பணமே ஓடிவா : சோம.வள்ளியப்பன்Part-25to30

பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் – 25

நன்றி : குமுதம்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன்.’

இந்தப் பழமொழி யானைக்கு மட்டுமல்ல; சில மனிதர்களுக்கும் பொருந்தும். காரணம், சில பெற்றோர் அவர்களுடைய பிள்ளைகளுக்கு வாழ்நாள் முழுக்க தேவையானவற்றை செய்துகொண்டே இருப்பது தவிர, அவர்கள் இறந்த பிறகும், அவர்களின் பிள்ளைகளுக்கு ஏதாவது பெரியதாக கொடுப்பார்கள். அது, அவர்கள் வாழ்நாள் எல்லாம் சேர்த்துவைத்த சொத்தாக இருக்கும்.

அவர் பெயர் கருப்பையா. நல்ல பணக்காரர். பணம் என்றால் பெரும் பணம். பெரியவீடு, பல ஏக்கர் நிலங்கள், ஷேர்கள், நகைகள் என்று ஏராளமான சொத்துக்கள். அவ்வளவு இருந்தாலும், மனுஷன் பணத்தினை சுலபத்தில் செலவழித்துவிடமாட்டார். காசு விஷயத்தில் படுகெட்டி. அவரிடம் அவ்வளவு பணம் இருந்ததே, அவர் இறந்த பிறகு, அவர் மகன் போட்ட ஆட்டத்தில்தான் தெரியவந்தது. கருப்பையா பணத்தினைச் சம்பாதித்துச் சேர்த்ததில் மட்டும் கெட்டிக்காரரில்லை. அந்தப் பணம் தன் மகனுக்கு மிகச் சரியாகப் போய்ச் சேர வேண்டும் என்பதிலும் சமர்த்தராய் இருந்திருக்கிறார். அதனால்தான் , அவர் இறந்ததும், அவருடைய அனைத்து சொத்துக்களும், முழுமையாக அதுவும் சீக்கிரமே மகனுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது.

“குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். இதில் என்ன அதிசயம்? அப்பா சம்பாதித்தது மகனுக்குத்தானே!’’

“எல்லோருக்குமே கூடுதலோ குறைவோ, பெற்றவர்கள் வைத்துவிட்டுப் போகும் சொத்து வருகிறது. வாழ்க்கையில் ஒருவருக்கு பணம் வரும் வழிகளில் இதுவும் ஒன்று. பெற்றவர்கள் இருக்கும் போதே பிரித்துக்கொடுப்பது ஒருமுறை. அவர்கள் இருக்கும் வரை பாராமரித்துவிட்டு, அவர்கள் காலத்துக்குப் பிறகு, வாரிசுகளுக்குப் போகும்படிச் செய்வது இன்னொரு முறை. அதைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இந்த வழி, எல்லா குடும்பங்களிலும் சுலபமாக நடந்துவிடுகிறது என்று சொல்லமுடியாது.

உதாரணத்திற்கு இன்னொருவர். அவர் பெயர் ராம்பாபு. அவர் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றியவர். அவரது 47_வது வயதில் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்”

“அடப்பாவமே! சரி. அதனால் அவர் பிள்ளைக்கு அவருடைய சொத்து கிடைக்கவில்லையா?’’

“கிடைத்தது. ஆனால் அந்தப் பணத்தினை வாங்குவதற்குள், ராம்பாபு மனைவிக்கும் மகனுக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது. காரணம், அவர்கள் தான் ராம்பாபுவின் வாரிசுதாரர்கள் என்று நிரூபிக்க, அவர்கள் அவ்வளவு அலைய வேண்டியதாகிவிட்டது. அதனால் தாமதமாக , கொஞ்சம் குறைந்துபோன மதிப்பில்தான் சொத்துகள் கைக்கு வந்தன.’’

“என்ன கொடுமை இது! சின்ன வயதில் அவர் செத்ததே அநியாயம். இதில் அவர் சேர்த்துவைத்த பணம், அவர் குடும்பத்துக்குப் போய்ச்சேர இவ்வளவு பாடா! ஆமாம், ஏன் இப்படி?

“எல்லாம் அலட்சியம்தான் காரணம்.’’

“யாருடைய அலட்சியம்? பணம் கொடுக்க வேண்டியவர்களின் அலட்சியம் தானே?’’

“அதுதான் இல்லை. அவர்கள் எல்லாம் உதவத்தான் விரும்பினார்கள். ஆனாலும் முடியவில்லை.’’

“பணம் பட்டுவாடா செய்யவேண்டியவர்களின் அலட்சியம் இல்லை என்றால், வேறு யாருடைய அலட்சியம்?’’

“ராம்பாபுவின் அலட்சியம்.’’

“எப்படி?’’

“ராம்பாபு வேண்டியதைச் செய்யவில்லை.’’

‘இப்படி பூடகமாவே சொன்னால் எப்படி?’’

“ராம்பாபு அவர் சொத்துக்களுக்கு யார் வாரிசு என்று உயில் எழுதி வைக்கவில்லை. அவர் வயது அப்படி. அதனால் விட்டுவிட்டார் என்று சொல்லலாம். ஆனால் அவர் அவருடைய பங்குகள் போன்ற சில சொத்துகளுக்கு, வாரிசுதாரர் (நாமினி) நியமித்திருக்கவில்லை’’

“அது ஒரு பிரச்னையா?’’

“இல்லையா பின்னே? அசையா சொத்துக்கள் யாருக்கு என்கிற கேள்வி வருகிற போது, இறந்தவருடைய இறப்புச் சான்றிதழ் கொடுத்து, மாநில அரசின் அலுவலகத்தில் இருந்து வாரிசுதாரர் சான்றிதழ் பெற்றுவிட்டால் போதும். ஆனால், பங்குகள், வங்கி வைப்புகள், வங்கி லாக்கர்கள், அரசு கடன் பத்திரங்கள், பரஸ்பர நிதிகள் போன்ற பலவற்றுக்கும், ராம்பாபு அவர் காலத்திலேயே, தனக்கு ஏதும் நேர்ந்துவிட்டால் எவரிடம் அந்தப் பணத்தினைக் கொடுப்பது என்பதை எழுதிக்கொடுத்திருக்க வேண்டும். அதன் பெயர் நாமினேஷன். அதனை அவர் செய்திருக்கவில்லை.’’

“அப்படி நாமினேஷன் செய்ய, தனியாக கடிதம் ஏதும் கொடுக்க வேண்டுமோ!’’

“இல்லை. குறிப்பிட்ட அந்த கணக்கினைத் திறக்கும் போதோ, அதில் பணத்தினைப் போடும் போதோ, விண்ணப்பப்படிவத்தினை சரியாகப் பார்த்தால் தெரியும். அதிலேயே நாமினேஷன் செய்வதற்கான இடம் இருக்கும். அதில் ஒருவர், நியமிக்க விரும்பும் நபரின் பெயர், வயது , முகவரி எழுதினால் போதும். வாரிசுதாரரின் புகைப்படமும் கொடுத்து , அந்த வாரிசுதாரர் அதே படிவத்தில் கையெழுத்தும் அப்போதே போட்டுவிட்டால் இன்னும் பக்கா.”

“அப்படிச் செய்திருந்தால், ராம்பாபுவின் குடும்பத்தாருக்குச் சேர வேண்டிய பணம் ஒழுங்காக உடனடியாக சேர்ந்திருக்குமோ!”

“ஆமாம்”

“அடச்சே! ஐந்து நிமிடத்தில் ஆகிற வேலை. அதைச் செய்யாததால் தான் அவர் குடும்பத்துக்கு எவ்வளவு அலைச்சல்! அதைத்தான் அலட்சியம் என்றீர்களோ!”

“ஆமாம். இல்லையா பின்னே?”

“முன்பு சொன்னது தவிர வேறு எதெதற்கு இந்த நியமனம் அவசியம்?”

“முன்பு பார்த்தோமே சேம நல நிதி. ஊதியத்திற்காக வேலைசெய்யும் இடங்களில், சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் மற்றும் நிர்வாகத்தினால் வழங்கப்படும் சேம நலநிதி (றிதி) .அந்த சேமிப்பினை, ஊழியரின் பணிக்காலம் முடிந்ததும், அவர் சேமித்த பணத்தினை வட்டியோடு சேர்த்து வழங்குவார்கள். அதேபோல, அவர் பணி செய்யும் இடத்தில் கிராஜிவிட்டி எனப்படும் கருணைத் தொகை கொடுக்கவேண்டிவந்தால் அதனையும், ஓய்வு பெறும் ஊழியரிடம் கொடுப்பார்கள். ஆனால் அவர் ஒருகால் ராம்பாபு போல, எவரேனும் எதிர்ப்பாராமல் இறந்துபோனால், அந்தத் தொகைகளை யாரிடம் கொடுப்பது?

அப்படிப்பட்ட பட்டுவாடாக்களுக்கும் கூட ஊழியர், உரிய படிவங்களில் நியமனம் செய்ய வேண்டும். ராம்பாபு அதனையும் முறையாக செய்யவில்லை”

“முறையாக என்றால்..?’’

“அவர் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததுமே நியமனங்கள் செய்துவிட்டார்தான்”

“பிறகென்ன?’’

“அப்போது அவர் நியமனம் செய்தது அவர் தாயை. ராம்பாபு அப்போது திருமணம் ஆகாதவர். ஆனால் அவர் இறந்த போது, அவருக்கு திருமணமாகி, ஒரு மகனும் இருந்தான். அவர்கள் பெயர்கள் நியமனத்தில் இல்லை’’

“ சரி. அதனால் என்ன? அம்மாவிற்கு கொடுத்துவிட்டுபோவது!’’

“ராம்பாபு இறப்பதற்கு மூன்று வருடங்கள் முன்னால்தான் அவருடைய அம்மா இறந்துபோனார்’’

“அடடா!’’

“நியமனம் செய்தவர் உயிருடன் இல்லை. உயிருடன் இருப்பவர்களுக்கு நியமனம் இல்லை. அதனால் அந்தப் பணத்தினைப் பெறுவதற்கு வாரிசுதாரர் சான்றிதழ் தேவைப்பட்டது.’’

“அதை வாங்குவது ஒன்றும் அவ்வளவு சிரமமில்லையே! அதைப்பெற்று அதைக்காட்டி, ராம்பாபுவின் சொத்துகளை பெறவேண்டியதுதானே!’’

“எல்லா இடங்களிலும் வெறும் வாரிசுதாரர் சான்றிதழ் போதாது. உதாரணமாக பரஸ்பர நிதிகளுக்கு , நோட்டரி பப்ளிக் கையெழுத்து, வங்கி மேலாளர் சான்றிதழ் போன்றவையும் தேவைப்படும். பங்குகளை வைத்திருக்கும் டி.பி. (ஞிறி) க்கும், சில வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்திற்கும் கெடுபிடிகள் இன்னும் அதிகம்.

ஞிறி. யில் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால், வெறும் வாரிசுதாரர் சான்றிதழ் போதாது. நீதிமன்றத்தில் இருந்து பெறவேண்டிய ‘சக்சஷன் சர்டிபிகேட்’ கொடுக்க வேண்டும். அதை வாங்குவதற்கு செலவும் சில மாதங்களும் நிச்சயம் ஆகும்’’

“அடேயப்பா. . ராம்பாபு பணத்தினை அவர் குடும்பத்திற்குக் கொடுப்பதற்கே இவ்வளவு கெடுபிடிகள், சிரமங்களா? இவற்றைத் தவிர்க்க வழியே இல்லையா?’’

“ஏன் இல்லை? சுலபமான வழி இருக்கிறது.’’.

பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் – 27

நன்றி : குமுதம்

உயிலே.. உயிலே..

வள்ளல் சீதக்காதி கதை தெரிந்திருக்கலாம். இல்லை என்று சொல்லாத கொடைவள்ளல். ஒரு புலவர், சீதக்காதியிடம் வழக்கமாக பரிசுகள் வாங்கி பலனடைந்தவர். நொடிந்துபோன நிலையில், சீதக்காதியைப் பார்த்து பணம் வாங்குவதற்காக நம்பிக்கையுடன் வருகிறார். ஆனால் அவர் கேள்விப்பட்ட தகவலோ வேறுமாதிரியாக இருந்தது. “சீதக்காதி மரணம் அடைந்துவிட்டான்.” புலவருக்கு அதிர்ச்சி. புதைக்கப்பட்ட சுடுகாட்டிற்கு ஓடுகிறார். சமாதியைப் பார்த்துக் கதறுகிறார், “எப்போதும் கொடுப்பாயே. போய்விட்டாயே. உன்னை நம்பி வந்தேனே. பணம் வேண்டுமே ! எங்கே போவேன்? யாரிடம் கேட்பேன்?”

அழுது புலம்புகிறார். நிமிர்ந்த அவர் கண்ணில் பட்டதை அவரால் நம்பமுடியவில்லை. அட! சீதக்காதியின் ஒரு கை வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. பிரிந்திருந்த விரல் ஒன்றில், பளபளக்கும் தங்க மோதிரம்! “வா. இதை நீ எடுத்துப் போ’’ என்று சீதக்காதி சொல்லுவது போல இருக்கிறது. எடுத்துக்கொண்ட சந்தோஷத்தில் பாடினார், “..செத்தும் கொடுத்தான் சீதக்காதி.’’

சீதக்காதி போன்ற பலர் இறந்த பிறகும் கொடுக்க, வேறுசிலரோ, தெரிந்தோ தெரியாமலோ, ‘செத்தும் கெடுப்பார்கள்.’

வித்தியாசத்தினை கவனித்திருக்கலாம். கொடுக்காதது மட்டுமில்லை மேற்கொண்டு கெடுப்பார்கள், சென்ற அத்தியாயத்தில் பார்த்த ராம்பாபு போல. பெற்றவர்களின் சிதறிக்கிடக்கும் சொத்துக்களை சேகரிக்கவும், பெறுவதற்காகவுமே தங்களின் முழுநேர வேலை அல்லது செய்துகொண்டிருந்த தொழிலை கவனிக்க முடியாமல் விட்டவர்கள் உண்டு.

வாழ்நாள் எல்லாம் சிரமப்பட்டு சேர்கிற பணம், சிந்தாமல் சிதறாமல் வாரிசுகளுக்கு போய்ச் சேர வேண்டும்.

பணம் சம்பாதிப்பதும் அதனை பாதுகாப்பதும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம்தான் அதற்கு வாரிசுகள் நியமிப்பதும். மிஞ்சி மிஞ்சிப் போனால் அரை நாள் ஆகக்கூடிய வேலை. அதைச் சரியாக செய்யாவிட்டால், பணமும் சொத்தும் உரியவர்களுக்கு வந்துசேர பலவருடங்கள் கூட ஆகலாம்.

“என்ன செய்ய வேண்டும்? எதோ சுலபமான வழி இருக்கிறதென்று சொன்னதாக ஞாபகம்.’’

“எல்லா கணக்குகளிலும் கணவன் _ மனைவி இருவர் பெயர்களையும் போட வேண்டும்.’’

“ஜாயிண்ட் அக்கவுண்ட் போல?’’

“ஆமாம். சில இடங்களில் ஜாயிண்ட் அக்கவுண்ட். வேறு சில இடங்களில் ‘இருவரில், இருப்பவர் எவரோ அவர்’ என்கிற வகையில் ஆரம்பிக்கப்படுகிற ‘எய்தர் ஆர் சர்வைவர்’ (Either Or Survivor). சுருக்கமாக E or S. கணக்குகள்.’’

“இதனால் என்ன பலன்?’’

“இருவர் பெயர்களிலும் கணக்கு இருப்பதால், அந்த வங்கிக் கணக்கிலோ அல்லது பிக்செட் டிப்பாசிட்டிலோ அல்லது வேறு கணக்கிலோ இருக்கும் பணத்திற்கு இருவருமே சொந்தம். ஒருவருக்கு ஏதும் ஆகிவிட்டால், மற்றொருவருக்கு அந்தத் தொகை சுலபமாக கிடைக்கும். சிக்கல் ஏதுமில்லை.

பங்குகள் வாங்கினாலும் இப்படி இருவர் பெயர்களில் வாங்கலாம். அதில் ‘ஃபர்ஸ்ட் ஹோல்டர்’, ‘செகண்ட் ஹோல்டர்’ என்று பெயர் போடுவார்கள். பங்குகளை வைத்திருக்கும் டி.பி கணக்குகளுக்கும் இது பொருந்தும்.’’

“கணக்கு வைத்திருப்பவருக்கு ஏதும் ஆகிவிட்டால் என்கிற சூழ்நிலைக்கு இது சரிதான். ஆனால் அதற்கு முன்?’’

“வட்டி, டிவிடெண்ட், போனஸ் , தகவல்கள் எல்லாம் முதல் ஹோல்டருக்குத்தான் வரும். இரண்டாவது ஹோல்டர் என்பவர் பெயருக்குத்தான்.’’

‘இப்படி மனைவி பெயரில் மட்டும்தான் செய்ய முடியுமா?’’

“பிள்ளைகள் பெயரிலும் செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால், ஒரே கணக்கிலும் அப்படிச் செய்யலாம். அல்லது, தனித்தனி கணக்குகள் திறந்து, ஒவ்வொன்றில் ஒவ்வொருவர் பெயரினை ஜாயிண்ட் ஹோல்டராகப் போடலாம். ஒரு கணக்கில் அப்பாவும் மனைவியும். இரண்டாவதில் அப்பாவும் முதல் மகனும் என்பதுபோல.’’

“எவர் பெயருக்குப் போடுகிறோமோ, அவருக்குத் தெரியாமலேயே போடமுடியுமா?’’

“தெரியாமல் போட முடியாது. காரணம், அவரும் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட வேண்டும். ஆமாம், ஏன் அவருக்குத் தெரியாமல் அவர் பெயரில் போட வேண்டும்?’’

“தெரிந்தால் இப்போதே கொடுங்கள் என்பார்களே! ஏதும் ஆன பிறகு அவர்களுக்குத்தான். எடுத்துக்கொள்ளட்டும். இப்போதே எல்லாவற்றையும் கொடுத்துவிட முடியுமா?’’

“அதுவும் சரிதான். அப்படி எல்லாவற்றையும் கொடுக்கவும் தேவையில்லை.’’

“யாருக்கு நாமினேஷன் இருக்கிறதோ அவருக்குத்தானா எல்லாம்?’’

“இல்லை. சட்டப்படி பார்த்தால், ‘நாமினி’ யாக நியமனம் செய்யப்பட்டவர், அந்தக் குறிப்பிட்ட பணத்தினை பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே உரிமை உள்ளவர். பெற்ற பணத்தினை அவர், எல்லா வாரிசுகளுக்கும் பிரித்துக்கொடுக்கத்தான் வேண்டும்.’’

“என்ன விகிதத்தில் பிரிப்பது?’’

“சொத்துக்கு உரிமையாளர் விரும்பியபடி பிரிக்கலாம். அவருடைய விருப்பத்தினை அவர் உயில் எழுதிவைத்து தெரிவித்திருக்க வேண்டும்.’’

“உயிலா..?’’

“இருக்கும் போதே, கொடுக்க வேண்டும் என்று விரும்பினால், ஓரளவு சொத்துகளையும் பணத்தினையும் பிரித்துக்கொடுக்கலாம். வாரிசுதாரர்களுக்குக் கொடுக்கும் பணத்திற்கு , கொடுப்பவர் வாங்குபவர் இருவருக்குமே வரி கிடையாது.

இருக்கும்போது முடியாது, அல்லது வேண்டாம் என்று நினைத்தால், தங்கள் காலத்துக்குப் பின் எடுத்துக்கொள்ளட்டும் என்று திட்டமிட்டால், யார் யாருக்கு எவ்வளவு என்பதைத் தெளிவாகவே எழுதிவைத்துவிடலாம். சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இப்படி ஒருவர் எழுதி கையெழுத்துப் போட்டு வைப்பதுதான் உயில்.’’

“உயில் எப்படி, எதில் எழுதுவது?’’

“உயில் என்பதை சாதாரண பேப்பரில் எழுதினால்கூட போதும். அதனை பதிவு செய்ய வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. ஆனாலும் உயிலுக்கு என்று சில அடைப்படைத் தேவைகள் இருக்கின்றன. ஒருவர் தன்னுடைய சொத்துக்களுக்குத்தான் உயில் எழுத வேண்டும் (அட இது நல்லா இருக்கே!) உதாரணத்திற்கு, மனைவி பெயரில் இருப்பதற்கு , மனைவிதான் உயில் எழுதமுடியும்.

எழுதியவர், சுயநினைவுடனும், எவர் தூண்டுதல் இன்றியும், உடல் நலமாகயிருக்கையிலும் எழுதியதாக குறிப்பிட்டு, கையெழுத்திட வேண்டும். அவர் அப்படி கையெழுத்துப் போடும்போது, இன்னும் இருவர் சாட்சிக் கையெழுத்துகள் போடவேண்டும். சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்கள், அந்த உயில் மூலம் பலன் பெறுபவர்களாக இருக்கக் கூடாது. வேறு நபர்களாகத்தான் இருக்க வேண்டும்.

மனைவி பிள்ளைகளுக்குத்தான் எழுத வேண்டும் என்பதில்லை. மற்றவர்களுக்கும் ஏன் தர்மத்துக்கும் கூட சொத்துக்களை எழுதலாம். அதே உயிலில், எவர் அந்த உயிலினை நடைமுறைப்படுத்த வேண்டும் ( எக்ஸிகூட்டர்) என்றும் குறிப்பிடலாம். அவர் வக்கீலாகவோ அல்லது வேறு எவருமாகவோ இருக்கலாம். அப்படி எவரையும் நியமிக்காமலும் விடலாம்.

எழுதிய உயிலைப் பற்றி எவருக்கும் தெரிவிக்காமலே தானே வைத்திருக்கலாம். அல்லது உயிலை ஒரு சொத்துக்கள் பதிவு செய்யும் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் சிறிய கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம் ( ஸ்டாம்ப் டூட்டி அளவு அதிகமில்லை). பதிவு செய்வது மட்டுமில்லை. தேவையானால் அதனை அதே அலுவலகத்தில் டிப்பாசிட்டும் செய்யலாம்.’’

“உயில் எழுதி சில வருடங்கள் ஆகிவிட்டது. அதில் மாற்றங்கள் செய்ய நினைத்தால் செய்ய முடியுமா?’’

“தாராளமாக. எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிய உயிலினை மாற்றலாம். அடுத்த நாளே கூட மாற்றலாம். எது கடைசியாக எழுதப்பட்டதோ அதுதான் செல்லும். ஆகவே உயிலில் தேதி மிகமிக முக்கியம்.’’

“உயில் இருந்தால் போதுமில்லையா? உரியவர்கள் அதன்படி பிரித்துக்கொண்டு விடலாமில்லையா?’’

“உயிலினை அவருடைய இறப்புக்குப் பிறகு சம்மந்தபட்டவர், நீதிமன்றத்தில் ப்ரோபேட் (Probate) செய்ய வேண்டும்.”

“உயிலுக்கு மாற்று ஏதும் இருக்கிறதா?’’

“உயிலுக்குப் பதில் ‘ஃபேமிலி அரேஞ்மெண்ட்’ ஆகவும் செய்துகொள்ளலாம். சொத்தினை கொடுப்பவர் உட்பட, சம்பந்தப்பட்ட உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து, எப்படிப் பிரித்துக்கொள்வது என்பதனை எழுதி கையெழுத்துப் போட்டு வைத்துக்கொள்ளலாம். அது செல்லும்’’

“உயிலும் இல்லை. வேறு வழிமுறைகளையும் செய்துகொள்ளவில்லை. என்ன ஆகும்?’’

“ உயில் இல்லாவிட்டால், அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தின்படி பிரிவினை செய்யப்படும். ‘இந்து சக்சஷன் ஆக்ட்’ படி, ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’, ‘செகெண்ட் கிளாஸ்’ என்பது போல உரிமை அடிப்படையில் வாரிசுகள் பிரிக்கப்படுகிறார்கள். மனைவி, மகன், மகள்களுக்குத்தான் முதல் உரிமை. மகன் தந்தைக்கு முன்பாவே இறந்துவிட்டிருந்தால், அவனுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு அந்தப் பங்கு வரும். அவர்கள் யாரும் இல்லையென்றால்தான் அடுத்தகட்ட வாரிசுகள். அதில் அப்பா, சகோதரர்கள் வருகிறார்கள்.

“மொத்தத்தில்?’’

“எல்லாவற்றுக்கும் நியமனம் செய்துவிட வேண்டியது. உயில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டியது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சூழ்நிலைக்கு ஏற்றாற் போல பழைய உயிலினை கிழித்தெறிந்துவிட்டு, புதியதாக ஒன்று எழுதி வைத்துக்கொள்ள வேண்டியது.’’.

இந்தியாவில் மருத்துவக் காப்பீடு (Health Insurance)

இந்த அவசரகதி வாழ்க்கையில் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட அனைத்தும் தற்போது மனிதனை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவக் காப்பீடு என்பது அவசியமாகிறது.

போக்குவரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசும், இயந்திர கதி வாழ்க்கையும் ஒரு மனிதனை எப்போது வேண்டுமானாலும் நோயாளியாக்கும் தகுதிகளைப் பெற்றுள்ளன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பக் கருவிகளின் உதவியால் எப்படிப்பட்ட பிரச்சினையும் சீர் செய்து விட முடியும். பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காலம் எல்லாம் மலை ஏறிப் போய், தற்போது நுண் துளை வழியாகவே எத்தனையோ சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

உடல் முழுவதையும் அலசி ஆராயும் சிடி ஸ்கேன், உடல் உள் உறுப்புகள் சேதமடைந்தாலோ, பழுதடைந்தாலோ மாற்று உறுப்பு பொருத்துதல் என மருத்துவ உலகம் விரிவடைந்து கொண்டே போகிறது. பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.

எல்லாம் சரி… நவீன தொழில்நுட்ப மருத்துவத்தை பெறுவது என்பது சராசரி மக்களுக்கு இயலுமா? சராசரி ஏன்… ஓரளவிற்கு நல்ல நிலையில் இருப்பவர்களே பெரிய பெரிய மருத்துவமனைகளின் கட்டணங்களைப் பார்த்து திணறிப் போய்விடுகின்றனர். அந்த அளவிற்கு மருத்துவக் கட்டணங்கள் உயர்ந்து இருக்கின்றன.

நமக்கு நோய் வந்ததும் அதற்கு எந்த மருத்துவமனை சிறந்தது என்று பார்ப்பதை விட… நமது பொருளாதார பலத்திற்கு எந்த மருத்துவமனை சிறந்தது என்றுப் பார்த்துதானே சிகிச்சையே பெறப்போகிறோம்.

நோய் என்றால் சரி.. எல்லா வற்றையும் விசாரித்துப் பார்த்துவிட்டு போய் சேரலாம். இதுவே விபத்து, எதிர்பாராத பிரச்சினை என்றால்… அந்த நேரத்தில் உயிர்தான் முக்கியம் என்று பெரிய மருத்துவமனை ஒன்றில் சேர்ந்துவிட்டு பின் விழிபிதுங்கி நிற்கும் எத்தனையோ குடும்பங்களைப் பார்க்கிறோம்.

இதையெல்லாம் தவிர்க்கலாம் மருத்துவக் காப்பீடு மூலம். ஆம் தற்போதைய நிலைக்கு ஒவ்வொரு மனிதனும் மருத்துவக் காப்பீடு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

மருத்துவக் காப்பீடு என்பது தனி ஒருவருக்கோ, குடும்பத்தினருக்கோ, குழுவினருக்கோ என எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக காப்பீடு எடுக்கும்போது ஒரு குறிப்பிட்டத் தொகை என்றும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு என்பதும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்டத் தொகையை காப்பீடு எடுத்துக் கொள்ள விரும்பும் நபர் முழுமையாகவோ அல்லது தவணை முறையிலோ காப்பீடு நிறுவனத்திடம் அளித்திட வேண்டும்.

நாம் காப்பீடு எடுத்திருக்கும் காலக்கட்டத்திற்குள் நமக்கு ஏற்படும் மருத்துவச் செலவை இந்த காப்பீடு நிறுவனம் ஈடு செய்யும். அதாவது காப்பீடு எடுத்திருக்கும் தொகை மற்றும் நமக்கான மருத்துவ செலவு இவை இரண்டில் எது குறைவாக உள்ளதோ அந்தத் தொகையை காப்பீட்டு நிறுவனம் அளிக்கும்.

ஒரு சில ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் ஊ‌ழிய‌ர்களு‌க்கான மரு‌த்துவ‌க் கா‌ப்‌பீடு எடு‌த்து‌க் கொடு‌க்‌கிறது. இதுபோ‌ன்ற மருத்துவக் காப்பீடுகள், நமக்கு செலவாகும் தொகையை நேரடியாக மருத்துவமனையின் கணக்குக்கு அனுப்பி விடுகின்றன.

மருத்துவமனையில் தங்கும் அறை, மருத்துவருக்கான கட்டணம், அறுவை சிகிச்சை நடந்தால் அதற்கான தொகை போன்ற பல செலவுகள் இந்த காப்பீட்டில் அடங்கியிருக்கும்.

மருத்துவக் காப்பீடுக்கு தகுதியானவர்கள்

ஐந்து வயது முதல் 75 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். ஒரு சில மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு ஏற்ப இந்த வயது வித்தியாசம் கொஞ்சம் மாறுபடலாம். தனி நபரோ, ஒரு குடும்பத்தாரோ, ஒரு குழுவினரோ சேர்ந்து கூட மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.

பல வகைப்பட்ட காப்பீட்டு முறைகள் உள்ளன. அதாவது தனி நபருக்கு, குழுவினருக்கு, குடும்பத்தாருக்கு, முதியவர்களுக்கு, நீண்ட நாட்களுக்கான காப்பீடு, குறிப்பிட்ட நோய்க்கான காப்பீடு, விபத்துக்கான காப்பீடு என பல வகைகளில் உள்ளன.

இவற்றில் ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டினை தேர்வு செய்து காப்பீடு செய்து கொள்வது சிறந்தது.

இந்திய மக்கள் தொகையில் வெறும் 0.2 விழுக்காட்டினர் மட்டுமே மருத்துவக் காப்பீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்றவற்றில் 75 விழுக்காட்டு மக்கள் ஏதாவது ஒரு மருத்துவக் காப்பீட்டினை எடுத்திருப்பார்கள். இதற்கு அதிகக் காரணங்கள் உள்ளன.

அதாவது நமது நாட்டில் உள்ள காப்பீட்டு நிறுவனங்கள் மக்களைச் சென்று சேரும் வகையில் விளம்பரத்தையோ, விளக்கத்தையோ கொடுப்பதில்லை.

இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால் சில தனியார் மருத்௦துவக் காப்பீட்டு நிறுவனங்கள், தாங்கள் பதிவு செய்துள்ள குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே நாம் சிகிச்சை பெறும் கட்டாயத்தை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றன.

மேலும், மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தாலும் கூட விபத்திலோ, அவசர சிகிச்சைக்காகவோ மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெறும்போது நமது சொந்தப் பணத்தை மட்டுமே செலவு செய்ய வேண்டி உள்ளது. சிகிச்சை பெற்று காப்பீட்டு பணம் கைக்கு வந்து சேர ஆறு மாதங்கள் கூட ஆகி விடுகிறது. இது காப்பீட்டு நிறுவனங்கள் மீதான தவறான அபிப்ராயத்தை மக்களிடம் உருவாக்கி விடுகிறது.

எது எ‌ப்படி இரு‌ந்தாலு‌ம் எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ளி‌ல் உ‌த்‌திரவாதமு‌ம், பாதுகா‌ப்பையு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்கு‌ம் நா‌ம், நமது உடலு‌க்கு‌ம், உ‌யிரு‌க்கு‌ம் உறுதுணையாக இரு‌க்கு‌ம் மரு‌த்துவ‌க் கா‌ப்‌பீ‌ட்டி‌ற்கு‌ம் மு‌க்‌கிய‌த்துவ‌ம் தருவது ‌சிற‌ந்ததே.

பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் – 28

நன்றி : குமுதம்

இது பழமொழி வாரமோ!

கூந்தல் இருக்கிற மகராசி, அள்ளி முடியுறா என்பது போல, சொத்து இருக்கிற மகராஜன்கள், இருக்கும்போதும் கொடுப்பார்கள், அவர்கள் இறந்த பின்பும் கொடுப்பார்கள். அவர்கள் கதை எல்லோருக்கும் பொருந்துமா என்ன?

அப்படியே நிறைய சொத்து இருப்பவர்களுக்கு பிள்ளையாகப் பிறந்தாலும், பெற்றவர்களாகப் பார்த்துக் கொடுத்தால்தானே உண்டு!

‘தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேற வேற தானே!’ என்பது போல, பெற்றவரே ஆனாலும், அடுத்தவர் சம்பாத்தியத்தினை ஆயுசுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? நம் தேவைகளை நாமேதானே பார்த்துக்கொள்ள வேண்டும்!’’ என்றால், அதுவும் சரிதான்.

‘கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது, இளமையில் வறுமை’ என்பார்கள். அதெல்லாம் அவ்வையார் காலத்துக்கு வேண்டுமானால் சரி. இப்போதெல்லாம், தங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, பிள்ளைகளுக்கு வைத்து அடைக்கிறார்கள், பெற்றோர்கள். அப்படி போற்றிப் போற்றி வளர்க்கிறார்கள். வீட்டில் சிறுசுகள் வைத்ததுதான் சட்டம் (‘சேனல்’லும் கூட!).

காலம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் சிரமப்படுபவர்கள், சமரசம் செய்துகொள்ள வேண்டியவர்கள், பொறுத்துப் போக வேண்டியவர்கள், விட்டுக்கொடுக்க வேண்டியவர்கள் பெரியவர்கள்தான். ‘கொடிது கொடிது, வறுமை. அதனினும் கொடியது முதுமையில் வறுமை’ என்பது தான் தற்போதைய நிலை.’’

“நல்லா வாழ்ந்திட்டு, வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும், சிலர் அதிக மான மன உளைச்சலுக்கும் வேறு சிரமங்களுக்கும் உள்ளாவார்கள்.’’

“என்ன காரணம்?’’

“காரணம் என்று ஒருமையில் கேட்டால் எப்படி? காரணங்கள் என்று பன்மையில் கேட்கவேண்டும். முக்கியமான மூன்று காரணங்கள்.

(1) மெல்ல மெல்ல காணாமல் போகும் மரியாதை

(2) குறையும் முக்கியத்துவம்

(3) அடிக்கடி பிரச்னை செய்யும் உடல் நலம்.’’

“ஏன் அப்படி?”

“‘உத்யோகம் புருஷ லட்சணம்’ இல்லையா? வயதானாலும் அந்த நிலை மாறாது. எத்தனை வயதானாலும் புருஷன், புருஷன் தான். (இங்க புருஷன்னா ஆம்பளைன்னு அர்த்தம் சார்)’’

“வேலையும் சம்பளமும் இருக்கும் வரைதான் மரியாதை. ‘பல்லு போனால் சொல்லு போகும்’ என்பார்கள். வேலை போனால், மாத வருமானம் மட்டுமல்ல, வீட்டில் மரியாதையும் கிடைக்காது என்பது குழந்தைக்கும் கூட .. இல்லை இல்லை . குழந்தைகளுக்குத்தான் நன்றாகத் தெரியும்.’’

“அதற்காக ஓய்வு பெறாமல் வேலையிலேயே இருக்க விடுவார்களா என்ன? மாட்டார்களே! என்ன செய்ய?’’

“வேலை வேண்டுமானால் போகட்டும் சார். வருமானம் வந்தால் சரிதான்.’’

“அதெப்படி வேலைக்குப் போவதை நிறுத்திய பிறகும் சம்பாதிப்பது?’’

“வழி இருக்கிறது. (அதை நோக்கித்தானே போய்க்கொண்டிருக்கிறோம். அதற்காகத்தானே இவ்வளவு ‘பில்ட் அப்’பும்!)’’

“சம்பாதிப்பது கூட எதற்கு? முன்பே பார்த்தது போல, ஓய்வு காலத்திற்காக கணிசமாக சேமித்து வைத்திருந்தால் போதாதா? தொடக்கத்தில் இருந்தே நன்றாக சேமித்து, சேர்த்து, சொத்தாக வைத்துக்கொள்ளுவது. அப்படிச் செய்தால் மரியாதை எப்படி இல்லாமல் போகும்! மதிப்பு அதிகமாகத்தானே இருக்கும்?’’

“மதிப்பு கூடுகிறதோ இல்லையோ. நிச்சயமாக பகை வந்து சேரும்.’’

“சொத்துகளாக இருந்தால், வெளியாட்கள் அபகரிக்கப் பார்ப்பார்கள். இல்லையா?’’

“இதென்ன தொலைக்காட்சித் தொடரா? பெரிய பெரிய கார்களில் இரண்டு வாரத்துக்கு தொடர்ந்து, ‘வேகமாப் போ. இன்னும் வேகமாப் போ’ என்று துரத்துவதற்கு! அப்படியெல்லாம் வெளியாட்கள் வரவேண்டாம். எல்லாம் உள் ஆள் தான்.’’

“உள் ஆளா? யாரும், வீட்டில் வேலைக்கு இருப்பவர்களா?’’

“அட என்ன சார் நீங்க? உள் ஆள் என்றால், எல்லாம் நம் ஆள்தான் சார். மகன்கள், மகள்கள். பெற்றோரிடம் பணம் இருந்தால், எதற்கு வீணாக வட்டி நட்டமாக இருக்கிறது என்று, அவர்களுடைய முக்கிய தேவைகளுடன் வருவார்கள். தாருங்கள் என்று கேட்பார்கள். அதை ஒருவழியாக சமாளித்தால், அதற்கும் அடுத்து, அதைவிட அவசிய அல்லது சிக்கலான தேவையுடன் வந்து நிற்பார்கள். கேட்பார்கள்.

வயதான பெற்றவர்களிடம் பணம் இருந்தால், கேட்பார்கள், கேட்பார்கள், எதற்காவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

‘இந்த வயதில் இவர்களுக்கு ஏன் இவ்வளவு பணம்?’ என்பார்கள். அடுத்து, ‘வயதான காலத்தில் ஏன் இவ்வளவு பணத்தாசை?’ என்று கேட்பார்கள். ‘கஷ்டம் என்கிறேனே! கொடுத்தால் என்னவாம்? என்று புலம்புவார்கள். ‘சும்மா வேண்டாம். கடனாகத் தாருங்கள்’ என்று மடக்கப் பார்ப்பார்கள். அப்போதும் கிடைக்காவிட்டால், ‘கஷ்டமென்றாலும் பார்த்துக்கெண்டிருக்கும் கல் நெஞ்சக்காரர்கள்’ என்று காதுபட வையக் கூட வைவார்கள்.’’

“மொத்தத்தில்?’’

“படுத்துவார்கள். வயதான காலத்தில் பெற்றவர்களிடம் இருக்கும் பணம் பிள்ளைகள் கண்ணை உறுத்தும். பெரியவர்களுக்கு, அது உதவி என்பதைவிட தொந்தரவு என்பதே சரி.’’

“அதற்காக பணமே இல்லாமல் இருக்க முடியுமா?’’

“அடடா! அப்படி நிகழ்ந்துவிடவே கூடாது. பணம் மொத்தமாக இருக்கக்கூடாது. அவ்வளவுதான். மற்றபடி கையில் எப்போதும் தேவையான அளவு வைத்திருந்தே ஆகவேண்டும்.’’

“’கடிக்கவும் வேணும். பல்லும் படக் கூடாது’ என்பது போல அல்லவா இருக்கு!’’

“ஆமா. இல்லையா பின்னே! ஆனா அதுவும் சாத்தியம் தான்!’’

“அவ்வப்போது வருவது போல ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.’’

“பணத்தினைத்தானே சொல்லுகிறீர்கள்! அதுதான் எப்படி?’’

“பென்ஷன் வருகிறாற்போல ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்‘‘

“ஓய்வூதியம் எல்லாம் அரசாங்க வேலையில் இருக்கிறவர்களுக்குத் தானே கொடுப்பார்கள்! எனக்கு எப்படி கிடைக்கும்?’’

“மத்திய, மாநில அரசு வேலையில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லை. எந்த வேலையில் இருப்பவருக்கும் ஓய்வூதியம் உண்டு. நாம் முன்பு பார்த்த சேமநல நிதி மற்றும் உபரிகள் சட்டம் 1952 (EPF & Misc Provisions Act)லும் பென்ஷனுக்கு வழி செய்யப்பட்டிருக் கிறது.

ஊழியர் செலுத்தும் சேம நல நிதியில் ஒருபகுதி பென்ஷனுக்காகத்தான் போகிறது. பணியில் இருக்கும் போது அவருக்கு ஏதும் ஆகிவிட்டால், அவர் மனைவிக்கும், மேஜர் ஆகாத, வேலைக்குப் போகாத மகனுக்கும், திருமணம் ஆகாத மகளுக்கும் பென்ஷன் வழங்கப்படுகிறது’’

“அது எவ்வளவு வந்துவிடப் போகிறது? சொற்ப காசு!.’’

“அட! அது போதாதா? சரி. அதனால் என்ன? அந்தத் திட்டம் தவிர எத்தனையோ நிறுவனங்கள் நடத்துகிற ஓய்வூதியத் திட்டங்களில் கலந்துகொண்டு சேமிக்கலாமே!’’

“அதற்கும் சேமிக்க வேண்டுமா?”

“ ‘சட்டியில் இருந்தால் தானே கரண்டியில் வரும்’! நாம் தான் போட வேண்டும். பின்னால் எடுத்துக்கொள்ளுவதற்காக.’’

“நாமே போடுவானேன்? பிறகு எடுத்துக்கொள்ளுவானேன்?’’

“போடுகிற காலம் தான் நிச்சயமாக தெரிகிற காலம். திரும்ப எவ்வளவு காலத்துக்கு பென்ஷன் கொடுக்க வேண்டிவரும் என்பது கொடுப்பவர், வாங்குபவர் இருவருக்குமே தெரியாது.

ஓய்வூதியம் என்பது ஆயுள் இருக்கிற வரை நிச்சயமாக தொடர்ந்து ஒரே அளவில் கிடைக்கக் கூடிய தொகை. கௌவரவமாக, எவர் கையையும் எதிர்பார்க்காமல், தன் சொந்த சம்பாத்தியத்தில் இருந்து எடுத்துக்கொள்ளும் பணம்.

ஓய்வூதியப் பணத்தினை ஆயுள் முழுக்கப் பெறுவதால், மரியாதையும், பாதுகாப்பு உணர்வும் தொடர்ந்து கிடைக்கும்.

முன்பெல்லாம் ஆண்களின் சராசரி வயது இந்தியாவில் 58 தான். பெண்களுக்கு 63. அதுவே இப்போது பெருகிவிட்ட மருத்துவ வசதிகள் காரணமாக, ஆண்களுக்கு 69 ஆகவும் பெண்களுக்கு 74 ஆகவும் இருக்கிறது. (ஆமாம், பெண்களுக்கு ஆண்களைவிட 5 வருடங்கள் ஆயுள் (தண்டணை!) அதிகமாகவே இருந்து வருகிறது)

வயதாகி வாழ்வது வரமாக இருக்க வேண்டுமே தவிர சாபமாக ஆகிவிடக் கூடாது. அதற்கு..’’

“நன்றாகவே புரிகிறது. ஓய்வூதியத் திட்டத்தில் சேமிக்க வேண்டும். அதானே! அது சரி. ஆனால், எதில்? எவ்வளவு? எப்போதில் இருந்து?’’

பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் – 29

நன்றி : குமுதம்

இடைவேளைக்கு முன்,இடைவேளைக்குப் பின் என்று திரைப்படங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து விமர்சனம் செய்வார்கள் இல்லையா? ” `ஃபர்ஸ்ட் ஆஃப்’ பிரமாதம். `செகண்ட் ஆஃப்’ சொதப்பிவிட்டார்கள்” என்பது போலச் சொல்லுவார்கள்.

வாழ்க்கையைக் கூட அப்படி, ஒரு 16 ரீல் திரைப்படத்துடன் ஒப்பிடலாம். சிலருடைய படங்கள் தொடக்கத்திலேயே அற்புதமாக இருக்கும். இன்னும் சிலருக்கு இளம்பிராயம் மட்டுமல்ல, படம் முழுக்கவே தொடர்ந்து, `ஓஹோ’ தான்.

வேறு சிலரின் வாழ்க்கைத் திரைப்படங்கள், முதல் பாதி நன்றாக இருக்கும். ஆனால் இடைவேளைக்குப் பின் சுமாராகிவிடும். வாழ்க்கையில் இடைவேளை ஏது என்கிற சந்தேகம் வருகிறதோ!

ஓடியாடி உழைக்கக்கூடிய வயது இருக்கிற காலம்தான் முன்பாதி. பணி ஓய்வு பெற்றதும் வாழ்கிற வாழ்க்கை, வாழ்க்கைப் படத்தின், `செகண்ட் ஆஃப்’. படம் முழுக்க நன்றாக அமைந்துவிட்டால் நல்லதுதான்.

வேலை அல்லது தொழில்; சம்பாத்தியம்; அதனால் பெருக்கிக்கொள்ளும் வசதிகள் என்று உயர்ந்துகொண்டே போகிற போக்கு, சிலருடைய வாழ்க்கையில், அவர்கள் வேலையில் இருந்து `ரிட்டயர்மெண்ட்’ ஆன பிறகு பெரிதும் மாறிவிடுகிறது.

மாத வருமானம் நின்று போகிறது. அவர்கள் வாங்கிப் போட்ட வீடுகள், சில சொத்துகள் இருக்கும்தான். ஆனால் நிரந்தரமான வருமானம் இல்லாமல் போக, வாழ்க்கைத் தரத்தினை குறைத்துக்கொள்ள வேண்டி வருகிறது. சிரமமாகிறது.

எதற்காக இரண்டுவிதமான வாழ்க்கை? ஏன் முன்பாதி போலவே பின் பாதியிலும் வாழ்க்கை நிம்மதியாக, சௌகர்யமாகப் போகக்கூடாது? யார் தடுக்கிறார்கள்?

அவர்களேதான். தடுக்கவில்லையே தவிர, ஏற்பாடு செய்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்.

சேமிப்பு என்பது இடம், நிலம், தங்கம், ஷேர்கள், பரஸ்பர நிதிகள் மட்டுமல்ல. அவை சொத்துக்கள். தேவை வருமானம். வாழ்க்கையின் முன்பகுதியில் கிடைத்ததுபோலவே, தொடர்ந்து வரக்கூடிய வருமானம். அதாவது பணி ஓய்வே பெறாததுபோல, தொடர்ந்து ஊதியம் வருவது போல, வாழும் காலம் வரை, கிடைக்கக்கூடிய வரவு.

சேமிக்கிற போதே, முன்பார்த்த மருத்துவச் செலவுகளுக்கான காப்பீட்டிலும் (ஹாஸ்பிடலைஷேஸன் இன்சூரன்ஸ்) ஓய்வூதிய திட்டங்களிலும் (பென்ஷன் ஸ்கீம்ஸ்) பணம் போட வேண்டும்.

சேமித்தல் நல்லது. சேமிப்பு அவசியம். ஆனால் எல்லாம் சொத்து சேர்க்கிற சேமிப்பாக இருக்க வேண்டாம். ஓய்வூதியத் திட்டத்திலும் சேமிக்க வேண்டும். “எனக்கென்ன அவ்வளவு வயதா ஆகிவிட்டது?” என்று கேட்காமல், ஓய்வு பெறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அதனைத் தொடங்க வேண்டும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். பயணச் சீட்டு முன்பதிவு செய்யவில்லை. ஓடுகிறோம். ரயில் புறப்பட இன்னும் 5 நிமிடங்கள் தான். அப்பாடா, ரயில் நிலையத்திற்குள் வந்தாயிற்று. பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு, வண்டி ஏற வேண்டியதுதான். ஆனால், அங்கே மிக நீளமான வரிசை. வரிசையில் நின்று நம் முறை வந்து வாங்கிப் போவதற்குள் வண்டி நிச்சயம் கிளம்பிவிடும். தவறவிட வேண்டியதுதான்.

அதேசமயம், சிலர் வண்டிக்குள் ஏறி அமர்ந்து, நிதானமாக காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். “ரயில் ஏன் இன்னும் கிளம்பவில்லை? நேரம் என்ன ஆச்சு?” என்று கைக்கடிகாரத்தினைத் திருப்பிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏன் இந்த வேறுபாடு. முன்கூட்டியே வந்தவர் பயணச் சீட்டு வாங்கிப் போய் அமர்ந்துகொள்ள, தாமதமாக வந்தவர் தவிக்கிறார். சில தாமதங்கள் அப்படித்தான் செய்யும்.

ஓய்வு பெற வருடங்கள் பல இருக்கலாம். இது பெரியவர்களுக்கான யோசனை அல்ல. அவர்கள் ஓய்வு பெற்றாகிவிட்டது. இது இளைஞர்களுக்கானது. வண்டி கிளம்பும் நேரம் பதறியபடி ஓடிவர வேண்டாம். இப்போதே ஓய்வுக் காலத்துக்காக திட்டமிடலாம். முக்கியமாக சேமிக்கலாம்.

அதற்கான திட்டங்கள் இருக்கின்றன. அரசின் லிமிசி யும் வைத்திருக்கிறது. பல தனியார் நிறுவனங்களும் பென்ஷன் திட்டங்கள் நடத்துகின்றன.

ஓய்வூதியம் பெறுவது

பென்ஷன் தொகையினை வாங்குவதற்கு, குறைந்தபட்சம் 40 வயது ஆகியிருக்க வேண்டும். தவிர, தொடர்ந்து (மாதா மாதமோ காலாண்டுக்கு ஒருமுறையோ) பென்ஷன் வாங்குவதற்கு, திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டத் தொடங்கி, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். இரண்டு நிபந்தனைகளும் உண்டு.

அநியூட்டி (Annuity) என்பார்கள். வழங்கும் பென்ஷன் தொகையினைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்கள். பென்ஷன் பெற வேண்டிய ஆண்டுவரை, பாலிசிதாரருக்கு ஆயுள் காப்பீடும் உண்டு.

சில நிறுவனங்களின் சில வகை திட்டங்கள் தவிர மற்றவற்றில், பென்ஷன் திட்டத்தில் சேருவதற்கு முன்பாக மருத்துவப் பரிசோதனை செய்வது கிடையாது.

பென்ஷன் திட்டங்களில், யூனிட் லிங்க்ட் பென்ஷன் பாலிசிகளும் உண்டு. பிற யூலிப்புகளைப் போலவே, பென்ஷன் திட்டத்திலும், ஒரு யூலிப் திட்டத்தில் இருந்து மற்றொன்றுக்கு மாறலாம். ஒரு சில முறைகள் (4) அப்படி மாறுவதற்கு கட்டணம் கிடையாது. பிறகு அரை சதவிகிதம் வரை வசூலிப்பார்கள்.

பென்ஷன் திட்டங்களுக்கும் நாமினி அவசியம் தேவை. இறப்புக்குப் பின் யாரிடம் கொடுப்பது என்பதை முன்கூட்டியே எழுதித் தரவேண்டும்.

பென்ஷன் திட்டங்களில் வயது முக்கியம். அங்கீகரிக்கப்பட்ட வயதுச் சான்றிதழ்கள் இல்லாவிட்டால், நோட்டரி முன்னால் ஸ்டாம்ப் பேப்பரில், செல்ஃப் டிக்ளரேஷன் செய்து அதனைக் கொடுக்கலாம்.

மாதா மாதமோ காலாண்டுக்கு ஒரு முறையோ அரையாண்டுக்கு ஒருமுறையோ, விருப்பம் தெரிவிப்பது போல பென்ஷன் வழங்கப்படும்.

பென்ஷன் தொகையும் வருமானமே. அதனால் அதற்கு வருமான வரி உண்டு. (வரி கட்ட வேண்டிய அளவு பென்ஷனோ அல்லது மற்ற வருமானங்களோ இருந்தால்).

பென்ஷன் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை மொத்தமாக, பென்ஷன் தொடங்கும் நேரத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். மீதத்தினை மாதாமாதம் பென்ஷனாகப் பெறலாம். இதனை கமூட்டேஷன் என்பார்கள்.

பென்ஷன் எனப்படும், `அநியூட்டி’ பலவகைகளில் வழங்கப்படுகின்றன. அவரவர் விருப்பம், தேவைக்கு ஏற்ப ஏதாவது ஒருவிதத்தினைத் தேர்வு செய்து தெரிவித்து அதன்படி, பெற்றுக்கொள்ளலாம்.

வாழும் காலம் எத்தனை வருடங்கள் ஆனாலும் , ஆயுள் முழுக்க பாலிசிதாரருக்கு அநியூட்டி.

பாலிசிதாரரால் தேர்வு செய்யப்படும் குறிப்பிட்ட (ஐந்தோ, பத்தோ, பதினைந்தோ, இருபதோ) வருடங்களுக்கு அநியூட்டி வழங்குதல். பாலிசிதாரர் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.

வாழும் காலம் வரை அநியூட்டி. அதன் பிறகு, அவருடைய நியமனதாரருக்கு, பாலிசி தொகை.

வாழும் வரை அநியூட்டி. ஆனால் ஒரே அளவு தொகை அல்ல. ஆண்டுக்கு ஆண்டு 3 % அதிகரிக்கும் தொகை.

பாலிசிதாரர் வாழும் வரை அநியூட்டி. அதன் பிறகு அவருடைய கணவன் அல்லது மனைவிக்கு, அவருக்கு வழங்கப்பட்ட அநியூட்டி தொகையில் பாதி. அவர் வாழும் வரை.

வாழ்க்கை, மூன்று மணி நேரத்தில் முடியும் 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டி அல்ல. நீளமானது. 100 ஓவர் அல்ல, 100 ஆண்டுகள் போட்டி. பென்ஷன் போன்றவை பாதுகாப்பு உபகரணங்கள். இதில் லாப நட்ட, வட்டி கணக்குகள் பார்க்க வேண்டாம்..

பணமே ஓடி வா : சோம. வள்ளியப்பன் பாகம் – 30

நன்றி : குமுதம்

ஓய்வூதியம் பற்றி பார்த்தோம். வியாபாரம், தொழில் அல்லது வேலை போன்றவற்றில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் வருமானம் வருகிறாற்போல ஏதேனும் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்றும் அப்படிப்பட்ட ஏற்பாடுகளில் முக்கியமான ஒன்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நடத்தும் ஓய்வூதியத் திட்டங்கள் என்றும் பார்த்தோம்.

“அய்யா, நான் இப்போது தான் இதைப் பற்றி தெரிந்துகொண்டேன். அல்லது இப்போதுதான் யோசிக்கிறேன். சின்னவயதில் ஓய்வூதியத் திற்காக சேமிக்கவில்லை. நடுத்தர வயதிலும் விட்டுவிட்டேன். என்ன செய்யலாம்?”

“என்ன செய்யலாம் என்றால்?”

“எனக்கும் ஓய்வு பெற்ற பிறகும் வருமானம் வேண்டும். தொடர்ச்சியாக வர வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்கிறேன்.”

“சொத்து ஏதாவது இருக்கிறதா?”

“ஒரு வீடு இருக்கிறது.”

“வீடு இருந்தால் வழியும் இருக்கிறது.”

“விற்றுவிடலாம் என்கிறீர்களா?”

“விற்காமலேயே வருமானம் பார்க்கலாம்.”

“குடியிருக்கிற வீட்டை வாடகைக்கு விடச் சொல்லுகிறீர்களா?”

“அவசரப்படுகிறீர் களே! வாடகைக்கு எல்லாம் விட வேண்டாம்.”

“வாடகைக்கும் விடவேண்டாம். ஆனால் வருமானமும் வருமாக்கும்!”

“ஆமாம்.”

“இதென்ன அதிசயமாக அல்லவா இருக்கு!”

“இதன் பெயர் ரிவர்ஸ் மார்ட்கேஜ்”

“மார்ட்கேஜ் என்றால், அடமானம் வைப்பது இல்லையா?”

“அதேதான். கடன் வாங்கி வீடு வாங்குவது என்பது நடைமுறையில் இருப்பதுதான். அதற்கு நேர் எதிர் முறை இது.”

“கொஞ்சம் புரிகிற மாதிரி..”

“சொன்னால் போயிற்று. பத்து லட்ச ரூபாய்க்கு வீடோ பிளாட்டோ வாங்கப் பார்க்கிறார் ஒருவர். அவர் கையில் இருப்பது மூன்று லட்சம். மீதப்பணத்தினை ஏதோ ஒரு நிறுவனத்திடமிருந்தோ வங்கியிடமிருந்தோ கடனாகப் பெறுகிறார். வாங்கிய கடனுக்கு அவர் வாங்கும் வீடு அடமானம். கடனைத் திருப்பிக் கட்ட வேண்டியது 15 வருடங்களில். அதாவது மொத்தம் 180 மாதங்கள். அசலும் வட்டியுமாகச் சேர்த்து, கிட்டத்தட்ட மாதம் 9000 ரூபாய் 180 மாதங்களுக்கு கட்ட வேண்டுமல்லவா?”

“ஆமாம். அதன் பெயர் ஈ.எம்.ஐ. (EMI)தானே!”

“அதேதான். தொடர்ச்சியாக கட்டி வர, கடன் முடிந்தே போகும். பின் வீட்டுக்கு அவரே முழு சொந்தக்காரர். அதன் மீது கடன் இல்லை. இதே விஷயத்தினை அப்படியே நேர் எதிர்மாறாக யோசித்துப் பாருங்கள்.”

“எப்படி?”

“அதே நபர் என்றே வைத்துக்கொள்ளுவோம்.”

“சரி”

“அவருக்கு இப்போது வயது 60.”

“வயது என்னவாகவும் இருக்கட்டுமே!”

“கிடையாது. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச வயது 60 தான். அது முக்கியம்.”

“ஓஹோ!”

“சரி. அவருக்கு வயது அறுபது. அவரது மனைவிக்கு வயது 58.”

“இதுமட்டும் சரியாக்கும்!”

“இது சரிதான். கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு 60 வயதானால் சரிதான்.”

“சரி,சரி.”

“அவர்களுடைய வீட்டின் மீது கடன் இல்லை. அதையெல்லாம் எப்போதோ கட்டி முடித்துவிட்டார். வீட்டுப் பத்திரம் அவர் கையில். வில்லங்கம் ஏதுமில்லை. வீட்டில் அவர் தான் குடியிருக்கிறார்.”

“அவர் வீட்டுக்கடன் கொடுக்கும் நிறுவனங்களையோ பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன், PNB போன்ற வங்கிகளையோ அணுகி, அந்த வீட்டின் மீது , தொடர் வருமானம் தரவல்ல, ரிவர்ஸ் மார்ட்கேஜ் கேட்கலாம்.”

“ரிவர்ஸ் மார்ட்கேஜ்!”

“வீட்டை அந்த நிறுவனத்திடம் அடமானம் வைப்பது. அதன் மதிப்பில் 40 முதல் 60 % வரையிலான பணத்தினை கணக்கிடுவார்கள். பின்பு 10 முதல் 15 வருடங்கள் வரை ( 120 முதல் 180 மாதங்கள்) மாதம் இவ்வளவு என்று முடிவு செய்து ஒரு தொகையினை, வீட்டுக்காரருக்கு கொடுப்பார்கள்.”

“நிறுவனம் பணம் கொடுக்குமா?”

“ஆமாம். கடன் வாங்கி னால் வாங்கியவர் இ.எம்.ஐ. (EMI) கட்டுவதுபோல, இப்போது நிறுவனம்இ.எம்.ஐ. யாக தொடர்ந்து பணம் கொடுக்கும்.”

“அதிக பட்சம் 15 வருடங்கள் தானா?”

“ஆமாம்”

“அதன் பிறகு? ”

“இல்லை.”

“வீடு என்ன ஆகும்?”

“வீடு, உரிமையாளர் பெயரில் தான் இருக்கும். ஒருக்கால் அவருக்கு இடையில் ஏதும் நிகழ்ந்தால், நிறுவனம், வீட்டினை அவருடைய வாரிசுகளிடம் ஒப்படைக்கும். அதற்கு முன் அவர்கள், அந்தக் கணக்கினை முடிக்க வேண்டும். அதாவது ஏற்கெனவே மாதாமாதம் கொடுத்த பணத்தினை வட்டியுடன் திருப்பிக் கட்ட வேண்டும். சொத்தை கொடுத்துவிடுவார்கள்.”

“இல்லாவிட்டால்?”

“வீட்டை அவர்களே விற்று, பணத்தினை எடுத்துக்கொண்டு மீதப்பணத்தினை வாரிசுகளிடம் கொடுத்துவிடுவார்கள்”
“அவருக்குப் பிறகு அவர் மனைவி இருப்பாரே! அவர்கள் என்ன செய்வது?”

“அவர்கள் அதே வீட்டில் இருக்கலாம். அதை காலி செய்ய வேண்டியதில்லை. ஆனால் மாதாமாதம் கொடுக்கும் பணத்தினை ஒப்புக்கொண்ட காலத்திற்குப் பிறகு நிறுத்திவிடுவார்கள்.”

“எதற்குத்தான் இந்தத் திட்டம்?”

“வீடு இருக்கிறது. விற்க மனசில்லை. அல்லது விலை உயரக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஏன் அனாவசியமாக விற்க வேண்டும்? அதேசமயம், மாத வருமானம் இன்னும் கொஞ்சம் அதிகமிருந்தால் தாராளமாக செலவு செய்யலாம் என்கிற நிலையில் இருப்பவர்கள், இதற்குப் போகலாம்.”

“இப்படியெல்லாம் கூட யோசிக்க ஆரம்பித்துவிட்டார்களா?”

“இதெல்லாம் யு.எஸ்.சில் தான் அதிகம். அங்கேயெல்லாம் அவரவர் சம்பாத்தியம் அவரவர்க்கு. தாயும் பிள்ளையும் தான் என்றாலும் வாயும் வயிறும் தனித் தனிதான் என்பது போல. மகனோ மகளோ அவர்களே சம்பாதித்துக் கொள்வார்கள். அதனால் பெற்றவர்கள் அவர்கள் சம்பாதித்ததை குற்ற உணர்வு இல்லாமல், அவர்கள் சௌகர்யத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.”

“அங்கே வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இங்கே அப்படிச் செய்ய பெற்றவர்களுக்கு மனசு வருமா?”

“எப்படிச் செய்ய?”

“வீட்டையும் கட்டிவிட்டு, அதன் மீது கடன் வாங்கிச் சாப்பிடுவது. அல்லது வீட்டின் மீது கடன் வைத்துவிட்டுப் போவது..”

“சிரமம்தான். எல்லாம் மனசைப் பொறுத்தது. கூடவே வாழ்க்கைத் தேவைகளையும் பொறுத்தது. இப்படி ஒரு வழி இருக்கிறது. சமீபத்தில்தான் வந்திருக்கிறது. இதற்கு நேஷனல் ஹவுசிங் வங்கி ஒப்புதலும் இருக்கிறது. ஆனாலும் இன்னும் நீங்கள் சொன்ன காரணங்களினாலும் மாதாமாதம் வரும் பணத்தினை வருமானமாக கணக்கிட்டு வரிகட்டச் சொல்லுவார்களோ என்கிற யோசனையினாலும், இங்கே பிரபலமாகவில்லை.”

“ஆகுமா?”

“இங்கேயும் பெற்றவர்களை விட வசதியாக இருக்கிற பிள்ளைகள் உருவாகி வருகிறார்களே! தவிர பெற்றவர்களின் ஆயுளும் தேவைகளும் அதிகரிக்கின்றன. குறிப்பாக மருத்துவத் தேவைகள்.”

“சரி. அது அவரவர் விருப்பம். சுமாராக எவ்வளவு கிடைக்கும்? எதற்கும் அதையும் சொல்லிவிடுங்கள்.”

“எவ்வளவு கிடைக்கும் என்பது மூன்று விஷயங்களைப் பொறுத்து மாறும். (1) சொத்தின் மதிப்பு. (2) ரிவர்ஸ் மார்ட்கேஜ் பெறுபவரின் வயது.(3) விண்ணப்பிக்கிற நேரம் நிலவும் வட்டி விகிதம். இதில் இன்னொரு விஷயம். வயது அதிகமாக இருப்பவர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும். வயது குறைவு என்றால் (எப்படியும் 60க்கு குறைவானால் கிடையாது) தொகையும் குறையும்.”

“ஒரு உதாரணம்..?”

“20 லட்ச ரூபாய் வீடு ஒன்றினை 65 வயதாகும் ஒருவர் ரிவர்ஸ் மார்ட்கேஜ் செய்தால், அவருக்கு 10 வருடங்களுக்கு மாதம் 4100 வீதம் கொடுக்கப்படும். இது கொடுக்கப்படும் அளவுதான். சொத்து விலை ஏறினால் அது அவருக்கோ அவரது குடும்பத்துக்கோ தான். ஆனால் மாதாமாதம் தரத்தக்க தொகை இதுதான். அந்த 10 வருட முடிவில் அவரோ அவரது குடும்பமோ சுமார் 10 லட்ச ரூபாய் கட்டினால் (அசல் மற்றும் வட்டிக்கு) , அந்த வீட்டு அடமானம் திரும்பிவிடும்”

“வீட்டை அடமானம் வைப்பதுதான். ஆனால் ஒரே தவணையாக வாங்கிக்கொள்ளாமல் மாதாமாதம் வாங்கிக்கொள்வது..”

“அதேதான். முன்பு பார்த்த ஓய்வுக்கால பென்ஷன் போலவேதான். அப்படியில்லாமல் 3 மாதங்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரே தவணையாகவும் தருவார்கள்.”

இன்றைக்கு என்னால் சம்பாதிக்க முடியவில்லை என்று சொல்பவர்கள் குறைவு. வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. எல்லா குடும்பங்களிலும் படிக்கிறார்கள். கிராமங்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாகியிருக்கிறது. எல்லாம் நல்லதுக்குத்தான். படிப்பு மற்றவற்றுடன் நிச்சயமாக சம்பாதிக்கும் திறனை உயர்த்தும். ஏழைவீட்டுப் பிள்ளைகள் பலர் இன்று பொறியியல் போன்ற புரபஷனல் படிப்புகளைப் படிக்கிறார்கள். நல்ல வேலைகள் கிடைக்கப்பெற்று முன்னேறுகிறார்கள்.

“விற்பனையில்லை”. “மக்கள் வாங்கத் தயங்குகிறார்கள்” என்கிற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் முன்னெப்போதையும் விட தாராளமாக செலவழிக்கிறார்கள். சுய தொழில், வியாபாரம் எல்லாம் சிறப்பாகச் செய்ய முடியும் நேரமிது. பலரும் செய்கிறார்கள்.

தற்சமயம் சம்பாதிப்பது ஒன்றும் சிரமமில்லை. வேகமாக வளருகிற நம் தேசத்தில், வேலை, தொழில் மற்றும் வியாபார வாய்ப்புகள் நிச்சயம் பெருகியிருக்கின்றன. சம்பாதிப்பது முழுவதையும் செலவழிக்காமல் பணத்தினைச் சரியாகப் பெருக்கியவர்கள் நிலைகள் உயர்ந்துகொண்டே போவதைப் பார்க்கிறோம்.

பணத்தினை பெருக்க சரியான வழி, தேர்ந்த முதலீடுகள் தான். இளமையிலேயே தொடங்கும் சரியான முதலீடுகள் பெரிய பலன் தருகின்றன.

சேர்த்த பணத்தினை எதிர்பாராத மருத்துவ மற்றும் பிற செலவுகளுக்கு தாரை தூக்கிக் கொடுத்துவிடாமல் காப்பீடு போன்றவை காப்பாற்றும்.

இடம் தங்கம், பங்குகள் எஸ்.ஐ.பி., யூலிப், பரஸ்பர நிதிகள், பென்ஷன் திட்டங்கள் என்று பல்வேறு முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி விரிவாகவே பார்த்தோம்.

வயது, குடும்பத் தேவைகள். ரிஸ்க் எடுக்கும் மனவலிமை பொறுத்து முதலீடு செய்யுங்கள். லட்சங்கள் என்ன! கோடிகள் உங்கள் வசமாகும் காலம் நெருங்கிவிட்டது. வாழ்த்துக்கள்!.

(முற்றும்)

நன்றி : குமுதம்

Advertisements

2 Responses

 1. visit the site
  bullmarketindia.wordpress.com

 2. thanks a lot…..
  its very useful….
  pls continue to share…..

  regards
  Raghu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: