பணமேஓடிவா

பணமே ஓடி வா-சோம.வள்ளியப்பன்1-9

அப்பா, அம்மா, இரண்டு மகன்கள். விடுமுறை நாட்களில் அவர்கள் நால்வருமாக வெளியே போவார்கள். பெரும்பாலும் அவர் கடற்கரைக்குத்தான் அவர்களைக் கூட்டிப்போவார். காரணம், அதற்குத்தானே டிக்கெட் கிடையாது.

மகன்களுக்கு வயது குறைவுதான். “எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும்’’ என்பான் ஒருவன். “எனக்கு ஐஸ்கிரீமும், சமூசாவும் வேண்டும். கூடவே லஸ்ஸியும் வேண்டும்’’ என்பான் இன்னொருவன்.

சிரித்த முகத்துடன் தலையசைப்பார் அப்பா. ஆனால் கூடவே கண்டிப்பாகச் சொல்லிவிடுவார், “எது வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். ஆனால், எதுவானாலும் தலைக்கு இரண்டு அயிட்டம் தான். அதற்கு மேல் கிடையாது. அடுத்த வாரம்தான்.’’

காரணம், மனிதர் அவ்வளவு சிக்கனமானவர்.

அதே குடும்பம். இன்னொரு ஞாயிற்றுக்கிழமை. மனைவியையும் மகன்களையும் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துப்போவார். அங்கே நடக்கும் ஹாக்கி போட்டிகளைப் பார்ப்பார்கள். (கிரிக்கெட்டுக்குத்தானே கூடுதல் கட்டணம் இருக்கும். அதனால்தான் ஹாக்கி!). வெளியில் வந்து, ஓட்டலில் சாப்பிடுவார்கள்தான். ஓட்டல்: உடுப்பி ஓட்டல். சாப்பிடும் அயிட்டங்கள், இட்லி, தோசை.

காரணம், அந்தக் குடும்பத் தலைவர் அவ்வளவு தான் செலவழிப்பார்.

‘ஆமாம், இதென்ன பெரிய அதிசயமான குடும்பம்? எங்கேயும் இல்லாததா? இவர்கள் அளவுக்குக் கூட செலவழிக்க முடியாதவர்கள் நாட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்! இவர்களைப் பற்றி, பணமே ஓடிவா என்கிற பணம் பற்றிய தொடரில் அதுவும் முதல் அத்தியாயத்தில் எழுத வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?’

கேட்கலாம்.

இவர்களைப் பற்றி எழுதாவிட்டால் வேறு யாரைப் பற்றி எழுதுவதாம்! (இந்நேரம் ஊகித்துவிட்டவர்களுக்கு சபாஷ்! அடுத்தவர்களிடம் சொல்லாமல் அமைதியாகத் தொடர்ந்து படியுங்கள்)

இவர்களைப் பற்றி எழுது வதற்குக் காரணம் அவர்களின் இன்றைய நிலைதான். மேலே பார்த்தது, அந்தக் குடும்பம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை. இன்றைக்கு அந்தக் குடும்பத் தலைவர் இல்லை. மறைந்துவிட்டார்.

அவருடைய இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். முதல் மகன் இருக்கும் இடம், கொஞ்சம் உயரமானது. அவரைத் தவிர உலகில் மற்ற அனைவருமே அண்ணாந்து பார்க்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்.

சஸ்பென்ஸ் போதும். அப்பா பெயர்: திருபாய் அம்பானி. மூத்த மகன் : முகேஷ் அம்பானி. இளைய மகன் : அனில் அம்பானி.

ஆளுக்கு இரண்டு அயிட்டத்துக்கு மேல் சாப்பிட வேண்டாம். கட்டாது என்று நினைத்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானிதான் இன்றைக்கு, சிலரின் தூக்கத்தினை கெடுத்துக்கொண்டிருக்கிறார். ‘அடடா! என் இடம் பறிபோய்விட்டதே!’ என்று கவலைப்படவும் வைத்திருக்கிறார்.

அப்படி இவரால் தூக்கம் கெட்டிருக்கும் சிலரில் முக்கியமானவர்கள் மூன்று பேர். ஒருவர், கார்லஸ் சிலிம். இவர் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர். இரண்டாமவர், பில்கேட்ஸ் (ஆமாம், கம்ப்யூட்டர் சக்ரவர்த்தி பில்கேட்ஸே தான்) மூன்றாமவர், வாரன் பஃபட்.

இவர்களுடைய தூக்கம் கெடும் அளவுக்கு முகேஷ் அம்பானி அப்படி என்னதான் செய்தார்?

முகேஷ் அம்பானி, ‘நம்பர்ஒன்’ இடத்துக்கு வந்துவிட்டார்.

எதில் நம்பர் ஒன்?

உலகின் பணக்காரர்கள் பட்டியலில்.

அடேயப்பா! அப்படியென்றால் அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜப்பான் போன்ற வேறு எந்த முன்னேறிய நாட்டில் இருப்பவரை விடவும், நம் நாட்டு முகேஷ் அம்பானிதான் ‘நம்பர் ஒன்’ னா?

ஆமாம். 29.10.2007 நிலவரப்படி, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 2 லட்சத்து, 53 ஆயிரம் கோடி ரூபாய்கள். அவர்தான் ஃபர்ஸ்ட். (அள்ளிக்கொடுத்தது பங்குச் சந்தை) அதற்கு முன் அந்த இடங்களில் இருந்தவர்கள் தான், மேலே பார்த்த மூன்று பேரும். எத்தனை லட்சம் கோடிகள் சொத்து இருந்தாலும், முதல் இடம் என்பது தனிப்பெருமை அல்லவா! அது பறிபோனதுதான் அவர்களின் துக்கத்திற்கும் தூக்கம் தொலைந்ததற்கும் காரணம்.

சந்தேகம் தெளிந்திருக்குமே! பணம் என்கிற விஷயத்தில் ஒருவரால் எவ்வளவு உயரம் போக முடியும் என்பதற்கு, இதைவிட வேறு என்ன சாட்சி இருக்க முடியும்.

நடுத்தர வர்க்கம்.

பார்த்துப் பார்த்து செலவழிக்க வேண்டியிருக்கிறது.

போதவில்லை.

கடன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்துதான் அம்பானி ராக்கெட் போல கிளம்பியிருக்கிறார். மேலே போய், இன்னும் மேலே, மேலே என்று உயர்ந்து.. உலகின் மாபெரும் பணக்காரர்களே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு, உச்சத்திற்கே போக முடிந்திருக்கிறது அவர்களால்.

‘அட! இவர்களின், உலகின் நம்பர் ஒன் ஆன கதை பிரமிப்பூட்டுவதாக இருக்கிறதே! இதெல்லாம் கூட சாத்தியமா என்ன? அதுவும் இந்தியாவில் இருந்துகொண்டு! அப்படி என்னதான் செய்தார்கள் அவர்கள்? ஒருவரால், அவரது வாழ்நாளில் இவ்வளவு சம்பாதித்துவிட முடியுமா? அதுவும் அப்படிப்பட்ட ஒரு சாதாரண நிலையில் இருந்தவரால்!!’

வெளியில் தெரிபவர்கள் அம்பானி போன்ற சிலர்தான். ஆயிரம், லட்சம் கோடி என்று நம்மூரில் சொல்வதுபோல, அமெரிக்காவில் மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் என்பார்கள். இப்படிப்பட்ட பில்லியனர்கள் எண்ணிக்கை இப்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எத்தனையோ முன்னேறிய நாடுகளைவிட இந்தியாவில்தான் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகம்.

தற்சமயம் இந்தியாவில் 369 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இதுவே 2015_ம் ஆண்டு வாக்கில் 1500 என்கிற எண்ணிக்கையைத் தொடுமாம்! அவ்வளவு தேவை இருக்கும். இந்தியா இளைஞர்கள் அதிகம் இருக்கும் தேசம். 24 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் எண்ணிக்கை மட்டுமே 50 கோடி!

தற்போதைய நிலவரப்படி வருடந்தோறும் இந்தியாவில் ஐந்தரை லட்சம் பேர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். ஒன்றரை லட்சம் பேர் எம்.பி.ஏ., மூன்றரை லட்சம் பேர் வேறு பி.ஜி. படிப்புகள் முடிக்கிறார்கள். மற்ற தொழில் கல்விகள், ஏனைய டிகிரி படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் பல லட்சம்.

பொறியியற் கல்லூரிகள் என்றுதான் இல்லை. கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் படித்து முடித்ததும் வேலைகள் கிடைக்கின்றன. ஙிறிளி, மிசிறிளி, லிறிளி என்ற பலவிதமான புதிய வேலைவாய்ப்புகள்… ஊதியங்கள் பல ஆயிரங்கள் எடுத்த உடனேயே!

வேலைக்குப் போய் சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், பல்வேறு வியாபாரங்களும் செழிக்கின்றன. நம் நாட்டில் நாள் ஒன்றுக்கு விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கை மட்டும் 4006. இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதைப்போல 6 மடங்கு. (24,660). ஆக, இந்தியா நிச்சயமாக இப்போது வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ஒரு தேசம். பலவும் நிகழும் நாடு. எல்லாம் நல்லதற்குத்தான். வாழ்க.

பலரும் வளர்கிறார்கள். வேகமாக வளருகிறார்கள். நேற்றைய சாதாரணவர்கள் இன்றைய பணக்காரர்கள். நிறைய வாய்ப்புகள். எல்லாம் சரி.

கேள்வி இதுதான்… நாம் என்ன செய்யப் போகிறோம்?.

என்ன சௌக்கியமா?’’

“பிரச்னை ஏது மில்லையே!’’

இந்த நான்கு வார்த் தைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சௌக்கியம் என்கிற வார்த்தை, முன்னேற்றத்துக்கு எதிரி. சௌக்கியம் என்கிற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ‘கம் போர்ட்’ (Comfort) என்று சொல்லலாம். பிரச்னைகள் இல் லாமல் எல்லாம் எதிர் பார்ப்பது போலவே நடப்பது. சிரமமின்றி, அதிக அலைச்சல் உழைப்பின்றி, சுலபமாக செய்வது. மொத்தத்தில் சவால்கள் இல்லாமல் இருப்பது. இதுதான் சௌக்கியம்.

காலை நடை பயிற்சிக்காக போகும் இடங்களில் பார்த் திருக்கிறேன். உடல் இளைக்க வேண்டும் என்றோ அல்லது ஆரோக்கியம் கூட வேண்டும் என்றோ தான் நடக்க முடிவு செய்திருப்பார்கள். எப்படி நடப்பார்கள் தெரியுமா?

மெதுவாக. பேசிக் கொண்டு. அசைந்து அசைந்து. Brisk walking தேவைப்படும் இடத்தில் மெதுவாக நடப்பது. வேர்க்காத, உடம்பினை உறுத் தாத நடையினால் என்ன பயன்?

எடை தூக்கும் பயிற்சியில் சொல்வார்கள், No Pain No Gain என்று. வலிக்காமல் அடிப்பதுபோலத்தான் உடம்பை வருத்திக் கொள்ளாத அளவு எடை தூக்குதல் என்பதும்.

சௌகர்யங்களை விட்டுவிட வேண்டும்.

“காலையில் சீக்கிரம் எழுந்திருப்பதைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் சொல்லுங்க!’’

“சொந்த ஊரை விட்டு எப்படிப் போவது?’’

“சண்டே தொந்தரவு செய்யாதீங்க. விட்டுடுங்க’’

“எதுன்னாலும் சாயங்காலம் 5 மணி வரை ஓக்கே. அதுக்கு பிறகு மறுநாள் 10.00 மணிதான்.’’

“இதென்ன புதுசா வுல்ல இருக்கு!’’

“அவரோட எனக்குப் பழக்க மில்லையே! எப்படிப் போய்க் கேட்பது’’’

“பாஷை தெரி யாதே!’’

“இனி கத்துகிட்டு செய்யணுமா?’’

இந்த உலகத்தில் பாதுகாப்பான இடம் தேடிக் கண்டுபிடித்து, அங்கே போய் சுகமாய் சுருட்டிப் படுத்துக் கொள்ளுபவர்கள்,

பூனைகள்! ‘டாய்’ என்று சத்தம் போட்டால், தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்க்கும். அப்போது கூட சுறுசுறுப்பாக உடன் எழுந்துகொள்ளாது. வேறு வழியேயில்லை. நிச்சயம் எழுந்து கொள்ளத்தான் வேண்டும் என்றால் தான் அப்போதும், வேண்டா வெறுப்பாக எழுந்து, எரிச்சலுடன் முணுமுணுத்தபடி போகும்.

சோம்பல்.

சுகம்.

சௌகர்யம்.

பிரச்னைகள் இல்லாத, ரிஸ்க் எடுக்காத வாழ்க்கையைத் தேடிக் கண்டுபிடித்து, சுகமாய் சுருட்டிப் படுத்துக்கொள்ள நாம் என்ன பூனைகளா?

தூங்குகிறோம். காலை நேரம். எழவேண்டும் என்பது திட்டம். விழிப்பு வருகிறது. உடன் இன்னும் கொஞ்ச நேரமென்கிற கெஞ்சல் மனதுக்குள் இருந்து. என்ன செய்யலாம்?

போர்வையைத் தூக்கி எறிய வேண்டும். போர்வை போய் மேலே சுழலும் ஃபேனில் இடித்தாலும் சரி. உடன் துள்ளி எழ வேண்டும். விழிப்பு. உடன் முகம் கழுவி, சுகத்தினை கழற்றி எறியவேண்டும்.

தூக்கம் மட்டுமா சுகம்? நம்மில் சிலர் தற்சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைகளும் கூட சுகமான வேலைகள் தான். புதிய பொறுப்புகள், புதிய வேலைகள், சிரமமாக இருக்கலாம். எதையும் முன் செய்தது போலவே செய்வது சுலபமாக இருக்கும். ஆனால் எப்போதும் செய்வதையே செய்துவிட்டு, புதிய பலன்களை எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

இன்றைக்கு சம்பாத்தியம் இருக்கலாம். அது சிலருக்கு தேவைகளைவிட சற்று அதிகமாகக்கூட இருக்கலாம். ஆனால் அதே அளவில் பணம் ஈட்டினால் போதுமா?

வெந்துசாகும் தவளைகள்!

இன்றிருக்கும் நிலைகள் சுக மானதாக , சௌகர்யமானதாக, பிரச்சனை தராததாக இருக்கலாம். ஆனால் அவை நாளைக்கு போதாமல் செய்துவிடும். வேக மாக வளரும் உலகத்தில், இன்றைய ‘குட்’ நாளைக்கு போதாது.

ஒரு பாத்திரத்தில் சாதாரண சூட்டில் இருக்கும் தண்ணீர் எடுத்து, அதனுள் மெதுவாக ஒரு தவளையை இறக்கிவிடவேண்டும். தவளை தண்ணீருக்குள் படுத்து கொள்ளும். பின்பு மெதுவாக, அதிகம் அசைக்காமல் அந்த பாத்திரத்தினை எடுத்து, எரிகிற காஸ் அடுப்பின் மீது வைக்க வேண்டும். நெருப்பு அதிகம் இருக்கக் கூடாது. ஆரம்பத்தில் சின்ன ஜுவாலை போதும்.

தண்ணீர் மெல்ல சூடு ஏற ஆரம்பிக்கும். தண்ணீருக்குள் இருக்கும் தவளைக்கு இது தெரியுமா? தெரியும். தண்ணீர் வெது வெதுப்பாக ஆவதை தவளை உணரும். வெதுவெதுப்பான தண்ணீர் தவளைக்கு சுகம்தான். மெல்ல அசைந்து கொடுத்து சுகமாகப் படுத்துக்கொள்ளும். எழுவதற்கு சோம்பல்.

தொடர்ந்து எரியும் நெருப்பால், தண்ணீரின் சூடு அதிகரிக்கும் . அது வும் தவளைக்கு தெரியும். ஆனால் தவளையின் நினைப்பில், தண்ணீர் முன்பை விட கொஞ்சம் தான் அதிகம். முன்பு 30 டிகிரி சென்டிகிரேட் என்று வைத்துகொண்டால், இப்போது 35 தான்.

30 டிகிரி சூட்டுக்குப் பழகி விட்ட தவளையின் உடல் அதிகமாகியிருக்கும், 5 டிகிரியைச் சமாளிக்கும். இப்போது தவளை 35 டிகிரிக்கு பழகியாகிவிட்டது. நெருப்பு தொடர்ந்து எரிகிறது.

இப்போது சூட்டின் அளவை 40 டிகிரி ஆக்குவோம். தவளையைப் பொறுத்தவரை இன்னும் 5 டிகிரிதான் கூடுதல். அதற்கும் பழகிவிடும். இப்படியே நெருப்பின் அளவை கட்டுப்பாடுடன் மெல்ல மெல்ல அதிகரிக்க, தவளைக்கு மிக அதிகமாகிவிட்ட நெருப்பின் தீவிரம் உறைக்காது.

முன்னைக் காட்டிலும் கொஞ்சம் தானே கூடுதல் சூடு என்று தவளை தண்ணீரை விட்டு வெளியே வர முயற்சிக்காது. எழ சோம்பல்பட்டு, உள்ளேயே படுத்திருக்கும். அதனால் வேகும். வெந்து செத்தே கூடபோகும். ஆனாலும் அதற்கு வித்தியாசம் தெரியாது.

அதே போன்ற வேறு ஒரு தவளையை, ஏற்கெனவே அடுப்பின் மீது இருக்கும் கொதிக்கும் தண் ணீர் இருக்கும் பாத்திரத்தினுள் இறக்கி விட்டால் என்ன செய்யும்?

கொதிக்கும் தண்ணீர் உடம்பில் பட்டதுமே, துள்ளிக் குதித்து வெளியேறும்.

இரண்டு பாத்திரங்களிலும் இறுதியாக ஒரே அளவு சூடிருக்கும் தண்ணீர்தான். ஆனால் ஒன்றின் உள்ளே சமரசம் செய்துகொண்டு படுத்திருக்கும் தவளை. மற்றொன்றில் இருந்து துள்ளிக் குதித்து வெளியேறும் தவளை.

நம்மைச் சுற்றி நடைபெறும் மாற்றங்களும் சூடாகும் தண்ணீர் போலத்தான். அவை மெல்ல மெல்ல சூடேறும் முதல் பாத்திரம் போல இருந்தால், நமக்கு, அதிகரிக்கும் வித்தியாசம் பிரச்னை இல்லாதது போலத்தான் இருக்கும். ஆனால் சூடு ஏறிக்கொண்டுதான் இருக்கிறது.

மொத்தமாக வந்தால்தான் மாற்றம் என்பது இல்லை. நம்மைச் சுற்றியுள்ள இடங்களில் மாற்றங்கள் ஐந்து ஐந்து டிகிரியாக உயரும் உஷ்ணம் போல மெல்ல அதிகரித்துகொண்டேயிருக்கின்றன.

வெளியுலகம் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. எல் லோரும் சம்பாதிக்கிறார்கள். நிறையவே சம்பாதிக்கிறார்கள். நேற்றைய பணக்காரர்கள் இன்றைக்கு சாதாரணர்கள். டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் தினம் தினம் மாறுகிறது. டாடா பிர்லாக்கள் வெகு தூரத்தில். அம்பானிகளுக்கு அடுத்தபடி DLF ன் குஷால் பால் சிங் என்கிறார்கள், விப்ரோவின் அசிம் பிரேம்ஜி என்கிறார்கள்.

வெளியில் நடைபெறும் வளர்ச்சியைவிட, நம்முடைய வளர்ச்சி அதிகமிருந்தால் மட்டுமே நாம் முன்னேறுபவர்களாக இருக்க முடியும். இருக்கும் இடத்தில் இருப்பதற்கே வேகமாக ஓடவேண்டிய நிலை.

கேள்வி இதுதான்..

மாற்றங்களை உணர்ந்து நாம் ஓடத் தயாரா?.

கிரிக்கெட் டெஸ்ட் பந்தயங்கள் ஆரம்பத்தில், எட்டுநாள் போட்டிகளாக இருந்திருக்கின்றன! அதற்கும் முன், நம்புங்கள், ஆட்டம் முடிகிறவரை ஆடுவார்களாம்!! நேரக் கெடு (டைம் லிமிட்) கிடையாது. பின்பு, ஐந்து நாள் போட்டிகள். அதன்பின், ஒரு நாள் போட்டிகள். இப்போது, “இருபது இருபது ஓவர்கள் போதும். அதற்குள் முடித்து, முடிவு சொல்லிவிடுங்கள்” என்கிறார்கள்.

அதனால் வீசப்படுகிற எல்லாப் பந்துகளையுமே ஒன்றுவிடாமல் அடித்து விளாசுகிற வீரர்களுக்குத்தான் மதிப்பும், குழுவில் இடமும். இல்லாவிட்டால் இரண்டும் கிடையாது. அது டெண்டுல்கரே ஆனாலும். “அடித்தாடு. முடியாவிட்டால் வெளியேறு!’’ கத்துவார்கள். ரசிகர்கள்தான். அது டிராவிடே ஆனாலும். நிலமை அப்படி. என்ன செய்ய?

உணர்ந்திருக்கிறோமோ இல்லையோ, உலகம் வேகமாக மாறிவருகிறது. அவ்வளவு வாய்ப்புகள். எதைச் செய்வது? எதைவிடுவது? என்று திணரவேண்டியிருக்கிறது. எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் செய்துவிடவேண்டும் என்கிற பரபரப்பு எல்லோரிடமும் இருக்கிறது. அதனால் எல்லாவற்றையும் வேகமாகச் செய்யவேண்டும் என்கிற தேவை. அதனால் நேரப் பற்றாக்குறை. பேசுவதைக் கூட, ஷிவிஷி வாக்கியங்கள் போல பேச வேண்டியிருக்கிறது. கூடுதலாக இரண்டு வார்த்தை பேசினால், கேட்க மற்றவர்களுக்கு நேரமில்லை.

கொடைக்கானல் மலையில் இருந்து கீழே வரும் மலைப்பாதை. நடுவில் ஒரு சிறு அருவி. அதைச்சுற்றி கடைகள், கார் பார்க்கிங். கூட்டமாய் மக்கள்.

“போட்டோ எடுத்துக்கிறீங்களா சார்? ஒரு போட்டோ 50 ரூபாய்தான்.’’

“போட்டோவை, முகவரி வாங்கிக்கொண்டு, பிறகு அனுப்புவாயாக்கும்!’’

“இல்லை சார். உடனே, இப்பவே கொடுத்து விடுவேன்.’’

“அதெப்படி?’’

“இதோ, இங்கே பிரிண்ட் போட்டுடுவேன் சார்.’’

டிஜிட்டல் காமிராவில் எடுத்து , உடன் கேசட் டினை கழற்றி மாட்டி, அங்கேயே சூட்கேஸ் அளவில் இருக்கும் பிரிண்டிங் மிஷினில், பிரிண்ட் போட்டு… பணம் கொட்டிக்கொண்டிருக்கிறது. “அம்பது ரூபாயா? அதிகமாயிற்றே!” என்று கேட்டவர்கள் குறைவு. அருவிச் சத்தத்திற்கு இணையாக, ‘பளிச் பளிச்’சென்ற காமிராவின் ஃபிளாஷ் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. ஒருவரல்ல. அங்கே அப்படிப்பட்ட புகைப்படக்காரர்கள், நான்கைந்து பேர் தென்பட்டார்கள். எல்லோர் பாக்கெட்டிலும் பணம் வழிந்தது.

மக்களுக்கு எல்லாம் அவசரம். எல்லாம் வேகமாய் வேண்டும். ‘புதுமைகளா! வெல்கம்.’ “அழகாக இருக்கிறதே? விலை பற்றி என்ன? எனக்கு ஒன்று சீக்கிரம் கொடுங்கள்” இன்றைய வாடிக்கையாளர்கள் தாராளமாக செல வழிப்பவர்கள், அவர்கள் விரும்புபவை களுக்கு!

சாதாரணமாக 300 ரூபாய்க்குக் கூட ஒரு காபியை (காபி டேகளில்) வாங்கிக் குடிக்கிறார்கள். ஐநாக்ஸ் போன்ற திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலை 120 ரூபாய். அட்சய திருதிக்கு கடைகளில் நகை வாங்க, கட்டை கட்டி, உள்ளேவிட வேண்டியிருக்கிறது. காரணம் தள்ளு, முள்ளு. சனி, ஞாயிறுகளில் மட்டு மல்ல மற்ற நாட்களில் கூட, மாலை வேளைகளில் உணவகங்களில் சாப்பிட சீட் கிடைப்பதில்லை. காத்திருக்க வேண்டியிருக்கிறது.

மக்களிடம் பணம் இருக்கிறது. நேரம் (தான்) இல்லை.

இன்றைக்கு பணம் சம்பாதிப்பது என்பது முன் எப்போதையும் விடசுலபம். படித்தவர்களுக்கு வேலை கிடைக்கிறது. வியாபாரம் தொழில் சேவை செய்பவர்களுக்கு சிரமமில்லை. காரணம் மக்களிடம் பணப்புழக்கம் அதிகம். மக்கள் காணாததைக் கண்டது போல, பணத்தினை பெட்டிகளில் வைத்துப் பூட்டவில்லை. தாராளமாகவே செலவழிக்கிறார்கள்.

அதை நாம் பெறுவது எப்படி?

மக்களை சரியாகப் புரிந்து கொண்டு செய்கிறவர்களுக்கு பிரச்னையே இல்லை. எதையும் காசாக்கலாம்.

தேவை: புதுமையான சிந்தனை, நேர்த்தியாகச் செய்யும் திறமை, வேகம். அவ்வளவுதான். பெரியபடிப்பு கூட அவசியமில்லை. ‘பிரார்த்தனா போன்ற திறந்தவெளித் திரை அரங்குகளில் காரில் போய், இறங்காமலே திரைப்படம் பார்க்கலாம்’ என்பது பழைய ஐடியா. ‘வாங்க, படுத்துக்கொண்டே படம் பார்க்கலாம்’ என்பது, (சென்னை அபிராமி காம்ப் ளெக்ஸ் சின்) புது ஐடியா.

“உங்கள் காரை நிறுத்துவதற்கு நீங்கள் கட்டணம் கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக..”

“அதானே பார்த்தேன்..”

“பெரியதாக ஒன்றுமில்லை. இந்த சீட்டில் உங்கள் பெயர் முகவரி, செல்லிடைபேசி (மொபைல்) நம்பர் எழுதிவிடுங்கள். போதும்”

“அவ்வளவுதானே. கொடுங்கள்”

இரண்டு நாள் கழித்து செல்லிடை பேசியில் அழைப்பு. “உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது”

“பரிசா?”

“ஆம். நீங்கள் உங்கள் மனைவியுடன் வர வேண்டும்”

போனால், அங்கே, “இந்த விவரங் களைக் கேட்டுக் கொள்ளுங்கள். முடிந்ததும் பரிசுதான்’’ விவரங்களை கம்ப்யூட்டர் வைத்து ஒரு மணிநேரம் சொல்லுகிறார்கள். அவர்களுடைய விடுமுறைக்கால விடுதி பற்றியது. பரிசு 100 ரூபாய் பெறுமானமுள்ள வீட்டு பயன் பாட்டுப் பொருள் ஒன்று.

திரும்பிப் பார்த்தால், கணவன் மனைவியாக பல தம்பதியர் நிற் கிறார்கள். அத்தனை பேரையும் அதிக செலவில்லாமல், கிளம்பி வந்து தங்களின் விளம்பரத்தினைப் பார்க்க வைத்துவிட்ட, ஒரு யோசனை. சிறிய ஆனால் அற்புதமான யோசனை. சொல்லியவருக்கும் நடை முறைப்படுத்தியவருக்கும் லாபம் தந்துகொண்டே யிருக்கும் யோசனை.

கட்டடத்தில் இருக்கும் எல்லா பிளாட் தபால் பெட்டிகளிலும் ஒரு துண்டுப் பிரசுரம் கிடந்தது. எடுத்துப் பார்த்தால், ‘ஆஞ்சனேயா கால் டிரைவர்ஸ் 24 மணிநேர சேவை. போன் .. தொடர்புக்கு ராபர்ட் & ரத்தினம்’ பிரசுரத்தின் அடியில் ஆஞ்சனேயர் படம் வேறு! பர்வதமலையுடன்!

கால் டாக்சி தெரியும். பலரும் செய்கிறார்கள். அதை சொந்தமாக வாங்கி ஓட்ட வசதியில்லை. ஓட்டுனர் வேலையிலும் ஓரளவுதான் கிடைக் கும். என்ன செய்யலாம் என்று யோசித்ததன் விளைவுதான், ஆஞ்சனேயா கால் டிரைவர்ஸ். வீட்டில் கார் வைத்திருப்பவர்கள், தாங்களே ஓட்டினாலும், சில சமயங்களில் வெளி ஓட்டுனர்களைத் தேடலாமில்லையா? “நாங்கள் ரெடி. கூப்பிடுங்கள். வருகிறோம்” என்கிற யோசனை. செயல்படுத்திவிட்டார்கள்.

மக்களுக்கு எப்படியெல்லாம் தேவைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு விட்டவர்களுக்கு, சம்பாதிக்க என்ன வழி? என்கிற கேள்வியே கிடையாது. திரும்பிய பக்கமெல்லாம் வாய்ப்புகள்தான்.

தேவை: புத்திசாலித்தனமான, உழைப்பு. மாற்றம்..

சுப்ரமணியம் மற்றும் அண்ணாமலை என்ற இரண்டு நண்பர்களைப் பற்றிய உண்மைக் கதை இது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு நிறுவனத்தில் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். இருவருடைய ஊதியமும்கூட ஒரே அளவு தான்.

ஆனால் அவர்கள் செய்த செலவுகள்? சுப்ரமணியம் அதிகம் செலவழிக்க மாட்டார். பேருந்தில் தான் வருவார் போவார். வெளியில் சாப்பிடுவது கிடையாது. உடுத்துவதுகூட சாதாரண மாகத்தான் இருக்கும். அண்ணாமலையின் அணுகு முறை நேர் எதிர். விலையுயர்ந்த சட்டைகள்தான். அடிக்கடி ஓட்டல்களில் சாப்பிடுவார். எங்கே சென்றாலும் வண்டிதான். கடன் வாங்கி வாங்கிய செகண்ட் ஹேண்ட் புல்லட் மோட்டார் சைக்கிள்.

இப்படியே மூன்று நான்கு வருடங்கள் போயிருக்கும். ஊருக்கு வெளியில் வீட்டு மனைகள் விற்பனைக்கு வந்தன. சுப்ரமணியம் வாங்கினார். அண்ணாமலையிடம் பணம் இல்லை.

கடந்த சிலவருடங்களாக சிறுகச் சிறுக சுப்ரமணியம் சேமித்திருந்த காசு, ஒரு வீட்டுமனையாகிவிட்டது. அண்ணாமலை நிலையிலும் மாற்றம் இருக்கத்தான் இருந்தது. அந்த மாற்றம், அவருடைய கடன் சுமை இன்னும் கொஞ்சம் அதிகமாகியிருந்தது என்பதுதான்.

சுப்ரமணியம் வாங்கிய வீட்டு மனையின் விலை அதன் போக்கில் உயர்ந்துகொண்டே போக, ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த சுப்ரமணியம் இல்லை தான்’ என்கிற நினைப்பு அவருக்கு தெம்பாக இருந்தது. அதனால் சுப்ரமணியம் அடுத்த கட்டத்துக்கு சுலபமாகத் தாவினார். தைரியமாக வீட்டுக்கடன் வாங்கினார். ‘மடமட’வென்று வீட்டைக் கட்டிமுடித்தார். உடனே வாடகைக்கு விட்டார். வாடகையை வாங்கி, ஒழுங்காக கடனைக் கட்டினார்.

சேமிப்பவர்கள் அனைவரும் சுப்ரமணியம் போல வீட்டுமனைதான் வாங்குவார்களா என்ன? பாஸ்கர் வேலை செய்தது அதே நிறுவனத்தின் டிரான்ஸ்போர்ட் பகுதியில். நிறுவனம், பல கார்களை அதன் தேவைக்கு வாடகைக்கு எடுப்பதைப் பார்த்த பாஸ்கர், தனது சேமிப் புடன், வங்கி ஒன்றில் கடனும் பெற்று, ஒரு அம்பாசிடர் காரை வாங்கி, நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டார். வந்த வாடகையில் ஒரு பைசா தொடவில்லை. அப்படியே ‘டியூ’ விற்குக் கட்டினார்.

ஒரு காருக்குச் சொந்தக்காரர் ஆன பின்பும்கூட, அவர் தனது சொந்த செலவுகளை அதிகரித்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து சேமித்து, மேலும் இரண்டு கார்களை வாங்கி வாடகைக்கு விட்டார். அந்த நேரத்தில் பாஸ்கரைத் தவிர, அவருடைய கார்களும் பாஸ்கர் குடும்பத்துக்காக நன்றாக சம்பாதித்தன. ஆக, அவர் வீட்டில் அவரையும் சேர்த்து மொத்தம் நான்கு சம்பாத்தியங்கள்!

அந்த நான்கு சம்பாத்தியத்தில் வந்த மொத்த வருமானத்தினையும் பாஸ்கர் சிரத்தையாக சேமித்தார். சேமித்ததனால், அவரிடம் இருந்த பணம் ஒன்று இரண்டானது. இரண்டு நான்காகி, நான்கு ஆறானது. பின்பு அதுவே எட்டாகி, எட்டு பதினாறு ஆகிவிட்டது.

பாஸ்கர் மட்டுமல்ல. பல பணக்காரர்களின் ஆரம்பகாலக் கதைகள் எல்லாம் இப்படித்தான் இருக்கும். சாதாரணர்கள் பணக்காரர்கள் ஆகிற நிச்சய வழியின் முதல் படி இதுவேதான்.

சேமிப்பவர்களின் பொருளாதார நிலை, அணைகளில் சேமிக்கப்படும் தண்ணீர் போல அடிஅடியாக உயர்ந்து கொண்டே போகிறது. வருமானம் வரும் காலம் சுப்ரமணியம் போல பாஸ்கர் போல பணத்தைச் சேமிப்பவர்கள், ஒருநேரத்தில் நிச்சயம் பணக்காரர் ஆகிவிடுகிறார்கள்.

“சேமிக்க வேண்டும். சேமிக்க வேண்டும் என்கிறீர்களே! 2_ம் தேதியே என் சம்பளத்தில் பத்து ரூபாய் கூட மீதம் நிற்பதில்லை. தவிர்க்கக்கூடிய செலவுகள் ஏதும் என் குடும்பத்தில் கிடையாது. கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கிறது. இதில் நான் எப்படிச் சேமிப்பேன்?”

கேட்கலாம்.

இதற்கான பதில் கேட்பவர்களிடம்தான் இருக்கிறது. மாற்றத்துக்கான கதவுகள் உட்பக்கமாக தாழிடப்பட்டிருக்கின்றன. மற்றவர்கள் வெளியில் இருந்து தட்டலாம். ஆனால் திறப்பதை அவரவர்கள் தான் செய்யவேண்டும்.

செலவு போக, மீதம் இருக்கும் வருமானம்தான் சேமிப்பதற்கான வழி என்று நினைப்பது ஒருவகை. அங்கே முக்கியத்துவம் செலவுகளுக்குத்தான். முன்னுரிமை செலவுகளுக்குத்தான். செலவு போக மீதம் இருந்தால்தான் சேமிப்பு.

இன்னொரு வழியும் இருக்கிறது. மேலே பார்த்த சுப்ரமணியம், பாஸ்கர் போன்றவர்கள் மட்டுமல்ல, துருபாய் அம்பானி போன்ற மிகப்பெரிய பணக்காரர்களும் செய்த முறை. சேமிப்பு போக மீதம் இருப்பதற்குள் செலவு என்கிற முறை. இங்கே சேமிப்பிற்கு முக்கியத்துவம். அதற்குத்தான் முன்னுரிமை.

“அதெப்படி? இன்றைக்கு செய்ய வேண்டிய செலவுகள் இருக்கும் போது வருங்காலத்திற்காக சேமித்துக்கொண்டிருக்க முடியுமா? பற்றாக்குறையுடன் வாழ முடியுமா? வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா?’’ நியாயமான கேள்விகள் போலத்தானே தோன்றுகிறது. அவற்றுக்கான பதில், இன்னொரு கேள்வியில் இருக்கிறது. அந்த கேள்வி, “இன்றைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? அல்லது வருங்கால தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா?” என்பதுதான்.

‘இன்றைய தேவைகள்தான் முக்கியம்’ என்று மனது சொல்லும். அதே கேள்வியை அறிவிடம் கேட்டுப் பாருங்கள், ‘வருங்காலத்திய தேவைகள்தான் முக்கியம்’ என்று சொல்லும்.

பத்து வருடத்துக்கு முன் வாங்கிய விலையில் இன்றைக்கு வீடு கிடைக்குமா? இல்லை தங்கம்தான் கிடைக்குமா? காய்கறி முதல் கார் வரை எதன் விலைதான் போகப் போக குறைகிறது?

அதனால், தெரிந்தே, கட்டுப்பாட்டுடன் செலவுகளைக் குறைத்து வாழ்வது. இன்றைய தேவைகளை குறைத்துக்கொள்வது. அதன்மூலம் சிலகாலம் பணத்தினை சேர்ப்பது. சேர்த்த பணத்தினை மேலும் சம்பாதிக்க வைப்பது.

வேலை பார்த்தோ, தொழில், வியாபாரம் செய்தோ ஒருவர் சம்பாதிப்பது மட்டுமே குடும்பத்துக்கு போதாது. மனிதர்கள் சம்பாதிப்பதுபோல, பணத்தாலும் பணம் சம்பாதிக்க முடியும்.

சுப்ரமணியத்தின் வீடு, வீட்டு வாடகையாக சம்பாதிக்க, பாஸ்கரின் பணம் கார் வாடகையாக சம்பாதித்துக் கொடுத்தது. பங்குச் சந்தையோ, பரஸ்பர நிதியோ அல்லது வேறு எதுவுமோ. பணம், பணத்தை சம்பாதிக்கும். வேலை செய்து பணக்காரர்கள் ஆனதைவிட சொத்து விலை ஏறி பணக்காரர் ஆனவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.

பணக்காரர் ஆக வேண்டும் என்றால், முதலில் பணத்தை சேர்த்தாக வேண்டும்.

முதல் ஆயிரம் அடுத்த பல ஆயிரங்களை கொண்டுவந்துவிடும். முதல் லட்சத்தினைத் தொடுவதுதான் சவால். அதன் பிறகு பல லட்சங்கள் சுலபமாக வரும்.

முதல்.. ஆம் எல்லாவற்றுக்கும் ‘முதல்’ தேவை. முதலையே செலவு செய்வது, ஆரம்ப முதல் உருவாக்காமல், பணத்தினை செலவு செய்வது புத்திசாலித்தனமல்ல.

வருமானம் என்பது ஆட்டுக் குட்டி போல. ஆட்டுக்குட்டியை அப்படியே சாப்பிடலாம். அதன் அளவு குறைவானது. அதே ஆட்டுக்குட்டியை வளர்த்தால், அதனை வளரவிட்டால் என்ன ஆகும்? அதன் எடை பெருகும். அந்த வளர்ந்த ஆடு, பல குட்டிகள் போடும்.

ஆட்டுக்குட்டியை பசித்தாலும் சாப்பிடாமல் வளர்ப்பவர்கள், நாளைய பணக்காரர்கள். அந்தத் தொலைநோக்கு, அந்தக் கட்டுப்பாடு, பொறுத்திருக்கும் தன்மை, இவையெல்லாம் சாதாரண நிலையில் இருந்தாலும் மேலே வருவதற்கான வழிகள்.

இன்றைக்கு கையில் இருக்கும் பணம், விதை நெல் போல. அதையே சாப்பிடலாம். கொஞ்சம் பசி போகும்தான். ஆனால் அதே நெல்லை விதைத்து, விளைவித்து, பெருக்கினால்? பலபேர், பலகாலம் சாப்பிடலாம்.

சேமிக்காமல் இருப்பது இன்றைக்கும் போதாமல், வருங் காலத்திற்கும் உருவாக்காமல் இருப்பது. இரண்டும் இல்லை என்கிற நிலை. சேமிப்பது, இன்றைக்கு கட்டுப்படுத்திக்கொண்டுவிட்டு , வருங்காலத்தில் நிச்சயம் வசதியாக இருப்பது. வருங்காலத்திற்கு நிச்சயம் பிரச்சனையில்லை என்கிற நிலை.

“அப்படியென்றால் சேமித்தால் போதும். பணம் தன்னால் பெருகி விடும். இல்லையா?’’

“இல்லை’’.

திரைப்படங்களில், ரஜினிகாந்த் என்னவெல்லாம் செய்வார்? ஆக்ஷன். கேரக்டர் ரோல். ஏன், காமெடி கூட சிறப்பாகச் செய்வார் இல்லையா? அவர் மட்டுமா? கமல், விஜய், ஜாக்கிசான் என்று வெற்றிபெற்றிருக்கும் பலரும் அப்படிப்பட்டவர்கள் தானே! இப்படிப்பட்டவர்கள் எல்லாம், ஒன்றல்ல, பலதிறன் பெற்றவர்கள்.

டெண்டுல்கர் தெரியுமல்லவா? அவர் பேட்ஸ்மெனா? அதில் என்ன சந்தேகம்? டெஸ்ட் பந்தயங்களில் உலகிலேயே 2 வது அதிகமான ஓட்டங்கள் எடுத்த மிகச் சிறந்த பேட்ஸ்மென் ஆயிற்றே. ஆனால் அவர், வெறும் பேட்டிங் மட்டும்தான் செய்வாரா?

யார் சொன்னது? ஒருநாள் பந்தயங்களில் டெண்டுல்கர் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை..152! இந்தியாவின் அதிகபட்ச விக்கெட் எடுத்த சிறப்பு பந்துவீச்சாளர் கும்ப்ளே எடுத்ததை விட, 180 தான் குறைவு. டெண்டுல்கர், ரன்கள், விக்கெட்டுகள் எடுப்பதுதவிர, பீல்டிங்கிலும் புலி. மொத்தம் 120 கேட்சுகள் பிடித்திருக்கிறார். ஆக, அவர் ஒரு ஆல்ரவுண்டர். சகலகலாவல்லவன் இல்லையா?

எல்லாம் சரிதான். சொல்லவரும் தகவல் என்ன? பணம் சம்பாதிப்பதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்?

எல்லா இடங்களிலும் இப்படிப் பட்ட, ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை ஒருங்கே செய்யும் ’ஆல்ரவுண்டர்கள்’ சுலபமாக ஜெயிக் கிறார்கள். ‘ஒன்றுதான் செய்வேன்’ என்று எவராலும் உட்காரமுடியாது. போதாது. இதுதான் போட்டி உலகத்தின் நிலைமை.

இது சேமிப்பிற்கும் பொருந்தும். ’சேமிப்பேன். சேமித்துவிட்டு அதன் பின் நல்ல முதலீடாகப் பார்த்து, பணத்தினை அதில் போடுவேன். அதன்மூலம் ஒன்றை, பலவாகப் பெருக்குவேன்’ என்று இருக்க முடியாது.

வேறு எப்படி செய்வதாம்?

சேமிக்கும் போதே முதலீடும் செய்யவேண்டும்.

முன்பெல்லாம், உண்டியலில் சேமிப்பார்கள். அலமாரிகளில் வைப்பார்கள். ஓரளவு காசு சேர்ந்தபின், அதனை வங்கியில் போடுவார்கள். அதன் பிறகுதான், அந்த ’சேமிப்பு’ அவர்களுக்காக சம்பாதிக்க ஆரம்பிக்கும்.

பணத்திற்கு ’டைம் வேல்யு’ என்று ஒன்று இருக்கிறது. சிவசாமி என்று பெரியவர் ஒருவர் மிகவும் சந்தோஷமாக இருந்தார். காரணம், வீட்டிலிருந்த பழைய அலமாரி ஒன்றை விற்பதற்காக சுத்தம் செய்தபோது, அதிலிருந்து எப்போதோ வைத்த நூறு ரூபாய் நோட்டு ஒன்று கிடைத்திருக்கிறது.

அது, அவர் மகன் திருமணத்தின் போது, ஒரு ‘கவர்’ ரோடு வைத்ததாம், 10 வருடங்களாக எவர் கண்ணிலும் படாமல் ஒரு மூலையில் ஓட்டிக்கொண்டு கிடந்திருக்கிறது. கிடைத்தது லாபம் என்று சந்தோஷப்பட்ட அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கிடைத்தது நூறு ரூபாய்.

இழந்தது?

அதைவிட அதிகம். 159 ரூபாய்.

இதில் எங்கிருந்து இழப்பு வந்தது என்று கேட்கத் தோன்றுகிறதா?

அந்த நூறு ரூபாய் பணத்தினை அவர் ஏதாவது வங்கியில் அப்போதே போட்டிருந்தால், அது அந்த 10 வருட காலத்தில், 259 ரூபாயாக ஆகியிருக்கும். பத்து சதவித வட்டியில்.

பணம் சில இடங்களில் இருந்தால் தூங்கும். வேறு சில இடங்களில் இருந்தால் வளரும். தினம் தினம் கொஞ்சமேனும் வளரும்.

வங்கியில் போட்ட நூறு ரூபாய், 10 வருட காலத்தில் 259 ஆகிவிடும் என்றால், 1000 ரூபாய் எவ்வளவு ஆகும்? 2,590 ஆகிவிடும். அதே 1000 ரூபாயை, 10 வருடத்திற்கு பதில் 25 வருடங்கள் தொடாமல், ஒரு வங்கியில் போட்டு வைத்தால்? 10 ஆயிரத்து 830 ரூபாயாக வளர்ந்துவிடும். நாம் ஏதும் செய்யாமலேயே.

ஆயிரம் ரூபாய் கூட பணம் இல்லாதவர்கள் எவ்வளவு பேர்? அதானே! ஏன் வெறும் 1000 ரூபாய் மட்டும் சேமிக்க வேண்டும்? கூடுதலாக சேமிக்க முடியாதா என்ன?

அங்கே இங்கே என்று, வீட்டிலேயே பல இடங்களில் நூறும் ஆயிரமுமாக வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். பல்வேறு நேரங்களில், அங்கும் இங்குமாக வங்கிக் கணக்குகள் திறந்தவர்கள் உண்டு. எல்லாவற்றிலும் எடுக்காத பணம் என்று கொஞ்சமேனும் இருக்கத்தான் செய்யும்.

அவையெல்லாம் எல்லாம் தூங்குகிற பணம். சம்பாதிக்காத பணம். பணத்தால் பணம் சம்பாதிக்க முடியும். தொடர்ந்து, இரவு பகலாக அது உழைக்கும். அதற்கான இடத்தில் அது இருந்தால். நாம்தான் அதனை அங்கே கொண்டுபோய்விட வேண்டும்.

சேமிப்பு என்பதே தொடர்ந்து செய்வதுதானே. அப்படி இப்படி என்று முயன்று மாதாமாதம் 1000 சேமிக்க தொடங்கி, தொடர்ந்து 25 வருடங்கள் செய்தால், அதே 10% வட்டிக்கு மொத்த தொகை எவ்வளவாக ஆகும் தெரியுமா? 12 லட்சம். அதே நபர், இன்னும் ஐந்துவருடங்கள் கூடுதலாக சேமித்தால்? 22 லட்சமாகிவிடும். இன்னும் ஒரு ஐந்துவருடம் சேர்த்து செய்தால், 38 லட்சமாகிவிடும்.

25 வயதில் சேமிக்க தொடங்கினால், 60 வயது வரை சேமிக்கலாம். 30, 35, 40 என்று எந்த வயதிலும் தொடங்கலாம். தொடங்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறோமோ அவ்வளவு நல்லது. சுப காரியங்களுக்கு மட்டுமல்ல சீக்கிரம் செய்ய வேண்டும் என்பது. சேமிக்கத் தொடங்குவதற்கும்தான்.

லட்சாதிபதியாக நிச்சயமான வழி என்ன தெரியுமா? ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக ஒரு தொகையை சேமிப்பது மட்டுமல்ல. சேமிப்பதை ஏதாவது ஒரு லாபகரமான இடத்தில் முதலீடு செய்துவருவதும் தான்.

வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் செய்யும் தொடர்வைப்பு (ஸிஞி) தெரியும். அவை தவிரவும், இன்னும் சில வழிகள், புதிய வளம் தரும் வழிகள் இருக்கின்றன.

அவற்றில் ஒன்று தான் சிஸ்டமாடிக் இன்வெஸ்ட் மெண்ட் பிளான் (ஷிமிறி). இதுவும் மாதாமாதம், செய்யும் சேமிப்புதான். ஆனால், பணத்தினை போடும் இடங்கள் வேறு.

இதனை மூன்று விதங்களில் செய்யலாம்.

1. தங்கம் வாங்கலாம்

ஒன்று நாமே நேரடியாக முதலீடு செய்வது. நாமேவா! என்று பயப்படத் தேவையில்லை. செய்யப்போகும் முதலீடு, எவருக்கும் நன்கு தெரிந்த தங்கத்தில். மாதம் 500 ரூபாய் சேமிக்கிறீர்களா? அரை கிராம் தங்கம் வாங்குங்கள். 1000 ரூபாய் முடியுமா? ஒரு கிராம். அதற்கும் மேல் என்றால் கேட்கவா வேண்டும்? உங்கள் சாமர்த்தியம். ஜமாயுங்கள்.

தங்கத்தினை கடைக்குப் போய் வாங்கி, அதுவும் மாதா மாதம் சரிபார்த்து வாங்கி.. அதைப் பத்திரமாகப் பாதுகாத்து.. என்றெல்லாம் சலித்துக் கொள்ளவே வேண்டாம். இப்போது சுலபமான முறைகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட ஒரு சுலபமான மட்டுமல்ல, பாதுகாப்பான முறையின் பெயர், ’கோல்ட் பீ•ஸ்’ (நிஷீறீபீ ஙிமீணிs). குறைந்தபட்ச முதலீடாக 10,000 வைத்திருக்கிறார்கள்.

தேசியப்பங்குச் சந்தையிலேயே பிப்ரவரி 2007 முதல், தங்கம் விற்கிறார்கள். ஓர் கிராம் முதல் எத்தனை கிலோக்கள் வரை வேண்டுமானாலும் வாங்கலாம். கனமாகவே இருக்காது. காரணம், வாங்கிய தங்கம் கையில் தரப்படமாட்டாது. நம் கணக்கில் வரவு வைக்கப்படும். வாங்கலாம். விற்கலாம். அவ்வபோது நடக்கும் விலைகளில்.

அதற்கு, பங்குகளுக்குத் திறப்பது போல, ஒரு ’டிமேட்’ கணக்கு இருந்தால் போதும். விற்பதும் சுலபமே. பங்குகள் போலவேதான். ஹிஜிமி, கோட்டக் மற்றும் பென்ச்மார்க் பரஸ்பர நிதிகள் நடத்தும் கோல்ட் பீஸ் களில் வாங்கலாம்.

ஒளவையார், கல்விக்கு சொன்னது, இன்றைக்கு இந்த டிமேட் தங்கத்திற்கும் பொருந்தும். ஆமாம். இது வெள்ளத்தால் போகாது. வெந்தணலால் வேகாது. கள்வராலும் களவாடமுடியாது. தங்கம் நம் கணக்கில், பாதுகாப்பாக, எத்தனை வருடங்கள் ஆனாலும், சேதாரம் இல்லாமல் இருக்கும். 1% கூலி உண்டு. பங்குத் தரகர்களிடம் விசாரியுங்கள். ’இது சேமிப்பு என்பது சரிதான். ஆனால், சேர்க்கும் போதே வளரும் சேமிப்பா?’ என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். தங்கம் விலை கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் என்ன ஆகியிருக்கிறது என்று தெரியுமல்லவா?.

தங்கமே தங்கம்.. இந்த வாரமும் தொடருகிறது

இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சி செய்திகள் பார்க்கும் போது, கடைசியாகச் சொல்லும் விலை நிலவரங்களை நீங்கள் கவனிப்பது உண்டா? தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களைத்தான் சொல்லுகிறேன்.

அன்றைய தினம் கிராம் ஒன்றுக்கு எவ்வளவு ஏறியது அல்லது இறங்கியது என்று சொல்வார்கள். முன் எப்போதும் இல்லாத அளவாக, கடந்த நான்கு ஐந்து வருடங்களில் தங்கம் நன்றாக விலை உயர்ந்து, ஒரு நல்ல வருமானம் தந்த முதலீடாகவே இருந்து வந்திருக்கிறது, என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு கட்டத்தில், கிடு கிடுவென்று உயர்ந்து வந்த பங்குச் சந்தைக்கே ஈடு கொடுக்குமளவு கூட, தங்கத்தின் விலையில் உயர்வு இருந்தது. பின்னே? 2003_ல் கிராம் 533 ரூபாய் ஆக இருந்த தங்கம், 2007 நவம்பர் 1 ம் தேதி கிராம், 1011 என்கிற உச்சத்தினைத் தொட்டது. பின்பு இறங்கியது தற்சமயம் கிராம் 1034 ஆக இருக்கிறது. 22 கேரட் அல்ல 24 கேரட்.

இதுதான் தங்கத்தின் குணமா? எப்போதுமே தங்கம் இப்படித்தான் விலை ஏறுமா? இதே அளவு விலை ஏற்றம் இனியும் சாத்தியமா? தங்கத்தில் முதலீடு செய்யலாமா? தங்கம் வாங்குவது முதலீடு ஆகுமா?

நிறைய கேள்விகள்.

நமது நாட்டில் இன்றும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்கத்தினை ஒரு நகையாகவே, ஆடம்பரப் பொருளாகவே பார்ப்பது உண்மை. தங்கம் இன்னமும் கூட, பெரும்பாலானவர்களால் ஒரு முதலீட்டு வாய்ப்பாக பார்க்கப்படவில்லை என்பதும் அதே அளவு உண்மை.

இதில் வேடிக்கை என்னவென்றால், உலகிலேயே மிக அதிகமான அளவு தங்கம் இருப்பதும், வருடா வருடம் இறக்குமதி செய்யப்படுவதும் (ஆண்டுக்கு 750 டன்) இந்தியாவில்தான்.
தங்கத்திற்கு என்று சில தனிப் பட்ட குணங்கள் உண்டு.

முதலாவது, தங்கம் ஒரு சர்வதேசப் பொருள். அது செல்லுபடியாகாத தேசமே இல்லை. எல்லா நாடுகளிலும் வாங்குவார்கள், விற்பார்கள். மக்கள் மட்டுமல்ல, எல்லா அரசாங்கங்களுமே டன் கணக்கில் வாங்கி, ஆண்டுக் கணக்கில் பூட்டி வைத்திருப் பார்கள்.

நம்முடைய மத்திய ரிசர்வ் வங்கியிடம் மட்டும் 400 டன் ( 4 லட்சம் கிலோ தங்கம். சவரன் கணக்கில் சொல்வ தென்றால் 5 கோடி சவரன்!) கையிருப்பாக இருக் கிறது. இது போக, நம் மக்களிடம் 13,000 டன்கள் (13 லட்சம் கிலோ) தங்கம் இருக்கிறது. உலகத்தில் இருக்கும் மொத்த தங்கத்தில், இது 9 சதவிதம். அரசிடம் இருப்பதையும் சேர்த்தால் 10.4 %. ஆம். நாம் சவரன் என்கிறோம். பவுன் என் கிறோம். ஒரு சவரனோ ஒரு பவுனோ அதன் எடை 8 கிராம். உலக அளவில் தங்கத்தின் விலையைச் சொல்லும் போது, டிராய் அவுன்ஸ் கணக்கில் குறிப்பிடுகிறார்கள். ஒரு டிராய் அவுன்ஸ் என்றால் அது கிட் டத்தட்ட 31 கிராம்கள் ( 31.1035 ரீனீs).

மக்கள் தங்கம் வாங்குவது சரி. அரசாங்கங்களுக்கு என்ன? என்று கேட்கலாம். தங்கத்தில் முதலீடு என்பது அதன் விலை ஏற்றத்துக்காக செய்யப் படுவதைவிட, அதன் பாதுகாப்பு தன்மைக்காவே செய்யப்படுகிறது. எப்போதெல்லாம் போர்கள் நிகழ்கின்றனவோ, அப்போதெல்லாம் தங்கத்தினுள் நுழையும் பணம் அதிகரிக்கும். அதனால் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும். காரணம், எல்லா காலங்களிலும், எல்லா பிரச்னைகளின் போதும், எல்லா தேசங்களிலும் அதுதான் சேஃப்.

அதேதான் நம்முடைய குறிக்கோளுமாக இருக்கலாம். தங்கத்தில் போடும் பணம் காணாமல் போகாது. மற்ற முதலீட்டு வாய்ப்புகள் போல, அதனால் வருமானம் தரமுடியாமல் போகலாம். ஆனால் முதலுக்கு எப்போதும் பிரச்னை வந்ததில்லை.

தங்கத்துக்கு போர்களுடன் மட்டுமல்ல எல்லா நிச்சயமற்ற தன்மைகளுடனும் தொடர்பு உண்டு. உலகில் குழப்பமான சூழ்நிலைகள் நிலவும் போதெல்லாம் (இயற்கைப் பேரழிவுகள், தீவிரவாதிகளின் பெரிய தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள்) தங்கம் கவர்ச்சியாகி விடும். பாதுகாப்பு தேடி ஓடும் பணம் தங்கத்தில் தான் தஞ்சமடையும். தங்கம் தான் சேஃப்.

தங்கத்துக்கு இந்த வகையில் போட்டி என்று பார்த்தால், அமெரிக்காவின் (யு.எஸ்) டாலர்தான். பல அரசாங்கங்களாலும் யு.எஸ் டாலர் நிறைய சேர்த்துவைத்துக் கொள்ளப்படுகிறது. பல ஆண்டுகளாக, தங்கத்திற்கு அடுத்தபடி, சர்வதேச அளவில் டாலர் முதலீடுதான் சேஃப். டாலர் கையிருப்பு எவ்வளவு என்பதுதான் கணக்கு.

டாலருடன் தங்கத்துக்கு தனி உறவே உண்டு. இவர் வலது என்றால் அவர் இடதுபக்கம்.

டாலர் விலை இறங்கினால் தங்கம் விலை உயரும். டாலர் விலை உயர்ந்தால்? தங்கம் விலை இறங்கும். சமீபகாலமாக தங்கம் விலை ஏறுவதும், டாலர் வீழ்ச்சி அடைந்து வருவதும் இதனாலும்தான். இதனை எதிர் உறவு என்று சொல்லலாம்.

டாலர் தவிர , இன்னொரு சர்வதேச பயன்பாட்டுப் பொருள், கச்சா எண்ணெய். கச்சா எண்ணெய் விலைக் கும் தங்கத்துக்கும் கூட உறவு உண்டு. இது, ஒரே போக்கில் போகும் நேர் உறவு. அவர் சிரித்தால் இவரும் சிரிப்பார். கச்சா எண்ணெய் விலை உயர உயர, தங்கத்தின் விலையும் உயரும். அவர் இறங்கினால் இவரும் இறங்குவார்.

இன்னொரு உறவு பங்குச்சந்தை களுடனானது. பங்குச் சந்தைகள் வீழ்ந்தால் தங்கம் விலை உயரும். காரணம் அங்கிருந்து வெளியேற்றும் பணத்தினை, அதிகம் பாதிக்கப்படாத இடங்களில் முதலீடு செய்யவேண்டுமென்றால் முதலீட்டாளர் களுக்கு முதலில் நினைவு வருவது தங்கம் தான். சமீப காலங்களில், இந்திய பங்குச் சந்தைகள் கடுமையாக உயர்ந்த போதே தங்கம் விலை அதிகரித்திருக்கிறது. பங்குச் சந்தைக்கு ஏதும் நிகழ்ந்தால்.. தங்கத்தின் விலை இன்னும் கூட அதிகரிக்கும்.

விபரங்கள் சரி. தங்கத்தில் நாம் முதலீடு செய்யலாமா?

எந்த முதலீட்டிலும் மூன்று அம்சங் களைப் பார்க்க வேண்டும். முதலாவது அந்த முதலீடு பாதுகாப்பானதா? இரண் டாவது அந்த முதலீட்டுக்கு வருமானம் எப்படி? மூன்றாவது தேவைப்படும் நேரம் அந்த முதலீட்டில் இருந்து வெளியேற முடியுமா?

தங்கம் என்கிற முதலீடு பாதுகாப் பானதே. மற்ற முதலீட்டு வாய்ப்புகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, தங்கத்தில் இருந்து வரக்கூடிய வருமானம் கடன் பத்திரங்கள், வங்கி வைப்புகள் போல நிச்சய மானதும் இல்லை. பங்குச் சந்தை பரஸ்பர நிதிகள் போல, நிறைய வாய்ப்பிருப்பதும் இல்லை. வருமானம் வரலாம், வராமலும் போகலாம். விற்பதில், வெளியேறுவதில் பிரச்னையே இல்லை என்பது குழந்தைக்குக் கூட தெரியும்.

சரி. நாம் முதலீடு செய்யலாமா, கூடாதா?

தம்மிடம் இருக்கும் முதலீட்டின் மொத்த அளவே குறைவு என்றால், அதைப் பெருக்க வேண்டியது மிக அவசியம் என்றால், தங்கத்தினை நகை என்கிற அளவுடன் நிறுத்திக் கொள்ளலாம்.

மொத்த முதலீட்டுத் தொகை கணிசமானது என்றால், அதனை பிரித்துப் போடுவது நல்லது. அந்த சந்தர்ப்பத்தில் தங்கத்திற்கு நமது ’போர்ட்போலியோ’வில் நிச்சயம் இடம் கொடுக்க வேண்டும்.

அப்படிப்பட்டவர்கள், அதிலும் சேமிக்க விரும்புபவர்கள், மாதாமாதம் தங்கம் வாங்கலாம். சேமிக்கக்கூடிய பணத்தில் ஒரு பகுதிப் பணத்திற்கு மட்டும், வங்கிகளும் மற்றவர்களும் விற்பனை செய்யும் தங்க நாணயங்களாகவோ அல்லது, கடந்த வாரம் பார்த்த பங்குச் சந்தையில் கிடைக்கும், தங்க யூனிட்டுகளாகவோ(நிஷீறீபீ ஙிமீணிs) வாங்கலாம்.

மற்ற இரண்டு விதமான சிஸ்டமாடிக் (Gold BeEs) பிளான் (ஷிமிறி)கள் பற்றி விளக்க மாக அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம். .

கடைக்காரரே! ஒரு ரூபாய் தக்காளி, ஒரு ரூபாய் வெங்காயம், ஐம்பது பைசா பச்சை மிளகாய் கொடுங்க.”

“இந்தா புடிம்மா.’’

“ஒரு ரூபாய் தக்காளி கேட்டா, ஒரு தக்காளி தரீங்களே என்ன! நினைப்பு எங்க இருக்கு?’’

“நான் சரியான நினைப்பிலதாம்மா இருக்கேன். உனக்குதான் தக்காளி விலை தெரியலை. இன்னைக்கு கிலோ என்ன விலை தெரியுமா? 30 ரூபாய்.’’

“கிலோ முப்பது ரூபாயா? அநியாயமா இருக்கே! என்ன விலையோ என்ன பிரச்னையோ. சரி வுடு. மவராசன் ஒண்ணாவது கொடுத்தியே..’’

போகும் வழியில் முணுமுணுத்துக் கொண்டே போகிறார் நீலா. ‘நேத்து ஒரு ரூபாய்க்கு மூணு கொடுத்தார். இன்னைக்கு அதே ஒரு ருபாய்க்கு ஒண்ணுதானாம். விலை அதிகமாம்ல .. ம்ம்.’

சித்தாள் வேலை செய்யும் நீலா எப்போதும் அப்படித்தான். தக்காளி விலை அதிகமானாலும் இறங்கினாலும் , அவர் வாங்குவது என்னவோ ஒரு ரூபாய்க்குத்தான். என்ன? விலை குறைந்திருக்கும் தினங்களில் இரண்டோ மூன்றோ கிடைக்கும். சந்தோஷமாக குழம்பில் போடுவார். விலை உயர்ந்த தினங்களில், ‘இன்றைக்கு ஒன்றுதானா? சரி, கொடு’ என்று அதையும் வாங்கிக்கொள்ளுவார்.

அவரைப் பொறுத்தவரை, விலை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும், தக்காளிக்காக செலவழிப்பது என்னவோ, தினம் ஒரு ரூபாய்தான்.

கடந்த வாரம் பார்க்க ஆரம்பித்துள்ள சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் (SIP) என்பதற்கும், நீலா தக்காளி வாங்குவதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. வித்தியாசம் அதிகமில்லை. தக்காளி அழுகும். எஸ்.ஐ.பி. (SIP) யில் வாங்கும் பங்குகள் அழுகாது.

பங்குச் சந்தை அனுபவம் சிலருக்கு இல்லவே இல்லை. கிடைக்கப் பெற்றவர்களில் சிலருக்கு, அது சந்தோஷம் தரவில்லை. காரணம், ’எல்லோரும் வாங்குகிறார்களே சொல்லுகிறார்களே என்று பங்குகளை வாங்கினால், அவர்கள் வாங்கிய பிறகு, விலை இறங்குகிறது.

’சரி வாங்கியது தவறாகிவிட்டது. இனி எதுவுமே வாங்க வேண்டாம்’ என்று விட்டுவிட்டால், சொல்லிவைத்ததுபோல, பங்குகளின் விலைகள் அதன்பிறகு கடுமையாக உயருகின்றன. ’அடடா இன்னும் கொஞ்சம் வாங்கியிருக்கலாமே’ என்று வருத்தப்படவைக்கின்றன.

என்ன செய்வது? எப்போதுமே, பங்கு விலைகள் இப்படித்தான் அடிக்கடி ஏறியும் இறங்கியும் அலைக்கழிக்கின்றன! ஆனாலும் பங்குச் சந்தை தரும் வாய்ப்புகளையும் விட மனதில்லை. இதைச் சமாளிப்பது எப்படி? என்ன செய்யலாம்?

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்று முடிவு செய்துவிட்டவர்கள் (சில பத்திகள் தள்ளி விவரமாக பார்க்கலாம்), இரண்டு வழிகளில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.

முதலாவது, கையில் கணிசமாக பணம் இருக்கும் போது, அந்த அளவுக்கு பங்குகள் வாங்குவது. அப்படி ’லம்ப்’ ஆக முதலீடு செய்வது.

இரண்டாவது வகை , நீலா தக்காளி வாங்கியது போல, தொடர்ச்சியாக, ஒரு குறிப்பிட்ட அளவு பணத்திற்கு மட்டும், கொஞ்சம் கொஞ்சமாக பங்குகள் வாங்குவது.

ஒருமுறை, கணிசமாக வாங்குவதற்கும், தொடர்ச்சியாக, பல தவணைகளில் சிறிய தொகைகளுக்கு வாங்குவதற்கும் இடையே என்ன வித்தியாசம்? என்று கேட்கலாம்.

நாம் பங்குகள் வாங்கும் நேரம், சந்தையில் விலை குறைந்திருந்தால், கணிசமாக வாங்கும் முறை நல்லது. மாறாக, நாம் வாங்கப்போகும் நேரம் விலைகள் உயர்ந்திருந்தால், மொத்தப் பணத்திற்கும் அந்த நேரம் வாங்குவது, புத்திசாலித்தனம் இல்லை.

இருக்கும் நிலைமைகளைப் பார்த்தால், வருங்காலத்தில் சில நிறுவனங்கள் நன்றாகத்தான் செயல்படும், நல்ல லாபமீட்டும் என்பது போலத்தான் சொல்லமுடியுமே தவிர, எந்த நேரம், எந்த நாள், பங்குகள் விலை உயரும்? எதனால் எப்போது இறங்கும் என்று நாள் குறித்து எவராலுமே சரியாக கணித்துச் சொல்லமுடியாது.

அதனால்? எப்போது பங்குகளை வாங்கலாம் என்கிற முடிவினை எடுக்க முடிவதில்லை. இதனைச் சமாளிக்க சுலபமான வழி, ஒரு நல்ல நிறுவனம் நடத்தும் எஸ்.ஐ.பி. (ஷிமிறி) யில் சேர்ந்து மாதாமாதம் ஐநூறோ, ஆயிரமோ கட்டவேண்டியதுதான்.

அப்படிச் சேர்ந்துவிட, நீலா, தினம் ஒரு ரூபாய் தக்காளி வாங்கியது போல, நமக்காக நாம் கட்டும் 500 ரூபாய்க்கோ, 1000 ரூபாய்க்கோ, அந்த நிறுவனம் பங்குகள் வாங்கும். ( எஸ்.ஐ.பி.யில் அதனை யூனிட்டுகள் என்பார்கள். பின்னால் பார்த்துக் கொள்ளலாம்)

விலை குறைந்திருக்கும் காலங்களில் ஒரு ரூபாய்க்கே கூடுதல் எண்ணிக்கை தக்காளி கிடைப்பது போல, பங்குச் சந்தை இறங்குகிற காலங்களில், கூடுதல் யூனிட்டுகளும், பங்குகளின் விலைகள் உயரும் காலம், குறைவான யூனிட்டுகளும் நம் கணக்கில் வரவு வைக்கப்படும்.

சேமிக்கிறோம் சரி. சேமிக்கிற பணத்திற்கு பங்குகள் போன்ற யூனிட்டுகள் கொடுக்கிறார்கள். அதுவும் சரி. சேர்ந்த யூனிட்டுகளை எப்போது விற்பதாம்? விற்று காசு பார்ப்பதாம்?

விற்பதா? ஒரு குரங்குக் கதை தெரிந்திருக்குமே!

”உன்னால் எதையுமே உருப்படியாக செய்யமுடியாது. அதனால் தான் குரங்கு புத்தி என்கிறார்கள்” என்று சொன்னதற்கு, ஒரு குரங்கிற்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டதாம். ’யாரையடா சொன்னாய்? அடா!’ என்று சொல்லி, ”எங்கே எதாவது ஒரு வேலையை என்னிடம் கொடுத்துப் பாருங்கள்!” என்று சவால் விட்டதாம்.

”அப்படியா சரி. இந்தா, இந்த செடியை நட்டு, நன்கு வளர்த்துக் காட்டு பார்ப்போம்” என்று சொல்ல, செடியை வாங்கிக்கொண்டு போய், அழகாவே நட்டதாம் அந்த குரங்கு.

’அட பரவாயில்லையே! இது கொஞ்சம் வித்தியாசமான குரங்கு போலத்தான் தெரிகிறது’ என்று கவனித்துப் பார்க்க, குரங்கு நட்டுவைத்த செடிக்குப் பக்கத்திலேயே, அக்கறையுடன் உட்கார்ந்துகொண்டதாம். சற்று நேரம் போக, சவால் விட்டவர்களுக்கு ஆச்சரியம் அதிகமானது.

இன்னும் சிரிது நேரம் போக, திடீரென, குரங்கு அந்த செடியைப் பிடுங்கி உயர தூக்கிப் பிடித்து, செடியை உற்றுப் பார்த்ததாம். ”அடடா ! என்ன செய்கிறாய்?” என்று கேட்டதற்கு, “ஒன்றுமில்லை. செடி எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது என்று பார்த்தேன் ” என்றதாம்.

பங்குகளை, குரங்கு செடி வளர்த்தது போல, வாங்குவதும் விற்பதுமாக இருந்தால், முதலீடு வளராது. எஸ்.ஐ.பி. (SIP) யின் பலமே, அதனை நீண்டகாலத்திற்கு விட்டு வைப்பதுதான். அப்போதுதான், அது நின்று வளரும், கணிசமான பலன் தரும்.

குழந்தைகளின் படிப்பு, திருமணம், ஓய்வுக் காலத்திற்கான சேமிப்பு போன்றவற்றைச் செய்ய, இந்த சேமிப்பு முறை சிறந்தது. 5, 10, 15, 20 வருடங்களுக்கு தொடர்ந்து, இந்த வகையில் சேமித்தால், மிகவும் கணிசமான தொகையினைப் பெற முடியும்.

மாதாமாதம் நமது சக்திக்கு ஏற்றபடி 500 அல்லது 1000 ரூபாய் சேமிக்க, வருடத்திற்கு 6000 அல்லது 12 ஆயிரமோ, சேமித்ததாவும் ஆகிவிடும், அதே சமயம் அதை துரித வளர்ச்சி காணும் பங்குச் சந்தையில் அவ்வப்போதே முதலீடு செய்ததாகவும் ஆகிவிடும்.

யோசனை நன்றாக இருப்பதுபோலத்தான் தெரிகிறது. ஆனாலும், பாடுபட்டு சம்பாதித்த பணத்தை, செலவைக் கட்டுப்படுத்தி சேமித்த பணத்தை பங்குச் சந்தையிலா போடுவது? அதுதான் பயமாக இருக்கிறது என்று சிலருக்குத் தோன்றலாம்.

பங்குச் சந்தையில் இருக்கும் பிரச்னைகள் என்ன? ஏன் அதற்குள் வருவதற்கு இன்னும் கூட சிலர் தயங்குகிறார்கள்?

1) எது நல்ல நிறுவனம் எது சரியில்லாத நிறுவனம் என்றெல்லாம் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

2) ஒரு நேரம் பங்குகளின் விலை உயருகிறது. இன்னொரு நேரம் விலைகள் வீழுகின்றன. நமக்கு ஏதும் புரியவில்லை.

3) ஆசை காரணமாகவும் பயம் காரணமாகவும், முதலீட்டை அதிக நாட்கள் விட்டுவைக்க முடியவில்லை

4) இதில் போடும் சேமிப்பு பெருகுமா? அல்லது பங்குச் சந்தையின் பிரச்னைகள் காரணமாக, காணாமலேயே போய்விடுமா?

சரி. இந்த நான்கு பிரச்னைகளுமே பங்குச் சந்தை தொடர்பான பிரச்னைகள்தான். ஆனால் இவை நான்கிலும் இருந்து தப்பிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது போன்றதுதான் எஸ்.ஐ.பி. (SIP)

என்ன இது ஒரே எஸ்.ஐ.பி. (SIP) புராணமாக இருக்கிறதே!

விஷயம் இருக்கிறது..

செய்தி கேட்கிறோம். அல்லது பத்திரிகை பார்க்கிறோம். முன்தினம் தங்கத்தின் விலை, கிராமுக்கு 40 ரூபாய் ஏறியிருக்கிறது என்று தெரியவருகிறது. நமக்கு எப்படியிருக்கும்?

நம்மில் சிலருக்கு சந்தோஷமாக இருக்கும். வேறு சிலருக்கு வருத்தமாக இருக்கும். இதென்ன வேடிக்கை! அதெப்படி, ‘தங்கம் விலை ஏறிவிட்டது’ என்கிற ஒரே செய்தியை வெவ்வேறு விதங்களாக எடுத்துக்கொள்ளமுடியும்?

அப்படித்தான். விஷயம் இருக்கிறது. சந்தோஷங்கள் அல்லது வருத்தங்கள் எவற்றைப் பொறுத்தவை? நம் லாப நட்டங்களைத்தானே! நாம் ஏற்கெனவே தங்கம் வாங்கிவிட்டிருந்தால்? தொடர்ந்து உயரும் விலைகளால் நமக்கு லாபம். அதனால் வரும் மகிழ்ச்சி. ’தங்கம் வாங்க வேண்டும்’, ‘வாங்கிவிடலாம்’ என்றே யோசித்துக்கொண்டிருந்துவிட்டு, இன்னும் வாங்காமல் இருப்பவர்களுக்கு? உயரும் விலை, தவற விட்ட லாபம். அதனால் ஏற்படும் வருத்தம்.

இதே உணர்வுதான் எல்லா சொத்துக்களுக்கும். வீடோ இடமோ வாங்கிவிட்டவர்கள், விலை உயர உயர, நியாயம்தான் என்பது போல பார்க்கிறார்கள். வாங்கத் தவறியவர்களோ, ‘என்ன அநியாயம்? இதெல்லாம் ரொம்ப அதிகம் ’ என்று புலம்புகிறார்கள்.

இத்தனைக்கும் தங்கம் விலை ஏறுவதற்கு சதோஷப்படுபவரிடம் எவ்வளவு தங்கம் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதிகமில்லை. ஐந்து சவரன் பத்து சவரன், வாங்கியிருந்தாலே போதும். விலை உயர்வு மகிழ்ச்சி தந்துவிடும். அதேபோல, வாங்கி விற்க அல்ல, குடியிருக்க வீடோ ஃபிளாட்டோ, விலை அதிகரிப்பதற்கு முன் வாங்கியிருந்தால் போதும். அதன்பிறகு நிகழும் ரியல் எஸ்டேட் விலை உயர்வை, திருப்தியுடன் கவனிப்பார்கள்.

தங்கம், வீடு, இடங்கள் மட்டும் தான் சொத்துக்களா என்ன? ஏன்? எத்தனையோ பேர் கடைகளை வாங்குகிறார்கள். செழிப்பாக நடைபெறும் வியாபாரங்களை வாங்குகிறார்கள். கணிசமான அளவு வசதி படைத்தவர்கள், தொழிற்சாலைகளையே கூட வாங்குகிறார்கள்.

தங்கமோ, இடமோ, கடையோ, வியாபாரமோ, தொழிற்சாலையோ. எல்லாம் முதலீடுகள் தான். லாபம் பார்ப்பதற்காகச் செய்யப்படும் முதலீடுகள். பலரும் வாங்குகிறார்கள்! லாபம் பார்க்கிறார்கள்.

அதுசரி, நாம் ஏன் வாங்கவில்லை?

நாம் ஏன் தொழிற்சாலைகள் வாங்கவில்லையா? நல்ல கதையாக இருக்கிறதே! நம்மிடம் ஏது சாமி அவ்வளவு பணம்?

இப்படிக் கேட்பவர்களுக்கு பங்குச் சந்தை பற்றி இன்னும் கொஞ்சம் தெரிய வேண்டியிருக்கிறது என்று சொல்லலாம். பங்குச் சந்தை என்பதே இப்படிப்பட்ட அற்புதமான முதலீட்டு வாய்ப்புதான். இந்திய மக்களிடம் இருக்கும் மொத்த தங்கத்தின் அளவு கிட்டத்தட்ட 13000 டன் (1,30,00,000 கிலோ). கிராமுக்கு 40 ரூபாய் ஏறினால் நமக்கு ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது? நம்மிடமும் ஒரு (சிறு) அளவு இருக்கிறதே. அதற்கும் சேர்த்துத் தானே விலை உயர்வு. அதனால் தான்.

சென்னையோ, கோவையோ அல்லது கோணாபட்டோ. எல்லா ஊர்களிலும் இட விலைகள் உயர்ந்திருக்கின்றன. எவ்வளவு சதுர கிலோ மீட்டர் இடங்கள்! அத்தனையும் விலை உயர்ந்து உள்ளன. நம்மிடம் மிஞ்சி மிஞ்சிப் போனால் எவ்வளவு இடம் இருக்கும்! ஆனாலும் என்ன? விலை உயருகிற பொருளில் ஒரு சிறு பகுதியேனும் நாமும் வாங்கிவிட்டோமல்லவா! அந்த மனநிறைவுதான். பிறகு? நம் சக்திக்கு ஏற்பத்தானே நம்மால் முதலீடு செய்ய முடியும்? அதைச் செய்துவிட்ட மகிழ்ச்சிதான், திருப்திதான்.

சில சவரன்கள், ஒன்றிரண்டு சதுர(ங்கள்) இடங்கள். இவற்றைப் போலவே, சிறிய அளவுகளில் நிறுவனங்களையும் வாங்கலாம். நம் சக்திக்கு ஏற்ப கொஞ்சம் பணம் முதலீடு செய்து, நன்கு செயல்படும் நிறுவனங்களின் ஓரளவு உரிமை பெறலாம். அதற்குரிய அளவு பணம் கொடுத்தால் கிடைக்கும். யார் கொடுத்தாலும் கிடைக்கும். தடையில்லை. எவரும் (பட்டியல் இடப்பட்ட) நிறுவனங்களின், உரிமையை வாங்கலாம். அற்புதமான நிறுவனங்களின் பங்குதாரர் ஆகிவிடலாம். இதுதான் பங்குச் சந்தை கொடுக்கும் வாய்ப்பு.

வீடுகட்ட சிமெண்ட் வாங்குகிறோம். விலை அதிகரித்துவிட்டது என்று பேசிக்கொள்ளுகிறோம். சிமெண்ட் நிறுவனத்திற்கு நல்ல லாபம் என்றும் கேள்விப்படுகிறோம். என்ன செய்கிறோம்? அதோடு விட்டு விடுகிறோம்.

வேறு என்ன செய்யலாம்?

அந்தக் கொழுத்த லாபம் ஈட்டும் நிறுவனத்தின் பங்குகளை முடிந்த அளவு வாங்கலாமே!

அவ்வளவு பெரிய நிறுவனத்தின் பங்குகளைப் போய் நான் வாங்குவதா? முடியுமா? என்பது போன்ற தயக்கங்களே வேண்டாம்.

சில ஏற்பாடுகளைச் செய்துகொண்டுவிட்டால் (அதற்குரிய டிமேட் கணக்கு, வங்கிக் கணக்கு, வர்த்தகக் கணக்கு திறப்பது), அந்த நிறுவனத்தின் ஒரு பங்கினை வெறும் 1000, 1500 ரூபாய்கள் கூடப் போதும். வாங்க முடியும். பலரும் வாங்குகிறார்கள். ஏ.சி.சி. நிறுவனத்தின் ஒரு பங்கு விலை: 1070; இந்தியா சிமெண்ட் : ரூ. 330 , டால்மியா சிமெண்ட்: ரூ. 525 அல்ட்ராடெக் சிமெண்ட் ஒரு பங்கு விலை : ரூ. 995 குஜராத் அம்புஜா : ரூ. 150.

இவற்றை நம்மால் வாங்க முடியாதா? எவ்வளவு பணம் இருக்கிறதோ, அதில் போட விரும்புகிறோமோ அவ்வளவு பணத்திற்கு பங்குகள் வாங்கலாம்.

சிமெண்ட் நிறுவனங்கள் மட்டும் தான் வாங்க முடியுமா? யார் சொன்னது? எந்த (பப்ளிக் லிமிடெட் & லிஸ்டட்) நிறுவனங்களின் பங்குகளையும் நாம் வாங்கலாம். மற்ற எவரைப் போலவும் நமக்கும் உரிமை இருக்கிறது.

டாடா ஸ்டீல் வேண்டுமா? வாங்கலாம். விலை 900 சொச்சம். மாருதி கார்கள் தயாரிக்கும் மாருதி உத்யோக் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்துக்கொள்ள விருப்பமா? ஓ தாராளமாக வாங்கலாம். விலை : ரூ. 1075

அசோக் லேலண்ட் :ரூ. 53 பாட்டா (ஷ¨ கம்பெனி) ரூ. 266.

இப்படியாக, இன்ஃபோசிஸ், பிரிட்டானியா (பிஸ்கெட் நிறுவனம்), கோல்கேட், ஹீரோ ஹோண்டா, டி.வி.எஸ் மோட்டார் என்று 7000 க்கும் அதிகமான நிறுவனங்களின் பங்குகள் விலைக்குக் கிடைக்கின்றன. வேண்டியவர்கள் வாங்கிக்கொள்ளலாம். அதன் மூலம் அப்படிப்பட்ட நன்கு லாபமீட்டும் புளுசிப் நிறுவனங்களில் நாமும் முதலீடு செய்யலாம்.

நாம் வாங்கும் நிறுவனங்கள் லாபம் செய்யும். லாபத்தினை முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும். அந்த ‘டிவிடெண்ட்’டுக்குக்காகவே பங்குகள் வாங்குபவர்கள் இருக்கிறார்கள். மிக அதிக லாபம் செய்யும் காலம், நாம் வாங்கிய பங்குகளுக்கு இணையாக, கூடுதல் பங்குகளை இலவசமாகவே (போனஸ் பங்குகள்) நிறுவனங்கள் வழங்கும்.

அந்த நிறுவனம் லாபம் செய்தால் நல்லதுதான். தவறி நட்டம் செய்தால் அது நம்மைப் பாதிக்காதா? பாதிக்கும் தான். நாம் வாங்கிய அளவுக்கு மட்டுமே,. அதாவது நாம் வாங்கிய பங்கின் விலை குறையலாம். நட்டம் அந்த அளவுக்கு மட்டுமே. லாபமோ நட்டமோ நாம் வாங்கும் பங்குகளின் அளவுக்கு மட்டுமே.

நல்ல நிறுவனங்களாகத் தேர்வு செய்து, அவற்றின் பங்குகளை இயன்ற அளவு வாங்கிவிட்டு, ஆண்டுக்கணக்கில் வைத்திருந்தவர்கள் நல்ல லாபம் பார்த்திருக்கிறார்கள். அந்த நிறுவனங்களைப் போலவே, நிறுவியவர்களைப் போலவே.

பல பெரிய, முன்ணணி நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம் போலத்தான் தெரிகிறது என்று தோன்றுகிறதா? தவிர ஏதோ எஸ்.ஐ.பி பற்றியும் விரிவாகச் சொல்லப்போவதா சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறதா?

ஒரு வாரம் பொறுத்திருங்கள்..

நீங்கள் மோதிரம் அணிந்திருக்கிறீர்களா, இல்லை கழுத்தில் தங்க செயின் போட்டிருக்கிறீர்களா? அதை வாங்கி சுமாராக எத்தனை வருடங்கள் இருக்கும்? மோதிரம், சங்கிலி போல இன்னும் சிலபல ஆபரணங்கள் உங்களிடமோ, உங்கள் வாழ்க்கைத் துணையிடமோ இருக்கும்.

அவையெல்லாம் உங்களிடம் எத்தனை ஆண்டுகளாக இருக்கின்றன? நீங்கள் குடியிருக்கும் வீடு அல்லது பிளாட், உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ சொந்தம் தானே! அதை வாங்கி எவ்வளவு காலம் ஆகிறது? நிலம், இடம் போன்ற இன்னும் சில சொத்துக்களும் கூட உங்களிடம் இருக்கலாம்.

அவற்றை வாங்கியும் பல ஆண்டுகள் ஆகியிருக்கலாம். அல்லது இப்போதுதான் வாங்கியிருக்கிறீர்கள் என்றால், இன்னும் பல ஆண்டுகளுக்கு நீங்கள் அவற்றை விற்கப்போவதில்லை. காரணம் அவை சொத்துகள். அவற்றை வாங்கி, விற்று அதன் மூலம் உடனடி லாபம் பார்க்க நினைப்பதில்லை.

அப்படி பல காலம் வைத்திருக்கக் கூடிய சொத்துகள் என்கிற பட்டியலில், தாராளமாக பங்குகளையும் சேர்த்துக்கொள்ளலாம். பார்க்கப்போனால், அப்படிப்பட்ட பங்குகளை வாங்கி நீண்டகாலம் வைத்துக்கொள்வது என்கிற அணுகுமுறையுடன் வாங்கினால், பங்குச் சந்தைக்கே உரியதான சில தனிப்பட்ட (பிரத்யேகபெக்யுலியர்) பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

யானையை குருடர்கள் பார்த்தது போல, சிலர் அதன் வாங்கி விற்கும் ‘டிரேடிங்’ வாய்ப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, அதன் மூலம் பணம் இழந்து, பங்குச் சந்தையே நம்பமுடியாதது என்று நினைக்கிறார்கள்.

பங்குச் சந்தை என்பதை, நன்றாக நடக்கும் நிறுவனங்களில் செய்யக்கூடிய முதலீடாக, நம்முடைய சேமிப்பினை வளர்ப்பதற்காக செய்யும் ஒரு முதலீட்டு வாய்ப்பாகவும் பார்க்கலாம். இதுதான் யானையைத் தள்ளி நின்று அதன் முழு உருவத்தினையும் பார்ப்பது. அதற்கு முக்கியமாக, நிதானம் (என்ற கண்) வேண்டும். உடனடியாக மிக அதிகமான லாபம் என்று பார்க்காத நிதானம்.

நாம் முதலீடு செய்யும் நிறுவனங்கள், சிறப்பாக வியாபாரம் செய்து லாபம் ஈட்ட, அந்த லாபம் பங்குதாரர் ஆகிய நமக்கும் பலவிதங்களில் வந்து சேரும்.

ஆக, பங்குச் சந்தையில் முதலீடு என்பது, சிறப்பாக வியாபாரம்/தொழில் நடத்தும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது.

இன்றைக்கு இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளரும் தேசம். உலகிலேயே மிக அதிகமான வளர்ச்சி காணும் நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். நமக்கு முன்னே சீனா மட்டுமே. இந்தியா மொத்தமும் (GDP யில்), ஆண்டுக்கு 9 சதவிகிதத்திற்கும் மேல் வளருகிறது

சுதந்திரம் பெற்ற பின் 45 ஆண்டுகளாக மூன்றரை, நாலு சதவிதம் மட்டுமே வளர்ந்துகொண்டிருந்த நாடு, அதுவும் கிட்டத்தட்ட 110 கோடி மக்கள் இருக்கும் நாடு, கடந்த 10, 15 ஆண்டுகளாக வேகமான வளர்ச்சி கண்டுவருகிறது.

என்ன காரணம்? பல ஆண்டுகளாக செய்தவற்றின் பலன் தெரிய ஆரம்பித்திருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்புகள் முதலியவை பெருகிவருவதால், மக்கள் சம்பாதிக்கிறார்கள். அதைவிட முக்கியமாக அதனை இங்கே செலவும் செய்கிறார்கள்.

செலவு என்பது பொருளாதாரத்தில், நல்ல வார்த்தை. மக்கள் செய்யும் செலவு என்பது, பல பொருட்களுக்கும் சேவைகளுக்குமான தேவைகளை அதிகப்படுத்தும் நடவடிக்கை. அது இப்போது இந்தியாவில் சிறப்பாக நடக்கிறது. அதனால் வியாபாரப் பெருக்கம். அதனால் தொழில் வளர்ச்சி.

இப்படியாக, சங்கிலித் தொடர் போன்ற பொருளாதார பெருவளர்ச்சி ஆரம்பித்திருக்கும் நேரம் இது. இந்தியாவின் இந்த வளர்ச்சி இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரும் என்கிறார்கள், பொருளாதார நிபுணர்கள். காரணம், சீனா உட்பட, வேறு எந்த நாட்டினையும் விட, இங்கே வயது குறைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். 30 வயதுக்குக் கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே, கிட்டத்தட்ட 60 கோடி. எல்லாம் வளம் சேர்க்கும் ’மக்கட் செல்வம்’ (Human Resource).

இப்படிப்பட்ட நேரத்தில் வியாபாரமோ, தொழிலோ செய்பவர்கள் நல்ல லாபம் ஈட்டுகிறார்கள். வியாபாரம் அல்லது தொழிலை பெரிய அளவுகளில் நிறுவனங்களாக நடத்தினால் அவைதான் ’கார்பரேட்’ கள்.

அந்த நிறுவனங்களில் பல, பப்ளிக் லிமிட்டெட் நிறுவனங்கள். அதாவது பங்குச் சந்தையில் வாங்க கிடைக்கும் நிறுவனங்கள்.

இப்படி எவரும் வாங்கக்கூடிய பட்டியலிடப்பட்டுள்ள (லிஸ்டட்) நிறுவனங்களின் எண்ணிக்கை 7000 _ க்கும் மேல். அவற்றில் கோடிக்கணக்கானவர்கள் முதலீடு செய்துள்ளார்கள்.

இவை தவிரவும், இன்னும் ஏராளமான நல்ல முதலீடு செய்யத்தக்க நிறுவனங்கள் நிறையவே இருக்கின்றன. விபரம் தெரிந்தவர்களைக் கேட்டால் சொல்லுவார்கள்.

தேசப் பொருளாதாரம் நன்றாக இருக்குமென்றால்,

குறிப்பிட்ட தொழில் நன்றாக நடக்குமென்றால்,

குறிப்பிட்ட நிறுவனம் சரியாக செயல்படக் கூடிய நிறுவனம் என்றால்,

அந்த நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்குக் கிடைக்கிறதென்றால்,

அவற்றில் முதலீடு செய்வது பலன் தானே தரும்!

ஆக, பங்குச் சந்தையை ஒரு சூதாட்டம் போலவே பார்ப்பதை நிறுத்திவிட்டு, அதிலிருந்து, முதல் சில மாதங்களிலேயே இரட்டிப்பாகும் என்பது போன்ற அதீத ஆசைகளையும் தள்ளிவிட்டுவிட்டு, அதையும் மற்ற முதலீடுகளைப் போலவே, கவனமாகத் தேர்வு செய்யலாம். அது முழுப்பலன் தரும் வரை பொறுத்திருக்கலாம்.

காரணம் பங்குகள் என்பன, நன்கு வளரும் வாய்ப்பிருக்கும் ’கார்பரேட்’ களின் உரிமைகள். அவற்றை வாங்க மற்ற எவரையும் போலவே, நமக்கும் முழு உரிமை உண்டு. அதற்கான வாய்ப்புகளும் பரவலாகியிருக்கின்றன.

சேமிக்க வேண்டும். சேமித்த பணத்தினை, சேமிக்கும் காலத்திலேயே, லாபகரமாக முதலீடும் செய்ய வேண்டும். அதற்கு எஸ்.ஐ.பி. எனப்படும் தொடர் முதலீடுகளும் ஒரு நல்ல வழி. எஸ்.ஐ.பி. யில் போடும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. பங்குச் சந்தை என்பது, நீண்டகால அடிப்படையில் நல்ல வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்பு.

இதுதான் நாம் இதுவரை பார்த்திருப்பதன் முன்கதைச் சுருக்கம்.

இனி, விட்ட இடத்தில் இருந்து, அதாவது ,

பல பெரிய, முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம் போலத்தான் தெரிகிறது என்றாலும்…

1. எது நல்ல நிறுவனம், எது சரியில்லாத நிறுவனம் என்றெல்லாம் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லையே!

2. சில நேரங்களில் விலைகள் உயர்ந்தும், வேறு சில நேரங்களில் விலைகள் வீழ்ந்தும் போகிற பங்குச் சந்தையில், எப்போது எது நிகழும் என்று முன்கூட்டியே சரியாகக் கணிப்பது சிரமமாயிருக்கிறதே! 3. ஆசை காரணமாகவும் பயம் காரணமாகவும் , முதலீட்டை அதிக நாட்கள் விட்டுவைக்க முடியவில்லையே!

4. இதில் போடும் சேமிப்பு பெருகுமா? அல்லது பங்குச் சந்தையின் பிரச்னைகள் காரணமாக, காணாமலேயே போய்விடுமா? என்கிற பதைபதைப்புடனேயே இருக்க வேண்டியிருக்கிறதே! இவற்றுக்கு என்ன செய்வது? என்று கேட்டுவிட்டு, அதற்கெல்லாம் நல்ல தீர்வாக, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் (SIP) என்று சொல்லியிருந்தோம். அது எப்படி என்பதை, கேள்விகள் இருக்கும் அதே வரிசையிலேயே பார்த்துவிடலாம்.

(1) எஸ்.ஐ.பி. யினை நடத்துபவர்கள், (நம்மைவிடக் கூடுதலாக) பங்குச் சந்தை விபரம் தெரிந்தவர்கள். எது நல்ல நிறுவனம் என்பதை அவர்களால் கணிக்க முடியும். (2) வல்லுனர்களால் பங்குச் சந்தையில் எப்போது எது நிகழலாம் என்பதை நம்மைவிடக் கூடுதலாக கணிக்க முடியும். (3) முதலீட்டில் அவர்கள் ‘புக் பிராபிட்’, ’ஸ்டாப் லாஸ்’ போன்ற ஒழுங்குமுறைகளை, தொழில்முறை திறனுடன் (புரபஷனலாக) கடைபிடிப்பார்கள். (4) பங்குச் சந்தை என்பது நீண்டகாலத்தில் சரியாகவே இருக்கும். குறுகிய காலத்தில் தான் , ’இப்படி’ ’அப்படி’ என்றெல்லாம் அதனை எவராலும் கட்டாயப்படுத்த முடியாது. எஸ்.ஐ.பி. என்பது நீண்டகால அணுகுமுறை உடையது.

எஸ்.ஐ.பி. என்பது பரஸ்பர நிதி போலவேதான். ஒருவித்தியாசம், இது தொடர் முதலீடு. அதனால் விலைகள் பரவலாகும். ஒரு சராசரி விலைகிடைக்கும். அதே நேரம், சந்தை இடையில் விழும் போது, இதில் உள்ள நம் பணத்தின் மதிப்பும் குறையத்தான் செய்யும். என்ன? படிக்கிற பையன், சிரமமான தேர்விலும், படிக்காத பையனைவிட அதிக மதிப்பெண் வாங்குவதுபோல, நாமாக செய்வதைக் காட்டிலும், தெரிந்தவர்கள்மூலம் செய்யும் போது, விழுந்தாலும் அடி அவ்வளவு பலமாக இருக்காது. தவிர நீண்டக்காலத்தில் நல்ல பங்குகள் மீண்டும் எழுந்துவிடும்.

NEXT GO TO பணமே ஓடி வா – சோம. வள்ளியப்பன் 10-15

Advertisements

One Response

  1. தங்களின் கட்டுரைகளை நிறையவே படித்திருக்கிறேன். மிகவும் நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
    வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: