக்கா அவர்களை விரட்டுவதற்கு புனிதப்போர் துவங்குமாறு இசுலாமிய மதவாதிகளை அணிதிரட்ட ஆரம்பித்தது. இன்றைக்கு அமெரிக்காவை எதிர்த்து புனிதப்போர் நடத்தும் பயங்கரவாதிகள் இப்படித்தான் தோற்றுவிக்கப்பட்டனர். முஜாகிதீன்களுக்கான ஆயத உதவி முதல் பணம் வரை எல்லாம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாயின. அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளின் ஆசிய வானொலிச் சேவைகள் இந்தப் புனிதப் போருக்கான மதப்பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டன. இசுலாமிய நாடுகளிலிருந்து போராளிகள் மதத்தைக் காப்பாற்றுவதற்கென்றே இறக்குமதி செய்யப்பட்டனர். இப்படித்தான் பின்னாளில் அல்கைய்தா ஆரம்பித்த பின்லேடன் சவுதியிலிருந்து ஆப்கானுக்கு இடம்பெயர்ந்தார்.

இதற்கான மையமாக பாக்கிஸ்தான் பயன்படுத்தப்பட்டது. பாக்கிஸ்தானின் எல்லா மாநிலங்களிலும் அமெரிக்கா அளித்த பிச்சைக்காசின் உதவியோடு நூற்றுக்கணக்கான மதரசாக்கள் திறக்கப்பட்டன. டாலரின் தயவில் குர்ஆன் வியந்தோதப்பட்டது. இந்த மதரசாக்களின் மூலம் ஆயிரக்கணக்கான முஜாகிதீன்கள் உருவாக்கப்பட்டு ஆப்கானுக்கு அனுப்பப்பட்டனர். இந்த வேலைகளை பாக்கின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமெரிக்காவின் ஆணைக்கேற்ப ஒருங்கிணைத்தது. இந்த அடியாள் வேலைக்காகவே பாக்கின் இராணுவ சர்வாதிகார ஆட்சிகளை அமெரிக்கா முழுமனதுடன் ஆதரித்தது. இன்றைக்கும் பாக்கின் ஜனநாயக அரசாங்கம் உண்மையான அதிகாரமின்றி பொம்மை ஆட்சி நடத்துமளவுக்கு இராணுவமும், உளவுத் துறையும் சூத்திரதாரிகளாக இருக்கின்றனர் என்றால் அதற்குக் காரணம் அமெரிக்கவின் ஆசிதான்.

பின்னர் ஆப்கானில் சில ஆயிரம் வீரர்களை பலிகொடுத்து சோவியத் யூனியன் தன் படைகளை விலக்கிக் கொண்டது. ஆதரவின்றி தத்தளித்த நஜிபுல்லா முஜாகிதீன்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். போலி கம்யூனிஸ்டுகளின் ஆட்சியிலிருந்த ஆப்கானில் கல்வி, பெண்ணுரிமை, போன்ற நலத்திட்டங்களெல்லாம் அமல்படுத்தப்பட்ட போது அவை இசுலாத்திற்கு விரோதமென அமெரிக்காவால் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடுங்கோட்பாட்டுவாதிகளான தாலிபான்கள் அமெரிக்க ஆசியுடன் களத்தில் இறங்கினர். ஆப்கானில் இத்தகைய முட்டாள் மதவாதிகள் ஆட்சியிலிருப்பது தனக்குப் பல விதங்களில் உதவியாக இருக்குமென எதிர்பார்த்த அமெரிக்காவும் இதற்குத் துணைபுரிந்தது. மேலும் மத்திய ஆசியாவின் கனிம வளத்தை குறிப்பாக எண்ணெய் எரிவாயுவை குழாய் மூலம் ஆப்கான், பாக் வழியாக துறைமுகங்களுக்கு கொண்டு செல்லும் தேவையை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் உணர்ந்திருந்தன. அந்த வகையில் ஆப்கானின் இருப்பிடம் செயல்தந்திர ரீதீயாக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது.

ஆப்கானில் புகுந்த தாலிபான்கள் நஜிபுல்லாவைக் கொன்று தெருவில் தொங்கவிட்டனர். காட்டுமிரண்டித்தனமான ஒழுங்குகளெல்லாம் இசுலாத்தின் பெயரில் அமல்படுத்தப்பட்டன. பர்தா அணியாத பெண்கள், கல்வி கற்ற பெண்கள், எல்லோருக்கும் கல்லடி கிடைத்தது. புரதான பெருமை வாய்ந்த புத்தர் சிலையும் இடிக்கப்பட்டது. அப்போதெல்லாம் அமெரிக்கா தாலிபானை கைவிடவில்லை என்பது இங்கே முக்கியம்.தாலிபானின் ஆட்சியை உலகநாடுகள் அங்கீகரிக்கவில்லையெனினும் அமெரிக்காவின் கூட்டாளிகளான சவுதி, பாக்கிஸ்தான் நாடுகள் மட்டும் அங்கீகரித்தன. இயற்கை எரிவாயுக் குழாய் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக தாலிபான் பிரதிநிதிகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு அழைத்து வந்தன. ஆரம்பத்தில் முஜாகிதீன்களின் வருவாய்க்காக கஞ்சா உற்பத்தியை பெரும் பரப்பளவில் பயிரிடுவதற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனம் உதவியிருந்தது. ஏழை நாடான ஆப்கானில் தாலிபானின் முக்கிய வருவாயாக கஞ்சா உற்பத்தி திகழ்ந்தது. இதை மேற்குலகின் சந்தைக்கு கொண்டு செல்லத் தேவையான வழிகளையும் சி.ஐ.ஏ ஏற்படுத்திக் கொடுத்தது.

இக்காலத்தில் ருமைலா எண்ணெய் வயலின்மூலம் தனது எண்ணெய் வளத்தை குவைத் நாடு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் உதவியோடு ஆக்கிரமிக்க  முயன்றதால் சினமடைந்த சதாம் உசேன் குவைத் மீது போர் தொடுத்தார். தான் வளர்த்த ஒரு சர்வாதிகாரி தனக்கே எதிராகத் திரும்பியதைக் கண்ட அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்தது. சதாம் உசேனைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஒரு பொம்மை ஆட்சியைக் கொண்டு வர அமெரிக்கா எத்தணித்தது. ஏற்கனவே பாலஸ்தீன், ஈரான் பிரச்சினைகளில் இருந்த இசுலாத்தின் அமெரிக்க வெறுப்பு இப்போது ஈராக்கிற்கும் பரவியது. தான் உரமிட்டு வளர்த்த இசுலாமிய மதவாதம் தனக்கே எமனாகத் திரும்புமென அமெரிக்கா அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை. சில அசட்டு மதவாதிகள் என்ன செய்துவிட முடியுமென மேற்குலகம் மெத்தனமாக இருந்தது.

சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த வரை அமெரிக்காவால் தோற்றுவித்து வளர்க்கப்பட்ட இசுலாமிய மதவாதம் அமெரிக்காவை இரட்சகனாகக் கருதிவந்தது. சோவியத் யூனியன் வெளியேறிய பிறகு இருவரும் தமது நலன்களால் பிரிவுகொள்ளும் சூழ்நிலை வந்தது. முதல் வளைகுடாப் போரும், இசுரேலின் அடாவடித்தனங்களும் பொதுவில் இசுலாமிய மக்களை சினம் கொள்ள வைத்தது. இந்தப் பின்னணியில்தான் பின்லேடனின் அல்கைதா தனது முன்னாள் ஏஜமானனை எதிரியாக அறிவித்து 90களின் பிற்பகுதியில் சில நாடுகளிலிருந்த அமெரிக்க தூதரகங்களை குண்டுவைத்துத் தாக்கியது. அமெரிக்காவின் கட்டளையோடு பாக்கின் பங்களிப்போடு உருவான தாலிபான்களும் அல்கைதா பக்கம் சாயத்துவங்கினர். சன்னி பிரிவின் கடுங்கோட்பாட்டுவாதிகளான தாலிபான்களை பாக்கின் இராணுவ அதிகார வர்க்கம் ஆதரித்து வந்தாலும் அமெரிக்காவை எதிரியாகக் கருதும் தாலிபான்களை மாற்ற முடியாமல் திணற ஆரம்பித்தது.

மதவாதிகளை அறிவுப்பூர்வமாக ஏமாற்ற முடியாமலும், உணர்ச்சிப் பூர்வமாக சமாளிக்க முடியாமலும் இருந்த நேரத்தில்தான் 2001 உலக வர்த்தக மையம் அல்கைதாவால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் அமெரிக்காவிற்கு தெரியாமல் நடந்திருக்க முடியுமா என்பதையும் உத்திரவாதம் செய்ய முடியாது. இதை தெரிந்து வேண்டுமென்றே நடக்கவிட்டு மக்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவுடன் ஆப்கானையும், ஈராக்கையும் ஆக்கிரமிப்பதற்கென்றே கூட இது அனுமதிக்கப்பட்டிருக்கலாம். பயங்கரவாதத்திற்கெதிரான போர் என அறிவித்து இருநாடுகளையும் பின்னாளில் ஆக்கிரமித்த அமெரிக்கா இன்றுவரை இராணுவ பலத்தை அந்நாடுகளில் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்க்கவேண்டும். இன்னொரு கோணத்தில் டாலரால் ஊட்டி வளர்க்கப்பட்ட இசுலாமியத் தீவிரவாதம் தனது தர்க்கபூர்வமான வளர்ச்சியில் சுயேச்சையாக அமெரிக்காவை எதிர்க்கும் இயல்பான நிலைக்கு வந்ததையும் மறுக்க முடியாது. அதே சமயம் இந்த இரண்டு முரண்பட்ட நிலைகளையும் அமெரிக்கா தனது நலனுக்காக பயன்படுத்துகிறது என்பதுதான் எல்லவற்றையும் விட முக்கியமானது. பின்லேடன் பிடிபடாத வரைக்கும் அவர் அமெரிக்காவைப் பொறுத்தவரை பொன்முட்டையிடும் வாத்துதான். பிடிபட்டாலும் புதிய வாத்துக்கள் உருவாக்கப்பட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு தொடரும்.

இன்று ஈராக்கில் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு சதாம் உசேனும் அமெரிக்க சதியால் தூக்கிலிடப்பட்டுவிட்டார். ஆப்கானிலும் அதே நிலைமை உருவாகிவிட்டது. ஆனாலும் போர் இன்னமும் முடியவில்லை. ஆப்கான் பாக் எல்லைப் பகுதியில் இருக்கும் அல்கைதா, தாலிபானை ஒடுக்குவதற்காக போரை தீவிரப்படுத்துவேன் என புதிய அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார். அடுத்தது ஈரான் அணுகுண்டு பூச்சாண்டி காட்டுவதாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் பட்டியலில் வருவதற்குக் காத்திருக்கிறது. இத்தகைய சூழலில் இதுவரை அமெரிக்காவின் அடியாளாகச் செயல்பட்ட பாக்கிஸ்தானில் குழப்பமான சூழ்நிலை தொடர்கிறது.

இந்தியாவைப் போல அல்லது இன்னமும் அதிகமாக ஏழை நாடாக இருக்கும் பாக்கிஸ்தான் அமெரிக்காவின் சூதாட்டத்தில் ஏராளமாக இழந்திருக்கிறது. முதல்பலி ஜனநாயகம். பாக்கின் இராணுவ சர்வாதிகாரிகளை அமெரிக்கா நிபந்தனையின்றி ஆதரித்தற்கும் ஆப்கான் பிரச்சினை ஒரு முக்கியமான காரணமாகும். மேலும் முன்னர் இந்திரா காந்தி காலம் வரை இந்தியா சோவியத் முகாமில் இருந்ததால் அமெரிக்கா தனது இயல்பான கூட்டாளியாக பாக்கை மாற்றிவந்தது. சோவியத் ஆக்கிரமிப்பு இந்த உறவை உறுதி செய்தது. இதற்குப் பொருத்தமாக இராணுவ சர்வாதிகாரம் பாக்கில் நிலை கொண்டது. இராணுவ அதிகார வர்க்கமே பாக்கில் சொத்துக்களையும், தொழில்களையும் கையில் வைத்திருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான தேசபக்த உணர்ச்சியில் மக்களை மூழ்கடித்துவிட்டு இந்த இராணுவ சர்வாதிகாரிகள் செல்வத்தில் திளைத்தார்கள். பின்னர் முஜாகிதீன்களுக்காக மதரசாக்கள் ஆரம்பிக்கப்பட்டதும் இந்த ஏழை நாட்டின் மக்கள் மதவாத வெறிக்கும் பலியாகினர். இதற்கு முன்னர் இசுலாத்தில் மதவாதம் மட்டுமே இருந்தது என்றால் சி.ஐ.ஏ தயவில் உருவாக்கப்பட்ட இந்த மதரசாக்கள் இசுலாமிய கடுங்கோட்பாட்டு வாதத்தை முதன்முறையாக உருவாக்கின.

தாலிபான் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த மதரசாக்களுக்கான அமெரிக்க, சவுதி புரவலர்கள் கையை விரித்தாலும் மதவாதம் வீறு கொண்டு எழும் வண்ணம் ஈராக், செசன்யா, காஷ்மீர், பாலஸ்தீனம், லெபனான் என பல தீர்க்க முடியாத பிரச்சினைகள், ஏகாதிபத்தியங்களால் தீர்வு தடை செய்யப்பட்டிருக்கும் பிரச்சினைகள் உதவி செய்தன. மேலும் பாக்கின் ஐ.எஸ்.ஐ உளவுத் துறை தனது அமெரிக்கா எஜமானின் உதவியோடு இந்த வேலைகளை இதுவரை செய்து வந்தவர்கள் இப்போது அதே வேலைகளுக்கு எதிராக செய்யவேண்டுமெனும்போது பிரச்சினை வருகிறது. ஐ.எஸ்.ஐ அமைப்பில் இப்பொது அமெரிக்க ஆதரவு, தாலிபான்-அல்கைதா ஆதரவு, அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட காஷ்மீர் அமைப்பு ஆதரவு என பல குழுக்கள் பல போக்குகள் இருக்கின்றன. இராணுவமும் அதே மனநிலையில்தான் இருக்கிறது. ஆப்கான் பாக் எல்லையில் அமெரிக்காவின் கட்டளைக்கேற்ப இசுலாமிய தீவிரவாதிகளுக்கெதிராக போரிடும் பாக் இராணுவம் இதுவரை 2000 வீரர்களை இழந்திருக்கிறது. இந்தப் போரை தொடரும் மனநிலையில் துருப்புக்கள் இல்லை என்பதும் முக்கியம். பாக்கின் சிவில் அரசாங்கம் அமெரிக்காவின் கட்டளையை முழுமனதுடன் ஆதரித்தாலும் இராணுவமும், உளவுத் துறை அமைப்பும் அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் இன்று பாக்கிஸ்தான் யார் கட்டுப்பாட்லும் இல்லை என்று சொன்னால் மிகையல்ல.

மதவாதத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட நாட்டில் இன்று அதே மதவாதத்தை எதிர்க்கவேண்டுமென்றால் எப்படிச் செய்வது? பாக்கின் ஆளும்வர்க்கம் அமெரிக்காவின் அடிவருடி என்பதால் அவர்களையும் இந்த மதத் தீவிரவாதிகள் தாக்கத்தான் செய்கிறார்கள். பெனாசிர் புட்டோ முதல் பலரும் அதில் பலியாயிருக்கிறார்கள். ஜூலை 2007 முதல் இன்று வரை பாக்கில் நடந்த நூற்றுக்கணக்கான தற்கொலைத் தாக்குதலில் 1200பேர் இறந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்தியாவை விட இசுலாமிய பயங்கரவாதத்தால் அதிகம்பேரை பலி கொடுத்திருப்பது பாக்கிஸ்தான்தான். இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் லஷ்கர் இ தொய்பா பாக்கிலும் தடை செய்யப்பட்ட இயக்கம்தான். இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்ளும் மசூரின் ஜெய்ஷி முகம்மது இயக்கம் பாக்கிலும் ஆட்சியாளர்களைக் குறிவைத்து பல தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறது. இப்படி ஏகாதிபத்தித்தினாலும், மதத் தீவிரவாதத்தினாலும் நெருக்கடியின் உச்சத்திலிருக்கும் ஒரு நாட்டிலிருந்ததுதான் மும்பைத் தாக்குதலுக்கான குழு வந்திருக்கிறது.

இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றது. ஆப்கான் எல்லையில் போரிடும் பாக்கின் இராணுவத்தை விடுவிக்கவேண்டுமென  பாக் இராணுவத்திலும், ஐ.எஸ்.ஐ யிலும் சிலர் நினைத்திருக்கலாம். அவர்களே அப்படி நினைக்காவிட்டாலும்  இந்தியாவுக்கும் பாக்கிற்கும் ஒரு பதட்டத்தை தோற்றுவித்தால் தங்கள் மீது போர் தொடுத்திருக்கும் பாக் இராணுவத்திலிருந்து தற்காலிகமாக விடுதலை பெறலாம் என்று இசுலாமியத் தீவிரவாதிகள் நினைத்திருக்கலாம். இதை காஷ்மீருக்காக போராடும் சில மதவாதக் குழுக்கள் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது அமெரிக்காவே இந்தத் தாக்குதலை தெரிந்திருந்தும் அனுமதித்து அதன்மூலம் தனது பயங்கரவாத எதிர்ப்பு போருக்கு இந்தியவை இன்னமும் அதிகமாக பயன்படுத்தலாம் என்று நினைத்திருக்கலாம். ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் சிக்கியிருக்கும் உலகில் எல்லாப் பிரச்சினைகளும் நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிமையாக புறத்தோற்றத்தில் இருப்பதில்லை. நண்பன் யார், எதிரி யார், காரணம் எது, விளைவு என்ன, என்பதெல்லாம் இங்கு சுலபமாகத் தெரிவதில்லை.

இன்று இந்தியா பாக் மீது போர் தொடுக்க வேண்டுமென சில ‘தேசபக்தர்கள்’ வலியுறுத்துகிறார்கள். பாக்கிலிருக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளும் அப்படித்தான் விரும்புகிறார்கள். அப்படி ஒரு போர் வரும் பட்சத்தில் இருநாட்டு மக்களும் அடையப்போகும் அழிவிற்கு முன்னால் இது ஒரு அணு ஆயுத யுத்தமாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இன்று பாக்கிலிருக்கும் அணு ஆயுதத்தின் மீது யாருக்கு கட்டுப்பாடு இருக்கிறது என்பதை அறுதியிட முடியாது. எனவே பாக்கிஸ்தானை போரிலிருந்து தவிர்ப்பதற்கு யாரையும் விட இந்தியாவுக்குத்தான் அவசியம் அதிகமிருக்கிறது. இரு நாட்டு தேசபக்தி வெறியை கிளறி விட்டு இருநாடுகளுக்கும் ஆயுதம் விற்று இலாபம் பார்த்திருக்கும் அமெரிக்காவும் இத்தகைய போர் அபாயத்தை கட்டுப்படுத்தும் வழியை யோசிப்பதை விட அதனால் கிடைக்கும் ஆதாயத்தையே முதன்மையாக வைத்து செயல்படுகிறது. இந்தியாவின் பதட்டத்தை தணிப்பதும், பாக்கை கட்டுப்படுத்துவதும் அவர்கள் இதன் பொருட்டே செய்கிறார்கள். இந்த குழப்பமான நிலையை அமெரிக்க எதிர்பப்பிற்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதே இசுலாமிய தீவிரவாதிகளின் நிலை. இத்தகைய சதிகளும், சூழ்ச்சிகளும் நிறைந்த காலத்தில் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் சிக்கிக் கொண்டிருப்பது இன்றைய காலத்தின் அவலம்.

இசுலாமிய பயங்கரவாதத்தை இசுலாமிய மக்களில் பெரும்பான்மையினர் கண்டிக்கவே செய்கிறார்கள். ஆனால் அம்மக்களை மதவாதத்தில் மூழ்கடிக்கும் மதவாதிகள், அவர்கள் பயங்கரவாதத்தைக் கண்டிப்பவர்களாக இருந்தாலும் மதவாதம் என்ற முறையில் சித்தாந்தம் என்ற நிலையில் பயங்கரவாதிகளோடு ஒன்றுபடவே செய்கிறார்கள். உலகம் முழுவதும் இசுலாத்தின் ஆட்சி வரப்போவதாகவும், ஷரியத்தின் சட்ட ஒழுங்கில்தான் உலகம் அமைதி பெறமுடியுமென்றும், மனித குலத்திற்கு இசுலாம் மட்டுமே விடுதலை அளிக்கப் போவதாகவும் நம்புகிறார்கள். இதை காந்திய வழியில் செய்வதா, அல்கைதா வழியில் செய்வதா என்பதில்தான் வேறுபாடு. ஆனால் இந்த மதப்புனிதம் இசுலாம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை நிலவியதில்லை என்பதோடு இனியும் நிலவ முடியாது என்பதுதான் உண்மை.

ஐந்தாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்து அரேபிய பதூயின் இன நாடோடி மக்களை நல்வழிப்படுத்தும் நபிகள் நாயகத்தினுடைய போதனைகளின் தேவை அந்த நூற்றாண்டிலேயே முடிந்து விட்டது. அதை வைத்து இருபத்தியோராம் நூற்றாண்டின் மனித குலப்பிரச்சினைக்கு தீர்வு காண நினைப்பது அடி முட்டாள்தனம். அது இசுலாமிய மக்களுக்கு எந்த விடுதலையையும் வழங்க முடியாது என்பதோடு அவர்களது அவல வாழ்க்கையை மதம் என்ற உணர்ச்சியில் மூழ்கடிப்பதற்குத்தான் பயன்படும். அதைத்தான அரபு ஷேக்குகளும், இசுலாமிய நாடுகளிலிருக்கும் ஆளும் வர்க்கங்களும் செய்து வருகிறார்கள். மதத்தின் பெயரால் விரிக்கப்பட்டிருக்கும் இந்த மாயவலையிலிருந்து இசுலாமிய மக்கள் வெளியேற வேண்டும். இதன் பொருள் இசுலாமிய மதத்தை துறப்பது என்பதல்ல. எந்த மதமும் ஒரு மனிதனது தனிப்பட்ட வாழ்வில் மட்டும் பின்பற்றப்படவேண்டிய விசயம். அம்மதம் அவனது அரசியல், சமூகப், பொருளாதார வாழ்வில் இடம்பெறக்கூடாது என்பதைத்தான் இங்கு வலியுறுத்துகிறோம்.

இசுலாமிய நாடுகள் பல இருந்தாலும் அவை மதத்தான் ஒரு சகோதர உணர்வைப் பெறவில்லை. இனம், மொழி, இன்னும் பல பிரிவினைகளோடுதான் இசுலாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஷியா, சன்னி மதப் பிரிவுகள் இன்னமும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இதில் பல நூறு மக்கள் இன்றும் கொல்லப்பட்டுத்தான் வருகின்றனர். ஈரான், ஈராக் போர் இசுலாமிய சகோதரவத்துவத்தால் நடை பெறாமல் போகவில்லை. ஈராக் முசுலீம் மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவையான எல்லா வசதிகளையும் முசுலாம் நாடுகளான சவுதியும், குவைத்தும்தான் செய்து வருகிறது. அரபு மன்னர்களும், ஷேக்குகளும் தமது நாட்டு செல்வத்தை அமெரிக்காவில்தான் முதலீடு செய்திருக்கின்றனர். அப்பாவிப் பெண்களை பர்தா போடவில்லையென்றால் தண்டிக்க வேண்டும் என்று வாதாடும் மதவாதிகள் எல்லா ஒழுக்கக்கேடுகளையும் வைத்துக் கொண்டு வாழும் ஷேக்குகளை கண்டிப்பதில்லை. தஸ்லிமா நஸ்ரீன் என்ற பெண்ணிற்கு எதிராக வாளைச் சுழற்றும் மதவாதிகள் எவரும் இந்த ஷேக்குகளுக்கு எதிராக பத்வாவைப் பிறப்பிக்கவில்லை.

பிலிப்பைன்சைச் சேர்ந்த சிறுமி சாரா தன்னை பாலியல் வன்முறை செய்த கிழட்டு ஷேக்கை தற்காப்பிற்காகக் கொன்றபோது அவளுக்கு மரணதண்டனை வழங்கியதுதான் ஷரியத்தின் இலட்சணம். ஐதராபாத்தைச் சேர்ந்த ஆமினாவைப் போன்ற ஏழைச்சிறுமிகளை பலதாரமுறை என்ற பெயரில் அரபு நாடுகளுக்கு கடத்துவதுதான் இசுலாம் வழங்கியிருக்கும் மதச்சுதந்திரம். ஷாபானு என்ற முதிய பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கக்கூடாது என்று போராடியதுதான் இந்தியாவின் இசுலாமிய மதவாதிகளின் உரிமையாக அறியப்பட்டது. சாரத்தில் ஏழைகளுக்கும், பெண்களுக்கும் இசுலாமிய மதவாதிகள் செய்திருக்கும் அநீதிகள் பல. ஏழை இசுலாமிய நாடுகளிலிருக்கும் வறிய மக்களின் வர்க்க கோரிக்கைகளுக்காக தமது சுண்டு விரலைக்கூட அசைத்திராத இந்த வீரர்கள்தான் மதம் என்ற பெயரில் இன்றைக்கும் பல பிற்போக்குத்தனங்களுக்காக போராடுகிறார்கள். இசுலாமிய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இந்த அடிப்படைவாதத்தை எதிர்த்துப் போராடும்போதுதான் உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக போராடும் வல்லமையை அவர்கள் பெற முடியும். கண்மூடித்தனமான பயங்கரவாதத்திற்கு சலிக்காமல் சப்ளை செய்யும் இளைஞர்களை தடுப்பதும் அப்போதுதான் சாத்தியம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் கம்யூனிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், தேசியவாதிகள் என்று பலரும் இருக்கின்றனர். ஆனால் இசுலாமிய மக்கள் மட்டும்தான் மதத்தின் பெயராலும் எதிர்க்கின்றனர். இது நிச்சயமாக ஆரோக்கியமான போக்கல்ல, அதற்கான அடிப்படையை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியிருந்த போதும். ஏனெனில் பாலஸ்தீன், ஈராக், காஷ்மீர் போராட்டங்களெல்லாம் தேசிய இனப் போராட்டங்களாகத்தான் இன்னமும் இருந்து வருகிறது. அவற்றை மதம் என்று குறுகிய வட்டத்தில் அடைப்பதால் அந்தப் பலனை ஏகாதிபத்தியங்கள்தான் அடைகின்றனவே தவிர இசுலாமிய மக்களல்ல. மேலும் அமெரிக்க ஏகாதிபத்திய சுரண்டலினால் இசுலாம் மட்டுமல்ல பல மதங்களைச்சேர்ந்த மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மக்களை வர்க்க உணர்வுதான் இணைக்கவேண்டுமே ஒழிய மதம் அல்ல. அப்படி மதத்தால் பிரிக்கப்பட்டால் நாம் போராடுவதற்கான தோழமைகளை இழந்து போகிறோம் என்பதுதான் கண்ட பலன்.

இசுலாமிய மக்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அவர்கள் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுவதும், வாடகைக்கு வீடு கூட கிடைக்காது என்ற நிலையில் சமூக வாழ்க்கையில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலைமைக்கு அந்த மக்கள் காரணமல்ல என்றாலும் அப்போதும் அவர்கள் மதவாதத்திலிருந்து விலகி இருக்கவேண்டும் என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம். மசூதிக்கு செல்வதும், அல்லாவைத் தொழுவதும் நமக்குள்ள தனிப்பட்ட உரிமைகள், அதைத்தாண்டி நமது சமூக வாழ்க்கைக்கு அந்த உரிமைகளை பயன்படுத்துவதில் பலனில்லை என்பதையே இசுலாமிய மக்கள் உணரவேண்டும். இந்த விதி இசுலாத்திற்கு மட்டுமல்ல எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்பதையும் சேர்த்தே சொல்கிறோம்.

மும்பைத் தாக்குதலைச் செய்த பயங்கரவாதிகளை வினவு கண்டிக்கவில்லை என சில நண்பர்கள் பின்னூட்டமிட்டிருந்தார்கள். வினவு நிச்சயாமாகக் கண்டிக்கிறது. ஆனால் நமது கண்டிப்பு அம்புகளுக்கு மட்டுமல்ல அவற்றை எய்த கைகளுக்கும் சேர்த்தே போகவேண்டும். அந்தக் கைகளில் அமெரிக்காவின் கையே முக்கியமானது என்பதை இந்தத் தொடரின் மூலமாக இயன்ற அளவு விளக்கியிருக்கிறோம். இந்தியாவில் இருப்பவர்கள் முக்கியமாக இந்து மதவெறியர்களை கண்டிப்பதும், காஷ்மீர் போராட்டத்தினை ஆதரிப்பதும் செய்யும்போதுதான் இசுலாமிய பயங்கரவாதத்தையும் கண்டிக்க முடியும். முன்னதை தவிர்த்துவிட்டு பின்னதை மட்டும் கண்டிப்பதில் பயனில்லை. அது வெறுமனே தேசபக்தி என்ற பெயரில் இந்திய ஆளும்வர்க்கங்கள் உருவாக்கும் மற்றொரு மதவாதம்தான்.

மும்பைத் தாக்குதலினால் இசுலாமிய பயங்கரவாதிகள் மக்களைக் கொன்றது போக பல தீங்குகளை நாட்டு மக்களுக்கு அளித்திருக்கிறார்கள். காஷ்மீரில் சுய நிர்ணய உரிமைப் போராட்டம் மீண்டும் மக்களை அணிதிரட்டி வளர்ந்து வரும் நிலையில் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் அதைக் கொச்சைப் படுத்தி அவதூறு செய்கிறது. ஏற்கனவே இனப்படுகொலை செய்யும் இந்துமதவெறியர்களின் பாசிச வேட்கையையும் அதற்கான நியாயத்தையும் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் இலவசமாக வழங்கியிருக்கிறது. பொடாவை விட அதிக அடக்குமுறைகள் கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு மசோதா பாரளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. இனி சிறுபான்மை மக்களும், இந்திய அரசை எதிர்த்துப் போராடும் புரட்சிகர அமைப்புகளும் இந்த சட்டத்தால் கேள்வி முறையின்றி வேட்டையாடப்படுவார்கள். ஈழத்திற்காக குரல் கொடுப்பவர்களைக்கூட இந்தச் சட்டப்பிரிவின் மூலம் ஒடுக்க முடியும். அமெரிக்காவின் மறுகாலனியாதிக்கச் சுரண்டல்களுக்கெதிராக போராடும் உலக மக்களின் அரசியலை பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல் மூழ்கடித்து திசைதிருப்புகிறது.

இந்தியாவில் இந்துத்வமும், பாக்கில் இசுலாமிய அடிப்படைவாதமும் பாரிய அளவில் தீங்கிழைத்திருக்கின்றன. இரு நாட்டு மக்களும் இந்த இரு அடிப்படைவாதங்களையும் எதிர்த்துப் போராடும்போதுதான் இந்தியத் துணைகண்டத்தில் நடக்கும், நடைபெறப்போகும் பயங்கரவாதங்களை தடுக்கமுடியும். இந்த போராட்டத்தில் எந்த அளவுக்கு முன்னேறுகிறோமோ அந்த அளவு அமெரிக்கா நடத்தும் ஆக்கிரமிப்பு சூதாட்டங்களையும் தடுக்க முடியும். மதத்தை வைத்து ஏகாதிபத்தியங்கள் நடத்திவரும் பதிலிப்போரிலிருந்து நாம் விடுபடுதோடு உண்மையான வர்க்கப் போரை அறிவிக்கவும் முடியும். இவை எதுவும் நிறைவேற முடியாத கனவல்ல. ஏனெனில் இறுதியில் நம் செயல்பாட்டை மதம் தீர்மானிப்பதில்லை, நம் சமூக வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது. அந்த உண்மையிலிருந்து கற்றுக்கொண்டு இந்துத்வப் பயங்கரவாதம், இசுலாமிய பயங்கரவாதம், அமெரிக்க பயங்கரவாதம் என எல்லா பயங்கரவாதங்களையும் எதிர்த்துப் போராடுவோம்.

– முற்றும்.

ஞாநியின் ‘தவிப்பு’ !

ஞாநியின் ‘தவிப்பு’ – நாவல் விமரிசனம்

“துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது” அரசியல் சித்தாந்தமல்ல

  • துப்பாக்கியால் ஞானஸ்நானம் பெற்றவர்களெல்லாம் போராளிகளா?

  • நீதியற்ற வழிமுறைகளைக் கோருகிற இலட்சியம் நீதியான இலட்சியமா?

  • உயிரைத் துறக்கும் போராளிக்கு நேர்மையைத் துறக்கும் உரிமை உண்டா?

  • -நாவல் விமரிசனத்தினூடாகப் பரிசீலிக்கப்படும் கேள்விகள் இவை.

ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்த ஞாநியின் (பத்திரிகையாளர்) ‘தவிப்பு’ எனும் நாவல் நூல் வடிவில் வெளிவந்துள்ளது.

 

இந்த நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் பேசிய ‘நந்தன்’ சிறப்பாசிரியர் சுப. வீரபாண்டியன், தனித்தமிழ்நாட்டிற்கான நியாயங்களை ஞாநி நேர்மையாக, தெளிவாகக் குறிப்பிட்டுள்ளாரென்றும், எனவே அந்த வகையில் உள்ளடக்கத்தில் தனக்கு முரண்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார்.

“பஞ்சாப், அசாம் மாநிலங்களில் நடந்த போராட்டங்களும் அவற்றை டெல்லி ஆட்சியாளர்கள் எதிர்கொண்ட விதமுமே இந்தக் கதைக்கு ஆதார நிகழ்ச்சிகள். அவற்றை தமிழ்ச் சூழலுக்குப் பொருந்துவதாக மாற்றி அமைத்துக் கற்பனை செய்திருக்கிறேன்” என்று தன் முன்னுரையில் கூறுகிறார் ஞாநி.

தனிநாடா – இல்லையா என்பது குறித்த அரசியல் விவாதம் நமது நூல் விமரிசனக் கட்டுரையின் வரம்புக்கு அப்பாற்பட்டது.

ஆனால், ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், தமிழ்நாட்டில் தற்போது பேசப்படும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் இருக்கின்ற தொப்புள் கொடி உறவை மறுக்கவியலாது.

இனி கதைக்கு வருவோம்.

இந்திய ஒருமைப்பாடு, அநீதிக்கெதிரான மிதவாத எதிர்ப்பு ஆகிய கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட, அரசியலெல்லாம் அதிகம் தெரிந்து கொள்ளாத தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான விஜயன்.

தனது சொந்த ஊரான செங்கல்பட்டில் பல இடங்களில் குண்டு வெடித்த செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவனுக்கு உள்துறை அமைச்சகத்திலிருந்து அழைப்பு வருகிறது.

குண்டு வெடிப்பை நடத்திய தமிழ்நாடு விடுதலைப் புரட்சியாளர் குழு (தவிப்பு) என்கிற அமைப்பின் தலைமைக் குழுவினருடைய புகைப்படங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கோப்பினை விஜயனிடம் காட்டுகிறார் உளவுத்துறைத் தலைவர்.

விதவிதமான உயர்கல்வி கற்ற தமிழ் இளைஞர்களின் படங்களுக்கு நடுவே ஆனந்தி! அவனுடைய கல்லூரித் தோழி. நம்ப முடியாமல் அந்தப் புகைப்படத்தையே வெறித்துக் கொண்டிருந்த விஜயனிடம் “உங்களுக்கு இவளைத் தெரியுமா?” என்று கேட்கிறார் உளவுத்துறை அதிகாரி. “தெரியும்” என்கிறான் விஜயன். “அது எங்களுக்கும் தெரியும்” என்று பதில் வருகிறது.

மறுநாளே தவிப்பு குழுவினர் சென்னை தொலைக்காட்சி நிலைய இயக்குனரைக் கடத்தி விட்டனர் என்ற செய்தி வருகிறது. தவிப்பு குழுவினரைச் சந்தித்துப் பேசும் பொறுப்பு விஜயனிடம் ஒப்படைக்கப்படுகிறது. விஜயன் புறப்படுகிறான்.

ஆனந்தியின் புகைப்படத்தைப் பார்த்தது முதல் அவளை நேரில் சந்திக்கும் தருணம் வரை விஜயனின் சிந்தனையில் ஆனந்தியைப் பற்றிய பழைய நினைவுகள் கிளர்ந்தெழுகின்றன.

-விஜயனின் நினைவுகளினூடாக ஆனந்தியின் பாத்திரம் நாவலில் நிறுவப்படுகிறது.

ஆனந்தியை நேரில் சந்திக்கிறான் விஜயன். “நீ எப்படி இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாய்” என்று கேட்கிறான். எண்பதுகளில் போலீசால் கொலை செய்யப்பட்ட நக்சல்பாரி இயக்கத் தோழர் பாலனின் (நாவலில் இராஜன்) கதையைச் சொல்லி, “அதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை” என்று அப்போதுதான் தெளிந்ததாகச் சொல்கிறாள் ஆனந்தி.

தனித் தமிழ்நாடு கேட்பதற்கான நியாயங்கள் குறித்து ஆனந்தியும் அவளது தோழர்களும் வைத்த வாதங்கள் எதற்கும் விஜயனிடம் பதில் இல்லை. ஆனால் வன்முறை இதற்கு வழியல்ல என்ற கருத்து அவனிடம் ஓங்கி நிற்கிறது.

தவிப்பு குழுவினரின் கோரிக்கைகளில் சில அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதனடிப்படையில் நிலைய அதிகாரி விடுவிக்கப்படுகிறார்.

ஆனால் இந்தப் பேச்சு வார்த்தையினூடாக தவிப்பு குழுவினருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சன், தன்னைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறுகிறான். ‘எச்சரிக்கையாகப் பயன்படுத்துவது’ என்று முடிவு செய்கிறது தவிப்பு.

பணமும் ஆயுதங்களும் ஏற்பாடு செய்து தருகிறது உளவுத்துறை. குழுவினரிடன் குடிப் பழக்கமும் உல்லாசமும் பரவுகிறது. பணத்துக்காக போதை மருந்து கடத்தல் துவங்குகிறது.

ஆனந்தியும் சில தோழர்களும் எதிர்க்கின்றனர். பிறகு ஒரு நாள் சக தோழர்களாலேயே கொல்லப்படுகின்றனர்.

விஜயன் அழுகிறான். தன்னைப் போல தெளிவு பெற வாய்ப்பு இருந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்கிறவர்களாக மட்டுமே இருந்துவிட்டதனால்தான், டெல்லியில் அதிகாரத்தில் வந்து அமரும் யாரோ ஒருவனின் அயோக்கியத் தனத்துக்காக அன்பும் அறிவும் ததும்பும் இளைஞர்கள் பலியாக்கப்படுகிறார்கள். எனவே அரசியலில் ஈடுபடுவதென முடிவு செய்கிறான்.

செங்கல்பட்டில் இடைத் தேர்தலில் நிற்கும் மத்திய உள்துறை அமைச்சருக்கெதிராகப் போட்டியிட்டு வெல்கிறான்.

ஒரு அமைச்சன் தனது சொந்த அரசியல் லாபத்துக்காகப் போராளிக் குழுவொன்றைப் பகடைக் காயாக்கிக் கொண்டான் என்பதல்ல பஞ்சாப், அசாம், காஷ்மீர் பிரச்சினைகளின் அனுபவம். உறவாடி, ஊடுறுவி, கைக்கூலிகளை உருவாக்கிக் கெடுப்பது என்பது, ‘ஒருமைப்பாட்டையும்’, பிராந்திய மேலாதிக்கத்தையும் காப்பாற்ற இந்திய அரசு மேற்கொள்ளும் போர்த் தந்திரமாகவே உள்ளது.

அதேபோல ஆனந்தியுடனான விஜயனின் நட்பும், அவனிடம் தங்கிக் கிடக்கும் ஆனந்தியைப் பற்றிய நினைவுகளும், எட்டாண்டுப் பிரிவை நியாயப்படுத்துவனவாக இல்லை.

ஆனந்தியின் மரணத்தினால் குற்ற உணர்வுக்கு ஆளாகும் விஜயன், அதிகாரிகள் – அமைச்சர் – உளவுத்துறை ஆகிய அனைவரிடமும் நெருங்கியிருந்து சூடுபட்ட பின்னரும், நம்பிக்கையுடன் தேர்தலில் நிற்கிறான் – வெல்கிறான். இது வலிந்து ஒட்டவைக்கப்பட்ட முடிவாக இருக்கிறது.

-இவ்வாறு நாவலின் பாத்திரப் படைப்பு, கலைத் தன்மை, ஒத்திசைவு ஆகியவற்றை நாவலின் வரம்புக்குள்ளேயே நின்று விமரிசிக்கலாம்.

ஆனால் நாவலின் மையமான கதாபாத்திரங்களான போராளிகள், அவர்களது சிந்தனை, நடவடிக்கைகள், அவை எழுப்பும் கருத்தியல் ரீதியான வினாக்கள் ஆகியவற்றினூடாக ‘விடுதலை இயக்கம்’ என்பதைப் புரிந்து கொள்வது அதைவிட முக்கியமானது.

இதை ஒரு இயக்கத்தின் கதையாகச் சொன்னால், தியாக உள்ளம் கொண்ட படித்த இளைஞர் குழுவொன்று சிறிது வழி தவறியதால் அழிந்த கதை என்று சொல்லலாம்.

அல்லது ஆனந்தியின் கதையாகச் சொல்வதென்றால், கவிதை உள்ளமும் தலைமைப் பண்புகளும் கொண்ட ஒரு பெண், சக தோழர்களின் தவறுகளால் அநியாயமாகப் பலியான கதை என்று சொல்லலாம்.

“தொடர்கதை முடிவடைந்து பத்து மாதங்களுக்குப் பிறகும் எங்கேனும் சந்திக்கும் ஏதோ ஓர் வாசகர் ‘ஆனந்தி செத்துப் போயிருக்க வேண்டியது அவசியம்தானா?’ என்று கேட்டுக் கொண்டுதானிருக்கிறார். எனக்குள்ளும் அதே கேள்வி இருக்கிறது” – என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஞாநி.

கதை சொல்லப்பட்டிருக்கிற முறையிலும் சரி, வாசகர்கள் பழக்கப்பட்டிருக்கும் முறையிலும் சரி, இது ஆனந்தியின் கதைதான். எனவே ஆனந்திக்காக வாசகர்கள் வருந்துவதில் வியப்பில்லை.

“பலவீனமில்லாத இயக்கம் இருக்க முடியாது; போராளிகள் மடிந்தாலும் போராட்டம் தொடரும் என்று முடித்திருக்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் சுப. வீ.

தவிப்பு இயக்கத்தின் பலம் எது பலவீனம் எது? ஆனந்தி உயிர் பிழைத்திருந்தால் – ஆனந்த விகடன் வாசகர் அடையக்கூடிய மன ஆறுதலுக்கு மேல் – வேறென்ன நடந்திருக்கும்? தேர்தல் பாதையில் நம்பிக்கை கொண்ட விஜயனும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஆனந்தியும் உண்மையில் அரசியல் எதிர்த்துருவங்களா?

இந்தக் கேள்விகளுக்கு நாம் விடை காண முயல வேண்டும்.

“ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், நல்லெண்ணம் மிக்க சில முட்டாள்தனமான நம்பிக்கைகள் அறிஞர்களின் மூளைகளில் ‘தேவையான முறையில்’ தோன்றுகின்றன” என்றார் பிளக்கானவ்.

அத்தகைய அறிஞர்கள் ‘வீரர்களாகவும்’ ஆகிவிடும்போது அவர்கள் தம்மை உயர்வகை மானிடர்களாகப் ‘பணிவுடன்’ கருதிக் கொள்கிறார்கள்.

அவர்கள் மக்களை எவ்வளவுதான் நேசித்தாலும் மக்களை பூச்சியங்களின் கூட்டம் என்றே ‘அன்புடன்’ மதிப்பிடுகிறார்கள்.

பூச்சியங்களுக்குத் தலைமை வகிப்பதன் மூலம் அவற்றுக்கு மதிப்பை ஏற்படுத்தித் தருகின்ற “எண்கள்” என்ற தகுதியில், மக்களின் ஜீவமரணப் பிரச்சினைகளில் அவர்களை ஈடுபடுத்தாமலேயே, அவர்கள் மத்தியில் பணியாற்றாமலேயே, அவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமையைத் தம் கையிலெடுத்துக் கொள்கிறார்கள். இது தம்முடைய தியாகத்துக்கு மக்கள் வழங்க வேண்டிய ‘நியாயமான விலை’ என்று உளப்பூர்வமாக நம்புகிறார்கள்.

எதார்த்தமே கொள்கையின் உரைகல்லாக இருக்க வேண்டும் என்ற விஞ்ஞானத்தை இவர்கள் மறுக்கிறார்கள். தங்கள் சொந்த மன உணர்வுக்கேற்ப யதார்த்தத்தைப் பிசைந்து கொள்கிறார்கள்.

இத்தகையவர்கள்தான் தவிப்பு குழுவினர்.

சிந்தனை ஒன்று – முகங்கள் மூன்று

மக்களாகிய மந்தைகள் மீது ஒருவகை வெறுப்புக் கொண்ட குமாரசாமி; அனுதாபம் கொண்ட ஆனந்தி. இவையிரண்டும் ஒரே நடுத்தர வர்க்க சிந்தனையின் இரண்டு முகங்கள்.

பண்பாட்டு விழுமியங்கள், கலை ரசனை, அறநெறிகள் போன்ற அனைத்திலும் குமாரசாமியுடன் தீவிரமாக வேறுபடும் ஆனந்தி தனித் தமிழ்நாடு என்ற அரசியல் கொள்கையில் மட்டும் உடன்படுவதால் இருவரும் தவிப்பு குழுவின் மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள்.

மற்றெல்லாவற்றிலும் ஆனந்தியுடன் ஒத்திசைவு கொண்ட விஜயன், வன்முறைப் பாதையை மறுக்கின்ற ஒரே காரணத்தால் அந்நியன்.

விஜயனும் ஆனந்தியும் வேறானவர்களா? இல்லை. இவர்களும் கூட அதே சிந்தனையின் இரண்டு முகங்கள்தான்.

அதனால்தான் ஆனந்தி ஒரு தீவிரவாதக் குழுவின் உறுப்பினர் என்று கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைகிறான் விஜயன். “பொருந்தாத பொருட்கள் – ஆனந்தியும் துப்பாக்கியும், ஆனந்தியும் வெடிகுண்டும். ஆனந்தியும் கடத்தலும். இவை எப்படிப் பொருந்த முடியும்” என்று அதிசயிக்கிறான். அவளை நேரில் சந்திக்கும்போது கேட்கிறான்.

ஆனந்தி பதில் சொல்கிறாள்: “எங்களுக்கும் இந்த வன்முறை சம்மதம் இல்லைதான்… அதன் மொழியில் பேசினால்தான் அதற்குப் (அரசுக்கு) புரிகிறது என்பதால் குண்டுகளை வெடிக்க வேண்டியிருக்கிறது.”

“ஒரு நல்ல நண்பனோடும் இடைவெளி வைத்துப் பேச வேண்டிய நிலைக்கு என்னைத் தள்ளியிருக்கிற சூழ்நிலை எனக்கு அலுப்பாக இருக்கிறது. இந்த வன்முறைகள் எப்போது முடியும் என்ற தவிப்பு என்னை அலைக்கழிக்கிறது.. இதையெல்லாம் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு எங்களைத் தள்ளியிருக்கிற உங்கள் அரசாங்கம் மீது எனக்கு மேலும் மேலும் வெறுப்பாயிருக்கிறது. நிறைய முகமூடிகளை அணிந்து கொண்டு போராட வேண்டியிருப்பது அலுப்பாக இருக்கிறது… ஒவ்வொரு முகமூடியாக உதற வேண்டியிருக்கிறது. வன்முறை கூட ஒரு முகமூடிதான். எங்கள் உண்மையான முகங்கள் வேறு. நீ அதைப் புரிந்து கொண்டால் நான் எவ்வளவு சந்தோஷப்படுவேன்.”

ஆம்! ஆனந்தியும் துப்பாக்கியும் பொருந்தாத பொருட்கள்தான் என்று அவளே விளக்கிவிட்டாள். இந்தக் குமுறலைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.

கட்டாயத்துக்கு ஆளானவர்கள்!

“இதையெல்லாம் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு எங்களைத் தள்ளியிருக்கும் அரசாங்கம்…” – எதையெல்லாம்? நகரின் மத்தியில் குண்டு வைத்து பொதுமக்களைக் கொல்வது போன்ற ‘புரட்சிகர’ நடவடிக்கைகளையெல்லாம்!

கட்டாயத்திற்கு ஆளானவர்கள்! எப்பேர்ப்பட்ட புகழ்மிக்க சொற்றொடர்! தனது சொந்த நடவடிக்கைக்கான தார்மீகப் பொறுப்பிலிருந்து நடுத்தர வர்க்கம் விடைபெற்றுக் கொண்டுவிட்டது!

யூதர்களைக் கொலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மனிதாபிமானமுள்ள ஜெர்மன் அதிகாரிகளை உள்ளாக்கிய நாஜி அரசு, நம்மூரின் ‘நேர்மையான’ அதிகாரிகளை ஊழலுக்கு உடன்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கும் அமைச்சர்கள், ‘முற்போக்கு’ இளைஞர்களை வரதட்சிணை வாங்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கும் பெற்றோர்கள்!

இந்த இரண்டு வார்த்தைகள் அளிக்கும் தார்மீகப் பாதுகாப்பில்தானே நடுத்தர வர்க்கம் வாழ்ந்து கொண்டிருக்கிறது!

அப்படியானால் இந்த வன்முறைக்கு யார் பொறுப்பேற்பது? ‘இந்த வன்முறை கூட ஒரு முகமூடிதான்’ என்று கூறி தார்மீகப் பொறுப்பை முகமூடியின் மீது சுமத்துகிறாள் ஆனந்தி. “நிறைய முகமூடிகளை அணிந்து கொண்டு போராட வேண்டியிருப்பது அலுப்பாக இருக்கிறது” என்கிறாள்.

புரட்சி என்பது முகமா, முகமூடியா?

விந்தை! ஒரு சராசரி மனிதன், தனக்கு ஏற்கனவே அணிவிக்கப்பட்டிருக்கும் முகமூடிகளை ஒவ்வொன்றாகக் கழற்றியெறியும் முயற்சியினூடாகத்தான் புரட்சியாளனாக மாறுகிறான். சாதி, மதம், இனம், சமூக அந்தஸ்து, தகுதி போன்ற பல முகமூடிகளைப் பிய்த்தெறியும் துன்பமும் புரட்சியாளனாக, முரணற்றவனாக உருவாகும் இன்பமும் பிரிக்கவொண்ணாதவை.

வன்முறை என்பது புரட்சியாளனின் முகமூடி அல்ல; சூழ்நிலையின் கைதியாக, தன் சொந்த விருப்பத்துக்கு விரோதமாக ஈடுபடும் இழிந்த நடவடிக்கையல்ல வன்முறை.

ஒரு புரட்சிகர அமைப்பும் அதன் உறுப்பினரும் சுதந்திரமாக, அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து உணர்வுப் பூர்வமாக ஈடுபடும் நடவடிக்கை. உயிருக்குப் போராடும் மனிதனைக் காப்பாற்றுவதும், எதிரியைக் கொலை செய்வதும் அவனது உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகள்தான்.

ஆனால் “நான் அவளில்லை” என்கிறாள் ஆனந்தி. அவள் விஜயனின் ‘பழைய’ ஆனந்திதான். புரட்சிக்காரி என்பதுதான் அவளுடைய முகமூடி. அதனால்தான் அவளுக்கு ‘அலுப்பாக’ இருக்கிறது.

தமிழன் திருந்த மாட்டான்!

தங்களது சொந்த மன உணர்வின் அடிப்படையில் சமூக நிலைமையை மதிப்பிட்டதால் தோன்றுவது தவிப்பு; அதே மன உணர்வுக்கு மக்களும் வரவில்லை என்பதால் ஏற்படுவது அலுப்பு.

இதே அலுப்புதான் ‘தமிழன் திருந்த மாட்டான்’ என்று அறிஞர்களைப் பேச வைக்கிறது. “எனக்கென்ன வந்தது. நான் வசதியாக வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம்” என்று அங்கலாய்க்க வைக்கிறது.

தமது வாழ்க்கை வசதிகளை விட்டொழித்ததன் மூலம் தங்களது விடுதலையைச் சாதித்துள்ளதாக அவர்கள் கருதுவதில்லை. “உங்களுடைய விடுதலைக்காக மற்றவர்கள் இழக்க விரும்பாததை நான் இழந்தேன்” என்று மக்களுக்கு நினைவு படுத்துகிறார்கள். “நினைத்திருந்தால் நான் நடுத்தர வர்க்க அற்பனாகவே வாழ்ந்திருக்க முடியும்” என்று சொல்வதன் மூலம், தற்போது தான் அணிந்திருப்பது முகமூடிதான் என்பதை மக்களுக்கு நினைவு படுத்துகிறார்கள்.

இந்த முகமூடிக்காரர்களின் அலுப்பின் உள்ளே உறைந்திருப்பது நடுத்தர வர்க்க மேட்டிமைத்தனம்; பூச்சியங்களுக்குத் தலைமை தாங்கும் ‘எண்களின்’ அகம்பாவம்!

இந்த அலுப்புதான் பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகியவை குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளை ஏளனத்துடன் நிராகரிக்கிறது. தங்கள் சொந்த நடைமுறை குறித்த விமரிசனங்களை வன்மத்துடன் எதிர்கொள்கிறது.

எயிட்ஸ் விளம்பரத்தின் நீதி!

நாவலுக்கு வருவோம். “ஆயுதம் தருகிறேன். பணமும் தருகிறேன். என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தவிப்பு குழுவினரிடம் கூறுகிறான் உள்துறை அமைச்சன்.

“அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை” என்று கருதுகிறது மத்தியக் குழுவின் பெரும்பான்மை. ‘இது ஆபத்தானது’ என்கிறாள் ஆனந்தி.

இது இலட்சியத்துக்கு எதிரான நடைமுறை என்றோ, நெறி தவறிய செயல் என்றோ ஆனந்தி கூறவில்லை. இதிலிருக்கும் ‘ஆபத்தை’ மட்டுமே சுட்டிக் காட்டுகிறாள்.

ஆபத்து எதில்தானில்லை? ஆர்ப்பாட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடு நடக்கும் ஆபத்து இருக்கிறது; ஆதிக்க சக்திகளை எதிர்த்தால் கொலை செய்யப்படும் ஆபத்து இருக்கிறது; ஏன், உண்ணாவிரதம் இருந்தால்கூட செத்துப் போகும் ஆபத்து இருக்கிறது.

உளவுத்துறையைப் பயன்படுத்துவது என்ற முடிவு தங்கள் இலட்சியத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்தையோ, தங்கள் நாணயத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்தையோ, மக்களுக்கு ஏற்படுத்தவிருக்கும் ஆபத்தையோ ஆனந்தி கருதவில்லை. தங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை எண்ணியே கவலைப்படுகிறாள்.

எயிட்ஸ் தடுப்பு விளம்பரங்களும் கூட இப்படித்தான் சொல்கின்றன. “உங்கள் மனைவியைத் தவிர யாருடனும் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள். அப்படி வைத்துக் கொள்வதென்றால் ஆணுறை அணியுங்கள்.”

முதல் வரியில் ஒழுக்கக் கோட்பாடு. இரண்டாவது வரியில் ஆபத்தைத் தடுக்கும் எச்சரிக்கை. ஆணுறை அணிந்து ஆபத்தைத் தவிர்ப்பவர்களின் கள்ளத்தனம், அதன் காரணமாகவே நல்லொழுக்கமாகி விடுமா?

தந்திரங்கள்

ஆம். அப்படித்தான் ஆகிவிடுகிறது! இந்திய உளவுத்துறை, இந்திய இராணுவப் பயிற்சி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டபோதும் அமைதிப்படையை எதிர்த்து நின்றதனால் புலிகள் நெறி தவறாதவர்களாகி விட்டார்கள்; அது மட்டுமல்ல, “எச்சரிக்கையாகப் பயன்படுத்திக் கொள்ளும்” இந்தக் கோட்பாடு, விடுதலைப் போராட்டத்தின் “நடைமுறைத் தந்திரம்” என்ற அரசியல் அந்தஸ்தையும் பெற்றுவிட்டது.

இதே தந்திரத்தின் அடிப்படையில், ஈழத்தமிழர்களின் போராட்டம் இந்துக்களின் போராட்டம் என்று கூறி தாக்கரேயின் ஆதரவைப் பெறலாம்; காஷ்மீர் விடுதலையை எதிர்ப்பதன் மூலம் ஈழ விடுதலையைத் துரிதப்படுத்தலாம். எதுவும் செய்யலாம்.

ஆனால் இவையெதுவும் போராளிகளின் ஆளுமை மீது, போராளி அமைப்பின் மீது, அவர்களது நேர்மை, நல்லொழுக்கத்தின் மீது, அவர்களது இலட்சியத்தின் மீது ஒரு சிறிய கீறலைக் கூட ஏற்படுத்தாது என்பதுதான் அவர்களது ஆதரவாளர்களின் நம்பிக்கை.

ஏனென்றால் “இலட்சியம், வழிமுறைகளை நியாயப்படுத்துகிறது.”

· இதுதான் தவிப்பு குழுவினரின் கோட்பாடு. அவர்கள் மட்டுமல்ல இந்திய அரசின் துணைகொண்டு ஐ.ஆர்.8 போல தமிழீழத்தைக் குறுகிய காலத்தில் அறுவடை செய்ய எண்ணிய ஈழத்தின் எல்லா ‘தவிப்பு’ குழுக்களுக்கும் இதுதான் கோட்பாடு.

இவர்கள் மட்டுமல்ல; எப்படியாவது தனித்தமிழ்நாடு பெறத் தவிப்பவர்கள், எப்படியாவது புரட்சியை விரைவுபடுத்தத் துடிப்பவர்கள், எப்படியாவது (ஜெ யுடன் சேர்ந்தாவது) பாரதிய ஜனதாவைத் தோற்கடிக்க முயலும் போலி கம்யூனிஸ்டுகள்…. இன்னோரன்ன அனைவருக்கும் இதுதான் கோட்பாடு.

அதனால்தான் கடத்தல்காரர்களிடம் மாமூல் வாங்குவது, அவர்களையே இயக்கத்தில் சேர்ப்பது, பேருந்து நிலையங்களில் குண்டு வைத்து மக்களைக் கொல்வது போன்ற நடவடிக்கைகளும் ஆனந்திக்கு முறிவை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் “இலட்சியம் வழிமுறைகளை நியாயப்படுத்துகிறது.”

நீதியான லட்சியம்
நீதியற்ற வழிமுறைகள்

“நியாயப்படுத்துகிறது” என்ற இந்தச் சொல்லே நியாயமற்ற ஒரு கொள்கை அல்லது செய்கைக்கு, அது தன்னியல்பில் பெற்றிராத ஒரு தகுதியை வலிந்து அதற்கு வழங்கும் மோசடியாகும். நெறியற்ற நடவடிக்கைகளுக்கு ‘இலட்சியப் போர்வை’ போர்த்தி மறைக்கும் பித்தலாட்டமாகும்.

இலட்சியம் வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை; தீர்மானிக்கிறது. அதே போல, வழிமுறைகளும் இலட்சியத்தின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

இலட்சியத்திற்கு உகந்த வழிமுறை கடைப் பிடிக்கப்பட வில்லையானால், எத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றனவோ அதற்குப் பொருத்தமான இலட்சியத்தையே அடைய முடியும்.

“நீதியற்ற வழிமுறைகளைக் கோருகின்ற இலட்சியம் நீதியான இலட்சியமல்ல” என்றார் மார்க்ஸ்.

இலட்சியத்திற்கும் – வழிமுறைக்கும், அறிவியலுக்கும் – அறநெறிக்கும், கொள்கைக்கும் – நடைமுறைக்கும் இடையே இருக்க வேண்டிய இணைப்புக் கண்ணியை மார்க்சியத்தின் துணை கொண்டு மட்டுமே அறிவியல்பூர்வமாக நிறுவ முடியும்.

அரசியல் – அறவியல் முரண்பாடு

தாக்குதல் – தற்காப்பு, போராட்டம் – சமரசம், தியாகம் செய்தல் – தேவையற்ற தியாகத்தைத் தவிர்த்தல் போன்ற பல பிரச்சினைகள் தோற்றுவிக்கின்ற ‘அரசியல் – அறவியல்’ முரண்பாடுகளை மார்க்சியத்தின் துணை கொண்டு மட்டுமே அறிவியல் பூர்வமாகப் பரிசீலித்து விடைகாண முடியும்.

மற்றெல்லா இசங்களும், அவற்றைப் பின்பற்றும் இயக்கங்களும் ‘குத்துமதிப்பாக’ இவற்றைப் பற்றிப் பேசலாம்; அவரவர் வசதிக்கேற்ப வரையறுத்துக் கொள்ளலாம்; தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். அவற்றில் ஓர் ஒருங்கிணைவு இருக்க முடியாது.

போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் எதிரியுடன் தற்காலிக சமரசம் செய்து கொள்வதன் ‘அரசியல் தேவை’ குறித்து ஒருவர் பேசினால், அதனையே ‘துரோகம்’ என்று அறவியல் வழிநின்று இன்னொருவர் சாட முடியும்.

“அமைச்சனின் கூலிப்படையாக மாறுவதற்கா இத்தனை தியாகங்கள் செய்தோம்” என்று ரவித்தம்பி அறவியல் (தார்மீக) ஆவேசத்துடன் கேட்கும் போது, “ஆளும் வர்க்கங்களின் உள் முரண்பாடுகளைப் பயன்படுத்துவதில் என்ன தவறு” என்று குமாரசாமி அரசியல் ரீதியாக அதற்கு மடையடைக்க முடியும்.

நாவல் முழுவதிலும், தவிப்பு குழு முழுவதிலும், அவர்களுடைய சிந்தனை – செயல்பாடு முழுவதிலும் இந்த முரண்பாடு நிரம்பியிருக்கிறது.

நாய் விற்ற காசு கடிக்கும்!

கோப்பை நிரம்பிவிட்டது; அது வழிவதற்கான கடைசித் துளி மட்டுமே தேவைப்படுகிறது. அந்தக் கடைசித்துளிதான் போதை மருந்துக் கடத்தல்.

“நாய் விற்ற காசு குரைக்காது, போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படாது: வேறு எந்த நாட்டுக்காரனோ பயன்படுத்தட்டும்” என்று கூறுகின்ற தமிழ்மணி, குமாரசாமியின் நியாயங்களை ஆனந்தி எதிர்க்கிறாள்.

போதைப் பொருள் கடத்தலை நிறுத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் விடுதலை இயக்கத்தைக் கடத்தல் இயக்கமாக மாற்றி, அந்தக் கடத்தலுக்கு ‘உதவி செய்யாவிட்டால் கொன்றுவிடுவோம்’ என்று இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவரையே மிரட்டிய தமிழ்மணி, குமாரசாமி போன்றோர் இயக்கத்தில் தொடர்ந்து இருப்பதைப் பற்றி ஆனந்திக்கும் குழுவினருக்கும் ஆட்சேபம் எதுவும் இல்லை.

அப்பாவியா – விஷமியா?

ஒரு மனிதனை எப்படி மதிப்பீடு செய்வது? வேறொரு இடத்தில் இதற்கு விளக்கம் தருகிறாள் ஆனந்தி. தவிப்பு குழுவினால் கடத்தப்பட்ட பாண்டே எனும் அதிகாரியை – தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் – கொன்று விடுவோம் என்று ஆனந்தி கூறிய போது “அதெப்படி நியாயம்” என்று கேட்கிறான் விஜயன்.

“ஒருவரை அப்பாவி என்றோ விஷமி என்றோ ஒட்டு மொத்தமாக வர்ணித்துவிட முடியாது. பாண்டே சாதுவான நல்ல மனிதராக இருக்கலாம். நீ கூடத்தான்… ஆனால், அரசாங்கத்தின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கும் போது, உங்கள் நடவடிக்கைகள் எமது தமிழ் மக்களுக்குச் சாதகமாக இருக்கின்றனவா, எதிரானவையா என்பதைப் பொறுத்துத்தான் உங்கள் அப்பாவித்தனம் தீர்மானிக்கப்படும்” என்கிறாள் ஆனந்தி.

இந்த அளவுகோலை குமாரசாமிக்கும் பொருத்த வேண்டும் என்று ஆனந்தி எண்ணவில்லை. பாண்டேயைப் போல கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பில் அல்ல, முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் உள்ள குமாரசாமி, ஜனநாயக விரோதமாக தன்னிச்சையாக முடிவுசெய்த போதை மருந்து வியாபாரம் அப்பாவித்தனமானதா? அறியாமையால் செய்த பிழையா?

குமாரசாமியை ஒரு போராளி என்றே மதிப்பிடுகிறாள் ஆனந்தி. “ஒரு மனிதனை ஒட்டுமொத்தமாக இன்ன தன்மை கொண்டவரென்று வரையறுத்து விட முடியாது” என்ற ஆனந்தியின் சிந்தனையும் இங்கே வேலை செய்கிறது.

கலப்பற்ற மனிதன் உண்டா?

தன்னுடைய அனைத்து சுய முரண்பாடுகளையும் நியாயப்படுத்துவதற்கு நடுத்தரவர்க்கம் தன் கைவசம் வைத்திருக்கும் வாளும் கேடயமும் இந்தக் கோட்பாடுதான்.

ஒரு பொருள், மனிதன் அல்லது இயக்கத்தின் பன்முகத் தன்மையை ஆராய்ந்து, அதன் சாராம்சமென்ன என்பதை வரையறுத்து, பிறகு அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சியை மதிப்பிடுவதுதான் அறிவியல் நோக்கு.

“இயற்கையிலும் சரி சமுதாயத்திலும் சரி, ‘கலப்பற்ற’ நிகழ்வுகள் எவையும் இல்லை.” ஆனால் ஒரு நிகழ்வின் தன்மையை இன்னதென்று வரையறுத்துச் சொல்லும் நேரத்தில், அதில் இது கலந்திருக்கிறதே “என்பதை யாரேனும் நினைவுபடுத்துவாரானால் அவர் அளவு கடந்த அசட்டுப் புலமை வாய்ந்தவராகவோ அல்லது சொற்புரட்டராகவோ எத்தராகவோதான் இருக்க வேண்டும்” என்றார் லெனின்.

சந்தனக் கடத்தல், போதை மருந்து கடத்தல், உளவுத்துறை உறவு ஆகிய எதை வேண்டுமானாலும் தமிழர் விடுதலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் கண்ணோட்டம், பழமைவாதம், ஆணாதிக்கம் ஆகிய அனைத்தும் குமாரசாமியிடம் இருக்கின்றன. எனினும் அவனை போலீசு சித்திரவதைக்குப் பணியாத உயிரைத் துச்சமாக மதிக்கும் போராளியாகவே மதிப்பிடுகிறாள் ஆனந்தி.

இந்த நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய சுப.வீரபாண்டியனும் இதையேதான் வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். “பலவீனமில்லாமல் ஒரு இயக்கம் இருக்க முடியாது.”

பலத்தை வென்றது பலவீனம்!

ஆனால் என்ன விந்தை! பலவீனம் பலத்தை அழித்துவிட்டது. ஆனந்தி கொலை செய்யப்படுகிறாள். ஆனந்தியின் கருத்துக்களை ஆதரித்த வேலு என்ற மத்தியக்குழு உறுப்பினர் விஜயனுக்கு எழுதிய கடிதம் நாவலின் இறுதிப் பகுதியில் வருகிறது.

“அடுத்து வரும் நாட்களில் எங்கள் இயக்கம் மக்கள் முன்பு கொச்சைப் படுத்தப்படும். நாங்கள் செய்த தவறுகள் அம்பலப்படுத்தப்படும். அந்த வேளையில் தமிழ் விடுதலைப் போராளிகள் என்றாலே இப்படித்தான் என்ற கருத்து மக்கள் மனதில் தோன்றத் தொடங்கும்.

இல்லை. அப்படி இல்லை. ஒழுக்கம், அறநெறிகள், மனித நேயம் இவற்றில் ஆழ்ந்த பற்றுள்ள பல போராளிகள் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டதால்தான் இந்தச் சீரழிவுகள் நிகழ்கின்றன என்பதை மக்கள் உணரச் செய்ய வேண்டும். அதை உங்களைப் போன்றோரால்தான் செய்ய முடியும் என்பதாலேயே இந்தக் கடிதம். எங்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டி அல்ல, எமது மானத்தை, சுய மரியாதையைக் காப்பாற்றவே இக்கடிதம்.”

இழக்க ஏதுமில்லாப் போராளிகள்!

தம்மையும், ஆனந்தியையும் அறநெறியில் பற்றுக் கொண்டவர்களாகக் கூறுகிறார் வேலு. அறநெறியில் பற்றுக் கொண்ட ஆனந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பு உள்துறை அமைச்சனை சந்திக்கிறாள். தமிழகத்தில் தங்களை நசுக்கும் நோக்கத்துடன் இறக்கப்பட்டிருக்கும் ராணுவம் உடனே விலக்கப்பட வேண்டும் என்று கோருகிறாள். “விலக்காவிட்டால்?” என்று கேட்கிறான் அமைச்சன்.

ஆனந்தி பதிலளிக்கிறாள். “எங்களுடன் நீங்கள் நடத்திய பேரம் பற்றி முதலமைச்சர் ஆறுமுகத்துக்கும், பொது மக்களுக்கும் அறிவிப்போம். அது பகிரங்கமாவதில் எங்களுக்கொன்றும் இழப்பு இல்லை. நீங்கள்தான் தேர்தலில் நிற்கிறீர்கள்!”

“எங்கள் தவறுகள் அம்பலமாகும்; நாங்கள் கொச்சைப்படுத்தப் படுவோம். இருப்பினும் அதைச் சந்திப்போம். ஆனால் உன்னை அம்பலப்படுத்தாமல் விடமாட்டோம்” என்றுகூடச் சொல்லவில்லை ஆனந்தி.

அமைச்சன் பதவியை இழக்கலாம்; தேர்தலில் தோற்கலாம்; ஆனால் அவனிடம் இழப்பதற்கு மானம் இல்லை. இலட்சியமும் இல்லை.

எங்களுக்கும் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிறாள் ஆனந்தி. ஆனால் வேலுவோ “இந்த உறவாடலில் நாங்கள் இழந்தவை ஏராளம்” என்று கடிதம் எழுதுகிறார்.

கள்ள உறவின் இரகசியங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமையில்தான் இவர்களது “அறநெறியின் ஆன்மா” ஒளிந்திருக்கிறது போலும்!

இந்தியா ராஜீவை இழந்தது
ஈழம் விடுதலையை இழந்தது

ஈழப் போராளிகளுடனான இரகசிய உறவில் இந்திய அரசு ராஜிவ் காந்தியை இழந்தது; சில நூறு சிப்பாய்களை இழந்தது. ஈழ மக்களோ தம் விடுதலையை இழந்தார்கள். ஆனந்திகளுக்கோ இழப்பு ஒன்றுமில்லை!

தாங்கள் தமிழ் மக்களுக்கிழைத்த நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றியோ, அவர்களது ‘விடுதலை’யைத் தொலைத்தது பற்றியோ அக்கடிதம் வருந்தவில்லை: தங்கள் மானத்தை சுயமரியாதையைக் காப்பாற்றவே கவலைப்படுகிறது. தங்களது நடவடிக்கையின் சமூக விளைவுகளை எண்ணி வருந்தாமல், தன் நிலை எண்ணி வருந்தும் அறிவாளிகளின் உளவியல் இது.

பூச்சியங்களுக்குத் தலைமை தாங்கும் அகம்பாவத்தில் திளைத்திருந்த ‘மதிப்பு மிக்க’ எண்கள், இதோ தன்னிரக்கத்தில் வீழ்ந்து விட்டன!

அந்த இடத்தில் சிக்கெனப் பொருந்துகிறது ஆனந்திக்குப் பிடித்தமான சுந்தர ராமசாமியின் (பசுவய்யா) கவிதை.

நான் விடைபெற்றுக் கொண்டுவிட்ட
செய்தி
உன்னை வந்து எட்டியதும்
நண்பா பதறாதே.
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல்
எதுவும் அதில் இல்லை.
இரங்கற்கூட்டம் போட
ஆட்பிடிக்க அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச் சோர்வில் ஆழ்ந்து கலங்காதே.

கலாச்சாரத் தூண்கள் (சாகித்திய அகாதமி போன்றவை) தன்னை கவுரவிக்க வேண்டுமென்ற விருப்பம், விருப்பம் நிறைவேறாததால் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வு, அந்தக் கோபத்தில் வெடிக்கும் தடித்தனம் என்ற வசவு, நானும் இலைதானா – மரமில்லையா என்ற ஆதங்கம், பிறகு இலைகளின் மீது அனுதாபம்!

இதுதான் ஆனந்திக்குப் பிடித்தமான கவிதை என்றால், நாவலாசிரியர் இக்கவிதை மூலம் ஆனந்தியின் பாத்திரத்திற்குப் பெருமை சேர்க்கவில்லை.

தன்னிரக்கம்

மக்களுக்காக மரிக்கும் போராளி, தனது மறைவுக்காக மக்கள் கண்ணீர் சிந்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. தனக்காக கலாச்சாரத் தூண்கள் கண்ணீர் சிந்த வேண்டும் என்று எண்ணுபவன் போராளியல்ல; கலாச்சாரத் தூண்களால் அலங்கரிக்கப்படும் அரசவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகப் ‘புரட்சி’யை ஒரு கருவியாகப் பயன்படித்துபவன்.

இந்தக் கவிதையின் அழகியலைக் கொண்டு ஆனந்தியின் அரசியலை மதிப்பிடலாமெனில், “எங்களைக் கண்டு கொள்; எங்களை அங்கீகரி; எங்களுடன் பேசு” என்று அரசை நிர்ப்பந்திப்பதற்காகக் குண்டு வெடிக்கும் ‘அழுத்த அரசியல்’தான் (Pressure politics) அது.

ஆனால் போராளிகள் என்பவர்கள் மக்களால் கண்டுகொள்ளப்படுவற்காக, அங்கீகரிக்கப் படுவதற்காக மக்களிடம் பேசுபவர்கள், அவர்களைத் திரட்டுபவர்கள், அவர்களைப் பேச வைப்பவர்கள், அவர்களைப் போராடச் செய்பவர்கள். ஆம்! ‘பூச்சியங்களின்’ பின்புலத்தில்தான் எண்களின் மதிப்பு உயர்கிறது.

***

ஆயுதம் தாங்கிய விஜயன்தான் ஆனந்தி! ஆயுதம் ஏந்திய அமைச்சன்தான் குமாரசாமி! ஆயுதம் தாங்கிய அமிர்தலிங்கம்தான் பிரபாகரன்!

தவிப்பு எனும் ஆயுதம் தாங்கிய அறிஞர்களின் ஊனம் அவர்களது மூளையில்தான் இருக்கிறது. அவர்களது அரசியல் சித்தாந்தம் ஒரு வேளை அவர்களுக்கு அழிவைத் தேடித்தராமல் இருந்திருந்தால், தமிழ் மக்கள் தங்களுக்கு நேரவிருக்கும் அழிவை எதிர்த்துப் போராட நேரிட்டிருக்கும.

***

இது சீனப் புரட்சியின் ஐம்பதாவது ஆண்டு. தோழர் மாவோவின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்றைக் குறிப்பிட்டு முடித்துக் கொள்வோம்.

“துப்பாக்கிக் குழாயிலிருந்துதான் அரசியலதிகாரம் பிறக்கிறது” என்றார் மாவோ. சமாதான மாற்றம், தேர்தல் பாதை என்று சரணடைந்த போலி கம்யூனிசத்திற்கு அளிக்கப்பட்ட பதில் அது.

அந்த வாக்கியம் ஓர் அனைத்தும் தழுவிய உண்மை. தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல, முதலாளி வர்க்கத்திற்கும் அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழாயிலிருந்துதான் பிறக்கிறது.

போராளிகளையும் புரட்சியாளர்களையும் இனங்காண்பதற்கான அடையாளமே துப்பாக்கிதான் என்று கருதியிருப்போர், மாவோவின் அந்த மேற்கோளை அருள்கூர்ந்து இன்னுமொருமுறை படியுங்கள்.

துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியல் அதிகாரம்தான் பிறக்கிறது. அரசியல் சித்தாந்தம் பிறப்பதில்லை.

புதிய கலாச்சாரம், அக்டோபர் – 1999 ( அனுமதியுடன் )

‘தவிப்பு’

ஆசிரியர்: ஞாநி

விலை ரூ.80

நூல் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை -600002.
044 – 28412367,

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: