பணமே ஓடிவா. சோம. வள்ளியப்பன்-பாகம் 16-24

நன்றி : குமுதம்

பணத்தினை முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். மூன்றில், ரிஸ்க் என்பதை மட்டும்தான், சற்று விவரமாகப் பார்த்தோம். மற்ற இரண்டு விஷயங்களான, ‘வருமானம் எவ்வளவு?’ மற்றும் ‘வெளியேறும் வசதி’ (லிக்விடிட்டி) ஆகியவை பற்றி விரிவாகப் பார்க்கவில்லை. அவற்றை விரிவாகப் பார்ப்பதை சற்றுத் தள்ளிவைத்துவிட்டு, அதற்குமுன் இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தினைப் பார்த்துவிடுவோமா?

அது சுவாரஸ்யமான விஷயம் தானா! அதுவும் இப்போதே பார்க்க வேண்டியது அவசியமா?

இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். “ஆமாம்.’’

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிறுவனங்கள், வருமான வரிக்கு என்று, கட்டாயமாக ஒரு தொகையைப் பிடித்துக்கொண்டு, “இந்தா. இதுதான் மிச்சம், இதுதான் இந்த மாத சம்பளம்’’ என்று ஒரு சொற்பத் தொகையினைத் தரும் போது, போச்சுடா.. அடுத்து வரும் மார்ச் மாதம், சம்பளம் என்று எதாவது வருமா என்று சில மாதச் சம்பளக்காரர்கள் கவலைப்படுகிறார்கள். சிரமப்பட்டு சம்பாதிக்கும் பணம். அதனை வரியாகக் கட்டும்போது மனது கொஞ்சம் கனக்கத்தான் செய்கிறது இல்லையா? அப்படி கட்டியே ஆகவேண்டிய வரியில், ஏதாவது சலுகை கிடைக்காதா, அதன் மூலம் வரியை எவ்வளவு குறைக்க முடியும் என்று தேடுகிறார்கள்.

வருடத் தொடக்கத்திலேயே, தங்களுடைய வருமானத்தினைக் கணக்கிட்டு, அதற்கேற்ப, சலுகை தரும், எல்.ஐ.சி. போன்ற திட்டங்களில் முதலீடு செய்வது; மேலும் ஏப்ரல் மாதம் முதலே, மாதம் இவ்வளவு என்று கட்ட வேண்டிய வரித்தொகையையும் கட்டி வருவது. இவை இரண்டினையும் செய்துவந்தால், இந்த ‘வருடக் கடைசி’ பிரச்னையைத் தவிர்க்கலாம்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? கட்ட வேண்டிய வரியைக் குறைத்துக்கொள்ள, நேர்மையான வழிகளே இருக்கிறதா? அவை என்ன? அவை யாருக்குப் பொருந்தும்? எவற்றில் முதலீடு செய்தால் வரிச் சலுகைகள் பெறலாம்? எவ்வளவு தொகை வரை இந்தச் சலுகை உண்டு? இவற்றைப் பற்றி எங்கே, எப்படித் தெரிந்துகொள்ளுவது?

பணத்தினைச் சேர்ப்பதற்கு, இந்த வரி நிர்வாகமும் உதவும். அதனால் அதைப் பற்றியும் விரிவாகவே பார்த்துவிடுவோம்.

வருமான வரி.

நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கான வருமான வரியினை எவ்வளவு என்று முடிவு செய்து, அதனை வசூலிக்கும் உரிமை, மத்திய அரசிடம் இருக்கிறது. (விற்பனை வரி போன்ற வரிகள் விதிப்பு மற்றும் வசூலிக்கும் உரிமை மாநில அரசுகளிடம்).

வருமான வரி என்பது ஆண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படும். ஓர் ஆண்டு முழுக்க வருகிற வருமானத்தினைக் கூட்டி, குறிப்பிட்ட அளவு வரையிலான வருட வருமானத்திற்கு மட்டும் வரியில்லை என்று அறிவிக்கிறது அரசு. அதற்கும் அதிகமாக இருக்கும் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும். வரியினைப் பொறுத்தவரை ஆண்டு என்பது ஏப்ரல் மாதம் தொடங்கி, அடுத்த மார்ச் வரையிலான 12 மாதங்கள். இதனை நிதி ஆண்டு என்கிறார்கள்.

நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்குமான வரி விகிதங்கள் வேறு வேறானவை. நாம் பார்ப்பது தனி நபருக்கான வரி விகிதங்கள்.

நடப்பு நிதி ஆண்டான,

2007_08 ல், தனி நபர் வரி விகிதங்கள் ( Personal Income Tax) என்ன?

ஒரு லட்சத்துப் பத்தாயிரத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருந்தால் வரி கிடையாது. அதற்கு மேல் வருமானம் வந்தால், வருமான வரி கட்ட வேண்டும்.

இந்த ஒரு லட்சத்துப் பத்தாயிரம் என்பது ஆண்களுக்குத்தான். பெண்களுக்குக் கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. அவர்களுடைய தனிப்பட்ட வருமானத்திற்கு, ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வரையிலும் வரி கிடையாது.

“அய்யா, இந்த நாட்டில் வயதானவர்களுக்கு மரியாதை கிடையாதா?’’ என்று கேட்கலாம். உண்டு. மரியாதை மட்டுமில்லை, வரியில் சலுகையும் உண்டு. சீனியர் சிட்டிசன்கள் ( 65 _ க்கும் அதிகமான வயது ஆனவர்கள் ) எல்லோருக்கும், ஆணோ பெண்ணோ, ஒரு லட்சத்து 95 ஆயிரம் வரையிலும் வரி கிடையாது.

அவரவருக்குப் பொருந்தும் தொகைகளுக்கு ( 1,10,000 அல்லது 1,45,000 அல்லது 1,95,000 ) மேல் ஆண்டு வருமானம் இருந்தால், அதற்கு வரி எல்லோருக்குமே உண்டு. வரி மட்டுமில்லை. வரியின் மீது இன்னொரு வரியும் உண்டு. அதுதான் சர்சார்ஜ். கிட்டத்தட்ட 3 %.

இப்படிக் கட்ட வேண்டிய வரிகளைக் குறைத்துக்கொள்ள வழிகள் ஏதும் உண்டா?

இருக்கிறது.

அதிகபட்சமாக இன்னொரு ஒரு லட்சம் ரூபாய் வரையிலுமான வருமானத்தினை அரசு பரிந்துரைக்கும் இடங்களில் முதலீடு செய்தால், ஒரு லட்ச ரூபாய் வருமானத்திற்கும் வரி கட்ட வேண்டாம். முழு வரிச் சலுகை.

வருமான வரிச் சட்டத்தில் 80 சி என்று ஒரு செக்ஷன் இருக்கிறது. அதன் படி, LIC போன்ற காப்பீட்டுத் திட்டங்கள், நாம் முன்பு விவரமாகப் பார்த்த யூலிப் திட்டங்கள், ஊழியர்கள் கட்டும் சேம நல நிதி (PF), பொதுமக்கள் கட்டக்கூடிய, பப்ளிக் பிராவிடெண்ட் பண்ட் (PPF), பங்குச் சந்தையுடன் தொடர்புடைய ELSS சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC), வீட்டுக் கடன்களுக்கு மாதந்தோறும் திரும்பக் கட்டும் தவணைத் தொகையில் இருக்கும் அசலுக்கான பகுதி, குழந்தைகளின் கல்விக்கட்டணம் போன்றவையும், இன்னும் சிலவும் இந்தப் பிரிவில் அடங்கும். எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் வரை போகலாம். அது வரையிலான பணத்திற்கு வரி கிடையாது.

இந்த ஒரு லட்சம் போக, மெடிகிளைம்க்கிற்காக கட்டும் பணத்தில், 15,000 வரை வரிச் சலுகை உண்டு. மேலும் வீடுகட்ட வாங்கிய கடனுக்கான வட்டிப் பணம் அந்த ஆண்டு செலுத்தியது எவ்வளவோ அதற்கும் (அதிகபட்சமாக நபர் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை) வரிச் சலுகை உண்டு. இந்த இரண்டும் 80 சி யின் ஒரு லட்சம் என்கிற வரம்பு போகக் கடன் வாங்கிக் கட்டிய வீட்டினை வாடகைக்கு விட்டு அந்த வாடகைக்கு வருமான வரி கட்டும் பட்சத்தில், 1.5 லட்சம் என்கிற உச்சவரம்பு கிடையாது.

இவையெல்லாம் நாம் செய்யும் முதலீடுகள். செலவுகள்.

இவை போக, சில வரவுகளுக்கே வருமான வரிச் சலுகைகள் இருக்கிறது. அதில் வருவதுதான் நிறுவனங்கள் தரும் டிவிடெண்ட். பங்குகள் மூலம் வரும் டிவிடெண்ட் மொத்தத்திற்கும் வரி கிடையாது. பங்குகளில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகள் தரும் டிவிடெண்டுகளுக்கும் இது பொருந்தும். வங்கிகளில் போடும் வைப்புகளு (எப்.டி) க்கு வட்டி வருகிறதல்லவா? அதுவும் வருமானம்தான். தற்சமயம் ஒரு லட்ச ரூபாய் வரை வங்கிகளில் வைப்பாக வைத்தால் அதற்குக் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கிடையாது. அதற்கு மேல் வரும் வருமானத்திற்கு உண்டு.

முதலீடுகள் செய்திருக்கிறோம் (இடமோ, வீடோ). அதனை விற்கிறோம். குறிப்பிட்டவிதமாக கணக்கிட்டு அதில் கிடைத்திருக்கும் லாபத்திற்கு ( கேபிட்டல் கெயின்ஸ்) வரி கட்ட வேண்டும். அதேபோல பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்த்திருந்தாலும் இந்த வரி உண்டு. இதில் ஒரு விலக்கு என்ன என்றால், பங்குகளை வாங்கி ஓராண்டிற்கு மேல் வைத்திருந்துவிட்டு விற்றால் அதில் கிடைக்கும் ‘கேபிட்டல் கெயின்’ னுக்கு வரி இல்லை. ஓராண்டிற்குள் விற்றால் 10% வரி.

இவையெல்லாம் மார்ச் 2008 உடன் முடிவுறும் இந்த நிதி வருடத்திற்கானது.

பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் – 17

 

கூடையில் சேர்ந்திருந்த மாம்பழங்களை எடுத்துக் கழுவி, கத்தியால் நறுக்கி, குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுக்கிறார் ஒருவர். அப்படி பகிர்ந்து கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் அவர். சிலருக்கு நல்ல சதைப்பகுதி துண்டங்கள் கிடைக்கின்றன. அதிலும் பெரிய துண்டுகள். வேறு சிலருக்கு சிறிய துண்டங்கள் தான் கிடைகின்றன. “அவர்களுக்காவது பரவாயில்லை. எங்களுக்கு வந்திருக்கும் துண்டத்தில் தோல்தான் அதிகம்’’ என்று சிலர் வருத்தப்பட, இன்னும் பரிதாபமான வேறு சிலரோ, “உங்களுக்காவது பரவாயில்லை. எங்களுக்கு மிஞ்சியிருப்பதைப் பாருங்கள்’’ என்று ஒட்ட சீவிய மாம்பழக் கொட்டைகளைக் காட்டுகிறார்கள். 

எல்லாவற்றையும் கொடுத்துமுடித்த பிறகும் கூட சில கைகள், ‘எனக்கு?’ என்று கேட்டு நீட்டியபடியே இருக்கின்றன. “இந்த வருடம் இவ்வளவுதான்’’ என்று கையைத் தட்டிவிட்டுவிட்டு எழுகிறார் அவர். ‘என்றைக்குத்தான் எங்களுக்கு கிடைத்திருக்கிறது! எப்போதும் பழத்தினை சம்பாதித்துக் கொடுப்பது மட்டும்தான் எங்கள் வேலை’ என்று முணுமுணுத்தபடியே நகர்கிறார்கள் அவர்கள். ஒதுங்கி நின்றிருந்த வேறுசிலரோ, ‘கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, இந்தமுறை எங்களிடம் இருந்து அவர் எதையாவது எடுத்துக்கொள்வார் என்று பயந்திருந்தோம். நல்லவேளை. அப்படியேதும் நடக்கவில்லை’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

“இருப்பது ஒரு பழம். சமயத்தில் அது நல்ல புஷ்ட்டியான பழமாக அமைந்துவிடுகிறது. பலரையும் திருப்திப்படுத்த முடிகிறது. வேறு சில சமயங்களில் பழங்களே குறைவானதாக சிறியனவைகளாக இருந்தால், நான் என்னதான் செய்யமுடியும்!” என்று விளக்குகிறார் பழங்களை பகிர்ந்துகொடுத்தவர்.

‘ஆமாம், இது என்ன ஒரே மாம்பழக் கதையாக இருக்கிறதே!’ என்று தோன்றுகிறதா? அதே சமயம், எங்கேயோ கேட்ட கதை போலவும் இருக்குமே! பிப்ரவரி 29_ம் தேதி சமர்ப்பிக்கபட்ட மத்திய பட்ஜெட்தான் மாம்பழக் கூடை. பகிர்ந்தவர் நிதியமைச்சர் ப. சிதம்பரம். கூடையில் இருந்த மொத்த பழங்களின் எண்ணிக்கை (ரூபாய்) 7 லட்சத்து 50 ஆயிரத்து, 884 கோடி ரூபாய்கள். (ஆமாம், இந்தியா ‘டிரில்லியன் டாலர் எகானமி’ ஆகிவிட்டது)

சரி சரி. இந்தமுறை பகிர்தல் எப்படி இருக்கிறது? நல்ல சதைப்பகுதி கிடைக்கப்பெறுபவர்கள் யார் யார்? கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் யார் யார்? அதாவது, மத்திய பட்ஜெட்டின் 2008_09_ம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கையின் முக்கிய அதிலும் குறிப்பாக பணம் பற்றிய சாராம்சங்கள் என்ன?

இந்தமுறை மாம்பழத்தின் சதைப்பகுதி இரண்டு சாராருக்குக் கிடைத்திருக்கிறது. முதலில் வருபவர்கள் சிறு மற்றும் குறு விவசாயிகள். அடுத்ததாக, வருட வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் வருமானவரி கட்டும் மக்கள் பெரும்பாலும் மாதச்சம்பளக்காரர்கள். பசிந்திருந்தவர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாழ்க.

முதல் வகையினர் பெற்றிருந்த விவசாயக் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். அதன் மொத்த தொகை 60 ஆயிரம் கோடி ரூபாய். (கடன் வாங்காதவர்கள், அடடா! நாம் கடன் வாங்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்) அடுத்த வகையினருக்கு, வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. சுமார் 3 கோடிப் பேர் வருமான வரி கட்டுகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமே 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு மேலிருந்தால் வருமான வரி கட்டவேண்டும் என்று. அந்த உச்சவரம்பு ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் மட்டும் கட்ட வேண்டும் என்று, (வரும் ஆண்டிற்கான) இந்த பட்ஜெட்டில் மாற்றப்படுகிறது. இதனால் லட்சத்து 10 ஆயிரம் போக கூடுதலாக, இன்னும் ஒரு 40 ஆயிரம் ரூபாய் வரியில் இருந்து விலக்கு பெறுகிறது. இதனால் நபர் ஒன்றுக்கு ரூ 4000 ரூபாய் வரி மிச்சம். (அந்த அளவு அரசுக்கு வருமானம் குறையும்)

பெண்களுக்கு, ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்துக்கு மேல்தான் வருமானவரி என்று தற்சமயம் இருக்கிறது. இது அடுத்த ஆண்டில், ‘ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கு மேல்’ என்று உயர்த்தப்பட, வருமான வரி செலுத்தும் பெண்களுக்கு, கூடுதலாக இன்னுமொரு 35000 ரூபாய்க்கு வரியில்லை. ‘சீனியர் சிட்டிசன்’களுக்கு (65 வயதிற்கும் மேலான ஆண்கள் பெண்கள்) ஒரு லட்சத்து 95 ஆயிரமாக இருந்த உச்சவரம்பு இரண்டு லட்சத்து 25 ஆயிரமாக மாற்றப்பட்டு, 30 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரிவிலக்குப் பெறுகிறது. இதனால் முன்பு கட்டியதைவிட , பெண்கள் 3500 ரூபாயும் சீனியர் சிட்டிசன்கள், 3000 ரூபாயும் குறைவாக வரி கட்டுவார்கள்.

இது தவிர, வரி அட்டவணையே சற்று மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது, 3 லட்ச ரூபாய்க்கு மேல் வரும் வருமானம் மொத்தத்திற்கும் 30% வருமான வரி என்றிருப்பதை மாற்றி, 5 லட்சத்திற்கு மேல் போனால்தான் 30% என்றும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றாலும் சாதாரண மக்கள் கட்ட வேண்டிய வருமான வரி அளவு அடுத்த வருடத்திற்கு, அதிகபட்சமாக நபர் ஒன்று 44 ஆயிரம் வரை குறைகிறது.

2008_09_ ம் ஆண்டிற்கான மாற்றி யமைக்கப்பட்ட வருமான வரி விகிதங்கள்.

வரியின் மீது போடப்படும் வரியான ‘சர்_சார்ஜ்’ஜிலும், வருமான வரி கட்டுபவர்கள் மேலும் கட்ட வேண்டிய இன்னொரு வரியான கல்வி உதவி வரியிலும் மாற்றம் இல்லை.

‘80 சி’ என்கிற செக்ஷன் படி, ஒரு லட்சம் வரையிலான சில முதலீடுகளுக்கு வரியில்லை என்று தற்சமயம் இருப்பதில் ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்படுள்ளது. அது, 5 ஆண்டுகால அஞ்சலக வைப்புகளின் வட்டியையும் 80 சியில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதுதான். (1 லட்ச ரூபாய் வரியிலான வங்கி வைப்புகளின் வட்டியும் இதில்தான் சேரும்)

‘80 சி’ ஒரு லட்சம் போக, ரூ. 15000 வரை ‘மெடிகிளைம்‘ என்கிற காப்பீட்டிற்கு வரி விலக்கு தற்சமயம் கொடுக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் இன்னுமொரு 15000 க்கும் இந்த மெடிக்கிளைம் சலுகை உண்டு. அந்த மெடிக்கிளைம் வருமான வரி கட்டுபவரின் பெற்றோருக்கு எடுக்கப்பட்டால். வயதானவர்களுக்கு இன்னுமொரு சலுகையும் இந்த பட்ஜெட்டில் கொடுக்கப்படுள்ளது. அது, சீனியர் சிட்டிசன்கள் தங்கள் வீட்டினை அடகு வைத்து பெறும் ரிவர்ஸ் மார்ட்கேஜ் தொகை வருமானமாக கருதப்படாது என்பதுதான்.

வீட்டுக் கடனுக்குக் கட்டும் தவணைத் தொகைகளுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

பங்குகளை வாங்கி ஒரு வருடத்திற்கும் குறைவாக வைத்திருந்துவிட்டு விற்றால், அதில் கிடைக்கும் லாபத்திற்கு குறுகியகால முதல் பெருக்க (Short Term Capital Gains) வரி 10 % என்று இருந்தது. அது, இந்த பட்ஜெட்டில் 15 % ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வரியை, ஒரு முதலீட்டாளர், அவர் கட்டும் STT (பங்குகளை வாங்கி விற்பதற்கு அவர் கட்டும் வரி) யில் கழித்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கலால் வரியிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் இரு சக்கர வாகனங்கள், சிறிய கார்கள் விலைகள் குறையும். காரணம், கலால் வரி

16 %ல் இருந்து 12 % ஆக குறைக்கப் பட்டிருக்கிறது.

நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கார்ப்பரேட் வரி குறைக்கப்படவில்லை. மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வரிச்சலுகை (STPI)) வரும் 2009 மார்ச்வுடன் முடிவடைகிறது. அது நீட்டிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அதைப் பற்றிய அறிவிப்பு ஏதும் பட்ஜெட்டில் இல்லை.

வருமாண்டில் வருமானவரி கொஞ்சம் மிச்சமாகும் (சதைப்பகுதி). அதைச் சேமித்து முதலீடு செய்யலாம். அதற்கான வழிகள்…

பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் – 18

 

நன்றி : குமுதம் 

“அய்யா, நீங்கள் வளருகிறீர்களா?’’

“வளருகிறீர்களா என்று பொதுவாக கேட்டால்? குறிப்பாக எதைப்பற்றிக் கேட்கிறீர்கள்?’’

“பொருளாதார ரீதியாக வளருகிறீர்களா? உங்கள் பண வசதி தொடர்ந்து பெருகுகிறதா?’’

“கடந்த ஆண்டு, மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதித்தேன். இந்த வருடம் எனக்கு ஊதிய உயர்வு கொடுத்திருக்கிறார்கள். மாதம் 100 ரூபாய் இன்க்ரிமெண்ட் கிடைக்கிறது. இனி என் மாத வருமானம், 100 ரூபாய் கூடுதல். ஐந்தாயிரம் அல்ல, இனி ரூ 5100. இது வளர்ச்சிதானே!’’

“மேலோட்டமாகப் பார்த்தால் இது வளர்ச்சிதான்.’’

“மேலோட்டமாக என்றால்?’’

“இதனை கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டும். சென்ற வருடம் 5000 ரூபாய்க்குக் கிடைத்த பொருட்கள் இந்த வருடம் அதே விலைக்கு கிடைக்கிறதா? இது கேள்வி ஒன்று. சென்ற வருடம் இருந்ததைவிட இந்த வருடம் உங்களுடைய தேவைகள் அதிகரித்திருக்கின்றனவா? அதிகரித்திருக்கிறதென்றால் எவ்வளவு அதிகரித்திருக்கிறது? இது அடுத்த கேள்வி.’’

“யோசிக்க வேண்டிய விஷயம்தான். விலைகள் உயர்ந்துகொண்டேதான் போகின்றன. மேலும் என் பிள்ளைகள் வளருகிறார்கள். அதனாலும் என் தேவைகள் அதிகரிக்கின்றன.’’

“இந்த இரண்டு விஷயங்களையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதல் விஷயம், விலைவாசி உயரும் அதே வேகத்தில் உங்கள் வருமானம் கூடினால் கூட போதும். நீங்கள் சிரமப்படமாட்டீர்கள். அதே அளவு பொருட்களையாவது வாங்கலாம், பயன்படுத்தலாம். பிரச்னையில்லை.

5000 ரூபாய் என்பது 5100 ரூபாய் ஆகிறதென்றால், கூடுகிறதென்றால், வருமானம் 2 சதவிகிதம் கூடுகிறது என்று பொருள். விலைவாசியோ (தற்சமயம்) வருடத்திற்கு 5 சதவிகிதம் அளவிற்கு அதிகரிக்கிறது. அப்படியென்றால், உங்கள் வருமானம் உண்மையில் தேய்ந்துவருகிறது. அதன் ரூபாய் மதிப்பு வேண்டுமானால் 5100 ஆக இருக்கலாம். ஆனால் அதன் உண்மையான மதிப்பு? குறைகிறது. காரணம், வருமான வளர்ச்சியைவிட அதிகமாக உயருகிற விலைவாசி.

ஆக , எவராக இருந்தாலும் அவருடைய வருமானம் தொடர்ந்து உயர்ந்தாக வேண்டும். வேறுவழியேயில்லை. இல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கைத் தரம் குறைய ஆரம்பித்துவிடும். இது, தகவல் எண் ஒன்று. இரண்டாவது, உங்கள் தேவைகளும் அதிகரிக்கின்றன என்று சொல்லுகிறீர்கள். அப்படியென்றால், அதிகரிக்கும் தேவையளவுக்கு, வருமானம் கூடியாக வேண்டும். இல்லாவிட்டாலும் பிரச்னைதான். ஒன்று, முன்பு பெற்ற அளவு வாழ்க்கை வசதிகள் மற்றும் நுகர்வுப்பொருட்களை வாங்க முடியாது. அல்லது பற்றாக்குறையைச் சமாளிக்க கடன் வாங்க நேரிடும்.’’

“ஊதியம் உயர்வது என் கையிலா இருக்கிறது? விலைவாசியைக் கட்டுப்படுத்துவதைப் பற்றி கேள்வியே இல்லை. நம்மால் செய்யக்கூடியது அதிலும் ஒன்றும் இல்லை. வளருகிற நம் தேவைகளை குறைத்துக்கொள்ளவும் முடியாது. இதென்ன கொஞ்சம் சிக்கலான பிரச்னைத்தான் போலிருக்கிறதே!’’

“ஊதிய உயர்வுதான் நம் கையில் இல்லையே தவிர, வருமான உயர்வு என்பது அப்படி ஒன்றும் செய்யமுடியாதது அல்ல.’’

“ஊதியம் வேறு, வருமானம் வேறா?’’

“ஆமாம். இல்லையா பின்னே! பெரும்பாலான குடும்பங்களில் கணவன் மட்டுமே சம்பாதிப்பார். அந்த வீட்டின் வளர்ச்சிக்கு ஒருவருடைய சம்பாத்தியம் மட்டும் தான். அது வளர்ந்தால் தான் உண்டு. அவர் செய்யும் வேலை, அல்லது வியாபாரம் பொறுத்து, அது அதிகரிக்கலாம் அல்லது அதிகரிக்காமலும் போகலாம். அப்படி அதனை அதன் போக்கில் விடாமல் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியுமா? அதில் ஒரு நிச்சயமான தன்மையை ஏற்படுத்த முடியாதா?

நாம் முன்பே பார்த்தோம். பணம் பணம் சம்பாதிக்கும். பெற்ற பிள்ளைகள் சம்பாதிக்கப் போவதைப் போல, நாம் சேர்க்கும் பணமும் பணம் சம்பாதிக்கும். அது மனிதர்களைப் போல அயர்வே அடையாது. பணத்திற்கு வயதாக வயதாக, சில ‘ஆண்டிக்‘ பொருட்களைப் போல, மதிப்பு கூடும். அதன் பணமீட்டும் வலிமை பல்கிப் பெருகும். காலம் ஓட ஓட , சரியான இடத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம், பம்பு செட்டில் இருந்து பாயும் தண்ணீர் போல கொட்டும்.

ஒருவருடைய மாத ஊதியம் 5000. ஆனால் அந்தக் குடும்பத்தின் மாத வருமானம் 10,000 ரூபாய். இது சாத்தியமா என்றால் சாத்தியம்தான். கூடுதலாக வரும் ரூபாய் 5000, அவர் செய்த முதலீடுகளில் இருந்து வட்டியாகவோ, லாபமாகவோ டிவிடெண்டுகளாகவோ அல்லது (இட) விலைஉயர்வுகள் காரணமாகவோ அல்லது வாடகையாலோ வருகிறது. அவ்வளவு வருமானம் வருகிற அளவிற்கு அவர் முதலீடுகள் செய்திருக்கிறார். தப்பித்தவறி அவர் வேலைக்கோ அல்லது அவருக்கேயோ கூட ( சில மாதங்களுக்கு) ஏது ஆகிவிட்டாலும், பிரச்னையில்லை. வரும் பிற வருமானங்கள் காப்பற்றிவிடும்.

இப்படி கூடுதலாக வருகிற வருமானம், விலைவாசி உயர்வுகள், தொடர்ந்து பெருகும் வாழ்க்கைத் தேவைகளுக்கு உதவுவது மட்டுமில்லை, மேலும் முதலீடுகள் செய்யவும் உதவும். கியர் மாற்றுவது என்பார்கள். எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படி போதியும் போதாமலும் வாழ்க்கையை ஓட்டுவது. கொஞ்ச காலம் கட்டுப்பாடாக செலவு செய்யாமல் சேர்த்து முதலீடு செய்து, வருமானத்தைப் பெருக்கிக்கொண்டு அதன் பிறகு, வளமாக வாழ வேண்டியதுதான். பொருளாதார தரத்தில் அடுத்த கியருக்கு மாறுவது.

மொத்தத்தில் ஒருவர் சம்பாத்தியம் மட்டுமே குடும்பத்திற்குப் போதாது. ஆயுளுக்கும் தொடர்ந்து நல்ல வருமானம் வருகிறாற்போல, முதலீடுகள் செய்துவிட வேண்டும். அந்த முதலீடுகளும் தொடர்ந்து நமக்காக சம்பாதிக்க வேண்டும்.’’

“எல்லாம் சரி. முதலீடு செய்ய சேமிக்க பணம் ஏது?’’

“ஏன் இல்லாமல்? ஒருகால் அப்படியே சிலரிடம் இப்போதைக்கு உபரிப் பணம் இல்லை என்றே வைத்துக்கொண்டாலும் கூட, வரும் ஆண்டில் நிலைமை மாறுமே! மிச்சமாகப் போகிற மற்றும் கூடுதலாக கிடைக்கக் கூடிய தொகைகள் இருகின்றனவே!’’

“அப்படியா?’’

“வருகிற ஏப்ரல் முதல் நிச்சயமாக எல்லோருக்குமே 1000 முதல் 44000 வரை வருமான வரி மிச்சமாகிறதே! அது வரவில்லை என்று வைத்துக்கொண்டால் என்ன செய்வோமோ, அதே அளவு செலவினை அடுத்த ஆண்டு முழுவதும் செய்தால் போதும். வரி குறைகிற அளவு தொகை சேமிப்பிற்கு. சேமித்து முதலீடு செய்வதற்கு. இது வழி ஒன்று.

வேலைக்குப் போகும் பலருக்கும் ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வு மொத்தமுமோ அல்லது அதில் கணிசமான பகுதியோ போக வேண்டிய இடமும் சேமிப்பிற்குத்தான். பின்பு இடமாற்றம் முதலீடிற்கு. சேமிப்பு ஒரு எஸ்.ஐ.பி யாகவோ அல்லது மாதா மாதம் கட்ட வேண்டிய யூலிப் சார்ந்த காப்பீடாகவோ இருக்கலாம்.

ஆனால் ஒவ்வொருவருடமும் சேமிக்கும் தொகையையும் அதிகரித்துக்கொண்டே போக வேண்டும். ஒரு காலகட்டதிற்கு மேல், அத்தியாயத்தின் தொடக்கத்தில் பார்த்தோமே, அந்த கேள்விக்கு சந்தோஷமான பதிலைத் தரமுடிய வேண்டும்.

“ஆம். நான் தொடர்ந்து பொருளாதா முன்னேற்றம் காணுகிறேன்.’’

என்று திருப்தியாக சொல்ல வேண்டும். மற்ற எவரையும் போலவே நமக்கும் அந்த உரிமை இருக்கிறது. அதைச் செயல்படுத்துவது நம் கையில் தான் இருக்கிறது.’’.

பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் – 19

 

நன்றி : குமுதம்
சம்பாதிக்கும் பணத்தில் ஒருபகுதியை கட்டாயம் சேமித்து அதனை சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும், அப்படி முதலீடு செய்யும் போது மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதையும், அந்த மூன்று விஷயங்கள், (1) முதலீட்டிற்கான பாதுகாப்பு (2) கணிசமான வருமானம் மற்றும் (3) செய்த முதலீட்டினை தேவைப்படும் சமயம் திரும்ப எடுக்கக் கூடிய வசதி என்றும் சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம்.
 

பாதுகாப்பு என்பது ரிஸ்க் சம்பந்தப்பட்டது. அதிக வருமானம் வேண்டுமென்றால் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும், அதிக ரிஸ்க் வேண்டாமென்றால் சாதாரண வருமானம் தான் கிடைக்கும் என்பனவற்றையும் கிரிக்கெட் உதாரணம் கொண்டு பார்த்தாகிவிட்டது.

சரி; ,இனி யார் யார் எவ்வளவு ரிஸ்க் எடுத்து, எப்படி முதலீடு செய்யலாம்?

வயதானவர்கள் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடாது. சின்ன வயதுக்காரர்கள் ரிஸ்க்கே எடுக்காமல் இருக்க வேண்டாம். இது பொதுவிதி. இதில் விதி விலக்குகளும் உண்டு. சிலருக்கு வயதாகாவிட்டாலும் கூட, அவர்கள் ரிஸ்க் எடுக்கக் கூடாது. வேறு சிலருக்கு வயதானாலும்கூட அவர்கள் விரும்பினால், கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம். இவை அவர்களுக்கு இருக்கும் பணத்தின் தேவைகளைப் பொறுத்தது.

அவர் பெயர் ஜானகிராமன் என்று வைத்துக்கொள்ளுவோம். அவர் வயது முப்பதிற்குள் தான். எல்லா இடங்களும் விலை ஏற, அவரும் வேலூருக்குப் பக்கத்தில் ஒரு இடம் பார்த்திருக்கிறார். நல்ல இடம். விலை பத்து லட்ச ரூபாய். மற்ற பல இடங்களில் முதலீடு செய்திருந்த சேமிப்புகளை எல்லாம் திரட்டினார். கிட்டத்தட்ட ஏழு லட்ச ரூபாய் தேறியது. இன்னும் மூன்று லட்சம் வேண்டும். இடத்தினை விற்பவர், “சரி போகிறது , எல்லாவற்றையும் முழுவதாக மூன்று மாதத்திற்குள் கொடுத்து பதிவு செய்துகொள்ளுங்கள்” என்று டைம் கொடுக்க, ஜானகிராமன் உற்சாகமானார்.

எப்படியும் தேவைப்படும் மீதப்பணத்தினை மூன்று மாதங்களில் புரட்டிவிடலாம் என்கிற நம்பிக்கை வந்தது. ‘சேமநல நிதியில் இருந்து ஒரு லட்சம் வரை எடுக்கலாம். மீதம் இரண்டு லட்ச ரூபாயை, கடன் வாங்கிச் சமாளித்துக் கொள்ளலாம். விடவேகூடாது. இப்படிப்பட்ட இடம் பின்னால் இந்த விலைக்குக் கிடைக்காது’. திட்டமிட்டார்.

திட்டமிட்டபடி, கையில் எட்டு லட்சம் வந்தாயிற்று. “அதை அப்படியே, முதல் தவணையாக ரியல் எஸ்டேட்காரரிடம் கொடுத்துவிடுங்கள். பிறகு கடனுக்கு ஏற்பாடு செய்யுங்கள். பதிவு நாளைக்கு முன்பாக கடனை வாங்கிக் கொடுத்து, இடத்தை பதிவு செய்துகொண்டுவிடலாம்“ என்றார் மனைவி.

கேட்டுக்கொண்டார் ஜானகிராமன். செயல்படுத்தவும் நினைத்தார். இதெல்லாம் நடந்தது சென்ற 2007 டிசம்பர் மாத ஆரம்பத்தில். நண்பரிடம் திட்டத்தினைப் பகிர்ந்துகொண்டு, எவரிடம் கடன் வாங்கலாம் என்று ஆலோசனை கேட்க, நண்பர் சொன்னது வேறு ஒரு புதிய யோசனை.

“எதற்காக நீ கடன் வாங்க வேண்டும். கடன் வாங்காமலேயே அந்த இடத்தை நீ வாங்குகிறாய்”

“என்ன விளையாடுகிறாயா? குறைவது ஆயிரம் இரண்டாயிரம் அல்ல. இரண்டு லட்ச ரூபாயப்பா!”

“இருக்கட்டுமே. இப்போது உன் கையில் எவ்வளவு இருக்கிறது?”

“கையில் இருக்கிறதா? 2 லட்சம் குறைகிறது என்கிறேன். நீ என்னடா என்றால்..!”

“அது தெரியும். இடத்திற்குக் கொடுப்பதற்காக எவ்வளவு இருக்கிறது?”

“அட்வான்ஸ் 5 லட்சம் கொடுத்தது போக, மீதம் 3 லட்சம்.”

“இருக்கிறதல்லவா?”

“ஆமாம்“

நண்பர் சொன்ன யோசனை இதுதான்.

“இப்போது பங்குச் சந்தை நன்றாக இருக்கிறது. தினம் தினம் ஏறுகிறது. உனக்கோ இன்னும் 3 மாதம் டைம் இருக்கிறது. கையில் இருக்கும் பணத்தினை மூன்று மாதத்துக்கு, பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். அதில் நிச்சயம் லாபம் கிடைக்கும். உடன் விற்றுவிட்டு, கிடைக்கும் லாபத்தினைக் கொண்டு , கடன் இல்லாமலேயே, இடத்தினை நீ வாங்குகிறாய்”

ஜானகிராமனுக்குக் கேட்பதற்கே சந்தோஷமாக இருந்தது. ‘இடம் எப்படியும் வாங்க வேண்டும். கடன் 2 லட்சம் வாங்கினால் அதற்கு வட்டி கட்ட வேண்டும் .தவிர, இரண்டு லட்சம் கடன் என்பது ஒரு சுமைதானே. பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைப்பதாக எல்லோரும் சொல்லிக்கொள்ளுகிறார்கள். நிரந்தரமாக வேண்டாம். சும்மா ஒரு மூன்று மாதம் தானே! ஒரு ரொடேஷன் செய்துவிட்டு, லாபம் கிடைத்ததும் வெளியில் வந்துவிடலாம். அட! கடன் வாங்காமல் இடம்!’

இதுதான் ஜானகிராமனின் எண்ணம். பங்கு வர்த்தகக் கணக்கு திறந்தார்கள். முதலில், ஒரு லட்சத்துக்குத் தான் வாங்கினார்கள். ஒருமாதம் போனது. வாங்கிய பங்குகள் விலை உயர்ந்தன. “அடடா! விட்டுவிட்டோமே! எல்லா பணத்தினையும் போட்டிருந்தால் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும்!!’ என்று மீதமிருந்த இரண்டு லட்சத்திற்கும் ஆக்ரோஷமாக வாங்கினார்கள். இடத்தினைப் பதிவு செய்துகொள்ள இன்னும்தான் டைம் இருக்கிறதே என்று, விலை உயர்ந்தாலும், பங்குகளை விற்காமல் விட்டு வைத்தார்கள்.

செய்திகள் வந்தன. அமெரிக்கப் பொருளாதாரத்தில் பிரச்சனை என்று. அன்னிய முதலீட்டாளர்கள் விற்கிறார்கள் என்று. ஜானகிராமனுக்குப் புரியவில்லை. ஆனால், அதன் காரணமாக நம்மூர் பங்குச் சந்தைகள் வீழ்வதைப் பார்த்தார். ஜனவரி 21 மற்றும் 22_ம் தேதிகளில் மும்பை பங்குச் சந்தையும், தேசியப் பங்குச் சந்தையும் பெரிய வீழ்ச்சி அடைந்தன. அதன் பிறகு தொடந்து இறங்கு முகம் தான். ஜானகிராமன் பங்குகள் வாங்கியிருந்தது மொத்தம் மூன்று லட்சத்துக்கு. அவற்றின் மதிப்பு வெறும் 2 லட்ச ரூபாயாகச் சரிந்தது. சுளையாக ஒரு லட்சத்தினைக் காணோம்.

‘வாங்க வேண்டாம் என்று திட்டமிட்டிருந்த கடன் இரண்டு லட்சத்தினையும் வாங்கினாலும் இனி போதாதே! இன்னும் கூடுதலாக ஒரு லட்சம் கடன் வாங்க வேண்டும் போல இருக்கிறதே!! ஜானகிராமனால் மனைவியிடம் கூட சொல்லி அழ முடியவில்லை. ‘போச்சு போச்சு, சிரமப்பட்டு சேமித்து வைத்திருந்த பணம் லட்ச ரூபாய், காற்றில் போனது மாதிரி போய்விட்டதே!’ மனதுக்குள்ளாகவே அரற்றினான்.

‘பயப்பட வேண்டாம். வாங்கியிருப்பவை எல்லாம் நல்ல பங்குகள்தான், பொறுத்திருப்போம். மீண்டும் பங்குச் சந்தை நன்றாக வரும் ‘ என்றான், நண்பன். எங்கே பொறுப்பது? இடத்தினைப் பதிவு செய்தாக வேண்டுமே! “வந்த விலைக்கு விற்றுவிடுங்கள்” என்றான் ஜானகிராமன். காரணம், பங்குச் சந்தை இன்னும் கூட அதிகமாக வீழ்ச்சி அடையலாம் என்று இன்னொரு நண்பன் சொல்லியதுதான். விற்றார்கள். நட்டத்தினை கையில் பிடித்தார்கள்.

ஜானகிராமன் செய்ததில் எது சரி? எது தவறு? பங்குச் சந்தைக்கு வந்ததே தவறா?

இல்லை. அவருடைய முதலீட்டு அணுகுமுறை தவறு. முக்கியத் தேவைக்கு என்று வைத்திருக்கும் பணத்தினை பங்குச் சந்தைக்குக் கொண்டு வந்தது அவருடைய தவறு. இங்கே குறுகிய காலத்தில் லாபம் என்பது சாத்தியம்தான் .ஆனால் நிச்சயமில்லை. Possible but not Certain அதுதான் நடந்திருக்கிறது. நான்கு ஐந்து வருடங்களாக சந்தை நன்றாகத்தான் இருந்தது. இப்போதுதான் இப்படி. யாரும் எதிர்பாராது என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் இந்த முதலீட்டின் குணாதிசயமே இதுதான். அதனால்தான் இது அதிக ரிஸ்க் உடையது என்பது. இன்னும் ஐந்து வருடம் வரை தேவைப்படாத பணம் என்று இருக்குமானால், அவர் இந்த இறக்கத்துக்குக் கவலைப்பட வேண்டியதிருக்காது. அதற்குள் நிச்சயம் நல்ல பங்குகள் மீண்டும் எழுந்துவிடும். அதற்கும் முன்பாகவேயும் விலைகள் உயரலாம். ஆனால் உடனடியாக உயருமா என்றால், அதனால் சில சமயங்களில் முடியாது. இது அதுபோன்ற ரிஸ்க் இருக்கும் முதலீடு பங்குச் சந்தை.

ஜானகிராமன் எடுத்தது பெரிய ரிஸ்க். அவருக்கு வயது குறைவாக இருக்கலாம். ஆனாலும், இந்த ரிஸ்க் ஜானகிராமனைப் பொறுத்தவரை தவறுதான். காரணம், ரிஸ்க் தனக்கிருக்கும் தேவைகளைப் பொறுத்தும் தான் எடுக்கப்பட வேண்டும். விட்டு வைக்கக் கூடிய பணம், உடனடியாக தேவைப்படாத பணத்திற்குதான் ரிஸ்க் எடுக்கலாம்.

மகன், மகள் படிக்க வைக்க வேண்டிய பணம், வீடு கட்ட வைத்திருக்கும் பணம், மருத்துவச் செலவிற்கு வைத்திருக்கும் பணம் போன்றவற்றை ரிஸ்க் அதிகமில்லாத முதலீட்டில் மட்டுமல்ல, உடனடியாக எடுக்கக் கூடிய இடமாகவும் பார்த்துத்தான் முதலீடு செய்யவேண்டும்..

பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் – 20

 

நன்றி : குமுதம் 

முதலீடு செய்யும் நம் பணம் பத்திரமாக இருக்க வேண்டும். எவையெல்லாம் பத்திரமான முதலீடுகள்?

தங்கம், வீடுகள், நிலம், இடங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரிகிற முதலீடுகள். எப்போதாவது வாங்கிய பிறகு அவற்றின் விலை இறங்கினாலும் இறங்கலாம். ஆனால் வித்தியாசங்கள் அவ்வளவு பெரியதாக இருக்காது. இவற்றை ‘பிசிக்கல் அசெட்ஸ்’ என்கிறார்கள். நம் நாட்டில் இன்னும்கூட பெரும்பாலானவர்களுக்கு முதலீடு என்றால் இவைதான்.

தவிர, நிதி தொடர்பான சொத்துக்களும் உண்டு. அவற்றின் மீது இப்போதுதான் கூடுதலான மக்களுக்கு அதிக கவனம் வந்திருக்கிறது. நம் பணத்தினைக் கொண்டு நாமே சொத்துக்கள் வாங்காமல், வேறு எவரும் வியாபாரம் செய்யவோ, முதலீடு செய்யவோ கொடுக்கிறோம். அதுதான் ‘பைனான்சியல் அசெட்ஸ்’ செய்யும் வேலை.

எல்லோருக்கும் தெரிந்தது, வங்கிகளில் செய்யப்படும் வைப்புகள். பிக்செட் டிப்பாசிட்ஸ் என்பது இதன் பெயர். எல்லா வங்கிகளிலும் செய்யலாம். வருமானம் ஓரளவுதான் இருக்கும். அதிகபட்சம் வருடத்துக்கு எட்டரை சதவிகிதம் வரை கொடுக்கப்படுகிறது. இது வங்கிக்கு வங்கி மாறுபடும். வங்கி வைப்புகளிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு ( 65 வயது நிறைவானவர்கள்) அரை முதல் முக்கால் % வரை கூடுதல் வட்டி கொடுக்கப்படுகிறது. சில வங்கிகளில் 9.25% .

வங்கி வைப்புகளில் இருக்கும் பயன்கள் : போட்ட பணத்தினை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். எத்தனை வருடங்களுக்கு என்று போடுகிறோமோ, அதற்கு முன்னதாக திரும்ப எடுக்க விரும்பினாலும் செய்யலாம். இதற்கு ‘ஃபோர் குளோசர்’ என்று பெயர். குறிப்பிட்ட காலம் விட்டு வைக்காதற்காக, அவர்கள் கொடுக்கும் வட்டியில் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுவார்கள். மற்றபடி பணத்தினை எப்போது வேணுமானாலும் திரும்ப எடுக்கலாம் என்பது இதன் முக்கிய அம்சம்.

வங்கிகளில் போடப்படும் வைப்புகளுக்குக் கிடைக்கும் வட்டி முழுவதுமே வருமானமாக கருதப்படும். வருமான வரிக்காக டி.டி.எஸ் (TDS) தொகை பிடிப்பார்கள். ‘15 ஜி’ என்கிற படிவம் கொடுத்தால் டி.டி.எஸ் பிடித்தம் செய்யமாட்டார்கள். வருமான வரி வரம்புக்குள் வருபவர்கள்தான் வரி கட்ட வேண்டும். இல்லாவிட்டால், பிடித்தம் செய்யப்பட்ட டி.டி.எஸ் சினை, வரிக்கணக்கு (ரிட்டர்ன்) தாக்கல் செய்யும் போது, அதில் காட்டி, திரும்பப் பெறலாம்.

வங்கிகளில் நபர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரை வங்கிகளில் செய்யும் வைப்பு பணத்தினை (அசல்), வருமான வரி சட்டப்பிரிவு ‘80 சி’ யின் கீழ் காட்டி, வரி விலக்குப் பெறலாம். அதாவது, ஒருவருக்கு ஆண்டு ஒன்றுக்கு நான்கு லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. அவர் வரி கட்ட வேண்டிவருகிறது. அவர், அந்த வருமானத்தில் இருந்து, 30ஆயிரம் ரூபாயை, ஒரு வங்கியில் ஐந்து ஆண்டுகளுக்கு, வைப்பாகப் போடுகிறார் என்றால், அந்த 30 ஆயிரம் ரூபாயினை 80சி கணக்கில் எடுத்துக்கொண்டு அவருக்கு வரி விலக்கு கொடுக்கப்படும். (‘80சி’யின் கீழ் மொத்தமாக ஒரு லட்சம் வரைதான் அனுமதி. வேறு சேமிப்புகள் ஏதும் செய்யாத பட்சம், அவர் வங்கி வைப்பேகூட ஒரு லட்சம் வரை அதிகபட்சமாக செய்து வரிவிலக்குப் பெறலாம்.) இந்தச் சலுகை குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்குப் போடப்படும் வைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

இப்படிக் கிடைக்கிற வரிவிலக்கினையும் சேர்த்துப் பார்த்தால், கிடைக்கிற வருமானம் (வட்டி+ வரிச்சலுகை) கணிசமாகவே இருக்கும். மற்ற கடன் பத்திரங்களைவிட இந்தக் காரணங்களினால் வங்கி வைப்பு, விரும்பப்படுகிறது.

கையில் ரொக்கம் இருக்கிறதா? இன்னும் ஒருசில மாதங்கள் கழித்துதான் அதற்கு தேவை இருக்கிறதா? அப்படியென்றால் அந்தப் பணத்தினை வங்கிகளில் போட்டுவைக்கலாம். குறைந்த பட்சம் 15 நாட்களுக்குக்கூட பணத்தினை வங்கிகளில் வைப்பாகப் போட்டு வைக்கலாம். குறைவாகவே இருந்தாலும் அதற்கு 3 அல்லது 3லு% வட்டி கிடைக்கும்.

வங்கிகள் என்றாலே பாதுகாப்பானது தானா? அதில் போடப்படும் பணதிற்கு பிரச்னை ஏதும் இல்லையா? என்கிற கேள்வி வரலாம். பொதுவாக பிரச்னை இல்லைதான். ஆனால், சில வங்கிகள் பிரச்னைகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. சமீபத்திய உதாரணம் குளோபல் டிரஸ்ட் வங்கி. வங்கிகளுக்கு அப்படி ஏதும் ஆகிவிட்டால், வங்கியில் போட்ட பணம், முதலீட்டாளருக்குத் திரும்பக் கிடைக்குமா? கிடைக்காதா?

இங்கேயும் ஒரு லட்சம் என்பது தான் வரம்பு. இதற்காக வங்கிகளே காப்பீடு செய்துள்ளன. முதலீட்டாளர் ஒவ்வொருவர் செய்யும் வைப்புக்கும் காப்பீடு உண்டு. அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய். வங்கிக்கு ஏதும் ஆகிவிட்டாலும் நபர் ஒன்றுக்கு அவர் செய்த வைப்புத் தொகை அல்லது ஒரு லட்சம் இது இரண்டில் எது குறைவோ அது கிடைக்கும். வங்கி வைப்புகளுக்கு இருக்கும் இன்னொரு கூடுதல் நன்மை இது. இது பரஸ்பர நிதியிலோ பங்குகளிலோ இல்லாத வாய்ப்பு. ஆனால் அஞ்சலக சேமிப்பு வைப்பு, தேசிய சேமிப்புப் பத்திரம், பப்ளிக் பிராவிடெண்ட் பண்ட் போன்றவற்றில் முழுப்பணத்திற்கும் கியாரண்டி உண்டு. வங்கி வைப்புகளில் ஆபத்து ஏதும் ஏற்படும் பட்சம், அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய்க்குத்தான் காப்பீடு உண்டு.

வங்கி வைப்புத் தவிர, வேறு என்ன முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன? பப்ளிக் பிராவிடெண்ட் பஃண்ட் (PPF) என்கிற அரசின் திட்டம் இருக்கிறது. இது வங்கி மூலம்தான் நடத்தப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கான திட்டம். இதில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கும் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. பணத்திற்கு முழு கியாரண்டி. ஆனால் விருப்பம் போல திரும்ப எடுக்க முடியாது. குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் ஆகவேண்டும். கடன் வேண்டுமானால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும்.

இன்னும் என்ன என்ன பத்திரமான முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன?

பங்குச் சந்தை நிலவரம்

அமெரிக்காவின் பொருளாதாரம் கொஞ்சம் சிக்கலில் இருக்கிறது. அங்கே வளர்ச்சி குறைகிறது. 1929 களில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி போன்றதொரு வீழ்ச்சி, அல்லது 1974, 1990_களில் ஏற்பட்டது போன்ற நிலைகள் வந்துவிடுமோ என்கிற பயம் ஏற்பட்டு இருக்கிறது. பெரிய வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கொடுத்த கடன்கள் எதற்கும் பொறாத மாதிரி ஆகியிருக்கின்றன. பெரிய பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை தொலைத்திருக்கிறார்கள். இது 16 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அமெரிக்கப் பங்குச் சந்தையும் பெரிய வீழ்ச்சியினை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் டாலர் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராகக் குறைந்து வருவது போல, ஜப்பானின் யென் மற்றும் ஐரோப்பாவின் யூரோவிற்கு எதிராகவும், ஸ்விட்சர்லாந்தின் (பிராங்க்) பணத்திற்கு எதிராகவும்கூட மதிப்பிழந்து வருகிறது.

இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் ஏனைய ஆசியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது. பிரச்னை தீர, நிச்சயம் சில காலம் ஆகும். பிரச்னையின் தீவிரம் அப்படி. அதனால் தான், யு.எஸ்சின் ரிசர்வ் வங்கி போன்ற ‘பெட்’ , தொடர்ந்து வட்டி விகிதத்தினை குறைத்து பொருளாதார சக்கரத்தினை சுழற்றிவிடப் பார்க்கிறது.

இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு மிக கணிசமானது. அதனால் மட்டுமல்ல, தற்சமயம் தொழிற்துறை போன்ற துறைகளின் வளர்ச்சியும் சற்று மட்டுப்பட்டிருக்கிறது. அதனால் தான் மிக அதிகம் உயர்ந்திருந்த பங்கு விலைகளும் குறியீட்டு எண்ணும் இப்போது சரிந்திருக்கின்றன. நல்ல நிறுவனப் பங்குகளை நீண்ட கால முதலீடாக வாங்கியவர்கள் பயப்பட வேண்டாம். இதுவரை வாங்காமல் இருந்தவர்கள், நிப்டி பங்குகளை சிறிய அளவுகளில் (மொத்த பணத்தில் 20% க்கு) வாங்கலாம். இயன்றால் நல்ல எஸ்.ஐ.பி திட்டங்களில் சேர்ந்து தொடர் முதலீட்டினை இப்போது தொடங்கலாம். அதேபோல மூன்று நான்கு வருடங்களுக்கு விட்டு வைக்கக் கூடிய பணத்தின் ஒரு பகுதியை, நல்ல பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம்.
 

 

பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலைகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் குறியீட்டு எண்களும் குறைந்து வருகின்றன. இதனால் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி நேரடியாக முதலீடு செய்துள்ளவர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். 

அதே நேரத்தில் நேரடியாக முதலீடு செய்தவர்களுடன் ஒப்பிடுகையில், யூலிப் திட்டத்தின் வாயிலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களின் நஷ்டம் குறைந்த அளவில் உள்ளது.

(காப்பீடு நிறுவனங்கள், காப்பீடு செய்து கொண்டவர்கள் செலுத்தும் பிரிமியத்தை (காப்பீடு தொகை) பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன. இதில் இருந்து வரும் வருவாயை, காப்பீடு செய்து கொண்டவர்களுக்கு திருப்பித் தருகின்றன. இந்தத் திட்டமே ஆங்கிலத்தில் யூனிட் லிங்க்ட் இன்ஷ்யூரன்ஸ் பிளான் என கூறப்படுகிறது. இதை சுருக்கமாக யூலிப்ஸ் என அழைக்கின்றார்கள்)

இந்த வருடம் ஜனவரி 10 ந் தேதியில் இருந்து, கடந்த வாரம் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சுமார் 30 விழுக்காடு குறைந்துள்ளது.

இதே காலகட்டத்தில் ஒன்பது யூலிப் திட்டங்களின் கீழ் பங்குச் சந்தையின் முதலீடூ செய்தவைகளின் மதிப்பு 20 விழுக்காடுதான் குறைந்துள்ளது. இந்த யூலிப் திட்டங்களின் முதலீட்டை கையாளும் நிபுணர்கள், பங்குச் சந்தையின், குறிப்பிட்ட பங்குகளின் விலை நிலவரத்தை கணித்து, பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அதற்கு பதிலாக மற்ற பங்குகளை வாங்கியுள்ளனர். இதனால் தான் சென்செக்ஸ் குறியீட்டு எண்ணுடன் ஒப்பிடுகையில், யூலிப் முதலீடு மதிப்பு குறைவது குறைவாக இருக்கின்றது.

இதை வேறு மாதிரியாக கூறுவது என்றால், நீங்கள் நேரடியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் ஏற்படும் நஷ்டத்தை விட, யூலிப் திட்டத்தின் மூலம் முதலீடூ செய்திருந்தால் நஷ்டம் குறைந்திருக்கும்.

காப்பீடு செய்து கொள்பவர்களிடம் இருந்து யூலிப் திட்டத்தின் மூலம் பெறப்படும் பணம், பங்குச் சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி போன்ற பிரிவுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்றது. உள்நாட்டு பொருளாதார நிலைமை, அயல் நாடுகளின் நிலவும் சூழ்நிலை உட்பட, பல்வேறு காரணங்களினால் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைவதும், மீண்டும் அதிகரிப்பதும் நடக்கின்றன.

அதே நேரத்தில் யூலிப், பரஸ்பர நிதி நிறுவனங்கள் குறைந்த கால முதலீடாக இல்லாமல், நீண்ட கால முதலீடு என்ற நோக்கில் பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன. அத்துடன் இந்த நிதியை பங்குச் சந்தைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் நிர்வகிப்பதால், பாதிப்பு குறைவாக இருக்கின்றது.

யூலிப் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களும், மற்ற பரஸ்பர நிதியில் முதலீடு செய்துள்ளவர்களும் பங்குச் சந்தை குறித்த செய்திகளை தினசரி உன்னிப்பாக கவனிக்கின்றனர். பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் அதிகரிக்கும் போது எல்லை இல்லாத ஆனந்தம் அடையும் இவர்கள், அவை சரியும் போது மனமுடைந்து போகின்றனர். குறியீட்டு எண்கள் குறைவதால் எல்லா பங்குகளின் விலைகளும் சரிந்து விடுவதில்லை. அத்துடன் முதலீடு நிறுவனங்கள் சந்தை அபாயத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, பல்வேறுபட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் முதலீடு செய்கின்றனர். இதனால் ஒன்றில் நஷ்டம் அடைந்தாலும், மற்றொன்றில் கிடைக்கும் இலாபத்தால் இழப்பு குறைகின்றது.

பங்குச் சந்தைகளில் சரிவு இருக்கும் நேரத்தில், பங்குச் சந்தையுடன் இணைந்த காப்பீடு திட்டத்தில், புதிதாக சேருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

இர்டா என்று அழைக்கப்படும் காப்பீடு ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் புள்ளி விபரங்களின் படி டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜனவரியில் யூலிப் திட்டத்தில் கட்டப்படும் தொகை அதிகரித்துள்ளது. இதில் டிசம்பர் மாதம் இறுதிவரை ரூ.8,880 கோடி முதலீடு திரட்டப்பட்டு இருந்தது. இது ஜனவரி மாதம் ரூ.9,551 கோடியாக அதிகரித்துள்ளது.

இதிலிருந்தே யூலிப் திட்டத்தில் முதலீடு செய்திருப்பவர்கள், பங்குச் சந்தையின் குறீயீட்டு எண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, வாய்ப்பு இருந்தும் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறவில்வலை. அத்துடன் இதில் புதிதாகவும் பல நூற்றுக்கணக்கான பேர் இணைந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் – 21

 

நன்றி : குமுதம் 

பாதுகாப்பான முதலீடு என்றால், அது வங்கி வைப்புகள் மட்டும் தானா? என்று கேட்டுவிட்டு, இல்லை, பி.பி.எப் என்றும் ஒன்று இருக்கிறது என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

சேமநலநிதியான PF மூன்று வகைப்படும். அரசு ஊழியர்களுக்கான GPF, மற்ற ஊழியர்களுக்கான CPF தவிர, ஊழியர் அல்லாதவர்களுக்கான PPF. மூன்றையும் சற்று விரிவாகவே பார்த்துவிடலாம். சேமநலநிதி பற்றி அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்குத் தெரிந்திருக்கும். இதற்கென்று தனியாக ஒரு சட்டமே உண்டு. ஊழியர்கள் பி.எப் மற்றும் ஏனைய சில சலுகைகள் கொண்ட அந்தத் திட்டத்திற்கு Employees PF and Misc Provisions Act என்று பெயர். 1952_ம் வருடம் கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் சட்டம் இது. இருபதிற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்யும் இடங்களில், நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு சேமநல நிதி என்கிற இந்தத் திட்டத்தினை வழங்கியே ஆகவேண்டும்.

எல்லாம் பணம்தான் என்றாலும், ஒருவர் பெறுகிற மாதச்சம்பளம் என்பது சில பகுதிகளால் ஆனது. அதில் முக்கியப் பகுதி, அடிப்படை சம்பளம். இதனை ஆங்கிலத்தில் ‘பேசிக் பே’ என்பார்கள். அடுத்த பெரிய பகுதி பஞ்சப்படி. ஆங்கிலத்தில் இதனைக் கொஞ்சம் கௌரவமாகச் சொல்லலாம். ‘டியர்னெஸ் அலவன்ஸ்’. அதாவது சுருக்கமாக டி.ஏ. இவை தவிர, இன்னும் கூட சில பகுதிகள் உண்டு. (வீட்டு வாடகைப்படி போன்றவை). அவையெல்லாம் இருக்கட்டும். காரணம், சேமநலநிதியைப் பொறுத்தவரை, முதல் இரண்டு பகுதிகளான அடிப்படைச் சம்பளமும், டி.ஏ.வும்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

‘பேசிக்+டி.ஏ’ எவ்வளவோ, அந்தத் தொகையில் நூற்றுக்கு 12 ரூபாய் வீதம் (12%) ஊழியரின் சம்பளத்தில் இருந்து சேமநலநிதிக்காகப் பிடித்தம் செய்யப்படும். இப்படி பிடித்தம் செய்யப்படும் தொகைக்குப் பெயர், ‘ஊழியர் பங்கு’. ‘பேசிக்+டி.ஏ’ எவ்வளவு இருந்தாலும், அதிகபட்சமாக 6500 ரூபாய்க்கு மட்டும், 12 % பி.எப். பிடித்தால் போதும். அதற்கு மேலும் கொடுக்கப்படுகிற ‘தொகை’க்கு பி.எப். பிடித்தம் செய்வதென்றாலும் செய்யலாம். அது நிறுவனத்தின் விருப்பத்தினைப் பொறுத்தது.

எதற்காக நிறுவனத்தின் ‘விருப்பம்‘ என்று சொல்லப்படுகிறது என்கிற சந்தேகம் வரலாம். காரணம் இருக்கிறது. ஊழியரிடம் எவ்வளவு பிடித்தம் செய்யப்படுகிறதோ, அதே அளவு தொகையினை, நிறுவனமும் அதன் பங்காக (‘நிறுவனத்தின் பங்கு’) கொடுக்க வேண்டும். இரண்டு பங்குகளையும் சேர்த்து, அரசு நடத்தும் சேமநல அலுவலகத்தில், ஊழியரின் கணக்கில் கட்ட வேண்டியது நிறுவனத்தின் கடமை.

முன்பெல்லாம், ‘ஒருவர் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் கழித்து’ என்றும், அதன் பின், ‘6 மாதம் கழித்து’ என்றும், அதன் பின் , ‘மூன்றுமாதம் முடிந்ததும்‘ என்றெல்லாம் இருந்த சட்டம், இப்போது, ‘ஒருவர், ஒரு நாள் வேலை செய்தால் கூட’ அவருக்கு நிறுவனம் சேம நலநிதி கட்ட வேண்டும்‘ என்று மாற்றப்பட்டுள்ளது.

ஆக, (அரசு அல்லாத) நிறுவனங்களில் வேலை செய்யும் எவருக்கும், அவரது ஊதியத்தில் இருந்து ஒரு பகுதி கட்டாய சேமிப்பாகிவிடுகிறது. ஒரு பகுதி என்றால், அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 24% ( ஊழியர் பங்கு 12% + நிறுவனத்தின் பங்கு 12%). கிட்டத்தட்ட நாலில் ஒரு பகுதி. கணிசமான தொகை.

அரசு ஊழியர்களுக்கு EPF சட்டம் 1952 பொருந்தாது. அவர்களுக்கு, ஜெனரல் பிராவிடெண்ட் பண்ட் (GPF) என்று ஒரு தனிச்சட்டம் இருக்கிறது. அதில் நிறுவனத்தின் பங்கு என்பது கிடையாது. ஊழியரின் பங்கு மட்டும்தான். (சேமநல நிதிக்குத் தருவதற்குப் பதிலாக ஓய்வூதியம் என்கிற நலன் தரப்படுகிறது). அதனால் அவர்கள் ஊதியத்தில் ஒரு பகுதி (பேசிக்+டி.ஏ. வில், குறைந்தபட்சம் 10%) கட்டாய சேமிப்பு ஆகிவிடுகிறது. அவர்கள் விரும்பினால், அதற்கு மேலும் கூட நிறிதில் போடலாம், சேமிக்கலாம்.

மொத்தத்தில், முறைப்படுத்தப்பட்ட இடங்களில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும், ஏதாவது ஒரு சேமநல நிதி உண்டு. கூடுதலோ அல்லது குறைவோ. மாதா மாதம் ஏதோ ஒரு தொகை சேமிப்பிற்குப் போய்விடுகிறது. ஒருவர், 25 வயதில் வேலைக்குச் சேர்வதாக வைத்துக்கொண்டால் கூட, ஓய்வு பெறும் 60 வயது வரை கணக்கிட்டால், 35 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செய்கிற தொடர் சேமிப்பு. சேமிக்கும் அந்தப் பணத்திற்கு வருமான வரி விலக்கு. தவிர, சேமிப்பு மொத்தத்திற்கும் எட்டரை சதவிதம் வட்டி. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த வட்டிக்கும் வருமானவரி கிடையாது.

அறுபது வயது வரை வேலை செய்துவிட்டு ஓய்வு பெறும்போது, கணிசமாக சேர்ந்தும் வளர்ந்துமிருக்கும் சேமநல நிதி கைகொடுக்கும். சௌகர்யமாகவும், கௌரவமாகவும் வாழ உதவும்.

“வேலைக்குப் போகிறவர்களுக்கு இப்படி ஒரு வசதி இருக்கிறதே! நாங்கள் வியாபாரம் செய்கிறோம், விவசாயம் செய்கிறோம், கைத்தொழில் செய்கிறோம். எங்களுக்குச் சம்பளம் என்று ஒன்று கிடையாது. அது பரவாயில்லை. ஆனால், வயதான பிறகு என்ன செய்ய? எங்களுக்கு இப்படி, சேமநல நிதி போன்ற பாதுகாப்பு ஏதும் இருக்கிறதா?” என்று கேட்கலாம்.

அதற்கான பதில், பி.பி.எப். (PPF) பப்ளிக் பிராவிடெண்ட் பண்ட்.

பொதுமக்களுக்கான சேம நல நிதி. ஊழியர், ஊழியர் அல்லாதவர் என்கிற பாகுபாடு இதில் கிடையாது. எவரும் இதில் சேரலாம். அரசு ஊழியர்களின் ஜி.பி.எப். போன்றது. காரணம், இங்கேயும் ஒரு ‘பங்கு’ தான். நிறுவனர், ஊழியர் என்பது கிடையாது.

இதில் போடப்படும் பணத்திற்கு , பொது மற்றும் ஊழியர்களின் சேமநல நிதி போன்றே, ‘80 சி’ பிரிவின் கீழ், வரிவிலக்கு உண்டு. இதில் கிடைக்கும் வட்டிக்கும் வரி கிடையாது (பொது மற்றும் ஊழியர் சேம நல நிதி போன்றே).

அந்த சேமநல நிதிகளை இடையில் எடுக்காமல், ஓய்வுகாலம் வரை சேமித்தாக வேண்டும் என்பது போலவே இங்கேயும் காலவரையறை உண்டு. அது 15 வருடங்கள். அங்கேயும் கடன் பெறலாம். இங்கேயும் கிடைக்கும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு. எல்லா சேமநல நிதிகளிலும், ஒரு பகுதியை சில அவசியத் தேவைகளுக்கு வேண்டுமானால் இடையிலும் எடுத்துக்கொள்ள முடியும். அந்த வசதி, பி.பி.எப்._ல் ஏழு வருடங்களுக்குப் பிறகு உண்டு.

வருடம் ஒன்றுக்கு ஒருவர் அதிகபட்சமாக எழுபதாயிரம் ரூபாய் வரைகூட PPFல் போடலாம். (80 சி பிரிவில் மொத்தம் ஒரு லட்சம் தான். அதற்குள் தான் இதுவும் வரும்). கணக்கு தொடங்கிவிட்டால், இடைவெளி விடாது ஒவ்வொரு ஆண்டும், குறைந்தபட்சம் ரூ 500 கட்ட வேண்டும்.

15 வருடங்கள் என்பது குறைந்தபட்சம் தான். அதற்கு மேலும் விட்டு வைக்கலாம். விட்டுவைக்க வேண்டும். நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு நிறுவனம் செய்யும் சேமநல நிதி இருக்கிறது. தேவைப்பட்டால், அவர்கள் அதே நிதியில் கூட , விருப்பப் பங்களிப்பு (Voluntry PF) என்று தங்கள் ஊதியத்தில் இருந்து 12 % க்கும் அதிகமான பணத்தினைச் செலுத்தலாம். அதற்கும் வரியில்லாத வட்டி கிடைக்கும். அவர்களுக்கு பி.பி.எப் என்பது கூடுதல் வாய்ப்புதான். விரும்பினால் சேரலாம். இல்லாவிட்டால், 80 சி பிரிவின் கீழ் வரிச்சலுகை கிடைக்கும் மற்ற முதலீட்டு வாய்ப்புகளுக்கும் ( காப்பீடு, ELSS, 5 ஆண்டுகால வங்கி வைப்பு போன்றவற்றுக்கு) போகலாம்.

ஆனால், பணிபுரியாத, மாத ஊதியம் பெறாத ஒவ்வொருவரும், பி.பி.எப் ல் சேருவதைப் பற்றி கட்டாயம் யோசிக்க வேண்டும். ரிஸ்க் இல்லாத முதலீடு , மிதமான வருமானம் (8% வட்டி), கட்டும் பணம் மொத்தத்திற்கும் வரிவிலக்கு, வரும் வட்டிக்கும் வரிவிலக்கு, போன்றவை மட்டுமல்ல அதற்கான காரணங்கள். ஓய்வு காலத்திற்காக, எல்லோருமே கொஞ்சமேனும் சேமித்தாக வேண்டும்.

வியாபாரியோ, தொழில் செய்பவரோ, ஓய்வுகால தேவை என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். வியாபாரம், சுயதொழில் என்பதெல்லாம் வேறு. தனிப்பட்ட சேமிப்பு என்பது வேறு.

அப்படிச் சேமிக்கும் பணம் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டியதும், ஓய்வுக் காலத்தில் கணிசமாக சேர்ந்தும் வளர்ந்தும் இருக்க வேண்டியதும் அவசியம். அதற்கு பி.பி.எப் ஒரு நல்ல வாய்ப்பு. பி.பி.எப் கணக்குகளை குறிப்பிட்ட அஞ்சலகங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் தொடங்கலாம்..

பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் – 22

 

நன்றி : குமுதம் 

ஜனவரி மாதம். இரண்டு மாதங்களுக்கு முன் வந்து சென்ற அதே 2008 ஜனவரியேதான். பங்குச்சந்தை ரெக்கைகட்டி பறந்துகொண்டிருந்த நேரம்.

ரிலே ரேஸ் போல, 15, 16, 17 ஆயிரம் என்று தாவித்தாவி வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண், 21 ஆயிரத்தினையே தொட்டுவிட்டு வந்தது.

உற்சாக விசிலடித்தார்கள். எவரும் சந்தேகப்படவில்லை. பயப்படவும் இல்லை. “இதென்ன பெரிசு? இன்னும் போகும் பாருங்கள்” என்பதாகத்தான் இருந்தது எல்லோருடைய மனப்பாங்குமே.

அதனால், கிடைக்கிற வாய்ப்பினை விட்டுவிடவே கூடாது என்பது போல லாபத்தில் இருந்த பங்குகளை விற்காதது மட்டுமல்ல. மேலும் மேலும் வாங்கினோம். பேராசையில் திளைத்திருந்தோம். தூரத்தில் இடி இடிக்கும் சத்தம் கேட்டது. மின்னல் வெட்டியது போலவும் இருந்தது. (சப் பிரைம்). ‘அதெல்லாம் அமெரிக்காவில் நடக்கிறதாக்கும். அதற்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அதனால் நமக்கு எந்தப் பிரச்சனையுமில்லை, அவை நம்மைப் பாதிக்காது’ என்று நினைத்தோம்.

திடீரென புயல் வீசியது. வானமே பொத்துக்கொண்டது போல ஊற்றியது. ‘சடசட’வென கொட்டியது. பெரிய மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. என்ன நடக்கிறது என்பதே எவருக்கும் புரியவில்லை. விளக்கு கம்பங்கள் முறுக்கிக்கொண்டன. இரண்டு நாட்கள் , முழு பவர் கட் மாதிரி ( ஜனவரி 21 மற்றும் 22 _ல் பங்கு வர்த்தகமே நிறுத்தி வைக்கப்பட வேண்டிய அளவு வீழ்ச்சி) நிலை வந்தது.

வெளிநாட்டவர்கள் விற்றார்கள். விலைகள் வீழ்ந்தன. நம்மவர்களும் விற்றார்கள். விலைகள் தொடர்ந்து வீழ்ந்தன.

பேராசை ஓடியே போய்விட்டது. இப்போது பிடித்துக்கொண்டது, பெரும் பயம். முன்பு துரத்தித் துரத்திப் போய் அதிக விலைகளில் வாங்கிய அதே பங்குகள், பாதிவிலைகளில், ஆடித்தள்ளுபடி போலவே கிடைக்கின்றன. சீந்துவாரைத்தான் காணோம்.

வைத்தால் குடுமி. எடுத்தால் மொட்டை?

டாலருக்கு எதிராக ரூபாய் வலுவடைய அதனால் தான் எத்தனை எத்தனை பிரச்னைகள்! வெறுமே வேடிக்கை பார்ப்பவர்களுக்கும், செய்திகளில் படித்துவிட்டு விவாதம் செய்பவர்களுக்கும் அது வெறும் எண். ஆனால், வியாபாரம் செய்பவர்களுக்கு? டாலரில் ஒப்பந்தம் போட்டவர்களுக்கு? அடிமடியில் கைவைத்தது போலத்தான். நட்டம். வியாபார இழப்பு. வேலைகள் பறிபோகும் நிலைமை.

44_ல் இருந்த டாலர் மதிப்பு ஒரு நேரத்தில் 39_க்கு வந்துவிட்டது. ‘இன்னும் கீழே போகும். 37 கூட வந்துவிடும்’ என்று பேசப்பட, தற்காத்துக் கொள்ள, ஹெட்ஜிங்கில் இறங்கினார்கள். அனுமதிக்கப்பட்டதுதான்.

ஹெட்ஜிங்!

“இப்போதே பேசிக்கொள்ளுவோம். டாலர் மதிப்பு என்ன மாறினாலும், நீ எனக்கு , இதே மதிப்பில் தரவேண்டும். அதற்கு என்ன கட்டணமோ வாங்கிக்கொள்.’’

“சரி’’

‘பாரின் கரன்சி டிரைவேடிவ்ஸ்’ல் இறங்கினார்கள். நட்டம் மட்டுப்பட்டது. சிலருக்கு அதனால் லாபம் கூட வந்தது. ‘அட! இது நல்லாயிருக்கே!’ என்று அதில் கூடுதலாக இறங்கிய, விளையாடிய நிறுவனங்களும் இருக்கலாம்.

‘சப் பிரைம்’ பிரச்னையினால், வெளிநாட்டு பங்குச்சந்தையில் மட்டுமல்ல. பணச்சந்தையிலும் பிரளயம். பலருக்கும் பலமான அடி. ‘மார்க் டு மார்க்’ ல் ஏகப்பட்ட நட்டம்.

கார்ப்பரேட் கவர்னென்ஸ் படி, நிறுவனங்கள் சாதக பாதகங்களை மறைக்காமல் எல்லா முதலீட்டாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

“பாரின் கரன்சி டிரைவேடிவ்ஸ் காரணமாக எங்களுக்கும் கொஞ்சம் நட்டம். அதற்காக கொஞ்சம் பணம் எடுத்து வைத்திருக்கிறோம்’’ என்று மெதுவாக சொன்னது வங்கி. செய்தி வந்த தினமே அதன் பங்கு விலையை, சந்தையில் ஒரு பிடிபிடித்தார்கள். அதற்கு முன்பே போலாரிஸ் நிறுவனம் அதே போன்ற தகவல் சொல்லி, அடி வாங்கியிருந்தது. எல் & டி. நிறுவனத்தின் அப்படிப் பட்ட நட்டமும் அதிர்ச்சி அலைகளையும் பங்கு விலை வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து, சில பொதுத்துறை வங்கிகளும் கூட , அந்தச் சிக்கலில் பணம் இழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

“நாங்களும் தானே நிறுவனத்தின் பங்குகள் வைத்திருக்கிறோம். எங்களுக்கும் எல்லா நல்லது கெட்டதும் தெரிய வேண்டும்” என்று முதலீட்டாளர்கள் சொல்வதில்லை. அவர்கள் சார்பாக பல நிறுவனங்கள் அமைப்புகள் சொல்லும்.

அப்படி, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டெட் அக்கவுண்ட்ஸ் (ICA) ,கடந்தவாரம் ஒரு அறிவிப்பு செய்தது. “எல்லோருமே உங்களுக்கு வரக்கூடிய நட்டங்கள் பற்றி இந்தக் காலாண்டு நிதி அறிக்கையில் (Q4) சொல்லிவிடுங்களப்பா’’

அவ்வளவுதான். “போச்சு. போச்சு, ஆளாளுக்கு நட்டக்கணக்கினை அவிழ்க்கப்போகிறார்கள்’’ என்கிற பயம் , பெரும்பயம் பங்குச் சந்தையைக் கவ்விக்கொண்டது. பயத்திலே இன்னொரு சுற்று, விற்றுத் தீர்த்தார்கள். சென்செக்ஸ் 720 புள்ளிகள் வீழ்ந்தது.

பணவீக்கத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் போன ஜென்மத்துத் தொடர்பு இருக்கிறது போலும். இரண்டும் ஒன்றாகவே வளரும். தேய்ந்தாலும் ஒன்றாகவே தேயும்.

இதில் வேடிக்கை என்ன என்றால், அவை இரண்டுக்கும் ஒரே போன்ற வரவேற்பு இல்லை என்பதுதான். “பொருளாதார வளர்ச்சி, வாழ்க!’’ என்று கோஷமிடும் அரசும், மக்களும், “பணவீக்கம் இல்லாமல், நீ மட்டும் தனியாக வாயேன்’’ என்பார்கள்.

காரணம் வளர்ச்சி, பயிர் என்றால், பணவீக்கம் களை. நெல் வேண்டும். ஆனால் புல் வளரக்கூடாது. புல்லுக்குப் பாயாமல் நெல்லுக்கு தண்ணீர் ஊற்றமுடியவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8 சதவிகிதம் என்பது இனிக்கிறது. கூடவே தற்சமயம் பணவீக்கம் 6.62% என்பது கசக்கிறது. இப்போது அதனைக் கட்டுப்படுத்த , அரசு நடவடிக்கை எடுக்கப்போகிறது.

என்ன மாதிரி நடவடிக்கைகள்?

“இருப்பது போதாதென்று, கடன் வேறா வாங்கி செலவழிக்கிறீர்கள்! எல்லோரும் நிறைய செலவு செய்வதால் தானே விலைவாசி உயருகிறது. அதைக் கட்டுப்படுத்த, வட்டி விகிதத்தினை உயர்த்தினால் போயிற்று!’’ என்று ரிசர்வ் வங்கி யோசிக்கிறது. செய்யும்.

வட்டி விகிதம் உயர்ந்தால் என்னவாம்?

வங்கிகள், கட்டுமான நிறுவனங்கள், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் போன்றவை நேரடியாகவும், கடன் வாங்கி வியாபாரம் செய்யும் பல நிறுவனங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படும். அதனால் வியாபார வளர்ச்சி குறையும். வளர்ச்சி குறைந்தால் நிறுவனங்களின் லாபமும் அதனால் பங்கு விலைகளும் குறையும்.

இதுதான் தற்போது நடந்துவரும் விஷயம்.

எல்லாம் சேர்ந்து முதலீட்டாளர்களைப் பயமுறுத்துகின்றன. சிலர், “இது நல்ல பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பு. வாங்குங்கள்’’ என்கிறார்கள். வேறு சிலர், இது கரடிகளின் (இறங்கு முக) காலத்தின் தொடக்கம் என்கிறார்கள். விலைகள் இன்னும் வீழும். 2008 இறுதிவரை தொடரும் என்கிறார்கள். சொல்லுபவர்கள் எல்லாம் சாதாரணர்கள் அல்லர். விபரம் தெரிந்தவர்கள் தான். ஆனால் என்ன, ஆளுக்கு ஒன்று சொல்லுகிறார்கள்!

வரும் ஏப்ரல் 10_ம் தேதிக்கு மேல் காலாண்டு முடிவுகள் ஒவ்வொன்றாக வெளிவரும். 2007_08 நிதி ஆண்டின், நாலாவது காலாண்டு என்பதால், அதுவே முழுவருடத்தின் கணக்கு காட்டுவதாகவும் அமையும். இதுவரை வந்த மூன்று காலாண்டு முடிவுகளும் சிறப்பாகவே இருந்திருக்கின்றன.

பிரச்சனை பயந்த அளவு இல்லையே என்று , Q4 முடிவுகள் வெளிவந்ததும் பங்குகளின் விலைகள் உயரலாம். அல்லது, “அடப்பாவிகளா? இவ்வளவு நட்டமா செய்திருக்கிறீர்கள்! சொல்லவேயில்லையே!’’ என்று , மேலும் விலைகளை அடித்து நொறுக்கலாம்.

அப்படியே விலைகளை மேலும் அடித்தாலும், மீண்டும் பங்குகளை வாங்குதல் சீக்கிரமே தொடங்கிவிடும். காரணம், நம் பொருளாதாரம் தற்சமயம் இருக்கிற வலிமை அப்படி.

இன்னும் இறங்கினாலும் என்கிற பயம் தானே தள்ளி நிற்கச் சொல்லுகிறது. இறங்கினாலும் எவ்வளவு இறங்கிவிடும்! அல்லது மீண்டும் உயரவே உயராதா ? என்று யோசித்துப் பாருங்கள். கணிசமாக டிவிடெண்ட் கொடுக்கும் பங்குகளைத் தேடுங்கள்.

சிறிய அளவுகளில், தொடர்ந்து வாங்குதல் என்பது பங்குச் சந்தையில் நல்ல அணுகுமுறைதான். பேராசையில் கொஞ்சம் (!) இழந்தோம். பெரும்பயத்திலுமா இழப்பது?.

பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் – 23

 

நன்றி : குமுதம் 

தலைவாழை இலை போட்டிருக்கிறது. சாப்பிட உட்காருகிறோம்.

கேசரி வைக்கிறார்கள். பொன் நிறத்தில், நெய் வழியும் கேசரி. தொடமுடியவில்லை. அவ்வளவு சூடாக இருக்கிறது. ஒரு விள்ளல் எடுத்து வாயில் போடுகிறோம். நல்ல இனிப்பாக இருக்கிறது. நிமிர்ந்து பரிமாறுபவரைப் பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் கேசரி வைக்கிறார். நகராமல் சற்று நேரம் அங்கேயே நிற்கிறார். பின் மீண்டும் சிறிது கேசரி வைக்கிறார். சற்று நேரம் போகிறது. அடுத்தும், சில்வர் வாளியில் இருந்து வழித்து ஒரு கரண்டி கேசரி எடுக்கிறார். நம் இலையில் வைக்கிறார். போய்விடுகிறார்.

இது எப்படி இருக்கிறது?

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயம். இந்திய அணியில் விளையாடவிருக்கும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன. அணியில் மொத்தம் பதினோறு வீரர்கள் ஆடலாம். தோனி, சேவாக் போன்ற பதினோரு அதிரடி மட்டையாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆமாம், அணியில் ஆடுவதற்காகத் தேர்வுசெய்யப்பட்ட பதினோரு பேருமே ‘பேட்ஸ்மென்’கள். பேட்ஸ்மென்கள் மட்டுமே!

இது எப்படி இருக்கிறது?

ஒருவர் புதியதாக பங்குச்சந்தை பற்றி தெரிந்துகொள்கிறார். அதில் இறங்குகிறார். சுவாரசியமாக இருக்கிறது. பங்குகள் வாங்குகிறார். இன்னும் கொஞ்சம் பங்குகள் வாங்குகிறார். சேமிப்பு தொடர, மீண்டும் பங்குகள் வாங்குகிறார். மற்றவகை முதலீடுகளில் இருந்து பணத்தினை எடுத்து, அந்தப் பணத்திற்கும் பங்குகளே வாங்குகிறார்.

இன்னொருவர் வேறுமாதிரியானவர். அவருக்கு முன்ஜாக்கிரதை அதிகம். அவர் செய்யும் முதலீடு, எப்போதும் வங்கி டெபாசிட்தான். வேறு ஒருவர், எவ்வளவு பணம் சேர்ந்தாலும், அதற்கு வீடு தான் வாங்குவார். இன்னும் சிலர் எல்லா பணத்தினையும் நகையிலேயே போடுவார்கள். வேறு சிலருக்கு முதலீடு என்றாலே இடம் வாங்குவதுதான்.

கேசரி. மீண்டும் கேசரி. திரும்பவும் கேசரி. இதுவேதானா மொத்த பலகாரமும்! உடன் ஒரு இட்லி, வடை, காபி வேண்டாம்?

தேர்வுசெய்யப்பட்ட பதினோரு பேருமே பேட்ஸ்மென் களாக இருந்தால் எப்படி? பந்துவீச்சாளர்கள், விக்கெட் கீப்பர் போன்றவர்கள் இல்லாமல் ஓர் அணியா? இதென்ன வெற்றிபெறுகிற வழியாகத் தெரியவில்லையே என்று தோன்றுகிறதா இல்லையா?

அதேதான் முதலீட்டு விஷயத்திலும். எது தெரிந்ததோ அது மட்டுமேதான் என்று ஒன்றில் எல்லாவற்றையும் இறக்குவது புத்திசாலித்தனம் அல்ல. அந்த அணுகுமுறையின் மூலம் ஒருவர் கூடுதல் ரிஸ்க் எடுக்கிறார். அல்லது மற்ற வாய்ப்புகளை தவறவிடுகிறார்.

உணவு என்றால், சரிவிகித உணவு. அணி என்றால் பல்திறன் பெற்றவர்கள் இருக்கும் ‘பேலன்ஸ்டு’ அணி. அதேபோல, முதலீடுகளுக்கும், ‘பேலன்ஸ்டு போர்ட்போலியோ’ தான் சரி.

சேமிக்கிற பணத்தினை முதலீடு செய்வதற்கு ஒன்றல்ல, பல வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு. அவற்றின் சாதக பாதகங்களில் வித்தியாசம் இருக்கிறது.

அதனால்தான் பங்குகள், பரஸ்பர நிதிகள் தங்கம் தவிர, இ.எல்.எஸ்.எஸ், Fixed Deposit, சேமநல நிதி போன்றவற்றையும் பார்த்தோம். இதெல்லாம் எனக்கு எதற்கு? என்று எதையும் தள்ள வேண்டாம். என்ன? ஏன்? எப்படி? என்று தெரிந்துகொள்ளலாம். வயது, தேவைகளுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கலாம்.

அந்த வரிசையில் அடுத்து பார்க்கவேண்டியது, கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதிகள்.

சில ஆண்டுகளாகவே லாபத்தினை கொட்டிக்கொடுத்துக் கொண்டிருந்த பங்குச் சந்தையின் ‘காளை மாடு’, தற்போது சோர்ந்துவிட்டது. மீண்டும் எப்போது வேகமெடுக்கும், பாயும் என்று தெரியவில்லை.

லாபம் என்றால் அள்ளித்தரும்தான். ஆனால் எதிர்பாராத நேரத்தில் இப்படியும் செய்யும். அதனால்தான், பணத்தினை, எல்லாவிதமான முதலீடுகளிலுமாக பிரித்துப்போட வேண்டும் என்பது.

வருமான வாய்ப்புக் குறைவாக இருந்தாலும், போடுகிற பணத்திற்கு பாதுகாப்பு இருக்கிற முதலீடுகளிலும், ஓரளவு பணத்தினையாவது போடத்தான் வேண்டும்.

அப்படிச் செய்யக்கூடிய முதலீடுகளில் பலவும் அரசு தொடர்புடையன. தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC) ஆறு ஆண்டுகளுக்கானது. தேவை என்றால் இடையிலும் எடுக்கலாம்தான். ஆனால் அதற்கு முதலீடு பத்தாயிரமோ அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும். தவிர குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.

கிசான் விகாஸ் பத்திரத்தில் (KVP) போடும் தொகை 8 வருடம் 7 மாதங்களில் இரட்டிப்பாகும். “வட்டியைக் குறைத்துக்கொள்ளுவதானாலும் சரிதான். எனக்கு அவசரம். போட்ட பணத்தினை திரும்பத் தாருங்கள்’’ என்று கேட்டாலும், குறைந்தபட்சம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் எடுக்க அனுமதிப்பார்கள்.

அஞ்சலகத்திலும் போடலாம்தான். தொடர் சேமிப்பு ஆரம்பித்தால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்குத்தான் போடலாம். ‘டைம் டெபாசிட்’ ஆக போடுவதென்றால், குறைந்தபட்சம் ஒரு வருடம் விட்டுவைக்க வேண்டும். ஆறு மாதத்தில் வேண்டுமென்று கேட்டால் கொடுப்பார்கள். வட்டியைக் குறைத்துவிடுவார்கள். அதற்கு சேமிப்பு கணக்கு வட்டிதான் கிடைக்கும்.

ஆகக் கூடி, பணம் பத்திரமாக இருக்க வேண்டுமென்றால், அதே சமயம் ஓரளவு கூடுதல் வருமானமும் (வட்டி) வேண்டுமென்றால், பணத்தினை உடனடியாக எடுக்க முடியாதனவற்றுள்தான் போட வேண்டிவரும். இதை மாற்ற முடியாதா?

முடியும். அதற்கு வங்கிகளில்தான் போட்டுவைக்க வேண்டும். அங்கேயும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் விட்டுவைப்பதற்குதான் கூடுதல் வட்டி. மற்றவற்றுக்கு சொற்ப வட்டிதான்.

வேறு ஏதும்? வேண்டும்போது எடுக்கவும் முடிய வேண்டும். வங்கிவட்டியைவிட கொஞ்சமேனும் கூடுதலாகக் கிடைக்கவேண்டும், பணமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முடியுமா?

அங்கே தான் ‘டெப்ட் ஃபண்ட்ஸ்’ (Debt Funds) வருகின்றன. அரசின் கியாரண்டி கிடையாதே ஒழிய, இங்கேயும் பணம் பத்திரமாகத்தான் இருக்கும். வேண்டும்போது எடுத்துக் கொள்ளலாம். வட்டியும் ஓரளவு கூடுதலாகவே இருக்கும். தவிர , இதில் கிடைக்கும் முதல் பெருக்கத்திற்கு, வருமான வரியிலும் சில சாதகங்கள் உண்டு.

அட! அதனால் தான் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத நிறுவனங்கள் (கார்ப்பரேட்ஸ்) இப்படிப்பட்ட ஃபண்டுகளில் பணத்தினைப் போட்டு வைக்கிறார்கள். தவிர அவர்களுக்கு திடீர் திடீரென பணம் தேவைப்படலாம். உடனே எடுக்கவும் முடிய வேண்டும். அதற்கு ஏற்றவை இந்த விதமான ‘நிதிகள்’.

நிறுவனங்களுக்கு மட்டுமா? எங்களுக்கும்தான் அப்படிப்பட்ட தேவைகள் இருக்கின்றன என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியென்றால் கூடுதல் கவனமாகவே படியுங்கள்.

இவற்றிலும் பல வகைகள் உண்டு.

இன்கம் ஃபண்டுகள்: நம்மிடம் இருந்து பெறப்படும் பணம், கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்யப்படும். ஆண்டுக்கு 8 முதல் 9% வரைகூட வருமானம் கிடைக்கும்.

லிக்விட் ஃபண்ட்ஸ்: மிகக் குறுகிய காலத்திற்குக் கூட போடமுடியும். நிலமோ, வீடோ வாங்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம். கையில் ரொக்கமாக வைத்துக்கொள்ளாமல், சில மாதங்களுக்கு அல்லது நாட்களுக்குக் கூட போட்டு வைக்கலாம். வேண்டும்போது உடனே எடுக்கலாம்.

இவையெல்லாம் தவிர, ஷார்ட் டர்ம் புளோட்டர், லாங் டர்ம் புளோட்டர் போன்றவையும் உண்டு.

எஃப்.எம்.பி என்று ஒரு வகை. ஆங்கிலத்தில் Fixed Maturity Plan. போடுகிற பணத்தினை குறிப்பிட்ட காலத்திற்கு திரும்ப கேட்கமாட்டோம் என்று சொல்லிப் போடுவது. அதனால் கூடுதல் வருமானம் கிடைக்கும். வைப்பு காலம் முழுவதும் ஒரே அளவிலான நிலையான வட்டியும் கிடைக்கும்.

எவ்வளவு காலம் என்பதுதான் நிச்சயமாக இருக்க வேண்டுமே ஒழிய, அது வெறும் முப்பது நாட்கள் ஆகக் கூட இருக்கலாம். ஒன்று, இரண்டு, மூன்று வருடங்கள் வரை கூட எஃப்.எம்.பி.கள் போடலாம். வங்கி வட்டியைவிட எஃப்.எம்.பி ஒருவிதத்தில் உசத்தி. வட்டி வருமானத்திற்கு வருமான வரி உண்டு. ஆனால் இதில் வரும் வருமானத்திற்கு வட்டி கணக்கிடும் போது இண்டெக்ஸ்ஷேன் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். வரி குறையும்.

இவற்றையெல்லாம் பங்குகள் போலவே, தரகு நிறுவனங்கள் மூலம் வாங்கலாம் விற்கலாம். தரகு கட்டணம் இல்லை. ஆனால் நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணங்கள் உண்டு.

டி.மேட் கணக்கு தேவையில்லை. ஆனால் பான் கார்டு தேவை. வட்டிவிகிதம் உயர்ந்துகொண்டே போகப்போகிறது என்று தெரியவந்தால், இதுபோன்ற ஃபண்டுகள் அவ்வளவு லாபம் அல்ல. வரும் ஆண்டுகளில் வட்டிவிகிதம் குறையப் போகிறது என்றால், உடனே இவற்றை வாங்கலாம். ஒரே தவணையில்தான் போட வேண்டும் என்பதில்லை. எஸ்.ஐ.பி. முறையிலும் இவற்றில் பணம் போட முடியும்.

முதலீடுகளில் எல்லாம் கலந்துதான் இருக்க வேண்டும், பங்குச் சந்தை போன்ற கேசரியோடு, இட்லி, வடை, காபி போல, இவையும் கொஞ்சம் தேவைதான்..

 

பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் – 24

 

நன்றி : குமுதம் 

தெருமுனை குழாயடி. பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம் என்று பல வண்ணங்களில் பிளாஸ்டிக் குடங்கள். குடங்களின் வரிசை நீளம் அந்தத் தெருவில் பாதி அளவு இருந்தது.

குழாயில் இருந்து வந்த தண்ணீரோ நூல் போல வடிந்தது. ஒரு குடம் நிரம்புவதற்கே 15 நிமிடங்களுக்கும் மேலானது. தங்கள் முறை வருவதற்கும், வந்த பின் குடம் நிரம்புவதற்கும் மக்கள் கொளுத்திய வெயிலில் காத்துக் கிடந்தார்கள்.

ஒரு மஞ்சள் நிறக்குடம். நிறைந்துவிட்டது. அதை இடுப்பில் வைத்துக் கொண்டு வீடு வந்துவிட்டவர், வீட்டிற்குள் நுழையப் போகையில் கால் தடுக்கி, அடடா..! குடம், கீழே சாய்ந்து உருண்டது. பாதித் தண்ணீர் வாசல் தரையில். குழாய்க்கு திரும்பப் போகலாம் தான். ஆனால், “ அதெல்லாம் தெரியாது. வரிசையில் தான் வரவேண்டும். கடைசிக்குப் போ’’ என்று சொல்லிவிடுவார்கள் இல்லையா? பணம், ஒரு லட்சம் என்ன பல லட்சங்கள் கூட சம்பாதிக்கலாம். அதேசமயம் சம்பாதிப்பதை இழக்காமலும் இருக்க வேண்டும். அது முக்கியம். பலருக்கும் பாவம், அந்தக் குழாயில் தண்ணீர் வருவதுபோலத்தான் மெதுவாகச் சேருகிறது பணம். பலவருடங்கள் சேர்த்த பணத்தினை, கைதடுக்கி தரையில் கொட்டிய தண்ணீர் போல இழக்கலாமா?

“தண்ணீர் வேண்டுமானால் கால் கை தடுமாறிக் கொட்டும். குடம் தவறலாம், பணம் தவறுமா என்ன?’’

நமக்கா தெரியாது? எவ்வளவு செய்திகள் கேட்கிறோம், படிக்கிறோம். ‘வீட்டை உடைத்து திருட்டு’. ‘பஸ்ஸில் ஜேப்படி’. ‘பெண்ணிடம் வழிப்பறி’. ‘சீட்டுப் பிடித்தவர் ஓட்டம்’. இவையெல்லாம் சேர்த்த பணம் பறிபோவதில் ஒரு ரகம்.

கூடுதல் வருமானத்திற்கு ஆசைப்பட்டு ஏமாறுவதும் உண்டு. அது அவர்களாகவே அவர்கள் தலையில் மண் அள்ளிப்போட்டுக்கொள்வது. இவையெல்லாம் போகவும், பணம் என்னும் ‘குடத்து தண்ணீர்’ கீழே கொட்டும் ஆபத்துகள் வேறு சில இருக்கின்றன. அலட்சியத்தினால் வரும் ஆபத்துக்கள்.

குமாருக்கு கார் வாங்க ஆசை. சில வருடங்களுக்கு முன், 2000 வருட மாடல் மாருதி ஜென் ஒன்றினை ஒன்னேகால் லட்ச ரூபாய்க்கு வாங்கினார். வாங்க வேண்டியதுதான். வாங்கியவர் என்ன செய்திருக்க வேண்டும்? தன் பெயருக்கு ஆர்.சி புத்தகத்தினை மாற்றியிருக்க வேண்டும். செய்யவில்லை. வண்டிக்கு இன்சூரன்ஸ§ம் இல்லை.

அதெல்லாம் செய்ய ரூபாய் பத்தாயிரம் ஆகும் என்றார் புரோக்கர். ‘நாம் எங்கே வெளியூரா எடுத்துப்போகப் போகிறோம்! ஏதோ நமது நகருக்குள்ளாகவே போய்வரப் போகிறோம். மேலும் ஒரு வருடம் ஓட்டிவிட்டு விற்றுவிடலாம்’ என்றும் யோசித்து அவற்றை செய்யாமல் விட்டார். அவர் நினைப்பில் அவர் பணத்தினை செலவு செய்யாமல் பத்தாயிரம் ரூபாய் சேமித்திருக்கிறார்.

இப்படியே ஆறுமாதம் ஓடிவிட்டது. ஊரிலிருந்து வந்திருந்த சித்தப்பா, இவருடைய காரினை எடுத்துக்கொண்டு சென்னை பாரீஸ் கார்னர் போயிருக்கிறார். அவர் தப்போ, எதிரில் வந்தவர் தப்போ, கார்கள் மோதிக்கொண்டுவிட்டன. கூட்டம் கூடிவிட்டது. பேப்பர்களை எடுக்கச் சொன்னால், சித்தப்பாவிற்கு ஆச்சரியம். காரில் அதெல்லாம் இல்லை. இடிபட்ட அந்த இன்னொரு கார்க்காரர் கை ஓங்கியது.

பிரச்னையில் இருந்து வெளிவர ஆன செலவு மொத்தம் ஐம்பது ஆயிரம். குமாருடைய சில வருட சேமிப்பு அப்படியே ‘லம்ப்’பாகப் போனது. அதனைச் சம்பாதிக்க, அவர் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டும். ஆமாம் வெயிலில்தான்.

நம் வண்டி தானே என்று இருக்க முடியாது. செலவுகள் இடிபடும் இன்னொரு வண்டிக்கும் சேர்த்துக்கொடுக்க வேண்டிவரும். இவற்றிலிருந்து எல்லாம் காப்பாற்றக்கூடியது, மிக சாதாரணமான தீர்வு: காப்பீடு. காப்பீடு ஒரு செலவே அல்ல. மிகப்பெரிய சேமிப்பு. சேமித்த பணத்திற்கு வாங்கும் பூட்டு போல. வலுவான பாதுகாப்பு.

“இது தெரியாதா? யாரோ ஒரு குமார் வேண்டுமானால் அப்படி இன்சூரன்ஸ் எடுக்காமல் கார் ஓட்டியிருக்கலாம்’’ என்று தோன்றுகிறதா? தெரியாதவர்கள், எடுக்காதவர்களுக்கு எச்சரிக்கை.

அவர் பெயர் ஜோசப். ஒரு பள்ளிக்கூட வாத்தியார். சம்பாதிப்பதும், சேமிப்பதும், மேலே பார்த்த ‘தெருமுனைக் குழாய்’ மற்றும் ‘நூல் போல’ வடியும் தண்ணீரே தான்.

அவரது மனைவிக்கு இரண்டு மாதங்களுக்கு முன், வலது கால் வலிக்க ஆரம்பித்தது. தவிர அதிக தூரம் நடக்க சிரமப்பட்டார்கள். தொடக்கத்தில் கணவனும் மனைவியும், மற்ற எல்லோரையும் போலவே, ‘இது வெறும் வீக்னெஸ்’ என்றே நினைத்தார்கள்.

அடுத்து, காலில் சில இடங்களில் மரத்துப் போனது போலவும் (நம்நெஸ்), வேறு சில இடங்களில் உயிர் போவதுபோலவும் வலித்தது.

பின்பு, மருத்துவரிடம் போனார்கள். எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. உடன் ஜோசப் சேமித்து வைத்திருந்த ஃபிக்செட் டிப்பாசிட்டும் எடுக்கப்பட்டது. எக்ஸ்ரேயில் அது தண்டுவடம் (ஸ்பைனல் கார்ட்) தொடர்பான பிரச்னையாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்து, ஒரு

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கச் சொன்னார் மருத்துவர்.

வலியால் துடிக்கிற மனைவியை அழைத்துக்கொண்டு ஸ்கேன் எடுக்கப் போனார், ஜோசப். போவதற்கு முன், வங்கிக்கும் போனார். எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு பத்தாயிரம் ரூபாய் என்பது கூட பரவாயில்லை என்று இருந்தது அவருக்கு, அதன் ‘ரிசல்ட்’டைக் கேட்ட போது.

‘இது ‘டிஸ்க்’ பிரச்னை. தண்டுவடம் பலம் இழந்துவிட்டது’என்றார் மருத்துவர். ‘பின்னால் பார்த்துக் கொள்ளலாமா’ என்று கேட்டதற்கு, ‘இப்படியே விட்டால், சுத்தமாக கால் வராமல் போய்விடும், நடக்கமுடியாது’ என்றார். பெண்களுக்கு 30 வயதில் இருந்து 45_க்குள் வர வாய்ப்பு இருக்கிறது. அதான் வந்திருக்கிறது என்று முடித்தார். ‘கைனக் ‘ பிரச்னை.

“என்ன செய்யலாம் டாக்டர்?’’

“இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று பிசியோ தெரப்பி. படுக்கையில் படுத்தவாக்கில் ஒரு வருடம் வரை இருக்க வேண்டிவரும். மற்றொரு வழி, அறுவை சிகிச்சை’’

“அறுவை சிகிச்சை செய்தால் குணமாகிவிடுமா?’’

“ஆகிவிடும்’’

“செய்யுங்கள்’’

பெங்களூரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அவருடைய டிஸ்கினை அறுவை சிகிச்சை செய்து சரியாக்கினார்கள்.

மனைவி குணமாகி வீடு வந்தார். பிரச்னை போய்விட்டது. கூடவே 2 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயும். பாதிக்கு மேல் கடன்.

“பணம் என்ன பெரிய பணம்? நீ குணமானதே போதும்’’ என்று சொல்லலாம், வேறு வழியில்லாவிட்டால். ஆனால் வழி இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். ஆனால், ஜோசப்புக்குத் தெரிந்திருக்கவில்லை. இன்னும் சிலருக்குத் தெரியும் தான். ஆனால், ‘நமக்கு என்ன நன்றாகத்தானே இருக்கிறோம்’ என்று நினைக்கிறார்கள். அல்லது ஆகட்டும் ‘எடுத்தால் போயிற்று’ என்று சும்மா சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்.

அதென்ன வழி? என்ன எடுக்க வேண்டும்?

ஆச்பிடலைஷேசன் இன்சூரன்ஸ், மெடிகிளைம், மெடிகல் இன்சூரன்ஸ் என்றெல்லாம் அழைக்கப்படும் காப்பீடுதான் அது.

வியாதிகளும் விபத்துக்களும் பெருகிவரும் உலகில் வருடத்திற்கு நபர் ஒன்றுக்கு ஆயிரமோ இரண்டாயிரமோ இந்த இன்சூரன்ஸில் பிரீமியமாக கட்டி வருவது, எப்போதாவது, சுனாமி போல வந்து, திக்குமுக்காட வைக்கும் பெரிய மருத்துவச் செலவுகளில் இருந்து காப்பாற்றும்.

ஒருவருக்கு 25,000 முதல் பல லட்சங்கள் வரை காப்பீடு எடுக்கலாம். காப்பீட்டுத் தொகையைப் பொறுத்தும், வயதினைப் பொறுத்தும், கட்ட வேண்டிய பிரீமியங்கள் மாறும். மருத்துவமனைக்கு பணம் கொண்டுபோக வேண்டாம். அவர்கள் கொடுக்கும் அடையாள அட்டையைக் கொண்டு சென்றாலே போதும்.

காப்பீடு எடுத்த பிறகு ஏதும் ஆகவில்லையே என்று கவலைப்படவேண்டாம்! அடுத்த ஆண்டு கட்டும் பிரீமியத்தில், ‘நோ கிளைம் போனஸ்’ என்று கொஞ்சம் குறைத்துக் கொள்ளுவார்கள்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமே எடுக்கலாம். எடுக்க வேண்டும். ஆளுக்கு 50 ஆயிரத்துக்கு என்று. ஜோசப் மனைவி போல ஒருவருக்கே இரண்டரை லட்சம் ஆகிறதென்றால், கணவனுடைய 50 ஆயிரம்+ மனைவியின் 50 ஆயிரம்+ குழந்தையின் 50 ஆயிரம் என்று மூன்றையும் சேர்த்து மனைவியின் செலவிற்காகவே கொடுப்பார்கள்.

சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிரசவ செலவுகளையே கொடுக்கிறார்கள். ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு மட்டும் சில நிறுவனங்கள் தருவதில்லை. பிடித்த தண்ணீர் கொட்டிவிட்டாலும், திரும்ப தண்ணீர் கொடுக்கும் திட்டம் போன்றது, இந்தக் காப்பீடு. இதுவும் பணம் பண்ணும் வழிதான். காரணம், பாதுகாத்த பணம், ஈட்டிய பணத்திற்குச் சமம் இல்லையா?.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: