சத்யம் நிறுவனத்தை இந்திய அரசு, அமெரிக்க பாணியில் Bailout செய்யக்கூடும் என்ற தகவலை இந்திய நடுவண் அரசின் வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் வெளியிட்டிருக்கிறார் . இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும். அமெரிக்காவில் செய்யப்பட்டது போன்ற பெயில் அவுட் சத்யம் நிறுவனத்திற்கு பொருந்தாது. காரணம் அமெரிக்காவின் பொருளாதாரத்தையே சில நிறுவனங்களின் சரிவு கவிழ்த்து விடும் என்ற அச்சத்தால் தான் AIG போன்ற நிறுவனங்களை அமெரிக்க அரசாங்கம் பெயில் அவுட் செய்தது. லீமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களின் சரிவு அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்ற காரணத்தால் லீமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களை பெயில் அவுட் செய்ய அமெரிக்க அரசு மறுத்து விட்டது. இதனால் தான் லீமேன் திவாலாகியது.இங்கு கூட லீமேன் பிரதர்ஸ், சத்யம் நிறுவனம் போல ஊழல் எதுவும் செய்யவில்லை. லீமேன் பிரதர்ஸ் செய்த மோசமான முதலீடுகள் காரணமாக எழுந்த நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் தான் அந் நிறுவனமும், வேறு பல அமெரிக்க நிறுவனங்களும் சரிவை எதிர்கொண்டன. தவிரவும் மிக மோசமான விலையை கொண்டிருந்த CDO (Collateralized debt obligation) பத்திரங்களை கொண்ட நிறுவனங்கள் சரிவது அமெரிக்க பொருளாதாரத்திற்கு பல வகையிலும் சரிவை கொடுக்கும் என்ற காரணத்தால் தான் பெயில் அவுட் என்பதையே அமெரிக்க அரசாங்கம் கொண்டு வந்தது. இங்கு நிறுவனங்களிடம் இருக்கும் இந்த CDOக்களை அரசாங்கம் வாங்கிக் கொள்ளும். We need to Bailout Main Street, not Wall Street என்ற கோஷம் இங்கு பலமாக ஒலித்தது.

ஆனால் இந்தியாவில் உள்ள சூழ்நிலை என்ன ? சத்யம் நிறுவனத்தை ஏன் இந்திய அரசாங்கம் பெயில் அவுட் செய்ய வேண்டும் ? சத்யம் நிறுவனத்தின் சரிவு இந்திய பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை. அதுவும் தவிர அமெரிக்க நிறுவனங்கள் போல மோசமான முதலீடுகளால் சத்யம் இந்தச் சரிவை அடையவில்லை. மாறாக ராமலிங்க ராஜூ செய்த தில்லுமுல்லுகள் தான் இந் நிறுவனத்தை சரிவுக்குள்ளாக்கியது. அப்படியான சூழ்நிலையில் சத்யம் நிறுவனத்தை ஏன் அரசாங்கம் பணம் கொடுத்து காப்பாற்ற வேண்டும் ?
சத்யம் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தான் ஒரே காரணம் என்றால், அதற்கு வேறு வழிகள் உள்ளன. இன்போசிஸ், டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் சத்யம் நிறுவனத்தினை வாங்குவது போன்றவை தான் தீர்வாக முடியுமே தவிர சத்யம் நிறுவனத்தை அரசாங்கம் பெயில் அவுட் செய்வது அல்ல. அமெரிக்காவில் கூட மோசமான நிலையில் இருந்த Washington Mutual போன்ற நிறுவனங்களை JP Morgan Chase போன்ற நிறுவனங்கள் வாங்கின. இதைத் தான் இந்தியாவிலும் அரசாங்கம் செய்ய வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் மக்களின் வரிப்பணத்தை கொடுத்து சத்யம் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டிய
அவசியம் இல்லை. கடந்த காலங்களில் இந்தியாவில் பல் வேறு இடங்களில் இருந்த பல தொழிற்சாலைகள், ஆலைகள் மூடப்பட்ட பொழுது ஏன் இந்திய அரசுக்கு எந்த ஆலையையும், அதனால் பாதிப்பு அடைந்த தொழிலாளிகளையும் காப்பாற்றும் எண்ணம் ஏற்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியாக வேண்டும். என் ஊருக்கு அருகில் இருக்கும் கடலூர் சிப்காட் மற்றும் புதுவையில் பல ஆலைகள் மூடப்பட்டன. அதில் பணியாற்றிய பல தொழிலாளிகள் தங்கள் வாழ்க்கையை இழந்தனர். பொருளாதார ரீதியில் நசிந்து போயினர். அவர்களை எந்த அரசாங்கமும் காப்பாற்ற வில்லை. ஆந்திராவிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல விவசாயிகள் தங்களின் விவசாயம் நசிந்து போய் தற்கொலை செய்து கொண்ட பொழுது இந்திய அரசாங்கம் அவர்களை பெயில் அவுட் செய்ததா ? தேர்தல் நேரம் வந்தால் மட்டும் விவசாய கடன் ரத்து செய்யப்படும்.
ஜெயலலிதா அரசாங்கம் அரசு அரசு ஊழியர்களை கூண்டோடு பணி நீக்கம் செய்யப்பட்ட பொழுது, அதுவும் 40-45 வயது மதிக்கத்தக்கவர்கள் அரசு வேலை தவிர வேறு வேலைகள் தெரியாத நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொழுது ஊடகங்கள் தொடங்கி, நீதிமன்றம் வரை அதற்கு வக்கலாத்து தான் வாங்கினார்கள். அவ்வாறு வக்காலத்து வாங்கிய என்னுடைய சக ஐடி தோழர்களையும் நான் அறிவேன்.
ஆனால் இப்பொழுது இதே ஊடகங்கள் அலறுகின்றன.
சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 800 பணிப்பெண்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். உடனே ஊடகங்களுக்கு எழுந்த கவலையும், அக்கறையும் நெஞ்சை உருக்கியது. ஊடகங்கள் ஓங்கி குரலெழுப்பின. உடனே அவர்கள் அனைவரையும் ஜெட் ஏர்வேஸ் மறுபடியும் பணிக்கு அமர்த்திக் கொண்டது. ஆனால் இந்த கருணை எல்லாம் ஏழை தொழிலாளிகளுக்கோ, விவாசாயிகளுக்கோ கிடையாது.
நன்றி – சசி
சத்யம் – சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள `சத்யம் கம்ப்யூட்டர்ஸ்’ நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். தற்போதைய நிதி மோசடி பிரச்சினையால், சத்யம் கம்ப்ïட்டர்ஸ் நிறுவனத்தில் ஆள்குறைப்பு செய்யப்பட்டதில் வெங்கடேசனுக்கும் வேலை பறிபோனது.
இதனால் மன உளைச்சலுடன் இருந்த அவர், நேற்று மாலை விஷம் குடித்தார். அவரை சென்னை அரசு பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் பற்றி செம்பியம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட வெங்கடேசன் திருமணம் ஆகாதவர் ஆவார்
( செய்தி: தினத்தந்தி )
IT நிறுவனங்கள் தொடங்க தடை விதிக்கும் தமிழ்நாடு
என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
இனி IT துறையில் தமிழகத்தில் முதலீடு தேவை இல்லை என்றும், தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பினால் வேறு துறைகளில் மட்டும் தான் தனியார் கம்பெனிகள் தொழில் தொடங்க
அனுமதிக்க படும் என்று வெளிப்படையாக வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காட்டு வீராச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் திறமை சிறிதும்
இல்லாத அமைச்சரின் கையில் மின் துறை இருப்பதால், தமிழகத்தில் மின்சார சிக்கல் பல மடங்கு பெருகி, அது மாநில அரசிற்கே மிகப்பெரிய கெட்டப்பெயற் பெற்று கொடுப்பது உலகம்
அறிந்தது. இது வரை மின் துறையை மட்டும் கெடுந்து வந்த ஆற்காட்டார் தற்போது தமிழக IT துறையையும் கெடுக்க கிளம்பி விட்டதாக தெரிகிறது.IT துறை முதல்வரின் வசம்
இருப்பது குறிப்பிட தக்கது. எனவே இது முதல்வரின் கருத்தா? அல்லது முதல்வரின் பெயரை கெடுக்க செய்யப்படும் சதியா என்பது தெரிய வில்லை. சில நாள்களுக்கு முன்னர் கட்சியின்
பொருளாளர் பதவி ஆற்காட்டாரிடமிருந்து பறிக்க பட்டது நினைவில் இருக்கலாம்.
தற்போது 50% நிறுவனங்கள் தமிழகத்தில் மூட பட்டுள்ளதாக தகவல் கொடுத்துள்ளார். அது உண்மை என்றால் பத்திரிக்கைகளில் எப்போதே செய்திகள் வந்திருக்கும் அனைத்து தொழிற் துறைகளும் தமிழகத்தில் வளர வேண்டும். இதில் சந்தேகமே இல்லை. உற்பத்தி துறை வளர்வதன் மூலம் unskilled மற்றும் semiskilled தொழிளாலர்களுக்கு வேலை கிடைக்கும்.படித்த மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும் துறையாக IT துறை உள்ளது .கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் பல நூறு பொறியியல் கல்லூரிகள் தொடங்க பட்டுள்ளன. அறிவியல் கல்லூரிகளிலும் பல கணிணி தொடர்பான பட்ட படிப்புகள் தொடங்க பட்டுள்ளன. இதில் பல லட்ச கணக்கான மாணவர்கள் பல லட்சம் கட்டணம் செலுத்தி படிக்க சேர்வதன் நோக்கமே IT துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை தான். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை நடத்துவதும், இந்நாள் மற்றும் முந்நாள் அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களது பினாமிகளுமே ஆவர்.
தமிழகத்தில் IT நிறுவனங்கள் தொடங்கினால், இங்கு உள்ள கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம்.பிற மாநிலத்தில் கம்பெனி தொடங்கினாலும்,தமிழகத்தில்
படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றாலும், IT நிறுவங்கள்,fesher recruitmentல் அந்தந்த மாநில கல்லூரிகளில் படிப்பவருக்கே முக்கியத்துவம் தருகிறது.மேலும்
நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் வாங்கும் திறனினால் மற்ற தொழில்களும் வளர்கிறது.
தமிழகத்தில் சென்னையை தவிர்த்த மற்ற நகரங்களிளும் IT கம்பெனிகளை தொடங்க கடுமையான முயற்சி செய்து வரும் நிலையில், இது போன்ற அமைச்சர்களின் செயல்பாடு பெரும்
பாதகங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.IT துறையின் எதிகாலம் பிரகாசமாக இல்லை என்றும், அதனால் அத்துறை நிறுவனங்களை தமிழகத்தில் தொடங்க கூடாது என்றும் ஆற்காட்டார் கூறியுள்ளார். முழு விவரங்களுக்கு இங்கு சுட்டவும், தான் தொடங்கும் தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று முடிவு செய்பவர்கள் அந்த தொழிலை தொடங்குபவ்ர்களே அன்றி அரசாங்கம் இல்லை.அப்படி பட்ட நிலையில் ஆற்காட்டார் இவ்வாறு கூறியிருப்பதன் காரணம் விளங்க வில்லை.IT கம்பெனிகளை இழுக்க பல மாநிலங்கள் முயற்ச்சி செய்வதால், அந் நிறுவனங்களை தொடங்க கம்பெனிகள் லஞ்சம் எதுவும் கொடுக்க மறுப்பதுதான் காரணமா என்று தெரியவில்லை.
தமிழகத்தை சேர்ந்த சில அமைச்சர்கள் நன்றாக செயல்பட்டு தமிழக முன்னேற்றத்துக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், இது போன்ற மோசமான அமைச்சர்களை தொடர்வதன் மூலம் தி.மு.க மீண்டும் 20 வருட காலம் வெற்றியின்றி வனவாசம் செல்ல வேண்ய நிலை வந்தாலும் வரலாம்
விப்ரோ சத்யம் மற்றும் பங்குச் சந்தை
விப்ரோ
உலகவங்கி விப்ரோவை 2011 வரை தடைசெய்திருக்கிறது. முதலில் விப்ரோ conflict of interest என சால்ஜாப்பு சொன்னது. உலக வங்கி தெளிவாக தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு லஞ்சம் (இதையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருந்தார்கள்) கொடுத்ததால்தான் விப்ரோவைத் தடைசெய்ததாய் அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து விப்ரோ டெக்னாலஜிஸின் Co – Chief Executive கிரிஷ் பரஞ்சபே சொல்லியது :
“நிறுவனத்தின் 2% பங்குகளை எங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கும் சில வாடிக்கையாளர்களுக்கும் கொடுத்தோம். அப்படி issue priceல் 72,000 டாலர்களுக்கு உலக வங்கியில் பணிபுரிபவர்களுக்கு தந்தோம். அந்த வங்கியிடம் எங்களுக்குப் பெரிதாக ஒன்றும் வர்த்தகமில்லை, அதிகபட்சம் மொத்தமாக 10 லட்சம் டாலர்கள்கூட இல்லை.”
இதில் முக்கியமான சிக்கல் என்னவென்றால் வேலை செய்பவர்களுக்குச் ஊக்கத்தொகை, போனஸ் தரலாம். ஆனால், அதையே வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தால்…??
விப்ரோவே வெளிப்படையாகச் சொல்லியபடி மொத்த வியாபாரத்தில் 7.2% மதிப்பிற்கு பங்குகளைக் கொடுத்திருக்கிறார்கள் (issue priceற்கும் சந்தை விலைக்குமான வித்தியாசத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!).
விப்ரோ கொடுத்திருப்பது அப்பட்டமான லஞ்சம். இதன் மூலமே பெரிய வணிக நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், இப்படி வெட்ட வெளிச்சமாகி, விப்ரோ போன்ற நிறுவனங்களின் புனித பிம்பங்கள் கட்டவிழத் துவங்கியது ஒருவிதத்தில் நல்லதுதான்.
அரசியல்வாதிகளை sting oprationaகளிலிருந்து பலவற்றையும் செய்து தோலுரிப்பதுபோல் வணிக நிறுவனங்களைச் செய்வதில்லை ஊடகங்கள். அதற்கு விளம்பரம் மட்டுமல்ல, என்ன இருந்தாலும் அவர்கள் நம்மைபோன்ற முதலாளிகள் என்ற பாச உணர்வுதான் காரணமாயிருக்கமுடியும். தொலைக்காட்சி ஊடகங்களின் புனிதபிம்பங்கள் எப்போது உடையுமோ தெரியவில்லை.
சத்யம்
சத்யம் பிரச்சனையில் ராமலிங்க ராஜூவையும் அவரது தம்பி ராம ராஜூவையும் (காலதாமதமாகக்) கைது செய்தது செபி விசாரணையை ஒத்திப் போடத்தான் எனச் சிலர் சொல்கிறார்கள். ஹைதராபாத்தில் உள்ள அரசு – இயந்திரத்திற்கும் ராஜூக்களுக்குமுள்ள நெருங்கிய உறவு வெள்ளிடைமலை. உபரி தகவலாக 25 வழக்கறிஞர்கள் கொண்ட ஒரு பெரிய குழு ராஜூவிற்காக வாதாடப் போகிறதாம். இவ்வளவு பெரிய குழுவிற்கு எவ்வளவு செலாவுகுமோ என விசனப்பட்ட என்னிடம், யார் வீட்டுக் காசு என்கிறான் என் நண்பன்!
இப்போதாவது சில கேள்விகள் கேட்கப்பட்டேயாக வேண்டும்!
1. ஊடகங்கள் ஏன் சத்யத்தில் உழைப்பவர்களின் (யூகமாக இல்லாமல் போகப்போகும்) வேலையைப் பற்றி இவ்வளவு அதிகமாக கவலைப்படுகின்றன. டன்லப் போன்ற தனியார் நிறுவனங்களிலும், தமிழக அரசின் சாலைப் பணியாளர்களும் வேலையிழந்தபோது இந்த அக்கறை வந்ததா?
2. மக்களின் வரிப் பணத்தை எதற்காக சத்யம் போன்ற ஒரு தனிப்பட்ட (அதுவும் ஆரம்பித்தவர்கள் செய்த திருட்டு காரணத்தால் கவிழப்போகும்) நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த செலவு செய்ய வேண்டும்?
3. இப்போது ஆடிட்டர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொல்லும் ICAI, இதே ஆடிட்டர்கள்மீது GTB Bank தொடர்பாகப் பலவருடங்கள்முன் ஆரம்பித்த விசாரணை என்ன ஆனது? இம்மாதிரியாகத் தவறு செய்த பல உள்ளூர் ஆடிட்டர்கள் தடைசெய்யப்பட்டிருக்கிறார்கள் எனச் சொல்லித் தப்பிக்க முடியாது; கேள்வி, பன்னாட்டு முதலாளிகள் என்றால் மட்டும் ஏன் உங்கள் நடவடிக்கைகள் நொண்டியடிக்கின்றன என்பதுதான்.
4. SBI மேதாஸ் இன்ஃபிராவிற்கு 500 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. அதை வராக் கடனாக அறிவிக்க நேரலாம் என இப்போது சொல்லியிருக்கிறது. ஏன் இவ்விஷயத்தில் இத்தனை நாட்கள் மௌனம்?
5. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிலங்களை 4 மடங்குகள் குறைந்த விலையில் மேதாஸ் இன்ஃபிராவிற்குக் கொடுத்திருக்கும் ஆந்திர அரசு மேலும் முன் பணமாக 600 கோடி ரூபாய் பல்வேறு திட்டங்களுக்காகக் கொடுத்திருக்கிறது. இந்தத் திட்டத்தை ஒரு scam waiting to happen என dmrc ஸ்ரீதரன் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் (ஸ்ரீதரனுக்குப் பரிவட்டம் கட்டுவது என் நோக்கமல்ல). ஆனாலும் அந்தத் திட்டத்தைத் தொடர்ந்தது ஏன்?
பங்குச் சந்தை
சுழியம் போன்ற நண்பர்கள் பங்குச் சந்தையில் நிறுவனங்களின் நிலைபார்த்து முதலீடு செய்ய வேண்டுமென்றும், எவ்வளவுக்கெவ்வளவு அபாயம் கூடுதலோ அவ்வளவுக்கவ்வளவு லாபமும் கூடுதல் போன்ற வாதங்களை முன்வைக்கிறார்கள்.
உண்மையில் என்ன நடக்கிறது? அவர்கள் கொடுக்கும் நிதிநிலை அறிக்கையே பொய்யானது எனும்போது எதன் அடிப்படையில் நீங்கள் முடிவு செய்யமுடியும்? போக, அவர்கள் தொழில் செய்ய நீங்கள் எதற்காகப் பணம் தர வேண்டும்? அவர்களுக்கு வேண்டுமானால் கடன் பத்திரங்களை வெளியிட்டு பணம் திரட்டிக் கொள்ளட்டுமே. உதாரணத்திற்கு இப்போது சத்யம் பங்குகளையே எடுத்துக் கொள்வோம்… எவ்வளவு பேர் அதை 550 ரூபாய்க்கு ஒரு பங்கு என்ற வீதத்தில் வாங்கியிருப்பார்கள். ஆனால் சத்யம் 20% டிவிடெண்ட் என்றாலும் அதன் அடக்க விலையான 2 ரூபாய்க்குத்தானே தருகிறார்கள் (அதாவது ஒரு பங்கிற்கு நீங்கள் 550 ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தாலும் அம்முதலீட்டிற்கு வருடத்திற்கு 80 பைசா டிவிடெண்டாகப் பெறுகிறீர்கள்!).
அபாயம் கூடுதலாக இருந்தால் லாபம் கூடுதலாக இருக்கும் என்பது அவர்கள் கிளப்பிவிட்ட மாயை!
சென்செக்ஸிலிள்ள 30 கம்பெனிகளின் (மற்றும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின்) மொத்த சந்தை மதிப்பீடென்ன, இந்தியாவின் gdp என்ன போன்ற சிக்கலான விஷயங்களுக்குப் போகாமலேயே பங்குச் சந்தை என்பது ஒரு ஏமாற்றுவேலை என்பது புரியும்.
யோசித்துப் பாருங்கள். கடந்த இருபது வருடங்களில் நடந்த மிகப் பெரிய பொருளாதார ஊழல்கள் பங்குச் சந்தையோடு நேரடித் தொடர்புடையவை (ஹர்ஷத் மேத்தா & பாரேக்). இப்போது சத்யம். நேரடித் தொடர்பில்லாவிட்டாலும், இது பங்குச் சந்தை மதிப்பிடலை (stock market valuation) அதிகப்படுத்த தொடர்ந்து ஓடுவதால் ஏற்படும் பிரச்சனையாகச் சொல்லலாம். இதில் உள்ள பண சுருட்டல்கள் தனிக் கதை!.
இது தொடர்பாக முன்னர் எழுதிய இடுகைகளின் சுட்டிகள் :
http://jyovramsundar.blogspot.com/2009/01/blog-post_1051.html
நிதி நெருக்கடி- சில பாடங்கள் 2-கடன் தர சான்றிதழ்(Rating Agency) கொடுக்கும் அமைப்புகளின் செயல்பாடு
முதலில் தரவரிசை படுத்தும் நிறுவனங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம். ஒரு கடனை ஒரு முதலீட்டாளர் வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம். முதலில் அந்த கடனை வாங்கியவர் யார் என்று பார்க்க வேண்டும். பிறகு வாங்கியவரின் வருமானம் எவ்வளவு என்றும் அந்த வருமானத்தின் மூலம் என்ன? என்றும் பார்க்க வேண்டும்.ஒரே ஒரு கடன் என்றால் எளிதில் விசாரித்து விடலாம். பத்து பேர் வீட்டுகடன் வாங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம். வங்கிகள் வீட்டுகடனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விட்டு, அந்த கடன்கள் அனைத்தையும் ஒன்றாக்கி அந்த ஒன்று படுத்தபட்ட கடனை முதலீட்டு வங்கிகளுக்கு(Investment bank) விற்று விடும். அனைத்து கடனையும் இம்முதலீட்டு நிறுவனங்கள் சரி பார்ப்பது மிகவும் கடினமான செயல். பல கடன்களை ஒன்று சேர்த்து ஒரே கடனாக கொடுக்கும் போது எவ்வாறு அதை சரி பார்ப்பது? அங்கு தான் தரவரிசை படுத்தும் நிறுவனங்களின் சேவை வருகிறது. இது போன்ற கடனின் தன்மையை அராய்ந்து , அதன் சாதக பாதகங்களை சரிபார்த்து அதற்கு தர சான்றிதழ்களை அளிப்பது இந்த நிறுவனங்களின் வேலை.உதாரணமாக இது போன்ற நிறுவனங்கள் ஒரு கடனுக்கு “AAA” என்று சான்று அளித்தால் அந்த கடன்கள் மிகவும் நம்பகமானவை.அந்த கடனை வாங்கியவர்கள் நிச்சயம் திருப்பி கட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம்.AAA என்று தரவரிசை படுத்த பட்ட எந்த ஒரு கடனையும் முதலீட்டளர்கள் தைரியமாக முதலீடு செய்யலாம். ஒட்டுமொத்த அமெரிக்க பொருளாதார முதலீட்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த நிதி நிறுவன தரச்சான்றிதழ்கள் தான் அஸ்திவாரமாக உள்ளது.பென்சன் நிதி முதலீட்டு நிறுவனங்கள் போன்ற குறைவான் riskல் அதிக அளவு முதலீடு செய்யும் நிறுவங்கள், கடனின் riskஐ இது போன்ற தர நிர்ணயம் செய்யும் நிறுவங்கள் கொடுக்கும் சான்றிதழை கொண்டுதான் நிர்ணயிக்கின்றனர்.கடன் மட்டுமின்றி பத்திரம், கம்பெனி போன்ற பலவற்றிற்கும் இந்த நிறுவனங்கள் தர சான்றிதழ் அளிக்கும்.Moody’s,Standard&Poor மற்றும் Fitch போன்ற நிறுவனங்கள் இதற்கு உதாரணம்.
அமெரிக்க பொருளாதாரத்தின் அச்சாணியாக உள்ள இந்த நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால் நடந்ததோ வேறு.இந்த நிறுவங்கள் அதிக லாபத்துக்கு ஆசை பட ஆரம்பித்தன.இந்நிறுவங்களின் வாடிக்கையாளர்கள், கடனை தர வரிசை படுத்தி தர கேட்பவர்கள். எனவே வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தினால் தான் மீண்டும் தங்களிடம் வருவார்கள். மேலும் அதிக அளவு கட்டணமும் வசூலிக்க முடியும். அதன் விளைவு, தரசான்றிதழ் கேட்கபடும் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ஆராயாமல், AA மற்றும் AAA என சான்றிதழ்களை அடித்து தள்ளி விட்டனர்.இதன் மூலம் தர சான்றிதழ் கொடுக்கும் நிறுவனங்களின் லாபம் பல நூறு மடங்கு பெருகியது.
தனிபட்டவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளும், பணம் திரும்பி கிடைக்க பல ஆண்டு பொருத்திருக்காமல், முதலீட்டு நிறுவங்களுக்கு இந்த கடனை தர சான்றிதழ் காட்டி விற்று(Credit Dedault Swap), மேலும் மேலும் கடன் கொடுக்க தொடங்கியது. இந்த வகை அடமான கடனின் மதிப்பு, சில ட்ரில்லியன் டாலர்களை கடந்தது .அவற்றில் இருந்த பெரும்பாலான subprime கடன்களை வாங்கியவர்களின் நம்பகதன்மை மிகவும் குறைவாக இருந்தது. அவர்களுக்கு நிலையான வருமானமும் இல்லை.இருந்தாலும் அந்த கடனுக்கு மிகவும் அதிக தரவரிசை கொடுத்தனர். அமெரிக்க real estate வீழ தொடங்கிய போது இதுபோன்ற கடன்களை வாங்கியவர்கள் திருப்பி கொடுக்க முடியாத போது, அதில் முதலீடு செய்த நிறுவங்கள் படு பாதாளத்த்ற்கு விழ ஆரம்பித்தது.அது ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சிக்கு வழிகோலியது.இது போன்ற நிறுவனங்களில், உண்மையை கூற முன் வந்த ஊழியர்களும் நீக்க பட்டனர்.நிறுவனங்கள் அதிக பத்திரங்களை கண்காணித்தாலும், குறைந்த அளவே ஊழியர்களை வைத்து லாப நோக்கில் செயல் பட்டனர்.
இனியாவது இது போன்ற நிறுவனங்களை அரசாங்கம் கண்கானித்து ஒழுங்கு படுத்துமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
நிதி நெருக்கடி- சில பாடங்கள் 1-சந்தையில் அரசின்
கட்டுப்பாடு
மோடியை பிரதமராக்குங்கள்!
நேற்று 14.01.2009 அன்று குஜராத்தில் நடைபெற்ற தொழிலதிபர்கள் கருத்தரங்கத்தில் சுவாரஸ்யமான, ஆனால் மிக முக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்று பெரும்பாலான தொழிலதிபர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. “நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக்கப்பட வேண்டுமென்பது” தான் அது.
குஜராத், ஜனவரி 2001 ன் நிலநடுக்கத்தினாலும் உள் மாநில பிரச்சினைகளினாலும் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்குள்ளான நிலையில் அக்டோபர் 2001 ல் பொறுப்பேற்ற இவரது ஆட்சியில் தான் குஜராத் மாநிலம் இந்தியாவிலேயே அதிக தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவெடுத்தது; அதாவது மோடி பொறுப்பேற்ற முதல் ஆண்டு குஜராத் 10% வளர்ச்சி வீதம் கண்டது. கடந்த ஆண்டில் அது மேலும் உயர்ந்து 11.5% ஆகியுள்ளதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.
மேற்கு வங்காளம் துரத்தியடித்த டாடாவின் நானோ கார் தொழிற்சாலையையும் இருகரம் கூப்பி வரவேற்ற பெருமையும் மோடிக்கு உண்டு.
பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வருமெனில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் பாராளுமன்ற தாக்குதலில் பிடிபட்டு திஹார் சிறைச்சாலையிலிருக்கும் அஃப்ஸல் குருவை 2004 ன்உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தூக்கிலடவும் தயங்கமாட்டோம் எனவும் சில ஆண்டுகளாகவே பிரச்சாரித்தும் வருகிறார்.
மோடிக்கு பாதகமானவை
பிப்ரவரி 2002 ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற கலவரங்களை தடுக்கத் தவறியதில் தேசிய அளவில் பெரும்பாலான கட்சிகளும், மக்களும் இன்றளவும் மோடி மீது தவறான எண்ணம் கொண்டிருப்பினும்; நானாவதி விசாரணை கமிஷனோ, குஜராத் மாநில மக்களோ அவர் குற்றவாளி என தீர்த்துவிடவில்லை. அதனால் தான் 2007 ல் மோடியை மூன்றாவது முறையாக குஜராத் மக்கள் அமோகமாக வாக்களித்து முதல்வராக தெரிந்தெடுத்தனர்.எனினும் தேசிய அளவில் ஆதரவு கேள்விக்குறியே.
கோத்ரா சம்பவத்தால் உலக அளவில் குறிப்பாக அமெரிக்காவில் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. அமெரிக்கா செல்வதற்கு 2003ல் ஒருமுறையும் ஆகஸ்ட் 2008ல் மறுமுறையுமாக இருமுறை விசா மறுக்கப்பட்டுள்ளார். இச்செயலுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கே அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறது என கண்டனம் தெரிவித்திருந்தார்.
நவம்பர் 2008 மும்பை தாக்குதலின் போது; கமாண்டோ படைகள் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அழையா விருந்தாளியாக சம்பவ இடத்திற்கு சென்று பரபரப்பையும்; பொதுமக்களிடையே கெட்ட பெயரையும் சம்பாதித்துக் கொண்டார் (வேற்று மாநில முதல்வர், பிற மாநிலத்திற்கு செல்ல என்ன அவசியமோ? அதுவும் இக்கட்டான சூழ்நிலையில்)
அத்வானி யள் மோடி
பிரதமர் பதவிக்கு கட்சியினாலும் மூத்த தலைவர்களினாலும் அத்வானி முன்னிறுத்தப்பட்டிருக்கையில், மோடியை முன்னிறுத்த வேண்டுமென்று சில அத்வானி அதிருப்தியாளர்களும் (ஜின்னா கருத்திற்கு எதிர்ப்பாளர்களோ என்னமோ?) அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களும் கூறி வருவது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் என்று தான் பரபரப்பு இல்லை என்கிறீர்களோ! (As a famous quote says there is never a dull day in Indian politics)
முன்குறிப்பு :
பெரு நகரங்களில் எழுந்திருக்கிற செல்போன் வளர்ச்சியும், வாகன போக்குவரத்து வளர்ச்சியும் பார்த்து விட்டு, பலர் இந்தியாவே முன்னேறிவிட்டது என அப்பாவித்தனமாய் நம்புகிறவர்கள் பலர். அவர்கள் அளவுக்கு நம்பிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. என்னிடம் ஒருவர் இதையே ஆதாரமாய் கொண்டு ஆணித்தரமாய் (!) பேசினார். பின்வருகிற கட்டுரை உண்மை நிலையை விவரிக்கிறது.
“நம் நாட்டில் 87 கோடி பேர் நாளொன்றுக்கு ரூ.20க்கும் குறைவாக வருமானம் பெற்று உயிர் வாழ்ந்து வருகிறார்கள்.”
இப்படி செய்தி வெளியான பொழுது, யாரும் நம்ப மறுத்தார்கள்.
இந்திய ஏழைகள் பற்றி இந்த அதிர்ச்சிகரமான விபரத்தை வெளிப்படுத்தியவர் டாக்டர் அர்ஜூன் சென்குப்தா எம்.பி.,. தேசிய அமைப்புசாரா தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இவர் செயல்பட்டு வருகிறார்.
மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தையைக் கொண்ட இந்தியா, உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்து (9.12.2008) நாளிதழில் விவரித்துள்ளார். அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது)
****
இந்திய அரசு அண்மையில் ஏற்று மதியாளர்களுக்குச் சில சலுகைகளை அறிவித்துள்ளது. பணக்கார நாடுகளில் சந்தைகள் தேக்கமடைந்துள்ள நிலை யில் நுகர்வுத் தேவை அதிகரிக்காது. எனவே மத்திய ஆட்சியாளர்களின் இது போன்ற நடவடிக்கைகளால் பொருளா தார நெருக்கடிக்குச் சரியான தீர்வு ஏற்படாது. மாறாக இந்த பொருளாதார நெருக்கடி மேலும் தொடரவே செய்யும்.
இந்திய மக்களின் நுகர்வுத் தேவை யை விரிவுபடுத்தி உள்நாட்டுச் சந்தை யை பலப்படுத்த வேண்டும். இந்தியாவில் 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி மிகக் குறைந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. சுமார் 26 கோடி பேருக்கு இந்த பலன்கள் கிடைத்தபோது பெரும் பான்மையான 87 கோடிப் பேர் புறக் கணிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என்று சொல்லப்படும் இந்த கால கட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.12 மட்டுமே ஈட்டிவந்த மக்களில் கொஞ்சம்பேர் (2004 – 05ல்) நாளொன்றுக்கு ரூ.20 வருமானம் பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். இதுதான் ஏழைகள் பெற்ற முன்னேற்றம்! வளர்ச்சி யின் பலன் தங்களைப் புறக்கணித்துச் செல்வதை அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த 87 கோடி மக்களில் ஆகப் பெரும்பான்மையானோர் எழுத்தறிவில் லாதவர்களாக அல்லது ஆரம்ப கல்வி மட்டுமே பெற்றவர்களாக இருக்கின்றனர். சத்தான உணவு கிடைக்காமல் நோயில் துன்புறுகின்றனர். பெரும்பாலும் வேலை வாய்ப்பு கிடைக்காதவர்கள் அல்லது ஏழை உழைப்பாளிகள், சாலையோர வியாபாரம் போன்ற அமைப்புசாராத சுய வேலை செய்யும் தொழிலாளி வர்க்கத் தினராக இவர்கள் இருக்கின்றனர்.
வேளாண்மை துறையைச் சேர்ந்த 84 சதவீதம் குடும்பத்தினர் இந்த பொருளா தாரத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின் றனர். அதிகபட்சம் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கக்கூடிய ஏழை விவசாயிகளான இவர்கள் வாழ்வ தற்காக நிலத்தோடு போராட வேண்டி யிருக்கிறது. மேலும் வாழ்க்கைத் தேவைக்கு விவசாயம் இல்லாத இதர உள்ளூர் வேலைகளை எதிர்பார்த்திருக்கின்றனர்.
தொழில் துறையைப் பொறுத்தவரை 5 கோடியே 80 லட்சம் சிறு, குறு தொழிற் கூடங்களில் 10 கோடியே 40 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ரூ.5 லட்சத்துக்குக் குறைவான முதலீடு கொண்ட இந்த சிறிய தொழிற்சாலை களில் மிக துன்பகரமான நிலைமையில் இவர்கள் வேலை செய்கின்றனர். கைத் தறி, கைவினை, கயிறு, தோல், ஆயத்த ஆடை, உணவு பதப்படுத்துதல் மற்றும் உலோகத் தயாரிப்பு தொழில்களில் வேலை செய்யும் இவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31 சதவீதம் பங்களிக்கின்றனர். இவர்களது உற்பத்திப் பொருட்களில் ஏறத்தாழ 90 சதவீதம் உள்நாட்டு சந்தைகளில் நுகரப்படுகிறது.
அரசு வழங்கும் நிதி தூண்டிவிடல் (ளவiஅரடரள) என்பதன் அர்த்தம் இந்தப் பிரிவினரை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். இதன் மூலம் உள்நாட்டுத் தேவையை விரிவாக்க வேண்டும்.
5 கோடியே 80 லட்சம் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு நிதி மற்றும் கடன் வசதியை நாம் அதிகரிக்க வேண்டும்.
நம் நாட்டு வங்கிகள் வழங்கும் நிகரக் கடனில் 5 கோடியே 40 லட்சம் தொழிற்சாலைகள் பெறும் கடன் வசதி வெறும் 2.2 சதவீதம் மட்டுமே. அதிகபட்சம் ரூ.25 லட்சம் முத லீட்டில் இயங்கும் இதர 40 லட்சம் சிறு தொழிற்சாலைகள் பெறும் கடன் வச தியும் மொத்த நிகரக் கடனில் 4 சதவீதம் தான். இந்த தொழிற்சாலைகளுக்கு வழங் கும் கடன் அளவை இன்னும் 1 சதவீதம் அதிகரித்தாலே புதிதாக 1 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர முடியும். உள்நாட்டு மொத்த உற்பத்தியும் பெருகும்.
அமைப்பு சாரா துறைக்கு தனி நிதி நிறுவனம்
வேளாண் துறைக்கு கடன் வழங்க ஏற்படுத்தப்பட்ட நபார்டு வங்கி போல அமைப்புசாரா துறைகளுக்கு கடன் மற்றும் நிதி வசதி ஏற்படுத்த தனி நிதி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும் என்று அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம் ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியது. அமைப்புசாரா தொழில்களுக்கு கடன் வசதி மட்டுமின்றி, சந்தை வாய்ப்பு, தொழில்நுட்பம், காப்பீடு வழங்கவும் இந்த நிதியமைப்பு தேவை.
மத்திய அரசின் குறைந்தபட்சப் பொதுத் திட்டத் திலேயே அமைப்புசாராத் தொழில்களுக்கு வசதி ஏற்படுத்தித்தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு தேவையான நிதி முதலீடு செய்து இந்த பரிந்துரையை உடனடியாக நடைமுறைக் குக் கொண்டு வர வேண்டும்.
அரசின் கடன், மானியங்களைப் பெறு வதில் வழக்கமாக பலனடையும் பெரிய விவசாயிகளைத் தவிர்த்து, சிறிய, ஏழை விவசாயிகள், அமைப்புசாராத் துறையை நம்பி இருப்பவர்கள் பலனடையும் வகையில் ரூ.5 ஆயிரம் கோடி அளவில் திட்டத்தை தேசிய ஆணையம் பரிந்துரை செய்தது. இதையும் அரசு நடைமுறைப் படுத்த வேண்டும்.
மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற பொது உள்கட்டமைப்பு களில் நிதி ஒதுக்கி தூண்டிவிடும் நட வடிக்கையை அரசு மேற்கொள்வதன் மூலம் அமைப்புசாரா துறை பொருளாதா ரத்தையும் ஊக்குவிக்க முடியும்.
குறிப்பாக கிராமப்புற சாலை, சந்தை, மின்வசதி, சிறிய நீர்ப்பாசன திட்டங் களை அரசு பொது முதலீட்டைச் செலுத்தி மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி பெருமளவு விரிவடையும். இது உள் நாட்டு தேவையை அதிகரிக்கும். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை இன்னும் தீவிரமாக நடை முறைப்படுத்துவதன் மூலமும் கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து உள்நாட்டுத் தேவையைப் பெருக்க முடியும்.
ஏழ்மையில் துன்புறும் 87 கோடி மக்களை நோக்கி வருமானத்தை மாற்றி விடுவதற்காக வருத்தப்படத் தேவையில்லை.
வளர்ச்சியின் இறுதி இலக்கு என்பது சாமானிய மக்களின் நலன்களை மேம்படுத்துவதுதானே? மேலும் 36 கோடி அமைப்புசாராத் தொழிலாளர் களின் சமூகப் பாதுகாப்புக்கு தேசிய ஆணையம் விரிவான திட்டம் தீட்டியுள் ளது. இதை செயல்படுத்த மொத்த உள் நாட்டு உற்பத்தியில் அரை சதவீதம் ஒதுக்கினாலே போதுமானது. இதை நிறைவேற்றுவதன் மூலம் எதிர்பாராத இழப்பு, விபத்துக்களில் இருந்து அந்த மக்களைக் காக்கலாம். அவர்களின் வாங்கும் சக்தியையும் குறையாமல் பாதுகாக்கலாம். இவர்கள் வாங்கும் சக்தி அதிகரிப்பதால் அத்தியாவசியப் பொருட் கள் நுகர்வு அதிகரிக்கும். நாட்டிலுள்ள சிறு, குறு தொழிற்சாலைகளின் உற்பத்தி பெருகும்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மற்ற முதலாளித்துவ நாடு கள் பின்பற்றும் வழிமுறையை நம் நாடும் பின்பற்ற வேண்டியதில்லை. மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தை இருந்தும் இத்தனை காலமாக அது புறக்கணிக்கப்பட்டு வந் துள்ளது. பொருளாதார வளர்ச்சி ஏற் படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக் கைகளிலும்கூட இந்த சந்தை இதுவரை புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது.
தேவையான கடன் வசதி, சந்தை வாய்ப்பு ஏற்படுத்தித் தராமல் பெரும் பிரச்ச னையை இதுவரை சந்தித்து வந்துள்ளது. இதை நிறைவு செய்யும் வகையில் உள் நாட்டு கொள்கை வகுத்தாலே குறைந்த காலஅளவில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும். இதன் மூலம் தேசியப் பொரு ளாதாரம் நம்பிக்கையோடு நெருக்கடியில் இருந்து மீண்டு வர முடியும்.
டாக்டர் அர்ஜூன் சென்குப்தா
நன்றி :
இந்த கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்ட லைட்லிங்க் பதிவர் அவர்களுக்கு.

இதுவரை 1 கோடியே 3 லட்சம் அமெரிக்கர்கள் வேலையை விட்டு துரத்தப்பட்டு இருக்கிறார்கள். நவம்பரில் மட்டும் 5 லட்சத்து 33 ஆயிரம் பேர்.
(டிசம்பர் 6ந்தேதி நிலவரப்படி)
America isn’t working: jobless total rockets to a 34-year peak
• In one month, 533,000 people join unemployed
• Wall Street pins its hopes on more Fed intervention
“Yesterday’s announcement brings the jobless total to 10.3 million people out of a workforce of 154.6 million”
from :
http://www.guardian.co.uk/business/2008/dec/06/usemployment-useconomy
ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தாலே பதட்டமாய் மாறும் அமெரிக்கனின் வாழ்வில் ஜனவரி 2008ல் துவங்கிய இந்த வேலை இழப்பு, தொடர்கதையாகி வருகிறது.
பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பொழுதே, தற்கொலைகள் அதிகமாய் நடக்கும் தேசம் அமெரிக்கா! இனி கண்ணீர் கதைகள் வந்து கொண்டேயிருக்கும்.
இப்படி பொருளாதார சுனாமியில் சிக்கித் தவிக்கிற மக்களை காப்பாற்றாமல், தனது தில்லுமுல்லுகளால் இந்த் சுனாமியை உருவாக்கிய முதலாளிகளை காப்பாற்ற துடிக்கிறது அமெரிக்க நாடாளுமன்றம். ஏனென்றால், செனட்டில் இருப்பவர்கள், மாகாண கவர்னர்களாய் அமர்ந்திருப்பவர்கள் பலர் முன்னாள் சூதாடிகள்.
தொடந்து வரும் கட்டுரையை படியுங்கள். உண்மை புரியும்.
ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த ட்கட்டுரையின் 4-ம்பகுதி (பிற 3 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)
அமெரிக்க நாடாளுமன்றத்தின் வேசித்தனம்
இக்கேடுகெட்ட கிரிமினல்தனத்தையும், ஒட்டுண்ணித்தனமான சுரண்டலையும் தட்டிக் கேட்க 
வக்கற்ற அமெரிக்க நாடாளுமன்றம், இந்த ஊதாரித்தனத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு இச்சமூக விரோதக் கும்பலிடம் கெஞ்சுகிறது. உலகத்தில் எந்த மூலையில் “”தவறு” நடந்தாலும் சண்டப் பிரசண்டம் செய்யும் பெரியண்ணன் ஜார்ஜ் புஷ், இச்சூதாடிக் கும்பலிடம் மண்டியிட்டுக் கிடக்கும் மர்மம் என்ன?
அமெரிக்காவின் அதிபர், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டு அமெரிக்க ஆளும் கும்பலின் நுனி முதல் அடி வரையிலான அதிகார அங்கங்கள் அனைத்தும் வால்ஸ்ட்ரீட் சூதாட்டக் கும்பலிடம் காசு வாங்கிக் கொண்டு தான் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர். தற்பொழுது நிதி மந்திரியாக இருக்கும் பால்சன், கோல்டு மேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது, 1998 தொடங்கி 2006 முடியவுள்ள எட்டாண்டுகளில் குடியரசுக் கட்சிக்கு மட்டும் தனது சொந்தப் பணத்தில் இருந்து 3,36,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
பால்சன் கும்பல் தயாரித்த 70,000 கோடி அமெரிக்க டாலர் மானியத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஹிலாரி கிளிண்டனுக்கு 4,68,200 அமெரிக்க டாலர்; ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமாவிற்கு 6,91,930 அமெரிக்க டாலர்; குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு 2,08,395 அமெரிக்க டாலர் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் “”நன்கொடை” கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
“”வால்ஸ்ட்ரீட்” சூதாடிகள் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம், நன்கொடை கொடுப்பது ஒருபுறமிருக்க, அவர்களே தேர்தலில் நின்று வென்று நாடாளுமன்ற உறுப்பினர், கவர்னர், மேயர் பதவிகளைப் பிடித்து விடுகிறார்கள். அரசுப் பதவிகளை விலைக்கு வாங்குவதிலும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம்தான் முன்னோடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன் முன்னாள் தலைவர் கோர்ஸைன் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் இருந்து செனட் சபைக்குத் 
தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, தற்பொழுது அம்மாநில ஆளுநராகவும் இருக்கிறார். அந்நிறுவனத்தின் தலைவர்களாகப் பணியாற்றிய ஸ்டீபன் ஃப்ரைடுமேன், ராபர்ட் ருபின், ஜோஸுவா போல்டன் உள்ளிட்ட பலர் கிளிண்டன், புஷ் நிர்வாகங்களில் அதிகாரமிக்க பசையுள்ள பதவிகளில் ஒட்டிக் கொண்டிருந்தனர். மக்களால், மக்களுக்காக… என நீட்டிமுழக்கப்படும் மக்களாட்சியின் தத்துவம், அதன் பிறப்பிடமான அமெரிக்காவில் சூதாடிகளால், சூதாடிகளுக்காக, சூதாடிகளின் ஆட்சியாகவே இருக்கிறது.
உண்மை இப்படியிருக்க, அமர்த்யா சென் போன்ற அறிஞர்கள் கூட பாராக் ஒபாமா ஆட்சியைப் 
பிடித்தால், அமெரிக்க மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், ஒபாமாவோ தனது ஆலோசகராக ராபர்ட் ருபினை வைத்துக் கொண்டிருக்கிறார். 
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ருபின், சப்பிரைம் லோன் சூதாட்டத்தைத் தொடங்கி வைத்த தளபதிகளுள் ஒருவர்; இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு இலாபமடைந்துள்ள “”சிட்டி குரூப்” வங்கியின் தற்போதைய தலைவர். எனவே, அமர்த்யா சென் போன்ற அறிஞர்களின் ஜோசியம், பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கும் முட்டாள்தனத்தைப் போன்றதுதான்!
நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008
இன்றைய அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் நிலை!
எங்களுடைய மொத்த குடும்பமும் உழைப்பில் ஈடுபட்டாலும், வறுமையில் உழல்கிற குடும்பம்.
அம்மாவிடம் கேட்டதும், உடனே பதில் வரும்.
“உங்களுக்கே சோறு போட முடியல! இதுல அது வேற!”
“எதிர்வீட்டில் இரண்டு நாய் வளர்க்கிறார்களே!” என்பேன்.
“அது ஊரை கொள்ளையடிச்சு கந்து வட்டி-ல வர்ற பணம்டா!. அவங்க இன்னும் இரண்டு நாய் கூட வளர்ப்பாங்க!” என்பார் கோபமாய்.
****
இன்றைக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் மக்களின் நிலை பரிதாபகரமான நிலை.
தங்களுடைய சேமிப்புகளை தொலைத்து, இருக்கிற வேலை இழந்து நிற்கும் அவர்களால் தங்களுடைய செல்ல வளர்ப்பு பிராணிகளை முன்பை போல ஆரோக்கியமான முறையில் கவனிக்க முடியவில்லை.

ஆகையால், பணம் செலுத்த முடிகிறவர்கள் தங்களுடைய செல்லப் பிராணிகளை காப்பகங்களில் ஒப்படைக்கிறார்கள். முடியாதவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று தெருவில் விட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுகிறார்கள்.
இந்த வளர்ப்பு பிராணிகள் சாப்பிடும் அளவு மற்றும் கலோரியின் அளவு எவ்வளவு தெரியுமா?
ஓரளவு வசதிப்படைத்த இந்தியர் சாப்பிடும் உணவை விட மூன்றுமடங்கு அளவும், கலோரியும் கொண்டவை.
மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடித்து தங்களுடைய சொந்த நாட்டு மக்களை செல்லப்பிள்ளைகளாக பார்த்துக்கொண்டது. மக்களும் நிறைய செலவு செய்து பகட்டாய் வாழ்ந்தார்கள்.
அங்கு கடித்து, இங்கு கடித்து இறுதியில் தன் சொந்த நாட்டு மக்களையே முதலாளித்துவம் கடித்து குதறிவிட்டது.
அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் இனியாவது, ஏகாதிபத்திய நாடுகளான தங்கள் நாடுகள் பல்வேறு நாடுகளை கொள்ளையடிப்பதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.
நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள்!
‘நீங்கள் பங்குச்சந்தை முகவரா?’
‘ஆம்’ என்றார்.
‘அமெரிக்கா – மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதே! என்ன காரணம் சார்?’
‘சப் பிரைம் லோன்’ தான் காரணம். வங்கிகள் கடனைக் கட்ட வசதியில்லாதவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்தது தான் காரணம்’ என்றார்.
‘இதை பொதுவாக எல்லோரும் சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு இதுதான் உண்மையான காரணமா சார்? ’
‘நீங்கள் சொல்வது சரி தான். இதையும் மீறி அங்கு என்னவோ நடந்திருக்கு. ஆனால் உண்மையை மறைக்கிறார்கள்” என்றார்.
****
இந்த மாபெரும் நெருக்கடிக்கு திரைமறைவில் நடந்த விவகாரங்களை ஒவ்வொன்றாக அலசிக் கொண்டே வருகிறோம்.
திவாலான மற்றும் திவால் நிலையில் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் இந்த நெருக்கடிக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்கள். என்ரான் விசயத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் துணை நிர்வாகிகள் எப்படி கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள் என ஏற்கனவே பார்த்தோம்.
மக்கள் தங்களுடைய சேமிப்பு பணங்களை மிகப்பெரிய நிறுவனங்களில் போட்ட பணம் எல்லாம் செல்லாக்காசுகளாக மாறிப்போய்விட்டன. ஆனால், அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் எப்படி லாபம் சம்பாதித்தார்கள் என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது. படியுங்கள்.
****
ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. – புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த கட்டுரையின் 3ம்பகுதி (2 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)
நிதி நிறுவன அதிபர்களின் ஒட்டுண்ணித்தனம்
லேமேன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச், பியர் ஸ்டெர்ன்ஸ் உள்ளிட்டுப் பல நிதி நிறுவனங்களும், 
வங்கிகளும் திவாலாகிப் போனதால், அந்நிறுவனங்களை நடத்தி வந்த முதலாளிகளும், உயர் அதிகாரிகளும் போண்டியாகிப் போனார்கள் எனக் கருத முடியாது. இச்சூதாடிகள் எரிகிற வீட்டில் இருந்து பிடுங்குவதில் கில்லாடிகள் என்பதால், நிதி நிறுவனங்கள் திவால் நிலையை நோக்கி நகர நகர, இவர்களின் சம்பளமும் போனசும் எகிறிக் கொண்டே போயின.
உலகெங்கிலும் 60,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை வாங்கிப் போட்டுத் 
திவாலாகி விட்ட லேமேன் பிரதர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சர்ட் ஃபல்ட், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டாண்டுகளில் எடுத்துக் கொண்ட சம்பளம் மட்டும் 48 கோடி அமெரிக்க டாலர்கள்.
மெரில் லிஞ்ச் நிறுவனம் திவாலாகிக் கொண்டிருந்த சமயத்தில், அதன் தலைமை நிர்வாக 
அதிகாரியாக இருந்த ஜான் தாய்ன், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டுஒன்பது மாதங்களுக்குள் எடுத்துக் கொண்ட சம்பளம் 85 கோடி அமெரிக்க டாலர்கள்.
இந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மட்டும்தான் கொழுத்த சம்பளம் பெற்றார்கள் என்பதில்லை. நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் புசிவதைப் போல, அமெரிக்காவின் மிக முக்கியமான ஐந்து நிதி நிறுவனங்களைச் (அதில் மூன்று திவாலாகி விட்டன) சேர்ந்த 1,85,000 ஊழியர்களுக்கு 2007இல் மட்டும் சம்பளம் மற்றும் போனசாகச் சேர்த்து 6,600 கோடி அமெரிக்க டாலர்கள் கொட்டப்பட்டுள்ளது.
இத்தலைமை நிர்வாக அதிகாரிகள் உருவாக்கி நடத்திய சூதாட்டம்தான் இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும், இக்கிரிமில் குற்றத்திற்காக எந்தவொரு தலைமை நிர்வாக அதிகாரி மீதும் வழக்குத் தொடரப்படவில்லை; இதைவிடக் கேவலமானது, அவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகக்கூட நிர்பந்திக்கப்படவில்லை என்பதுதான்.
என்ரான் திவாலானதற்கு நிர்வாகத்தின் மோசடித்தனங்கள்தான் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தற்பொழுது அமெரிக்க நிறுவனங்களில் சேரும் சூதாடிகள், “”தங்களின் நிர்வாகத்தின் கீழ் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அதற்குத் தங்களைப் பொறுப்பேற்கச் சொல்லக் கூடாது” என ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சேருகிறார்கள்.
- செல்வம்
நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008
தங்கமணிகளே உஷார் – தங்கம் + money

- தங்கத்தின் விலை – 28, ஏப்ரல் 2008 விலை
- வாங்கிய தங்கத்தின் அளவு – 40 கிராம்
- வாங்கிய பொருள் – தங்கச் சங்கிலி
- ஒரு கத்தாரி ரியால் – ரூபாய். 11.25 (அன்றைய அதிகபட்ச விலை)
- தங்கத்தின் சேதாரம் – இந்தியாவில் கணக்கிடப்படுவது – 16% – 18%
- தங்கத்தின் தரம் – 22 காரட்.
- இரண்டு இடங்களிலுமே ஒரே தங்கம் தான் வாங்கப்பட்டது. ஆனால் கத்தாரில் சேதாரம் போடப்படவில்லை. ஆனால், சென்னையில் மட்டும் ஏன் சேதாரம் போடப்படுகின்றது. தரத்திற்கு இரண்டு கடைகளும் கியாரண்டி.
- 24 காரட் தங்கம் என்பது 99.99% சுத்த தங்கம். 22 காரட் தங்கம் என்பது 91.7% சுத்த தங்கம். இரண்டிற்கும் உள்ள வித்யாசம் 8.1% இருக்கும் போது, 16% சேதாரம் போடப்படுவது ஏன்? சர்வ சாதாரணமாக நாம் 7.9% சேதாரம் அதிகமாகக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோமா..
- செய்கூலி இல்லை / சாதா கற்களுக்கு விலை இல்லை என்பதெல்லாம் சும்மா விளம்பரத்திற்கு மட்டும் தானா?
- நம்மை மிக அழகாக ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்களா?
- நமக்கு ஏன் தங்கம் வாங்கும் போது, பில் போட்டு வாங்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லையே ஏன்?
அமெரிக்க திவால் – இன்றைய அமெரிக்காவின் நிலை!
ஜெயமங்கலம், வெள்ளக்கோவில் பகுதிகளில் நெசவுத் தொழிலை நம்பி இருந்த நெசவாளிகள் வேலையிழந்து வாழ்வதற்காக தன்னுடைய கிட்னியை விற்று பிழைத்தார்களே! அதே போல், அமெரிக்கர்கள் தங்களுடைய ரத்த பிளாஸ்மா, தலைமுடி, உடலில் சுரக்கும் சில மருத்துவ திரவங்கள், டிஷ்யூக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆண்கள் தங்கள் உயிரணுக்களை விற்கிறார்கள். 100 டாலர் கிடைக்கிறதாம். சியாட்டிலில் உள்ள ஒரு உயிரணு வங்கியில் முன்பெல்லாம் 50 பேர் விண்ணப்பித்த நிலையில், இன்றைக்கு 150 விண்ணப்பங்கள் வருகின்றனாம்.
பெண்கள் தங்களுடைய கருமுட்டைகளை விற்கிறார்கள். அதற்கும் 100 டாலர் கிடைக்கிறதாம். நன்கு செழிப்பான கருமுட்டை 7000 டாலர்கள் விலை கிடைக்கிறதாம். முன்பு, நாளொன்றுக்கு இரண்டு முதல் ஐந்து பெண்கள் வந்தவர்கள்… இப்பொழுது, இருபது பேர் வருகிறார்களாம்.
(நன்றி – தினமணி கதிர் – 21.12.2008)
ஆனால் இந்த கொள்ளையை அடித்த கும்பல்களின் இன்றைய நிலை என்ன தெரியுமா? மேலே படியுங்கள்.
****
அமெரிக்க ஜனநாயகம்: சூதாடிகளின் ஏஜெண்ட்
1930ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் இந்த நெருக்கடியைப் போன்றதொரு வீழ்ச்சியைச் சந்தித்தபொழுது, கிளாஸ்ஸ்டீகல் சட்டம் உருவாக்கப்பட்டு, வர்த்தக வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. 1930க்கு முன்பு வங்கிகளே பங்குச் சந்தை தரகு நிறுவனங்களையும் நடத்தி வந்ததால், வர்த்தக வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறும் சேமிப்புகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இச்சட்டம் உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் சேமிப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் காப்பீடு நிறுவனமும் அமைக்கப்பட்டது. இச்சட்டம், 1999ஆம் ஆண்டு பில் கிளிண்டன் அதிபராக இருந்த சமயத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதற்கு அடுத்த ஆண்டு, நிதிச் சந்தையில் நடைபெறும் சூதாட்டங்களுள் ஒன்றான “டெரிவேட்டிவ்” (பங்குகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீது நடைபெறும் சூதாட்டத்தின் மீது நடக்கும் சூதாட்டம்) மற்றும் வாராக் கடன்களைக் கைமாற்றிக் கொண்டே போகும் சூதாட்ட வர்த்தகம் ஆகிய இரண்டும், பங்கு பரிமாற்றக் கழகத்தின் கண்காணிப்பில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.
அமெரிக்க முதலீட்டு வங்கிகள், தாங்கள் செய்யும் முதலீடுகள் நட்டமடைந்தால், அதனை ஈடு 
செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்து வந்தது. 2004ஆம் ஆண்டில், இந்த விதி நீக்கப்பட்டு, முதலீட்டு வங்கிகள் இருப்பு வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற சலுகை நடைமுறைக்கு வந்தது. 2004ஆம் ஆண்டு கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஹென்றி ஜெ.பால்சன்தான் இவர்தான் இப்பொழுது அமெரிக்க அரசின் நிதியமைச்சர் இச்சலுகையை வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“சப்பிரைம் லோன்” சூதாட்டம் ஊதிப் பெருத்ததற்கும் இந்த மூன்று சலுகைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதேசமயம், இச்சலுகைகள் நடைமுறையில் இல்லாத காலத்தில், அமெரிக்க நிதிச் சந்தை கட்டுப்பாடோடு, நாணயமாக நடந்து கொண்டதாகக் கற்பனை செய்து 
கொள்ளக் கூடாது. குறிப்பாக, இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் நடைமுறையில் இருந்த சமயத்தில்தான் “லாங்டெர்ம் கேப்பிடல் மேனேஜ்மெண்ட்” என்ற முதலீட்டு நிறுவனமும், என்ரானும் குப்புறக் கவிழ்ந்தன. நியாயமாகப் பார்த்தால், இந்த நிறுவனங்கள் திவாலான பிறகு, கட்டுப்பாடும், கண்காணிப்பும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்; ஆனால், நடந்ததோ அதற்கு நேர் எதிரானது.

அமெரிக்காவில் வங்கிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி (Federal Reserve) அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை. வங்கி முதலாளிகளின் சங்கம்தான், அதற்குத் தலையாக இருந்து இயக்கி வருகிறது. கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் “எல்லாம் நானே” என உரைத்தது போல, அமெரிக்காவில் பங்குச் சந்தை சூதாடியே வங்கி முதலாளியாக இருக்கிறார்; அவரே போலீசாக (கண்காணிப்பாளராக) இருக்கிறார். அவரே நீதிபதியாகவும் (திவாலான பொருளாதாரத்தை மீட்கும் பொறுப்பு) இருக்கிறார்.
அமெரிக்க அரசு, சூதாடிகளின் மீது இருந்த அற்பமான கண்காணிப்புகளை விலக்கிக் கொண்டதோடு, சூதாட்டம் சூடாக நடைபெறுவதற்குத் தேவையான பணத்தையும் வாரிக் கொடுத்தது. அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான் அமெரிக்க அரசின் கருவூலத்தில் இருந்து வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை ஒரு சதவீதமாகக் குறைத்ததன் மூலம் டாலர் புழக்கத்தைத் தாராளமாக்கினார்.
இதேபொழுதில், அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியத்தின் வாராக் கடன்களைக் கண்காணிக்கும் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை 100இல் இருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டது; ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்து 146 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சூதாடிகளுக்கு வழங்கப்பட்ட இச்சலுகைகளை நியாயப்படுத்துவதற்காக, “”அனைவருக்கும் வீடு” என்ற கவர்ச்சி முழக்கம் அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு பக்கம் பணத்தோடு சூதாடிகள்; இன்னொருபுறம் கடன் வாங்கி செலவு செய்யும் நாகரீகத்துக்கு ஆட்பட்டுப் போன மக்கள் பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்ட பின்னணி இதுதான்.
நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008
இந்தியா எப்போது வளர்ந்த நாடாகும் ?
முதலில் வளர்ந்த நாடு, வளரும் நாடு, பின் தங்கிய நாடு என்றெல்லாம் சொல்கிறார்களே தவிர அதன் ‘டெஃபனிஷன்’ என்ன?
உலகில் பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு வகையில் வளர்ந்த நாடு, வளரும் நாடு என்று நிர்ணயம் செய்கின்றன. ஐ.எம்.எஃப், உலக வங்கி ஆகியவற்றுடன் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் இந்த நிர்ணயத்தை வழங்குகிறது.
பொதுவாக ஒரு நாடு வளர்ந்த நாடாக இருக்க கீழ்கண்டவற்றில் பெருமளவு வளர்ச்சியும், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அடைந்திருக்க வேண்டும்.
1. முழுமையான ஜன நாயக அரசு ( Democratic Governments)
2. தொழில் மயமாக்கம் (Industrialization)
3. கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரம் (Free Market Economies)
4. சமூக நலத் திட்டங்கள் செயல் பாடுகள் (Social Programs)
5. மனித உரிமை உறுதிப்பாடு (Human Rights Guarantee)
பெரும்பாலும், யு.எஸ்.ஏ, யு,கே, ஆஸ்திரேலியா, வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகியவை வளர்ந்த நாடுகளாகக் கருதப் படுகின்றன. இந்த நாடுகள் மேலே குறிப்பிட்ட அனைத்து குறியீடுகளிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இஸ்ரேல், சைப்ரஸ், தென் கொரியா ஆகியவையும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் உள்ளன.
இவை தவிர மற்ற அனைத்து நாடுகளும் வளரும் நாடுகள் அல்லது பின் தங்கிய நாடுகள். இப்போது வளரும் நாடுகளில் பல்வேறு உட்பிரிவுகள் வந்து விட்டன.
புதிய தொழில் மயமான நாடுகள் (Newly Industrialized Economies), மேலே வரும் நாடு (Emerging Economies) என்று புதிய உட்பிரிவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.
இந்தியா, சீனா, ப்ரேசில், அர்ஜென்டினா, எகிப்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகள் ‘Bigger Emerging Economies’ என்று வழங்கப் படுகின்றன.
இந்த அளவில் இந்தியா வளரும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவும், சீனாவும் 2030ல் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளாக உருவெடுக்கும் என்று ஐ.எம்.எஃப். அறிக்கை கூறுகிறது.
ஆக பொருளாதாரம் தான் ஒரு நாட்டை வளர்ந்த நாடா, வளரும் நாடா என்று முக்கியமாகத் தீர்மானிக்கிறது. இதில் முக்கியமான அளவுகோல் மொத்த உள் நாட்டு உற்பத்தி (Gross Domestic Product). இதையும் மொத்தமாகப் பார்க்காமல் ஒரு மனிதனுக்கு எவ்வளவு உற்பத்தி என்று பார்க்கும் போதுதான் உண்மையான நிலவரம் தெரியும். இதற்குப் பெயர்தான் Gross Domestic Product – Per Capita Level.
இதையும் இரு வகையாகப் பார்க்கலாம். ஒன்று ‘நாமினல்’ அதாவது உள் நாட்டு கரன்சியின் அளவு கோலில் பார்ப்பது. இது பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. மற்றொன்று, Purchase Power Parity, வாங்கும் சக்தியின் அடிப்படையில் பார்க்கப் படுகிறது. இது சற்று துல்லியமானது.
ஜி.டி.பி. – பெர் கேபிடா (Gross Domestic Product – Per Capita Level) அளவுகோல்.
மொத்த உள் நாட்டு உற்பத்தி (க்ராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட்) என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியின் அளவு கோலாக இருக்கிறது.
ஜி.டி.பி = முதலீடு + அரசு செலவீனம் + (ஏற்றுமதி – இறக்குமதி) + உள் நாட்டு பயனீடு, அதாவது Internal Consumption
இதை நாட்டின் சராசரி மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது தனி மனித மொத்த உள் நாட்டு உற்பத்தி. பெர்கேபிடா ஜி.டி.பி.
இந்த வகையில் இந்தியாவின் ஜி.டி.பி= 2365 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. சீனா – 5300 டாலர்கள். இது பர்சேஸ் பவர் பேரிடி (Purchase Power Parity)முறையில் கணிக்கப் பட்டது.
நமது நாட்டின் பிரச்சினைகள் இரண்டு. அதிக அளவிலான இறக்குமதி, அதிக மக்கள் தொகை. இவையிரண்டும் நமது பெர் கேபிடா ஜி.டி.பி-ஐ மேலே வர விடாமல் தடுக்கின்றன.
சரா சரியாக 10000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் பெர் கேபிடா ஜி.டி.பி இருக்கும் நாடுகள் வளர்ந்த நாடுகளாகக் கருதப் படுகின்றன. நமது நாடு 10000 அமெரிக்க டாலர் பெர் கேபிடா அளவை அடைய என்ன செய்ய வேண்டும்? ஒரு சிறிய கணக்கு.
தற்போதைய பெர் கேபிடா – 2365 அமெரிக்க டாலர்கள்.
தற்போதைய மக்கள் தொகை – 110 கோடி
மொத்த ஜி.டி.பி. = 2,60,150 கோடி அமெரிக்க டாலர்கள்
மக்கள் தொகை இதே நிலையில் இருந்தால், 10000 டாலரைக் கடக்க நமக்குத் தேவையான ஜி.டி.பி. 11 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்.
இது இந்திய ரூபாயில் 5,50,00,00,00,00,00,00,000 ரூபாய்கள்.
இதுவும் மக்கள் தொகை ஏறாமல் இருந்தால் மட்டுமே.
ஆக நாம் வளர்ந்த நாடாக ஆக வேண்டுமென்றால், ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும், இறக்குமதி குறைய வேண்டும், அரசு செலவீனம் (உள் கட்டமைப்பு சார்ந்து) அதிகரிக்க வேண்டும், உள் நாட்டுப் பயனீடு அதிகரிக்க வேண்டும். முக்கியமாக மக்கள் தொகை குறைய வேண்டும்.
என்னதான் பெரிய ஜன நாயக நாடாக இருந்தாலும், சமூக நலத் திட்டங்கள், தொழில் மயமாக்கல், தனி மனித உரிமைகள் இருந்தாலும், மக்கள் தொகை குறையாத வரையில் நாம் வளரும் நாடாகவே இருப்போம்.
இப்போது சொல்லுங்கள் நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோமா இல்லையா? இந்த வளர்ச்சி சரியானது இல்லை தானே.
Filed under: Uncategorized





